வெள்ளை மாளிகையில் வெளிச்சம் வந்த சிறு துளைகளையும் கட்டையை வைத்து ஆணியடித்து மூடிய யாக்கூப், செல்பேசியின் ஒலியில் ருஹானாவின் அழைப்போ என ஆவலாக பார்த்தான்

மருத்துவரின் பெயரை பார்த்ததும் “ஏன் டாக்டர் என் உயிரை வாங்குறீங்க?” என கத்தியவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை

ஒரு பெட்டியை திறந்து அதிலிருந்த ஒரு வெள்ளை நிற திருமண ஆடையை எடுத்து வெளியே மாட்டினான்.

உணவு மேசையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தான். ரோஜா இதழ்களை தூவினான். ஒரு கைவிலங்கை எடுத்து வைத்தான். 

சுவரில் மாட்டியிருந்த சங்கிலியின் உறுதியை சரிபார்த்தான்.

“எங்கே டார்லிங் இருக்கே? சீக்கிரம் வா” என இளித்தான்.

———

மிஷால் தனது கையில் இருந்த அட்டவணையை பார்த்தபடி “இன்னும்  யுவலமா சூப் (ஆட்டு இறைச்சி மற்றும் பட்டாணி சேர்த்தது), சிமிட் கெபாப் (கறி பொதிந்த ரொட்டி), மேனேமென் (முட்டைக்கறி) செய்யணும், ருஹானா” என கவலையுடன் சொன்னான்

“கவலைப்படாதே மிஷால்! மாலை வரை நமக்கு நேரம் இருக்கே! நாம சேர்ந்து வேகமா செய்தா முடிச்சிடலாம்” என அடுப்பில் கிண்டிக்கொண்டே ஊக்கினாள்.

“சரி ருஹானா! நான் பார்சலின் கீரையை சுத்தம் செய்றேன். அப்புறம் பட்டாணியை உரிக்கிறேன்” என சொன்னவன் “நீ இவானை கூட்டிட்டு வந்திருக்கலாம், நல்லா இருந்திருக்கும். அவனை பார்த்தாலே உற்சாகம் வந்துடுது” என்றான்.

“அவன் வீட்லயே விளையாடுறேன்னு சொல்லிட்டான். இன்னைக்கு கிட்டார் வகுப்பும் இல்ல”

“யாக்கூப் எப்படி சொல்லி கொடுக்கறார்? வகுப்பு நல்லா போகுதா?”

“ஆமா! மாஸ்டர் கூட நல்லா பழகிட்டான். கிட்டார் கத்துக்கறதுல மகிழ்ச்சியா இருக்கான்”

“அவனோட சித்தப்பா?” ஏளனமாக கேட்டான்.

“அவருக்கு முதல்ல பிடிக்கல. இப்போ ஒருவழியா ஏத்துக்கிட்டார்” என்று சொன்னவள், நேற்று நடந்த நிகழ்வின் கவனத்தில் கையை சுட்டுக்கொண்டாள்.

வேகமாக வந்து அடுப்பை நிறுத்திய மிஷால் அவள் கையை பார்க்க “ஒன்னும் இல்ல மிஷால், நாம வேலையை பார்ப்போம்” என ருஹானா சொல்ல “சரி நீ இங்க வந்து இந்த பட்டாணியை உரி. நான் அடுப்பை பார்த்துக்கறேன்” என்றான்.

———- 

தலையில் கேப்டன் தொப்பியை வைத்துக்கொண்டு, இவான் ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த நீரில் படகை மிதக்க விட்டுக்கொண்டிருந்தான் சோகமாக.

“சாரா ஆன்ட்டி! என் சித்தி எப்போ வருவாங்க?”

“மிஷால் அண்ணாவோட வேலை முடிஞ்சதும் வந்துடுவாங்க, லிட்டில் சார். அப்புறம் நீங்க உங்க சித்திக்கு கப்பல் ஓட்டி காட்டலாம்”

இவர்களின் உரையாடலை கேட்டு முகம் மாறிய ஆர்யன் வெளியே வந்து காரை எடுத்தான்.

——–

“எனக்கு தெரியல சையத் பாபா. இப்போலாம் நான் பெரிய தப்புகள் செய்றேன். எது சரின்னே எனக்கு தெரிய மாட்டேங்குது”

“மகனே! உனக்கு தப்பு செய்றது பிடிக்காது. அதான் நீ செய்ற சின்ன தப்பும் உனக்கு பெருசா தெரியுது. சின்ன தப்புகள் ஒன்னும் தவறில்ல நீ தான் அதை பெருசா நினைக்கிறே! தவறுகள்ல இருந்து தான் மனிதன் வளர முடியும்”

“எனக்கு கோபம் கண்ணை மறைக்குதா சையத் பாபா? எனக்கு நல்லவங்க யாருன்னு கண்டுபிடிக்க தெரியல”

“நீ இப்ப நிறையவே மாறியிருக்கே! எண்ணங்களும், பார்வைகளும் மாறித்தான் ஆகணும், மகனே!”

ஆர்யன் உன்னிப்பாக கேட்டான்.

“நீ எல்லாரையும் எதிரியா பார்க்கறே, ஆர்யன். அதான் உனக்கு சந்தேகம் வருது. இத்தனை நாள் நீ உனக்கு பழக்கமான ஏரியில் நீந்திட்டு இருந்தே! இப்போ நீ கடலுக்கு வந்திருக்கே. நீ இன்னும் நிறைய மாறி தான் ஆகணும்” 

‘இதுக்கு மேல எப்படி மாறுறது?’ என ஆர்யன் பார்க்க, சையத் மேலும் பேசினார். 

“அன்பு கடல்ல மூழ்க தயங்காதே. நீ ஏற்படுத்தின காயம் வடுவா மாறதுக்குள்ள அதை குணமாக்கிடு. இங்கயே கொஞ்ச நேரம் உட்காரு. இயற்கை சொல்றதை காது கொடுத்து கேளு. அதை கேட்க உன் மனம் முதல்ல அமைதியாகனும். அப்போ தான் உன்னால கேட்க முடியும். இந்த பிரபஞ்சம் எப்பவும் நம்மகிட்டே ஏதோ சொல்லிட்டு தான் இருக்கு”

சையத் எழுந்து செல்ல, ஆர்யன் கண்மூடி அமர்ந்திருந்தான்.

காக்கும் அரணின் செங்கோல் அறியாதது…

தாக்கும் எல்லை தவறுதலாக மீறினாலும்

பாதுகாக்கும் போரின் பிசகே அன்றி

பாவங்கள் அதில் இல்லையென..!

எல்லைகளை தாண்ட வைப்பது அன்பு!

மனதில் சலசலப்புகள் ஏராளமெனில்

பிரபஞ்ச பரிபாஷைகள் செவியில் ஏறிடுமா?

——- 

“இன்னும் என்னன்ன செய்யணும், ருஹானா?”

“அநேகமா முடிந்தது மிஷால். சின்ன சின்ன வேலைகள் தான் மீதி இருக்கு. இதுல நட்ஸ் வறுத்து போடணும். ஃபிரிட்ஜ்ல இருக்குற சாஸ் எடுத்து…..” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதவிப்பையன் சதாம் அவள் செல்பேசியை எடுத்துக்கொண்டு வந்தான்.

“அக்கா! உங்க போன் அடிச்சிட்டே இருக்கு”

“ஹலோ! மிஸ்டர் யாக்கூப்”

வேலை செய்துக்கொண்டிருந்த மிஷால் திரும்பி கவனித்தான்.

“ருஹானா மேம்! நீங்க வீட்டு முகவரி தேடிட்டு இருக்கீங்களா?”

“யா அல்லாஹ்! மன்னிச்சிடுங்க மிஸ்டர் யாக்கூப். எனக்கு வேற முக்கியமான வேலை வந்துடுச்சி. நான் உங்ககிட்ட சொன்னதை மறந்தே போயிட்டேன்”

யாக்கூப் முகம் இருண்டது. “ஓஹ்! அப்படியா?”

“வேலை மும்முரத்துல உங்களுக்கு போன் செய்து சொல்ல விட்டுட்டேன்”

“பரவால்லே ருஹானா மேம்” கையில் இருந்த சரம் அதிவேகமாக ஆடியது.

“நான் ரொம்ப வருத்தப்படுறேன்”

“இல்ல.. வேணாம்.. நீங்க வருத்தப்படாதீங்க. இன்னொரு நாள் வாங்க”

“நிச்சயமா வரேன்” நிஜமான வருத்தம் இருந்தது அவள் குரலில்.

போனை மூடிய யாக்கூப் “ஓஓஓ!” என அலறியவன் மேசையை எட்டி உதைத்தான்.

ருஹானா போனை வைக்க, மிஷால் நாக்கில் சைத்தான் சதி செய்தது.

“ருஹானா! இங்க வேலை தான் முடிஞ்சதே! மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம். நீ வேணும்னா போயிட்டுவா. எதுக்கு யாக்கூப்புக்கு ஏமாற்றம் தரணும்?”   

“உறுதியா தான் சொல்றியா, மிஷால்”

“ஆமா! பேக்கிங் மட்டும் தானே! நீ கிளம்பு”

ஏப்ரானையும், தலையில் கட்டியிருந்த துணியையும் கழட்டி வைத்துவிட்டு ருஹானா கிளம்பினாள்.

———-

சமைத்து முடித்து அடுக்கிய உணவு வகைகளை மிஷால் காரில் ஏற்றிக்கொண்டிருக்க, ஆர்யன் கார் பக்கத்தில் வந்து நின்றது.

ஆர்யன் கீழே இறங்கி உணவகத்தில் எட்டி பார்க்க “ருஹானாவை தேடி வந்திருந்தா அவ கிளம்பிட்டா” என்று மிஷால் சொல்ல, தலையாட்டிய ஆர்யன் நிம்மதியாக திரும்பினான், ருஹானா அர்ஸ்லான் மாளிகைக்கு சென்றிருப்பாள் என நினைத்து.

“அவ யாக்கூப் மாஸ்டரை பார்க்க போயிருக்கா” என்று மிஷால், ஆர்யனின் தலையில் இடியை இறக்க, அவன் அதிர்ந்து நின்றான்.

விட்டுவிட்டு துடிக்கும் இதயமும் விடாமல் துடித்தது, காரணம் புரியாமல்.

——— 

இருப்பிடம் வந்து சேர்ந்த யாக்கூப், வெள்ளை மாளிகையின் சாவியை வீசியடித்தான்.

அப்போது அவன் போனில் ருஹானா அழைக்க, படபடப்பாக அதை எடுத்தான்.

“ருஹானா மேம்! சொல்லுங்க”

“மிஸ்டர் யாக்கூப்! என்னோட வேலை முடிந்தது. நீங்க அனுப்பின முகவரிக்கு தான் டாக்ஸில வந்துட்டு இருக்கேன். நீங்க அங்க தானே இருக்கீங்க?”

“என்ன! டாக்ஸியில வரீங்களா? ஆமா ஆமா! நான் இருக்கேன்! நீங்க வாங்க”

“வரேன்னு சொல்லிட்டு வரமுடியாம போனது எனக்கு சங்கடமா இருந்தது. அதான் புறப்பட்டேன். இன்னும் பதினைந்து நிமிடத்துல அங்க இருப்பேன்”

“நல்லது, நல்லது. எனக்கும் ரொம்ப சந்தோசம். உங்களுக்காக தான் காத்திருக்கேன். வாங்க வாங்க” என போனை வைத்த யாக்கூப், சாவியை தேடி எடுத்துக்கொண்டு பாய்ந்தோடினான்.

——-  

ஆள் அரவமற்ற அந்த பகுதியில் சிதலமடைந்த அந்த மாளிகையின் முன் வந்து நின்ற ருஹானா தயங்கி தயங்கி படிக்கட்டில் ஏறி, அழைப்புமணியை அழுத்தினாள். உற்று கவனித்தும் மணிச்சத்தம் உள்ளே ஒலிக்காத காரணத்தால் கதவை தட்டி “மிஸ்டர் யாக்கூப்!” என குரல் கொடுத்தாள்.

பதில் வராததால் கதவை விட்டு நகர்ந்து, படிக்கட்டில் இறங்கி மாளிகையின் முன்புற தோற்றத்தை ஆராய்ந்தாள்.

கதவு, ஜன்னல்களில் ஆரம்பித்து இண்டு இடுக்களில் கூட கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தவளுக்கு ஏதோ சரியாக படவில்லை.

நன்கு பழகாதவர்களோடு, அவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக தெரிந்தாலும் தனிமையில் அவர்களை சந்திப்பதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும் என்பது இளம்வயது பெண்களுக்கான எச்சரிக்கை.

தவிர்க்கவே முடியாத நிலையில் கூட, ஆட்கள் நடமாடும் பொதுஇடங்களில் சந்திப்பதே பாதுகாப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆர்யன் மேல் உள்ள தப்பான அபிப்பிராயத்தில், யாக்கூப் பற்றி அவ்வப்போது மனதில் தோன்றும் ஒவ்வாமையையும் ஒதுக்கி வைத்து, பெண்களுக்கேயுரிய ஒரு உள்ளுணர்வையும் மீறி, இவான் உயிரை காப்பாற்றிய உத்தமன் எனும் நம்பிக்கையில், ருஹானா திரும்பவும் நான்கு படிக்கட்டுகளில் மெல்ல ஏறி தயக்கமாக “மிஸ்டர் யாக்கூப்!” என கூப்பிட்டவள் கதவில் ஓங்கி தட்டினாள். 

கதவு தானாக திறந்து கொண்டது. தயங்கியபடியே என்றாலும் அந்த பயங்கர மாளிகையினுள் காலடி எடுத்து வைத்தாள்.

கட்டுமானப் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்க, பாழடைந்து கிடந்த அந்த அறையில் ருஹானா “மிஸ்டர் யாக்கூப்!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே செல்ல, அவள் பின்னால் கதவு படாரென பூட்டிக் கொண்டது.

(தொடரும்)