Advertisement

அர்ஸ்லான் அலுவலகம்.

“என்ன ஆர்யன்! கிளம்பிட்டீங்களா?”

“ஆமா ரஷீத்! இவானையும் அவன் சித்தியையும் கூப்பிட போகணும்”

“ஆர்யன்! இவான் சித்திக்கு செய்தி அனுப்புன ஆளை கண்டுபிடிச்சிட்டோம்”

“அப்படியா! யார் அது?”

“உங்க சந்தேகம் சரி தான் நம்ம ஆளு தான்! சோஹைல்!

“ஹார்பர் சோஹைலா?”

“உங்க ஆச்சரியம் எனக்கும் புரியுது. சாதுவான சோஹைலா இப்படி செய்தான்னு. ஆனா நம்ம கோடவுன்ல ரெய்டு நடக்கவும் அவன் தான் ரிப்போர்ட் கொடுத்துருக்கான்”

“அவன் எங்க இருக்கான் இப்போ?”

“கொஞ்ச நாளுக்கு முன்ன தலைமறைவாகிட்டான். நிறைய பணம் அவன் வங்கிக்கணக்குல சேர்ந்திருக்கு. அவன் யாருக்காக வேலை செஞ்சான்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல. நமக்குத்தான் நிறைய எதிரிகள் இருக்காங்களே!”

“ஆமா! நிறைய இருக்காங்க தான். அவங்களை தூர நிறுத்துறது தானே உன் வேலை?”

ஆர்யனின் கோபத்தில் ரஷீத் தலை தன்னைப்போல தரையை பார்த்தது.

“சீக்கிரம் சோஹைலை கண்டுபிடி. அவனை யார் அனுப்பினாங்கன்னு உடனே பாரு”

———

“நீங்க கவலைப்படாதீங்க கரீமா மேம்! சோஹைலை அத்தனை எளிதா கண்டுபிடிக்க முடியாது”

“ஹலோ! எப்படி அத்தனை உறுதியா சொல்றே?”

“அவனுக்கு நிறைய பணம் கொடுத்து தூர தேசத்துக்கு அனுப்பிட்டேன். அவனை இவங்களால தேட முடியாது. அவனை வச்சி உங்களை நெருங்கவும் முடியாது”

“எதுக்கும் நீ அவனை கண்காணிக்கறதை விட்டுடாதே! எனக்கும் சொல்லு” என்று சொல்லி போனை நிறுத்திய கரீமா எதிரே நின்ற சல்மாவிடம் சொன்னாள்.

“இப்போதைக்கு நாம தப்பிச்சிட்டோம், சல்மா. ஆனா இனிமே அதிக கவனமா இருக்கணும்”

  ———- 

சமையலறையில் மும்முரமாக வேலை செய்துக்கொண்டிருந்த ருஹானாவையே பல நிமிடங்கள் ரசித்து பார்த்துக்கொண்டிருந்த மிஷால் “ருஹானா! ஓயாது வேலை செய்றீயே! போதும். இனி நாங்க பார்த்துக்கறோம். கொஞ்சம் ஓய்வெடுத்துக்க. போய் இவானை பாரு” என்றான்.

“ஆமா மிஷால்! அவனுக்கு போர் அடிச்சிருக்கும்” என சொன்னபடி ஏப்ரானை கழட்டி வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக யாக்கூப் கிட்டார் வாசிக்க, இவான் மேசையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தான்.

ருஹானா மகிழ்வுடன் பார்க்க “குட்டிப்பையனுக்கு நல்ல இசை ஞானம் இருக்கு. என்னோட இசைல ஒரு பீட் கூட அவன் தவற விடல” என யாக்கூப் இவானை பாராட்டி பேசினான்.

இவானின் பெருமையை கேட்டதும் ருஹானா முகம் விகசிக்க அவன் தலையை செல்லமாக தடவினாள்.

“எந்த இசைக்கருவினாலும் அழகுப்பையனு எளிதாக கத்துக்குவான்” என யாக்கூப் சொல்ல “நான் கிட்டார் கத்துக்க முடியுமா?” என இவான் ஆவலோடு கேட்டான்.

“நீ கத்துக்க ஆசைப்படுறியா அன்பே!” என ருஹானா இவானோடு பேசிக்கொண்டிருக்க, யாக்கூப் அவள் மீது வைத்த கண்ணை திருப்பவில்லை.

“நீங்க அறிமுகம் ஆகிட்டீங்களா?” என்றபடி மிஷால் அங்கே வர, யாக்கூப் எழுந்து கை நீட்டி “என் பேர் யாக்கூப்!” என சொல்ல, ருஹானா அவன் கையை பட்டும்படாமலும் பிடித்து “நான் ருஹானா!” என்றாள்.

“யாக்கூப் என்னோட நிரந்தர வாடிக்கையாளர். இசை ஆசிரியர்” என்று மிஷால் சொல்ல, “நீங்க விரும்பினா நான் சின்னப்பையனுக்கு கிட்டார் சொல்லி தரேன்” என யாக்கூப் சொல்ல “இது நல்ல ஐடியா!” என்றான் மிஷால்.

தயங்கிய ருஹானா “நல்லது தான். ஆனா இது நான் மட்டும் முடிவு செய்ய முடியாது” என்றாள்.

“உங்க பயணம்லாம் முடிச்சிட்டு வந்திட்டீங்க?” என மிஷால் கேட்க “ஆமா! எவ்வளவு நாள் தான் ஊர் சுத்துறது? இப்போ இங்கயே தங்கலாம்னு பார்க்கிறேன்” யாக்கூப்பின் பேச்சு மிஷாலிடம் இருந்தாலும் பார்வை ருஹானா மேல் தான் இருந்தது.

ருஹானா அதை கவனிக்காவிட்டாலும், அவர்களை அழைத்துப்போக வந்திருந்த ஆர்யன் அதை பார்த்துக்கொண்டே தான் கோப விழிகளோடு  உள்ளே நுழைந்தான்.

கிட்டார் மீட்ட உதவும் சரத்தை வைத்து விரல்களில் விளையாடியபடியே ருஹானா மேல் பார்வை வைத்திருந்தவனை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது ஆர்யனுக்கு.

ருஹானா அவனை கவனித்தாளா என்று ஆர்யன் ருஹானாவை திரும்பி பார்க்க, அவள் கவனம் முழுதும் இவான் மேல் இருக்க, லேசான நிம்மதி அவனுக்கு.

“ஹே! சித்தப்பா!” என இவான் கூவ, யாக்கூப் ருஹானாவின் மேல் இருந்து பார்வையை விலக்கிய பின்னே, ஆர்யன் இவானிடம் திரும்பினான்.

மிஷால் ஆர்யனை பார்த்து சலிப்போடு உள்ளே செல்ல, ருஹானாவிடம் “போகலாமா?” என ஆர்யன் கேட்க, “நான் என் கைப்பையை எடுத்துட்டு வரேன்” என்று அவள் உள்ளே சென்றாள்.

“சித்தப்பா! அந்த கிட்டார் பார்த்தீங்களா? அந்த அண்ணன் எனக்கு வாசித்து காட்டினார். நான்கூட தாளம் போட்டேன்” என்று சொல்ல, யாக்கூப் எழுந்து சலாம் சொல்ல ஆர்யன் தலையை மட்டும் ஆட்டினான்.

வெளியே வந்த ருஹானா “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, மிஸ்டர் யாக்கூப்!” என அவனோடு கைகுலுக்கி “நான் வரேன், மிஷால்!” என அவனிடமும் சொல்லி விடைபெற்றாள்.

“மிக்க நன்றி ருஹானா!” என மிஷால் சொல்ல, மூவரும் நடக்க “ருஹானா மேம்!” என யாக்கூப் அழைக்க, ருஹானா திரும்பும்முன் ஆர்யன் திரும்பி அவனை பார்த்தான்.

மிஷால் ஒருவன் போதாது என்று இப்போது யாக்கூப்பும் ஆர்யனுக்கு இன்னொரு தலைவலியாக முளைத்திருக்கிறான்.

“என்னோட விசிட்டிங்கார்ட்டை வச்சிக்கோங்க. தேவைப்பட்டா கிட்டார் வகுப்புக்கு என்னை கூப்பிடுங்க” என்று யாகூப் தர, ருஹானா அதை தயக்கமுடன் வாங்கிக்கொண்டாள்.

“சீக்கிரம் போகலனா டிராபிக்ல மாட்டிக்குவோம்” என்று சொன்ன ஆர்யன் இருவரையும் முன்னே நடக்க விட்டு பின்னே சென்றான். 

வெகு நாட்களுக்கு பிறகு காரில் ஆர்யன் அருகே முன்னாடி ஏறி அமர்ந்த ருஹானா, யாக்கூப்பை பற்றி பேச்சை எடுத்தாள்.

“இவானுக்கு இசையில நாட்டம் இருக்கு. அத்தனை பெரிய மாளிகைல ஒத்தை குழந்தையா அவன் தனியா இருக்கான். இசை கத்துக்கறது அவனுக்கு நல்லது. மிஸ்டர் யாக்கூப் கூட எளிதா பழகிட்டான். அப்படிதானே தேனே?” என பின்னால் அமர்ந்திருந்த இவானிடம் கேட்டாள்.

சித்தப்பாவிற்கு பிடிக்கவில்லை என புரிந்து கொண்ட அவன் மெதுவாக தலையாட்ட, “பாருங்க அவர் கார்ட் கூட கொடுத்திருக்கார். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என கேட்டாள்.

“வேணாம்! மியூசிக் டீச்சர் வேணும்னா நான் ஏற்பாடு செய்றேன். இப்படி அறிமுகம் இல்லாதவங்க வேணாம்” என்று ஆர்யன் முடித்துவிட்டான்.

அதன்பின் காரில் விரும்பத்தகாத மௌனமே நிலவியது.

——

வீட்டிற்கு வந்ததும் ஆர்யன் ரஷீத்திற்கு போன் செய்து யாக்கூப் பற்றி விசாரிக்க சொன்னான்.

“வியாபார சம்பந்தமாகவா ஆர்யன்?”  

“இல்ல, அவன் மியூசிக் டீச்சர்ன்னு அறிமுகம் ஆகியிருக்கான். ஆனா அவன் எதையோ மறைக்கிறான்னு எனக்கு தோணுது”

“எதாவது சான்று இருக்கா?”

“இல்ல, என் மனசுக்கு சரியா படல. அவ்வளவு தான்”

“சரி ஆர்யன்! நான் உடனே அவனை பத்தி முழுமையா விசாரிக்கறேன்”

  ——-

ஆர்யன் தன் மடிக்கணினியில் யாக்கூப் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்க, ருஹானா உள்ளே வேகமாக வந்தாள்.

வேகமாக கணினியை மூட போனவன் அவள் தப்பாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று திரையை மறைத்து நின்று கொண்டான்.

“நீங்க கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டீங்களா?” சண்டை போடுபவள் போல ருஹானா கேட்க “என்ன சொல்றே?” என ஆர்யன் புரியாது வினவினான்.

“நேத்து தான் நாம பேசினோம், இவான் சம்பந்தப்பட்டதை ரெண்டு பேரும் சேர்ந்து செய்யணும்னு”

திரையை நன்றாக மறைத்து நின்று கொண்டான்.

“ஒப்பந்தம் போட்டு ஒருநாள் கூட ஆகல. அதுக்குள்ள அதை நீங்க மீறுறீங்க. பழைய ஆர்யன் அர்ஸ்லான் போல நடந்துக்கறீங்க. வாக்கு தவறுறீங்க” கோப உணர்ச்சி மேலோங்கி இருந்தது.

“நான் சொன்ன சொல்லை காப்பாத்துவேன். ஆனா இது வேற. என்னோட தீர்மானம் வேண்டாம் தான். என் மேல நம்பிக்கை வை” தன்மையாக எடுத்து சொன்னான்.

இப்போதெல்லாம் நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. ருஹானா தான் கோபப்படுகிறாள். ஆர்யன் சாத்வீகமாக இருக்கிறான், அவள் சம்பந்தப்பட்டவரையில்.

“ஏன் என்னோட முடிவு தப்பு. உங்க முடிவு சரின்னு நான் கேட்கலாமா?”

“ஏன்னா இது இவானோட நல்லதுக்கு தான்” 

‘அவன் உன்னை பார்த்த பார்வை எனக்கு பிடிக்கவில்லை’ என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா?

“ஏன் வேண்டாம்னு ஒரு காரணம் சொல்லுங்க”

ஆர்யன் ருஹானாவின் தலையில் ஒட்டியிருந்த ஒரு பச்சை நிற நூலிழையை கண்டான்.

Advertisement