Advertisement

பெண் மனம் மென்மை குணம்

எச்சரிக்கையும் மீறி மதிகெட்டவன் மீது

இயல்பாய் இரக்கம் கொண்டு 

சுழலில் சிக்கி உயிருக்கு தவிக்க,

காலம் தப்பிய புரிதல்

மன்னிப்பை யாசிக்க

வருந்த விடுவானா 

உள்ளம் கவர்ந்தவன்,

உயிராய் இருப்பவன்?

“அவன் உன்னை அடிச்சானா? உன்னை தொட்டானா?” அதற்குள் அவன் சிந்தை வேறு இடம் பாய்ந்துவிட்டது.

“இல்ல” என அவள் சொல்லவும் நிம்மதியடைந்தவன் “சரி! கவனமா கேளு. அந்த பைத்தியக்காரன் வர்றதுக்குள்ள நாம வெளிய போகணும்” என்றான்.

“அது எப்படி முடியும்? கையும் காலும் கட்டிட்டு போயிட்டானே!”

“நீ என்கிட்டே வா! முகம் பார்க்காம முதுகு பார்க்கற மாதிரி உட்கார்வோம். நான் உன் கைவிலங்கை கழட்டறேன். என் மேல நம்பிக்கை வை”

கண்ணீருடன் புன்னகைத்த ருஹானா தலையாட்டினாள். “நான் உங்களை நம்பறேன்”

கையோடு கை, இதயத்தோடு இதயம், நாளுக்கு நாள், ஒருவருக்குள் ஒருவர் நெருங்கிய இருவரும் நாற்காலியோடு சேர்ந்து மெதுவாக நகர்ந்து திரும்பி முதுகோடு முதுகு சேர்ந்தபடி அமர்ந்தனர்.

“என் சட்டை கப்ளிங் எடுத்து என் கைல கொடு” என ஆர்யன் சொல்ல, ருஹானா பின்புறம் இருந்த தன் கைகளை நகர்த்தி அவன் கையை பற்றினாள்.

மிகுந்த சிரமப்பட்டு மெல்ல அவன் சட்டையின் கையில் இருந்து அதை எடுத்தவள், பதட்டத்தில் கீழே போட்டுவிட்டாள்.

“ஐயோ!” என அவள் பதற, “நிதானமா இரு! இன்னொன்னு இருக்கு. இப்போ நான் சொல்றபடி செய்” என சொல்ல, பெரிய மூச்சுகளை எடுத்துவிட்ட ருஹானா அவனின் மற்ற கையை பிடித்தாள்.

“என்னால முடியாது. என் கை வழுக்குது. முடியல” என அழுதாள்.

“உன்னால கண்டிப்பா முடியும். கவனமா எடு”

“இதும் கீழே விழுந்துட்டா என்ன செய்வோம்? இது எல்லாம் என்னால தான் நடந்தது. இப்போ இருக்கிற ஒரே வாய்ப்பும் என்னோட இயலாமையால நழுவிட்டா?” என கேட்ட அவள் அவன் கையை விட்டுவிட்டாள்.

“நீ நிச்சயம் செய்வே! நாம இங்க இருந்து சேர்ந்து வெளிய போவோம். முயற்சி செய். வா, எடு!” என தைரியமூட்டினான்.

திரும்ப முயற்சி செய்தும் அவளால் எடுக்க முடியவில்லை. அவள் அழ, அவன் தேற்ற, நேரம் தான் விரைந்தோடியது.

“இந்த இடத்தை மறந்திடு. உன் கவனம், சக்தி எல்லாம் உன் விரலுக்கு கொண்டு போ”

“நான் எடுக்கத்தான் பார்க்கறேன். ஆனா என்னால முடியல. என்னை மன்னிச்சிடுங்க”

“கண்ணை மூடிக்கோ” மூடினாள்.

“நாம தோட்டத்துல இருக்கோம். இவான் முன்னாடி விளையாடிட்டு இருக்கான். பார் அவன் சிரிக்கிறான். நம்மை பார்த்து கை ஆட்றான். சந்தோசமா இருக்கான்” அவன் கையை தடவி எடுக்க ஆரம்பித்தாள்.

“அண்ணன் ரோஜா செடியை நட சொல்றார். தொட்டில ரோஜா செடியை நீ நடப் போறே. நான் உன் பக்கத்துல நிற்கறேன்” எடுத்துவிட்டாள்.

“முட்கள் உன் கையில் குத்தாம நான் செடியை பிடிச்சிக்கறேன்” அவள் கையை பற்றிய அவன் மெதுவாக அதை தன் கைக்குள் மாற்றினான்.

அவள் இன்னமும் புன்னகையுடன் கண்மூடி இருக்க, ஆர்யன் தனது கப்ளிங் உதவியுடன் கடினம் என்றாலும் கைவிலங்கை கழட்டிவிட்டான். பின் தன் கால் கட்டையும் கழட்டி, ருஹானாவையும் விடுவிக்க ஐந்து நிமிடங்கள் கூட செலவழிக்கவில்லை ஆர்யன்.

“வா போகலாம்” என கதவு நோக்கி நடந்தான் அவளுடன்.

——-

காவல்நிலையத்தில் யாக்கூப்பின் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது.

“ஆபீஸர்! இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு முக்கியமான வேலை இருக்கு”

“கிரிமினல் குற்றம் பதிவு செய்ய நேரம் எடுக்கும். பொறுமையா இருங்க” காவல்நிலைய அதிகாரி கடிந்து கொண்டார்.

நகத்தை கடித்தபடி யாக்கூப் சுற்றுமுற்றும் பார்த்தான்.

——-

யாக்கூப் கதவை பூட்டி சென்றிருக்க, அந்த இரும்பு கதவை ஆர்யன் காலால் உதைக்க, ருஹானா உதவி கேட்டு கத்தினாள்.

“கத்தி கத்தி உன் சக்தியை வீணாக்காதே! இது யாருமே இல்லாத தனிமையான இடம்” என ஆர்யன் சொல்ல, “அப்போ நாம எப்படி வெளிய போறது? அவன் எந்த நேரத்துலயும் வந்துடுவான்” என அவள் பதறினாள்.

“இரும்பு கம்பி, ஒயர் எதாவது வேணும். பூட்டை திறந்து தான் போகமுடியும்” என ஆர்யன் சொல்ல, இருவரும் கீழே தேடினர். ருஹானா கையில் மெல்லிய இரும்பு கம்பி கிடைக்க, அதை எடுத்துக்கொண்டு வந்து ஆர்யனிடம் கொடுத்தாள். “இது உதவுமா, பாருங்க”

அவளை மெச்சுதலாக பார்த்த ஆர்யன் “கண்டிப்பா!’ என்றவன், கதவில் இணைந்த பூட்டின் துளையில் அதை நுழைத்து திருப்பினான்.

——

அதிகாரி காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு முடித்து வெளியே செல்ல திரும்பிய யாக்கூப், எதிரே மிஷால் உள்ளே வருவதை பார்த்து பதட்டமானான். மிஷால் அவனை தாண்டும்வரை திரும்பி நின்றவன், மிஷால் உள்ளே சென்றதும் வேகமாக வெளியேறினான்.

தனது நண்பன் தன்வீர் இருக்கைக்கு வந்த மிஷால், அது காலியாக இருக்க பக்கத்தில் இருந்த அதிகாரியிடம் விசாரித்தான். தன்வீர் கமிஷனர் வாசிமோடு ஒரு சமூகவிரோதியை பிடிக்க சென்றிருப்பதை தெரிந்து கொண்டவன் ருஹானாவை காணவில்லை எனும் செய்தி அவனை சென்றடையுமாறு வேண்டிக்கொண்டான்.

  ———

ஆர்யன் கதவின் பூட்டை திறக்க சிரமப்பட்டு கொண்டிருக்க, ருஹானா அவன் பக்கம் நின்று பரிதவிப்புடன் “எங்க போயிருப்பான்? போலீஸ் சைரன் சத்தம் கூட கேட்டதே! யாராவது நம்மளை பார்த்துட்டு நம்மளை காப்பாத்த போலீசை வரவழைச்சிருப்பாங்களா?” என கேட்டாள்.

ஆர்யன் கம்பியை சுழற்றிக்கொண்டே “அப்படி இருந்தா போலீஸ் உள்ள வந்திருப்பாங்களே! இது வேற ஏதோ கேஸ்” என சரியாக கணித்தவன் மீண்டும் பூட்டில் கவனம் செலுத்தினான்.

அவனின் காயத்தை இப்போது தான் கவனித்தவள் “அடிபட்ட இடத்துல இருந்து இன்னும் ரத்தம் வருது” என வாயில் யாக்கூப் கட்டிய துணி கழுத்தில் இருக்க அதை எடுத்தாள்.

“அது பரவாயில்ல” என ஆர்யன் காயத்தில் கை வைக்க, அவன் கையை பிடித்து நகர்த்திய ருஹானா “என்ன பரவால்ல? ரத்தம் நிறுத்தலனா ஆபத்தாகிடும்” என்றபடி துணி கொண்டு அவன் நெற்றியில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டு காயத்தில் துணியை வைத்து அழுத்தினாள்.

ஆர்யன் முகம் மென்மையாகி அழகாக, அவன் மனம் ஆனந்தித்தது. காயம் பட்ட இடம் சுகமானது.

வருத்தப்பட்டுக்கொண்டே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தியவள் “ஒரு பைத்தியக்கார காதல் நம்மை எங்க கொண்டுவந்து நிறுத்திடுச்சி!” என பெருமூச்சு விட்டாள்.

“இது காதல் இல்ல. வியாதி” என்றான் ஆர்யன் கோபமாக.

“எனக்கு இவானை நினைச்சி ரொம்ப பயமா போச்சி. அவன் நம்மையும் இழந்திருந்தா என்ன செய்வான்?”

வேகமாக அவள்புறம் திரும்பியவன் “அதுபோல எல்லாம் நடக்காது எப்பவும். இனிமேல் அவன் கஷ்டமே அனுபவிக்க மாட்டான். என்னைப்போலவே நீயும் அவனுக்கு நெருக்கமானவள். நாம அவனை தனியா விட மாட்டோம். நம்மோட பொக்கிஷத்தை எப்பாடுபட்டாவது நாம காப்பாத்துவோம்” என சொல்ல, அவளும் வேகமாக தலையாட்டினாள்.

பூட்டு கிளிக் என திறந்து கொள்ள, “திறந்துடுச்சா/ நாம தப்பிச்சிட்டோமா?” என ஆவலோடு ருஹானா கேட்க, அவளை கை காட்டி தடுத்த ஆர்யன் மிக மெதுவாக கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தான்.

வெளியே எந்த அரவமும் கேட்காததால் ஒரு காலை வெளியே வைத்தவன் அவளை நோக்கி ஒரு கரம் நீட்டினான். அவள் அவனை பார்த்துக்கொண்டே இருக்க “வா!” என உரிமையோடு அழைத்தான். அவளும் அவன் கரத்தை பற்ற, இணைந்த கைகளை நோக்கியவன் அதை அழுத்தமாக பிடித்தான்.

அவளை பின்னால் பாதுகாப்பாய் வைத்துக்கொண்டே வெளியே வந்தவன் “இனி பயமில்லை. வா.. காருக்கு போகலாம்” என செல்ல, “எங்க போறீங்க?” எனும் குரல் கேட்டு திரும்பினான்.

இருட்டில் இருந்து துப்பாக்கியுடன் யாக்கூப் வெளியே வர, ருஹானா ஆர்யனுக்கு முன்னே வர பார்க்க, ஆர்யன் அவளை நகர்த்தி பின்னால் கொண்டு வர “நீ என்கிட்டே இருந்து ஷெனாசை கூட்டிட்டு போக நான் விடமாட்டேன்” என யாக்கூப் நெருங்கி வந்தான்.

“வேண்டாம்… அவரை சுட்டுடாதே. எங்களை போகவிடு” என ருஹானா முன்னால் வந்து அழ, அவளை கையால் தடுத்தபடி ஆர்யன் அவளுக்கும் முன்னால் வந்தான்.

அவள் அவனை காக்க துடிக்க, அவன் அவளை காக்க தன் உயிரையும் தர தயாராக நின்றான்.

“ஷெனாஸ்! என்கிட்டே வா!” என யாக்கூப் அழைக்க, “அது நான் உயிரோட இருக்குறவரை நடக்காது” என ஆர்யன் முழங்கினான்.

யாக்கூப் துப்பாக்கியின் லாக்கை விடுவிக்க “உன்னை கெஞ்சி கேட்கிறேன். அவரை எதும் செய்திடாதே!” என ருஹானா முன்னால் பாய, அவளை இருகரம் கொண்டு நிறுத்திய ஆர்யன் ‘அவனிடம் கெஞ்சாதே!’ என கண்களால் கண்டித்தான்.

‘நம்மில் ஒருவர் உயிர் துறக்க வேண்டுமெனில் அது நான் தான். என்னுயிர் போவதற்கு முன் உன்னுயிரை காத்திடுவேன்’ எனும் பார்வையால் கண்களை விரித்து அவளை பார்த்தான்.

யாக்கூப்பிற்கு அவர்களது நெருக்கம் வெறியை கூட்ட, கத்திக்கொண்டே சுட்டுவிட்டான். ருஹானாவை முழுவதுமாக மறைத்த ஆர்யன், துப்பாக்கி குண்டை தான் வாங்கிக் கொண்டான்.

ருஹானா “இல்ல்ல்ல்லை……!” என வீரிட, ஆர்யன் இடது பக்கத்தை வலது கையால் பிடித்துக்கொண்டே மண்ணில் சரிந்தான். அலறியபடியே அவள் அவன் அருகே மண்டியிட்டு அவன் கையை பிடிக்க, அவன் கண்மூடி தரையில் தலையை சாய்த்தான்.

(தொடரும்)

Advertisement