Advertisement

ஆர்யன் அறைவாசல் முன் அவனுடன் கைகோர்த்து நின்ற ருஹானாவிற்கு, ஆர்யன் ‘அந்த கதவை தாண்டி நாங்க உள்ள போனதுமே எங்களுக்கு எல்லாமே மாறிடும்’ என்று ஜாஃபரிடம் சொன்னது நினைவுக்கு வந்து, அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக்கொண்டது.

“நான் இவானை போய் பார்த்துட்டு வரேன்” என்று அவன் அறைப்பக்கம் அவள் நகர, “நஸ்ரியா அவனை அப்பவே தூங்க வச்சிட்டா” என ஆர்யன் சொல்லவும் திரும்பி வந்தாள்.

கதவை பார்த்துக்கொண்டே சிலவினாடிகள் இருவரும் நிற்க, ஆர்யனே முதலில் அறைக்குள் சென்றாள். கண்களை மூடி தன்னை திடப்படுத்திக்கொண்ட ருஹானா உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.

அவள் உள்ளே படி இறங்கும் வரை அவளை பார்த்திருந்த ஆர்யன், டையை தளர்த்தி கோட்டை கழட்டப்போனான். அவள் வேறுபக்கம் திரும்பவும் திரும்ப மாட்டிக்கொண்டவன் அவளின் தயக்கம் நீக்க பேச்சை துவக்கினான். “நாம எல்லாம் சரியா செய்தோம் தானே?”

“ஆமா, எதுவும் குழப்பம் ஆகல” என்ற ருஹானா, சில நிமிடங்கள் தயக்கத்துக்கு பின் அலுவலக அறை சோபாவை காட்டி “நான் இங்க படுத்துக்கறேன்” என்று சொல்ல, ஆர்யன் “ம்ப்ச்… முடியாது..” என வேகமாக மறுத்தான்.

ருஹானா அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க “நான்.. என்ன சொல்றேன்னா.. ஏதாவது நடந்தா முதல்ல இங்க தான் யாரும் வருவாங்க. நாம ரெண்டு பேரும் தனித்தனியா தங்குறோம்னு தெரிஞ்சா நம்ம திட்டம் எல்லாமே வீணாப் போயிடும். நான் உள்ள சோபால படுத்துக்கறேன். நீ கட்டில்ல படுத்துக்கோ” என்று முடித்து வைத்தான்.

“எனக்கு புரியுது!” என ருஹானா சொல்ல, உள்ளுக்குள் நிம்மதி அடைந்தவன் “நீ ஆடை மாத்தணும்னா உள்ள போ. நான் இங்க காத்திருக்கேன்” என்று சொல்ல, ருஹானா உள்ளறைக்கு வந்தாள். அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரத்தை மறுபடியும் பார்த்தவள் தடுமாறி நின்றாள்.

பெரிதாக சுவாசம் செய்தவள் ஆடை மாற்ற முனைய, பின்னால் இருந்த பட்டனை அவளால் விடுவிக்க இயலவில்லை. “அச்சோ! இது சிக்கிடுச்சே!” என அவள் தீவிரமாக முயற்சி செய்ய மேசையில் இருந்த பூச்சாடி கீழே விழுந்தது.

அவளை உள்ளே அனுப்பிவிட்டு உட்கார்வதும் நடப்பதுமாக இருந்த ஆர்யன் அந்த சத்தம் கேட்டு கதவருகே வந்தான். “என்ன ஆச்சு?”

“எதுவும் இல்ல!”

“ஏதோ சத்தம் கேட்டுதே!”

“ஒன்னும் இல்ல. நீங்க உள்ள வராதீங்க!” என்று அவள் பதற, “இல்ல, வரல!” என்று சொன்னதும் அவள் மீண்டும் ஆடையை கழட்ட முயன்றாள். பலவகைகளிலும் முயற்சி செய்தும் பலன் இல்லாததால் வேறுவழியின்றி கதவை திறந்தாள்.

வாசலிலேயே நின்றிருந்த ஆர்யன் கேள்வியாய் பார்க்க “இது கழட்ட வரல” என்று மென்று முழுங்கினாள். ஆர்யனும் தயக்கமாக தலையாட்ட திரும்பி நின்றாள். ஆர்யன் கொண்டையிலிருந்து தொங்கிய பட்டுத்துணியை மெல்ல விலக்கி பட்டனில் கைவைக்க அவள் உடலை சுருக்கிக் கொண்டாள்.

ஆர்யன் அவள் மேனி மேல் பட்டும் படாமல் மெதுவாக மூன்று பொத்தான்களை எடுத்துவிட, படக்கென்று முதுகில் கைவைத்து கழட்டிய பகுதியை பிடித்துக்கொண்டவள் “போதும், மத்தது நான் பார்த்துக்கறேன். நன்றி!” என்று கதவை பட்டென்று அடைத்துக்கொண்டாள்.

ஆர்யன் தன் கைகளை பார்த்துக்கொண்டே வந்து அமர்ந்துவிட்டான், நஸ்ரியா வந்து கேக் வைத்து சென்றதுகூட உணராமல்.

தொடரும் படபடப்பில் திருமணத்தை

தொடர்ந்து வரும் முதலிரவில்

பகிரப்படாமல் காதல் கண்ணாமூச்சி ஆட

பகிரப்பட்டு மாட்டிக்கொண்டது அறை!

———

“ஹல்லோ சல்மா! எங்க இருக்க? வீட்டுக்கு வா!”

“மாட்டேன். நான் ஆர்யனை இழந்துட்டேன்!”

“அது யாரோட தப்பு? நீ மட்டும் ஃபைலை தொலைக்கலனா இந்நேரம் ருஹானா ஆர்யன் கூட இருந்திருக்க மாட்டா. தெருவுல கிடந்திருப்பா.”

“அப்போ இது என்னோட தப்பா? நான் பாட்டுக்கு லண்டன்ல இருந்திருப்பேன். அங்க என்னோட படிப்பு, நண்பர்கள், காதல் எல்லாம் இருந்தது. அங்கயே வேலை பார்த்துட்டு எனக்கு ஒரு வீடு, வாழ்க்கை அமைச்சிருப்பேன். நீ தான் எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கினே!”

“சல்மா!”

“எப்பவும் என்னை விரும்பாத ஆர்யன்கிட்டே என்னை தள்ளிவிட்டே. எனக்கு அவன் மேல காதல் வரும்போது அவன் அந்த பாம்பை நிக்காஹ் செய்துக்கிட்டான். இப்போ நான் ஒரு அகதியா நிக்கிறேன். நான் அனுபவிக்கற இந்த வலி, அவமானம், ஏமாற்றம் எல்லாம் உன்னால. உன்னோட பேராசையால! என்னோட வாழ்க்கையே அழிஞ்சி போச்சி!”

“என்னை மன்னிச்சிடு! நான் எல்லாம் சரிசெய்றேன். நீ திரும்பி வா!”

———

கேக் முன்னே மேசையில் இருக்க, கருப்பு கோட்டை கழட்டிவிட்டு வெள்ளை சட்டையில் அமர்ந்திருந்த ஆர்யன், கதவு திறக்கப்பட்டு ருஹானா வெள்ளைநிற பட்டாலான இரவு உடையில் வருவதை பார்த்து அவனையறியாமல் எழுந்துவிட்டான்.

அவள் நெருங்க நெருங்க அவளையே பார்த்து நின்றவன் ஒப்பனைகள் கலைத்து விரிந்த கூந்தலுடன் எழிலோவியமாக பக்கம் வந்தவளிடம் சிந்தை மயங்கிப் போனான். “மிக அழகு!” என அவன் வாய் தன்னைப்போல முணுமுணுத்தது.

அவளுக்கு அது காதில் விழுந்தும்கூட என்ன என்று கேட்க, அவன் “கேக் நல்லா இருக்கு. சாப்பிடலாமா?” என கேட்டு அவளுக்கு ஏமாற்றம் தந்தான்.

                                        ——–

கனவுலகில் மிதந்தபடி வேலை செய்துக் கொண்டிருந்த நஸ்ரியாவை சிரித்தபடி சாரா கவனித்துக்கொண்டு இருக்க, அவள் “ஏன் பெரியம்மா நமக்குலாம் ஒருநாள் மகிழ்ச்சி தான் வாய்க்கும் இல்லயா? சின்ட்ரெல்லாக்கு கிடைச்ச வாழ்க்கை போல கதையில தான் நடக்கும்” என்று பெருமூச்சு விட்டாள்.

“ஏன் அப்படி சொல்றே, கண்ணே? உன் நல்ல மனசுக்கு அந்த கதையில வர்ற இளவரசன் போல ஒருத்தன் வருவான் பாரேன்” என்று சாரா அவளை தேற்ற, நஸ்ரியா நம்பிக்கை இல்லாமல் உதட்டை பிதுக்கினாள்.

——–

குளியலறை சென்று உடை மாற்றி வந்த ஆர்யன் பழக்கம்போல கட்டிலை நாடி செல்ல அங்கே சங்கடமாக அமர்ந்திருந்த ருஹானாவை கண்டு சந்தோசமாக பின்வாங்கினான். அப்படியே சோபாவில் சென்று அமர்ந்தவன் ருஹானாவை பார்த்தபடி “நீ சோர்வா இருக்கே!” என்றான்.

“நீங்களும் தான்” என்று அவள் சொல்ல, ‘எனக்கு எங்கே சோர்வு? நான் எப்போதையும் விட உற்சாகமாக இருக்கிறேனே’ என நினைத்தவன் “இல்லயே” என்று மட்டும் அவளிடம் சொல்லி “உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு” என்றான்.

அறையை ஒருமுறை சுற்றி பார்த்தவள் பயத்துடன் “இல்லல்ல.. எனக்கு தூக்கம் வரல” என்றாள். அவளின் சங்கடம் புரிந்தவன் “எல்லாருக்கும் திருப்தி தான் இல்லயா?” என அவளை பேச வைத்தான்.

“ஆமா, இவான் ரொம்ப சந்தோசமா இருந்தான்” என்று அவள் புன்னகையுடன் சொல்ல, அது அவன் முகத்திலும் மலர்ந்தது. “கண்டிப்பா! என் அண்ணன் கூட.. ஆனந்தம் தாங்கவே முடியல அவருக்கு!”

“நானும் பார்த்தேன்” என அவள் சொல்ல, அவர்களுக்கு அதற்கு மேல் பேச எதுவுமில்லை. படுக்க ஆயத்தமாகி அவள் அவனுக்கு சோபாவில் படுக்கையை விரிக்க அவனும் உதவி செய்தான். இருவரின் நெருக்கமும், அண்மையும் இருவருக்கும் துன்பம் போன்ற இன்பம் தந்தது.

“நான் இங்க படுக்கறேனே, உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.”

“அதெல்லாம் இல்ல” என்று சொன்ன ஆர்யன் வேகமாக சோபாவில் அமர்ந்துக் கொள்ள, ருஹானா சென்று விளக்கின் ஒளியை குறைத்தாள்.

“விளக்கு இருக்கட்டுமே! நீ இருட்டுக்கு பயப்படுவியே” என்று ஆர்யன் சொல்ல, “இல்ல, இந்த மங்கலான வெளிச்சம் போதும்” என்று சொல்லி கட்டிலில் வந்து அமர்ந்தவள் மறுபடியும் ஆரம்பித்தாள்.

“உங்களுக்கு அங்க வசதியா இருக்காது. நான் சோபால படுக்கறேன்.”

“அந்த விவாதம் முடிந்தது. நீ தூங்கு!” என்று ஆர்யன் படுத்துக்கொள்ள, அவன் மனம் கவிதை பேசியது, ‘மூச்சுமுட்டும் நெருக்கத்தில் இல்லாவிட்டாலும் பார்வைபடும் தூரத்திலேனுமிரு என் மனம் மகிழ!’

“ஆனா..” என்று ருஹானா பேச வர “உனக்கு புரியலன்னு நினைக்கறேன். நம்மோடது நீண்ட பயணம்” என்று அவன் விளக்க முயல, கதவு தட்டப்பட்டது.

பயந்து போன இருவரும் வெகுவேகமாக சோபாவில் விரித்த கனமான விரிப்பு, தலையணை, போர்வை எல்லாவற்றையும் சோபாவின் அடியில் தள்ளினர்.

“யார்?” என்று ஆர்யன் கேட்க, கதவை தள்ளிக்கொண்டு இவான் உள்ளே வந்தான். “சித்தி! நான் என்னோட அம்மா அப்பாக்கு நடுவுல படுத்ததே இல்ல. உங்க கூட படுத்துக்கட்டுமா?”

ருஹானாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. “எங்க கூடவா? கட்டில்லயா? எங்களுக்கு நடுவுலயா?” ருஹானா கேட்க கேட்க இவானின் தலை ஆவலாக ஆடியது, விரிந்த சிரிப்புடன்.

மறுப்பாக தலையசைத்த ருஹானா இல்லை என தொடங்கும்முன் ஆர்யன் “கண்டிப்பா, சிங்கப்பையா!” என்று விட்டான். அவள் ஆர்யனை பார்த்து திகைத்து விழிக்க, அவள் புறம் குனிந்தவன் மெல்லிய குரலில் “அவனுக்கு ஏமாற்றம் தர வேண்டாம்” என்றான்.

Advertisement