Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 139

ருஹானா விரைவில் எழுந்து நடக்க ஊக்கம் தந்து ஆர்யன் ரகசிய திட்டம் ஒன்றை பற்றி கோடி காட்டினான். “நீங்க என்னன்னு சொன்னா நான் வேகமாக எழுந்து நடப்பேன் தானே?” என ருஹானா கெஞ்சி கேட்டும் சொல்ல மறுத்துவிட்டான்.

“நீ எல்லா பயிற்சிகளையும் சரியா செய். அப்புறம் சொல்றேன்.”

“ஒரு குறிப்பு கொடுங்களேன், ப்ளீஸ்!”

“எதுவும் இல்ல. அது நடக்கற நேரம் நீயே என்கூட வந்து தெரிஞ்சிக்குவே” என்று அவன் மறுத்தான். மனைவி தன்னுடன் நெருக்கமாக உரிமையாக பேசுவது அவனுக்கு மிகுந்த உல்லாசத்தை தந்தது. அதை நீட்டிக்கவே விரும்பினான்.

ருஹானாவிற்கு படிக்க புத்தகங்களை கொண்டுவந்த நஸ்ரியா கதவை தட்டாமல் உள்ளே நுழைய, அங்கே ஆர்யனை கண்டு அச்சம் கொண்டாள். ஆர்யன் வெளியே சென்றவுடன் ருஹானாவிடம் அவள் மன்னிப்பு கேட்டாள்.

“ஏதோ யோசனையில உள்ள வந்துட்டேன், ருஹானா! வேலை நிறைய இருக்கு. என் வகுப்பு முடிச்சிட்டு நான் கமிஷனர் வீட்டுக்கு போகணும். அங்க சமையல் செய்யணும். தன்வீரும், வாசிம் சாரும் சாப்பிட வருவாங்க.”

“பரவாயில்ல நஸ்ரியா! இப்போலாம் உனக்கு வேலைகள் அதிகம். ஆனா தன்வீருக்கு எனக்கு அடிப்பட்டு இருக்கறதை சொல்லிடாதே. கவலைப்படுவான். உடனே ஓடி வருவான். பர்வீன் அம்மாக்கு தெரிஞ்சா என்னையே நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க.”

“ஆமா ருஹானா! தன்வீர் ரொம்ப நல்லவர். நான் சொல்லல. சரி, நான் போயிட்டு சாயந்தரம் வரேன். சின்ன சார் சாப்பிட்டுட்டார். ஜாஃபர் அண்ணா கூட விளையாட்டிட்டு இருக்கார். சித்தியை தொல்லை செய்யமாட்டேன்னு சொல்லிட்டு இருந்தார்.”

“அவனோட சித்தப்பா தான் ஏதோ சொல்லி இங்க அவனை வரவிடாம செய்திருக்கணும். நான் பேசுறேன் அவர்ட்ட. நீ போயிட்டு வா.”

——–

கரீமாவிற்கு அம்ஜத்தை பொத்தி பாதுகாப்பதே பெரிய வேலையாக இருந்தது. அவனுக்கு எவ்வளவு தூரம் விஷயம் தெரியும் என அறிந்துகொள்ள பலவிதங்களில் அவனிடம் பேசி பார்த்தும் ஒரு பயனும் இல்லை. ஆர்யனிடம் பேசவிடாமல் அவன் வாயை அடைக்க என்ன வழி என யோசித்து அவளுக்கு தூக்கம் கெட்டது.

தோட்டத்தில் அவனை பார்க்க போனால், அம்ஜத் அவளிடமிருந்து தப்பி உள்ளே வந்தான். அவள் வேகமாக பின்தொடர, அவனோ படிக்கட்டில் இறங்கும் சாராவிடம் “பார்த்து நடங்க, சாரா! விழுந்துட போறீங்க, ருஹானாவை போல” என எச்சரிக்கை செய்தவன், கரீமாவின் மேல் ஒரு கோபப்பார்வையை வீசிவிட்டு ஆர்யன் அறைப்பக்கம் செல்ல, கரீமா நடுங்கி போய் நின்றாள்.

ஆர்யன் வெளியே வர “ருஹானா எப்படி இருக்கா, ஆர்யன்? நான் அவளை பார்க்கத்தான் வந்தேன்” என்று அம்ஜத் கேட்க, கரீமா படிக்கட்டின் கீழேயே நின்று கொண்டு அவர்கள் பேசுவதை பயந்தவாறு கேட்டாள்.

“ஓய்வெடுத்திட்டு இருக்கா, அண்ணா! பயிற்சிகள் கடுமையா இருக்கு. சோர்வாகிட்டா” என்று ஆர்யன் அண்ணனிடம் பேசிக்கொண்டே கீழே இறங்க, அம்ஜத் அவன் கையைப்பற்றி தடுத்தான். “ஆர்யன்! இந்த படிக்கட்டுகள் வேணாம்.”

“ஏன் அண்ணா? என்ன ஆச்சு?”

“இது நல்லது இல்ல, பாம்பு போல மோசம். தஸ்லீம் விழுந்தா. இப்போ ருஹானா!” மிரட்சியுடன் பேசும் அண்ணனின் தோள் மேல் கையை போட்டான் ஆர்யன்.

“அது தற்செயலா நடந்த ஒற்றுமை, அண்ணா! ருஹானாக்கு எதும் இல்ல. நீங்க கவலைப்படாதீங்க.”

தம்பியின் அணைப்பிலேயே இறங்கிவந்த அம்ஜத் “நான் உன்கிட்டே பேசணும்” என்று சொல்ல, ஆர்யனும் அவனோடு சோபாவில் அமர்ந்தான். கரீமா அவர்களின் பேச்சுவார்த்தையை எப்படி தவிர்ப்பது என திணற, அப்போது உள்ளே வந்த ரஷீத் ஒரு முக்கிய விஷயம் என ஆர்யனை அழைத்து சென்றான். கரீமாவின் உயிர் மீண்டது.

———-

அலுவலகம் சென்று திரும்பிய ஆர்யன் வரவேற்பறையில் அமர, சாரா அவனுக்கு காபி கொண்டுவந்து கொடுத்தார். “நஸ்ரியா அவ படிப்பை மட்டும் பார்க்கட்டும், சாரா! அவளுக்கு வேலைகள் கொடுக்காதீங்க, அவளுக்கு சம்பளம் தவறாது கிடைச்சிடும். உங்க உதவிக்கு நான் ஆள் ஏற்பாடு செய்றேன்”  என்று சொல்லி ஜாஃபரை அழைத்தான்.

கண்கலங்கி நன்றி சொன்ன சாரா “இல்ல, ஆர்யன் சார்! நானே பார்த்துக்குவேன்” என்று மறுத்தாலும், ஆர்யன் ஜாஃபரிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க சொன்னான்.

அப்போது அழைப்புமணி இசைக்க, கதவை திறக்க விழைந்த ஜாஃபரை தடுத்த ஆர்யன் “சையத் பாபாவா தான் இருக்கும்” என்று சொல்லி தானே சென்று வாசற்கதவை திறந்து அவரை புன்னகையுடன் வரவேற்றான்.

ருஹானா தனது கால்களை அழுத்தி பார்த்துக்கொண்டு இருக்க, உள்ளே வந்த ஆர்யன் “உன்னை பார்க்க ஒரு விருந்தாளி வந்திருக்கார்” என்று மகிழ்ச்சியாக அறிவிக்க, அவளும் ஆவலுடன் எட்டி பார்த்தாள்.

சையத் நுழையவும் “சுபஹானல்லாஹ்!” என்ற ருஹானா அவரை அன்புடன் வரவேற்றாள். மூவரும் பேசிக்கொண்டு இருக்க, “சீக்கிரம் குணமாகி எழுந்து வா, மகளே!” என்ற சையத் அவள் மனதிற்கு ஆறுதலாக பேசினார்.

“சில கஷ்டங்கள் நம்மை தெளிவுபடுத்திக்க கூட ஏற்படும். நீங்க ரெண்டு பேர் கிடையாது, ஒருத்தர் தான். இப்பவும் சேர்ந்தே இதுல இருந்து வெளிய வருவீங்க. மகளே! கடினமான இதயத்துல இடம் பிடிச்ச உனக்கு இதெல்லாம் சிரமமே இல்ல.”

ரூமி எனும் சூபி ஞானி எழுதிய ‘பாரசீக மொழியின் குர்ஆன்’ என அழைக்கப்படும் ‘மஸ்னவி’ கவிதை புத்தகத்தை ருஹானாவிடம் கொடுத்த சையத் “நடக்க முடியாத இந்த சில நாட்களுக்கு, உன் மனம் அமைதி அடைய இது உபயோகமா இருக்கும். நீங்க ரெண்டுபேரும் இன்னும் ஆழமா உங்களை புரிந்து கொள்ள இந்த நேரத்தையும், இந்த புத்தகத்தையும் பயன்படுத்திக்கங்க” என்று சொல்ல, ருஹானா நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தாள்.

“நான் வெளிநாட்டுக்கு கிளம்பறேன். ஒரு மாதம் கழித்து தான் வருவேன். நான் வர்றதுக்குள்ள நீ நல்லா நடந்திருக்கணும், மகளே! என்னை அங்க தொடர்பு கொள்ளவும் முடியாது. அதனால நான் அகாபா வந்ததும் கேட்கற முதல் செய்தி உன்னோட நற்செய்தியா தான் இருக்கணும், சரியா?” என சையத் கேட்க, ருஹானா புன்னகையுடன் தலையாட்டினாள்.

——-

நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த ஆர்யனை ருஹானா மெல்ல தட்டி எழுப்ப, “என்ன, கால் வலிக்குதா?” என அவன் பதறி எழுந்து கொள்ள, அவளோ “என்ன சர்ப்ரைஸ் அது?” என்று கேட்க, அவன் தூக்கக்கலக்கத்தில் “உன்னை ஒரு ஊருக்கு கூட்டிட்டு போகப்போறேன்” என்று சொல்லி திரும்ப படுத்துக்கொண்டான்.

“காரா, புகைவண்டியா? நாம எதுல போகப்போறோம்?” ருஹானா ஆவலாக கேட்டாள்.

“தூக்கத்தில என்னை பேச வைக்கறியா? நான் தன்வீர்ட்ட சொல்லி உன்னை அவங்க டீம்ல சேர்க்கறேன். குற்றவாளிகளை விசாரிக்கும்போது நீ அவனுக்கு ரொம்ப உதவியா இருப்பே!” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்ட ஆர்யன் அவளை நினைத்துக்கொண்டே துயிலில் ஆழ்ந்தான்.

கற்பனையுலகும் பிடித்துப்போனது 

அதிலும் நிலவைபோல் 

நீயே உலா வருவதால்..!

உறங்கும்போது கனவிலும்

விடிந்தவுடன் நினைவிலும்

வாழும்வரை உயிரிலும் நீயே!

தூங்கும் அவனை ரசித்து பார்த்த ருஹானா “என் வாழ்க்கைல நீங்க தான் அழகான இனிய சிறந்த சர்ப்ரைஸ்!” என்று புன்னகைத்தாள்.

——–

ஆர்யன் தன் கழுத்தை நெரிப்பது போல கனவு கண்டு கத்திக்கொண்டே எழுந்த கரீமா பக்கத்தில் அம்ஜத்தை காணாமல் மேலும் திகைத்தாள். வேகமாக கீழே வந்தவள் தோட்டத்தில் அம்ஜத் புது தோட்டக்காரனோடு வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு திரும்பினாள்.

இந்த போராட்டத்தில் இரண்டு நாட்களாக பலமுறை அழைத்த சல்மாவின் அழைப்புகளை தவறவிட்டாள், கரீமா.

——–

தாமதமாக வந்து கொண்டிருந்த மரியானா ஆர்யனுக்கு போனில் அழைத்து அவள் வருவதற்குள் பயிற்சிகளை தொடங்குமாறு சொல்ல, ஆர்யன் தயாராக, ருஹானா தயங்கினாள்.

அவனின் தொடுகை அவளுக்கு இன்ப அவஸ்தையை தர, ஆர்யனின் கூர்ந்த பார்வையும் எதிர்கொள்ள முடியாமல் அவளை வெட்கம் பிடுங்கி தின்றது.

ஆர்யன் அவளை தாங்கி பிடித்திருந்தும் அவள் கால்களை அசைக்கவும், தள்ளவும், தூக்கவும் சிரமப்பட்டு ஓய்ந்து போனாள். “அம்பு பலகைக்கு முன்னாடி தைரியமா வந்து நின்ன ருஹானா நீயா? ஓடிவந்து எனக்கான குண்டை தாங்கின ருஹானா நீ தானா? துப்பாக்கி சண்டையில நடுவுல நடந்து வந்தவளா நீ?” என கிண்டலாக கேட்பதுபோல ஆர்யன் நடிக்க, ருஹானா அவன்மீது கோபக்கணையை வீசினாள்.

“ஓஹ்! அடுத்தவங்களுக்குனா ஓடிவந்து முன்னாடி நிற்பே! உனக்குன்னா எதுவும் முயற்சி செய்ய மாட்டியா?” என அவளை அவன் வெறுப்பேற்ற, அவன் கையில் இருந்த அவள் காலால் பலங்கொண்ட மட்டும் எத்தினாள். உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்ட ஆர்யன் “இப்போ எப்படி இத்தனை சக்தி வந்துச்சி?” என்று கேட்டான்.

“ம்.. பழைய முரட்டு ஆர்யன் அர்ஸ்லானை மனசுல நினைச்சேன்” என்று அவள் எரிச்சலாக சொல்ல, புன்னகை செய்த ஆர்யன் அப்படியே அவளை அனைத்து பயிற்சிகளையும் செய்ய வைத்தான்.

“நம்மோட இன்ப தருணம் தள்ளிட்டே போகுதேன்னு உனக்கு தோணலயா? சீக்கிரம் நீ எழுந்து நடக்க வேண்டாமா?” என்று அவளை வெட்கப்படுத்தியும் வேலை வாங்கினான்.

மரியானா வந்ததும் சிகிச்சையை தொடர, ஆர்யன் அவளிடம் தனிமையில் ஒரு வாரத்தில் ருஹானா நடக்க முடியுமா என உறுதிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.

அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டு அம்ஜத்தின் அருகே அமர்ந்தான். “ஏன் அண்ணா வருத்தமா இருக்கீங்க?” என்ற அவன் கேள்விக்கு அவனுக்கு முந்திக்கொண்டு கரீமா பதிலளித்தாள். “ருஹானாவுக்கு அடிபட்டதால அவர் கவலையா இருக்கார், ஆர்யன்!”

“அண்ணா! அவ வேகமா குணமாகிட்டு வர்றா. இன்னும் ஒரு வாரத்துல நடந்திடுவா. நீங்க நிம்மதியா இருங்க!”

“ருஹானா தான் நம்ம வீட்டோட மகிழ்ச்சியின் ஊற்று. அவ சந்தோசமா இருந்தா தான் நாம எல்லாரும் சந்தோசமா இருக்க முடியும், ஆர்யன்! அவளை கவனமா பார்த்துக்கோ!” என்று கரீமாவை பார்த்துக்கொண்டே அம்ஜத் எச்சரிக்கை செய்தான்.

——-

மடிக்கணினியுடன் ருஹானாவின் அருகே அமர்ந்த ஆர்யன் சினிமா பார்க்கலாம் என சொல்ல, மகிழ்ச்சியுடன் தலையாட்டிய ருஹானா, அவன் திகில் படமொன்றை இயக்க, முகம் சுருக்கினாள்.

“உன் மனசை திசை திருப்ப இது உதவும். உனக்கு எதுக்கு பயம்? நான் தான் உன் பக்கத்துல இருக்கேனே!” என்று அவளுக்கு அவன் தைரியம் சொல்ல, அவளும் சம்மதித்தாள்.

படத்தில் பயமூட்டும் காட்சிகள் வர வர, ஆர்யன் படத்தை பார்க்கவில்லை. அவளை ஓரக்கண்ணால் ஆவலோடு பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் ருஹானா அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.

அவன் எண்ணி வந்த காரியம் இனிதே நடக்க, ஆர்யன் அளவிலா உவகை அடைந்தான்.

Advertisement