Advertisement

அத்தியாயம் –9

 

 

எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.

 

 

வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல் சரியென்று விட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் கல்லூரியில் இருவரையும் தனியே அழைத்து அவன் ஷர்மியின் காதலை ஏற்றுக் கொண்டதை பற்றி சொல்ல அங்கு கனத்த அமைதி நிலவியது.

 

 

“என்னடா பேசாம இருக்க, சரயு நீயும் எதுவும் சொல்ல மாட்டேங்குற, உங்களுக்கு பிடிக்கலையா என்றான் வைபவ். “பிடிக்கலைன்னு சொல்ல வரலை, ஆனா நீ கொஞ்சம் யோசிச்சு முடிவெடுத்து இருக்கலாம்ன்னு தோணுது என்றாள் சரயு பட்டென்று.

 

 

கல்யாணுக்குள் அது போன்ற எண்ணம் இருந்தாலும் நண்பன் வருத்தபடுவானே என்று பேசாமல் இருக்க சரயு மனதில் பட்டதை சொல்லிவிட்டாள், அது மட்டுமில்லாமல் ஷர்மி முதல் நாள் அவளிடம் நடந்து கொண்டது பின் அவள் சவால் விட்டது என்று எதையும் மறையாமல் வைபவிடம் கூறினாள்.

 

 

“ஹேய் சரயு நீ இன்னும் அதெல்லாம் ஞாபகம் வைச்சு இருக்கியா, ஷர்மி சொன்னது சரி தான் போல. இந்த விஷயத்தை சொன்னதும் உன்னோட நண்பர்கள் என்னை ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்னா, அவளும் குழந்தைத்தனமா உங்கிட்ட நடந்துகிட்டதா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டா

 

 

“உன்கிட்ட மட்டும் இல்லை இதோ நிக்குறானே கல்யாண் இவன்கிட்டையும் ஏதோ பேசிட்டாளாம், எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டா சரயு. அவ தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுடாளே அப்புறம் ஏன் நீ அதையே மனசுல வைச்சுட்டு இருக்க விடு சரயு என்றான் வைபவ்.

 

 

சரயு வாயடைத்து போய்விட்டாள். எப்படி எல்லாம் பேசி அவனை அவள் பக்கம் இழுத்திருக்கிறாள் என்று மலைத்தாள் அவள். கல்யாணோ வாயே திறக்கவில்லை. “என்ன கல்யாண் நீ எதுவும் பேசமாட்டேங்குற என்றான் வைபவ்.

 

 

“எனக்கு ரொம்ப சந்தோசம் வைபவ், நீ சரயு பேசினதை எல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காதே, விடு என்றான் கல்யாண். அப்போது தான் வைபவின் முகம் சற்று தெளிந்தார் போல் இருந்தது. கல்யாண் சரயுவுக்கு கண் ஜாடை காட்ட அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

 

 

“சரி எனக்கு கொஞ்சம் லேப்ல வேலை இருக்கு போயிட்டு வந்திர்றேன் என்று அங்கிருந்து நகர்ந்தான் வைபவ். “கல்யாண் நான் பேசினது தப்புன்னு நினைக்கிறியா என்றாள் சரயு.

 

 

“இல்லை, நீ பேசினது சரி தான், ஏன்னா எனக்கும் ஷர்மியை பிடிக்கலை. ஆனா நீ இப்படி யோசிச்சு பாரேன், ஷர்மி ஒருவேளை உண்மையிலேயே மனசு மாறியிருந்தா நல்லது தானே. வைபவ் சந்தோசமா இருப்பான்ல என்றான் கல்யாண்.

 

 

“அவ குணம் மாறியிருக்கும்ன்னு நீ நினைக்கிறியா கல்யாண். சரி அப்படி ஒரு வேளை மாறியிருக்குனே வைச்சுக்குவோம். அவ நம்ம வைபவுக்கு ஏத்த பொண்ணுன்னு நீ நினைக்கிறியா. எனக்கு என்னமோ மனசுக்கு ஒப்பவே இல்லை கல்யாண் என்றாள் வருத்தத்துடன்.

 

 

“எனக்கும் புரியுது சரயு, இப்போ என்ன செய்யலாம்ன்னு சொல்லு. வைபவ் வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்கக்கூடாது என்றான். “எனக்கென்னமோ அவ தற்கொலை முயற்சி எல்லாம் பொய்யோன்னு தோணுது

 

 

“அவளுக்கு இவனை ஜெயிக்கணும் அதுக்காக தான் வைபவை தன் வலையில விழ வைச்சுட்டாளோன்னு என் மனசுக்கு படுது. அவ ஒரு வாரம் பத்து நாளா அவங்க வீட்டில இல்லையாம்

 

 

“அவங்க வீட்டில ஏதோ சொல்லிட்டு அவ தோழி அவளோட அறையில வைச்சு பார்த்துக்கிட்டாளாம். எங்கயோ இடிக்குது கல்யாண். ஏதோ சரியில்லைன்னு தோணுது, ஏதாவது செய்து அதை கண்டுபிடியேன் என்றாள்.

 

“உனக்கு இப்படி ஒரு சந்தேகம் இருந்தா அதை தெளிவு பண்ணிட வேண்டியது தான். நான் எப்படியாச்சும் அதை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன். நீ ஷர்மி மேல ஒரு கண்ணு வைச்சுக்கோ, அவளோட தோழி யாரு என்னன்னு பார்த்து எனக்கு கொஞ்சம் சொல்லு நான் பார்த்துக்கறேன் என்றான் கல்யாண்.

 

 

அந்த வருட கடைசி செமஸ்டருக்கு முன்தினம் வைபவிற்கு அழைத்தாள் ஷர்மி. “ஹலோ என்னங்க இன்னைக்கு ஒரு விசேஷம்ன்னு நேத்தே சொன்னேனே ஞாபகம் இருக்கா என்றாள் அவள்.

 

 

“ஆமா ஷர்மி சொன்னியே, என்ன விசேஷம் என்றான் அவன். “இன்னைக்கு என்னோட பிறந்தநாள் என்றாள் அவள். “ஹேய் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷர்மி, என்ன இவ்வளவு தாமதமா சொல்ற என்றான் அவன்.

 

 

“வைபவ் எனக்கொரு ஆசை, இன்னைக்கு முழுக்க நான் உங்க கூடவே இருக்கணும். உங்ககூட தான் கோவிலுக்கு போகணும், என் ஆசையை நிறைவேத்துவீங்களா என்றாள் கெஞ்சலுடன்.

 

 

அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது, மறுநாள் அவர்களுக்கு செமஸ்டர் தொடங்குகிறது, இவள் வேறு பிறந்தநாள் என்று கேட்கிறாள் என்ன செய்வது என்று விழித்தான். அவள் ஆசையை ஒதுக்கவும் அவனால் முடியவில்லை. சில நிமிட நேர மௌனமாக கழிய அவளே அதை கலைத்தாள்.

 

 

“சாரிங்க நாளைக்கு செமஸ்டர் வைச்சுக்கிட்டு இப்படி கூப்பிடறனேன்னு யோசிக்கிறீங்களா. தப்பு தாங்க ஏதோ ஆசையா இருந்தது அதான் கேட்டேன் என்றவளிடம் மறுக்கத் தோன்றாமல் அவளுடன் வர சம்மதித்தான் அவன்.

 

 

இருவருமாக முதலில் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தனர். அதன்பின் அவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு விஜிபி தங்கக் கடற்கரைக்கு சென்றாள் அவள். அங்கிருந்த எல்லா விளையாட்டுகளிலும் ஏறி அவனுடன் உற்சாகமாக கழித்தாள்.

 

 

கடற்கரைக்கு சென்றவள் தண்ணீரில் கால் நனைத்து விளையாடினாள். வைபவிற்கு நாளை செமஸ்டர் என்பதிலேயே கவனம் இருந்ததோ அன்றி அவன் மனது முழுதாக அவளை ஏற்றுக்கொள்ளவில்லையோ தெரியவில்லை அவனால் அவளுடன் ஒன்ற முடியவில்லை.

 

 

அவள் அவன் கைகளுக்குள் தன் கையை பிணைத்தும் அவனுக்குள் எந்த வித உணர்வும் தோன்றவே இல்லை. “என்னங்க எனக்கு பிறந்த நாள் பரிசு எதுவும் கிடையாதா என்றாள் அவள் குரலில் ஏக்கத்தை தேக்கி.

 

 

“உனக்கு சிறந்த பரிசா கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன். நான் படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போகும் போது நீ கேட்காமேலே அந்த பரிசு உனக்கு நான் தருவேன் என்றான் வைபவ்.

 

 

“நீங்க எப்போ பரிசு தருவீங்களோ தாங்க, நான் இப்போ உங்களுக்கு ஒரு பரிசு தர்றேன் என்றவள் அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்.

 

 

கன்னத்தில் ஈரம் உணர்ந்து அதை துடைத்துக் கொண்டவனுக்கோ தனக்கு ஏன் அவள் கொடுத்த முத்தம் எந்த சலனமும் ஏற்படுத்தவில்லை என்ற சுய ஆராய்ச்சியே மேலோங்கியது.

 

 

ஒருவாறு அவன் வீட்டிற்கு வரும் போது நேரம் பத்தை நெருங்கியிருக்க சாந்தியோ அவனை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்தார். இதுவரை மகன் பரீட்சை சமயத்தில் இப்படி எங்கேனும் சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பியதில்லை என்பதை உணர்ந்தவர் அவனிடம் ஏதும் கேட்கவில்லை.

 

 

வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு சென்று விளக்கை போட்டுக் கொண்டு புத்தகம் எடுத்து படிக்க உட்காரவும் அவன் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அழைத்தது ஷர்மியே, “சொல்லு ஷர்மி என்றான் அவன்.

 

 

அவளோ கடற்கரையில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தி தனக்கு தூக்கம் வரவில்லை என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க பொருமையிழந்தவன் கைபேசியின் பேட்டரியை கழற்றிவிட்டு விட்டு அதை தூர வைத்தான். மீண்டும் அவன் கவனம் புத்தகத்தில் அமிழ மறுநாள் பொழுது விடிந்தது.

 

 

பரீட்சை முடிந்து வெளியே வந்த பின் கல்யாணும், சரயுவும் அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க வைபவின் தலை கவிழ்ந்தது. “என்னடா நேத்து எங்க போன, அம்மா உன்னை தேடி எனக்கு போன் பண்ணாங்க. உனக்கு போன் போட்டா போகவே இல்லை. நீ செமஸ்டருக்கு படிக்காம அப்படி என்ன முக்கிய வேலை பார்க்க போன என்றான் கல்யாண்.

 

 

வைபவ் நேற்று நடந்ததை சொல்ல சரயுவும் கல்யாணும் அர்த்தம் பொதிந்த பார்வையை தங்களுக்குள் செலுத்திக் கொண்டனர். “நீ பிறந்த நாளைக்கு அவ கூட இருக்கணும்ன்னு நினைச்சது எல்லாம் சரி தான் அதுக்காக உன் படிப்பை விட்டு தான் போவியா

 

 

“நீ அதை எந்த அளவுக்கு உயிரா நினைச்சு படிக்கறேன்னு எங்களுக்கு தெரியும். நீ இப்படி ஏன் செஞ்சன்னு எங்களுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு வைபவ். சரி போனது போகட்டும் இனி நீ எப்பவும் படிப்புல கவனமா இருப்பேன்னு எங்களுக்கு சத்தியம் பண்ணு என்றாள் சரயு.

 

 

“என்ன சரயு சத்தியம்ன்னு எல்லாம் பெரிசா பேசுற, எனக்கு தெரியாதா நான் படிக்க மாட்டேனா என்றான் வைபவ் சற்று கோபமும் வருத்தமும் கலந்த குரலில்.

 

 

“வைபவ் நாங்க உன்னை தப்பா சொல்லலை, நீ வேற எதோடையும் உன் படிப்பை இணைத்து அதில் நீ குறைந்து விடக்கூடாதுன்னு தான் அவ அப்படி சொல்றா. நமக்கு இன்னும் ஒரு வருடம் மட்டும் தான் தான் இருக்கிறது. நீ வேறு ஏதும் நினைச்சு வருத்தப்படாதே என்றான் கல்யாண் ஆறுதலாக.

 

 

அந்த செமஸ்டரில் வைபவ் சரயுவுக்கு அடுத்த இடத்தில் வந்திருந்தான். சரயுவுக்கு வருத்தமாக இருந்தது, ஷர்மி சொன்னதை செய்துவிட்டாளோ என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கியது. ஷர்மியை அவளறியாமல் சரயுவும் கல்யாணும் கண்காணிக்க தொடங்கினர்.

 

 

அது அவர்களுக்கு கடைசி வருட படிப்பு, கார்த்திகா இரண்டாம் வருடத்தில் இருந்தாள். ஒரு நாள் கல்யாண் ஷர்மியின் தோழி ஒருத்தியை பின்தொடர வழிமறித்தாள் கார்த்திகா.

 

 

“கல்யாண் என்று அவள் அழைத்ததும் திரும்பி பார்த்தான் அவன். “என்னாச்சு உங்களுக்கு இப்போலாம், என்னை நீங்க சரியாவே கவனிக்க மாட்டேங்குறீங்க என்றாள் அவள் வருத்தத்துடன்.

 

 

கல்யாணுக்கும் அந்த வருத்தம் இருந்தது, அவன் வகுப்பு இல்லாத நேரங்களில் ஷர்மியை பின்தொடரும் வேலையை செய்து சில விஷயங்களை சேகரித்துக் கொண்டிருந்தான். தற்போது கூட அவள் தோழியை அவன் பின்தொடர கார்த்தி அவனை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கிறாள்.

 

 

அவளை சமாதானப்படுத்தாமல் அங்கிருந்து நகர முடியாது என அவனுக்கு தோன்ற அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அவளையும் அமரச் செய்து அவனும் அருகமர்ந்தான். “சொல்லு செல்லம் என்று அவன் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தான்.

 

 

“ஆமாம் இப்ப சொல்லுங்க செல்லம் கில்லம்னு, நான் கேட்டதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு என் ஞாபகமே வருது. நானும் உங்களை பார்க்க மாட்டோமான்னு பார்த்தா நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க என்று அவனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தாள் அவள்.

 

 

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவளருகில் நெருங்கி அமர்ந்தான் அவன். அவள் உள்ளங்கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கி அவளை ஆறுதல் படுத்த முயன்றான். கார்த்திகாவுக்கோ அவன் கையை பற்றியதுமே உடலில் சுரம் அடிப்பது போல் இருந்தது.

 

 

கைகள் சில்லிட்டு போயின. நா உலர்ந்து போக வார்த்தை வராமல் அமர்ந்திருந்தாள். “ரித்தி என்னாச்சும்மா எதுவுமே பேசமாட்டேங்குற என்றான் கல்யாண்.

 

 

அதுவரை ஒட்டியிருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அவனின் ரித்தி என்ற அழைப்பில் கரைந்து விட எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் அவள். “ஹேய் என்ன இவ்வளவு நேரம் ஏதேதோ பேசிட்டு இருந்த, இப்ப இப்படி மௌனமா இருக்க, பிடிக்கலையா

 

 

“இது உனக்கு அழகு இல்லையே, நீ சரவெடியா பேசுவியே, அது தானே உனக்கு அழகு. உன்னை எப்படி பேச வைக்கலாம் என்று யோசிப்பவன் போல் நடித்தவன் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட அவள் கிறங்கி போய் அமர்ந்திருந்தாள். தூரத்தில் வைபவ் வருவது தெரிய அவளிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்தான் கல்யாண்.

 

 

“சரியா வந்துட்டான், நான் உன்கிட்ட பேசும் போது எப்படி தான் இவனுக்கு மூக்கு வேர்க்குமோ தெரியாது என்று அவன் வாய்விட்டு புலம்ப கார்த்திகா இயல்பாகி இருந்தாள். இவர் யாரை சொல்கிறார் என்று திரும்பி பார்க்க வைபவ் வந்து கொண்டிருந்தான்.

 

 

“இருங்க இருங்க நான் உங்களை பத்தி வைபவ்கிட்ட சொல்லறேன். உங்களுக்கு அவர் தான் சரியான ஆளு என்று கார்த்திகா புகார் வாசிக்க தயாரானாள். “ஓ தாராளமா சொல்லிக்கோ என்று அவனும் வம்புக்கு தயாரானான்.

“என்னடா உன்னை தேடி நான் வந்துட்டு இருந்தா நீ கார்த்தி கூட பேசிட்டு இருக்க, இதான் நீ லைப்ரரிக்கு போற லட்சணமா என்றான் வைபவ் கல்யாணை பார்த்து.

 

 

“வைபவ் நானே அவரை இழுத்து பிடிச்சு உட்கார வைச்சு இருக்கேன். இப்போலாம் அவர் என்னை கண்டுக்கறதே இல்லை, நீங்க என்ன சொல்லியிருக்கீங்க என்கிட்ட அவரை பத்தி எந்த புகாரா இருந்தாலும் உங்ககிட்ட சொல்லச் சொன்னீங்கல

 

 

“இப்போ நீங்களே அவர் ஏன் என்கூட பேசிட்டு இருக்காருன்ற மாதிரி பேசறீங்க என்றாள் அவள். “அது ஒண்ணுமில்லை கார்த்தி, இவன் என்கிட்ட பேசறதை விட முக்கியமா லைப்ரரிக்கு போறேன்னு சொன்னான், அதான் என்னன்னு கேட்டேன்.

 

 

“நீ சொல்லு கார்த்தி இவன் இன்னும் வேற என்னலாம் உன்கிட்ட கலாட்டா பண்றான்னு. நான் கேட்கிறேன் அவனை என்றான் வைபவ். “சொல்லு கார்த்தி, அதான் வைபவ் கேட்குறான்ல நான் என்னென்ன பண்ணேன்னு அவன்கிட்ட தெளிவா சொல்லிடு, எல்லாம் சரியா சொல்லணும் சரி தானே என்று சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டான் அவன்.

 

 

“அது… அது வந்து… கல்யாண்… என்னை… என்கிட்ட… என்று அவள் திணற “டேய் என்னடா செஞ்ச கார்த்தியை எதுக்கு இப்படி திக்குவாய் பொண்ணு மாதிரி ஆக்கி வைச்சு இருக்க, பாவம் அவ திக்கி திக்கி பேசுறா என்று நண்பனை பார்த்து கேட்க சரயு வந்தாள்.

 

 

“என்ன என்னை விட்டு இங்க என்ன மாநாடு நடக்குது என்று அவள் ஆரம்பிக்க அதுவரை நடந்த உரையாடலை வைபவ் அவளிடம் கூறினான். “டேய் மக்கு வைபவ் அவன் ஏதோ சொல்ல முடியாத வேலை செஞ்சு இருக்கான் அது உனக்கு புரியலையா

 

 

“விளக்கெண்ணை மாதிரி நின்னு கேள்வி கேட்டுட்டு இருக்கான் பாரு. நாம இங்க அதிக்கபடி வா கிளம்பலாம் என்றாள் சரயு. “கார்த்தி இவன் என்ன பண்ணியிருந்தாலும் உனக்காக அவனை நான் கவனிக்கறேன் என்றவன் கல்யாணின் முதுகில் இரண்டு அடி வைத்தான்.

 

 

“போதுமா கார்த்தி இது உனக்காக தான் என்றான் வைபவ். “டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, நீ அடிச்ச மாதிரி தெரியலையே, ஏதோ கன்னுக்குட்டியை தடவி கொடுக்கற மாதிரி தெரிஞ்சுதே என்றாள் சரயு.

 

“அட ஆமாமில்லை, என்ன வைபவ் நீங்க தடவி கொடுத்த மாதிரி தானே இருந்தது. சரயு சொல்றது சரி தான் நீங்க அவரை நல்லா ரெண்டு அடி போடுங்க என்றாள் கார்த்திகா.

 

 

“அதான் வந்த வேலை முடிஞ்சுதுல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று அவளை நோக்கி திரும்பினான் கல்யாண். “என்னடா முக்கியமான வேலை நாங்க போனதும் திரும்பவும் கார்த்திகிட்ட கலாட்டா பண்ணப் போறியா என்றான் வைபவ்.

 

 

“அதெல்லாம் இல்லைடா நீங்க அப்படி திரும்பினதும் நான் அவ கால்ல விழணும் இல்லன்னா அவ என்னை மன்னிக்க மாட்டா என்றான் சோகக் குரலில் கல்யாண். “ஹேய் உங்களை நான் எப்போ கால்ல விழ சொன்னேன், நம்பாதீங்க இவர் பொய் சொல்றார் என்று அவனை அடிக்க போனாள் அவள்.

 

 

சந்தோசமாக அதை பார்த்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர் சரயுவும் வைபவும். “ஏன் வைபவ் நீயும் ஷர்மியும் இப்படி எல்லாம் இருக்க மாட்டீங்களா என்றாள் அவள். “எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்கணுமா என்ன என்று பதில் கேள்வி கேட்டான் வைபவ்.

 

 

இப்போதெல்லாம் ஷர்மி வேண்டுமென்றே இரவு வேளைகளில் போன் செய்து அவனை அதிகமாக தொல்லை செய்தாள். முதலில் பொறுமையாக சொல்லி பார்த்தவன் நாளடைவில் இரவு வேளைகளில் போனை அணைத்து வைத்துவிடுவான்.

 

 

அவள் கேட்டால் போன் சார்ஜ் நிற்க மாட்டேன் என்கிறது, அது தான் அணைத்துவிட்டு சார்ஜ் ஏத்தி விடுவதாகவும் சமயங்களில் வீட்டில தொடர்பு கிடைக்காது என்றும் ஏதேதோ காரணங்கள் சொல்லிவிடுவான்.

 

 

“ஏன் வைபவ் நான் வேணா உங்களுக்கு ஒரு போன் வாங்கி தரட்டுமா என்றாள் ஷர்மி. “எதுக்கு ஷர்மி என்றான் அவன். “உங்ககூட என்னால இப்போலாம் பேசவே முடியறது இல்லை. அதான் கேட்டேன் என்றாள் அவள்.

 

 

“தேவையில்லை ஷர்மி, என்கிட்ட இருக்கறதே எனக்கு போதும். நீ ஏன் அப்படி எல்லாம் நினைக்கிற, அதான் நாம தினமும் பார்க்கிறோமே என்றான் வைபவ். “அதுவும் சரி தான் என்று அவள் வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்டாள். தன் மனதிற்குள் எல்லாம் என் நேரம் என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஷர்மி.

 

 

சில நாட்கள் கழித்து ஒரு நாள் “ஹேய் ஷர்மி எப்படி போயிட்டு இருக்கு உங்க காதல் என்று வாயை இழுத்து காட்டினாள் நளினி. “அடியேய்… காதல் கீதல்ன்னு சொன்னே நான் கடுப்பாகிடுவேன்

 

 

“அவன் சரியான சாமியார்டி அவனை எல்லாம் காதலிக்கறதே பெரிய விஷயம். எனக்கு ஒரு சந்தோசம் என்னன்னா போன வருஷம் செமஸ்டர்ல அவனை இரண்டாவது இடத்துக்கு தள்ளினது தான் எனக்கு பெரிய வெற்றியே.

 

 

“இருந்தாலும் அவன் ரொம்ப படிப்பாளியா இருக்கான்டி, நானும் படிக்க தான் செய்யறேன் ஆனா என்னால இரண்டாவதோ இல்லை மூணாவதோ தான் வர முடியுது என்றாள் ஷர்மி வெறுப்பாக.

 

 

“நாம போட்ட தற்கொலை முயற்சி, காதல் பிளான் எல்லாம் சுத்த வேஸ்ட்ன்னு சொல்றியா??? என்றாள் நளினி. “அப்படின்னு சொல்ல மாட்டேன், அதுக்கு கொஞ்சம் பலன் இருக்கு. ஆனா அவனை ஒரேடியா பின்னாடி தள்ள முடியலை என்றாள் ஷர்மி.

 

 

“சரி அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்க என்றாள் நளினி. “நானும் அவனை படிக்க விடாம தினமும் அவனுக்கு இரவு நேரத்தில போன் பண்ணுறேன். சமயத்துல வேணும்னே ஆப் பண்ணி வைக்கறான் போல. என் தொல்லை தாங்கலைன்னு

 

 

“என்ன சொல்ல எல்லாம் என் நேரம், இவன்கிட்ட நான் அவமானப்படணுமம்ன்னு இருக்கு என்றாள் ஷர்மி சலிப்பாக. “அவங்க அம்மாவோட நம்பர் இப்போ தான் எனக்கு கிடைச்சுது. இனி எப்படி அவனை படிக்க விடறேன்னு பாரு என்றாள் அவள் தோழியிடம்.

 

 

“ஓ… அதுக்காக தான் நீ என்னை காதலிக்கற மாதிரி நடிச்சியா??? என்ற குரலில் தூக்கி வாரி போட நளினியும், ஷர்மியும் எழுந்து நின்றனர், அங்கு ஷர்மியை கோபத்துடன் பார்த்தவாறே நின்றிருந்தான் வைபவ்.

 

 

கல்யாண் அவ்வபோது அவளை தொடர்ந்ததில் ஷர்மி தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அவள் வீட்டில் எல்லோருமே ஊருக்கு போயிருந்தனர். ஷர்மி அந்த நேரத்தை பயன்படுத்தி வைபவிடம் தற்கொலை முயற்சி என்று நாடகமாடி இருப்பதை கண்டுபிடித்தான் கல்யாண்.

 

 

இருந்தும் வைபவ் நம்பும்படியாக சொல்ல வேண்டுமே என்று நளினியையும் பின் தொடர்ந்தவனுக்கு நளினியும் ஷர்மியும் அடிக்கடி ஒரு பார்க்கில் சந்தித்து பேசுவதை கண்டுகொண்டான்.

 

 

தற்செயல் போல் வைபவை அன்று அவனை பார்க்கிற்கு கூட்டிச் செல்ல அதற்கு பின் ஷர்மியும் நளினியும் பேசுவதை இருவருமே கேட்டுவிட்டனர். வைபவுக்கு ஷர்மி செய்ததை தாங்கவே முடியவில்லை.

 

 

முதலில் திகைத்தவள் பின் சுதாரித்துக் கொண்டு “ஆமாம் இப்போ என்ன செய்யலாம்ன்னு நினைக்கிற என்றாள் அவள். “சீய் உன்கிட்ட பேசறதே அவமானம், எப்படி இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை உன்னால பண்ண முடிஞ்சது

 

 

“எனக்கு உன் மேல காவியக் காதல்ன்னு நான் பொய் சொல்ல விரும்பலை, எப்போ உன்னோட காதலை ஏத்துக்கிட்டேனோ அப்போவே உன்னை என் வாழ்க்கை துணையா தான் நினைச்சேன். என் நம்பிக்கையை பொய்யாக்கிட்டியே???

 

 

“சரயு சொன்னா உன்னை நம்ப வேணாம்ன்னு, கல்யாண் வாய்விட்டு சொல்லலைனாலும் அவனுக்கும் நான் உன்னை ஏத்துக்கிட்டது வருத்தமே. நீ எனக்காக உயிரையும் கொடுக்க நினைச்சன்னு தான் உன் காதலை நான் ஏத்துக்கிட்டேன்

 

 

“உன்னோட இந்த திமிரும் ஆணவமும், பொறமை குணமும் உன்னை தப்பான பாதைக்கு தான் கொண்டு போகும். உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு, இனியும் யாருக்கும் இது போல செய்யாதே. இதுனால நீ சாதிச்சது தான் என்ன??? என்றான் அவன்.

 

 

“என்ன ரொம்ப டயலாக் எல்லாம் பேசுற, நான் என்ன சாதிச்சேனா, எப்பவும் முதல்ல வர்ற நீ இந்த ரெண்டு செமஸ்டர்லயும் ரெண்டாவதா வந்தியே, எப்படி. என்ன இந்த விஷயம் இன்னும் கொஞ்சம் கழிச்சு உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்

 

 

“பரவாயில்லை இப்பவே தெரிஞ்சதும் நல்லதுக்கு தான், இனி எனக்கு நடிக்க வேண்டிய தேவை இருக்காது. எப்படியோ என்னை பத்தி உனக்கு தெரிஞ்சதுனால, நீ இதையே நினைச்சு சரியா படிக்கமாட்ட. எனக்கு அது போதும் என்றாள் அவள் ஒருவித வக்கிரத்துடன்.

 

 

“அதுனால உனக்கு என்ன கிடைக்க போகுது??? என்றான் கேள்வியாக. “நான் தான் எப்பவும் முதல்ல வந்திட்டு இருந்தேன். இதுக்கு முன்ன படிச்ச கல்லூரியில நான் தான் முதல்ல வருவேன். இங்க வந்த போது எனக்கு எந்த எண்ணமும் இல்லை

 

 

“நான் தான் வரணும்ன்னு தான் நினைச்சேன், என்னால முடிஞ்ச வரை படிச்சேன். ஆனாலும் நீ தான் முதல்ல வந்த, பத்தாததுக்கு சரயு என்னை பார்த்த பார்வை, எதையும் என்னால மறக்க முடியலை. அதுனால தான் நீ முதல்ல வரகூடாதுன்னு நினைச்சேன்

 

 

“நீ படிச்சு என்னை ஜெயிச்சிருந்தா அது தான் உனக்கு வெற்றி, இது உன்னோட வெற்றி இல்லை. இது உன்னோட குறுக்கு புத்தியை தான் காட்டுது. இது தான் கடைசி நான் உன்னை பார்க்குறது

 

 

“பார்த்தா??? என்றவளிடம் “அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காது, அப்படி நீ என் முன்னால வந்தா அன்னைக்கு நீ வேற ஒருத்தனா என்னை பார்ப்ப என்று கடுமையான குரலில் எச்சரித்துவிட்டு கிளம்பினான் வைபவ்.

 

 

அவளிடம் சவாலாக பேசினாலும் அவனால் அந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை. கடற்கரையில் நடந்த சம்பவமும் அவனுக்குள் வந்து அலைகழித்தது. என்ன மாதிரி பெண் இவள் என்ற ஆத்திரமும் ஒருங்கே எழுந்தது.

 

 

சரயுவுக்கு தன்னால் தான் ஷர்மி வைபவிடம் விளையாடியிருக்கிறாள் என்று குற்றவுணர்வு எழுந்தது. கல்யாண் பாவம் இருவரையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். நண்பர்களை கவனிப்பதிலேயே இருந்தவன் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிட்டான்.

 

 

____________________

 

 

வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தவளுக்கு கல்யாண் சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டது நினைவு வர தனக்குள் சிரித்துக் கொண்டாள் கார்த்திகா. இருந்தாலும் அவனுக்கு ரொம்ப தைரியம் தான் இப்படி பொசுக்குன்னு முத்தம் கொடுத்துட்டு எப்படி எல்லாம் விளையாட்டு காட்டுறான் என்று தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டாள்.

 

 

மகளை கண்டும் காணாமல் கண்ட ராஜசேகருக்கு அவள் போக்கில் சற்று மாறுதல் இருப்பது கண்ணில் பட தன் மூத்த மகனை அழைத்து அவளை கண்காணிக்க சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் கடந்திருக்க முத்துக்குமார் அவன் தந்தையின் எதிரில் வந்து நின்றான்.

 

 

“அப்பா நீங்க நினைச்சது சரி தான்ப்பா கார்த்திகா அவகூட படிக்கிற ஒரு பையனை விரும்புறா. அவன் பேரு கல்யாண், அவன் அம்மா, தம்பி ரெண்டு பேர் தான் இருக்காங்க. அவனோட அப்பா இப்போ இரண்டு வருஷம் முன்னாடி தான் இறந்து போயிருக்கார்

 

 

“அவங்களுக்கு சின்னதா ஒரு மளிகை கடை இருக்கு, அது தான் அவங்களுக்கு வருமானம் கொடுத்திட்டு இருக்கு என்று தனக்கு தெரிந்த விபரம் அனைத்தும் ஒன்றுவிடாமல் தந்தையிடம் ஒப்பித்தான் அவன்.

 

 

“என்ன செய்யலாம் முத்து என்றார் அவர் மகனை கேள்வியாக, “இதுல என்னை கேட்க என்னப்பா இருக்கு, அவளுக்கு நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாப்பிள்ளையாய் பார்த்து சீக்கிரம் கல்யாணம் முடிவு பண்ணிடலாம் என்றான் முத்து.

 

 

“எனக்கும் அது தான் சரின்னு படுது, நாம இந்த விஷயத்தை கொஞ்சம் கவனமா தான் கையாளணும் என்று யோசித்தவர் மறுநாளே மாப்பிள்ளை வீட்டினரை பெண் பார்க்க அழைத்து வந்துவிட்டார்.

 

 

கார்த்திகா கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும் போது நெய் மணக்கும் வாசம் அடிக்க நேராக அடுக்களைக்குள் நுழைந்தாள் அவள். “அம்மா என்னம்மா இன்னைக்கு என்ன விசேஷம் நம்ம வீட்டுல நெய் வாசம் கொஞ்சம் தூக்கலா இருக்கு என்றாள் அவள்.

 

 

“உன் செல்ல அப்பா உன்கிட்ட சொல்லலையா, காலையிலேயே உன்கிட்ட சொல்லிட்டேன்னு என்கிட்ட சொன்னாரே. உன்னை பெண் பார்க்க வர்றாங்க என்றதும் மகள் முகம் மாறியதை இந்திரா குறித்துக் கொண்டார். “என்னம்மா அப்பா சொல்ல மறந்திருந்தா நீ என்கிட்ட சொல்லி இருக்கக் கூடாதா என்றாள் மகள் ஆற்றாமையுடன்.

 

 

“எனக்கே நீ காலேஜ்க்கு கிளம்பின பிறகு தான் தெரியும், அப்புறம் எப்படிம்மா நான் உன்கிட்ட சொல்லி இருக்க முடியும் என்னாச்சு கார்த்தி, எதாச்சும் பிரச்சனையா??? என்றார் மகள் முகம் பார்த்து. கார்த்திகா தந்தையிடமும் தமையனிடமும் பேசிய அளவிற்கு கூட அவள் தாயிடம் அதிகமாக பேசியதில்லை. அதற்கு காரணம் ராஜசேகரே மனைவிக்கு விவரம் குறைவு என்று சொல்லி பெரும்பாலும் அவரிடம் எதுவும் பகிர்வதில்லை.

 

தாயிடம் அதிகம் பகிர்ந்ததில்லை எனினும் அவளுக்கு அவள் தாயை அதிகமாகவே பிடிக்கும். கார்த்திகா பேரும் குழப்பத்தில் இருந்தாள், கல்யாணிடம் இந்த விஷயத்தை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று தோன்ற அவனுக்கு போன் செய்தாள்.

 

 

கல்யாணோ வைபவின் பிரச்சனையால் வேறு யோசியாதவன் கார்த்திகாவின் அழைப்பை ஏற்கவில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் கார்த்திகா தயாராகி வந்து நின்றாள்.

 

 

மாப்பிள்ளை வீட்டினருக்கு அவளை பிடித்துப் போக அவர்கள் அக்கணமே வெற்றிலை பாக்கு மாற்றிக்கொண்டு நிச்சயத்தை உறுதி செய்தனர். கார்த்திகாவுக்கு விஷயம் கைமீறி போகிறதே என்றிருந்தது. இந்திராவுக்கும் இப்படி அவசரமாக வெற்றிலை மாற்றியது பிடிக்கவில்லை.

 

 

தாய் அறியாத சூல் இல்லையே, மகளின் விருப்பத்தை அவர் எப்போதோ கண்டுகொண்டிருந்தார். மகளாவது எந்த கட்டாயத்திற்கும் ஆளாகாமல் அவள் விருப்பத்திற்கு வாழ வேண்டும் என்பதே அவரின் பிரார்த்தனையாக இருந்தது,

 

 

அவளுக்கு பிடித்தவன் நல்லவனாக இருக்க வேண்டுமே என்ற கவலையும் இருந்தது, அதையும் மீறி மகளின் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது, அவள் சிறந்தவனை தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்பினார்.

 

 

மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி செல்ல தந்தையின் எதிரில் நின்றாள் கார்த்திகா, அதை ஒரளவு எதிர்பார்த்திருந்த அவர் என்ன என்பது போல் மகளை ஏறிட்டார்.

 

 

“என்னப்பா இதெல்லாம் திடுதிப்புன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க அவங்க பாட்டுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. தட்டை மாத்திட்டு போயிட்டு இருக்காங்க. என்னப்பா நடக்குது இங்க என்னை கேட்கணும்ன்னு உங்களுக்கு தோணவே இல்லையா

 

 

“அவங்க வர்ற விஷயத்தை கூட நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே, ஏன்பா. என்கிட்ட சொல்லணும்ன்னு உங்களுக்கு தோணலையாப்பா, நீங்க என்கிட்ட இப்படி இருக்க மாட்டீங்களே என்றாள் அவள் வருத்தமும் கோபமும் இயலாமையும் கலந்து.

 

 

“நீ கூட என்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டியேம்மா என்றார் அவர். “என்னப்பா நான் என்ன மறைச்சேன் என்றாள் அவள். “கல்யாண் என்றார் அவர் ஒற்றை சொல்லாக, “அப்பா என்று திகைத்தவளுக்கு அப்போது தான் எல்லாமும் புரிந்தது.

 

 

“அப்பா அதை நான் உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கலை. என்னோட படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்ன்னு நினைச்சேன். அவர் ரொம்ப நல்லவர்ப்பா நீங்க அவரை கூப்பிட்டு பேசுங்க உங்களுக்கு அவரை பிடிக்கும் என்றாள் அவள்.

 

 

“என் தகுதிக்கும் தராதரத்திற்கும் நிகரில்லாத ஒருவனிடம் என்னை பேசச் சொல்கிறாயா கார்த்திம்மா, உனக்கு அவன் சரியானவனே கிடையாதும்மா. நீ அவனை கட்டிகிட்டா கஷ்டப்படுவடா அப்பா சொல்றதை கேளும்மா என்றார் கெஞ்சலாக.

 

 

அவள் பிடிவாதம் தான் அவரை கொண்டிருந்ததே அவள் விடாப்பிடியாக மறுக்க ராஜசேகரும் முதல் முறையாக மகளை எதிர்த்தார், கண்டித்தார். அவளை கல்லூரிக்கு போகக் கூடாது என்று சொல்லி அவளை வீட்டு காவலில் வைத்தார்.

 

 

அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் விழி பிதுங்கி நின்றாள் கார்த்திகா. அவள் கைபேசியும் தற்போது அவள் வசம் இல்லை. எப்படி தன்னிலை பற்றி அவனுக்கு சொல்வது என்று பலத்த யோசனையில் அவள் இருக்க அந்த சந்தர்ப்பம் அவளுக்கு அவள் தாயால் கொடுக்கப்பட்டது.

 

 

மகளுக்காக கணவரிடம் அவர் மன்றாடி பார்த்து தோற்றவர், வேறு வழியில்லாமல் கணவரது செய்கையை கண்டு அமைதியானார். அகிம்சை முறையில் எதிர்க்க தயாரானார் அவர்.

 

 

மகளின் அறைக்கு சாப்பாடு எடுத்து சென்றவர், தெரியாமல் விட்டுச் செல்வது போல் அவருடைய கைபேசியை மகள் அறையில் விட்டுவிட்டு வந்தார் அவர். கைபேசியை கண்டதும் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள அன்னை தெரியாமல் விட்டுப் போய் விட்டார் என மனதிற்குள் அன்னைக்கு நன்றி சொன்னாள் அவள்.

 

 

அவள் மீண்டும் கல்யாணுக்கு முயற்சித்தாள், “கல்யாண் உன்னோட போன் அடிச்சுட்டே இருக்கு, எடுத்து பேசுடா, எதாவது முக்கியமான அழைப்பா இருக்கப் போகுது என்றான் வைபவ்.

 

 

“பார்த்தேன் வைபவ் ஏதோ புது எண்ணா இருக்கு, அதான் எடுக்கலை என்று அவன் அந்த அழைப்பை அலட்சியம் செய்ய வைபவோ “இத்தனை தடவை உனக்கு அழைப்பு வருதுன்னா என்னன்னு தான் எடுத்து கேளேன் என்றான் அவன்.

 

 

கல்யாணோ யோசித்துக் கொண்டே இருந்தான், “கல்யாண் அதான் அவன் சொல்றான்ல எடுத்து பேசு என்றாள் சரயுவும். “ஹலோ என்று சொல்லி அழைப்பை காதுக்கு கொடுத்தவன் முகம் மாறியதை வைபவும் சரயுவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

அவன் எழுந்து சென்று தனியே பேசிவிட்டு வந்து மீண்டும் அமர மற்ற இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். “என்னாச்சு கல்யாண் ஏதாச்சும் பிரச்சனையா என்றான் வைபவ்.

 

 

“ஒண்ணும்மில்லை என்று சமாளித்தவனை இருவரும் தூண்டி துருவ அவன் கார்த்திகா வீட்டில் நடந்ததை சொல்ல வைபவுக்கு அவனுடைய கஷ்டம் எல்லாம் மறந்து போய்விட்டது. நண்பனை பற்றி அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.

 

 

மூவருமாக கூடி பேசி ஏதேதோ யோசனை செய்தனர், எந்த திட்டமும் ஒத்து வராது போல் தோன்றியது. ராஜசேகர் ஒன்றும் லேசுப்பட்டவர் இல்லை என்பதை ஏற்கனவே வைபவ் அறிந்து வைத்திருந்தான்.

 

 

முடிவாக இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுத்து அதற்கு ஆவன செய்தனர். வைபவ், கல்யாண், சரயுவுக்கு அது கடைசி செமஸ்டர், அவர்கள் திருமண தேதியை உறுதி செய்திருந்தது, கடைசி பரீட்சைக்கு முந்திய பரீட்சை தினத்தில்.

 

 

ராஜசேகர் மகளை கல்லூரிக்கு அனுப்பவில்லையே தவிர அவளை தேர்வுக்கு அனுப்பிருந்தார். அது அவர்களுக்கு வசதியாக போக தேர்வு முடிந்ததும் அவளை கல்லூரியின் பின் பக்க வாயில் வழியாக கூட்டிச் சென்று அவர்கள் திருமணத்தை கோவிலில் நடத்திவிட்டு அன்றே அதை பதிவும் செய்தனர்.

 

 

Advertisement