Advertisement

அத்தியாயம் –5

 

 

அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம் என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு வந்தவன் “என்னடா என்றான்.

 

 

“அவங்க அந்த பஸ்ல ஏறிட்டாங்க, வாடா போகலாம் என்றான் கல்யாண். “டேய் அவ பஸ்ல போறவரைக்கும் பார்த்திட்டு இருக்க வாடா போகலாம். இப்படி மசமசன்னு நின்னுட்டு… என்றவன் பைக்கில் ஏறி அவனே ஓட்டினான்.

 

 

“எல்லாம் என் நேரம் நானாடா மசமசன்னு நின்னுட்டு இருந்தேன். நீ தான் வாயை திறந்தவன் மூடவே இல்லை என்றவன் தொடர்ந்தவாறே “சரி சரி உனக்கு ரொம்ப அவசரம்ன்னு தெரியுது, இல்லன்னா என்னோட பைக்ல ஏறி நீ ஓட்டிகிட்டு இருப்பியா என்றான் அவன்.

 

 

“ஹி.. ஹி… சாரிடா அவளை எங்கயும் தொலைச்சுட கூடாதுன்னு தான் அவசர அவசரமா வண்டி எடுத்துட்டேன் என்றவன் பேருந்தை பின் தொடர்ந்தான். “சரி சரி பார்த்து ஓட்டு என்று அவன் பின்னால் இருந்து சொன்னான் கல்யாண்.

 

 

அவளை பின் தொடர்ந்ததில் அவள் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பது அவர்களுக்கு தெரிந்தது. அவள் அலுவலகத்தில் சென்று விசாரிக்க தர்மசங்கடமாக இருக்க அவள் வீட்டையே கண்டுபிடிப்பது என்று முடிவு செய்து ஒரு நாள் காலையிலேயே அவள் வந்த தெருவின் வழியாக சென்றனர் நண்பர்கள் இருவரும்.

வெகுநேரமாக காத்திருந்தும் அவள் வரும் அரவமே இல்லை, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணின் கைபேசி அழைத்தது. “ஹலோ என்றான் அவன்.

 

 

“ஓ சரி சரி நாங்க வந்திறோம்….. இல்லை ஒரு வேலையா வந்தோம்….. இல்லை ஒரு அரைமணி நேரத்தில அங்க இருப்போம்… அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோங்க……. என்றுவிட்டு போனை வைத்தான் அவன்.

 

 

“டேய் இன்னைக்கு நெறைய கூட்டம் வந்திருக்காம் வரன் பதியறதுக்கு, ரமேஷ் தான் போன் பண்ணான். உடனே வரச்சொல்றான். இன்னைக்கு ஞாயிற்று கிழமை வேற இல்ல, அதான் கூட்டம் வந்திருக்குன்னு நினைக்குறேன் என்றான் கல்யாண்.

 

 

“டேய் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையா அதனால தான் அவ இன்னைக்கு வரலைன்னு நினைக்கிறேன்டா, ச்சே இதை எப்படி மறந்தேன். சரி வா இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம், இல்லைன்னா நானே நேர்ல அவளை பார்த்து அவளோட வீட்டு முகவரியை வாங்கிடுறேன். இப்படி தெரு தெருவா அலையறதுக்கு அவகிட்டயே கேட்குறது ரொம்ப நல்லது என்றான் வைபவ்.

 

 

அவன் தேடிய முகவரி அவனை தேடி வந்து கொண்டிருந்தது அறியாமல் அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றான். இருவருமாக அவர்கள் அலுவலகம் வந்தடைய ரமேஷ் சொன்னது போலவே கூட்டமிருந்தது. இருவரும் சாப்பிடக்கூட போக முடியாத அளவுக்கு வேலை அவர்களை நெட்டித் தள்ளியது.

 

____________________

 

 

“கற்பகம் இன்னைக்கு போய் அந்த மையத்துல பதிஞ்சுட்டு வந்திடேன் அபியையும் கூட்டிட்டு போய்ட்டு வா, எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நானும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திறேன் என்றார் வைத்தியநாதன்.

 

 

“ஆமாங்க நாங்க போயிட்டு வந்திறோம். ஆனா அபியை எப்படி கூட்டிட்டு போறது, அவ நாம விஷயத்தை சொல்லி கூப்பிட்டா வருவாளா என்றார் கற்பகம் சந்தேகத்துடன். “எனக்கும் அது தான் யோசனையா இருக்கு, என்ன பண்ணலாம் நீயே சொல்லு கற்பகம் என்றார் அவர்.

 

 

“ஏங்க நேத்து பக்கத்துக்கு வீட்டு வைசாலியோட அம்மா அவளுக்கு போய் எங்கயோ பதியணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, நான் போய் அவங்களும் வர்றாங்களான்னு கேக்குறான். அவங்களை சாக்கு சொல்லி நம்ம அபியை நான் கூட்டிட்டு போய்டுறேன் என்றார் அவர்.

 

 

“சரி கற்பகம் நீ போய் அவங்களை கேட்டுட்டு வந்திரு, ஒருவேளை அவங்களுக்கு வேற வேலை இருந்தா என்ன பண்ணுறதுன்னு நாம யோசிக்கணும், நாம தள்ளி போட்டுக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது என்றார் வைத்தியநாதன்.

 

 

“சரிங்க என்றவர் பக்கத்து வீட்டுக்கு சென்றார். அபி அவள் அறையில் இருந்தாள், கட்டிலில் படுத்திருந்தவளுக்கு ஏனோ வைபவின் நினைவு வந்து போனது. பேருந்து நிறுத்தம் சந்திப்பிற்கு பின் அவன் நினைவு அடிக்கடி வருவது தொடர்கதையாகி போனது.

 

 

அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த மற்றவர்கள் பேசாமல் செல்ல அவன் மட்டும் அந்த ஆளை எப்படி அறைந்தான். அந்த ஆள் செய்த வேலைக்கு அவனை தான் எப்படி அடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலோ அப்படியெல்லாம் அவன் அறைந்தது அவளுக்குள் சந்தோசமாக இருந்தது.

 

 

‘நடந்த அநியாயம் கண்டு பொறுக்காமல் அவனை அறைந்தவன் எனக்காக அவனை மன்னித்துவிட்டானே. நாம் தான் இதுவரை அவனையும் மற்ற ஆண்கள் போல் நினைத்து கடுமையாகவே நடந்து கொண்டோம். பாவம் முதல் முறை அவர் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததை தவிர வேற எதுவுமே செய்யவில்லையே. அவருக்கு நான் மனமார நன்றி கூட உரைக்கவில்லையே.

 

 

‘அவர் மருத்துவமனைக்கு செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க செல்லும் போதாவது ஒழுங்காக நடந்திருக்கலாம் என்று அவளை எண்ணி அவளே வெட்கிக் கொண்டிருந்தாள். அடுத்த முறை அவனை பார்க்கும் போது மன்னிப்பு கேட்டு அவனுக்கு நன்றியுரைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

திரும்பி வந்த கற்பகத்தின் முகத்தில் சந்தோசமிருந்தது, “என்ன கற்பகம் சிரிச்ச முகமா வர்ற அவங்க வர்றேன்னு சொல்லிட்டாங்களா என்றார் அவரும் மகிழ்ச்சியுடனே. “ஆமாங்க நான் போய் அபியை கூப்பிடுறேன் என்றார் அவர்.

 

 

“அபிம்மா கொஞ்சம் வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கணும் நாம வெளிய போயிட்டு வருவோமா என்று அவள் முன் வந்து நின்று அவளிடம் பேசினார் கற்பகம்.

 

‘கண்டிப்பா இன்னைக்கே வாங்கணுமா ரொம்பவும் அவசரமாம்மா என்று அவள் சைகையில் கேட்க “ஆமா அபிம்மா நானும் ஒரு பத்து நாளா கடைக்கு போகணும் நினைச்சேன், நீயும் வேலையா இருந்த, அதான் உன்னை கூப்பிடலை. இன்னைக்கு போகலாம் தானே என்றார் அவர்.

 

 

‘சரிம்மா போகலாம் காபி போட்டு தர்றியாம்மா சாப்பிட்டு கிளம்பலாம் என்று அவள் மீண்டும் சைகையில் சொல்ல சரியென்பதாய் தலையசைத்து விட்டு எல்லோருக்குமாக காபியை கலந்து எடுத்துக் கொண்டு வந்தார்.

 

 

வைத்தியநாதன் கண்களாலேயே மனைவிக்கு ஜாடை காட்ட ‘அப்பா எதற்கு அம்மாவுக்கு ஜாடை காட்டுகிறார் என்று கண்டும் காணாமல் பார்த்தாள் அபிநயா. காபியை குடித்துவிட்டு அவள் உடைமாற்றிக் கொண்டு வந்தாள்.

 

 

‘போகலாமா என்பதாய் தலையசைக்க கற்பகமும் கிளம்பினார். “அபிம்மா பக்கத்து வீட்டு வைசாலியோட அம்மாவும் நம்ம கூட வர்றாங்கம்மா, நாம ஆட்டோவில போகலாம்மா என்றார் அவர்.

 

 

கற்பகம் பக்கத்து வீட்டுக்கு சென்று வைசாலி அம்மாவை அழைத்து வர அவர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஆட்டோவில் ஏறி மூவருமாக சென்றனர். “என்ன அபியம்மா நீங்க எப்படி பார்க்க போறீங்க என்று வைசாலி அம்மா கேட்க, கற்பகம் ஏதோ கண் ஜாடை காட்ட அவரும் அத்துடன் பேச்சை நிறுத்தினார்.

 

 

ஆட்டோவில் போகும் போது தான் கற்பகம் வைசாலிக்கு அவள் அன்னை வரன் பதியப் போவதாகவும் கடைக்கு போகும் வழியில் முதலில் அந்த வேலையை முடித்துவிட்டு பின் கடைக்கு செல்லலாம் என்று அவர் அபியிடம் தெரிவித்திருந்தார்.

 

 

அபிக்கு அப்போது தான் நினைவு வந்தவளாய் அவள் அன்னையின் கையை பிடித்தாள். ‘என்னம்மா என்பது போல் அவர் அபியிடம் கையசைத்து கேட்க இருவருமாக ஏதோ சைகையிலேயே பேசிக் கொண்டனர்.

 

 

“அபியம்மா அபி என்ன சொல்றா என்றார் வைசாலி அம்மா. “அது ஒண்ணுமில்லைங்க நாம எந்த வரன் பார்க்கற மையத்துக்கு போறோம்ன்னு அபி கேட்குறா, அதான் உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன் என்றார் அவர்.

 

 

“அதுவா அபி, பாண்டிபஜார் போற வழியில கல்யாண வைபவம்ன்னு ஒரு மையம் இருக்கு, அவங்க நல்லா பண்றதா சொன்னாங்க அதான்ம்மா அங்க போகலாம்னு என்றார் அவர்.

 

 

அபியின் முகம் அதை கேட்டதும் மலர்ந்தது. அவள் அன்னையிடம் திரும்பி மீண்டும் ஏதோ சைகையில் சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னம்மா அபி என்னாச்சு என்றார் அவர்.

 

 

“வைசாலி அம்மா அவளுக்கு இந்த மையம் நல்லா தெரியுமாம், அவளுக்கு தெரிஞ்சவங்க தான் அதை நடத்துறாங்கன்னு சொன்னா என்றார் அவள் அன்னை பதிலாக.

 

 

“அப்படியா அப்போ ரொம்ப நல்லதா போச்சு இல்லையா அபிம்மா, நம்ம அபிக்கும்… என்று அவர் ஆரம்பிக்க கற்பகம் வைசாலி அம்மாவின் கையை பற்ற அவரும் நினைவு வந்தவராக ‘அய்யோ நான் ஒருத்தி அபியம்மா தான் அபிக்கு விஷயம் தெரியாதுன்னு சொன்னாங்களே நான் வேற அதையே பேசிட்டு இருக்கேன் என்று நினைத்தவர் வாயை மூடிக் கொண்டார்.

 

 

அபிக்கோ சொல்லொணாத சந்தோசம் வந்தது, ‘நல்ல வேளை அன்னைக்கு அவருக்கு நாம ஒரு நன்றி கூட ஒழுங்கா சொல்லலை, இன்னைக்காச்சும் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு நன்றி சொல்லிடணும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

‘எப்படி அவருக்கு புரிய வைப்பது, நாம் சைகையில் ஒன்று சொல்ல அவர் வேறு ஒன்றாக புரிந்து கொள்வாரே. எழுதியே காட்டி விடவேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

 

 

கல்யாணுக்கும் வைபவுக்கும் வேலை பெண்டு நிமிர்த்தியது அன்று, ஒருபக்கம் பொருத்தம் சரியாக இருந்தவர்கள் திருமணத்திற்கு நாள் குறித்து அவர்களிடம் சமையல், கச்சேரி என்று பதிவு செய்ய வந்திருந்தார்கள். ஒரு பக்கம் வரன் பதிவு செய்ய கூட்டம் வந்திருந்தது. சில சமயங்களில் இப்படி ஒரு சேர கூட்டம் வருவதுண்டு. இவர்கள் பெயர் கொஞ்சம் பிரபலமாகிக் கொண்டு வந்ததில் அவர்களை தேடியும் சில கூட்டம் வந்தது.

 

 

நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருக்க சற்று சோர்வாக உணர்ந்தவன் எழுந்து சென்று முகம் கழுவி வந்தான், சோர்வை விரட்ட காபியை வாங்கி வரச் செய்து கல்யாணையும் அவன் அறைக்கு வரவழைத்து இருவருமாக சேர்ந்து காபியை அருந்தினர்.

 

“இன்னைக்கு நல்ல கூட்டம்டா, இது இப்படியே தொடர்ந்தா நமக்கு இன்னும் நெறைய கல்யாணம் பதிவாகும்டா என்றான் கல்யாண். “ஆமா கல்யாண் நானும் அதே தான் நினைச்சேன், இன்னைக்கு வளசரவாக்கம் ஆபீஸ்ல கூட கூட்டம் இருந்துச்சுன்னு இப்போ தான் சங்கர் சொன்னான் என்றான் வைபவ்.

 

 

“டேய் இன்னும் கொஞ்சம் பேரு காத்திட்டு இருக்காங்க, நான் என்னோட அறைக்கு போறேன். நீயும் வந்தவங்களை கவனி என்று சொல்லிவிட்டு கல்யாண் எழுந்து சென்று விட்டான்.

 

 

கற்பகம் வைசாலி அம்மா, அபி சகிதம் கல்யாண வைபவத்திற்கு வந்து சேர்ந்தார். அபிக்கு இதற்கு முன் ஒரு தரம் வந்த ஞாபகம் வர அப்போது நடந்ததை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

 

 

“அபிம்மா நீ இங்க உட்காருடா நானும் வைசாலி அம்மாகூட போயிட்டு உடனே வந்திர்றேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு அவள் வேண்டாம் என்றுவிடுவாளோ என்று எண்ணி அவள் முகத்தைக் கூட பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார் கற்பகம்.

 

 

‘அம்மாவுக்கு என்ன ஆச்சு வைசாலி அம்மா தானே பதிய வந்தாங்க, அம்மாவும் கூடவே போறாங்க என்று நினைத்துக் கொண்டு சரி காத்திருப்போம் என்று அங்கு போடப் பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

 

 

அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லையே என்று யோசித்தவள் சுற்று முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள். அன்று வந்த போது அவரும் அவர் நண்பரும் மட்டுமே இருந்தனர். இன்று நெறைய கூட்டம் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள். “வாங்கம்மா உட்காருங்க என்று அவர்களை அழைத்து உட்கார வைத்தான் கல்யாண்.

 

 

“தம்பி இவங்களுக்கும் பதியணும் என்று வைசாலி அம்மா சொல்ல “ஓ அப்படிங்களா, ஒரு நிமிஷம் என்றவன் வைபவுக்கு அழைத்தான். “சொல்லுடா என்றவனிடம், “இங்க இன்னொருத்தருக்கும் பதியணும், நீ ப்ரீயா என்றவனிடம் “ஏன் அவங்களுக்கு ரொம்ப அவசரமா என்றான் வைபவ்.

 

 

“இல்லைடா ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்காங்க, நாம ரெண்டு பேரும் அவங்களை பற்றிய தகவல் வாங்கிட்டா ஒண்ணா கிளம்புவாங்கல அதான் கேட்டேன். ரமேஷ் வேற வளசரவாக்கத்துக்கு அனுப்பிச்சு நாம ரெண்டு பேரு தானே அதான் கேட்டேன் என்றவனிடம் “சரி அனுப்புடா என்றுவிட்டு போனை வைத்தான் வைபவ்.

 

“அம்மா நீங்க அந்த அறைக்கு போங்க என்று அவன் அவனுக்கு அடுத்திருந்த தடுப்பை காட்டினான். “ரொம்ப தேங்க்ஸ்ப்பா என்று அவனிடம் சொல்லிவிட்டு அடுத்த அறைக்கு சென்றார் அவர்.

 

 

“வாங்கம்மா உட்காருங்க, என்ன பதிய போறீங்க என்றான் வைபவ். “பையன் தம்பி என்றார் அவர். “ஓ சரிங்க என்றவன் அவரிடம் அதை பற்றிய குறிப்புகள் சேகரிக்க அவர்கள் பிரத்யேகமாக தயாரித்து வைத்திருந்த அந்த புத்தகத்தை எடுத்தான்.

 

 

“சொல்லுங்க பையன் பேரு என்றான் அவன். “தம்பி நான் என் பொண்ணுக்கு தான் பதிய வந்தேன் என்றார் அவர். “சாரிம்மா நான் பையன்னு நினைச்சுட்டேன், நீங்க பையன் பார்க்கணும்னு சொன்னதை நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். சரி சொல்லுங்க உங்க பொண்ணு பேரு என்றான் அவன்.

 

“அபிநயா என்று அவர் சொன்னதும் அவனுக்குள் சட்டென்று அபியின் முகம் வந்து போனது. “அப்பா பேரு, அம்மா பேரு என்றதும் அவர் “வைத்தியநாதன், கற்பகம் என்று உரைக்க அவன் உடன்பிறந்தவர்கள் பற்றி விபரம் கேட்க, அவளுடன் பிறந்தவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று உரைத்தார் அவர்.

 

 

“இவங்க அக்கா எங்க இருக்காங்க என்றான் அவன். “அக்கா இல்லை தம்பி அபியோட தங்கை அவ, அவளுக்கு திருமணம் முடிந்து அவள் பெங்களூரில் வசிக்கிறாள். எங்கள் மகன் ஹாங்காங்கில் இருக்கிறான் என்றார் அவர்.

 

 

“அப்புறம் தம்பி அதுல இன்னொரு விஷயமும் சேர்த்துக்கோங்க என்று தயங்கியவரை, “சொல்லுங்கம்மா என்றான் வைபவ். “என்னோட பெண்ணுக்கு பேசவராது, காதும் கேட்காது என்றார் அவர்.

 

 

அவனுக்குள் மின்னலாக அபி வந்து போனாள், இது நிச்சயமாக அந்த அபியே தான் என்று நினைத்தவன் “அம்மா உங்க பொண்ணோட போட்டோ இருக்கா.

 

 

“தம்பி அவளுக்கு நான் பதியறது தெரியாது தம்பி, அவ கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்கா, அதான் அவளோட தனிப்பட்ட போட்டோ எதுவும் என்கிட்ட இல்லை.

 

 

“இந்தாங்க இந்த போட்டோ அவ வேலைக்கு சேரும் போது எடுத்தது என்று சொல்லி ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை கொடுத்தார் அவர். அது அபியே தான் என்று அவனுக்கு உறுதியாக புரிந்தது, அவனுக்குள் சந்தோசம் பிறீட்டது. காலையில் அவள் வீட்டு முகவரி தேடி அலைந்தவனுக்கு அது தானாக கிடைத்ததில் சந்தோசம் இருக்காதா.

 

 

“அம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் சொல்றேன் என்றான் அவன். “சொல்லுங்க தம்பி என்றார் அவர்.

 

 

“உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன் என்றவனை அதிர்ச்சியாக பார்த்தார் கற்பகம். “இருங்கம்மா நான் முழு விவரமும் சொல்லிடுறேன், அப்புறம் நீங்க யோசிச்சு உங்க முடிவை  பொறுமையா சொல்லுங்க என்றவன் அபியை முதல் நாள் பார்த்தது முதல் கடைசியாக அவன் பார்த்தது வரை சொல்லி முடித்தான்.

 

 

அபியை ஒருவர் காப்பாற்றியது மட்டுமே அவர்களுக்கு தெரியும், ஆனால் அவரை பற்றி முழுதாக எதுவும் அவள் வீட்டினரிடம் தெரியப்படுத்தவில்லை. “தம்பி நீங்க தான் அன்னைக்கு என்னோட பொண்ணை காப்பாற்றினீங்களா ரொம்ப நன்றி தம்பி, ஆனா நீங்க என் பொண்ணை கல்யாணம் பண்ணணும்னு எப்படி முடிவு பண்ணீங்க

 

 

“ஒருவேளை அவளோட நிலையை பார்த்து பரிதாபப்பட்டு இப்படி சொல்றீங்களா, ஏன்னா அவளுக்கு யாரும் அவளை அப்படி பரிதாபமா பார்க்கறது பிடிக்காது என்றார் அவர்.

 

 

“இல்லை ஆன்ட்டி எனக்கு அவங்களோட துணிச்சல் பிடிச்சுது, நான் அவங்களுக்கு உதவி பண்ணவன்னு கூட நினைக்காம என்னை ஒரு அடி தள்ளி வைச்சே பேசினாங்க அதுல இருந்தே புரிஞ்சு போச்சு அவங்க யாரையும் தன் பக்கத்துல நெருங்க கூட விடமாட்டாங்கன்னு, அதெல்லாம் தான் எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணனும்னு தோணிச்சு

 

 

“நானும் கல்யாணம் வேணாம்ன்னு சொன்ன ஆளு தான் என்றவன் அவன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சுருங்க அவரிடம் கூறினான். கல்லூரியில் ஏற்பட்ட காதல், பின்பு அவனுக்கு பெண் பார்த்தது, நிச்சயத்திற்கு முன் முறிந்த சம்மந்தம், நிச்சயம் முடிந்து நின்று போன சம்மந்தம் என்று எதையும் விடாமல் அவன் அவரிடம் சொன்னான்.

 

 

“என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேன், நீங்க என்னை பத்தி வெளிய விசாரிக்கணும்ன்னா கூட விசாரிச்சுக்கோங்க. உங்களுக்கு சம்மதம்ன்னா சொல்லுங்க ஆன்ட்டி என்றான் அவன்.

 

“தம்பி எங்க பொண்ணோட நிலைமைக்கு நீங்க கேட்டதும் நான் சரின்னு தான் சொல்லணும்… என்று அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவன் அவரை தடுத்து “ஆன்ட்டி இனி அப்படி சொல்லாதீங்க, என்ன நிலைமை உங்க பொண்ணோட நிலைமை அவங்க நல்லா தான் இருக்காங்க, அவங்களுக்கு எந்த குறையும் இருக்கறதா முதல்ல நீங்க நினைக்காதீங்க.

 

 

“நான் அவங்களை திருமணம் செய்ய ஆசைப்படுறேன் அவ்வளோ தான், நான் இல்லன்னா அவங்களுக்கு வேறு சிறப்பான ஒரு மாப்பிள்ளை கிடைப்பார், நான் ஏதோ தியாகம் பண்றாத நீங்க நினைச்சா அது தப்பு ஆன்ட்டி என்றான் அவன்.

 

 

கற்பகத்திற்கு அவன் மேல் ஒரு மதிப்பு வந்திருந்தது, முதலில் அம்மா என்று அவன் பேசியதும் தான் அபியின் அம்மா என்றதும் ஆன்ட்டி என்று மாற்றி பேசியதும் உணர்ந்தார் அவர்.

மேலும் அவன் அபியின் குறையை கூட பெரிதாக நினைக்காமல் பேசியது அவன் மேல் இருந்த மதிப்பை பன்மடங்காக்கியது. “தம்பி என் பொண்ணு இதுக்கு சம்மதிப்பாளான்னு தெரியலை… என்று அவர் இழுக்க “நான் அவங்களை சம்மதிக்க வைக்கிறேன் என்றான் அவன் உறுதியாக.

 

 

“அவளும் இங்க வந்திருக்கா, ரொம்ப நேரம் ஆச்சு அவ உள்ளே எழுந்து வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன் தம்பி என்று அவர் எழுந்து கொள்ளப் போக, “ஆன்ட்டி நீங்க உட்காருங்க நான் போய் உங்க பொண்ணை இங்க கூட்டிட்டு வர்றேன், நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்

 

 

“நான் அவங்ககிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேச போறது இல்லை, நான் இல்லைனா கூட அவங்க வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணணும்ல, நான் அவங்களை முதல்ல கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறேன்.

 

 

“என்னை கல்யாணம் பண்ணிக்கணுமா வேணாமான்னு நீங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணுங்க, சரியா ஆன்ட்டி என்று அவரிடம் சொல்லிவிட்டு எழுந்து வெளியில் சென்றான்.

 

 

‘என்னாச்சு இந்த அம்மாவுக்கு வைசாலி அம்மா கூட சேர்ந்து இங்க வந்ததும் இல்லாம கடைக்கு வேற தாமதம் ஆகுது. உள்ளே போய் பார்க்கலாமா, அவனும் இருப்பானோ என்று கலவையான எண்ணங்கள் அவளுள் ஓட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

அவள் முன் நிழாலாட நிமிர்ந்து பார்த்தாள், “வணக்கம் அபி எப்படி இருக்கீங்க என்றான் வைபவ். தன்னை மீறி அவனை பார்த்து முறுவலித்தாள் அவள். ஏனோ அன்று அவன் அவளுக்கு புதிதாக தெரிந்தான்.

 

 

இதற்கு முன் அவனை பார்த்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவன் அரைக்கை சட்டை இன் செய்யாமல் வெளியில் விட்டிருப்பான், ஆனால் இன்றோ முழுக்கை சட்டை அணிந்து அதை கால்வாசி மடித்து முக்கால் கையாக்கி இருந்தான்.

 

 

பார்க்க பளிச்சென்று தோன்றியவனை கண்கள் அளவேடுத்தது. “அபி கொஞ்சம் உள்ளே வர்றீங்களா என்று அவன் கேட்டது தான் தாமதம் அவனை பார்த்து முறைக்க ஆரம்பித்தாள். “அபி தப்பா நினைக்காதீங்க உங்க அம்மா உள்ள தான் இருக்காங்க உங்க கூட கொஞ்சம் பேசணும் அதான் கூப்பிட்டேன், வர்றீங்களா என்றான் அவன்.

‘என்ன இது இவன் இன்னைக்கு ரொம்ப பணிவா அடக்கமா தெரியறான் என்று மனதுக்குள் நினைத்தவள் சரி என்பது போல் அவனிடம் தலையாட்டி அவன் பின்னே சென்றாள்.

 

 

அந்த அறைக்குள் நுழைந்ததும் அவளுக்குள் கோபம் கொந்தளித்தது, அவள் அன்னையின் கையில் அவளின் ஜாதகத்தை பார்த்ததும் தான் அவள் அப்படியாகி இருந்தாள். “இதுக்கு தான் இங்க வந்தியாம்மா என்று அவள் ஜாதகத்தை சுட்டிக் காட்டி சைகை மொழி பேச அவள் அன்னை தலைகுனிந்தார்.

 

 

அவள் மீண்டும் அவள் அன்னையை உலுக்க “ஆன்ட்டி அவங்களை என்னை கொஞ்சம் பார்க்க சொல்லுங்க நான் பேசறேன் என்றான் அவன். கற்பகம் அபியை நோக்கி சைகையால் ஏதோ சொல்ல அபி அவனை பார்த்தாள்.

 

 

‘இவனுக்கு எப்போதும் என் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தான் வேலை என்று நினைத்தவள் அவனை பார்த்து ‘என்ன சொல்லணுமோ சொல்லு என்பது போல் திமிராக பார்த்தாள்.

 

 

அவனும் அவளின் அந்த திமிரில் கட்டுண்டு அவளிடம் பேசினான். அதற்கு முன் அவள் அன்னையை வெளியில் இருக்க சொல்ல அவள் ஏகத்துக்கும் முறைத்தாள் இருவரையும் பார்த்து, எனினும் அவன் என்ன சொல்ல வருகிறான் எதற்கு இப்படி செய்கிறான் என்று அவனையே பார்த்தாள்.

 

 

“நான் என்ன சொல்லப் போறேன்னு நினைக்கிறீங்களா அபி என்று அவன் கூற அவளுக்கு தூக்கி வாரி போட்டது, நான் மனதில் நினைப்பதை இவன் எப்படி சொல்கிறான், நம் முகம் நம் உணர்வுகளை பிரதபலிக்கிறதோ என்று நினைத்தாள் அவள்.

 

 

அவள் கையில் வைத்திருந்த நாட்குறிப்பில் அவன் அவளிடம் பேசியதற்கு தன்னையறியாமல் மறுமொழி எழுதிக் கொண்டிருந்தாள் அவள். “ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் இவர் ஏதோ உலகத்துக்கு கருத்து சொல்லப் போறார்ன்னு பார்த்தேன் போடா என்று அவள் எழுதியிருந்தாள்.

 

 

வைபவ் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் அவ்வபோது ஏதோ எழுதுவதை தனக்குள் பதித்துக் கொண்டான். “அபி உங்களுக்கு உங்க அம்மாவை பிடிக்குமா பிடிக்காதா என்றான் அவன்.

 

 

அபிக்கு அவள் உடன்பிறந்தோர் பெற்ற தந்தை எல்லோரையும்விட அவளுக்கு அவள் அன்னை மேல் தான் ப்ரியம் அதிகம். சிறு வயதில் தன் தந்தை கூட தன்னை ஒதுக்கியதும், அவள் அன்னை மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருந்ததும், அதற்காக அவர் பலமுறை ஏச்சு பேச்சுக்களை வாங்கியிருந்ததும் அவள் கண்முன் வந்து போனது.

 

 

‘ஆனாலும் இவன் ஏன் இதை எல்லாம் கேட்கிறான், இதை தெரிந்து இவன் என்ன செய்யப் போகிறான் என்று நினைத்தவள் அவனுக்கு ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

 

 

“என்னடா இவன் சம்மந்தமே இல்லாம இதையெல்லாம் கேட்கிறானே, இவனுக்கு இதை தெரிந்து என்ன ஆகப் போகுதுன்னு யோசிக்கிறீங்களா என்றான் அவன். ‘கடவுளே இவன் முன் என் முகபாவனைகளில் நான் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மீண்டும் நினைத்துக் கொண்டாள் அவள்.

 

 

“உங்க அம்மாவுக்கு உங்களை பற்றிய கவலை தான், உங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும்ன்னு அவங்களும் உங்களை மாதிரி தான் அவங்களுக்கு மற்ற எல்லாரும் இருந்தாலும் உங்க மேல தனி பிரியம் அவங்களுக்கு, உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும். அது தான் அவங்களோட ஆசை, கடைசி ஆசைன்னு கூட சொல்லலாம் என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்க அவள் ரத்தம் நிறம் கொண்டிருந்தது.

 

 

“நான் இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க அவங்களுக்கு வேற எந்த ஆசையும் இருக்க மாதிரி தெரியலை. நீங்க இப்படியே கடைசி வரை இருந்தீங்கன்னா நான் சொன்ன மாதிரி அது அவங்க கடைசி ஆசையா நிராசையாவே போய்டும் என்று அவன் சொல்ல அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களில் நீர் துளிர்த்தது.

 

 

அவன் முன் தன் தோல்வியை ஒத்துக் கொள்ள மனமில்லாதவள் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தாள். ‘இவன் சொல்வதும் சரி தான் அம்மா எப்போதும் தன்னை பற்றியே கவலை படுகிறார் அது அவளுக்கும் தெரிந்திருந்தது.

 

 

‘இவனிடம் போய் ஒப்புக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தவள் ‘அவ்வளவு தானா என்பது போல் அவனை பார்த்தாள். “அவ்வளவு தாங்க நீங்க யோசிச்சு உங்க அம்மா ஆசையை நிறைவேத்துங்க அது போதும் இதுக்கு மேல உங்களை இங்க உட்கார வைச்சா நீங்கள் என்னை பார்வையிலேயே எரித்து விடுவீர்கள் போல் தெரிகிறது என்றான் அவன் கிண்டலாக.

 

 

அவள் தலையில் அடித்துக் கொள்ள “நீங்க தலையில் அடிச்சுக்க வேண்டாம், இப்போ உங்க முகபாவனை வைச்சு எல்லாம் நான் தெரிஞ்சுக்கலை, நீங்க என்ன நினைப்பீங்கன்னு யோசிச்சேன் அதை தான் சொன்னேன் என்றவனை மெலிதான ஆச்சரியத்துடன் ஏறிட்டாள் அவள்.

 

 

“சரி என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே என்றான் அவன் அவளை பார்த்து. அவள் ஒரு காகிதத்தை கிழித்து வேகமாக எழுதி அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். அதை வாங்கி பார்த்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

 

அவள் அவசரத்தில் கிளம்பியதில் அவளுடைய நாட்குறிப்பை விட்டு சென்றதை சட்டென்று எடுத்து மேசைக்குள் எடுத்து போட்டான் வைபவ். அவர்கள் கிளம்புமுன் வைபவ் கற்பகத்திடம் தனியே அவனுடைய முகவரியும் கைபேசி எண்ணும் குறித்துக் கொடுத்தான்.

 

 

“நீங்க கவலைபடாம போங்க ஆன்ட்டி உங்க பொண்ணு திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடுவாங்க என்றான் அவன். வீட்டிற்கு வந்த கற்பகம் வைபவ் பற்றி தன் கணவரிடம் கூறி அவன் முகவரி, கைபேசி எண் எல்லாம் கொடுத்தார். வைத்தியநாதனும் அவனை பற்றி விசாரித்து பின் முடிவெடுக்கலாம் என்று கூறினார்.

 

 

வைபவ் சொன்னது போல அவர் மீண்டும் ஒரு முறை அபியிடம் அவள் திருமணம் பற்றிய பேச்சை எடுக்க அவள் உங்கள் இஷ்டம் என்பது போல் சைகையில் தன் சம்மதம் சொல்ல மனமகிழ்ந்து போனார் கற்பகம்.

 

காதல் வந்தால்

கையெழுத்து அழகாகும்

உன் எழுத்தில்

இப்போது காகிதமும்

அழகானது….

 

பேசாமல் பேசும்

ஓவியமே…

நீ பேசாமல்

உன் கண்ணும்

கவி பேசுமே…

 

மறைக்க முயன்றாலும்

உன் உணர்வுகளை

கண்கள் மட்டுமல்ல

கோபத்தில்

சிவக்கும் மூக்கும்

பதட்டத்தில் துடிக்கும்

அதரங்களும் காட்டும்…

Advertisement