Advertisement

யாக்கூப் ஜன்னலைப் பார்த்து நின்று கட்டைகளை அகற்றிக்கொண்டிருக்க, பூனை போல நடந்து வந்த ருஹானா, நாற்காலியில் மாட்டியிருந்த அவனது கோட்பையில் கை விட்டு சாவியை தேடினாள்.

சிலநிமிடங்கள் சென்றும் அது அவள் கைகளுக்கு அகப்படவில்லை. அதற்குள் யாக்கூப் திரும்பி பார்க்க அதற்கு முன் நிமிர்ந்துக்கொண்ட ருஹானா பயத்தில் கால்கள் வேரோட நின்றாள்.

“என்ன ஷெனாஸ்?” என அவன் கேட்க “கிச்சன்ல…. தண்ணீ… வரல” என்றாள் தடுமாறி.

“வால்வுலாம் மூடி வச்சிருக்கேன். நான் வந்து திறந்து தரேன், டார்லிங்” என்று சொன்ன அவன் கட்டையை சுவற்றில் சாய்த்துவிட்டு அருகே வந்தான். அப்போதும் அவள் அசையாது நிற்க “வா அன்பே!’ என அழைத்தான். சாவியை விட்டு போகிறோமே எனும் தவிப்புடன் அவள் அவனை பின்தொடர்ந்தாள்.

——–

அனல்மூச்சுகளுடன் ஆர்யன் நடந்துக்கொண்டிருக்க, யாக்கூப்பின் வீட்டில் தேடல் வேட்டை தொடர்ந்தது.

“ஃபைல் திறந்துட்டேன்” என பணியாள் சொல்ல ஆர்யன் வந்து அருகில் அமர்ந்தான். சோபாவின் பின்புறம் ரஷீத் உட்பட மற்றவர்கள் வந்து நின்றார்கள்.

“இதுல ஒரு வீடியோ தான் இருக்கு” என்று சொல்லி அதை திறக்க யாக்கூப் திரையில் தோன்றினான்.

அவனை பார்த்ததும் ஆர்யனின் உள்ளம் கொதித்தது. உணர்ச்சிகள் அனைத்தும் ஊசிமுனையில் நின்றன.

“நான் இந்த வீடியோ செய்ய ஒரு காரணம் இருக்கு. என் வாழ்க்கையே இப்போ மாறிப் போச்சி. உங்களுக்கு தெரியும், இப்போ கொஞ்ச நாளா நான் வகுப்புக்கு வர்றது இல்ல. இனிமேல் நான் வகுப்பு எடுக்க மாட்டேன்னு வருத்தத்தோடு தெரிவிச்சிக்கறேன். அதுக்கு என்ன காரணம்னு நான் சொன்னா நீங்க புரிஞ்சிக்குவீங்க. இறந்த போன என்னோட காதலியை நான் கண்டுபிடிச்சிட்டேன்”

ஆர்யன் திகைப்படைந்து பார்க்க, யாக்கூப் சிரிப்புடன் தொடர்ந்தான். “ருஹானா தான் என்னோட காதலி. உண்மையில அவ என்னை விட்டு போகவே இல்ல. ஷெனாஸ் சாகவே இல்ல. புது உடம்பு எடுத்து எனக்காக, நான் அவளை கண்டுபிடிக்கறதுக்காக காத்திட்டு இருந்திருக்கா”

மற்றவர்களும் இப்போது பயத்துடன் பார்க்க, “சீக்கிரமே நாங்க இந்த உலகத்தை விட்டு போகப் போறோம். அழியாத உலகத்துக்கு நாங்க சேர்ந்தே போகப் போறோம். அதுக்கு அப்புறம் எங்களுக்கு பிரிவே கிடையாது” என அவன் பேசியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர்.

“எங்களுக்காக யாரும் வருத்தப்படாதீங்க. என் மாணவர்கள் கிட்டே நல்லா பயிற்சி எடுக்க சொல்லுங்க. அவர்களுக்கு என்னோட அன்பு. யாரையும் ஏமாற்ற நான் விரும்பல ஆனா நீங்க என்மேல் கோபப்பட்டீங்கன்னா ஒன்னே ஒன்னு புரிஞ்சிக்கங்க. இது எல்லாமே நான் காதலுக்காக செய்றேன். என்னோட தூய காதலுக்கு… அழியாத காதலுக்காக….”

அதற்கு மேல் தாங்க முடியாமல் ஆர்யன் பட்டென எழுந்தான். “இந்த சைக்கோ அவளை கொல்லப் போறான்”

அவன் முகம் இரத்தமென சிவந்து போனது. எரிமலை குழம்பாய் மாறி அவன் வேகமாக வெளியே செல்ல, மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்தனர்.

——-

மீண்டும் உள்ளே வந்த ருஹானா, மெதுவாக கோட்பையில் கைவிட சாவி அவள் கையில் தட்டுப்பட்டது. அதை உருவியவள் பதட்டத்தில் கீழே போட்டுவிட்டாள். அந்த சத்தத்தில் திரும்பிய யாக்கூப் தரையிலிருந்து சாவியை எடுக்கும் அவளை பார்த்துவிட்டான்.

“ஷெனாஸ்….. வேணாம்” என அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாற்காலியை தள்ளிவிட்டவள், கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிச்சென்று கதவை மூடிவிட்டாள்.

“ஷெனாஸ் கதவை திற!” என அவன் கதவை இழுக்க, வெளியே இருந்த தாழ்பாளை மிகுந்த சிரமத்துடன் மாட்டிவிட்டாள்.

“ஓடாதே ஷெனாஸ்! கதவை திற! ஷெனாஸ்! உன்னை எப்படியும் நான் பிடிச்சிடுவேன்” என கதவை அறைந்து கொண்டே அவன் கத்த, வாசல்கதவுக்கு ஓடிவந்து நடுங்கும் கைகளால் ஒருவாறு கஷ்டப்பட்டு பூட்டை திறந்து விட்டாள்.

“உன்னை விட மாட்டேன். ஓடாதே ஷெனாஸ்!” என அவன் கத்த, காற்றென வெளியே பறந்துவிட்டாள், அந்த மையிருட்டில்.

——-

இருட்டில் மின்விளக்குகளால் ஜொலித்திடும் அகாபா நகரத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனுக்கு அதன் சௌந்தர்யம் கண்ணில் படவேயில்லை. இதில் எந்த மூலையில், எந்த விளக்கின் அடியில் ருஹானா இருக்கிறாளோ என அவனது ஈரவிழிகள் அலைபாய்ந்தன.

அவள் என்ன துன்பம் அனுபவிக்கிறாளோ என்ற எண்ணம் அவனை தாக்கியது. அந்த பயம், அந்த கவலை, அந்த காத்திருப்பு அவனால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

அந்த நொடியில் அவள் இல்லாமல் தான் வாழ முடியாது என உணர்ந்து கொண்டான்.

அன்றொரு நாள் அந்த மேல்மாடி தோட்டத்தில் இவான் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டே ருஹானாவிடம் பேசிக்கொண்டிருந்தது அவன் காதில் ஒலித்தது.

“சித்தி! நான் பெரியவனானதும் எப்படி இருப்பேன்?”

“நீ ரொம்ப அழகா இருப்பே. கருணை உள்ளவனா இருப்பே. மிருகங்கள், செடிகொடிகள், இயற்கை, மனிதர்கள் எல்லாரையும் நேசிப்பவனா இருப்பே. யாரையும் புண்படுத்த மாட்டே. உன்னை போலவே உன் மனசும் எப்பவும் அழகா இருக்கும். நான் உன்னை பார்த்து பெருமைப்படுவேன்”

“நீங்க என்கூட எப்பவும் இருப்பீங்க தானே சித்தி?”

“ஆமா, நான் உன்னை விட்டு பிரியவே மாட்டேன். உன் சந்தோஷ நாட்களிலும், கடினமான நாட்களிலும் உன்கூடவே தான் இருப்பேன்”

“நான் தெரியாம உங்களை காயப்படுத்திட்டா?”

“கண்டிப்பா! நீ என்மேல கோபப்பட்டா கூட உன்னை விட்டு போக மாட்டேன்”

“நான் குறைவா சாப்பிட்டா, சீக்கிரம் தூங்க போகலனா… என்னோட ஹோம்வொர்க் நான் தப்பா செஞ்சா….?”

“உனக்கு நினைவு இருக்கா, உனக்கு ரோஸ்வுட் கதை வாசித்து காட்டினேனே… ரோஸ்மர தேவதை முள் இருந்தாலும் ரோஜாவை விடாம வச்சிருக்குமே!”

அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் நின்றிருந்த ஆர்யன், இவானை பார்க்க அவன் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

“அது போல நீ திட்டினா கூட நான் உன்னை தனியா விட்டு போக மாட்டேன்”

“எனக்கு தான் முள் இல்லயே! நான் உங்களை காயப்படுத்த மாட்டேன் எப்பவும்”

“ஆமா அன்பே! நீ எப்பவும் என்னை காயப்படுத்த மாட்டே. எனக்கு தெரியும். நீ தான் என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துருக்கே”

“நான் தெரியாம உங்களுக்கு கோபம் வர வச்சிட்டேன்னா நீங்க வருத்தப்படக்கூடாது, சரியா?”

“அது எப்படி வருத்தப்படுவேன்? நீ தான் என்னோட இதயத்தின் இதயமாச்சே!”

“அப்படின்னா நீங்க என்கூட எப்பவும் இருப்பீங்க. சரிதானே?”

“நிச்சயமா! உனக்கு தேவைப்படும்போது இதுபோல உன் கையை பிடிச்சிப்பேன். உன் பஞ்சு கைல முத்தம் கொடுப்பேன் இதே மாதிரி”

“சித்தப்பா? சித்தப்பாவும் நம்ம கூட இருப்பார் தானே?”

இதுவரை குறுநகையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன் இப்போது கூர்மையாக கேட்டான்.

“ஆமா அன்பே! சித்தப்பாவும் நம்ம கூட எப்பவும் இருப்பார். எங்களோட அரிதான ஒரே ஒரு பொக்கிஷம் நீ தான். சித்தப்பா உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டார்”

ஆர்யனின் முகம் பளீரென மலர்ந்து விகசித்தது.

“சித்தப்பா எப்பவும் நம்மை பாதுகாப்பார். கதைல வர அசுரன் மாதிரி, ஆமா தானே சித்தி”

ருஹானா சிரிப்புடன் தலையாட்ட, தள்ளி நின்ற ஆர்யனும் மெல்ல தலையசைத்தான்.

அன்றைய புன்னகை பூத்த ருஹானா இப்போதும் கண்ணுக்குள் நிற்க “எங்க இருக்க?” என சத்தமாக கேட்டான். செய்வதறியாது கைப்பிடியை ஓங்கி குத்தினான்.

அவளை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கமும், அவளை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆத்திரமும் மாறி மாறி அவனை பாடாய்படுத்தியது.

அவளுக்கு தீங்கு எதும் ஏற்பட்டுவிடக் கூடாதே என கலங்கினான். நல்வழி காட்டும்படி ஆண்டவனை மனதார வேண்டினான்..

இளையவனுக்கு அளிக்கும்

வாக்குகள் எல்லாம் ஏங்கிட செய்ய

ஏங்கவிடாது அன்பு மனம் அன்பாய்

அரவணைத்துகொண்ட நொடி 

மாயமாகிட கூடாதென்ற 

அடியேனின் தவிப்பு தீருமா?

ஆர்யனின் செல்பேசி அடிக்க, வேகமாக கோட் பையில் இருந்து எடுத்து காதில் வைத்தான்.

“காப்பாத்துங்க! அவன் என்னை அடைச்சி வச்சிருந்தான். நான் தப்பிச்சி ஓடி வந்துட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னை காப்பாத்துங்க”

“எங்க இருக்கே சொல்லு. எந்த இடம்?” ஆர்யன் படபடத்தான்.

“நான்…” அவள் வாய் பொத்தப்பட்டது.

“ஹல்லோ! ஹல்லோ! லைன்ல இருக்கியா? ஹல்லோ! நான் பேசுறது கேட்குதா? உனக்கு ஒன்னும் இல்லயே! ஹல்லோ!!”

கண்களில் நீர் துளிக்க இதயம் துடிதுடிக்க போனை பார்த்தபடியே நின்றிருந்தான் ஆர்யன்.

(தொடரும்)

Advertisement