Advertisement

ஒருவழியாக மருத்துவர் விடுபட்ட அழைப்புகளை பார்த்து மிஷாலை அழைக்க, அவரிடம் பேசி யாக்கூப்பின் தனிமை மாளிகையின் முகவரியை பெற்றுக்கொண்ட மிஷால் அந்த இடம் நோக்கி காரில் பறந்தான். இடையில் தன்வீருக்கு போன் செய்து விவரம் சொல்லி அந்த முகவரியையும் அனுப்பி வைத்தான்.

———

சமையலுக்கு உபயோகிக்கும் எரிவாயு செல்லும் குழாயில் சுத்தி கொண்டு யாக்கூப் ஓட்டை போட, ருஹானா நடுங்கிப் போய் சுவரோடு ஒண்டினாள். அந்த வாசனையை சுகமாக உள்ளிழுத்த யாக்கூப் “உனக்கு வலியில்லாத மரணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கேன், அன்பே! நீ நிம்மதியா தூங்கிடுவே. நான் உன்கூடவே இருப்பேன். நாம பிரியவே மாட்டோம்” என குழாய் அருகே சாய்ந்து அமர்ந்தான்.

ருஹானா திகிலாக பார்க்க “நாம பிரியவே மாட்டோம்” என திரும்ப திரும்ப சொன்ன யாக்கூப், ஆழமாக பெரிய மூச்சுகளை இன்பமாக எடுக்க ஆரம்பித்தான். ருஹானாவிற்கு இருமல் வர, இவான் சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவளும் சுவரோடு ஒட்டி அமர்ந்தாள்.

——–

வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்த மிஷால் பூட்டியிருந்த கதவை ஓங்கி தட்டினான். “யாக்கூப் கதவை திற! ருஹானா! நான் பேசுறது கேட்குதா?” என சத்தமாக கூவினான்.

அவன் சத்தம் கேட்டு எழுந்த ருஹானா நாற்காலியை தூக்கி ஜன்னலில் அடித்தாள். இருமல் பெரிதாக வர, அவளால் சுவாசம் எடுக்க முடியவில்லை. கால் விலங்கை எடுக்க போராடினாள். சங்கிலி அனுமதிக்கும் அளவு அங்குமிங்கும் அலைந்து விடுபட தத்தளித்தாள். கால்விலங்கு கணுக்காலில் பதிந்து இரத்தம் கொட்டியது.

தடால் என அவள் தரையில் விழ, அவள் கையில் இருந்த சங்கிலி தள்ளிப்போய் விழுந்து அதன் லாக்கெட் திறந்து கொண்டது. அதில் இவான் முகம் தெரிய “இவான்! இவான்!” என அதை எடுக்க முயற்சி செய்தாள். அவளால் இயலவில்லை. இவான் முகத்தை பார்த்தபடியே மயங்கினாள்.

தோள் கொண்டு கதவை பலமாக தள்ளி உள்ளே ஓடிவந்த மிஷால் பார்த்தது மயங்கி கிடந்த ருஹானாவை தான். அவளை மடியில் ஏந்தி “ருஹானா! ருஹானா!!” என அவள் கன்னத்தை தட்டினான். கண்விழித்து பார்த்த ருஹானா “மிஷால்!” என பலவீனமாக அழைத்தாள்.

மிஷால் அவளை உலுக்க, அவள் கையில் இவான் சங்கிலி தட்டுப்பட அதை பிடித்துக்கொண்டவள் திரும்பவும் மயங்கினாள். அதற்குள் மிஷால் சுவாசத்திலும் எரிவாயு கலக்க அவனுக்கும் இருமல் வந்தது. ருஹானாவை தூக்கியவன் அவள் காலில் சங்கிலி மாட்டப்பட்டிருப்பதை பார்த்து அவளை தரையில் கிடத்திவிட்டு சுவர் அருகே சென்றான்.

அதை பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்க்க அவனால் முடியவில்லை. விடாது இருமல் பாடாய்படுத்த, மயங்கி சாய்ந்திருந்த யாக்கூப்பின் கையில் சுத்தி இருப்பதை பார்த்து அதை எடுத்து இரும்பு சங்கிலியை உடைக்கப் பார்த்தான். இரண்டு தட்டு தட்டுவதற்குள் மூச்சு முட்ட, ருஹானாவை பார்த்தபடியே தன் உயிர் பிழைக்க அவளை சாக விட்டுவிட்டு தவழ்ந்தபடி அறையை விட்டு அகன்று விட்டான். .

——–

அசுரன் இளவரசியை கண்டுபிடிச்சிட்டானா, பெரியப்பா?”

ஆமா இவான்! அசுரன் இளவரசி இருக்கும் கிணத்துக்கு வந்துட்டான். அவளை காப்பாத்துற முயற்சியை அவன் ஒரு நொடியும் கைவிடல”

ஆர்யன் வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தான். காரிலிருந்து இறங்கிய அவனுக்கு நன்றாக நிமிரவே முடியவில்லை. தோள்பட்டை காயத்தை ஒருகையால் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

இளவரசியை நெருங்க நெருங்க அவன் உடம்புல தானா காயங்கள் உண்டாகுது. அவன் சக்தியெல்லாம் இழக்கறான். அவனுக்கு நிற்கவே முடியல. உடல் பலவீனமாகுது”

பலமாக இருமிக்கொண்டே மிஷால் வெளியே வருவதை பார்த்தான் ஆர்யன். மிஷாலால் நிற்கவே முடியவில்லை. தளர்ந்து போய் படிக்கட்டில் அமர்ந்துவிட்டான். அடிபட்ட நிலையில் ஆர்யன் எதிரே வருவதை மிஷால் பார்த்தான்.

அந்த மாயாவிக்கு தெரியல, உண்மை காதலுக்கு பலம் அதிகம். அது தோற்கவே தோற்காது. யார் இளவரசி மேல உண்மையான அன்பு வச்சிருக்காங்களோ, அவங்களால அவளை கண்டிப்பா காப்பாத்த முடியும்”

மிஷாலில் நிலை கண்டும் ஆர்யன் சிறிதும் யோசிக்கவில்லை. தள்ளாடியபடியே கதவை தாண்டி உள்ளே சென்றான்.

அவன் கிட்டே நெருங்கிட்டான். அவனோட ஒவ்வொரு காலடிக்கும் ஒவ்வொரு புண் ஏற்படுது. ஆனாலும் அவன் தயங்கி நிற்கல”

மயங்கிக் கிடந்த ருஹானாவை பார்த்தவன் அவள் அருகே ஓடினான். அசையாது சாய்ந்திருந்த யாக்கூப்பின் மேல் ஒரு பார்வையை மட்டும் வீசிவிட்டு ருஹானாவின் பக்கத்தில் மண்டியிட்டான்.

அவனுக்கு நல்லா புரியுது. இளவரசியை காப்பாத்தும்போது அவன் உயிர் அவனை விட்டு போய்டும்னு. ஆனாலும் அவன் முன்னேறி போயிட்டே இருக்கான்”

வாயால் பெரிய மூச்சுக்களை எடுத்துவிட்டபடி அவளை தூக்கினான். அவள் கால் சங்கிலியால் பிணைத்திருப்பதை கண்டவுடன் அவளை மீண்டும் படுக்க வைத்தான்.

அவனோட சோர்வையோ, வலியையோ அவன் பெருசா நினைக்கல. அவனோட உயிரையும் தான்”

சங்கிலியை பலங்கொண்ட மட்டும் இழுத்து பார்த்தான். அது சுவரை கெட்டியாக பிடித்திருந்தது. இருந்தும் இருகைகளினாலும் மேலே பிடித்து தூக்கினான்.

இளவரசியை காப்பாத்திட்டா மட்டும் போதும்னு நினைக்கிறான், பெருமுயற்சி செய்றான்”

அவன் சங்கிலியை இழுக்க இழுக்க இருகைகளிலும் இரத்தம் கசிய ஆரம்பித்தது. தோள்பட்டை காயமும் பிளந்துகொண்டு குருதியை கொட்டியது.

அவன் இதயம் முழுதும் அவள் மேல் வைத்த காதலால் நிரம்பி வழியுது”

என்றாலும் மீண்டும் மீண்டும் சக்தியை திரட்டி முயற்சி செய்தான். எரிவாயு அவன் நாசியிலும் புக, சுவாசம் சரிவர நடக்காமல் ஆர்யனும் இருமினான்.

அவள் உயிரை காக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததேங்கற மகிழ்ச்சியை தவிர அவன் வலி அவனுக்கு பெருசா தெரியவே இல்ல”

ருஹானாவின் அருகில் வந்து “தாக்குப்பிடி. விட்டுடாதே. பொறுத்துக்கோ. மூச்சை இழுத்துப் பிடி” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் கண்ணுக்கு தரையில் கிடந்த சுத்தி புலப்பட்டது.

அசுரனுக்கும் மாயாவிக்கும் பெரிய சண்டை நடக்குது. பலத்த போராட்டத்துக்கு பின்னால மாயாவியை கொன்னு போட்டுட்டு இளவரசியை தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு கிணத்துல ஏற ஆரம்பிக்கிறான்”

சுத்தியை வைத்து சங்கிலியும் கால்விலங்கும் இணைந்திருந்த பலவீனமான இணைப்பில் அடித்துக்கொண்டே இருந்தான். காயங்களில் இருந்து இரத்த ஊற்று பொங்கியது.

இளவரசி அதிகமாக நெருங்கினதால அவனோட காயங்கள் எல்லாம் இன்னும் பெருசாகுது. இளவரசிக்கு இது தெரியாம பயத்துல அவனை கட்டிப் பிடிக்கிறா. பொறுக்கமுடியாத வலியிலயும் அசுரன் அதிக ஆனந்தமடையறான்”

ருஹானாவோட கழித்த இனிய தருணங்களும், அவளின் புன்னகை முகமும் மெல்லிய சாரலாய் அவன் மனதை குளிர்விக்க, அந்த அழகு முகம் அந்த வசீகர கண்கள் அவனுக்கு வலிமையை தந்தது. உடலின் ஒவ்வொரு திசுக்களிடம் இருந்தும் சக்தியை எடுத்து, அவன் ஓங்கி அடிக்க இரும்பு சங்கிலி பிளவுப்பட்டது.

முதல்முறையா பயமே இல்லாம ஒருத்தி அவனை கட்டிப்பிடிக்கிறா. அவன் சோர்வை காட்டி அவளை பயமுறுத்துக் கூடாதுன்னு நினைக்கிறான். ஒரு முனகல் சத்தம் இல்ல. ஒரு ஆ சத்தம் இல்ல”

மிஷாலுக்கு வெளியேயும் தலை சுற்றியது.  படிக்கட்டுகளை விட்டு நகர்ந்து போய் தரையில் அமர்ந்து கொண்டு திணறியபடி சுவாசம் எடுத்தான்.

ஆர்யன் கால் விலங்கை கழட்டி போட்டுவிட்டு ருஹானாவை தூக்கிக்கொண்டு தள்ளாடி தளர்ந்த நடையுடன் வெளியே வந்தான், மிகுந்த சிரமப்பட்டு. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு யுகமானது போல அவனுக்கு தோன்றியது.

அவள் மீதான காதலோட வலிகளை தாங்கி கிணத்துக்கு மேல ஏறி வந்துட்டான்”

தன் கால்முட்டியை மடக்கி கீழே வைத்து, மெல்ல அவளை இறக்கி பூப்போல தரையில் கிடத்தினான். அவள் முகத்தை மென்மையாக தடவி அவள் மயக்கத்தை தெளிவிக்க முயன்றான்.

“வேணாம்.. இப்படி நடக்க கூடாது. போயிடாதே.. வேணாம்… பொறுத்துக்கோ… போகாதே.. விட்டு போகாதே.. என்னை விட்டு போகாதே… நீ இப்படி என்னை விட்டு போக முடியாது. எனக்காக போகாதே”

இவானுக்காக என்று இல்லாமல் தனக்கு வேண்டி அவளை திரும்ப அழைக்கிறான். அந்த ஆழ்ந்த காதலுக்கு பார்வையாளனாக மிஷால் நிற்க, நினைத்து பார்த்திராத ஆர்யனின் மறுமுகத்தை பார்த்த அவன் திகைத்தான்.

நாம் நம்மை பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது சொல்கிறோம் என்பது நம்மை நிர்ணயிக்காது. நாம் என்ன செய்கிறோம் அல்லது செய்யாமல் விடுகிறோம் என்பதே நாம் யார் என்பதை வெளியுலகுக்கு காட்டும்.

தன்னலம் பாராத காதலால் ஆர்யன் செய்து முடித்துவிட்டான். மிஷால் செய்யாமல் தவறவிட்டான்

அப்புறம் பெரியப்பா? அசுரன் இளவரசியை காப்பாத்திட்டானா?”

ஆமா செல்லம்”

அசுரனுக்கு என்ன ஆச்சு?”

இளவரசி முத்தம் தந்ததும் அவனோட காயங்கள் எல்லாம் மாயமா மறைஞ்சி போய்டுச்சி. மாயாவியோட சாபமும் முறிஞ்சிடுச்சி. அவங்க ரொம்ப சந்தோசமா வாழ்ந்தாங்க”

ருஹானாவின் முகத்தை பார்த்துக்கொண்டே ஆர்யன் அவள் அருகே சரிந்தான். ருஹானா கைகளை விரித்தபடி மல்லாந்து கிடக்க, அவள் சாய்ந்த முகத்தை திரும்பி பார்த்தபடி ஒரு காலை மடக்கி, கண்மூடும் வரை அவள் முகம் பார்த்து ஆர்யனும் கண்களை மூடினான்.

(தொடரும்)  

Advertisement