Advertisement

ஆர்யன் நெற்றி முழுதும் வேர்த்திருக்க, நடை பயின்ற அவன் தள்ளாட அதுவரை கவலையுடன் பார்த்திருந்த ரஷீத்தால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “ஆர்யன்! குண்டு உள்ள இருக்கு. ரத்தமும் வந்துட்டே இருக்கு. டாக்டரை இங்கயே வரவைக்கிறேன்” என்று பணிவாக வேண்டினான்.

மேசை மேல் சாய்ந்துக்கொண்ட ஆர்யன் “நான் இங்க நின்னுட்டு இருக்கேன். உயிரோட இருக்கேன். அவ அங்க ஒரு சைக்கோ கிட்ட மாட்டிட்டு இருக்கா. இந்நேரம் எப்படி இருக்காளோ?” என வாயில் மூச்சிரைத்தபடி சொன்னவன் “கண்டுபிடிச்சீங்களா, இல்லயா?” என மற்றவர்களை பார்த்து இரைந்தான்.

“சரி, ஆர்யன். அவங்க இப்போ கண்டுபிடிச்சிடுவாங்க. அதுக்குள்ள டாக்டரை வரவச்சி இரத்தத்தை நிறுத்தி கட்டு மட்டும் போட்டுக்கலாம். குண்டை வெளிய எடுக்க வேண்டாம்.” என ரஷீத் கெஞ்ச, பதில் சொல்ல வந்த ஆர்யன் கண்கள் இருள மயங்கினான். ரஷீத் உடனே மருத்துவரை அழைத்தான்.

———–

யாக்கூப்பின் மருத்துவர் சிகிச்சை செய்து கொண்டிருக்க, அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மிஷால் தவித்தான். அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தான்.

——–

உணவு மேசை பலவகை உணவுகளால் நிரம்பி இருக்க, “உனக்கு பிடிச்சிருக்கா, அன்பே? நாம கனவு கண்ட நாள் வந்துவிட்டது. நாம இப்போ சேர்ந்து சாப்பிடலாம். அப்புறம் மீளா தூக்கத்துக்கு போகலாம். ஆனா அதுக்கு முன்ன ஒரு வேலை இருக்கு” என்று சொன்ன யாக்கூப் சுவரில் மாட்டியிருந்த வெள்ளை ஆடையை எடுத்து வந்தான்.

“நீ இந்த ஆடையை அணியும் நேரம் வந்துடுச்சி. இதை நாம வாங்கின நாள் உனக்கு நினைவிருக்கா? உனக்கு எவ்வளவு அழகா இருந்தது இது!” என மகிழ்ச்சியில் மிதந்தவன் அவள் கைக்கட்டை நீக்கினான்.

சலனமின்றி அவனை உறுத்து பார்த்திருந்த ருஹானா மரத்துப் போயிருந்த கைகளை அசைத்துப் பார்த்தாள். கைகளில் ஆர்யனின் இரத்தக்கறையை கண்டவள் கொதித்துப் போனாள். அந்த நேரம் “வா! சீக்கிரம் இதை அணிந்து கொள்! இனியும் என்னை காத்திருக்க வைக்காதே” என ஆவலுடன் யாக்கூப் அதை நீட்டவும் பொங்கி விட்டாள்.

“கொலைகாரா! கொடிய மிருகம் நீ! இரக்கம் இல்லாத அரக்கன் நீ தான்! காட்டுமிராண்டி!” என அவனை விடவும் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல கத்தியவள் அந்த ஆடையை தாறுமாறாக கிழிக்க ஆரம்பித்தாள். பயந்து போய் நின்ற யாக்கூப் அவளிடமிருந்து அதை பிடுங்கி சுவரில் மாட்ட, அவனை சரமாரியாக அடிக்கலானாள்.

அவளை பிடித்து நாற்காலியில் அமர்த்த அவன் போராட “என்னை விடு! தொடாதே!” என அவள் கத்திக்கொண்டே இருக்க “இப்போ நீ கோபமா இருக்கே! உன் கோபத்துலயும் நியாயம் இருக்கு. போன முறை நான் உன்னை தனியா போக விட்டுட்டேன். இந்த தடவை அப்படி நடக்காது. சத்தியமா உன்னை பிரிய மாட்டேன்” என பேசியபடியே அவள் கைகளை கட்டிவிட்டான்.

“முட்டாள்! வெறி பிடித்தவனே! மடையா!” என கத்தி ஓய்ந்தவள், ஒன்றும் முடியாமல் விரக்தியில் அழ தொடங்கினாள்.

——–

‘உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை எடுத்தே ஆகவேண்டும்’ என்று அடம் பிடித்த மருத்துவரிடம் நிலைமையின் தீவிரத்தை எடுத்து சொல்லிய ரஷீத், ஆர்யனுக்கு முதலுதவி மட்டும் செய்ய சொல்ல, மருத்துவரும் மனமே இல்லாமல் அவன் சொன்னதை மட்டும் செய்து, வலி நிவாரண மருந்தை ஊசி மூலம் செலுத்தினார்.

அதே வேளையில் வீட்டுமனை முகவர் மூலம் வெள்ளை மாளிகை இருக்கும் இடம் பற்றிய தகவல் தொலைபேசி வழியாக ரஷீத்திற்கு கிடைக்க, அந்த முகவரியை அவன் ஒரு தாளில் எழுத, உணர்வு திரும்பிய ஆர்யன் அந்த தாளை எடுத்துக்கொண்டான்.

ஆர்யன் எழுந்து கிளம்ப முற்பட, ஒருகணம் அவன் தலை சுற்றியது. “அவளுக்காக தாக்கு பிடி… அவளுக்காக..!” என முனகியவன் வெளியே செல்ல யத்தனிக்க, ரஷீத் தடுத்தான். “ஆட்களை கூட்டிட்டு நான் போறேன். நீங்க படுத்திருங்க” என அவன் சொல்ல, அவனை தள்ளிய ஆர்யன் “எனக்கும் அவனுக்குமான நேரடி போராட்டம் இது. நானே பார்த்துக்கறேன்” என்று வெளியேறினான்.

  ———

இவானின் அறையில் இருந்து பால், பழங்கள் தாங்கிய தட்டோடு சாரா வெளியே வர, அம்ஜத் “இவான் இதுவும் சாப்பிடலயா?” என கவலையுடன் விசாரித்தான். “இல்ல சார், அதான் உருளைக்கிழங்கு ப்ரைஸ் செஞ்சி கொண்டு வரலாம்னு போறேன்” என சாரா வருத்தமாக சொல்ல, தட்டை  வாங்கிக்கொண்ட அம்ஜத்  “நான் பார்த்துக்கறேன்” என அறையின் உள்ளே சென்றான்.

ருஹானாவின் குளிராடையை மேலே போட்டுக்கொண்டு இவான் கண்ணீர் கறையுடன் இருக்க, அம்ஜத் அவன் அருகே நாற்காலியில் அமர்ந்தான்.

“ஏன் இவான் இப்படி இருக்கே?”

“எனக்கு பயமா இருக்கு பெரியப்பா! யாரும் எதுவும் சொல்ல மாட்றாங்க. அம்மா இறக்கும்போதும் இப்படி தான் நடந்தது. எல்லாரும் அமைதியா இருக்காங்க” சோகமாக சொன்னான்.

அவன் தலையை தடவிக்கொடுத்து முத்தம் தந்த அம்ஜத் “இந்த உலகத்துலயே தைரியமான, பலசாலியான ஒருத்தர் உன் சித்தியை தேட போயிருக்கார். அது உனக்கு தெரியுமா?” என கேட்டான்.

லேசாக புன்னகை எட்டிப்பார்க்க இவான் “என் ஆர்யன் சித்தப்பாவா?” என கேட்டான்.

“ஆமா! உன் ஆர்யன் சித்தப்பா தான்”

“அவர் சித்தியை கண்டுபிடிச்சிடுவாரா?”

“கண்டிப்பா! கதைகள்ல வர்ற சூப்பர்ஹீரோ போல தேடி கூட்டிட்டு வந்துடுவார்”

“சூப்பர்ஹீரோ போலவா? சித்தப்பாவா?”

“ஆமா இவான் செல்லம். ஆர்யன் வலிமையானவன். கெட்டவங்களை ஜெயிச்சி உன் சித்தியை கூட்டிட்டு வருவான்”

“உண்மையாவா, பெரியப்பா?”

“சத்தியமா தான்”

“பெரியப்பா உங்களுக்கு தெரியுமா, சித்தப்பா அசுரன் தான்”

“ஆமா! அந்த அசுரன் உன் சித்தியோட தான் வருவான். அதனால பயப்படாதே!” என ஆறுதல்படுத்தியபடியே அம்ஜத் இவானுக்கு பாலை புகட்டினான்.

அன்பை தேடும் சிறுவண்டு

அருகாமையில் அவளின்றி தவிக்க

அவளின் படுக்கையில்

அவளது அரவணைப்பில்

இருப்பது போல் மனதை

சமன் செய்ய முயல்கிறது!

சிறுவனது வாட்டத்தை கண்டு

அதை போக்கி நம்பிக்கை

அளிக்கிறது நல்லுள்ளம்!

——-

ஆர்யன் “உயிரை பிடிச்சி வச்சிரு. எனக்காக தாக்குப் பிடி… எனக்காக!” என ருஹானாவிடம் மானசீகமாக சொல்லிக்கொண்டே காரை வேகமாக செலுத்தினான்.

ருஹானா அவனிடம் மன்னிப்பு கேட்டதும், அவன் உயிருக்காக யாக்கூப்பிடம் கெஞ்சியதையும் நினைத்துப் பார்த்தான். அவன் முகத்தில் கவலை, வலி, கோபம், இயலாமை, தவிப்பு என பல்வேறு உணர்ச்சிகளும் பிரதிபலித்தன.

——–

“ஒரு காலத்துல ஒரு அழகான இளவரசி இருந்தாங்களாம். அவங்க ரொம்ப அன்பானவங்களாம்”

“என் சித்தியை போலவா பெரியப்பா?”

“ஆமா! உன் சித்தியை போல தான்” தன் மீது இவானை சாய்த்துகொண்ட அம்ஜத், அவன் தலையை மெல்ல வருடினான்.

“ஒரு அசுரன் தூரத்துல இருந்து அந்த இளவரசியை உயிருக்கு உயிரா விரும்பினானாம். அந்த அசுரன் ரொம்ப நல்லவன். ஆனா பார்க்க பெருசா பயங்கரமா இருப்பான். அவனை பார்த்து எல்லாரும் பயப்படுவாங்க. அதுனால யாரும் அவன் கிட்ட போக மாட்டாங்க”

“ஒருநாள் அசுரன் வேட்டைக்கு போயிருந்த சமயத்துல, அந்த நகரத்துக்கு ஒரு மாயாவி வந்தான். அவன் அழகா இருந்தான். ஆனா அவன் ரொம்ப கெட்டவன்”

“அவன் இளவரசியை பார்த்ததும் விரும்பி அவளை திருமணம் செய்ய கேட்டான். ஆனா இளவரசி ஒத்துக்கல. அவ வெளி அழகை பார்த்து மயங்கல. உள்ளதோட அழகை தான் அவ பெருசா நினைச்சா”

“அவ மறுத்ததும் மாயாவிக்கு கோபம் வந்துடுச்சி. அந்த நாட்டுல இருக்குறவங்களை எல்லாம் சிலையா மாத்திட்டான். இளவரசியை தூக்கிட்டு போய்ட்டான்”

“ஒரு பாழடைஞ்ச ஆழமான இருட்டு கிணத்துல கொண்டுபோய் இளவரசியை வச்சிட்டான். அந்த மாயாவி அவளை விட்டு நகரவே இல்ல.  இளவரசி தன்னை யாரும் காப்பாத்த வர மாட்டாங்கன்னு நினைச்சி அழுதுட்டே இருந்தா.”

“ஆனா அவளை நேசிக்கற அசுரன் அவளை தேடிப் போனான். சுத்தி சுத்தி அலைஞ்சான்”

“ஆனா அவனுக்கும் ஒன்னு தெரியாது. அந்த மாயாவி இளவரசியை சுத்தி மந்திரம் போட்டு வச்சிருக்கான். யார் அவளை காப்பாத்த நெருங்கினாலும் அவங்களுக்கு உடம்பு முழுக்க காயமாகும். அதனால அவங்க செத்துடுவாங்க”

“அசுரன் இளவரசியை காப்பாத்த முடியுமா, பெரியப்பா?”

“நீ இந்த பழத்தை சாப்பிடு, நான் சொல்றேன்”

———–

“இது தான் நான் செய்ததுலயே சிறந்த உணவு. நம்மோட கடைசி உணவு. உனக்கு பிடித்த உணவு” என்று சொன்னபடி யாக்கூப் ருசித்து உண்ண, ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என உலகம் வெறுத்து ருஹானா அமர்ந்திருந்தாள்.

ருஹானா கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்க, யாக்கூப் “எல்லாமே உனக்காக தான் டார்லிங்! ஆனா நீ ஏன் சாப்பிடல, ஷெனாஸ்?” என கேட்டான்.

“என்னை போகவிடு. இவானுக்காக போகவிடு. அவன் அம்மாவை இழந்திட்டான். என்னையும் இழந்திட்டா அவனால வாழவே முடியாது. அவன் சின்ன பையன். உன்னை கெஞ்சி கேட்கறேன். என்னை விட்டுடு”

“இவான்.. இவான்?” என யாக்கூப் யோசிக்க, ருஹானாவிற்கு ஒரு நப்பாசை, அவளை போக விட்டுவிடுவானோ என.

“இவானா? அப்படி யாரையும் எனக்கு தெரியாதே! இது நமக்கான நேரம் ஷெனாஸ் டியர். இப்போ ஏன் மத்தவங்களை பத்தி பேசிக்கிட்டு…? நீ, நான் அப்புறம் நம்மோட காதல்.. அவ்வளவு தான் நமக்கு தேவை”

———-

Advertisement