Advertisement

“போங்க, இந்த ராட்சசன் என் கனவுல வந்து என்னை பயமுறுத்துவான்” என்று அவள் பயப்பட, “உனக்காக எந்த ராட்சசனுக்கு எதிராவும் நான் சண்டை போட்டு உன்னை பாதுகாக்க மாட்டேனா?” என்று ஆர்யன் காதலாக கேட்க, ருஹானாவின் முகம் தெளிந்தது.

“உனக்காக என் கூடவே நான் போராடி வெற்றி பெற்றேனே!” என்று அவன் ஆழமாய் அவள் கண்களுக்குள் பார்க்க, அவள் உருகி கரைந்து போனாள்.

நெருக்கமான நெருக்கத்திலேயே இருவரும் படம் பார்த்து முடிக்க, ஆர்யன் முக்கியமான ஒரு வேலை இருப்பதாக சொல்லி “நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன். அதுவரை நல்லா தூங்கி ஓய்வெடு” என்றவன் “உனக்கு  பிடித்த மடாபா உணவு வகைகள் செய்ய சாராட்ட சொல்லிட்டு போறேன்” என்று எழுந்து கொண்டான்.

“மடாபா உணவுகளா?” என்று சந்தோசமாக நிமிர்ந்து அமர்ந்த ருஹானா “நான் சாரா அக்காக்கு உதவி செய்வேன்” என்று வேகமாக சொல்ல, அவளை முறைத்த ஆர்யன் “எங்கயும் போகக்கூடாது நீ! இப்போ உன்னோட உடம்புல கவனம் செலுத்து. குணமானதும் உனக்கு என்ன செய்யணுமோ அதை செய். சரியா?” என்றான்.

“சரி! நான் உதவிக்கு போகல” என்று இறங்கிய குரலில் அவள் சொல்ல, ஆர்யன் செல்லக் கோபத்துடன் தலைசாய்த்து அவளை நம்பாமல் உற்று பார்த்தான்.

“ஏன் அப்படி பார்க்கறீங்க? நான் தான் போகமாட்டேன்னு சொல்லிட்டேனே! கவலைப்படாதீங்க. உங்களுக்கு நேரமாகுது. நீங்க கிளம்புங்க” என்று அவள் சொல்ல, “என் போன் பக்கத்துல தான் வச்சிருப்பேன். எதுவா இருந்தாலும் உடனே எனக்கு கூப்பிடு” என்று சொல்லி ஆர்யன் சென்றான்.

——–

வேலை முடித்து மாளிகைக்கு வந்த ஆர்யன் தன்னிடம் குளிராடையை வாங்கிய ஜாஃபரிடம் “நல்லா ஓய்வெடுத்தாளா? எதும் பிரச்சனை இல்லையே?” என மேலே பார்த்தவாறு கேட்டான்.

“நீங்க ருஹானா மேடத்தை பத்தி கேட்கறீங்கன்னா, அவங்க ஒரு மணி நேரமா சமையலறையில வேலை செய்றாங்க. தக்காளி பத்தலைன்றது தான் இப்போ அவங்க பிரச்சனை” என்று சிரிப்போடு ஜாஃபர் சொல்ல, “ம்ப்ச்!” என்று கோபத்தை காட்டிய ஆர்யன் விறுவிறுவென சமையலறை நோக்கி நடந்தான்.

சாய்ந்து நின்றுகொண்டு மும்முரமாக சமையல் செய்துக் கொண்டிருந்த ருஹானா, ஆர்யனை பார்த்ததும் அதிர்ந்து போனாள். அவன் ஒன்றும் பேசாமல் புருவங்களை சுருக்கி பார்த்த பார்வையில் செய்வதறியாது நின்றாள். ஆர்யனின் அமைதி தொடர, சுதாரித்துக் கொண்ட ருஹானா “நான் இவ்வளவு நேரம் உட்கார்ந்து தான் இருந்தேன். நீங்க சாராக்கா கிட்டே கேளுங்களேன்” என்று சொன்னவள் “ஆமா தானே சாராக்கா?” என்று சாராவை துணைக்கு அழைத்தாள்.

சாரா ஒன்றும் சொல்லாமல் சிரிக்க, ஆர்யன் ருஹானாவை நெருங்கவும், ஜாஃபர் சாராவிடம் கண்ஜாடை செய்ய இருவரும் வெளியே சென்றனர்.

தலைகுனிந்து நின்றிருந்த ருஹானா நிமிர்ந்து பார்த்தாள். ஆர்யனின் பார்வை மாறாதது கண்டு “எனக்கு ரொம்ப போரடிச்சது. அதான் ஜாஃபர் அண்ணா உதவியோட இங்க வந்தேன். பாருங்க எனக்கு வலியே இல்ல” என்று சொன்னபின்னும் அவன் மௌனமாக இருக்கவும் அவள் விழித்தாள்.

ஆர்யன் அவள் சமைத்து கொண்டிருந்த உணவை பார்க்கவும், சட்டென “உங்களுக்காக தான் குருடோல்மா செய்றேன், உங்களுக்கு பிடிக்குமே!” என்று ருஹானா சலுகையாக சொல்லி பார்க்க, அவன் அசரவில்லை.

அவளை மேலும் நெருங்கியவன் குனிந்து அவளை தூக்கினான். திகைத்து போன ருஹானா “என்ன செய்றீங்க?” என்று பதறிப்போய் கேட்டாலும் அவள் கை தானாக அவன் கழுத்தை சுற்றி வளைத்தது. அவன் அவளோடு நகர, “இருங்க! டோல்மா என்ன ஆகும்? விடுங்க” என்று அவள் கேட்க, “உன்னைப் போல பிடிவாதக்காரியை நான் பார்த்ததே இல்ல” என்று சொன்ன ஆர்யன் அவளை தூக்கிக்கொண்டே வெளியே சென்றான்.

சமையலறைக்குள் வந்த சாரா “மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்!” என்று சந்தோசமாக சொல்ல, ஜாஃபர் “அல்லாஹ் இவங்க மகிழ்ச்சியை பாதுகாக்கட்டும்” என்றான்.

படிக்கட்டில் ஆர்யன் அவளை சுமந்து செல்ல, ஒரு நிமிடம் தயங்கிய ருஹானா பின் வசதியாய் அவன் மேல் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். ‘கையளவு இதயத்திலேயே சுகமாக சுமந்திருப்பவனுக்கு கரங்களில் மட்டுமென்ன சுமையாகவா தெரியப் போகிறேன்?’

                                                  ———-

உணவு மேசை முழுவதும் மடாபாவின் சுவைமிகு உணவுகள் நிரம்பி இருக்க, இவான் “சித்தி! சூப்பரா இருக்கு! இது எல்லாமே எனக்காகவா செஞ்சீங்க?” என்று கேட்க, “ஆமா அன்பே! எல்லாம் உனக்காக தான்” என்று ருஹானா சொன்னாள்.

“குருடோல்மா எனக்காக தானே செய்தே?” என ஆர்யன் ருஹானாவின் புறம் குனிந்து மெல்லமாக கேட்க, அவளும் சிரித்தபடி ஆமென தலையாட்டினாள்.

அம்ஜத் “இப்போ இவ்வளவு வகைகளோடு சாப்பிடுறோம், ஆனா முன்ன இப்படி இல்ல. ஆர்யன் பேக்கரில வேலை செய்வான். ஒரு நாள் பூரா கட்டைகளை உடைச்சி கொடுத்து சம்பளமா ஒரு ரொட்டி வாங்கிட்டு வருவான். சிவந்து கனிஞ்சி போன அவனோட கையால சூடான ரொட்டியை எங்களுக்கு தருவான். அண்ணன், தம்பிங்க நாங்க மூணுபேரும் அதை சந்தோசமா பகிர்ந்து சாப்பிடுவோம். அதை போல சுவை வேற எதுலயும் இல்ல” என்று பழைய கதையை பேசினான்.

“இப்பவும் அப்படித்தான் அண்ணா. நாம குடும்பமா சேர்ந்து சாப்பிடுற எதுவும் ருசியா தான் இருக்கும்” என்று ஆர்யன் சொல்ல, அவன் சிறுவயது உழைப்பை கேட்டு நெகிழ்ந்து போன ருஹானா ரொட்டியை எடுத்து பாதியாக பிய்த்து ஆர்யனுக்கு ஒரு பாதியை கொடுத்தாள். ருஹானாவின் கையை பிடித்துக் கொண்ட ஆர்யன், அதை சந்தோசமாக சாப்பிட்டான்.

“நம்ம ஒற்றுமையும் சந்தோசமும் நீடிச்சி நிலைக்கணும். அதுக்கு இடைஞ்சலா யார் வந்தாலும் அதை அகற்றியே ஆகணும்” என்று அம்ஜத் சொல்ல, தங்களுக்குள் மூழ்கி இருந்த ஆர்யனும் ருஹானாவும் அதை கவனிக்கவில்லை. ஆனால் கரீமாவின் குற்றமுள்ள நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

——–

இவானை தங்களது அறைக்கு வர சொல்லிய ருஹானா அவனுடன் நாடுகள், இடங்கள், விலங்குகள், பூக்கள் ஆகியவற்றின் பெயர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டாள். அதன் மூலமாகவாது ஆர்யனை பேசவைத்து அவர்கள் பயணம் செய்யப்போகும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம் எனும் அவளின் முயற்சி பலனளிக்கவில்லை.

ஆர்யன் எந்தவித உணர்ச்சியும் காட்டாமலேயே அவர்களுடன் சேர்ந்து அந்த விளையாட்டை விளையாடி முடித்தான்.

———-

கரீமா தனது திருமண மோதிரத்தை கழட்டி அம்ஜத் பார்க்கும்வண்ணம் மேசையில் வைத்தாள். பெட்டியை எடுத்து அதில் அவளது உடைகளை அடுக்க ஆரம்பித்தாள்.

அம்ஜத் கேள்வியாய் பார்க்க, கரீமா “நான் இன்னைக்கு நேத்து உங்க கூட இல்ல, அம்ஜத் டியர். நீங்க சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம கஷ்டப்பட்ட காலத்துலயும் உடன் இருந்திருக்கேன். அப்போ கூட இந்த மோதிரத்தை நான் கழட்டல. ஆனா எப்போ உங்களுக்கு என்மேல சந்தேகம் வந்ததோ அப்போ இதை போட்டுருக்கறதுல அர்த்தமே இல்ல. என்னை நீங்க நம்பாதபோது உங்க கூட வாழ்றதும் வீண் தான். நான் போறேன்” என்று நாடகத்தை ஆரம்பித்தாள்.

அம்ஜத் கவலையாக பார்க்க, “நான் என்னை கூட கவனிச்சுக்கிட்டது இல்ல, உங்களை தான் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிட்டேன். உங்க மனசை தேத்தி உங்களை குணமாக்கி இருக்கேன். எப்பவும் உங்க சந்தோசத்தை தான் பெருசா நினைச்சிருக்கேன்” என்று கரீமா அடுக்கிக்கொண்டே போக, அவன் குழம்பினான்.

“முன்னாடி தஸ்லீம் அவளா தான் கீழே விழுந்தா. நாங்க ரெண்டு பேரும் கோபமா பேசிட்டு தான் இருந்தோம். அவ தான் ஆவேசம் வந்து என்னை பிடிச்சி இழுக்க வந்தா. நான் அவளை தள்ளிவிடல. இப்போ ருஹானா விழும்போது நான் அங்க இல்லவே இல்ல. அங்க கிடந்த என்னோட கம்மலை பார்த்துட்டு நீங்க என்மேல சந்தேகப்படுறீங்க. இதுக்கு மேல நான் இங்க இருக்க முடியாது” என்று அவள் பெட்டியை தூக்க, அம்ஜத் அவளை தடுத்தான்.

“நீ சொல்றது சரிதான். நான் தான் குழம்பி போயிட்டேன். என்னை விட்டு போகாதே, கரீமா. நீ இல்லாம என்னால இருக்க முடியாது” என்று அம்ஜத் அவள் கையை பிடிக்க, கரீமாவிற்கு நிம்மதியானது.

“இல்ல அம்ஜத் டியர்! என்னாலயும் உங்களை விட்டு பிரிய முடியாது” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

‘புது மாத்திரைகளை சாப்பிட்டு அம்ஜத்தோட உடல்நிலையும், மனநிலையும் நல்லா தேறிவருது. ஞாபக சக்தியும் அதிகம் ஆகுது, சுயமா சிந்திக்க ஆரம்பிக்கிறான். அது எனக்கு ஆபத்து. மருந்துகளை கொடுக்காம இருக்க ஒரு வழி தேடணும்’ என்று கரீமா யோசிக்கலானாள்.

——–

விமான பயணசீட்டுகளை ஆர்யனிடம் கொடுத்த ரஷீத் “எல்லா டிக்கெட்ஸ்ஸும் இதுல இருக்கு, ஆர்யன்! தங்குற இடம், நீங்க கேட்ட கார் எல்லாம் ஏற்பாடு செய்திட்டேன். இந்த ட்ரிப் ருஹானாக்கு ரொம்ப சந்தோசம் தரும்னு நான் நம்புறேன். அதுக்குள்ளே அவங்க கால் சரியாகிடும் தானே?” என கேட்டான்.

“கண்டிப்பா!” என்று ஆர்யன் மகிழ்வோடு சொல்ல, நண்பனின் மகிழ்ச்சி கண்டு ரஷீத்தும் மகிழ்ச்சியோடு விடைபெற்றான்.

ஆர்யன் அவற்றை பத்திரப்படுத்தும் நேரம் ஊன்றுகோலின் உதவியோடு ருஹானா உள்ளே வர, ஆர்யன் வேகமாக இழுப்பறையை மூடினான்.

“என்ன மறைக்கிறீங்க என்கிட்டே?”

“ஒண்ணுமில்லயே. சில ஆவணங்களை உள்ளே வச்சேன்.”

“நமக்கு நடுவுல ஒளிவுமறைவு இருக்கக்கூடாதுன்னு நாம முடிவு செய்திருந்தோமே?”

ருஹானாவின் புத்திசாலித்தனத்தை உள்ளூர மெச்சிய ஆர்யன் “நான் எதும் மறைக்கலயே” என்று சொல்லும்போதே அவனுக்கு சிரிப்பு வந்துவிட, பேச்சை மாற்றினான்.

“நீ ஏன் ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கே?” என்று கட்டைகளை வாங்கி மேசை மேல் வைத்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டான். அவளை அரவணைக்கும் வாய்ப்பை ஆர்யன் தேடிக் கொண்டே இருக்கிறான் அல்லது உருவாக்கிக்கொள்கிறான். அவளை ஸ்பரிசிக்கும் எந்தவொரு தருணத்தையும் அவன் தவறவிடுவதே இல்லை.

அவளை படுக்கையில் விட்ட ஆர்யன் அவளின் காலணிகளை கழட்டி அவளுக்கு வசதி செய்து கொடுக்க, இருவர் கண்களும் வேறு பொருளை காணாமல் தங்களது இணையையே கவ்வி நின்றன. அவளுக்கு பிடித்த நீலநிறத்தில் அவன் உடை அணிந்திருக்க, அவனுக்கு பிடித்த கருப்பு நிறத்தில் அவள் ஆடை இருந்தது.

“மர்மமா வச்சிருக்கீங்களே? என்கிட்டே சொல்ல மாட்டிங்களா?” என அவள் சிணுங்கி கேட்க, அவளின் அழகிய கண்களின் கெஞ்சுதலுக்கு அசைந்து கொடுத்த ஆர்யன் சொல்லிவிட தான் ஆசைப்பட்டான். ஆனால் வலியிலேயே உழன்று கொண்டிருக்காமல் தீவிரமான பயிற்சிகளை தொய்வின்றி செய்ய இந்த இனிய அதிர்ச்சி அவளுக்கு ஒரு உத்வேகம் தரும் என தீர்மானித்த ஆர்யன் அவளின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தான்.

Advertisement