இவானின் அறையில் அவன் இரண்டு நாட்களாக வரைந்து வைத்திருந்த படங்களை சித்திக்கு காட்டிக்கொண்டிருந்தான்.

“இது நல்லா இருக்கே! இதை சட்டம் போடலாம்” என ருஹானா சொல்ல, இவான் இன்னொரு படத்தை காட்ட “இது இன்னும் நல்லா வரைஞ்சிருக்கயே” என அவள் பாராட்ட, இப்போது இவான் மற்றொரு படத்தை காட்டினான்.

“பாருங்க சித்தி! சித்தப்பா உங்களையும் என்னையும் பாதுகாக்கறார்” என இவான் காட்ட, அதில் அசுரனின் கைகள் நீண்டு ஒரு கை சிறுவனையும், ஒரு கை இளம்பெண்ணையும் பிடித்திருந்தது.

ருஹானா அதை கையில் வாங்கி ஆர்வமாக பார்க்க, இவான் இன்னொரு படத்தை எடுக்கும்போது மேசையில் இருந்த கிட்டார் கீழே விழுந்தது. திடுக்கிட்டு போன ருஹானாவின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.

கிட்டாரை எடுத்து மேசை மேல் வைத்தபடி இவான் “யாக்கூப் மாஸ்டர் வெளிநாடு போயிட்டதா சித்தப்பா சொன்னார்” என்று சொல்ல ருஹானாவிற்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.

“தேனே! உனக்கு வேற டீச்சர் வேணும்னா ஏற்பாடு செய்யலாம்” என ருஹானா சொல்ல, “எனக்கு அந்த மாஸ்டரை ரொம்ப பிடிச்சது” என இவான் சொல்லவும், ருஹானாவால் உட்கார முடியவில்லை.

அந்த நேரம் நஸ்ரியா உள்ளே வரவும் “நஸ்ரியா! நீ கொஞ்ச நேரம் இவானை பார்த்துக்கறீயா?’ என ருஹானா கேட்கவும் அவளும் சரியென்றாள். ருஹானா அவள் அறைக்கு செல்ல, இவானுடன் அமர்ந்த நஸ்ரியா அவன் கையில் இருந்த கிட்டாரை பார்த்ததும், ருஹானா சென்ற காரணம் பற்றி புரிந்துக்கொண்டவள் “நல்லவன் போல தெரிஞ்சான்” என பெருமூச்சு விட்டாள்.

கட்டிலில் அமர்ந்துக்கொண்ட ருஹானா பிராணவாயு கவசத்தை எடுத்து மாட்டிக்கொண்டு ஆழமாக சுவாசித்தாள். அவள் சுவாசம் சீராகும் நேரம் சமூக சேவை நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது.

முக்கியமான படிவத்தில் அவளுடைய கையெழுத்து வேண்டும் என்று அவர்கள் அழைக்க, ருஹானா வெளியே செல்ல பயப்பட்டாள். இன்னொரு நாள் வரவா என அவள் கேட்க, அன்றே வருவது அவசியம் என அந்த அதிகாரி சொன்னார்.

———

சல்மா ஏற்பாடு செய்த சந்திப்பிற்கு தயாராகி, கவரும்வகையான கோட் சூட் அணிந்துக்கொண்டு எடுப்பாக வெளியே வந்த ஆர்யன், எதிர் அறையில் ருஹானா குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.

வெளியே செல்ல கிளம்பி அழகான உடையில் கையில் கைப்பையுடன் தயக்கமாக ருஹானா நடப்பதை பார்த்தவன் அவள் அறை நோக்கி வந்தான். அதற்குள் ருஹானா இயலாமல் கட்டிலில் அமர, உள்ளே வந்த ஆர்யன் “வெளிய எங்கயும் போறீயா?” என கேட்டான்.

“ஆமா, சோசியல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து உடனே வர சொன்னாங்க” என ருஹானா தயங்கியபடி சொல்ல, அவளை உற்று பார்த்த ஆர்யன் புரிந்துகொண்டான்.

“வெளிய போக பயப்படுறீயா?” என ஆர்யன் கேட்க, அவள் மெல்ல தலையாட்டினாள்.

“அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு நான் உனக்கு சொன்னேன் தானே”

“எனக்கு புரியுது.. ஆனா…”

“பயப்படாதே! அவனால உன் பக்கம் நெருங்க முடியாது. அவன் உயிரோட இருக்குறவரை கூட உனக்கு இம்மியும் கெடுதல் செய்ய முடியாது”

பெருமூச்சு விட்ட ருஹானா “நன்றி!” என்று சொல்ல, ஆர்யன் வெளியே சென்றான்.

——–

“அக்கா! மீட்டிங்க்கு லேட்டாகுது. இன்னும் ஆர்யனை காணோம்! நான் மேல போய் பார்க்கவா?” வரவேற்பறையில் அமர்ந்திருந்த சல்மா பளீச்சென்ற பச்சை கவுன் அணிந்து பகட்டாக ஒப்பனை செய்திருந்தாள்.

“பொறுமையா இரு சல்மா! அவன் வந்துடுவான்” கரீமா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஆர்யன் படிக்கட்டில் இறங்கி வாசல் கதவு அருகே வர, தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு சல்மா ஆர்யனை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

“நாம போகலாமா, ஆர்யன்? மீட்டிங் நேரத்துக்கு தொடங்கணும்”

“நாம மீட்டிங்க்கு போகல” என ஆர்யன் சொல்ல, சல்மாவிற்கு மட்டும் அல்ல பின்னால் வந்து சேர்ந்த கரீமாவுக்கும் பலத்த அதிர்ச்சி தான்.

“ஆனா.. நான்…”

“சந்திப்பை ரத்து செய். எனக்கு வேற வேலை இருக்கு”

“ஆனா இது முக்கியமான மீட்டிங்னு நான் சொன்னேனே” சல்மா விடவில்லை.

படிக்கட்டில் ருஹானா இறங்கி வரும் சத்தம் கேட்க, திரும்பி அவளை பார்த்த ஆர்யன் “வேற நாளுக்கு சந்திப்பை ஒத்தி வை” என சல்மாவிடம் சொன்னான்.

அதற்குள் ருஹானாவும் கீழே இறங்கி வந்து ஆர்யன் அருகே நிற்க “ஆனா ஆர்யன், திரும்பவும் எல்லாரையும் சேர்க்கறது கஷ்டம். நான் எப்படி திரும்பவும் ஒன்னா கூப்பிடுவேன்?” சல்மா தொடர்ந்து வலியுறுத்தினாள்.

ருஹானா ஆர்யனை பார்க்க, ஆர்யன் வேறு எங்கோ பார்த்தான். சல்மாவின் இடுப்பில் கிள்ளிய கரீமா “சல்மா டியர்! வேற ஏதாவது வழி கிடைக்கும். ஆர்யன் சொல்றபடி செய். சரியா?” என கேட்டாள். “சரி தான்!” என சொன்ன சல்மா “திரும்ப திரும்ப மீட்டிங் ரத்து செய்தா நல்லா இருக்காதேன்னு தான் நான் சொன்னேன்” என்றாள்.

“பரவால்ல, கொஞ்ச நாள் கழிச்சி மீட்டிங் வச்சா எல்லாரும் வருவாங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல” என சொன்ன ஆர்யன், ருஹானாவிடம் “வா போலாம், நான் உன்கூட வரேன்” என்று சொல்லி வெளியே நடக்க, ருஹானாவும் அவனை பின்தொடர்ந்தாள்.

வாசலிலிருந்து வரவேற்பறைக்கு வெடுக் வெடுக் என நடந்து வந்த சல்மா கைப்பையை சோபாவில் விட்டடித்தாள்.

“எனக்கு பைத்தியம் பிடிக்குது. திரும்ப ரெண்டு பேரும் சேர்ந்து எங்க தான் போய் தொலையறாங்க?” என கத்தினாள்.

அந்தோ பாவம் சல்மா! உன்னை அவன் எப்போதுமே கண்டு கொள்ள மாட்டான். இப்போது நீ அவன் காட்சியிலிருந்தே மறைந்து விட்டாய்.

——–

சாலையில் ஒரு பார்வையும் அவள் மீது ஒரு கண்ணுமாய் காரை ஆர்யன் செலுத்திக்கொண்டிருக்க, ருஹானா “வேலை பார்க்க விடாம உங்களை நான் தொந்தரவு செய்றேன்” என்றாள்.

அவன் உடனே ‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இதை விட முக்கியமான வேலை எனக்கு வேற எதும் இல்ல” என்று சொன்னவன் ‘அச்சோ! இப்போ என்ன சொன்னேன் நான்!’ என மனதில் திட்டிக்கொண்டான்.

“அதாவது… சல்மா சொல்ற அளவுக்கு அது முக்கியமான மீட்டிங் இல்ல” என அவன் சமாளிக்க, ருஹானாவும் சமாதானம் ஆனாள்.

அதன்பின் அங்கே மௌனம் நிலவ சையத் பேச ஆரம்பித்தார். ‘உன் கூட்டை உடை. வெளியே வா. உணர்ச்சிகளை மறைக்காதே. இதிலிருந்து நீ தப்பிக்க முடியாது’

ஓரிடத்தில் ஆர்யன் காரை நிறுத்த, ஆச்சரியமான ருஹானா “இங்க ஏன் நிறுத்தியிருக்கீங்க?” என்று கேட்டாள். “நாம காபி குடிக்கலாம்!” என்ற அவனின் பதிலால் அவளின் ஆச்சரியம் இன்னும் அதிகரித்தது.

அவள் கண்ணில் வியப்பை கவனித்த ஆர்யன் “கடல் காத்து உனக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னாரே!” என சொல்ல, ருஹானாவின் தலை மெதுவாக ஆடியது. ‘அதுக்கு தான்!’ என்பது போல் தலையை ஆட்டிய ஆர்யன் காரில் இருந்து இறங்கவும், ருஹானாவின் ஆனந்த வியப்பு லேசான முறுவலாக வெளிப்பட்டது.

மென்சிரிப்பை மறைத்துக்கொண்டே இறங்கிய அவள் தனக்காக காத்து நின்ற ஆர்யனுடன் இணைந்து கொண்டாள்.

ரம்மியமான கடலோரம் மறுபக்கம் மரங்கள் அடர்ந்திருக்க பாதி திறந்தவெளியில் அழகாக அமைந்திருந்து அந்த காபி கடை. உள்ளே சென்று கடலை பார்க்கும்வண்ணம் இருந்த இருக்கையில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டனர்.

அகண்ட கடலை ரசித்துக்கொண்டு கடல் காற்றின் சுகத்தில் ருஹானாவின் மனம் இதமாக முகம் மிருதுவானது. ருஹானாவின் முகஅழகை ரசித்துக்கொண்டு அவள் கூந்தலின் ஆட்டத்தில் ஆர்யனின் மனமும் ஆட்டம் கண்டது.

காதல் பயணத்தில் இது தான் இவர்கள் இருவரின் முதல் அவுட்டிங்! காபி டேட்டிங்!!

அவள் கடலை பார்க்கும் தருணம் அவன் அவளை பார்க்க, அவள் அவனை பார்க்கும் நேரம் அவன் கடலை பார்த்தான். நெடுநேரம் நீடித்த இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இருவர் பார்வையும் வெட்டிக்கொள்ளும் நேரம் முடிவுக்கு வந்தது.

“இங்க வந்தது நல்லதா போச்சி. என்னால எளிதா மூச்சுவிட முடியுது”

“வெரிகுட். அப்போ திரும்பவும் நாம இங்க வரலாம்”

ருஹானாவிற்கு பின்னால் காதல் ஜோடி ஒன்று அமர்ந்திருக்க, அந்த அன்புகாதலன் தன் காதலியின் முடியை பரிவாக ஒதுக்கி விட்டான். அதை பார்த்த ஆர்யனுக்கு நேற்றிரவு கவசத்தை எடுத்துவிடும் சாக்கில் தான் ருஹானாவின் கூந்தலில் அலைந்து விளையாடியது நினைவுக்கு வந்தது.