Advertisement

“இன்னைக்கு நீ சொன்னது உண்மையா இருக்கலாம். ஆனா அதுக்கும் மேலயும் ஏதோ இருக்கு. கண்டிப்பா நீ எதையோ மறைக்கிறே. நல்லவன் மாதிரி நடிக்கிறே” 

‘அப்படியே உண்மையை பிட்டுபிட்டு வைக்கிறானே’ என அதிர்ந்து போன யாக்கூப் திகைப்பை மறைத்துக்கொண்டு “ஆர்யன் சார்! அப்படியெல்லாம் இல்ல. நான் எல்லாமும் சொல்லிட்டேன். என்னோட காதலிய கார் விபத்துல…” என சொன்னவனை தடுத்தான் ஆர்யன்.

“நடிக்கறதை நிறுத்து. நீ எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா என்னை ஏமாத்த முடியாது” பல்லை கடித்துக்கொண்டு பேசியவன் ஒரு எட்டு நெருங்கி வந்து “நான் தெருக்களில் வளர்ந்தவன். உன்னை போல ஆட்களை இனம் கண்டுகொள்ள எனக்கு தெரியும். உன்னோட நோக்கம் என்ன, டீச்சர்?” என மிரட்டினான்.

“நீங்க என்னை தப்பா நினைக்கிறீங்க ஆர்யன் சார்”

“வாயை மூடு. போதும். என் வீட்டுக்கு இனிமேல் வராதே”

“என்னை வேலையை விட்டு எடுக்கறீங்களா?”

“நான் எடுக்கல. நீயே தான் விலகப் போறே. நாளைக்கு உனக்கு உடம்பு சரியில்லனு போன் செய்து சொல்லப் போறீயா இல்ல வேற ஏதாவது முக்கியமான வேலைனு சொல்லப் போறீயா… நீயே முடிவு செய்துக்கோ”

யாக்கூப் மிரண்டு விழிக்க “என் வீட்ல இனி உன்னை நான் பார்க்கக் கூடாது” என்றான் ஆர்யன் முடிவாக.

கையில் இருந்த சரத்தை காட்டி “எந்த ரூம்ல நீ கால் வைக்கக் கூடாதோ, அங்க இதை நீ விட்டுட்டு வந்துட்டே” என சொல்லி, அவன் உள்ளங்கையை பிடித்து அதில் அழுத்தி வைத்தான்.

யாக்கூப்பின் கைகால்கள் ஆட்டம் காண, சீறும் பார்வையை சில விநாடிகள் அவனுக்கு தந்துவிட்டு ஆர்யன் வெளியேற, சிலையென நின்ற யாக்கூப் பின் பயங்கரமாக சிரித்தான்.

———    

மேசைக்கு அருகே இருந்த சோபாவில் அமர்ந்து ஆர்யன் வேலை செய்துக்கொண்டிருக்க, கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் ருஹானா.

“சில விஷயங்கள் நாம பேச வேண்டியிருக்கு”

தலையாட்டியபடி எழுந்த ஆர்யன் “மியூசிக் டீச்சர் பத்தி” என்றான்.

“ஆமா! யாக்கூப் இப்போ துயரமான கட்டத்துல இருக்கார். நாம இப்போ அவருக்கு ஆறுதலா இருக்கணும்”

ஆர்யன் பதில் சொல்லும்முன் கதவை தட்டி உள்ளே வந்த ரஷீத், அங்கே ருஹானா இருப்பதை பார்த்து தயங்கி “ஷாரிக் பற்றிய ஒரு முக்கியமான தகவல், ஆர்யன்” என்றான்.

“சொல்லு ரஷீத்!”

“ஷாரிக்குக்கு வியாபாரத்துல சிக்கல்ன்னு அவசரமா தென்னாப்பிரிக்காக்கு போயிருக்கான். அதை தீர்த்துட்டு அவன் திரும்பி அகாபா வர சில காலம் பிடிக்கும். அவனால இப்போதைக்கு நமக்கு ஆபத்து இல்ல”

“நல்லது! நீ எதுக்கும் அவன் எப்போ இங்க திரும்புறான்னு கண்காணிச்சிட்டே இரு”

“சரி ஆர்யன்” என பணிந்துவிட்டு ருஹானாவையும் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு ரஷீத் சென்றான். 

ருஹானா “இப்போ ஆபத்து எதுவும் இல்ல. இனிமே என்னை பின்தொடர்ந்து வர மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.

‘இந்த ரஷீத் ஏன் இப்போ வந்து இந்த செய்தியை சொன்னான்?’ என ஆர்யன் நொந்துக்கொண்டான்.

“இனிமேல் நான் தனியா வெளியே போகலாம் இல்லயா?” என அவள் கேட்க, அவன் லேசாக தலையாட்டினான்.

“என்னோட கோரிக்கை ஒன்னு இருக்கு. இனிமேல் மிஸ்டர் யாக்கூப் கிட்டே கடுமையா பேசாதீங்க. நட்பா நடக்க முயற்சி செய்ங்க. என்னோட வேண்டுகோளை மறுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என அவள் மேலும் சொல்ல, அதற்கும் பதில் லேசான தலையாட்டலே.

அவள் சென்றபின்னும் அவனுடைய கோபம் மட்டுப்படவில்லை. என்றாலும் இனி யாக்கூப் இங்கே வரமாட்டான் எனும் நினைப்பே அவனுக்கு லேசான ஆறுதலை அளித்தது. 

———-

“போன் செய் என் செல்லம்” என செல்பேசியை பார்த்து சொல்லிக்கொண்டான் யாக்கூப்.

ஏற்கனவே ஜன்னல்கள் சட்டங்களால் மூடி இருக்க, அதற்கு மேலும் பலகையை வைத்து ஆணியடித்துக் கொண்டிருந்தான், அவனது வெள்ளை மாளிகையில். 

ஆர்யனிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த ருஹானா போனை எடுத்து பார்க்க, அதில் வந்த குறுஞ்செய்தியை படித்தாள்.

‘வணக்கம் ருஹானா மேம். என்னோட கிட்டார் வகுப்பை இதோட நான் முடிச்சிக்கறேன். இதை நான் வருத்தமா சொல்றேன். ஆனா இவானோட ஆர்வத்தை நான் தடுக்க மாட்டேன். நம்பிக்கையான சில ஆசிரியர்கள் கிட்டே அவனை பத்தி சொல்லி இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க. இவானுக்கு என்னோட வாழ்த்துக்கள்’

குழப்பமான ருஹானா உடனே யாக்கூப்பிற்கு அழைப்பு விடுத்தாள்.

அவன் உற்சாகமாக அழைப்பை ஏற்க “உங்க செய்தியை நான் பார்த்தேன். ஏன் இப்படி? என்ன நடந்தது?” என ருஹானா கேட்டாள்.

“ஒண்ணுமில்ல ருஹானா மேம்!  அது வந்து.. இது தான் சரி. என்னோட முடிவை நீங்க ஏத்துக்கிட்டீங்கனா நான் சந்தோஷப்படுவேன்”

“நீங்க ஏன் திடீர்னு இப்படி முடிவு எடுத்தீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? என்கிட்டே எதையோ மறைக்கிறீங்களா?”

“என்னை நம்புங்க. இதான் எல்லாருக்கும் நல்லது”

“மிஸ்டர் யாக்கூப்! ஏதோ இருக்கு. என்கிட்டே சொல்லுங்க ப்ளீஸ்”

யாக்கூப்பிற்கு சிரிப்பு பொங்கியது.

“என்னை வற்புறுத்தாதீங்க. நான் எப்படிப்பட்ட துன்பங்கள் தாங்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும். எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுது. இப்போ எனக்கு வகுப்பு எடுக்கற மனநிலை இல்ல”

“மிஸ்டர் யாக்கூப் உண்மையை சொல்லுங்க”

“வந்து… நான் எப்படி சொல்ல.. நேத்து ஆர்யன் சார் என் வீட்டுக்கு வந்து வகுப்பு எடுக்க வரக்கூடாதுன்னு மிரட்டிட்டு போனார்”

ருஹானா முகம் கோபத்தில் சிவந்தது.

“சாரி யாக்கூப் சார். அவருக்காக நான் உங்கட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். நான் அவர்கிட்டே பேசிக்கறேன். நீங்க பாடம் சொல்லிக் கொடுக்க வாங்க”

“உங்களுக்கு சங்கடம் தர நான் விரும்பல, ருஹானா மேம்! ஆர்யன் சார் சொல்றதுபோல நீங்க செய்ங்க”

“ப்ளீஸ்.. எனக்காக வாங்க”

வாயை மூடி சிரிப்பை அடக்கிக்கொண்டவன் “சரி.. நீங்க இவ்வளவு சொல்றதால வரேன். நாளைக்கு பார்க்கலாம்”  என்று சொல்ல, ருஹானா நன்றி தெரிவித்தாள்.

போனை வைத்தவள் வேகவேகமாக ஆர்யன் அறைக்கு செல்ல, கையில் காபி ட்ரேயுடன் அறையை மூடிக்கொண்டிருந்த நஸ்ரியா “ஆர்யன் சார் ரூம்ல இல்ல. வீட்லயும் இல்ல. வெளிய போயிருக்கார்” என்றாள். 

——– 

அர்ஸ்லான் மாளிகைக்கு யாக்கூப் உள்ளே வந்த நேரம் யாரும் வெளியே இல்லை. காவலரும் காணவில்லை. எப்போதும் தோட்டத்தில் செடிகொடிகளை பராமரிக்கும் அம்ஜத்தும் இல்லை.

அவன் சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லை என உறுதிசெய்துவிட்டு, கீழே ஓடிய மின்கம்பியை பிடுங்கி செயற்கை குளத்தில் விட்டான். கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்த யாக்கூப் வீட்டின் உள்ளே சென்றான்.

இவான் அவனை நாடி வர, அவனுக்கு ஒரு பெட்டியை தந்தான்.

“நீ கிட்டார் ஆர்வமா கத்துக்கறதால உனக்கு இந்த பரிசு. பிடிச்சிருக்கான்னு பாரு”

இவான் அதை பிரிக்க உள்ளே இரும்பினாலான படகு இருந்தது.

“யேஹ்! படகு! எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றி மாஸ்டர்”

“இது சாதாரண படகு இல்ல. தண்ணீல போகும். மோட்டார் படகு. நீ இது போறதை பார்க்க விரும்புறீயா?”

“எங்க விடலாம்?” இவான் ஆர்வமாக கேட்டான்.

“நீ தேடி பாரு. கிடைக்கும்” என மெல்ல சொன்னான் யாக்கூப்.

அப்போது அங்கே ருஹானா வர “பாருங்க சித்தி, மாஸ்டர் எனக்கு வாங்கிட்டு வந்துருக்கார்” என இவான் காட்டினான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“இதென்ன பிரமாதம்?”

“உங்களுக்கு குடிக்க பானம் கொண்டு வரவா?”

“நீங்களும் என்கூட காபி குடிக்கறதா இருந்தா எனக்கும் கொடுங்க, வகுப்பு ஆரம்பிக்கும் முன்னாடி” 

வீட்டின் உள்ளே வந்த ஆர்யன், யாக்கூப்பின் குரல் கேட்டு படியேறாமல் அப்படியே நின்றான்.

ருஹானாவும் அவனை பார்த்துவிட்டு அருகே வந்தவள் “உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள்.

“எதுவும் இல்லயே’

“நான் உங்க கிட்டே பேசணும்”

ஆர்யன் சம்மதிக்க, சமையலறைக்கு செல்லும் பாதை நோக்கி அவள் நடக்க, அவன் அவள் பின்னால் சென்றான்.

வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த யாக்கூப் கள்ள சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“உங்களுக்கு என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?” 

“எதும் இல்லயே. நீ ஏன் அப்படி கேட்கற?” 

“உங்க கண்கள் வேற சொல்லுதே”

‘ஓ! என் கண்ணிலிருந்தே என் மனதை புரிந்து கொள்கிறாளா?’ என ஆர்யன் வியந்து பார்த்தான்.

“எனக்கு தெரியும். மாஸ்டர் கிட்டார் பாடம் சொல்லிக் கொடுக்க இங்க வர்றது உங்களுக்கு பிடிக்கல. வேலையை விட்டு எடுக்க பார்த்தீங்க. நான் அவரை கட்டாயப்படுத்தி வர வச்சிருக்கேன். வகுப்புகள் தொடரும்”

ஆர்யனின் கோபம் எல்லை மீறியது. எப்படி கட்டுப்படுத்தி நிற்கிறான் என அவனுக்கே தெரியவில்லை.

“எனக்கு நீங்க வாக்கு கொடுத்திருக்கீங்க. ஆனாலும் அதுக்கு எதிரா நடந்துக்கறீங்க. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல”

ஒரு எட்டு எடுத்து அருகில் வந்தவன் “உனக்கு அவனை பத்தி தெரியல. நீ நல்லா ஏமாறப்போறே” என்றான்.

“நீங்க எப்பவும் மாற மாட்டீங்க. இப்படியே தான் இருப்பீங்க” கோபமாக சீறிவிட்டு ருஹானா சமையலறைக்கு சென்றுவிட்டாள்.

‘இவளுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? என்ன இப்படி மடத்தனமா செய்றா, பேசுறா?’ என பார்த்து நின்றான் ஆர்யன்.

அவளை அநியாயமாக பொய்குற்றம் சாட்டி போலீசில் மாட்டிவிட்டதும், அவளின் மன்னிப்பிற்காக தான் தவித்ததும், ஆர்யனுக்கு இன்னும் உறுத்த, அவள் மனதை புண்படுத்திவிட்ட காரணத்திற்காக இன்னும் எவ்வளவு தான் பொறுத்துப் போவான்? 

——-  

ருஹானா காபி தயாரித்து கொண்டுவர, வரவேற்பறை சோபாவில் சகோதரிகளே அமர்ந்திருந்தனர்.

“இவானும், மாஸ்டரும் எங்கே?”

“மாஸ்டர் தோட்டத்துல உட்காந்திருக்கார், ருஹானா. இவானுக்கு சட்டை மாத்த நஸ்ரியா மேலே கூட்டிட்டு போனா. நீ மாஸ்டர்க்கு காபி வெளியே கொண்டு போய் கொடு” 

“சரி கரீமா மேம்!”

அவள் சென்றதும் “போ போ ஆபத்தை விலை கொடுத்து வாங்கு” என கரீமா சொல்ல, “சீக்கிரம் எங்க வாழ்க்கைல இருந்து தொலைஞ்சி போ, அழுமூஞ்சி” என சல்மா சிரித்தாள்.

———-

காபி குடித்து முடித்த யாக்கூப் நீரூற்றையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் நினைவு அங்கே இல்லாததை கண்டு “என்ன ஆச்சு? நாம வேணும்னா உள்ள போகலாமா?” என அவன் எதிரே அமர்ந்திருந்த ருஹானா கேட்டாள்.

“இல்ல.. இயற்கை காற்று எப்பவும் எனக்கு பிடிக்கும். மனசு சரியில்லனா நான் வெளியே தான் இருப்பேன்” என்று சொன்னவன், வீட்டு வாசலையும், குளத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி எல்லாம் நடந்திருக்க வேணாம்” என ருஹானா சொல்ல, அந்த நேரம் ஆர்யன் உள்ளே இருந்து வந்தான்.

இவர்கள் சேர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு எரிச்சல் மிக, குளத்துக்கு மறுபுறமாக சென்று அங்கிருந்த காவலனை அழைத்தான்.

“ஆர்யன் சார் மேலே கோபப்படாதீங்க. அவர் என்மேலே தப்பான அபிப்ராயம் வச்சிருக்கார். அத்தனை எளிதா என்னை நம்பமுடியல அவருக்கு” என யாக்கூப் பேசிக்கொண்டே வாசலை எட்டி பார்த்தான். 

‘ஏன் இன்னும் இவான் வெளிய வரல?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.

ஆர்யன் பாதுகாவலரிடம் “ஷாரிக் பயம் இப்போ இல்லனாலும் நீங்க எல்லாரும் கவனமா இருக்கணும்” என உத்தரவிட, அவன் “சரி சார்” என்று சொல்லி செல்ல, ஆர்யன் போன் அடித்தது.

மறுபுறம் ஆர்யன் போனில் பேசிக்கொண்டிருக்க, இந்த புறம் இவான் நடந்து வந்தவன் நீரூற்று நீரில் படகை விட போனான். 

அவன் அருகில் செல்லும்வரை காத்திருந்த யாக்கூப், அவன் தண்ணீரில் விட போகும் சமயம் “இவான்! வேண்டாம்! ஷாக் அடிச்சிடும்” என பெரிதாக கத்திக்கொண்டே ஓடிவந்து, இவானை தூக்கி சுற்றி சற்று தள்ளி இறக்கிவிட்டான்.

ஆர்யன் அங்கே பாய்ந்து வர, ருஹானா ஓடி சென்று இவானை கட்டிக்கொண்டாள்.

இவானுக்காக இளைப்பாறுதலாய்

அங்கீகரிக்கப்பட்ட  அவளுரிமை 

எல்லை மீறுகிறதோ?

அவளின் மூடத்தனம்

இளையவன் வாழ்வை

முடித்து வைக்குமா?

நிராகரிக்கப்படும் நியாயமான

அறிவுறுத்தல்களுக்கு பதிலாகும்

கருப்பு கோர நிஜங்கள்..

கரீமா, ஜாஃபர், சல்மா எல்லாரும் வேகமாக அங்கே வர கரீமா “என்ன நடந்தது, ருஹானா?” என கேட்டாள்.

யாக்கூப் “நான்… வரும்போது இந்த கேபிள் உடைஞ்சிருந்ததை பார்த்தேன். உள்ளே வந்ததும் சொல்லனும்னு இருந்தேன். ஆனா மறந்துட்டேன். இப்போ இவான் அங்க போகவும் ஞாபகம் வந்திடுச்சி. அந்த தண்ணீல மின்சாரம் பாயுது” என சொன்னதை கேட்டு, அனைவரும் திடுக்கிட்டனர்.

இவானை விட்டு எழுந்த ருஹானா “நீங்க மட்டும் இல்லனா… என்னால நினைச்சி கூட பார்க்க முடியல. மிக்க நன்றி. இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன், என் வாழ்நாள் பூரா..” என உணர்ச்சி பெருக்கில் கூற, சகோதரிகள் புன்னகை பூத்தனர்.

ஆர்யன் நடந்ததை நம்பமுடியாமல் திகைப்பாக பார்த்து நின்றான். பின் தன் கூரிய அம்புவிழியால் யாக்கூப்பை நோக்க, அவன் இவனின் பார்வையை தவிர்த்தான் கவனமாக.

(தொடரும்)  

Advertisement