நீரூற்று குளத்தில் மோட்டார் படகை விட்ட இவான் அது மிதந்து செல்வதை பார்த்து சந்தோச கூச்சலிட்டு கை தட்டினான்.

“பெரியப்பா! பாருங்க என் கப்பல் எப்படி போகுது?”

“ஆமா செல்லம்! உன் ஆர்யன் சித்தப்பா கப்பல் கடல்ல போறது போலவே போகுதே!”

அங்கே வாசல் பார்த்து நின்றிருந்த ஆர்யனை இந்த ஆர்ப்பாட்டங்கள் இழுக்கவில்லை.

அவனுடைய காந்தம் ஏன் கத்தி சென்றது? எங்கே சென்றது? என்ற கேள்விகளிலேயே அவன் மனம் தொக்கி நின்றது.

அசையாமல் நின்ற ஆர்யனை பார்த்த அம்ஜத் இவான் தலையில் முத்தமிட்டுவிட்டு, எட்டி நின்ற ஜாஃபரிடம் கண்காட்டிவிட்டு ஆர்யன் அருகே வந்தான்.

இரு முதலாளிகளும் வெளியே நிற்க, சின்ன முதலாளி தண்ணீரில் விளையாடிக்கொண்டிருக்க, அங்கே ஏவலுக்காக தூரமாக நின்றிருந்த ஜாஃபர் ‘இவானை தான் கவனித்துக்கொள்வதாக’ சைகை செய்தான்.

அண்ணன் அருகே வந்து நிற்க, கவனம் கலைந்த ஆர்யன் திரும்பி அண்ணனை நோக்க, அம்ஜத் “ருஹானா மேல கோபப்படாதே ஆர்யன்! எல்லாம் அவனால வந்தது. அவன் நம்ம அமைதியை கெடுக்குறான். உன்னோட அமைதியை…. ருஹானாவோட அமைதியை…. என்னோட அமைதியை கூட” என்றான்.

ஆர்யன் கூர்ந்து கவனிக்க “அவன் ரொம்ப கெட்டவன் ஆர்யன். ருஹானா கிட்டே பொய் சொல்றான். தப்பா பேசுறான்” என்று அம்ஜத் சொல்ல “ஏன் அண்ணா அப்படி சொல்றீங்க? நீங்க ஏதாவது சந்தேகப்படற மாதிரி பார்த்தீங்களா அண்ணா?” என ஆர்யன் கேட்டான்.

“எல்லாம் அவனால தான். அவன் வந்ததுல இருந்து நம்ம நிம்மதி போச்சி. நீ கவலையா இருக்க! ருஹானாவும்….“ என அம்ஜத் சொன்னதை கேட்டு ஆர்யன் இன்னும் கவலைப்பட “என் பூக்கள் கூட உதிர்ந்து போகுது.. பாரு இவானுக்கு கூட ஷாக் அடிக்க பார்த்தது” என அவன் பின்னால் கை காட்ட படகு விட்டுக்கொண்டிருந்த இவானை பார்த்தான் ஆர்யன்.

——-

மருந்து போட யாக்கூப் உள்ளே செல்ல வரவேற்பறையில் ருஹானா காத்திருந்தாள்.

‘நீங்க எப்படி இதை செஞ்சீங்க? அத்தனை கொடுமையானவரா நீங்க? இரக்கமே இல்லையா உங்களுக்கு?’ மனதின் கேள்விகள் ஆர்யனை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருந்தன.

யாக்கூப் வெளியே வர “இப்போ வலி எப்படி இருக்கு, மருந்து போட்ட பின்ன?” என கேட்க, “பரவால்ல.. உங்களுக்கு என் நன்றி” என்றான்.

“இன்னும் கூட என்னால நம்ப முடியல, இதை அவர் தான் செய்தார்னு”

“அவன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ருஹானா. அவன் ஆபத்தானவன் மனநிலை சரியில்லாதவன். என்னை கேட்டா பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல சிகிச்சை எடுத்துக்க வேண்டியவன்”

யாக்கூப் ஆர்யனை பற்றி பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் ருஹானா முகம் திருப்பினாள்.

“அவனை பத்தி யோசிக்காதீங்க இனிமேல். அதுக்கு அவன் தகுதியே கிடையாது. உங்களுக்கு கள்ளங்கபடம் இல்ல…” என்று சொன்னவன்   “இருந்தாலும் இனி இதுலாம் நமக்கு தேவை இல்லை” என சிரித்தான்.

ருஹானாவின் உள்ளுக்குள் அபாய அலாரம் ஒலித்தது.

“ஒன்னே ஒன்னு தான் இப்போ முக்கியம். நாம இங்க சேர்ந்து இருக்கோம்”

பீதி தெரிந்தது அவள் கண்களில்.

“இதை விட முக்கியமானது இந்த உலகத்தில எனக்கு வேற இல்ல”

“என்ன?” என ருஹானா அழுத்தமாக கேட்க, “அதாவது… நான் என்ன சொல்றேன்னா… நாம இங்க பாதுகாப்பா இருக்கோம்… அந்த ராட்சஷனுக்கு இந்த இடம் கண்டுபிடிக்க முடியாது”

அவளின் நெஞ்சில் தடதடவென பய ரயில் ஓடியது.

———

“கெட்டவன்.. பொல்லாதவன்” என அம்ஜத் திரும்ப திரும்ப சொல்ல, தண்ணீரில் படகை தள்ளிவிட்டு கொண்டிருந்த இவானை நெருங்கினான் ஆர்யன்.

“சிங்கப்பையா! இந்த படகை உனக்கு யார் வாங்கி தந்தது? உன் சித்தி தானே?” என ஆர்யன் கேட்க “இல்ல சித்தப்பா! மாஸ்டர் வாங்கி கொடுத்தார்” என இவான் வெடிகுண்டை இறக்க ஆர்யனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

வாசலில் மாட்டியிருந்த கண்காணிப்பு கேமிரா அவன் கண்ணில் பட, வேகமாக ஜாஃபரை நெருங்கியவன் “இவானுக்கு ஆபத்து நடக்க இருந்த தினத்தோட பதிவுகளை என் லேப்டாப்புக்கு உடனே அனுப்புங்க” என்று சொல்லி உள்ளே ஓடினான்.

இது அவன் எப்போதோ செய்திருக்க வேண்டியது. பழைய ஆர்யனாக இருந்திருந்தால் விபத்து நடந்த அன்றே பார்த்திருப்பான். ருஹானா மயக்கத்தில், அவளிடம் மன்னிப்பு வேண்டியே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு எச்சரிக்கை புலன்கள் சரியாக வேலை செய்யவில்லை போலும்!

ஆர்யன் கண்காணிப்பு கேமிராவை பார்க்கவில்லை. ருஹானா பேனா கேமிராவை பார்க்கவில்லை. பலவீனமாக இருக்கும் அம்ஜத்தோ யாக்கூப்பை பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கிறான்.

ஆர்யனுக்கு அண்ணனின் குறிப்பு சரியான நேரத்தில் கிடைத்ததா, இல்லை இரயில்வண்டி தண்டவாளம் விட்டு தடம் புரண்டு விட்டதா?

——-

ஆர்யன் மடிகணினியில் அன்றைய பதிவுகளை ஓடவிட்டு கொண்டிருக்க கதவை தட்டிவிட்டு கரீமா உள்ளே வந்தாள்.

“என்ன ஆர்யன்! ஜாஃபர்ட்ட கேட்டேன், கேமராவை செக் செய்றியாமே? எதும் சந்தேகப்படுறீயா?”

“கண்டிப்பா ஏதோ இருக்கு. ஆனா இன்னும் கண்ணுக்கு மாட்டல”

“உன் சந்தேகம் சரியா தான் இருக்கும். கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவே”

“எனக்கு தெரியும். அவன் கிட்ட ஏதோ சரியில்லன்னு முதல்ல இருந்தே எனக்கு தோணிகிட்டே இருந்தது”

பார்வையை திரையில் இருந்து அகற்றாமல் ஆர்யன் சொல்ல, யாக்கூப் மின்சார கேபிளை பிடுங்கி நீரில் போடுவது நன்றாக தெரிந்தது.

அதிர்ச்சியில் கரீமா வாயில் கை வைக்க, ஆர்யன் எழுந்தே விட்டான்.

“ஆர்யன்!…. என்ன செய்றான் இவன்? யா அல்லாஹ்! என்னால நம்பவே முடியலயே!”

பதட்டமாக செல்பேசியை எடுத்த ஆர்யன் ருஹானாவை அழைத்தான்.

ருஹானா போனை எடுக்க போக, யாரென யாக்கூப் கேட்டான்.

“இவான் சித்தப்பா!”

விரல்கள் நடுங்க “எடுக்காதீங்க” என்றான்.

“இல்ல.. எதுக்கு கூப்பிடுறார்ன்னு தெரியல.. என்னன்னு கேட்கறேன்” தயங்கி தயங்கி வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவள் கையில் இருந்து யாக்கூப் போனை வாங்கிக் கொள்ள அவனை விசித்திரமாக பார்த்தாள் ருஹானா, எப்போதிருந்து இவன் இந்த உரிமையை எடுத்துக்கொண்டான் என.

“வேணாம்… அவன் உங்களை ஏமாத்த பார்ப்பான். நான் தான் பொய் சொல்றேன்னு சொல்லுவான்”

“ஆனா நான் அவர்கிட்டே பேசணும்” பிடிவாதமாக போனுக்கு கையை நீட்டினாள்.

போனை பின்னால் மறைத்துக்கொண்டவன் “எதுக்கு?” என கேட்டான்.

“அவரோட தப்புகளை யாராவது அவருக்கு சொல்லணும் இல்லயா? போனை கொடுங்க. நான் கேட்கிறேன் எப்படி இப்படி செய்தார்ன்னு”

யாக்கூப் கொடுக்காமல் யோசித்து நின்றான்.

ஒரு இடத்தில் நிற்க முடியாமல் ஆர்யன் நடந்து கொண்டே இருக்க “ஆர்யன்! கொஞ்சம் அமைதியாகு!” என கரீமா சொன்னாள்.

“எப்படி அமைதியா இருக்க முடியும்? அந்த சைக்கோ இவானை கொல்ல பார்த்துருக்கான். ஆரம்பத்துல இருந்தே அவன் சரியில்லன்னு நான் சந்தேகப்பட்டேன்”

“ருஹானா…. இப்போ அவன் கூடவா இருக்கா?” உள்ளே எழுந்த மகிழ்ச்சியை மிகுந்த சிரமத்துடன் மறைத்துக்கொண்டு கரீமா கேட்டாள்.

“எனக்கு தெரியல” என நிராசையுடன் சொன்ன ஆர்யன் ருஹானாவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

‘நீ அந்த சைக்கோ யாக்கூப் கூட இருந்தா உடனே அவனை விட்டு விலகிடு. அந்த பொறுக்கி இவானை கொல்ல பார்த்திருக்கான்’

யாக்கூப் மெல்ல ருஹானாவிடம் போனை கொடுக்க கையை நீட்ட ஆர்யனின் குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்டது.

அதை யாக்கூப் படிக்க, இந்த உரிமைமீறலில் ருஹானா அவனை அதிர்ந்து பார்த்தாள். “என்ன செய்றீங்க?”

போனை மேசையில் வைத்தவன் “இனி அந்த போன் உனக்கு தேவைப்படாது” என்றான்.

அவன் முன்னேறி வர அவள் பயத்தில் பின்னால் நடந்தாள்.

“அந்த மாளிகைக்கு நீ திரும்ப போக போறதில்ல. இனிமேல் அவனை பார்க்க போறதும் இல்ல”

ருஹானா புரியாமல் திகைத்து பார்க்க “இதான் நம்ம உலகம். இங்க தான் நாம இருக்க போறோம்” என அவன் உளற “எனக்கு புரியல” என்றாள்.

அவள் கையை யாக்கூப் பற்ற “என்ன செய்றீங்க? என் கையை விடுங்க” என்று உதறினாள்.

அவளை அருகே இழுத்தவன், மருண்ட அவள் விழிகளை பக்கத்தில் பார்த்து “ஷெனாஸ்! நாம மறுபடியும் ஒன்று சேர்ந்துட்டோம். இந்தமுறை உன்னை எங்கயும் போகவிட மாட்டேன் நான்… எப்பவும்” என மாளிகை அதிர சிரித்தான்.

(தொடரும்)