Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 66

இணைந்த கைகள் இணைந்தபடி இருக்க, இருவர் மனமும் இறகாக பறக்க, இதழ்களில் மென்னகை தவழ, கண்கள் மின்மினியாய் மின்ன, அந்த இனிய தருணம் அப்படியே நீடித்தது.

ருஹானா மீண்டும் கேட்டாள். “உங்களுக்கு சம்மதம் தானே?”

ஆர்யன் கையை லேசாக அழுத்தி உடன்பட “நம்மோட இந்த சமாதான ஒப்பந்ததுக்கு எனக்கு ஒரு நிபந்தனை இருக்கு” என அவள் சொல்ல, அவன் கேள்வியாக புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

“இனிமேல் இவானுக்கு எது செய்யவும் எனக்கு உரிமை வேணும். அதாவது இவான் பற்றிய எந்த முடிவுகளும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து தான் செய்யணும். இதுக்கும் நீங்க சம்மதிக்கறீங்களா?”

கைகள் இன்னமும் சேர்ந்திருக்கும்போது அவன் எப்படி மறுப்பான்?

சில விநாடிகள் சிந்தித்தாலும் “சம்மதம்!” என்றான்.

நம்ப முடியாத ருஹானா “நிச்சயமாகத்தானா? ஒருவேளை நீங்க மறுத்தீங்கனா…” என தொடர பாதியில் மறித்தான் ஆர்யன்.

“அதான் சரின்னு சொல்லிட்டேனே! நான் சொன்னா சொன்னது தான்”

“அப்போ சரி! பார்க்கலாம்” என்ற ருஹானா அவன் கையை குலுக்கி விடுவித்தாள்.

உடனிருந்தும் உரிமையை நிலைநாட்ட

ஓர் நேச உடன்படிக்கை நிகழ

உம் எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே

உள்ளம் வெளியிட, மறுத்திடுமா  என்ன

கரம் கோர்த்திருக்கும்போது…?

அழகு சிகப்பு உடையில் நவீனமாக தன்னை அலங்கரித்துக்கொண்ட சல்மா ஆர்யனிடம் சந்தேகம் கேட்பது போல ஒரு அலுவலக கோப்பை எடுத்துக்கொண்டு “அக்கா! நான் ஆர்யன் கூட பேசிட்டே காபி குடிக்க போறேன்” என துள்ளிக்கொண்டு வந்தாள். 

சந்தோசமாக கரீமாவும் ஆர்யன் அறை வரை அவளோடு நடந்தாள்.

ஆர்யன் அறையிலிருந்து ருஹானா சிரித்துக்கொண்டே வெளியே வருவதை பார்த்து இருவரும் அதிர்ந்து நின்றனர். சல்மா தன் கையிலிருந்த ஆவணத்தை கசக்கி தூக்கி வீசினாள்.      

———

காலை உணவு மேசை…

“இவான் செல்லம்! சாரா ஆன்ட்டி உனக்கு பிடிச்ச கேக் செஞ்சிருக்காங்க, இதையும் சாப்பிடு” என ருஹானா எடுத்து வைக்க அவனும் சாப்பிட்டான்.

நஸ்ரியா எல்லாருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டே நகர்ந்தவள் ஆர்யனை தாண்டி சென்றாள்.

“நஸ்ரியா! எனக்கும் கொடு” என ஆர்யன் சொல்லவும் முதலாளிக்கு கேட்காமல் நகர்ந்துவிட்டோமே என அவள் பயத்துடன் நிற்க, கரீமா அவள் உதவிக்கு வந்தாள்.

“ஆர்யன் டியர்! நீ வழக்கமாக ரெண்டாவது கப் டீ குடிக்க மாட்டேல. அதான் அவ உனக்கு கேட்கல”

“இன்னைக்கு எனக்கு குடிக்கணும் போல இருக்கு. மனிதர்கள் சிலசமயம் அவங்க பழக்கவழக்கத்தை மாத்திக்க தேவை இருக்கு” என்றான் ருஹானாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

ருஹானா மெல்லிய மகிழ்ச்சி புன்சிரிப்பு சிந்த, கரீமாவும் சல்மாவும் விழித்து பார்த்தனர். 

நஸ்ரியா ஆர்யனுக்கு தேநீர் கொடுத்து அகல, இவான் தன்னிரு உள்ளங்கைகளையும் தட்டினான். “எனக்கு வயிறு நிறைஞ்சிடுச்சி” 

“ஆனா உன் தட்டு முழுசா காலியாகலயே, சிங்கப்பையா!” என்று ஆர்யன் சொல்ல, “அவனுக்கு போதும்னா கட்டாயப்படுத்த கூடாதே!” என ருஹானா தைரியமாக ஆர்யனை மறுத்து பேச, கரீமா கண்கள் வெளியே தெறித்து விழுந்துவிடும்படி பார்த்தாள்.  

“வயிறு நிறையற அளவுக்கு நல்லா சாப்பிட்டியா அக்னி சிறகே!” என ஆர்யன் கேட்க, இவான் ஆமென தலையாட்டினான்.

“அப்போ சரி! நீ டேபிள் விட்டு போகலாம்” என சொல்லி ஆர்யன் ருஹானாவை பார்க்க, அவள் இன்ப புன்முறுவல் இன்னும் பெரிதானது. 

டென்னிஸ் விளையாட்டை பார்ப்பவர்கள் கண்கள் இருபக்க கோர்ட்டிலும் மாறி மாறி பாய்வது போல, கரீமாவும் சல்மாவும் இருவரையும் பார்த்தனர்.

ருஹானாவின் செல்பேசி அழைக்க, மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுந்தவள் சற்று தள்ளி நின்று பேசினாள்.

ஆர்யன் காதுகளை கூர்தீட்டிக் கொண்டான்.

“சலாம் மிஷால்!”

ஆர்யனுக்கு அந்த பேரை கேட்டதும் விரல் நகம் வரை இறுக்கமானது.

“ஓ! அப்படியா! அவ்வளவு ஆர்டரா? கண்டிப்பா வரேன். நான் வந்து உதவி செய்றேன். கவலைப்படாதே!” 

ஆர்யனுக்கு அனல் மூச்சு கிளம்பியது.

“சரி! உணவகத்துல பார்க்கலாம்” என்று போனை நிறுத்தி சாப்பிட வந்தாள்.

ஆர்யன் முகம் மாறியதை பார்த்து மகிழ்ந்து போன கரீமா “என்ன ருஹானா டியர்! எதும் முக்கியமான தகவலா?” என ஏற்றிவிட்டாள்.

“நான் மிஷால் உணவகத்துக்கு போகணும், கரீமா மேம்! பெரிய ஆர்டர் வந்திருக்கு. அவசரமாவும் அனுப்பணும். நீங்க இவானை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?”

“நீ கவலைப்படாம போயிட்டு வா டியர்! நான் பார்த்துக்கறேன்”

அப்போது அங்கே வந்த இவான் “சித்தி! நானும் உங்க கூட வரவா?” என்றான்.

ஆர்யனை ஒருமுறை பார்த்து தயங்கியவள் “வாயேன் தேனே!” என்றாள், ‘தனக்கும் இவானை அழைத்து செல்ல இப்போது உரிமை இருக்கே’ எனும் நினைப்பில்.

ருஹானா, கரீமா, சல்மா மூவரும் ஆர்யனையே பார்க்க, அவன் முகம் இறுகி யோசித்துக்கொண்டே இருந்தான். 

மிஷால் பேர் கேட்டதிலிருந்து அவன் ஒரு கவளம் கூட உண்ணவில்லை. அந்த பெயர் தந்த பொறாமையை விழுங்கிக்கொண்டு முயன்று அமைதி காத்தான்.

“வா அன்பே! நமக்கு நிறைய வேலை இருக்கு” என ருஹானா கிளம்ப, “பாதுகாவலர்களை கூட்டிட்டு போ!” என்றான் ஆர்யன்.

ருஹானா தலையாட்ட, ஆர்யன் ஜாஃபரை அழைத்து காரை எடுக்க சொன்னான்.

நடப்பதை நம்ப முடியாமல் சகோதரிகள் ஒருவரையொருவர் பார்க்க கரீமா உதட்டை பிதுக்கினாள்.

“இனிய உணவு!” என்று சொல்லி ருஹானா இவானோடு சென்றபின், ஆர்யன் சில நொடிகள் அசையாது அமர்ந்திருந்தான்.

கடுமையான அவன் முகத்தை கரீமா பார்த்தாலும் ‘அவனுக்கு பிடிக்காவிட்டாலும் ஏன் அவர்கள் செல்ல அனுமதித்தான்?’ என அவளுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆர்யனும் உணவு மேசையிலிருந்து எழுந்து செல்ல, “அக்கா! என்ன நடக்குது இங்க?” சல்மா கிசுகிசுக்க “ஏதோ மாறியிருக்கு. என்னன்னு சீக்கிரம் கண்டுபிடிப்போம்” என கரீமா தலையாட்டினாள்.

————

“ஏன் நீ அமைதியில்லாம இருக்கே வாசிம்?”

“என் நண்பனுக்கு ஒரு சிக்கல் சையத் பாபா”

“என்ன நடந்தது?”

“அவனுக்கு ஒரு கடமை தரப்பட்டது. ஒரு பொண்ணை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு”

“சரி!”

“அந்த பொண்ணுக்கு வேற யாரும் இல்ல. அந்த பொண்ணும் என் நண்பன் அவளை காப்பாத்துவான்னு முழுமையா நம்புறா”

“எல்லாம் சரி தான். உன் தோழன் பிரச்சனை தான் என்ன?”

“என்னன்னா.. இப்போ அவன்… அந்த பொண்ணு மேலே…”

“நீ அந்த பொண்ணை காதலிக்கிறீயா?”

“நான் இல்ல சையத் பாபா. என் நண்பன். இது அவனோட பிரச்னை”

“அவன் தன் நினைப்பை அந்த பொண்ணு கிட்டே சொல்லிட்டானா?”

“இல்ல சையத் பாபா! அவ கூட ஒரே வீட்ல இருக்குறதே அவனுக்கு சங்கடமா இருக்கு. அவளோட முகத்தை பார்க்கவும் தயக்கமா இருக்கு”

“இவ்வளவு முட்டி மோதினா இரக்கம் வாய்ந்த உன் நண்பனே ஒரு நாள் தன் மனசை வெளிப்படுத்திடுவான். நீ வீணா கவலைப்படாதே. இப்போ இந்த மட்டன்பாலை சாப்பிடு”

——-

மிஷால் உணவகம்..

“அன்பே! மட்டன் கட்லெட் உனக்கு பிடிச்சிருக்கா?” சமையலறையில் இருந்து வெளியே வந்த ருஹானா, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இவானிடம் கேட்டாள்.

“ரொம்ப.. ரொம்ப.. சித்தி! உங்க வேலை முடிஞ்சிடுச்சா?”

“இல்ல கண்ணே! நீ என்ன செய்றேன்னு பார்க்க வந்தேன். அப்படியே ஒரு காபி பிரேக்” என்று ருஹானா சிரிக்க, இவானுக்கு பழசாறு கொண்டு வந்து வைத்த மிஷால் “அப்படியே நம்ம மடாபா வாசம் வீசுதுல. உன் கை பக்குவம் அபாரம், ருஹானா” என்று அவள் எதிரே அமர்ந்தான்.

ருஹானா மெல்ல சிரிக்க “அடடா! உன் காப்பியை மறந்திட்டேனே! இரு! எடுத்துட்டு வரேன்” என அவள் தோள் தட்டி மிஷால் உள்ளே செல்ல, ருஹானாவிற்கு அந்த தொடுதல் ரசிக்கவில்லை. சங்கடமாய் நெளிந்தாள்.

அவள் இவானோடு பேசிக்கொண்டிருக்கும்போது கையில் கிட்டாருடன் வந்த வாடிக்கையாளன் ஒருவன் ருஹானாவை பார்த்து அப்படியே திகைத்து நின்றுவிட்டான். அவளை கண்டுக்காமல் பார்த்த அவன் முகத்தில் சிரிப்பு பொங்கியது.

காபி கொண்டுவந்து ருஹானா முன் வைத்த மிஷால் அவனை பார்த்துவிட்டு அருகே வந்தான்.

“நல்வரவு யாக்கூப்!” என மிஷால் சொல்லியும் அவன் ருஹானாவிடமிருந்து கவனம் திருப்பவில்லை.

அவனை உலுக்கிய மிஷால் “யாக்கூப்! என்ன ஆச்சு” என கேட்கவும்தான் யாக்கூப் தன்னிலைக்கு வந்தான்.

“உன் உணவு விடுதியில் வர்ற வாசனை அப்படியே ஆளை தூக்குது” என யாக்கூப் சமாளிக்க, மிஷாலுக்கு பெருமை பிடிபடவில்லை.

“ஆமா! நாங்க இன்னைக்கு எங்க கிராமத்து பலகாரங்கள் சமைச்சிருக்கோம்”

உள்ளே செல்லும் ருஹானாவை பார்வையால் தொடர்ந்த யாக்கூப் “மனம் மயக்குது” என்றான்.

——–  

Advertisement