Advertisement

அத்தியாயம் –8

 

 

“ஹாய் என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும் என்பது போல் பார்த்தான்.

 

 

“ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை வாயை திறந்து கேட்டா தான் என்ன என்றாள் கார்த்திகா. “அதான் உனக்கு புரிஞ்சு போச்சுல, ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது நடுவுல ஹாய் byeன்னு இடைமறிச்சுட்டு இருக்க என்றான் அவன்.

 

 

“ஹலோ, கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க, நடக்குற வழியில நீங்க மட்டும் தனியா குறுக்க நின்னு வழிமறிச்சுட்டு நிக்குறீங்க, நான் உங்களை இடைமறிக்கிறேன் சொல்லுறீங்க என்றாள் அவள் காட்டமாக.

 

 

“தனியாவா…. என்று இழுத்துக் கொண்டே அவன் திரும்பி பார்க்க சரயு தள்ளி நின்று கையில் போனை வைத்துக் கொண்டு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். அவனுக்கு ச்சே என்று ஆகிவிட அவளிடம் அதை காட்டக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

 

 

“ஏன் உங்களுக்குன்னு வேணா பெரிசா ஒரு பாதை போட சொல்லலாமா, இந்த இடைவெளில உங்களால போக முடியாதா என்றான் அவன்.

 

 

“ஓ போகலாமே நீங்க இப்படி நீளமாவும் அகலமாவும் இருந்தா நான் எப்படி போகறதாம் என்று அவள் கேட்க சரயு போனை வைத்துவிட்டு அங்கு வந்தாள். “என்ன கல்யாண் என்னாச்சு.

 

 

“இந்த அழகுராணிக்கு இந்த இடத்துல போக முடியாதாம், என்கிட்ட வம்பளந்துகிட்டு இருக்கா என்றான் கல்யாண். “சரி நீ வழியை விட வேண்டியது தானே. நீ எதுக்கு அவகிட்ட பதில் பேசிட்டு இருக்க என்றாள் சரயு.

 

 

‘ஆமாம் நான் எதுக்கு இவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன் என்று யோசித்தவன் வழியை விட “ரொம்ப தேங்க்ஸ் என்று கழுத்தை வெட்டிவிட்டு போனாள் அவள்.

 

 

“கொழுப்பு பிடிச்சவ என்று வாய்விட்டு அவன் சொல்ல “ஆமாமாம் நெறைய கொழுப்பு இருக்கு. உனக்கும் வேணுமா சொல்லு தர்றேன் என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்த லேப்பிற்குள் ஓடி மறைந்தாள்.

 

 

“சரி போன் வந்தா சொல்லிட்டு போகமாட்டியா, இப்படி தான் சொல்லாம கொள்ளாம போவியா என்றான் கல்யாண். “இல்லைடா ஊர்ல இருந்து அப்பத்தா கூப்பிட்டாங்க, அதான் சொல்லாம போயிட்டேன் சாரிடா என்றாள் அவள்.

 

 

“சரி வைபவ் எங்க போனான் என்றான் அவளிடம், “அவன் நோட்ஸ் ஏதோ எடுக்கணும்னு லைப்ரரிக்கு போயிருக்கான் என்றாள் அவள். “என்கிட்ட சொல்லவே இல்லை, என்ன நோட்ஸ் என்றான் அவன்.

 

 

“ஹேய் அவன் இன்னும் xxx புத்தகம் வாங்கலை, அதை குறிப்பு எடுக்க தான் போயிருக்கான் என்றாள் அவள். “இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை, அவன்கிட்ட இன்னும் வேற என்ன என்ன புத்தகம் இல்லை என்றான் கல்யாண்.

 

 

“எதுக்கு என்றவளிடம் “ஹ்ம்ம்… வாங்கி தர்றதுக்கு தான் கேட்டேன் என்றான் அவன் பதிலுக்கு. நண்பனை பெருமிதமாக பார்த்தாள் சரயு. “எனக்கு ஏன் இது தோணாம போச்சு என்றாள் அவள்.

 

 

“அதுக்கெல்லாம் மண்டையில மசாலா இருக்கணும் என்றான் அவன். “போதும் போதும் கொஞ்சம் அடங்கு, எனக்கே அவன் இன்னைக்கு தான் சொன்னான். அப்புறம் என்ன சொன்ன மண்டையில மசாலாவா… அது உனக்கு ரொம்ப இருக்கப் போயி தான் அந்த பொண்ணுகூட கடலை போட்டுட்டு இருந்தியா என்று அவள் பதிலுக்கு கேட்கவும் அவன் அமைதியாகிவிட்டான்.

 

 

“சரி உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை, நான் கடைக்கு போய்ட்டு வர்றேன் என்றவன் திரும்பி வரும் போது வைபவுக்கு தேவையான புத்தகத்துடன் வந்தான்.

 

 

“வைபவ் இந்தா நீ வாங்க வேண்டிய புத்தகம் நான் வாங்கிட்டேன் என்றான் கல்யாண். “எதுக்குடா இதெல்லாம் நான் லைப்ரரில எடுத்து படிச்சிக்க மாட்டேனா. இந்த புத்தகத்தோட விலை ரொம்ப அதிகமாச்சேடா என்றான் வைபவ்.

 

 

“எதுக்குடா இதுக்கு எல்லாம் கணக்கு பார்க்குற, நீ அன்னைக்கு பார்த்தியா. இப்போ நான் வாங்கி தரும் போது ஏன் பார்க்குற என்றதும் எதுவும் பேசாமல் புத்தகத்தை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டான் வைபவ்.

 

 

“அப்பப்பா இவங்க போடற சீன் தாங்கலை… இவரு பெரிய சூர்யா அவர் பெரிய  தேவராஜ், என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்னு பாடிகிட்டு இருக்கானுங்க என்று அவர்களை நொடித்துக் கொண்டே அங்கு வந்தாள் சரயு.

 

 

மனதிற்குள் இருவரையும் நினைத்து பெருமை பொங்கினாலும் அவர்களை கலாட்டா செய்வது ஒன்றே குறியாக இருந்தாள் அவள். “வாயாடி அடங்கவே மாட்டியா என்று அவள் தலையில் கொட்டினான் கல்யாண்.

 

 

“தம்பி நீ அந்த வாயாடிகிட்ட… என்று அவள் ஆரம்பிக்கவும் “ஹேய் லூசு கொஞ்சம் வாயை மூடு என்று அங்கிருந்து நகர்ந்தான் கல்யாண்.

 

 

“என்னாச்சு இவனுக்கு நீ ஏதோ சொல்ற அவன் ஓடிட்டான் என்றான் வைபவ். “அதெல்லாம் தேவ ரகசியம் தம்பி சமயம் வரும் போது உன்கிட்ட சொல்றேன் என்றாள் சரயு.

 

 

ஷர்மிளா இப்போதெல்லாம் சரயுவின் பக்கத்தில் உட்காருவதில்லை. ஷர்மிளாவை விடவும் சரயு நன்றாக மதிப்பெடுத்து அவளை மூன்றாம் இடத்தில் தள்ளிவிட்ட கோபம் அவளுக்கு. சரயு பார்பதற்கு தான் எதுவும் தெரியாதது போல் இருப்பாள். படிப்பில் படுசுட்டி.

 

 

அவளுக்கும் படிப்பில் போட்டி உண்டு வைபவைவிட அதிக மதிப்பெண்கள் பெற அவளும் படிப்பதுண்டு. ஆனால் அதில் பொறமை துளியும் இருந்ததில்லை. வைபவ் பற்றி அவள் எப்போதும் பெருமிதமே கொள்ளுவாள். ஷர்மிளாவுக்கு கொலைவெறியாக இருந்தது.

 

 

இதுவரை அவள் படித்த கல்லூரியிலும் சரி, பள்ளியிலும் சரி அவள் மட்டுமே முதலில் வந்திருக்கிறாள். அவள் தந்தை கூட கேலியாக “என்னம்மா என்னாச்சு, உனக்கு உடம்பு எதுவும் சரியில்லையா. ஏன்டா மார்க் குறைஞ்சு போச்சு என்று கவலையாக வினவினார்.

 

 

அவளின் தம்பியோ “ஹேய் ரொம்ப அலட்டுவியே நான் தான் நல்லா படிக்கிறேன்னு இந்த கல்லூரியில உன் பருப்பு வேகலையா என்றதும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது. ‘இந்த சின்ன நண்டு என்னை என்ன பேச்சு பேசுது என்று அவளுக்கு ஆத்திரம்.

 

 

தந்தையின் கனிவான பேச்சிலும் சற்று உடைந்து போயிருந்தாள் அவள். எப்படியும் இந்த செமஸ்டரில் அவள் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்து விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தாள்.

 

 

ஆனால் எப்போதும் போல் இந்த முறையும் வைபவே முதலில் வந்திருந்தான். ‘இவனை படிச்சு ஜெயிக்க முடியாது, நடிச்சு தான் ஜெயிக்கணும். எதாவது செஞ்சு தான் நாம முதல்ல வரணும் என்று குறுக்குத்தனமாக யோசித்தாள்.

 

 

அவள் எந்தவித யோசனையும் இல்லாமல் தான் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலே கண்டிப்பாக அவளால் முதலாவதாக வந்திருக்க முடியும். அவள் மனதில் போட்டியும், பொறாமையும், தான் என்ற ஆணவமும் குடி கொண்டதில் புத்தி வேறு விதமாய் யோசித்தது,

 

 

மனதிற்குள்ளேயே ஏதோ திட்டம் தீட்டினாள். மறுநாள் ஆளை அசத்தும் வண்ணத்தில் உடை அணிந்து அலங்காரமாக வந்தவளை நிறைய விழிகள் இமைக்க மறந்து பார்த்தது.

 

 

வந்தவள் சரயுவின் அருகில் சென்று அமர்ந்தாள். “சாரி சரயு நான் உன்கிட்ட சரியா நடந்துக்கலைல அதான் நீ என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற. என்னை மன்னிச்சு உன் தோழியா சேர்த்துக்குவியா என்றவளை சரயு எதுவும் சொல்லவில்லை.

 

 

அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி போவாளே ஒழிய அவர்களை ஒரேடியாக வெறுத்துப் போகமாட்டாள். அதனால் அவள் எதுவும் பேசாமல் அவளிடம் சகஜமாகவே பேசினாள்.

 

 

ஆனாலும் அவள் மனதில் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது. அவள் அத்துடன் நில்லாமல் லைப்ரரியில் இருந்த வைபவை சந்தித்தாள். “வைபவ் எனக்கு இந்த கணக்கு சரியா போட தெரியலை, இதோட ஸ்டெப்ஸ் கொஞ்சம் எனக்கு விளங்க சொல்லித் தர முடியுமா என்றாள் அவள்.

 

 

“கண்டிப்பா சொல்லி தரேன் என்றவன் அவளுக்கு படிப்படியாக விளக்க அவளுக்கு அந்த கணக்கு நன்றாக புரிந்தது. உண்மையிலேயே இவன் புத்திசாலி தான் என்று அவனை மெச்சிக் கொண்டாள்.

 

 

இப்படி அடிக்கடி அவள் அவனை வந்து சந்தித்துக் கொண்டிருக்க அவனும் படிப்பு சம்பந்தமாக என்பதினால் மறுக்காமல் அவளுக்கு உதவி செய்தான். சரயு அன்று கல்லூரிக்கு வரவில்லை இது தான் சமயம் என்று எண்ணியவள் வைபவ் முன் சென்று நின்றாள்.

 

 

“சொல்லு ஷர்மி, கணக்கு எதுவும் புரியலையா, சொல்லித்தரணுமா என்றான் வைபவ். “இல்லை வைபவ் என் மனசு தான் எனக்கு புரியலை என்றாள் அவள். “என்ன சொல்ற என்றான் அவன். “நான் நேராவே சொல்றேன், எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. நான் உங்களை விரும்பறேன் என்றாள் அவள்.

 

 

“உங்களோட புத்திசாலித்தனம், எனக்கு நீங்க பாடம் புரிய வைத்த விதம், உங்க கண்ணியம், இதெல்லாம் தான் எனக்கு உங்களை பிடிக்க வைச்சுது வைபவ். என்னை ஏத்துப்பீங்களா என்றாள் அவள்.

 

 

“சாரி ஷர்மி எனக்கு அப்படி எந்த எண்ணமும் மனசில இல்லை. மன்னிச்சுடு உன்னோட நினைப்பை மாத்திக்கோ என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான் அவன்.

 

 

கல்லூரியில் விளையாட்டு தினம் நெருங்கிக் கொண்டிருக்க கல்யாண் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது அந்த பக்கம் வந்த கார்த்திகா அவனை பார்த்ததும் நின்றுவிட்டாள்.

 

 

ஆறடியில் இரண்டு அங்குலம் குறைவாக இருந்தவன் அதற்கேற்றவாறு உடல்கட்டுடன் கூடைபந்து பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தான். அசால்ட்டாக அவன் பந்தை கூடைக்குள் போடும் லாவகத்தை ஏனோ அவள் கண்கள் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தது.

 

 

“கார்த்தி என்னடி இங்கயே நின்னுட்ட, வா நாம வகுப்புக்கு போகலாம் என்று தோழி ஒருத்தி அழைக்க கண்கள் அவனைவிட்டு அகல மறுக்காமல் திரும்பி பார்த்தவாறே சென்றாள் அவள்.

 

 

‘என்னாச்சு எனக்கு நான் எதுக்கு இவனை இப்படி பார்க்கிறேன் என்று அவள் தன்னை தானே குட்டிக் கொண்டாலும் அவ்வபோது அவன் பயிற்சியில் ஈடுபடுவதை அவள் காணவே செய்தாள்.

 

ஒரு நாள் அவள் அப்படி நின்று பார்ப்பதை கல்யாண் கண்டுவிட்டான். ‘இந்த ஜான்சிராணி எதுக்கு இங்க நிக்குது. நம்மளையே பார்க்கற மாதிரி தெரியுது, எதாவது வம்பளக்க வந்திருப்பாளோ என்று நினைத்தவன் அவளை பார்த்து ‘என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்பதாய் தலையாட்டிவிட்டு நகரப் போனாள் அவள்.

 

 

“ஹேய் ஜான்சிராணி கொஞ்சம் நில்லு என்றான் அவன். “என் பேரு ஒண்ணும் ஜான்சிராணி இல்லை, கார்த்திகா என்றாள் அவள். “என்னாக்கா சொர்ணாக்காவா என்று கிண்டலடித்தான் அவன்.

 

 

“எதுக்கு என்னை கூப்பிட்டீங்க என்றாள் அவள். “நீ எதுக்கு இங்க நின்னு பார்த்திட்டு இருக்க, என்கிட்ட எதுவும் சண்டை போட வந்தியா என்றான் அவன். “பார்றா எங்களுக்கு வேலை இல்லை அதான் இவர் கூட சண்டை போட வர்றாங்க. ஆளை பாரு என்றாள் அவள்.

 

 

“அதான் என்னை பார்த்தியே, என்ன விஷயம் சொல்லிட்டு போ என்றான் அவன். ‘அய்யோ பார்த்திட்டான் போல என்ன சொல்ல என்று நினைத்தவள் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றுவிட்டாள். தோளை குலுக்கியவன் அவன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டான்.

 

 

கல்லூரியில் அன்று விளையாட்டு தினம் என்பதால் ஒட்டு மொத்த கூட்டமும் அந்த மைதானத்தில் கூடியிருந்தது. வைபவும், சரயுவும் கல்யாணை ஊக்கப்படுத்தவென்று முதல் வரிசையிலேயே அமர்ந்திருக்க கார்த்திகாவும் அவனை பார்ப்பதற்கு அவள் தோழிகளுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள்.

 

 

கையில்லாத பனியனில் ஒன்று என்ற எண் பதிந்திருக்க அந்த எண்ணை போலவே அவன் கலந்துகொண்ட போட்டிகளில் அவனும் முதலாவதாக வந்து பரிசுகளை குவித்தான்.

 

 

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் போது கல்யாணின் பார்வை அவன் முதலாவதாக வரவேண்டும் என்று தோழிகளுடன் தன்னையறியாமல் கத்திக் கொண்டிருந்தவள்பட அவளை பார்த்துவிட்டு அவன் இன்னும் வேகமெடுத்தான்.

 

 

இடைவேளையின் போது சற்று ஓய்வெடுத்தவன் முன் வைபவ் வந்து நின்றான். “என்னடா களைப்பா இருக்கா, ஏதாவது சாப்பிடுறியா என்றான் அவன். “இல்லைடா எதுவும் வேணாம், இப்போ சாப்பிட்டா அப்புறம் 200 மீட்டர்ல ஓட முடியாது

“கொஞ்சம் குளுகோஸ் தண்ணி மட்டும் கொடுடா என்று அதை வாங்கி குடித்துவிட்டு அமர்ந்திருந்தான். “யார் அந்த பொண்ணு என்று அருகில் அமர்ந்தான் வைபவ்.

 

 

“எந்த பொண்ணு என்றான் கல்யாண், மனதிற்குள் இவன் அந்த ஜான்சிராணியை சொல்கிறானோ என்று நினைத்தவன் ‘இருக்காது என்றும் யோசித்தான்.

 

 

“நீ முதல்ல வரணும்ன்னு கத்திட்டு இருந்துச்சே என்றான் வைபவ். ‘அய்யோ இவன் பார்த்துட்டானா என்று நினைத்தான். “தெரியலைடா எல்லார் மாதிரி அந்த பொண்ணும் கத்தியிருப்பா என்றான் கல்யாண் ஒப்புதல் வாக்குமூலமாக.

 

 

“நான் எந்த பொண்ணுன்னு சொல்லவே இல்லை, நீ எல்லார் மாதிரியும்ன்னு சொல்ற என்ற வைபவ் அவனை ஆழம் பார்த்தான். ‘ஆஹா இவன் நம்மளை போட்டு வாங்குறான் போலவே என்று முழித்தான் கல்யாண்.

 

 

அவனை என்று அவள் அவன் பயிற்சியின் போது நின்று பார்ப்பதை பார்த்தானோ அன்றிலிருந்து அவன் பார்வை அவள் தன்னை தொடர்வதை கண்டு கொண்டது. ஏனோ அவனும் அவள் அறியாமல் அவளை பார்க்கத் தொடங்கியிருந்தான்.

 

 

நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவனை பார்த்து வைபவ் பேச ஆரம்பித்தான். “அந்த பொண்ணோட அப்பா ராஜசேகர், அம்மா இந்திரா, ஒரு அண்ணன் முத்துக்குமார், தம்பி நிர்மல் குமார், இவளோட பேரு கார்த்திகா

 

 

“அவங்க அப்பா நல்ல வசதியானவர், தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு வாதம் பண்ணி அதை மற்றவர்களை நம்ப வைப்பதில் வல்லவர். அப்பனுக்கு தப்பாத பிள்ளையாய் அண்ணன் முத்துக்குமார்

 

 

“அவருக்கு எதிர்பதம் அவளின் அன்னை. அவளின் தந்தை எப்படி அவள் அம்மாவை திருமணம் செய்தார் தெரியுமா. கோவிலுக்கு சென்ற இடத்தில் அங்கு சாமி கும்பிட வந்த அவரை கண்டதும் காதல் கொண்டு, கட்டினால் இவரை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து கிட்டத்தட்ட அவர் வீட்டில் எல்லாரையும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அவள் அன்னையை மணந்தவர்

 

 

“அவள் தம்பி அம்மா பிள்ளை, இவள் அவர்கள் இருவருக்கும் செல்லப்பெண். இருவர் குணமுமே கலந்தவளாக இருப்பாள் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் நீ தான் முடிவெடுக்க வேண்டும் என்றான் வைபவ்.

 

 

கல்யாணுக்கு மலைப்பாக இருந்தது, நான் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையே இவன் அவள் ஜாதகத்தையே பிட்டு பிட்டு வைக்கிறானே என்று ஆச்சரியம் கொண்டான். அதை நண்பனிடம் கேட்கவும் செய்தான்.

 

 

“நீ என்னைக்கு அந்த பொண்ணை பார்க்கிறேன்னு நான் கவனிச்சனோ அன்னைக்கே இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். உனக்கு அவளை பிடிச்சிருக்கு, காதலா இல்லையான்னு ஒரு குழப்பம். இன்னைக்கு அதெல்லாம் மீறி உன்னோட கண்கள் அவளையே சுத்தி சுத்தி வந்ததை பார்த்தேன்

 

 

“அதான் உன்கிட்ட எனக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாமே சொல்லிட்டேன் என்றான் வைபவ். “நீ ஒரு துப்பறியும் சிங்கமா பிறந்திருக்க வேண்டியவன் எப்படிடா உனக்கு இப்படி ஒரு மோப்ப சக்தி என்று நண்பனை சிலாகித்தாலும் அவன் கூறியதை யோசிக்கவே செய்தான் கல்யாண்.

 

 

“என்னடா நடக்குது இங்க என்று வந்து சேர்ந்தாள் சரயு. “அந்த தேவரகசியத்தை பத்தி தான் இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்தேன். நீயே அவன்கிட்ட என்னன்னு கேட்டுக்கோ. நான் போய் அவனுக்கு ஜூஸ் வாங்கிட்டு வர்றேன் என்று நகர்ந்தான் வைபவ்.

 

 

‘அடப்பாவி சரியான போலீஸ் நாயா இருக்கானே, எப்படி கண்டுபிடிச்சான் என்று அவள் யோசிக்க, “லூசு எனக்கும் பார்வை இருக்கு, உன் பார்வைக்கு விழுந்தது என் பார்வைக்கு விழாதா என்று போகும் போக்கில் சொல்லிவிட்டு போனான் அவன்.

 

 

அவன் ஜூஸ் வாங்கிக் கொண்டு திரும்பும் வேளை ஷர்மிளா அவனெதிரில் நின்றாள். “ஒரு நிமிஷம் நில்லுங்க வைபவ், எனக்கு ஒரு பதில் சொல்ல மாட்டீங்களா. நான் உங்க பின்னாடி இப்படி நாய் மாதிரி சுத்துறனேன்னு என்னை கேவலமா நினைக்கிறீங்களா என்றாள் ஒரு மாதிரிக் குரலில்.

 

 

“ஷர்மி, நான் எந்த மாதிரியும் நினைக்கவே இல்லை. எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை. தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோ, என்னை இனிமே தொல்லை செய்யாதே என்று திரும்பி கூட பார்க்காமல் நகர்ந்தான் அவன்.

 

 

ஜூஸை கல்யாணிடம் கொடுத்துவிட்டு சரயுவுக்கு சாக்கோபாரை நீட்ட “எப்படிடா எனக்கு பிடிச்சதா செய்யுற என்று வியந்தாள் சரயு. “வைபவ் அவனுக்கு மட்டும் பொண்ணை பத்தி விசாரிச்சு சொல்லிட்ட, எனக்கு என்ன செய்யப் போற என்றாள் சரயு.

 

 

“நீ தானே, உனக்கு வாய் தான் அதிகம். நீ அதுக்கெல்லாம் சரியா வரமாட்டே. ஒழுங்கா வீட்டில பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கோ. சரியா என்றான் வைபவ்.

 

 

“அடப்பாவி எப்படி புட்டு புட்டு வைக்கிறான் பாரு என்று வாய்விட்டு கூறினாள் சரயு. “எனக்காக நீ எதுக்குடா இதெல்லாம் விசாரிச்ச என்றான் கல்யாண் நெகிழ்ச்சியாக.

 

 

“உனக்கு மட்டும்மில்லை சரயுவுக்கு இதெல்லாம் நான் செய்வேன். எனக்கு நீங்க சந்தோசமா இருக்கணும் அது தான் முக்கியம் என்றான் வைபவ். “உன்னை பத்தி நீ யோசிக்கவே மாட்டியா என்றான் கல்யாண்.

 

 

“எனக்குனா நான் எதையும் யோசிக்க மாட்டேன், ஆனா உங்களுக்கு ஒண்ணுன்னா நான் எல்லாமே யோசிச்சு தான் செய்வேன் என்றான் வைபவ் பதிலுக்கு. சரயுவுக்கும் கல்யாணுக்கும் கேட்கவா வேண்டும் ‘என் நண்பன் என்ற பெருமிதம் இருவர் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.

 

 

வைபவ் தெரிந்து தான் சொன்னானோ இல்லை தெரியாமல் சொன்னானோ அவன் விஷயத்தில் அவன் எதையும் ஆராயாமல் விட்டுவிட்டான்.

 

 

விளையாட்டு தினத்திற்கு பின் கல்யாண் கார்த்திகாவை பார்த்த பார்வையில் காதல் நிரம்பி வழிய, அவள் வெட்கத்துடன் தலை கவிழுவது என்று அவ்வபோது நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

 

“ஷு அப்பா, இவங்க தொல்லை தாங்க முடியலையே… கண்ணுலேயே குடும்பம் நடந்துறாங்களே, வாய் விட்டு சொன்னா தான் என்ன. இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு பண்ணறேன் என்றவள் தூரத்தில் சென்று கொண்டிருந்த கார்த்திகாவை அழைத்தாள்.

 

 

“ஹேய் ஜூனியர் இங்க வா என்று அவள் அழைக்க ‘என்னது ஜூனியரா என்று மனதுக்குள் கருவியவள் அவள் எதிரே வந்து நின்றாள். அருகில் வைபவும், கல்யாணும் புன்சிரிப்புடன் நின்றிருந்தனர்.

 

 

“என்ன சீனியர் என்னை மரியாதையா அழைச்ச மாதிரி இருந்தது, சொல்லுங்க என்று பவ்வியமாக வந்து நின்றாள் கார்த்திகா. வைபவோ ‘உனக்கு நல்லா வேணும் என்பது போல் சரயுவை பார்த்தான்.

 

 

“ஹேய் பொடிசு உன் பார்வையே சரியில்லையே. உன் பேச்சும் சரியில்லை என்ன விஷயம் என்றாள் அவள். “என்ன பெரிசு சொல்றீங்க பார்வை சரியில்லையா, இல்லையே நான் இவரை மட்டும் தானே பார்க்குறேன். ஒரு வேளை நான் உங்களை பார்க்குற மாதிரி தெரியுதோ

 

 

“ஏங்க நான் உங்களை பார்க்கறது உங்களுக்கும் தெரியும் தானே, நீங்களும் என்னை பார்க்குறீங்க தானே சொல்லுங்க பெருசுகிட்ட என்று அவள் சொல்லவும் வைபவும் கல்யாணும் வாய்விட்டு சிரித்தனர்.

 

 

“ஹா ஹா ஹா கார்த்திம்மா நீ தான் சரயுவுக்கு பதிலடி கொடுக்கற சரியான ஆளு. சரயு அவளை ஏதோ கலாட்டா பண்ணப் போறேன்னு நீ இப்படி நிற்குறது பார்க்க பாவமா இருக்கு என்று வைபவ் கலாட்டா செய்தான்.

 

 

“அடியேய் கார்த்தி உன்னை… உன்னை… என்று இழுத்த சரயு, “சொல்லுங்க என்னை… என்னை… என்ன செய்யப் போறீங்க என்றாள் கார்த்திகா. “நான் எதுவும் செய்யமாட்டேன், எல்லாம் என் தோழன் கல்யாண் பார்த்துக்குவான்

 

 

“ஆமா நீ சொன்னியே அதெல்லாம் உண்மை தானா என்றாள் சரயு. கல்யாணின் பேச்சை இழுத்ததும் அமைதியான கார்த்திகா மெதுவாக “எதை சொல்றீங்க என்றாள். “நீ அவனை பார்க்கறது தான், அவன் உன்னை பார்க்கரதையும் சேர்த்து தான் சொல்றேன் என்றாள் சரயு.

 

 

“இதுக்கு மேல உங்களை சேர்த்து வைக்க முடியாது, நீங்களா வாயை விட்டு உங்க மனசுல உள்ளதை சொல்லிக்கோங்க. நாங்க கிளம்புறோம், வா வைபவ், நாம கிளம்பலாம். இனி நமக்கு இங்க வேலை இல்லை என்று வைபவை இழுத்துக் கொண்டு அகன்றாள் சரயு.

 

 

“சரயு உண்மையை சொல்லு இதுக்கு மேல இருந்தா கார்த்தி உன்னை கலாட்டா பண்ணுவான்னு தானே, நைசா அவங்களை தனியா விட்டுட்டு கிளம்புன என்று அவளிடம் வம்பளந்தான் வைபவ்.

 

 

“அடேய் நீ தான்டா எல்லாத்துக்கும் காரணம் அவ முன்னாடி என்னை போட்டு வாங்குறியே, என் மானமே போச்சு. உனக்கு ஏன்டா இந்த கொலைவெறி என்றாள். “சரி சரி விடு விடு, நான் லைப்ரரி போய்ட்டு வர்றேன் என்று நகர்ந்தான் அவன்.

 

 

அவன் லைப்ரரிக்கு நுழையும் முன் அவனெதிரில் வந்து நின்றாள் ஷர்மிளா. “வைபவ் ஏன் என்னை இப்படி வதைக்கிறீங்க. எல்லாருக்கும் பார்த்து பார்த்து செய்யுறீங்க. உங்களுக்காக ஒருத்தி உங்களையே நினைச்சுட்டு இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியலையா

 

 

“எதுக்கு உங்க மனசுக்கு திரை போட்டு வைச்சு இருக்கீங்க. என்னை உங்களுக்கு பிடிக்கலையா என்றாள் கண்களில் வேதனையை தேக்கி. “ஏன் ஷர்மி நீங்க என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. எனக்கு காதல் பத்தி எந்த அபிப்பிராயமும் இல்லை

 

 

“எனக்கு என் நண்பர்கள் முக்கியம், அவங்களுக்காக நான் எதையும் செய்வேன். அப்படி தான் கல்யாண் கார்த்திகா விஷயமும், ஆனா எனக்கு என்னை பற்றி எந்த சிந்தனையும் இப்போதைக்கு இல்லை. இதுக்கு மேல நீங்க என்னை தொந்திரவு செஞ்சா விளைவுகள் கடுமையா இருக்கும் என்று முகத்தில் கடுமையுடன் பேசிவிட்டு சென்றான் அவன்.

 

 

அதன் பின் சில நாட்களாக அவள் அவன் முன் வரவேயில்லை, அப்போது தான் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது, ஷர்மிளா ஒரு பத்து நாளாக கல்லூரிக்கே வராதது.

 

 

ஒரு நிமிடம் அவனுக்குள் அந்த நினைவு வந்து போக அடுத்த நிமிடம் அதை பற்றி நமக்கென்ன என்று நினைத்துக் கொண்டு அவன் லேபிற்குள் நுழைந்தான்.

 

 

அவன் உள்ளே நுழையும் முன் “ஒரு நிமிஷம் என்ற குரல் தடுக்க நின்று திரும்பி பார்த்தான். அவன் முன் ஒரு  பெண் நின்றிருந்தாள். “உங்களுக்கு என்ன மனசுல பெரிய மன்மதன்னு நினைப்போ என்றாள் அவள்.

 

 

“நான் எதுவும் நினைக்கலையே, என்ன வேணும் உங்களுக்கு என்று நிதானித்த குரலில் வினவினான் அவன். “உங்க மனசில என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, ஷர்மிக்கு யாருமே இல்லைன்னு நினைச்சுட்டீங்களா… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “இப்போ என்ன சொல்ல வந்தீங்களோ அதை சொல்லிட்டு கிளம்புங்க என்றான் அந்த பேச்சு பிடிக்காதவனாக.

 

 

“ஏன் பேசமாட்டீங்க உங்களை மறக்க முடியாம அவ தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணா அது தெரியுமா உங்களுக்கு. இந்த பத்து நாளா அவ ஏன் காலேஜ்க்கு வரலைன்னு தெரியுமா உங்களுக்கு.

 

 

“அவங்க வீட்டுக்கே தெரியாம அவளை என்னோட அறையிலேயே தங்க வைச்சு இருக்கேன் அது தெரியுமா உங்களுக்கு. இப்போ தான் அவ கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வர்றா, அது தெரியுமா உங்களுக்கு என்று அவனை பார்த்து ஷர்மியின் தோழி பொரிய முதன் முறையாக அவன் மனம் குற்ற உணர்வுக்கு ஆளானது.

 

 

‘அய்யோ அன்னைக்கு நான் அதிகமா பேசிட்டனா, அதுனால தான் அவ இப்படி ஒரு முடிவெடுத்து இருப்பாளோ. கடவுளே நான் அவளை புண்படுத்திவிட்டேனா என்று அவன் தவிக்க ஆரம்பித்தான்.

 

 

மேலும் தனக்காக, தன் அன்பிற்காக ஒரு பெண் இப்படி செய்தது அவனுக்குள் ஏதோ செய்தது. அதன் பின் அவள் பேசியது எதுவும் அவன் காதில் ஏறவே இல்லை, அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்ற எண்ணமே அவனுக்குள் வட்டமிட்டது.

 

 

“ஷர்மிக்கு எதுவும் ஆகலையே என்றான் அவன் குரலில் ஒருவித வருத்தத்துடன், “அதை இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க என்றாள் அவள் வெட்டும் குரலில்.

 

 

இருந்தும் அவனுக்கு பதில் கொடுத்தாள், “நல்லாயிருக்கா, நான் தான் அவளை சமாதானப்படுத்தி வைச்சு இருக்கேன். எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ்க்கு வந்திடுவா என்றாள் அவள்.

 

 

அன்று வீட்டிற்கு வந்தவன் மொட்டை மாடிக்கு சென்று தனியே அமர்ந்தான், ஷர்மி அவனுக்காக உயிரையும் விடத் துணிந்தாள் என்பதே அவனை நிலைகுலைய செய்தது.

 

 

தன் மேல் பாசமும் அன்பும் கொண்டவர்கள் மிகக் குறைவே, அவன் அன்னை, தங்கைக்கு பின், கல்யாணும், சரயுவும் மட்டுமே அவன் மேல் குறைவில்லாத அன்பை செலுத்துபவர்கள்.

 

 

இவள் யார் இவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் இவளுக்கு ஏன் என் மேல் இத்தனை அன்பு என்று நினைத்தவனுக்கு அவள் காதலை ஏற்றுக் கொண்டால் தான் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.

 

ஒரு முடிவெடுத்தவன் அவள் காதலை ஏற்பது என்ற முடிவுக்கு வந்தான். இதை பற்றி கல்யாணிடமும் சரயுவிடமும் பேச வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் கைபேசி அழைத்தது.

 

 

அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “ஹலோ என்றான். “ஹலோ நான் ஷர்மி பேசறேன் என்றது எதிர்முனை. அவனுக்குள் ஏதோ குற்ற உணர்ச்சி தோன்ற “எப்படியிருக்க ஷர்மி, எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்த என்றான் அவன்.

 

 

“சாரி வைபவ் நளினி உங்ககிட்ட வந்து ஏதோதோ பேசியிருப்பான்னு நினைக்கிறேன், மன்னிச்சுக்கோங்க. நான் ஏதோ ஒரு குழப்பத்துல… என்று இழுத்தவளின் குரல் உடைந்து போனது போல் தோன்றியது.

 

 

“ஷர்மி இனி இப்படி செய்யாதே என்றான் அவன். “நீங்க என்கூடவே கடைசி வரை இருப்பீங்கன்னா இனி இப்படி செய்யமாட்டேன் என்றாள் அவள். “நான் உன்கூட இருப்பேன் ஷர்மி என்றான் அவன்.

 

 

அந்த பக்கத்தில் எந்த சத்தமும் இல்லை, சிறிது இடைவெளி விட்டு “வைபவ் நிஜமா தான் சொல்றீங்களா. என்னை நானே கிள்ளி பார்த்துக்கறேன். இது உண்மையா என்றாள். “உண்மையை தான் சொன்னேன் என்றான் அவன்.

 

 

வைபவ் நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் அவள் காதலை சட்டென்று ஏற்றுக் கொண்டான். அதன் விளைவு ஏற்படுத்தப் போகும் வலியை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

 

 

தந்தையானவன்

உயிர் கொடுத்ததில்

உறவானான்…

 

தாயானவள்

உயிர் சுமந்ததில்

உறவானாள்…

 

தாரமானவள்

உறவில் இணைந்ததில்

உறவானாள்…

 

தனயனானவன்

உயிரணு கொடுத்ததில்

உறவானான்…

நண்பனானவன்

இன்பத்தில்

பங்கெடுத்ததில்…

துன்பத்தில்

தோள் கொடுத்ததில்…

உற்ற நேரத்தில்.

உதவியதில்….

உறவல்லாத உறவானதில்

உற்ற தோழனானான்…

 

 

Advertisement