Advertisement

“ஷெனாஸ்! நீ சாவை ஜெயிச்சி என்கிட்டே வந்துட்டே! இப்போ நாம ஒன்னா நடப்போம். இனி துக்கம் இல்ல. துயரம் இல்ல. அந்த இருட்டு சாலைல சேர்ந்து போகலாம்” என அவன் கனவில் மிதப்பவன் போல பேச, ருஹானா இடிந்து போனாள்.

“இப்போ நாம நல்லா சாப்பிடுவோம், வா. இது நம்மோட கடைசி உணவு” என அவன் சமையலைறைக்கு செல்ல, ருஹானாவின் உடலும் உள்ளமும் தளர்ந்து போக தரையில் அமர்ந்து கதறினாள்.

——–

மிஷால் காரில் இருந்து சாமான்களை இறக்கி உதவிப்பையன் சதாமிடம் அளிக்க, காரை கொண்டுவந்து பின்னால் நிறுத்திய ஆர்யன், மிஷாலிடம் வேகமாக வந்தான்.

“அந்த சைக்கோ மாஸ்டரை தேடிட்டு இருக்கேன். அவன் எங்க போயிருப்பான்னு உனக்கு தெரியுமா?”

முகத்தை சலிப்பாக வைத்திருந்த மிஷால் பதில் சொல்லவில்லை.

“நான் சொன்னது உனக்கு கேட்கலயா?”

“நல்லா கேட்குது. நீ ஏன் அவனை கேட்கறே?”

அவன் சட்டையை பிடித்த ஆர்யன் “அவன் எங்க இருப்பான்னு சொல்லு” என இரைந்தான். மிஷால் கையிலிருந்த காய்கறி பைகள் கீழே விழுந்தன.

சதாம் பயந்து பார்க்க, இப்போதும் மிஷால் வாயை திறக்கவில்லை.

“நீ தான் அவனை எங்க வாழ்க்கையில கொண்டு வந்து விட்டே. இப்போ சொல்லு… அவன் எங்க இருக்கான்?”

“நிறுத்து!” என ஆர்யன் கையை எடுத்துவிட்ட மிஷால் “நீ ஆத்திரமா வந்திருக்கே! யாக்கூப் கெட்ட மனிதன் இல்ல” என அப்போதும் ஒழுங்காக பேசவில்லை.

“நீ சான்றிதழ் கொடுக்கற அந்த மாஸ்டர், இவானை கொல்ல பார்த்தான். ஒரு குழந்தையை கொல்ல நினைக்கற அவன் நல்லவனா? இப்போ இவானோட சித்தி உயிர் ஆபத்துல இருக்கு. இப்பவாவது சொல்லு, அவன் எங்க இருக்கான்”

“எனக்கு தெரியாது”

அதற்கு மேல் பொறுமையை கடைபிடிக்க முடியாத ஆர்யன், மிஷாலை விட்டுவிலகி ரஷீத்திற்கு போன் செய்து ஆட்களை அழைத்து வர சொன்னான். அதை மிஷால் பார்த்துக்கொண்டே இருந்தான்.

ஆர்யன் காரை எடுத்துக்கொண்டு செல்ல, மிஷாலும், சதாமும் கீழே சிதறிய காய்கறி, பழங்களை எடுத்தனர்.

“அண்ணா! நான் யாக்கூப் சாருக்கு சாப்பாடு கொடுக்கும்போது கவனிச்சிருக்கேன். ஆர்யன் சார் சொல்ற மாதிரி அவர் ஆபத்தானவரா எனக்கு தெரியல” என சதாம் சொல்ல “இதை கொண்டு போய் குப்பைல போடு” என அவனை அனுப்பிய மிஷால் ஒரு பெருமூச்சு விட்டபடி மணியை பார்த்தான்.

“இத்தனை நேரம் ஆகிடுச்சே!” என சொன்னபடி ருஹானாவின் எண்ணுக்கு அழைத்தான்.

——

கால் விலங்கை எடுக்க பார்த்த ருஹானாவின் முயற்சி தோல்வியடைய, இவான் சங்கிலியை பிடித்துக்கொண்டு “இல்ல.. நான் தளரக் கூடாது. நம்பிக்கை இழக்கக்கூடாது” என்று தேற்றிக்கொண்டே கைப்பையை எடுக்க முனைந்தாள்.

அதற்குள் யாக்கூப் உணவு தட்டுகளுடன் வந்துவிட பின்னடைந்து அமர்ந்துக்கொண்டாள்.

“வா என் காதலி! உணவு தயார்” என அவன் அழைக்க, “என்னை விடு. இவான் சின்ன பையன். என்னை அதிகமா தேடுவான். உன்னை கெஞ்சி கேட்கறேன். என்னை விடு” என அழுதாள்.

சத்தமாக சிரித்த யாக்கூப் “நான் தயாரித்த உணவு எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்த்து சொல் என் அன்பே!” என்றான், அவளின் வேண்டுதல்கள் காதில் விழாதவனாக.

மேசை வரை அவள் வருமாறு சங்கிலியை லேசாக தளர்த்தியவன், கைபிடித்து அவளை அழைத்து வந்து அமர வைத்தான். அவளது கைப்பையை சற்று தள்ளி எடுத்து வைத்தான்.

ருஹானா அழுதுக்கொண்டே இருக்க “சாப்பிடு டார்லிங்! உனக்காக என் கையால அன்பா செய்தேன்” என்று சொன்னவன் அறை முழுவதும் கண்களை சுழற்றி “இந்த ரூம்ல இருக்கிற எல்லாமும் உனக்காக தான். கல்யாண ஆடை வாங்கி வச்சிருக்கேன். நாளைக்கு அதை நாம போட்டுக்கிட்டு முடிவில்லாத பயணத்தை மேற்கொள்வோம்” என்றான்.

ருஹானாவின் தேம்பல் அறையில் ஒலிக்க “அழாதே ஷெனாஸ்! இந்த நேரத்தை அனுபவி. நாளையிலிருந்து நமக்கு துக்கம் கிடையாது. நாம ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்தே இருப்போம். இப்படி தானே நீ கனவு கண்டே. நாம நினைச்சதை இறுதியா அடைஞ்சிட்டோம்” என பேசிக்கொண்டே போனான்.

கையில் கத்தியை எடுத்தவன் அவள் திகிலாக பார்க்க “இல்லனா.. நீ வேறவிதமா நினைக்கிறியா? நான் பேசுறது உனக்கு பிடிக்கலயா?” என்று மிரட்டலாக கேட்டான். கத்தியை ஆட்டியபடி அவளை முறைத்தும் பார்த்தான்.

கண்ணீரை இருகைகளினாலும் துடைத்த ருஹானா, சிரமப்பட்டு லேசான புன்னகையை கொண்டு வந்தாள். “நான் ஏன் வேற நினைக்க போறேன்? நீங்க என்ன நினைக்கிறீங்களோ, அதே தான் நானும் ஆசைப்படுறேன்”

யாக்கூப் முகம் மலர கத்தியை கீழே வைத்தான். “அப்போ வா சாப்பிடலாம், ஆறிப்போகும் முன்னே”

“இந்த மேசை அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” அழுகையை அடக்கிக்கொண்டு சொன்னாள்.

“நீங்க எனக்கு அதிகமான மகிழ்ச்சி கொடுத்திட்டீங்க”

“நான் உனக்கு என்ன செய்தாலும் அது உனக்கு போதாது ஷெனாஸ். உனக்கு எல்லாமே சிறந்தது தான் கிடைக்கணும். நான் இப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு என்னால சொல்லவே முடியல”

“நானும் அப்படித்தான்” என்றதும் அவன் ஆவலாக சாப்பிட ஆரம்பித்தான்.

“முதல்ல எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில இதெல்லாம் உணர முடியல. நீங்க என்கூட சாகிற அளவுக்கு என்னை காதலிக்கிறீங்க. நான் எத்தனை அதிர்ஷ்டசாலி!”

ஆனந்தமாக தலையாட்டிய யாக்கூப் சாப்பிட, அவனுக்கு சந்தேகம் வரக் கூடாது என ருஹானாவும் முடிந்த அளவு சாப்பிட்டாள்.

உணவு உண்டு முடித்தபின் பானங்கள் கொண்டுவந்தான். “உனக்கு பிடிச்ச பழக்கலவை சாறு. நானே செய்தேன். குடி” நன்றி சொல்லி பெற்றுக்கொண்டாள்.

“நானும் இந்த வீட்ல சந்தோசமா இருக்கணும்னு தான் ஆசைப்பட்டுட்டு இருந்தேன். நாம ரெண்டு நாள் தான் இங்க இருக்க போறோம். ஆனாலும் நம்மோட நினைவுகளை இங்க விட்டுட்டு போகலாம், இல்லயா?”

“அது எப்படி?”

“நாம முன்னாடி பேசினது போல இந்த வீட்டை அழகுப்படுத்தலாம்”

“நீ என்ன செய்யணும்னு ஆசைப்படுறே?”

“சுவர்களுக்கு அழகா வண்ணம் பூசலாமா?”

“ரோஜா நிறம் அடிக்கலாம். அது காதலோட நிறம்” ஆர்வமாக முன்வந்தான்.

ருஹானா சிரிப்புடன் தலை ஆட்ட “கதவுல சின்ன சின்ன விளக்குகள் தொங்கவிடலாம்” என்றான்.

“அதும் சரி தான். நாம போறதுக்கு முன்ன இங்க நம்மோட தடத்தை விட்டு செல்வோம்”

“உன் விருப்பப்படி என் காதலி”

“ஜன்னல்ல ஆணிகள் இருக்கிறது நல்லாவே இல்ல. முதல்ல அதை எடுக்கலாமா?”

அவன் ஜன்னலில் பொருத்தியிருந்த கட்டைகளை எடுக்க துவங்க “நீங்க இந்த வேலை செய்யும்போது நான் கிச்சனை சுத்தம் செய்யவா?” என மெல்ல கேட்டாள், திக் திக் என ஓடும் இதயத்தோடு.

அவன் சரியென தலையாட்ட “அதுக்கு என் கால்கட்டை நீங்க எடுக்கனுமே” என்றாள். அவன் அவளை நோக்கி வருகிற ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ஒருமணி நேரம் போல நீண்டது.

சாவியை கொண்டு அவள் கால்சங்கிலியின் பூட்டை கழற்றியவன் “நான் இப்போ மிக மிக சந்தோசமாக இருக்கேன்” என்று சொல்ல, அவளும் புன்னகை செய்தாள்.

அவன் தன் வேலையை தொடர, தன் கைப்பையும், வெளிசாவி இருக்கும் அவன் மேல்கோட்டும் எங்கே இருக்கிறது என பார்த்துக்கொண்டு அவள் மெல்ல சமையலறைக்கு சென்றாள்.

——

ஆர்யனின் ஆட்கள் யாக்கூப்பின் அடுக்கக வீட்டை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர்.

ரஷீத் மடிகணினியை ஆராய்ந்து “இதுல வேற ஒண்ணுமில்ல. ஒரே ஒரு ஃபைல் இருக்கு. ஆனா கடவு சொல் கேட்குது” என்றான்.

புத்தக அலமாரியில் தேடிக்கொண்டிருந்த ஆர்யன் அருகே வர, “நான் அதை முறிக்கிறேன்” என ஒரு கையாள் முன்வந்து பார்வையிட்டான்.

“இது நேரம் பிடிக்கும்” என அவன் சொல்ல, கையில் இருந்த புத்தகத்தை மேசையில் ஓங்கி அடித்த ஆர்யன் “நம்ம கிட்ட அது இல்ல” என்றான். அந்த பணியாள் தலையாட்டி பணிந்து வேகமாக விசைப்பலகையை தட்டினான்.

ஆர்யனின் பார்வை வெள்ளை மாளிகை படத்திற்கு சென்றது. “எதுக்கு இந்த பாழடைந்த வீட்டை சட்டம் போட்டு மாட்டியிருக்கான்? இதுல அந்த சைக்கோ சம்பந்தப்பட்ட ஏதோ இருக்கு” என்று சொன்ன ஆர்யன் “ரஷீத்! இந்த வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடி” என்றான்.

“ஆர்யன்! நான் ஏற்கனவே பார்த்துட்டேன். இது எந்த பகுதில இருக்குன்னு கூட தெரியல”

“ரஷீத்! அகாபா நகரத்தோட ஒவ்வொரு தெருவுல கூட தேடணும்.. உடனே!” ஆர்யன் இரைந்த இரைச்சலில் ரஷீத்தே பயந்துவிட்டான். சரியென போனை கையிலெடுத்தான்.

———-

Advertisement