Advertisement

கட்டிலில் விரிப்பை சரிசெய்து கொண்டிருந்த ருஹானா செல்பேசியில் யாக்கூப் அழைக்கவும் யோசனையுடனே அழைப்பை ஏற்றாள்.

“ருஹானா மேம்! அவன் கிட்டே இருந்து தள்ளி இருங்க”

எடுத்தவுடன் அவன் இப்படி சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“மிஸ்டர் யாக்கூப்! என்ன ஆச்சு? யாரை பத்தி சொல்றீங்க?”

“நான் சொல்றதை மட்டும் கேளுங்க. நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கறது அந்த அரக்கனுக்கு தெரியக்கூடாது. நீங்களும் காயப்படறதை நான் விரும்பல”

“யார்? என்ன? நீங்க பேசுறது எனக்கு ஒன்னும் புரியலயே”

“அந்த கேங்க்ஸ்டர் ஆர்யன். அந்த வெறியன் என்னை அடிச்சி போட்டுட்டான். ரொம்ப ஆபத்தானவன் அவன்”

திடுக்கிட்ட ருஹானா உடனே பதில் சொன்னாள். “இல்ல.. அவர் அப்படி செய்ய மாட்டார். அவர் ஏன் உங்களை அடிக்கணும்?”

“இருங்க. என் போட்டோவை அனுப்புறேன்” என்று சிரித்தபடி சொன்னவன் முகத்தை சோகமாக மாற்றி புகைப்படம் எடுத்து அனுப்பினான்.

அதை பார்த்து அதிர்ந்து போன ருஹானா “யா அல்லாஹ்! எப்படி இவ்வளவு அடிபட்டது?” என இன்னும் ஆர்யனை மேல் சந்தேகப்படாமல் கேட்டாள்.

“இப்போ நம்புறீங்களா? நேத்து ராத்திரி என் வீட்டுக்கு வந்தான். கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள அடிக்க ஆரம்பிச்சிட்டான். உங்க கிட்ட இருந்தும் இவான் கிட்ட இருந்தும் விலக சொல்லி அடிச்சான்”

“சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க. அதிகமா ரத்தம் போகுது”

“நான் போக மாட்டேன். போலீஸ் கேள்வி கேட்பாங்க. அப்புறம் என் நிலைமை இன்னும் மோசமாகும். எனக்கு ரொம்ப வலிக்கிது. நீங்க எனக்கு உதவி செய்ய முடியுமா?” பயங்கரமான குழியை தோண்டினான்.

“உங்ககிட்ட முதலுதவி பெட்டி இருக்கா?”

“இல்ல.. நான் வெளியவும் போக முடியாது. நீங்க எனக்கு உதவி செய்ய மாட்டீங்களா?” குழியை ஆழமாக்கினான் சிரித்தபடி.

“சரி நான் வரேன்” இவளை போன்ற முட்டாள் யாரும் இருப்பார்களா?

“நீங்க இங்க வர்றதை அவன் கிட்டே சொல்லாதீங்க. நான் என்னோட பழைய வீட்ல ஒளிஞ்சி இருக்கேன். உங்களுக்காக காத்திருக்கேன்” அவன் கண்களில் விபரீத ஒளி.

“இதோ! இப்பவே வரேன்!” அவள் பதட்டமாக கிளம்ப அவன் பல்லிளித்தான்.

அவளுடைய கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு அவளே பலியாக போகிறாளா?

குளிராடையும், கைப்பையும் எடுத்துக்கொண்டு அவள் கிளம்ப ஆர்யன் எதிரே வந்தான்.

இவள் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல “என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” என அவனே அருகில் வந்து கேட்டான்.

“நீங்க… நீங்க எப்பவும் ஒரு காட்டுமிராண்டி தான். நான் ஒரு முட்டாள். நீங்க திருந்திட்டீங்கன்னு நினைச்சிட்டேன்” அவள் சத்தமாக பொரிந்து தள்ள,  “இப்போ என்ன நடந்தது? எதும் பிரச்சனையா?” என பொறுமையாக கேட்டான், தன்னை அவள் திட்டுவதையும் பொருட்படுத்தாமல்.

“உங்ககிட்ட இருந்து எதையும் கேட்க நான் விரும்பல” என கத்திவிட்டு படியிறங்கி செல்லும் அவளை ஆர்யன் திகைப்பாக பார்த்திருந்தான். அம்ஜத்தும் அவன் அறை வாசலில் நின்று பார்த்தான்.

———

கரீமா அறைக்கதவை திறந்து வேகமாக உள்ளே வர, செல்பேசியை பார்த்துக்கொண்டிருந்த சல்மா அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் போனை பார்த்தாள். கடுப்பான கரீமா சல்மாவின் செல்பேசியை பிடுங்கி கட்டிலில் வீசினாள்.

சல்மா சலிப்பாக பார்க்க “கதவை மூடிக்கிட்டு இங்க என்ன செஞ்சிட்டு இருக்கே, சல்மா? ஆர்யன் வீட்ல இருக்கும்போது அவன் கூட நேரம் செலவளிக்கற வாய்ப்பை நழுவ விடாதேன்னு எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கேன்” என்று கரீமா படபடத்தாள்.

“என்னை அவன் கால்ல விழ சொல்றியா அக்கா? நான் என்ன செய்தாலும் என் முகத்தை கூட பார்க்க மாட்றான்”

“திரும்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வராதே சல்மா. முயற்சி செய்துட்டே இருக்க வேண்டாமா? இதை மாத்தறது உன் கைல தான் இருக்கு”

“என் கைல இல்ல. அந்த சூனியக்காரி கைல இருக்கு. அவ விஷம் குடுத்தா கூட அவன் சந்தோசமா குடிக்கிறான்”

“மிகைப்படுத்தி பேசாதே சல்மா. அதிகமா உணர்ச்சிவசப்படறே நீ”

“உனக்கு புரியல அக்கா. நீ ஏமாந்து தான் போக போறே” என கண்கள் கலங்க முக்காலியில் அமர்ந்த சல்மா “ஏதாவது அதிசயம் நடக்காதான்னு ஏங்கிட்டு இருக்கேன், அந்த மாயக்காரி இங்க இருந்து தொலைய மாட்டாளான்னு” என புலம்ப, கரீமா புரியாது தங்கையை பார்த்திருந்தாள்.

——–

சமையல் செய்துக் கொண்டிருந்த யாக்கூப் அடுப்பை அணைக்காமல் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்தான். எரிவாயு அடுப்பின் அருகே குனிந்தவன் அதன் வாசனையை இன்பமாக உள்ளிழுத்தான்.

“இது காதலின் நறுமணம். இந்த வாசனை தான் நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா சேர்க்க போகுது. இந்த வாசனை தான் நம்மை அழியாத இடத்துக்கு கூட்டிட்டு போக போகுது. உனக்காக நான் ஆசையா காத்திருக்கேன், ஷெனாஸ். சீக்கிரம் வா!”

———-

விரைந்து நடந்து வந்து கொண்டிருந்த ருஹானா, செல்பேசி அடிக்கவும் வலதுகையில் இருந்த மருந்து பையை இடது கைக்கு மாற்றியவள் அழைப்பை ஏற்றாள்.

“ஹல்லோ மிஷால்!”

“ருஹானா! உன்னை திரும்ப தொல்லை செய்றதுக்கு மன்னிச்சிக்கோ. அன்னைக்கு போல ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு. உன்னால உடனே வர முடியுமா?”

“இப்போ முடியாது மிஷால். நான் யாக்கூப் மாஸ்டரை பார்க்க போயிட்டு இருக்கேன். ஆனா ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்”

“சரி, அப்போ நான் வேலையை ஆரம்பிக்கிறேன். நீ வா”

“சரி மிஷால், நான் கிளம்பும்போது உனக்கு கால் செய்றேன்”

——-

ருஹானா சினத்துடன் சென்றதை பற்றியே நினைத்துக்கொண்டு ஆர்யன் அமர்ந்திருக்க, ரஷீத் உள்ளே வந்தான்.

“ஆர்யன்!” அவன் வந்ததை கூட கவனிக்காத ஆர்யனின் கவனம் கலைத்தான்.

“வா ரஷீத்!”

“எல்லா டெண்டர் டாகுமென்ட்ஸ்யும் சரிபார்த்திட்டீங்களா ஆர்யன்? கையெழுத்து போட்டீங்களா?”

ஒன்றும் பேசாமல் ஃபைலை எடுத்து கொடுத்துவிட்டு, விட்டத்தை பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தான் ஆர்யன். ‘நான் என்ன செய்தேன்? இவ ஏன் என்மேல கோபப்படறா? காலைல கூட நல்லா தானே இருந்தா?’

அவன் முகம் பார்க்காத ரஷீத் “நான் இதை இன்னைக்கே ஏலத்துக்கு அனுப்பிடுறேன். இப்போ வருடாந்திர அறிக்கையை பார்க்கலாமா?” என்றான் கையில் வைத்திருந்த கோப்புகளை பார்த்தபடி.

ஆர்யனிடமிருந்து பதில் வராததால் அவனை கவனித்து பார்த்த ரஷீத் “ஏன் சோர்வா இருக்கீங்க?” என கேட்டான்.

“எனக்கு ஒன்னும் இல்ல. ஏதோ யோசனைகள்”

“நான் ஏதாவது செய்ய முடியுமா?”

“இல்ல ரஷீத். இதை நான் தான் பார்க்கணும்” என்ற ஆர்யன் “நாம அப்புறமா ரிப்போர்ட்ஸை பத்தி பேசுவோமா?” என்றான்.

“சரி, உங்க விருப்பப்படி” என்று ரஷீத், ஆர்யனின் சோர்ந்த முகத்தை பார்த்தபடியே வெளியேறினான்.

செல்பேசியை எடுத்து ‘இவான் சித்தி’ தொடர்பை எடுத்த ஆர்யன் அழைப்பை அழுத்தாமல் தயங்கியவன், சில வினாடிகளில் தயக்கம் விடுவித்து அழைப்பையும் விடுத்தான்.

அந்தோ பரிதாபம்! முழு மணியும் அடித்து முடித்தது. அவன் அழைப்பு ஏற்கப்படவேயில்லை.

———

கால்கள் பின்னிழுக்க, கோப மனம் அதை முன்னே கொண்டு செல்ல ருஹானா அந்த பயங்கர வெள்ளை மாளிகையை அடைந்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்தபடி மெல்ல நடந்தவள் “ப்ச்” என்று பயத்தை உதறி கதவை தட்டினாள்.

இரத்தம் வடியும் முகத்துடன் கதவை திறந்த யாக்கூப்பை பார்த்தவளுக்கு உடல் நடுங்கியது.

“அல்லாஹ்! என்ன இது! போட்டோவை விட நேர்ல பார்க்க மோசமா இருக்கே! இதை இங்க குணப்படுத்த முடியாது! உடனே ஹாஸ்பிடல் போகணும்”

“இல்ல.. வேணாம்… ஹாஸ்பிடல்ல போலீஸ் விசாரணை செய்வாங்க. இதை பார்த்தாலே யாரோ அடிச்சாங்கன்னு தெரிஞ்சிடும்”

“ஆனா… வீட்டில வச்சி பார்க்க முடியாது. தலைல இப்படி அடிபட்டுருக்கே! கண்டிப்பா எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யணும்”

“என்னை வற்புறுத்தாதீங்க, ருஹானா. இன்னொருமுறை அந்த அரக்கன்கூட என்னால மோத முடியாது”

“உங்களுக்கு ஆழமா காயம் ஏற்பட்டு இருக்கு. நீங்க சொல்றது போல இதுக்கு சிகிச்சை செய்றது சுலபம் இல்ல”

“உங்க அக்கறைக்கு நன்றி ருஹானா. ஆனா அந்த கேங்க்ஸ்டரை என்னால எதிர்த்து நிற்க முடியாது. இதெல்லாம் நான் மறக்கக்கூட செய்துடுவேன். ஆனா அவன் உங்களை எதும் செய்யாம இருக்கணும். அதான் என்னோட கவலை”

“நீங்க கவலைப்படாதீங்க. அவர் என்னை எதும் செய்ய மாட்டார். ஆனா உங்களை இப்படியே விட்டுட்டு நான் போக முடியாது. தயவுசெய்து மருந்துக்கடைக்காவது வாங்க”

முடியாது என யாக்கூப்  தலையசைக்கவும், ருஹானா கைப்பையில் இருந்து மருந்தை எடுத்தாள்.

அவள் குனியும் நேரம் யாக்கூப் அக்கம்பக்கம் கவனமாக பார்த்துக்கொண்டான்.

“இந்த மருந்தை வச்சி கட்டை கட்டிக்கங்க” என ருஹானா வெளியில் இருந்தபடியே கொடுத்துவிட்டு செல்ல தயாரானாள்.

“நீங்க இவ்வளவு சொல்றதால நான் போட்டுக்கறேன்” என சொன்னவன் அவள் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றான்.

இரக்க உணர்வு மேலோங்க, நடக்க போகும் உயிர் போராட்டம் பற்றி அறியாமல், பயம் நிறைந்த கண்களை சுழற்றிக்கொண்டே மிகுந்த தயக்கத்துடன் ருஹானா, கொடூரமான ஓநாயின் மரணகுகையில் காலடி எடுத்து வைத்தாள்.

பலத்த காயம் ஏற்படுத்திக்கொண்டு தான் நினைத்த லட்சியத்தை அடையப்போகும் இளிப்புடன் யாக்கூப் அவள் பின்னால் சென்று கதவை மூடினான்.

நம்பக்கூடாதவனை நம்பி ஆர்யனை காயப்படுத்திவிட்டு யாரும் அறியாத இருண்ட மாளிகைக்குள் மீள வகையில்லாது மாட்டிக்கொண்டாளே ருஹானா!!

———–

Advertisement