Advertisement

அத்தியாயம் –7

 

 

“பேரை சொல்லுவியா மாட்டியா என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க…. என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம் என்று அங்கிருந்து எழ முயன்றான் வைபவ்.

 

 

“சரி சரி சொல்றேன் கேட்டுக்கோங்க, என்னோட பேரு சரயு, என்னோட ஊரு தேனிக்கு பக்கத்துல இருக்கற போடி என்றாள் அவள். “இதுக்கா இவ்வளவு பில்டப்பு என்றான் வைபவ்.

 

 

“என்ன இப்படி சொல்லிட்டீங்க சரயுங்கறது என்னன்னு தெரியுமா அது ஒரு புண்ணிய நதி, ஸ்ரீராமர் இந்த உலகவாழ்க்கையை முடிச்சுக்க நினைச்சப்போ கடைசியா அந்த சரயு நதியில தான் முழ்கினதா புராணம் சொல்லுது.

 

 

“அது மட்டும் இல்லை ஸ்ரீராமர் பிறந்த அந்த அயோத்தி நகரம் சரயு நதிக்கரையில தான் அமைஞ்சு இருக்குதெரியுமா என்றாள் அவள். “ஹலோ ஹலோ புராணத்தை பத்தி என்கிட்டயே சொல்றியா. எல்லாம் என் நேரம் என்று தலையில் அடித்துக் கொண்டான் அவன்.

 

 

“உன் ஊரு போடி தானே அப்புறம் எப்படி நீ சென்னையில படிக்கிற, அங்கேயே படிக்க வேண்டியது தானே என்றான் அவன். “ஹலோ நீங்க வேற நானே எங்க குடும்பத்துல இருக்க எல்லாரையும் சரிகட்டி இந்த காலேஜ்ல தான் படிப்பேன்னு வந்து சேர்ந்திருக்கேன்

 

 

“அதை கெடுத்துருவீங்க போல இருக்கே என்றாள் அவள் அலுப்புடன். “நான் எதுவும் சொல்லலை தாயே, எனக்கு ஒரு சந்தேகம் என்றான் அவன். “என்ன என்றாள் அவள்.

 

 

“நீ இப்படி தான் எப்பவும் லொடலொடப்பியா, என்னை இன்னைக்கு தானே பார்த்தே, எப்படி இப்படி சகஜமா பேசுற என்றான் அவன். “உங்களை பார்த்தா நல்லா படிக்கிற புள்ளை மாதிரி தெரியுது. அதான் பக்கத்துல உட்கார வைச்சுக்கலாம்ன்னு… என்று அவள் இழுத்தாள்.

 

 

“ஹலோ ஹலோ உங்க கற்பனையை கொஞ்சம் நிறுத்துங்க, அதுக்காக எனக்கு படிக்க வராதுன்னு எல்லாம் நினைக்க வேண்டாம். நான் நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்ததினால தான் எனக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைச்சது என்றாள் அவள்.

 

 

“சரி நீ இப்போ என்ன தான் சொல்ல வர்ற என்றான் அவன். “படிக்கறவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து இன்னும் நல்லா படிக்கலாமேன்னு தான் உங்களை உட்கார சொன்னேன். இப்போ ரொம்ப வருத்தப்படுறேன் உங்களை இங்க ஏன் உட்கார சொன்னேன்னு என்றாள் அவள் பதிலுக்கு பதிலாக.

 

 

இப்படியாக சரயு வாயடிக்க, அவளுடன் வம்பளந்துக் கொண்டு வைபவும் அவளுடன் நட்பானான். இருவருமே நல்ல நண்பர்களாக இருந்தனர். கல்யாணுக்கு அவர்களை காணும் போது எப்படி ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியும் என்ற கேள்வியே வந்தது.

 

 

இப்படியே நாட்கள் விரைந்தது, வைபவ் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து அவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும்படி நடந்தான். இது ஒருபுறம் இருக்க கல்யாண் விளையாட்டில் சூரனாக இருந்தான்.

 

 

இருவரும் ஆளுக்கொரு பக்கமாக கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்யாண் விளையாட்டில் முதல்வனாக இருந்தாலும், படிப்பிலும் கவனமாகவே இருந்தான். வைபவும் கல்யாணும் எதிரெதிரே சந்திக்கும் போது லேசாக புன்னகையை பரிமாறிக் கொள்வதுமாக இருந்தனர்.

 

 

“சரயு நீ என்ன பண்ண என்றான் வைபவ் அவளிடம் மொட்டையாக. “என்ன பண்ணாங்க… என்று முகத்தை கண்ணை சுருக்கி அவனிடம் வினவினாள். “உன்னை பத்தி ஆளாளுக்கு என்கிட்ட வந்து புகார் சொல்றாங்க என்றான் வைபவ்.

 

 

“புகாரா என்ன புகார் என்றாள் அவள். ‘யார் புகார் சொல்லியிருப்பாங்க அதுவும் இவன்கிட்ட ஒரு வேளை அவளா இருக்குமோ, அவ தான் பண்ணியிருப்பா ஏற்கனவே என் மேல அவளுக்கு ஒரு காண்டு என்று நினைத்தவள் அவன் என்ன கூறப் போகிறானோ என்று அவனையே பார்த்தாள்.

 

 

“நீ நம்ம துறை ஆளுங்க மட்டும் இல்லாம மத்த துறையிலயும் போய் கலாட்டா பண்றியாமே. மீனு, தீபி, உமான்னு எல்லாரும் வந்து புகார் சொல்றாங்க. நீ தனி ஆளா அவங்க எல்லாரையும் கலாய்க்கிறியாமே

 

 

“அவங்க எல்லாரும் தான் என்கிட்ட வந்து புகார் பண்ணாங்க. என்னை எதுக்கு முறைக்கிற… அப்படி பார்க்காதே… என்னமோ நீ, நான் சொன்னா கேட்பேன்னு நினைச்சு என்கிட்ட வந்து சொன்னாங்க. அவங்களுக்கு என்ன தெரியும் நீ நான் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு என்று அவன் அவளை வாரவும் அவள் முகம் மாறியது.

கண்கள் அழுதுவிடுவேனோ என்பது போல் இருக்க “ஹேய் லூசு எதுக்கு இப்படி கலங்குற, நீ இவ்வளோ தானா. அய்யோ… அய்யோ… உன்னை பார்த்தா என் தங்கை நந்து ஞாபகம் தான் எனக்கு வருது. அதான் உன்னை நான் கலாட்டா பண்ணேன் என்றான் அவன்.

 

 

“என்ன பார்த்தா அவ்வளோ சின்ன பொண்ணா தெரியுதா, நீ எனக்கு அண்ணாவா… என்றாள் இழுத்துக் கொண்டு. “ஏன் இருக்கக் கூடாதா என்றான் வைபவ். “போடா நான் உன்னை எல்லாம் அண்ணான்னு கூப்பிட முடியாது என்றாள் அவள்.

 

 

“அதுவும் சரி தான் சரயு உன் வயசென்ன என் வயசென்ன. நான் உனக்கு தம்பி மாதிரி இருக்கேன். என்னை நீ அண்ணான்னு கூப்பிட முடியாது தான் என்றான் அவன் சிரித்துக் கொண்டே. “டேய் உன்னை…. என்றவள் நன்றாக அவனை மொத்தினாள்.

 

 

நாட்கள் விரைந்து செல்ல அவர்கள் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தனர். ஒரு நாள் காலையில் இரண்டாம் வகுப்பிற்கு விரிவுரையாளார் வந்திருக்க கல்யாண் ஏதோ பதட்டத்தில் இருந்தான்.

 

 

தற்செயலாக அவனை திரும்பி பார்த்த வைபவின் கண்களில் அவன் ஏதோ பரபரப்பாக இருந்தது போல் உணர்ந்தான். அவ்வப்போது வைபவ் அவனை இப்படி பார்ப்பது வழக்கம், ‘என்னவாக இருக்கும் என்று யோசித்தான். அந்த வகுப்பு முடிந்து விரிவுரையாளார் வெளியே செல்லவும் அவர்களுக்கு இடைவேளை தொடங்கியது.

 

 

அவசரமாக வெளியே வந்த கல்யாண் கைபேசியை எடுத்து யாரிடமோ பேசிவிட்டு வைத்தவன் அப்படியே கீழே அமர்ந்து விட்டதை பார்த்தவன் வேகமாக அவனருகில் சென்றான். “கல்யாண் என்னாச்சு, நீ ஏதோ பதட்டமா இருக்கேன்னு நினைக்கிறேன். ஏதாவது பிரச்சனையா என்கிட்ட சொல்ல முடிஞ்சா சொல்லு என்றான் வைபவ்.

 

 

“அது வந்து அப்பா அப்பாக்கு நெஞ்சு வலின்னு அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும்… வழியிலே… அவர் உயிர் பிரிந்து விட்டதாம் என்று அவன் சொல்லும் முன் அவன் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய ஆரம்பித்தது.

 

 

வைபவுக்கு அவன் வேதனை புரிந்தது, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன் அவன், அந்த வலியை அவன் உணர்ந்திருந்தான். “ஒரு பத்து நிமிஷம்இங்கேயே இரு என்றவன் வேகமாக விரிவுரையாளாரை தேடிச் சென்றான்.

 

 

அவரிடம் விபரம் சொல்லிவிட்டு தானும் அவனுக்கு துணையாக செல்லப் போவதாகக் கூறி அவரிடம் அனுமதி வேண்டினான். உடனே அனுமதி கொடுத்தவர் மேற்கொண்டு எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை அழைக்குமாறு கூறினார்.

 

 

அங்கு சென்றதும் தனக்கு தகவல் தெரிவிக்குமாறும் வகுப்பு முடிந்ததும் எல்லோருமே வருவதாக கூறினார் அவர். மீண்டும் வகுப்புக்கு வந்தவன் சரயுவை அழைத்து விபரமுரைத்தான்.

 

 

தானும் வருவேன் என்றவளை வகுப்பு முடிந்ததும் விரிவுரையாளாருடன் வருமாறு கூறிவிட்டு அவனுடைய உடமைகளையும் கல்யாணின் உடமைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 

 

“கல்யாண் வா வீட்டுக்கு போகலாம், நம்ம சார்கிட்ட சொல்லிட்டேன் என்று அவனை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்கு சென்றான். அவனை கண்டதும் அவன் தம்பி ராமன் அழுதுக் கொண்டே வந்து அணைத்துக் கொண்டான்.

 

 

கல்யாணுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். கல்யாணின் அன்னை மாதவியோ கணவரின் உடலருகிலேயே அமர்ந்திருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் பெருகிக் கொண்டிருந்தது.

 

 

கல்யாணின் தந்தை இராமநாதன் அவர்கள் வீட்டின் அருகிலேயே மளிகை கடையை வைத்து நடத்தி வந்திருந்தார். அவ்வப்போது மனைவி மாதவியும் வந்து அவருக்கு உதவி செய்வதுண்டு. எக்காரணம் கொண்டும் மகன்களை கடைப்பக்கம் அவர் விட்டதே இல்லை.

 

 

காலையில் நெஞ்சு வலிப்பது தோன்ற கடைக்கு கிளம்பியவர் அப்படியே வாசல் படியிலேயே அமர்ந்து கொண்டு மனைவியிடம் தண்ணீர் கொண்டு வரச்சொல்ல தண்ணீருடன் வந்தவர் கணவரின் நிலைக் கண்டு பதட்டமாக அருகில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனை விரைய செல்லும் வழியிலேயே மனைவியின் மடி மீதே அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

 

 

நேரம் நெருங்கிக் கொண்டிருக்க யாருமே எதையும் கண்டுக் கொள்ளாமல் இருந்தனர். அந்நேரம் யாரோ பேசுவது ஸ்பஷ்டமாக வைபவின் காதில் விழுந்தது. “என்னங்க நேரமாச்சு எப்போ எடுக்கப் போறாங்கன்னு கேளுங்க என்று அவர் மனைவி அவரிடம் கேட்டார்.

 

 

“நீ வேற பேசாம இருடி, பாரு யாருமே எதுவும் பேசாம இருக்காங்க நாம போய் கேட்டு நீங்களே அதெல்லாம் பார்த்து செய்துடுங்கன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது. இன்னும் கொஞ்ச நேரம் அவங்க எடுக்கறாங்களான்னு பார்ப்போம் இல்லன்னா நாம கிளம்பிடலாம் என்றார் அவர்.

 

 

“ஆமாங்க அதுவும் சரி தான் மாதவி அக்கா கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை, அம்மா அப்பான்னு எல்லாரும் எப்பாவோ போய் சேர்ந்துட்டாங்க. அவங்க வீட்டுக்காரரும் சொந்த பந்தம் எல்லாம் இல்லாதவர் தான் போல. நாம போய் கேட்டு நம்மளையே பார்க்க சொல்லிட்டா கஷ்டம் தாங்க என்று கணவரின் கூற்றை அவரும் ஆமோதித்தார்.

 

 

அதை வாசலில் நின்றிருந்த வைபவ் கேட்டுவிட மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தான், உடனே தன் அன்னைக்கு அழைத்தவன் “அம்மா உங்ககிட்ட எவ்வளோ காசு இருக்கும்மா ஒரு அவரசம் என்றான் அவன்.

 

 

“என்னப்பா என்னாச்சு என்றார் அவர். அவன் கல்யாணின் தந்தை இறந்ததையும் இங்கு மற்றவர்கள் பேசுவதையும் தெரிவித்தவன் மேற்கொண்டு ஏற்பாடுகளை தானே கவனிக்கப் போவதாகக் கூறி அவன் அன்னையிடம் பணம் கேட்டான்.

 

 

“தம்பி என்கிட்ட இப்போ இரண்டாயிரம் ரூபா தான் இருக்குப்பா, நான் நம்ம பக்கத்து வீட்டு வசந்தாக்கா வீட்டில கேட்டுப் பார்க்குறேன், நாம அடுத்த மாசம் சீட்டு எடுத்து அவங்ககிட்ட திருப்பி கொடுத்திடலாம் என்றார் அவர்.

 

 

“சரிம்மா நீங்க கேட்டுட்டு  சொல்லுங்க, நான் இங்க ஏற்பாடுகள் எல்லாம் கவனிக்கிறேன். அப்புறம் நீங்க இந்த விலாசம் குறிச்சுக்கோங்கம்மா. நந்துவை வீட்டில தனியா விட்டுட்டு வராதீங்க. அவளையும் கூட்டிட்டு வந்திடுங்க. ஆட்டோவில வந்திடுங்கம்மா என்றான்.

 

 

அந்த ஏரியாவில் இருந்த அவன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்து இடுகாட்டுக்கு சொல்லிவிட்டு மேற்கொண்டு நடக்க வேண்டியதற்கு தன் வங்கி ATM சென்று அவன் சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து வந்தான்.

 

 

கல்யாணை தேடிச் சென்றவன் “கல்யாண் இப்படியே இருந்தா எப்படி, மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்க்க வேண்டாமா. அப்பாவை நல்லபடியா அனுப்பி வைக்க வேண்டாமா என்றான் அவன்.

 

 

“என்ன பண்ணணும்ன்னு கூட எனக்கு தெரியலைடா, அப்பா இருந்த வரை எங்களை ஒரு வேலை சொன்னதில்லை. நாங்க நல்லா படிக்கணும்ன்னு மட்டும் தான் சொல்லுவாங்க என்று கூறி கண்ணீர் வடித்தான் அவன்.

 

 

“கல்யாண் எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேன், உங்களுக்குன்னு சடங்கு எதாச்சும் இருக்கும்ல அதான் உன்னை கூப்பிட்டேன். நீயே இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்தா எப்படிடா??? நீ தான் பொறுப்பா எல்லாம் பார்க்கணும், நடக்க வேண்டியது எல்லாம் நடக்கட்டும், அதுக்கு உன்னை தயாராக தான் கூப்பிட்டேன் என்றான் வைபவ்.

 

 

கல்யாணை ஒருவழியாக தேற்றி நடக்க வேண்டியதை எல்லாம் செய்ய வைத்தான். கல்யாணின் தந்தையை நல்லபடியாக அடக்கம் செய்து வீட்டிற்க்கு வரும் வரை அவனை விட்டு அங்குமிங்கும் நகரவே இல்லை அவன். வீட்டிற்கு வந்த பின் குளித்து உடைமாற்றி எல்லோருக்கும் உணவை தனக்கு தெரிந்த மெஸ்ஸில் சொல்லி என்று எல்லோரையும் கவனித்துக் கொண்டான்.

 

 

வைபவின் அன்னையும் கல்யாணின் தாயிடம் சென்று ஆறுதல் கூறினர். வைபவ் அவர்களை ஆட்டோவில் வீட்டிற்கு செல்லுமாறு சொல்லி தான் இன்று இங்கேயே இருக்கப் போவதாக கூறிவிட்டான்.

 

 

அன்று இரவு கல்யாண் அவன் அன்னையின் மடியில் தலை வைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க அப்போது தான் நினைவு வந்தவராய் மாதவி அவனிடம் “கல்யாண் நான் ரொம்ப நொடிஞ்சு போயிட்டேன்ப்பா, உங்க அப்பா போனதும் ஒண்ணும் புரியாம மலைச்சு போயி இருந்துட்டேன்

 

 

“ஆனா நீ பரவாயில்லை நிதானமா இருந்து யாரும் குறை சொல்லாதவாறு உங்கப்பாவை நல்லபடியா வழியனுப்பி வைச்சுட்டப்பா என்றார் அழுதுக் கொண்டே. சடக்கென்று எழுந்து அமர்ந்தவன் “அம்மா நான் எதுவும் செய்யலைம்மா.

 

 

“வைபவ் தான் எல்லாம் பார்த்துகிட்டான், நான் எதுவுமே செய்யலைம்மா என்றான் அவன். “என்னப்பா சொல்ற நீ இப்படியா இருப்ப, எங்க அந்த தம்பி கூப்பிட்டு வா என்றார் அவர்.

 

 

கல்யாண் வைபவை அழைத்துக் கொண்டு வந்து அவன் அன்னையின் முன் நிறுத்தினான். “அம்மா இவன் தான் வைபவ் என்றான். “தம்பி ரொம்ப நன்றிப்பா, நீ தான் எல்லாம் பார்த்தேன்னு கல்யாண் சொன்னான். நீ யோசிச்சு எல்லா வேலையும் செஞ்சிருக்க ரொம்ப நன்றிப்பா என்றவர் அவனிடம் ஒரு தொகையை எடுத்து கொடுத்தார்.

 

 

“அம்மா இதெல்லாம் எதுக்கு, எனக்கு எதுவும் வேண்டாம். கல்யாணுக்கு அப்பான்னா அவங்க எனக்கும் அப்பா மாதிரி தானேம்மா. எதுக்கும்மா இதெல்லாம் என்றான் அவன்.

 

 

“இல்லப்பா வைபவ், இதை நாங்க தான் செய்யணும் தயவு செய்து மறுக்காம இந்த காசை வாங்கிக்கோப்பா என்ற அவரின் வற்புறுத்தலில் வேறு வழியில்லாமல் காசை வாங்கியவன் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு மீதியை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.

 

 

“போதும்மா இவ்வளவு தான் செலவாச்சு. இந்தாங்க மீதி காசு என்று அவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவிக்கு வியப்பாக இருந்தது. தன் மகனின் நண்பர்கள் எல்லோரும் இதுவரை வீட்டிற்கு வந்தால் அது இது என்று கேட்டு அவரை ஏதாவது செய்து கொடுக்க சொல்லுவார்கள்.

 

 

அவர்களின் மளிகைக்கடையில் மளிகை சாமான்களை இலவசமாக எடுத்து செல்வர். எல்லோரிலும் இவன் வித்தியாசமாக இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் மகனுக்கு உண்மையான நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான் என்பது அவருக்கு புரிந்தது.

 

 

கல்யாணின் தந்தைக்கு காரியம் முடிந்தும் அவன் கல்லூரிக்கு வராமலே இருக்க வைபவ் அவனை தேடி அவன் வீட்டிற்கு சென்றான். “கல்யாண் நீ எப்போ கல்லூரிக்கு வரப் போற, நமக்கு அடுத்த செமஸ்டர் தொடங்க போகுது என்றான் வைபவ்.

 

 

“நான் இனிமே கல்லூரிக்கு வரலைடா வைபவ். எங்க வீட்டுக்கு இதுநாள் வரைக்கும் அப்பா தான் உழைச்சுட்டு இருந்தாங்க. இனி நான் தான் அதை எல்லாம் பார்த்துக்கணும் என்றவனை பரிதாபமாக பார்த்தான் வைபவ்.

 

 

தன் சிறுவயதில் இது போன்றதொரு சூழ்நிலை வந்திருக்க அவன் அன்னை துணிந்து தன்னை படிக்க வைத்ததும் வீட்டிலேயே தையல் வேலை செய்து எப்படியோ உருட்டி பிரட்டி தன்னையும் தன் தங்கையையும் படிக்க வைத்தது நினைவுக்கு வந்தது.

 

வைபவும் அவ்வபோது அன்னைக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை பார்த்தவன், அக்கம் பக்கம் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பது, காலையில் பேப்பர் போடுவது, கல்லூரி முடிந்து பகுதி நேரமாக பிட்சா டெலிவரி செய்வது என்று அவனும் தன் பங்கிற்கு உழைத்தான்.

 

 

ஒரு நிமிடம் கண்மூடி எல்லாமும் நினைவில் கொண்டு வந்தவன் ஒரு முடிவுடன் கல்யாணின் அன்னையை கல்யாண் இல்லாத நேரமாக சென்று சந்தித்தான். “அம்மா என்றழைத்தவனை வாஞ்சையுடன் ஏறிட்டார் அவர்.

 

 

அவன் மேல் அவருக்கு ஒரு மதிப்பு வந்திருந்தது, கல்யாண் இவன் போன்ற நண்பனை பெற்றிருப்பதை நினைத்து முதன் முதலாக அவர் உவகை கொண்டிருந்தார். “சொல்லுப்பா என்றார் அவர்.

 

 

“கல்யாண் இனிமே கல்லூரிக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டான் என்றான் அவன். அவருக்கு கோபமாக வந்தது, “அப்படியா ஏன் அப்படி சொன்னான், அவங்க அப்பாவோட ஆசையே அவங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கணும்கறது தான்.

 

 

“இவன் ஏன் இப்படி சொன்னான், வரட்டும் நான் அவனை கேட்கிறேன்.

 

 

“அம்மா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, அவனுக்கு எப்படி பணம் கட்டுவீங்க, இதுவரை அவங்க அப்பா தான் எல்லாம் செஞ்சாங்க, இனி யார் செய்வாங்கம்மா, அதான் அவன் கடையை பார்த்திட்டு தம்பியை மட்டும் நல்லா படிக்கவைக்கணும்ன்னு ஆசைப்படுறான் என்றுவிட்டு அவரை ஆழம் பார்த்தான் அவன்.

 

 

நொடியில் அவர் முகம் கருத்து யோசனையிழாழ்ந்தது. “என்னப்பா சொல்ற என்று விழித்தவரின் கண்களில் குளம் கட்டியது. ‘இது எப்படி எனக்கு தோன்றாமல் போனது என்று வருந்தினார் அவர்.

 

 

அந்த நேரம் கல்யாண் வீட்டிற்குள் நுழைந்தான். வைபவை பார்த்தவனது முகம் யோசனைக்கு தாவியது, “கல்யாண் நீ காலேஜ்க்கு போகப் போறது இல்லையா, கடையை பார்த்துக்க போறியா என்றார் அவன் அன்னை.

 

 

நண்பனை ஏன் என்பது போல் பார்த்தவன் “அம்மா வேற என்னம்மா பண்ண முடியும் என்றான் அவன். “அப்பா சரக்கு எடுக்க போகும் போது எல்லாம் நான் தானே கடையை கொஞ்சம் நேரம் பார்த்துப்பேன். இனிமே முழுநேரமும் பார்த்துட்டு போறேன். நீ படிக்கணும் அது உங்கப்பாவோட கனவு என்றார் அவர்.

 

 

“அம்மா நீங்க எப்படிம்மா அதெல்லாம் வேண்டாம், நான் பார்த்துப்பேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையாஎன்றான் அவன். “நெறைய நம்பிக்கை இருக்கு நீ உங்கப்பாவோட ஆசையை நிறைவேத்துவன்னு, செய்வ தானே என்றார் அவர்.

 

 

“அம்மா…ஆஆ... என்று இழுத்தவனை, “நீ அதை மட்டும் செய், இன்னும் இரண்டு வருடம் தானே வேகமா ஓடிவிடும். அதுவரை நானே கடையை பார்த்துக் கொள்கிறேன். நீ படிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு என்ன பண்ணலாம்ன்னு அப்புறம் யோசிக்கலாம் என்றார் அவர். அன்னை முடிவெடுத்தால் பின்வாங்க மாட்டார் என்பதை அறிந்தவன் அவரிடம் சரியென்றான்.

 

 

வைபவின் அன்னை சாந்தி அவ்வபோது வந்து மாதவிக்கு ஆறுதலாக இருக்க இராமநாதன் யாரிடம் சரக்கு வாங்குவார், யாருக்கு கடன் பாக்கி, யாரிடம் இருந்து நிலுவை வரவேண்டி இருக்கிறது என்பதை ஒரு குறிப்பாக எழுதி வைத்திருக்க அதை வைத்து தங்கள் வேலையை ஆரம்பித்தனர் அவர்கள்.

 

 

கல்யாணும் வைபவுடன் சேர்ந்து இப்போதெல்லாம் பிட்சா டெலிவரி செய்வதும் அவனுடம் சேர்ந்து டியூஷன் எடுப்பதும் என்று அவனும் தன்னால் ஆனா உதவியை அன்னைக்கு செய்துக் கொண்டிருந்தான்.

 

 

ஒரேடியாக அவர்கள் கஷ்டப்படவில்லை என்றாலும் குடும்பத்தலைவர் இல்லாத வீடு ஆட்டம் கண்டிருந்தது. அந்த சரிவை அவர்கள் ஈடுகட்டிக் கொண்டிருந்தனர். கல்யாண் உண்மை நட்பை புரிந்து வைபவிடம் தான் முதல் நாள் நடந்து கொண்டதற்காக வருந்தம் தெரிவித்தான்.

 

 

அவனை எப்போதும் சுற்றிக் கொண்டிருந்த போலிகள் அவனால் எதுவும் ஆகாது என்றதும் விலகியதை நினைத்து அவன் வருந்தினான். இது போன்ற போலிகளிடம் நட்பு பாராட்டி உண்மை நட்பை தாமதமாக பெற்று விட்டோமே என்று தான் அந்த வருத்தம்.

 

 

சரயு, கல்யாண், வைபவ் மூவரும் நட்பாகினர். எல்லோரும் அவர்களை பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பிருந்தது. யார் என்ன பேசினாலும் அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்வது இந்த பாடலின் வரிகளை தான்…

 

ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்கும்
அது உண்மையை எரிக்குமே
தண்ணீரிலே தன்னை சுற்றி
தவளைகள் கத்தும் போதும்
தாமரை மலருமே ம்ம் ம்ம் தாமரை மலருமே…

 

 

நாட்கள் இப்படியே விரைய இரண்டு பெரும் புயல் அவர்களை மையம் கொள்ளப் போவது அறியாமல் நண்பர்கள் களித்திருந்தனர்.

 

 

அன்று அவர்கள் வகுப்பிற்கு புதிதாய் ஒரு பெண் வந்திருந்தாள், விரிவுரையாளர் அப்போது உள்ளே நுழைய அவர் அப்பெண்ணை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார்.

 

 

“இவங்க தான் ஷர்மிளா, நம்ம கல்லோரியில இன்னைக்கு தான் சேர்ந்திருக்காங்க. இவங்க அப்பாவுக்கு இந்த ஊருல மாற்றல் ஆனதுனால இங்க வந்திருக்காங்க. நல்லா படிக்கற மாணவி இவங்களை உங்கள்ல ஒருத்தியா சேர்த்துக்கோங்க என்று அறிமுகம் கொடுத்துவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

 

வந்தவள் “எக்ஸ்க்யூஸ் மீ என்க சரயு திரும்பி பார்த்தாள். “சொல்லுங்க என்றாள். “மிஸ்டர் நீங்க பின்னாடி உட்கார்ந்துக்க முடியுமா, நான் இவங்க பக்கத்துல உட்கார்ந்துக்கறேன் என்றாள் வைபவை பார்த்து.

 

 

வைபவுக்கு சட்டென்று ஒரு கோபம் எழுந்தாலும் அவள் பின்னால் சென்று அமர தயங்குகிறாள், மேலும் அவள் அன்று தான் புதிதாக சேர்ந்திருக்கிறாள்  என்று புரிந்தவன், அவன் பையை எடுத்துக் கொண்டு கல்யாணின் அருகில் சென்று அமர்ந்தான்.

 

 

சரயுவின் அருகில் அமர்ந்தவள் அமர்த்தலாக “உன் பேரு என்ன என்றாள் அவளை நோக்கி, அவளின் அந்த ஆணவமான பேச்சில் சரயுவிற்கு ஏனோ அவளை பிடிக்கவே இல்லை, மேலும் தன் நண்பனை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என்ற கோபமும் ஒருங்கே எழுந்தது.

 

 

அதை எல்லாம் ஒதுக்கி மேலோட்டமாக சிரித்தவாறே “சரயு என்று அவளுக்கு பதிலளித்தாள் அவள். “இதென்ன இப்படி எல்லாமா பேரு வைப்பாங்க என்றவளை முறைத்தாள் அவள்.

 

 

“வேற எப்படி பெயர் வைக்கணும் என்றாள் சரயு. “என்ன மாதிரி மாடர்ன் பேரு வைக்கணும் என்றாள் ஷர்மிளா பதிலுக்கு. சரயுவிற்கு அவளிடம் பேச விருப்பமில்லாததால் அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

 

 

ஷர்மிளா அவளை விடாமல் “ஆமா இங்க யாரு ரொம்ப நல்லா படிப்பாங்க என்றாள் அவள். சரயு சந்தோசத்துடன் “வேற யாரு நீ இப்போ இங்க இருந்து ஒருத்தனை பின்னாடி அனுப்பினியே அவன் தான் இங்க ரொம்ப நல்லா படிக்கறவன் என்றாள் பெருமை பொங்க

 

 

பின்னே சரயுவிற்கு சொல்லவா வேண்டும் தன் நண்பனை பற்றி பெருமையாக சொல்வதில் அவளுக்கு அளவில்லா பெருமிதம் இருக்காதா. அந்த பெருமிதம் அவள் முகத்தில் வழிவதை ஷர்மிளா கண்டு கொண்டாள்.

 

 

“இனிமே நான் தான் முதல்ல வருவேன் என்றாள் அவள் சரயுவிடம். மற்றவளோ அவளை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தாள்.ஆனால் அடுத்து வந்த செமஸ்டரில் வைபவே மீண்டும் முதல்வனாக வந்திருக்க ஷர்மிளா அவனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

சரயுவுக்கோ அவன் முதலில் வந்ததில் மிகுந்த சந்தோசம் அவள் ஷர்மிளாவை ‘பார்த்தியா அவனை ஜெயிக்க உன்னால் முடியாது என்று பார்க்க பதிலுக்கு அவளும் ‘நான் அவனை ஜெயித்துக் காட்டுகிறேன் என்று பதில் பார்வை கொடுத்தாள்.

 

 

அவர்கள் மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைக்க கார்த்திகா முதல் வருடத்தில் புயலாக வந்து சேர்ந்திருந்தாள். ஷர்மிளா என்ற புயல் வைபவை தாக்க வந்திருக்க, மற்றொரு புயலாக கல்யாணின் கார்த்திகா……

 

 

உயிராய் வளர்த்த தந்தையை

காலன் அழைத்துவிட

உயிர் கொடுத்த தாயோ

வாடிய கொடியாய் துவண்டுவிட

தமையனோ செய்வதறியாது

திகைத்து நிற்க

நானோ கலங்கி நிற்க

எனை தாங்கி

தோள் கொடுத்து

தோழனானாய்

இடுக்கண் களைந்தாய்

இணைபிரியா நண்பனானாய்

என்ன தவம் செய்தேனோ

யான் உன்னை பெற்றிட

எத்துனை ஜென்மம்

கொண்டாலும் நீயே

என் உயிர் சினேகிதனாவாய்…

Advertisement