Advertisement

இவான் ஓடிச்சென்று கட்டிலில் நடுவில் படுத்துக்கொண்டு “வாங்க!” என்று இருவரையும் அழைத்தான். ஆர்யன் இவானின் வலப்பக்கம் சென்று படுத்துக்கொண்டு அவளை பார்க்க, அவள் தயங்கியபடி இடப்பக்கம் சென்று படுத்தாள்.

விட்டத்தைத் பார்த்து சில நிமிடங்கள் மூவரும் மௌனமாக படுத்திருக்க, இருவரையும் திரும்பி பார்த்த இவான் “நீங்கள் இப்போ கணவன் மனைவி ஆகிட்டீங்க. நீங்க ரெண்டு பேரும் மிகவும் நேசிக்கறீங்க, இல்லயா?“ என்று கேட்க, ஆர்யன் “ஆமா, அக்னி சிறகே” என்று சொல்ல, ருஹானா ஆர்யனை திரும்பிப் பார்த்தாள்.

“சித்தி! ஒரே தலையணையில வளர்ந்துன்னா என்ன அர்த்தம்? கல்யாணத்துல எல்லாரும் உங்கட்ட அப்படி சொன்னாங்களே!” என்று கேட்க, அவன் புறம் திரும்பிப்படுத்த ருஹானா “அப்படினா வாழ்க்கை முழுவதும் ஒரே தலையணையில தலையை வச்சிக்கிட்டு பிரியாம இருக்கறது, அன்பே” என்று விளக்க, ஆர்யனும் ஆர்வமாக அவள் பேச்சை கேட்டான்.

“முன்னாடி காலத்துல தலையணைகள் பெருசா இருந்தது, ரெண்டு பேர் தலையை வச்சிக்கலாம். புதுசா திருமணமான தம்பதிகள் பொதுவா இந்த தலையணையை வச்சிருப்பாங்க, கண்ணே” என்று சொன்ன ருஹானா, ஆர்யனின் ஆவல் முகத்தை பார்த்துவிட்டு “இப்போ யாரும் அதுபோல தலையணையில தூங்குறது இல்ல, செல்லம். காலப்போக்கில ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சிடுறாங்க” என்றாள்.

“அந்த தலையணை மந்திரத்தால செய்ததா சித்தி? அதனாலதான் கணவனும் மனைவியுமா ஆகுறாங்களா?”

“இல்ல, அன்பே! சொல்லப்போனா அவங்களை ஒன்னா சேர்க்கறது தலையணை இல்ல. அந்த தலையணையில தூங்குறவங்களோட உள்ளங்கள்  அழகானது. அவங்க இரண்டு தலையணைகளுக்கு நடுவுல இருக்கற தூரம் அளவுகூட தங்கள் அன்புக்குரியவர்களை பிரிய மறுக்கறாங்க” என்று சொல்ல, ஆர்யன் அந்த ஒரே தலையணை தருணம் எப்போது வரும் என்பது போல ருஹானாவை ஆழமாக பார்த்தான்.

“சித்தி! என் உள்ளமும் அழகானதா?”

“உன் மனசு தேவர்களின் உள்ளம் போல தூய்மையானது, அன்பே“ என்று ருஹானா அவன் கன்னம் வருட “அப்போ நானும் ஒரே தலையணையில வளர்வேனா, சித்தப்பா?” என இவான் கேட்க, அவன்புறம் திரும்பி படுத்த ஆர்யன் ஆமாம் என சிரிப்புடன் தலையை ஆட்டினான்.

இவான் எழுந்து கொள்ள “என்ன அன்பே?“ என ருஹானா கேட்க “நான் பாத்ரூம் போகணும், சித்தி” என்று அவன் சொல்ல, எழுந்து அமர்ந்த ருஹானா “வா, போகலாம்“ என்று அழைக்க, “இல்ல சித்தி! நான் இப்போ வளர்ந்திட்டேன். நானே தனியா போயிட்டு வருவேன்” என்று ஓடிவிட்டான்.

ஆர்யனோடு ஒரே கட்டிலில் படுக்க அவஸ்தையடைந்த ருஹானா வேகமாக எழுந்து நின்றுவிட்டாள். ஆர்யன் என்ன என கேட்க “தண்ணீ… நான் தண்ணீ குடிக்கணும்” என்றவள் குவளையில் இருந்து டம்ளரில் தண்ணீரை ஊற்றினாள்.

“உங்களுக்கும் வேணுமா?“

“இல்ல, எனக்கு வேண்டாம்.“

இவான் வந்து படுக்கும்வரை மெல்ல குடித்தவள் அதன்பின்னே அவன் அருகே படுத்தாள். “இப்போ நல்லா தூங்கு, அன்பே! இனிமையான கனவுகள் வரட்டும்” என்று அவனுக்கும் சேர்த்து மூடிவிட்டாள்.

இருவரின் கையையும் எடுத்து தன் மேல் வைத்து பிடித்துக்கொண்ட இவான் “நாம் எப்பவும் பிரிந்துவிடக்கூடாது, சரியா சித்தப்பா?“ என கேட்க. “கவலைப்படாதே அக்னி சிறகே! இனி நாம ஒருபோதும் பிரியவே மாட்டோம்” என ஆர்யன் ருஹானாவை பார்த்துக்கொண்டே உறுதியளித்தான்.

இவான் சிரிப்புடன் தூங்க ருஹானாவும் கண்களை மூடிக்கொண்டாள். இருவரையும் பார்த்த ஆர்யன் தன்னுடைய குடும்பம் நிறைவான குடும்பம் என முதல்முதலாக உணர்ந்தான். நெடுங்காலத்திற்கு பின் நிம்மதியாய் உறக்கம் தழுவியது அவனை.

——–

காலையில் தன் மேல் வந்து விழுந்த கையின் மென்மையில் விழித்துக்கொண்ட ஆர்யன் கண்களை மெல்ல திறந்தான். அவன் பார்த்த அழகு காட்சியில் அவனின் இதயம் ஆனந்தக் கூத்தாடியது. ருஹானாவின் சௌந்தர்ய வதனம் அவன் முகத்துக்கு அருகே இருக்க, அவன் புறம் திரும்பி படுத்திருந்த ருஹானா அவன் மேல் உரிமையாகக் கையைப் போட்டுக்கொண்டு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். இவானைக் காணவில்லை.

உடலும் மனமும் குளிர அவளை வைத்த கண் எடுக்காமல் ஆசையாக நெடுநேரம் பார்த்தவன் தன் தோளில் மீது கிடக்கும் அவள் கையையும் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு நொடி கண்களை மூடி அந்த ஸ்பரிசத்தை முழுமையாக அனுபவித்தான்.

தனது அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தபடி அவளது மூடிய விழிகளையும், முகத்தையும் பார்த்துக்கொண்டே கிடந்தான்.

தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த ருஹானா கண்ணெதிரே தெரிந்த ஆர்யனின் ஒளிநிறைந்த முகத்தை பார்த்து திடுக்கிட்டவள் தனது கை இருக்கும் இடத்தை பார்த்து அதிர்ந்து போனாள். கையை வேகமாக எடுத்துக் கொண்டாள். படக்கென்று எழுந்தவள் காலில் செருப்பை மாட்டிக்கொண்டே “இவான் எங்கே?” என பதட்டமாக கேட்டாள்.

“எழுந்து ஓடிட்டான் போல. நானே இப்போ தான் கவனிச்சேன்” என்று ஆர்யன் எழுந்து உட்கார்ந்து சொல்ல, “சரி, நான் அவனை போய் பார்க்கறேன்” என அவன் முகம் பாராமல் விரைந்தோடி விட்டாள். ஆர்யன் மதுவுண்டவன் போல கிறங்கி அமர்ந்திருந்தான்.

இவானின் அறையை எட்டிப் பார்த்த ருஹானா அவன் அங்கே இல்லாததால் கீழே செல்லப் போனவள் எதிரே வந்த நஸ்ரியாவிடம் விசாரித்தாள். “லிட்டில் சார் சாப்பிட்டுட்டு இருக்காரே” என அவள் சொல்ல, ருஹானா படிக்கட்டின் பக்கம் செல்ல, “இப்படியேவா போக போறீங்க?” என சிரித்தபடி நஸ்ரியா கேட்டாள்.

அதன்பின்பே குனிந்து தான் இன்னும் இரவு உடையில் இருப்பதை பார்த்தவள் வேகமாக அறைக்கு திரும்பினாள். அவள் விட்டு சென்ற அதே கோலத்தில் இருந்த ஆர்யன் அவளை பார்த்ததும் எழுந்தான். “இவான்?” என்று அவன் கேட்க “கீழ சாப்பிடுறான்” என்று அவள் சொன்னதும் தலையசைத்த ஆர்யன் குளியலறைக்கு சென்றான்.

அவன் உள்ளே சென்று மறைந்ததும் கட்டிலை எட்டிப் பார்த்த ருஹானா “எப்படி அது நடந்தது?” என புலம்பினாள்.

———

“அவங்க ரெண்டு பேரும் இன்னும் வரலயே?” என்று கடுப்பாக கரீமா எட்டிப் பார்க்க, ”இது அவங்களோட முதலிரவு கரீமா” என்று சிரித்த அம்ஜத் இவானுக்கு பாலாடைக்கட்டியை எடுத்து வைத்தான்.

 “காலை வணக்கம்” சொல்லியபடி ஆர்யனும் ருஹானாவும் ஜோடியாக வர அம்ஜத் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க, கரீமா அவர்களை உற்று பார்த்தாள். “நீங்க வர லேட்டாகிடுச்சே! இன்னும் களைப்பா இருக்கா? விழாவால நீங்க சோர்வாகிட்டீங்க. நீங்க ஓய்வெடுத்தது நல்லதுதான்” என்று கரீமா பேசிக்கொண்டே போக, இருவரின் காதிலும் எதுவும் விழவில்லை.

”கரீமா! பார், அவங்களால கண்ணை எடுக்க முடியல” என்று அம்ஜத் பெரிதாக சிரிக்க, ருஹானா தலையை குனிந்து கொண்டாலும் ஆர்யன் அவள் மேல் வைத்த பார்வையை மாற்றவில்லை.

கரீமாவிற்கு சாப்பிட்டது எல்லாம் உள்ளே எரிந்தது. அப்போது மிஷால் அவளின் அலைபேசியில் அழைக்க அவள் அதை அணைத்து வைத்தாள். ”பரிசு… நான் இன்னும் உங்க திருமண பரிசை கொடுக்கலயே” என்று அம்ஜத் எழுந்து கொள்ள, ருஹானாவும் ஆர்யனும் ஆர்வமாக பார்த்தார்கள்.

அம்ஜத் மறைத்து வைத்த ஒரு மரக்கன்றை எடுக்க, கரீமா சலிப்பாக கண்களை மேலே உருட்டினாள். “இது ஒரு அத்திவகை மரக்கன்று. இதை உங்களுக்காக தோட்டத்தில நடப்போறேன், உங்க திருமண வாழ்விற்காக. இந்த மரம் வலிமையானது, ஐநூறு வருடம் வாழக்கூடியது. உங்க திருமணமும் இந்த மரத்தைப் போல பலமா, நீடித்ததா இருக்கட்டும்“ என்று அம்ஜத் வாழ்த்தினான்.

இருவரும் அம்ஜத்தின் அன்பில் நெகிழ்ந்து போய் “இது சிறந்த பரிசு!” என்று நன்றி தெரிவித்தார்கள். “நானும் உங்களுக்கு உதவலாமா பெரியப்பா?” என்று இவான் கேட்க, “நிச்சயமாக, கேப்டன் இவான்! நாம சேர்ந்து நட்டு வைக்கலாம், வா” என்று இருவரும் வெளியேறினர்.

அம்ஜத்தின் வாழ்த்தை நினைத்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி சாப்பிடாமல் அமர்ந்திருக்க, கரீமா காலை உதைத்துகொண்டு எழுந்து சென்றாள்.

———

வரவேற்பறை சோபாவில் ஆர்யன் அமர்ந்து அலுவலகப்பணிகளை பார்த்துக் கொண்டிருக்க, ருஹானா தயக்கத்தோடு வந்தவள் “காபி குடிக்கறீங்களா?” என்று கேட்க, “குடிக்கறேன், ஆனா நஸ்ரியாவை கொண்டு வர சொல்றேன். நீ இப்படி உட்கார். நான் உன்கிட்டே பேசணும்” என்று தன்னருகே காட்டினான்.

மெல்ல அவள் வந்து அமர “எனக்கு எல்லாம் தெரியும்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா பயந்து விட்டாள். “என்கூட தனியா இருக்க உனக்கு சங்கோஜமா இருக்கு. இது நார்மல் தான். நீ அதை தப்புன்னு நினைக்காதே. சீக்கிரம் பழகிடும். நமக்கு நீண்ட வாழ்க்கை இருக்கு. நீ இது போன்ற சூழ்நிலைகளுக்கு பழகணும்” என்று அவன் தன்மையாக சொல்ல, ருஹானா புரிந்து கொண்டு தலையாட்டினாள்.

———

அமைதியாக காபி தயாரித்துக்கொண்டிருந்த நஸ்ரியாவை பார்த்த சாரா “என்ன இன்னும் நேற்றைய நடனத்துல இருந்து நீ இறங்கி வரலயா?” என உற்சாகப்படுத்த, நஸ்ரியா முகத்தில் சிரிப்பு இல்லை. அப்போது அழைப்புமணி ஓசை கேட்க, “போ! உன் ராஜகுமாரன் தான் வந்துட்டான்” என்று சாரா கிண்டல் பேசியும், நஸ்ரியா மௌனமாகவே வெளியே சென்றாள்.

அதற்குள் ருஹானா சென்று கதவை திறக்க, நஸ்ரியா சமையலறைக்கு வந்துவிட்டாள்.

தன்வீர் ருஹானாவின் அலைபேசியை கொண்டு வந்தவன், தன்னுடன் நடனமாடிய பெண்ணை பற்றி தங்கையிடம் ஆர்வமாக விசாரிக்க வந்தான். ஆர்யன் வரவேற்பறையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் உள்ளே வராமலேயே ருஹானாவிடம் விடைபெற்று சென்றுவிட்டான்.

“அவளை பார்த்ததை கனவாக நினைச்சி மறக்க வேண்டியது தான். அவ எந்த பணக்கார வீட்டுப் பெண்ணோ? நமக்கு எப்படி கிடைப்பா?” என்று வருத்தப்பட்டுக்கொண்டே காரெடுத்து சென்றான்.

——-

“சித்தப்பா! நான் நேத்து நல்லா தூங்கினேன். அழகான கனவுகளா வந்தது. இன்னைக்கும் உங்க கூட படுத்துக்கவா?”

“இல்ல, சிங்கப்பையா! இன்னைக்கு இல்ல. நீ வளர்ந்துட்டே. எப்பவாது வரலாம். தினமும் இல்ல.”

ஆர்யனின் பதில் கேட்டு இவான் ஏமாந்தானோ இல்லையோ, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ருஹானா திகைத்தாள்.

படுக்கையறைக்கு சென்றவள் அங்கே இருந்த அதிகப்படியான போர்வை தலையணையை காணாமல் மேலும் அதிர்ந்தாள்.

உள்ளே வந்த ஆர்யன் “என்ன இப்படியே நிற்கறே?” என்று கேட்க, “இங்க இருந்த பெட்ஷீட்…” என்று அவள் இழுக்க, “நேத்து நாம சாப்பிட்ட கேக் அதுல விழுந்துடுச்சி. நஸ்ரியா துவைக்க அனுப்பியிருக்கா” என்று சொன்னவன் “அப்புறம் நான் என்ன சொல்ல வந்தேன்னா.. இன்று இரவு….” என்று துவங்க.. ருஹானா விக்கித்து நின்றாள்.

(தொடரும்)

Advertisement