Advertisement

மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் வருமா என அவனுக்கு ஏக்கமாக இருந்தது. அதற்கேற்றார்போல் ருஹானாவும் தன்வழக்கமாய் தோளில் தொங்கிய முன் சுருள்முடியை தடவிக்கொள்ள ஆர்யன் படபடப்பானான்.

அந்த நேரம் பணியாளர் சூடான காபியை கொண்டுவந்து வைக்க, அதை எடுத்த ஆர்யன் ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக் கொண்டான். எஸ்பிரெசோ காபியை எக்ஸ்பிரஸ் வேகத்தில் விழுங்கிய அவன் மீது விழுந்த ருஹானாவின் வியந்த பார்வையை கூட அவன் சந்திக்கவில்லை.

பலகோடி புழங்கும் வியாபார சந்திப்புகளின் ஊடான எத்தனையோ மதிய விருந்துகள், இரவு விருந்துகளில் கலந்து கொள்ளும் ஆர்யனுக்கு, காதல் ஊடான இந்த முதல் காபி சந்திப்பு இன்ப அவஸ்தையை தந்தது.

“இன்னும் ஒரு காபி கொண்டு வரவா ஸார்?” பணியாளர் கேட்க ஆர்யனும் சரி என்று சொல்ல, பணியாளர் சென்றதும் “இது அதிகம் இல்லயா?” என ருஹானா கேட்டாள்.

இல்லை என அவன் சொல்ல, ‘சரிதான்’ என்பது போல இடமும் வலமும் தலையாட்டிய அவள் தன் காபியை எடுத்து மெதுவாக உறிஞ்சினாள்.

அவளை பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் ஆர்யன் இரு கைவிரல்களையும் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டான். பதின்ம வயது இளைஞனைப் போல இருந்தது அவளது அருகாமையில் அவனது பதற்றமான நடவடிக்கைகள்.

அதை பார்த்த ருஹானா “இந்த மாதிரி இடங்களுக்கு நீங்க அதிகம் வந்ததில்லன்னு நினைக்கிறேன்” என்றாள்.

தலையாட்டிய ஆர்யன் “அரிது தான். எனக்கு வெளிய நேரம் செலவழிக்க பிடிக்காது” என சொல்ல, தனக்காக அவனுக்கு பிடிக்காத செயலையும் செய்யும் ஆர்யனை கனிவோடு பார்த்தாள் ருஹானா, மகிழ்ச்சி பொங்கும் விழிகளோடு.

——–

இரண்டாவது காபியை ஆர்யன் மெதுவாக அருந்த, ருஹானா அவளது முதல் காபியை குடித்து முடித்திருந்தாள். அவளிடம் மேலும் என்ன பேசுவது என தெரியாத ஆர்யன் “வேற ஏதாவது வேணுமா? சாப்பிடுறீயா?” என கேட்க, அவள் நன்றி சொல்லி மறுத்தாள்.

மீண்டும் இருவருக்குமிடையே மௌனம் நிலவ, அங்கிருந்து செல்லவும் இருவருக்கும் மனம் வரவில்லை. சில நேர பார்வை பரிமாற்றங்களுக்குப் பின் ருஹானாவே மௌனம் கலைத்தாள்.

“அடுத்த முறை இவானை இங்க கூட்டிட்டு வரணும். அவனுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்”

“கண்டிப்பா கூட்டிட்டு வரலாம்”

“அவனுக்கு உங்க மேல ரொம்ப அக்கறை இருக்கு. உங்களை ரொம்ப நம்புறான். உங்களுக்கு தெரியுமா? நீங்க சொன்ன அசுரன் கதைல வர அசுரன் நீங்க தான்னு சொல்றான்”

ஆர்யன் பெருமிதமாக புன்னகைத்தான்.

தூரத்தில் ஒரு வியாபாரி பஞ்சுமிட்டாயை எடுத்து செல்ல, ருஹானா முகம் மலர அதை பார்வையால் தொடர்ந்தாள். ருஹானாவின் பார்வையை தொடர்ந்த ஆர்யனும் அதை பார்த்தான்.

“உனக்கு பிடிக்குமா?”

“சின்ன வயசுல ரொம்ப பிடிக்கும். எனக்கு இது எவ்வளவு பிடிக்கும்னு என் அப்பாக்கு தெரியும். பலசமயம் வாங்கிட்டு வந்து முதுகுக்கு பின்னாடி மறைச்சி வச்சி எனக்கு சர்ப்ரைஸா கொடுப்பார். நான் அதிக மகிழ்ச்சியாகிடுவேன். உலகத்திலயே முக்கியமான பொருள் என் கைல இருக்குறது போல குஷியா இருக்கும்”

கண்கள் பளபளக்க சொல்லிக்கொண்டிருந்த ருஹானா தந்தையை நினைத்து சோகமானாள். “ஒருவேளை என் அப்பா அதை எனக்கு வாங்கிக் கொடுத்ததால அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கலாம். எனக்கு தெரியல” என வருத்தமாக பெருமூச்சு விட்டாள்.

அவளது மகிழ்ச்சியும் சோகமும் தன்னை பாதிப்பதை உணர்ந்த ஆர்யன் அவள் பேசுவதை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

திரும்ப மென்னகையுடன் ருஹானா “என்னோட குழந்தை பருவ ஹீரோ எங்க அப்பா தான். நான் பெரிய பொண்ணா ஆன பின்னாடியும் அடிக்கடி வாங்கிட்டு வருவார்” என அவனுடன் தனது சிறுவயது கதையை பகிர்ந்துக்கொண்டாள்.

ஆர்யன் தன் தந்தையை நினைத்து மனநிலை மாறியிருக்க, ருஹானா “உங்களுக்கு என்ன பிடிக்கும், உங்க சின்ன வயசுல?” என கேட்கவும், இன்னும் இறுக்கமான ஆர்யன் நகங்களை பிய்த்துக் கொண்டிருந்தான்.

“என்னோட சின்ன வயசுல இது போல விஷயங்களுக்குலாம் இடமே இல்ல. எங்களோட வாழ்க்கை….” என சொல்ல வந்தவன் நிறுத்திக்கொண்டான். அவன் நகத்தை அழுத்திக்கொண்டிருந்த இடத்தில் இருந்து இரத்தம் வந்தது.

தூக்கில் தொங்கும் தன் அப்பாவை தான் ஓடிவந்து தாங்கியதும், அவர் தன் கையில் விழுந்து தன் கை எலும்பு உடைந்ததும் காட்சிகளாக நினைவில் வந்தது. முன்பு அடிக்கடி வந்து தொல்லை செய்த நினைவுகள் ருஹானா வந்த பிறகு ஓரளவு நின்றிருந்தன.

வெகு நாட்களுக்கு பின் மீண்டும் அந்த இரணங்கள் அவனை தாக்க, பணியாளரை அழைத்து பில் கொண்டுவர சொன்னான்.

“என்னை மன்னிச்சிடுங்க. யோசிக்காம கேட்டுட்டேன். ஏதோ கெட்ட விஷயத்தை ஞாபகப்படுத்திட்டேன் போல.. ஸாரி.. ஸாரி” என ருஹானா பதற, ஆர்யன் அமைதியாகவே இருந்தான்.

———

பலவித நிறங்களில் இருந்த பட்டாம்பூச்சி பொம்மைகளை ருஹானாவும் இவானும் பிரித்துக்கொண்டிருக்க, ஜாஃபர் ஒரு அட்டைப்பெட்டியை கொண்டுவந்து “மிஸ்டர் ஆர்யன் உங்களுக்கும், இவானுக்கும் இதை அனுப்பியிருக்கார்” என்று தர, தனக்கு ஆர்யன் அனுப்புவதா, அதுவும் ஜாஃபர் முன்னிலையில் என சங்கோஜமான ருஹானா “ஆஹ்! என் செல்லத்துக்கு அவனோட சித்தப்பா என்ன கொடுத்து விட்டிருக்கார்னு பார்க்கலாமா?” என திசை மாற்றினாள்.

ஜாஃபர் கிளம்பவும் ருஹானா “திறந்து பார் தேனே!” என பெட்டியை கட்டிலில் இவானுக்கு அருகில் வைக்க, அவனும் ஆவலோடு திறக்க அதில் பஞ்சுமிட்டாய் பொதிகள் இருந்தன.

“யேஹ்! என்ன சித்தி இது?” என இவான் கேட்க, அவனுக்கு கூட பதில் சொல்லாமல் ஆர்யனிடம் தான் பேசியதில் மூழ்கிப் போனாள்.

‘எனக்கு பிடிக்கும்னு என் அப்பா பலசமயம் எனக்கு சர்ப்ரைஸா பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். நான் அதிக மகிழ்ச்சியாகிடுவேன்’

“இது ரோஸ் மேகம் போல இருக்கே!” என இவான் குரல் கேட்டு, புன்னகை நிறைந்த முகத்தோடு ஒன்றை எடுத்து பிரித்துக் கொடுத்தாள். “உனக்கு பிடிக்குதான்னு பார்க்கலாம்”

இவான் அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு “சூப்பரா இருக்கு, சித்தி!” என்றான். “எனக்கும் சின்னவயசுல இது ரொம்ப பிடிக்கும். உன் தாத்தா என்னை சந்தோசப்படுத்த இதை வாங்கிட்டு வருவார்” என சிரிப்புடன் சொன்னாள்.

“ஓ! இப்போ சித்தப்பாவும் உங்களை சந்தோசப்படுத்த வாங்கி கொடுத்திருக்கார். தாத்தா போல அவரும் நீங்க மகிழ்வா இருக்கணும்னு நினைக்கிறார்” என இவான் சொன்னதும் திகைத்து விட்டாள்.

ஆர்யன் மருத்துவமனையில் இவான் சங்கிலியை தன் கையில் தந்து சீக்கிரம் நலமாக சொன்னது, மிஷால் ‘உன்னை காப்பாத்தினது நானில்ல, ஆர்யன்’ என சொன்னது, நஸ்ரியா “கண்ணிமைக்கும் நேரத்தில ஆர்யன் சார் உங்க ரூமை மினி ஹாஸ்பிடலா மாத்திட்டார்’ என சொன்னது, இவான் ‘சித்தப்பா உங்களுக்காக எல்லாம் செய்வார்’ என சொன்னது, ஆர்யன் ‘கடல் காற்று வாங்க வா, டாக்டர் நல்லதுன்னு சொன்னாரே’ என கூட்டி சென்றது என காட்சிகள் மாறி மாறி அவள் முன்னே ஓடியது.

“சித்தி! நீங்களும் சாப்பிடுங்க!” என இவான் ஊட்ட, அவளும் ஆனந்தமாக வாங்கிக்கொண்டாள். “நல்லா இருக்குல சித்தி?” என இவான் கேட்க “ரொம்ப நல்லாயிருக்கு” என அவனுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டாள்.

                                             ———–

ருஹானாவுடன் தான் இன்று செலவழித்த தருணங்களை நினைத்துக்கொண்டு ஆர்யன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, கதவை தட்டி உள்ளே வந்த ருஹானா அவன் முன்னே வந்து நின்றாள்.

அவள் என்ன சொல்லப் போகிறாள் என அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் அவள் பேசாமல் நிற்பதை பார்த்து, என்ன என்பது போல தலை சாய்த்தான்.

“நான் இங்க முதன்முதலா வந்தபோது நீங்க என்னை துரத்த பார்த்தீங்க”

ஆர்யன் தலை தானாக தாழ்ந்து தரையை பார்த்தது.

“ஆனா… இப்போ…. நீங்க தான் என்னோட கொடுமையான நேரத்துல துணை நிற்கிறீங்க! எனக்காக உங்க உயிரை பணயம் வச்சிருக்கீங்க!”

அவள் நிறுத்தி நிறுத்தி பேச ஆர்யன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான்.

“அப்போ என்னோட எதிரி நீங்க”

அந்த வார்த்தை அவன் மனதை நோகடித்தது.

“இப்போ நீங்க தான் என்னோட மிகுந்த நம்பத்தகுந்தவர்”

உலகத்திலுள்ள மகிழ்ச்சிகள் அனைத்தும் இப்போது அவனை நோக்கி பாய்ந்து வந்தன.

நீரோடிய கண்களுடன் இமைகளை தட்டி தட்டி அவள் “ஏன்?” என ஒற்றை வார்த்தையில் கேட்க, மனதை திறந்து எப்படி கொட்டுவது என அவன் அவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.

(தொடரும்) 

Advertisement