Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 116

நிக்காஹ் முடிந்து ஆர்யன் நெற்றியில் முத்தமிட்டு சொன்ன உண்மை, நிஜம்தானா, தன் காதில் சரியாக விழுந்ததா என ருஹானா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குடும்பத்தினர் வாழ்த்து சொல்ல அருகில் வந்திருந்தனர்.

வரிசையாக அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்க, இவான் “நீங்க இப்போ என் அம்மா அப்பாவா?” என ஆசையாக கேட்க, ஆமென தலையாட்டிய ருஹானா அவனை அணைத்துக்கொண்டாள். ஆர்யன் இவானின் தலையை மகிழ்ச்சியோடு தடவினான்.

சையத் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு “திசைகாட்டியும் வேலை செய்ய முடியாத கடல்தான் திருமணம்னு சிலர் சொல்றாங்க. ஆனா அதை நீங்க நம்பாதீங்க. உங்க இதயம் திசைகாட்டியா மாறியபின்ன எந்த பெருங்கடலையும் நீங்க எளிதா தாண்டலாம். எப்பவும் நீங்க இதயங்களால் இணைந்திருங்க. என் குழந்தைகளே! எனக்கு கொடுத்த உங்க வாக்குறுதியை மறக்காதீங்க. ஒருவருக்கொருவர் கைகளை விட்டுடாதீங்க” என்று அறிவுரை சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அம்ஜத் கசிந்த கண்களுடன் ஆர்யனை அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினான். “அருமையான ஜோடி நீங்க! இன்றைய தினத்துல இருந்து இனி எல்லாமே உங்களுக்கு மாறும்” என்று அம்ஜத் சொல்ல, “ஆமா அண்ணா! நீங்க சொல்றது சரிதான். எல்லாமே மாறும்தான்” என ஆர்யனும் ஆமோதிக்க, ருஹானாவிற்கு திக் என்றது.

கரீமா “ருஹானா டியர்! நீயும் இப்போ குடும்பத்தில் ஒரு அங்கமாகயிருப்பது மகிழ்ச்சியா இருக்கு” என்று சொல்லி வாழ்த்த, அம்ஜத் “ருஹானா எப்பவோ நம்ம குடும்பத்தோட உறுப்பினராக தானே இருக்கா“ என்று சொல்லி ருஹானாவை அணைத்து வாழ்த்தினான்.

அவன் கையை வலிக்கும்படி அழுத்தி பிடித்த கரீமா “வாங்க அம்ஜத் டியர்! ஆடலாம்” என்று அழைத்து செல்ல, நூர்ஜஹான் வந்தார். “உங்களுக்கு எல்லாம் திருப்தியா இருந்ததா?” என கேட்க, “நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல. எல்லாமே அழகாக இருந்தது” என்று ருஹானா சொல்ல, ஆர்யனும் தலையாட்டினான்.

ருஹானாவின் சிந்தனை முகத்தை பார்த்த ஆர்யன் அடுத்து கிடைத்த தனிமையில் “என்கிட்டே நீ எதும் கேட்கணுமா?” என கேட்டான். அதற்குள் ரஷீத் வந்து “ஆர்யன் நம்ம கூட்டாளிகளை பார்க்கலாமா, வர்றீங்களா?” என்று ஆர்யனை அழைத்து சென்றான்.

ஆர்யன் சொன்ன உண்மையும், எல்லாமே மாறும் என்பதும் ருஹானாவை மிரட்ட, நடனம் ஆடிக்கொண்டிருந்த ஜோடிகளை பார்த்தவள், யாரையும் தொந்தரவு செய்யாமல் பின்பக்க நிலா முற்றத்திற்கு சென்று வானத்தை பார்த்து நின்றாள்.

கூட்டாளிகளை உபசரித்துவிட்டு வந்த ஆர்யன் ருஹானாவை தேடி வந்தான். “எல்லாம் சரி தானே?”

“ஆமா, நான் நினைச்சதை விட எல்லாமே நல்லா நடந்தது.”

“ஆனா ஏதோ உன்னை கவலைப்படுத்துது போல! நீ சோர்வா இருக்கியா? நீ சொன்னா நாம விழாவை சீக்கிரமா முடிச்சிக்கலாம்.”

“இல்லல்ல..” என்று அவள் வேகமாக சொல்லிவிட்டு “வந்து.. எனக்கு சோர்வா இல்ல.. சொல்லப்போனா எனக்கு இது முடியவே கூடாதுன்னு இருக்கு” என்று சமாளிக்க, ஆர்யனின் முகம் மலர்ந்ததை பார்த்துவிட்டு ‘அச்சோ இதும் தப்பா போச்சே’ என மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள்.

“இங்க வந்து நின்னுட்டேனே! நான் போய் விருந்தாளிகளை பார்க்கறேன்” என்று விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள்.

———

விருந்தினர் என்ற கெத்தில் நஸ்ரியா பணியாட்களை அவளுக்கு உணவு பரிமாற சொல்ல, சாரா “இன்னைக்கு ஒருநாள் தான்! அனுபவி மகளே அனுபவி” என்று அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

நஸ்ரியாவை பார்த்துக் கொண்டிருந்த தன்வீர் ‘அவ்வளவு நேரம் சேர்ந்து நடனம் ஆடினோம். அவ பேரைக் கூட கேட்கலயே! இப்போ அவ அம்மாவோட பேசிட்டு இருக்கா. என்ன செய்றது?’ என்று விழித்துக் கொண்டிருந்தான்.

ஆர்யன் தனது வியாபார நண்பர்களை ருஹானாவிற்கு அறிமுகப்படுத்த அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

“நீங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தது போல இருக்கீங்க!”

“எல்லாரையும் போல என்னாலயும் உங்க மேல இருந்து கண்ணை எடுக்க முடியல.”

“மிசஸ் ருஹானா! நீங்க சொல்லுங்க, ஆர்யன் எப்படி திருமணத்துக்கு சம்மதித்தார்? அவரை பத்தி தான் எங்களுக்கு தெரியுமே! அந்த ரகசியம் என்ன?”

நண்பர்கள் ஆவலாக பார்க்க, ருஹானா ஆர்யனை பார்த்து விழித்தாள். அவளை பார்த்து சிரித்த ஆர்யன் “அதுல ரகசியம் ஒன்னும் இல்ல. அவ என்னை சம்மதிக்க வைக்க அவசியமே இருக்கல” என்றான்.

கொல் என சிரிப்பொலி கிளம்ப, “நிஜமாவா? சுவாரஸ்யமா இருக்கே! நீங்க தான் முதல்ல காதலை சொன்னீங்களா?” என்று அவர்கள் ஆர்யனிடம் திரும்பினர்.

“இவள் என்னோட வாழ்க்கைல வந்த நொடியே எனக்கு புரிஞ்சிடுச்சி, இவள் தான் எனக்கானவள்!”

நண்பர்கள் ஆர்யனின் காதலில் உருகி நிற்க, ருஹானா என்ன உணர்ந்தாள் என அவளுக்கே தெரியவில்லை.

“ருஹானா! ஒரு நிமிஷம் இங்க வர்றீயா?” என தன்வீர் அழைக்க, ருஹானா அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நகர்ந்தாள்.

“நன்றி தன்வீர்! சரியான நேரத்துல என்னை கூப்பிட்டே!”

“அப்படியா? அங்க அவ்வளவா போர் அடிச்சிட்டு இருந்தது? இது தெரிஞ்சிருந்தா நான் அப்பவே வந்திருப்பேன்.”

சிரித்த ருஹானா “சரி, சொல்லு! என்ன வேணும்?” என்று கேட்க, “இல்ல, ஒன்னும் வேணாம். இங்க எல்லாமே சிறப்பா இருக்குன்னு தான் சொல்ல கூப்பிட்டேன். அலங்காரம், இசை, உணவு, விருந்தாளிகள்.. ஏன் ருஹானா உனக்கு வந்திருக்கற எல்லா விருந்தாளிகளும் தெரியுமா?” என்று நைச்சியமாக கேட்டுப் பார்த்தான்.

“எங்கே தன்வீர்? நிறைய பேரை எனக்கு தெரியாது. சொல்லப்போனா நம்ம ஆளுங்க அப்புறம் மாளிகைல இருக்கறவங்களை தவிர எனக்கு வேற யாரையும் தெரியாது.”

ஏமாற்றமான தன்வீர் “அந்த பொண்ணை நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஒருவேளை அவ ஆர்யனோட சொந்தக்கார பொண்ணோ?” என நஸ்ரியாவை கைக்காட்டி கேட்க, ருஹானா அவளை எட்டிப்பார்க்கும்முன்

“சித்தி! நாம டான்ஸ் ஆடலாமா?” என இவான் அருகில் வந்தான். “இதுக்காக தான் நான் இத்தனை நேரம் காத்திருந்தேன், அன்பே! வா வா” என்ற ருஹானா அவன் கையை பிடித்து அரங்கின் நடுவே வந்து நடனமாட, சுற்றியிருந்தவர்கள் அவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

ஆர்யனும் அங்கே வந்து அவர்கள் ஆட்டத்தை அன்பாக பார்த்து ரசித்து நிற்க, கரீமா கனல் கக்கும் பார்வைகளை அவர்கள் மீது வீசினாள். ருஹானாவின் அழகையும் இருவரின் பொருத்தத்தையும் பற்றி பாராட்டி இன்னும் பேச்சுக்குரல்கள் கேட்க, அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

வேகமாக அறைக்கு வந்தவள் கதவை சாவி கொண்டு பூட்டினாள். அந்த நேரம் மிஷால் அலைபேசியில் கூப்பிட, அதை விசிறி எறிந்தாள். கட்டிலில் விரித்திருந்த கனமான போர்வையை உருவி கீழே போட்டாள். அப்போதும் அவளுக்கு ஆத்திரம் தணியாததால் மெத்தையை பலங்கொண்ட மட்டும் இழுத்து கீழே தள்ளினாள்.

அதன் மேல் உட்கார்ந்து கொண்டு சரமாரியாக ஓங்கி குத்திக்கொண்டே இருந்தாள். ஒருகட்டத்திற்கு மேல் கைவலிக்க, வாயை இறுக்கமாக பொத்திக்கொண்டு சத்தம் வராமல் கத்தினாள். முகம் முழுதும் ரத்தமாக சிவக்க, மூச்சு எடுக்க முடியாமல் தவித்தாள்.

——–

விருந்தினர் ஒவ்வொருவராக விடைபெற ருஹானாவிற்கு மிரட்சியானது. அவள் முக மாற்றங்களை பார்த்துக்கொண்டே இருந்த ஆர்யன் பக்கம் வர, “பர்வீன் அம்மா புறப்படுவாங்க. நான் போய் பார்க்கறேன்” என்று அவன் கேள்வியில் இருந்து தப்பித்து ஓடினாள்.

பர்வீனிடம் சென்று “ஏன் அம்மா சீக்கிரம் கிளம்புறீங்க? வாங்க! நாம சேர்ந்து காபி குடிக்கலாம்” என்று நேரத்தை நீட்டிக்க பார்த்தாள்.

“இல்ல மகளே! நீயும் சோர்வா இருப்பே. நாம இன்னொரு நாள் குடிக்கலாம். இப்போ நாங்க கிளம்புறோம். நீயும் அறைக்கு போய் ஓய்வெடு” என்று அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆர்யனிடம் விடைபெற்று புறப்பட, தன்வீர் நஸ்ரியாவை தேடி எட்டியெட்டி பார்த்துவிட்டு ஏமாற்றமாக சென்றான்.

ருஹானா முழித்துக்கொண்டு நிற்பதை பார்த்த ஆர்யன் “என்ன?” என கேட்டான். திருதிருவென விழித்தவளுக்கு சட்டென்று நினைவு வர “கேக்!…. நான் கேக் சாப்பிடலயே!” என்றாள்.

“நானும் சாப்பிடல. உனக்கு வேணுமா?”

“ஆமா”

அப்போது அங்கே கரீமாவுடன் வந்த அம்ஜத் “அறைக்கு போகாம இன்னும் இங்க என்ன செய்றீங்க?” என கேட்டான்.

“கேக் சாப்பிட போறோம்” என ஆர்யன் சொல்ல, அம்ஜத் குறும்பாக சிரித்தான். “நீங்க அறைக்கு போங்க. நான் அனுப்பி வைக்கறேன்.”

“சரி அண்ணா!” என்ற ஆர்யன் ருஹானாவை கையைப் பற்றி “வா போகலாம்!” என்று மேலே அழைத்துப் போக, தம்பி ஜோடியாக செல்வதை பார்த்து மனம்மகிழ்ந்து சிரித்த அம்ஜத் “நாம நல்லா நடனம் ஆடினோம், இல்லயா கரீமா?” என்று தன்னையும் அறியாமல் அவளை வெறுப்பேற்றினான்.

——-

Advertisement