Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 84

காதல், அன்பு, ஆசை, பாசம், நேசம் என்ற எந்த உணர்ச்சிகளை மறைக்க முடிந்தாலும் ஆர்யனால் மிஷால் மீது ஏற்படும் பொறாமையை மட்டும் மறைக்க முடியவில்லை. ருஹானா மீதான உரிமையுணர்வையும் தான்.

மிஷாலை ருஹானாவுடன் பார்த்த ஆர்யனின் ஆத்திரம் கரையை உடைத்து பொங்க, மிஷாலின் சட்டையை பிடித்தவன் விடவேயில்லை. ருஹானா இருவரையும் பார்த்து நின்றாலும் அவளுக்கும் ஒன்றும் ஓடவில்லை.

“ருஹானா என்ன செய்யணும்னு நீ அவளை அதிகாரம் செய்ய முடியாது. அதுக்கு உனக்கு உரிமை இல்ல” என மிஷாலும் கத்த, அவன் சொன்னதில் இருந்த உண்மை ஆர்யனுக்கு உரைக்க, அவனை சட்டையோடு தள்ளிவிட்டான். “என் வீட்ல இருந்து வெளியே போ”

மிஷால் ஆர்யனிடம் மோத பாய்ந்து வர, ருஹானா இடைபுகுந்தாள். “மிஷால்! தயவுசெய்து போ! நான் அப்புறமா உன்கிட்டே பேசுறேன்” என கெஞ்ச, மிஷால் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். கரீமா மேல்மாடி ஜன்னலிலிருந்து நடந்ததையெல்லாம் சந்தோசமாக பார்த்திருந்தாள்.

ஆர்யன் மாளிகைக்குள் வேகமாக நடக்க, அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து ருஹானாவும் பின்னாலேயே வர, மாடிப்படி ஏறி முடித்தவுடன் தான் அவளால் அவனை பிடிக்க முடிந்தது. 

“ஏன் இப்படி மிஷால்ட்ட நடந்துக்கறீங்க? ஏன் இந்த கோபம் உங்களுக்கு? என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டீங்களா?” அவன் முன்னால் வந்து கேட்டாள்.

“உனக்கு என்ன வேணுமோ நீ செஞ்சிக்கோ… ஆனா இவான் பக்கத்துல அந்த சூப்மேனை கொண்டு வராதே!” மாளிகை அதிர கத்தியவன் அவள் கையை பிடித்து தள்ளிவிட்டான்.

“ஆனா…”

“ஆனா கீனா எதுவும் கிடையாது. இன்னொரு தடவை இவான்கூட அந்த ராஸ்கலை நான் பார்க்க கூடாது”

“அப்போ அவனுக்கு பதில் நீங்க ஏன் எங்ககூட வரல?” அவளும் கோபமாகவே கேட்டாள்.

உரிமையோடு அவள் கேட்ட கேள்வியில் ஆத்திரம் அடங்கிய ஆர்யன், நேராக பதில் சொல்லாமல் சற்று நிதானித்து “நீ உன் முயற்சியை கைவிட மாட்டே, அப்படித்தானே?” என்றான்.

“கண்டிப்பா மாட்டேன். ஏன்னா உங்க முகத்துல இருந்து நான் கண்டுபிடிச்சிட்டேன், உங்க இருட்டு உலகத்துல இருந்து நீங்க வெளிய வந்துட்டீங்கன்னு. எங்க, இப்போ சொல்லுங்க பார்க்கலாம். கண்ணாடில நீங்க அதே பழைய உருவத்தையா பார்க்கறீங்க? நீங்க மாறி இருக்கீங்கன்னு ஒத்துக்கங்க. நான் சந்தோசமா இருக்கேன், நான் மாறவே இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா?”  

ஆர்யனிடம் இருந்து பதில் வராததால் “உங்களை நீங்களே முட்டாளா ஆக்கிக்கிறீங்க!” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு நடந்துவிட்டாள். அவனது உள்ளத்து உணர்ச்சிகளை ஏற்காமல் மறுத்துக்கொண்டே இருக்கும் ஆர்யன் அதை வெளியே தெரியாமல் தான் நன்றாக மறைப்பதாகவும் நினைத்திருந்தான். ஆனால் ருஹானா அவன் மனதை படித்தவள் போல பேச, திகைத்துப்போய்  அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டே நின்றான்.

——

அவமானப்பட்டு வந்த மிஷால், உணவகத்தின் மேசை நாற்காலிகள், பாத்திரங்களை வேகமாக தள்ளிவிட அது அவன் கையில் வெட்டி இரத்தம் வந்தது. அதைக்கூட கவனிக்காமல் குறுக்கும் நெடுக்கும் உலாத்தினான்.

சத்தம் கேட்டு ஓடிவந்த உதவிப்பையன் சதாம் “என்ன அண்ணா ஆச்சு?” என பதட்டமாய் கேட்க, மிஷால் அவன் மீது எரிந்து விழுந்தான். “உன் வேலையை பாரு! உள்ளே போ!” பயந்து போன சதாம் அப்படியே பின்னே நகர்ந்து போனான்.

மிஷாலின் செல்பேசி அடிக்க, அதில் கரீமாவின் பெயர் வரவும், அதை எடுத்த மிஷால் “அலோ! அவன் என்ன செய்தான் தெரியுமா?” என்றான்.

“நானும் நடந்ததை பார்த்தேன் மிஷால்! நீ தளர்ந்து போகாதே”  

“அவன் ருஹானாவை என்கிட்டே இருந்து விலக்கனும்னே இதெல்லாம் செய்றான்”

“அதுக்காக நீ ருஹானாவை பார்க்காம இருக்காதே. அவளுக்காக நீ எப்பவும் இருப்பேன்னு அவளுக்கு உன்மேல நம்பிக்கை வரணும். அடிக்கடி அவளை சந்திக்க முயற்சி செய். இல்லனா நீ அவளை நிரந்தரமா இழந்துடுவே”

பேசிமுடித்து போனை வைத்த மிஷால் “மாட்டேன்! ருஹானாவை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” என கத்தினான்.

——-

உடைந்த கண்ணாடி புட்டிக்கு பதிலாக புதிய புட்டியில் குண்டுகளை ஒவ்வொன்றாக போட்ட ஆர்யன் அதை மாடியின் மதில் சுவரின் மேல் வைத்தான். இரவின் இருட்டில் அகாபா நகரம் மின்விளக்குகளால் ஒளிர, அதை பார்த்துக்கொண்டே அவன் நிற்க, அவன் செல்பேசி அழைத்தது.

“ஆர்யன்! காதர் ஆட்களில ஒருத்தனை பிடிச்சிட்டோம். நீங்க நேர்ல விசாரிக்க விரும்பறீங்களா?”

ரஷீத் சொன்னதும், ருஹானாவும் ‘அந்த இருட்டு உலகத்துல இருந்து நீங்க வெளிய வந்துட்டீங்க!’ என அவன் மனதில் சொல்ல, ஆர்யன் அமைதியாக நின்றான். 

“லைன்ல இருக்கீங்களா ஆர்யன்? நாங்க துறைமுகத்துல இருக்கோம். நீங்க வரீங்களா?

“இல்ல ரஷீத்! நீயே பார்த்துக்கோ”

——-

ருஹானா இவானை பார்க்க வந்தவள் ஆர்யன் அறையை பார்த்தபடி நிற்க, பக்கத்து இவான் அறையை திறந்து கொண்டு ஆர்யன் வெளியே வந்தான். இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்க்காததால் சில வினாடிகளுக்கு அப்படியே பார்த்துக்கொண்டே நின்றனர். பின் ஆர்யன் “இவான் நல்லா தூங்குறான்!” என்றான், அவள் எதற்காக வந்திருப்பாள் என புரிந்துகொண்டு.

ருஹானா அப்போதும் பார்வையை திருப்பாமல் நிற்க, அவள் பார்வையை அதற்கு மேல் சந்திக்க முடியாத ஆர்யன் இமைகளை சிமிட்டிக்கொண்டு கண்களை திருப்பிக்கொண்டான். 

ருஹானா அவனிடம் இருந்து பார்வையை விலக்காமல், மெல்ல “நாம நிறைய வாக்குவாதம் செய்றோம்…. அதிகமா சண்டை போடுறோம்…. ஆனா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதே இல்ல….” என நிறுத்தி சொல்ல, அவன் அவள் கண்களை பார்க்க, அவள் இன்னும் மெதுவாக பேசினாள்.

“பேசிக்காமலே நாம ரெண்டுபேரும் புரிஞ்சிக்கிற நாள் ஒன்னு வரும். அதுக்காக தான் நான் காத்திருக்கேன்” என சொல்லும் அவளை அவன் அதிசயமாக பார்த்தான். 

“அந்த நாள் கண்டிப்பா வரும். எனக்கு தெரியும்” உறுதியாக ஆருடம் கூறும் அவளின் பச்சைக்கண்களின் தீட்சண்யத்தில் அவன் தொலைந்திருந்தான்.

பச்சை நிறம் காயங்களை ஆற்றிட உதவும். உணர்ச்சிவசப்படும்போது ஆறுதல் அளிக்கும். மனஅமைதி நிலைக்க செய்யும். இங்கேயும் இதையெல்லாம் செய்யுமா?

எப்போதும் அவன் தான் கண் இமைக்காமல் பார்ப்பான். அவள் தலை குனிந்து கொள்வாள். இப்போது அவளின் ஊடுருவும் பார்வை கண்டு பயந்து நகர்ந்தவன், பக்கத்திலிருக்கும் அவன் அறைக்குள் போக மறந்து படிக்கட்டுக்கு சென்றுவிட்டான்.

ஆம்! அவளிடம் அவனுக்கு பயம் தான். இவானை பெறுவதில் அவளுடைய விடா முயற்சியை அறிந்தவன் ஆயிற்றே அவன்!

வெளிப்பட துடிப்பதும்

தவிப்பதுமான வார்த்தைகள்

மூளைக்குக் கட்டுப்பட்டு

வாய்இறுக மூடிக்கொள்ள முயலும்…

விழிகள் அடங்கிடுமா???

விழி மொழியாமலே

மயங்க தயங்கினாலும்

பார்வைகள் ஸ்பரிசிக்குமே!

———-

“சித்தப்பா!… சித்தப்பா!….. சித்தப்பாவை கொல்லாதீங்க…. வேணாம்…. என் சித்தப்பாவை சாகடிச்சிடாதீங்க”

நடு இரவில் கனவு கண்டு இவான் அலற, ருஹானா அறைக்குள் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள்.

“இவான்! அன்பே! நான் இங்க இருக்கேன்… உன்கூட இருக்கேன்…. ஒன்னும் இல்ல… பயப்படாதே! கண்ணை திறந்து பார்”

கண்களை திறந்து பார்த்தவன் அழுதுகொண்டே “சித்தப்பாவை பெரிய துப்பாக்கியால சுடுறாங்க, சித்தி. அது நெஜம் மாதிரி இருந்தது…. நான் ரொம்ப பயந்திட்டேன்… சித்தப்பா இறந்து போயிட்டார்ன்னு பயமாயிடுச்சி” என அவளை இறுக்கிக்கொண்டான்.

அவன் முதுகை தட்டிக் கொடுத்த ருஹானா “உன் சித்தப்பா நல்லா இருக்கார், செல்லம். பயப்படாதே. அது கெட்ட கனவு” என்றாள்.

“சித்தி! நீங்க என்னை விட்டு போயிடாதீங்க”

“நான் எங்கயும் போகல. இங்க தான் உன்கூட தான் இருக்கேன்”

அப்படியே அவனை அணைத்தபடியே கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

—— 

சமையலறையில் விளக்கெரியவும் ஜாஃபர் வந்து எட்டிப்பார்க்க, அங்கே ருஹானா குளிர்சாதனப்பெட்டியில் இருந்து பாலை எடுத்துக் கொண்டிருந்தாள்.

“எதும் உதவி தேவையா, ருஹானா மேம்?” 

“இவானுக்கு பால் சூடுபடுத்த போறேன், ஜாஃபர் அண்ணா”

“இந்த நேரத்திலயா?”

“ஆமா, அவன் கெட்ட கனவு கண்டு முழிச்சிட்டான். இவ்வளவு நேரம் பயந்து அழுதிட்டே இருந்தான். இப்போ தான் சமாதானப்படுத்திட்டு தூங்க வைக்க பால் எடுக்க வந்தேன்”  

“லிட்டில் சார் என்ன கனவுன்னு சொன்னாரா?”

“அவன் சித்தப்பாவை யாரோ சுடறது போல. ரொம்ப பயந்திட்டான்”

“மறுபடியுமா?”

“என்ன ஜாஃபர் அண்ணா சொல்றீங்க?”

“அவரோட அப்பா அக்ரம் சார் துப்பாக்கியால சுடப்பட்டு இறந்தார்னு இவான் சாருக்கு தெரியும்”

“எப்படி!! இந்த விசயத்தை சின்ன பையன்ட்ட யார் சொல்வாங்க?”

“உங்க அக்கா தான்… மாத்திரையோட தாக்கத்துல இருக்கும்போது எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டாங்க. அப்ப இருந்து அவருக்கு இந்த மாதிரியான கனவு அடிக்கடி வரும். அவரோட சித்தப்பாவையும் இழந்துடுவோமோன்னு நடுங்குவார். ஆயுதங்கள் பார்த்தா பயப்படுவார்.”

மிஷால் பரிசளித்த துப்பாக்கியை பார்த்ததும் இவானின் மனநிலை மாறியது ருஹானாவிற்கு நினைவு வந்தது.

“அதான் ஆர்யன் சார் இது மாதிரியான விஷயங்கள்ல ரொம்ப கவனமா இருப்பார். இருந்தாலும் இளகின மனசுள்ள சின்ன குழந்தைக்கு இதை தாண்டி வர்றது சிரமம்”

திகைப்பாக கேட்டுக்கொண்டிருந்த ருஹானா “அவனோட குட்டி தோள்கள்ல எத்தனை பெரிய சுமையை சுமக்கறான்!” என்று வருத்தமாக பெருமூச்சு விட்டாள்.

“ஆனா நீங்க வந்த பிறகு இந்த கனவுகள் அவருக்கு வர்றதே இல்ல. முன்னாடி மாதிரி அமைதியா இருக்கறதும் இல்ல நல்லா பேசுறார் நிறைய சிரிக்கிறார். ஓடி ஆடி விளையாடுறார்” ஜாஃபர் புன்னகையோடு சொல்ல, ருஹானா முகமும் லேசாக மலர்ந்தது.

“நான் இன்னும் அவனுக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படறேன், ஜாஃபர் அண்ணா”

“லிட்டில் சார் அவரோட சித்தப்பாவை இழந்திடுவோமோன்னு பயந்தாலும், இன்னொரு பக்கம் அவரோட பலத்தின் மேலே அபார நம்பிக்கை வச்சிருக்கார். அவரை யாரும் தோற்கடிக்க முடியாதுன்னு நம்புறார். இந்த நம்பிக்கையால தான் இந்த கெட்ட கனவுகளை மறந்திடுறார். அந்த பயத்தை தாண்டி வந்திடுறார்”

ஜாஃபர் சொல்வதை கேட்டுக்கொண்டே பாலை கோப்பையில் ஊற்றிய ருஹானா, எதிரே கண்ணாடி சுவரின் வழியே தோட்டத்தில் ஆர்யன் வேகமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவனது அறையில் இருந்திருந்தால் இவானின் அலறல் கேட்டு தனக்கு முன் ஓடிவந்திருப்பானே என யோசித்தவள், அவனுக்காகவும் கவலைப்பட்டாள்.

“அப்புறம் நீங்க ருஹானா மேம்… அவர் பயந்து எழும்போது அவர் கையை ஆதரவா பிடிக்க நீங்க இருக்கீங்கன்னு லிட்டில் சாருக்கு தெரியும். வாழ்க்கை மேலே அவருக்கு இருக்கற பயம் நீங்க காட்டுற அன்பால சீக்கிரமே மறைஞ்சி போய்டும்” என நம்பிக்கையோடு ஜாஃபர் சொல்ல, புன்னகைத்து தலையாட்டிய ருஹானா பாலை எடுத்துக்கொண்டு சென்றாள்.

இவானுக்கு பாலை புகட்டிய ருஹானா அவனை படுக்க வைத்தாள். 

“இன்னைக்கு என்கூடவே தூங்குங்க சித்தி!”

“நிச்சயமா செல்லம்! நான் உன்கூடவே தான் இருப்பேன். உனக்கு தேவைப்படற வரை உன்னை விட்டு விலக மாட்டேன். உனக்கு எந்த கவலையும் வராம நான் பார்த்துப்பேன்”

“என் சித்தப்பாக்கும் எதும் ஆகாம பார்த்துக்கங்க சித்தி. என் அம்மாவை போல அவரை போக விட்டுடாதீங்க ப்ளீஸ்”

“நான் உனக்கு சத்தியம் செய்றேன் அன்பே! உன் சித்தப்பாக்கு ஒன்னும் ஆகாது. இப்போ கண்ணை மூடி தூங்கு செல்லம்!”

——–

காலையில் ருஹானா இவானை குளிக்க வைத்து சட்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

“சித்தி! ராத்திரி பூரா நீங்க என்கூட தானே தூங்கினீங்க?”

“ஆமா தேனே!”

“எனக்கு கெட்ட கனவே வரல. நல்ல நல்ல கனவா வந்துச்சி சித்தி”

“ஆமா ஆருயிரே! நல்ல விசயங்களை நினைச்சிட்டு தூங்கினா நல்ல கனவு தான் வரும்”

அப்போது அங்கே வந்த ஜாஃபர் “எப்படி இருக்கீங்க லிட்டல் சார்?” என கேட்டான்.

Advertisement