Advertisement

அத்தியாயம் –4

 

 

“என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண் என்றான் அவன்.

 

 

“என்னடா சொல்ற, நீ சொல்றது ஒண்ணுமே புரியலை, விளங்கற மாதிரி  சொல்லுடா என்றான் கல்யாண். “நான் அந்த பொண்ணை விரும்புறேனான்னு எனக்கு தெரியலைடா, ஆனால் அவளை பார்த்ததுல இருந்து அப்பப்போ அவளுடைய நினைபவு எனக்கு வந்து போகுது.

 

 

“அது என்னன்னு எனக்கு புரியலை, ஆனா இதெல்லாம் காதல்ன்னும் என்னால சொல்ல முடியலை என்று அவன் சொல்லும் போதே அதில் ஒரு வலியும் ஏமாற்றமும் வந்து போனதை கல்யாண் உணர்ந்தான். “டேய் நீ இன்னுமும் அதையே நினைக்கிறியா என்றான் கல்யாண். “நான் எதையும் நினைக்கலைடா அது காதலும் இல்லைன்னு எனக்கு தெரியும்.

 

 

“அதுனால தான் எனக்கு அந்த வார்த்தை சொல்லப் பிடிக்கலை. அவ கண்ணுல ஒரு வேதனை வந்தப்போ நான் இருக்கேன் உனக்குன்னு சொல்லணும் போல இருந்துச்சு, இதெல்லாம் நான் எப்போ சொல்ல முடியும்ன்னு யோசிச்சேன் அதான் அவளை கல்யாணம் பண்ணணும்னு முடிவெடுத்தேன்.

 

 

“இதுவரைக்கும் நான் அவளை விரும்பறனான்னு எனக்கு தெரியலை, ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கு அப்புறம் அவளை விரும்பறதா முடிவு பண்ணிட்டேன், அவளுக்காக நான் வாழறதா முடிவு பண்ணிட்டேன் என்றான் வைபவ்.

 

 

“வைபவ் உனக்கு அந்த பொண்ணு மேல இருக்கறது பரிதாபம்ன்னு எனக்கு தோணுது, பரிதாபத்துல ஒரு உறவு ஆரம்பிச்சா அது சரியா வராதுடா என்றான் கிளிபிள்ளைக்கு சொல்லுவது போல். “நிச்சயமா அது பரிதாபம் இல்லை என்னால அதை உறுதியா சொல்ல முடியும் என்றான் வைபவ்

 

 

தொடர்ந்தவன் “அந்த பரிதாபம் எனக்கு அவளை பார்த்த முதல் நாளே வந்திருக்கணுமே, எனக்கு அப்படி எதுவும் வரவே இல்லை. உதவி பண்ண என்னை அவ, மதிக்காம இருந்ததுக்கு எனக்கு அவ மேல கோபம் வந்திருக்கணும் நான் அவளுக்கு எந்த உதவியும் பண்ணாம இருந்திருக்கணும், ஆனா எனக்கு அப்படி எதுவும் வரலையே கல்யாண் என்றான்.

 

 

“இல்லை வைபவ் அது உன்னோட குணம் உன் எதிரியா இருந்தா கூட நீ அவங்களுக்கு கண்டிப்பா உதவி செய்வ என்றான் கல்யாண். “சரி நீ சொல்ற மாதிரி அது என்னோட குணமாவே இருக்கலாம், ஆனா பரிதாபப்படுறதுக்கு அவகிட்ட எந்த குறையும் இருக்கறதா எனக்கு தோணலை.

 

 

“உங்க எல்லாருக்கும் அவளுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாதுங்கறது ஒரு குறையா தெரியுது. ஆனா எனக்கு அந்த மாதிரி எந்த குறையும் அவகிட்ட தெரியலை. அப்புறம் எப்படி நான் பரிதாபம் தான் படுறேன்னு நீ சொல்ற கல்யாண்

 

 

“எல்லார்கிட்டயும் சின்ன சின்ன குறைகள் இருக்கு, அவ அப்படி இருக்கறது ஒரு குறையாவே எனக்கு தெரியலை. ஏன்னா எனக்கு அவளை பிடிச்சுருக்கு, ஒரு வேளை அதுகூட காரணமா இருக்கலாம் என்றான் வைபவ் தொடர்ந்து.

 

 

“இன்னைக்கு உனக்கு குறையா தெரியாத ஒரு விஷயம் நாளைக்கு குறையா தெரியாதுன்னு என்ன நிச்சயம், உங்களுக்குள்ள எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாம நீங்க சந்தோசமா வாழணும் வைபவ் எல்லாமும் யோசிச்சு செய். கார்த்தியும் நானும் புரிஞ்சு தான் காதலிச்சு கல்யாணம் பண்ணதா நினைச்சோம்

 

 

“ஆனா எங்களுக்குள்ள சரியான புரிதல் இல்லாம தானே நானும் அவளும் இப்போ பிரிஞ்சு இருக்கோம். பின்னாடி அந்த பொண்ணு வருத்தபடுற மாதிரியோ இல்லை நீ வருத்தபடுற மாதிரியோ ஆகிடக் கூடாது, அதுக்காக தான் சொல்றேன் என்றான் கல்யாண் வேதனை இழையோட.

 

“கல்யாண் நான் இப்போ உனக்கு ஒரு உறுதி தர்றேன், நாங்க சண்டையே போடமாட்டோம், அப்படின்னு எல்லாம் நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன். சின்ன சின்ன ஊடல்கள் எங்களுக்குள்ள வரலாம்.

 

 

“எக்காரணத்தைக் கொண்டும் நான் அவளை பிரியவே மாட்டேன். அவளுக்காக நான் விட்டுக் கொடுத்து தான் வாழ்வேன் என்றுவிட்டு இது போதுமா உனக்கு என்பதை போல் அவனைப் பார்த்தான்.

 

 

“சரி நீ அந்த பொண்ணை ஒரு ரெண்டு தடவை பார்த்திருப்பியா, உனக்குள்ள எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. அந்த பொண்ணை பத்தி உனக்கு என்ன தெரியும் பார்த்ததும் அவளை கட்டிக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றியது என்று கல்யாண் மேலும் கேள்விகளை வளர்த்தான்.

 

 

“சரி நீங்க எனக்கு பொண்ணு பார்க்க கூட்டிப் போனீங்களே, நாம அந்த பொண்ணை போய் எவ்வளவு நேரம் பார்த்தோம் என்றான் வைபவ் கேள்வியாக.

 

 

‘இதை எதுக்கு இப்போ கேக்குறான், எதாச்சும் வில்லங்கமா இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே “ஹம் ஒரு அரைமணி அல்லது ஒரு மணி நேரம் இருக்கும் என்றான் கல்யாண்.

 

 

“அந்த அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் மட்டும் எனக்கு அந்த பொண்ணை பற்றி முழுதாக தெரிந்துவிடுமா அல்லது அந்த பெண்ணுக்கு தான் என்னை பற்றி தெரிந்துவிடுமா என்று நிறுத்தினான் அவன்.

 

 

‘சரியான பாயிண்ட் புடிச்சுட்டான், இன்னும் என்ன சொல்லப் போறான்னு பார்போம் என்றவாறே அவன் அடுத்து பேசுவதை கேட்க ஆர்வமாக தயாரானான் கல்யாண்.

 

 

“ஆனா அது போதும்ன்னு நினைச்சு தானே கல்யாணம் நிச்சயம் பண்றோம், அது முடியும் போது இது மட்டும் ஏன் முடியாது கல்யாண், நான் அபியை மூன்று முறை பார்த்திருக்கிறேன், அவள் எப்படி நடந்துக் கொள்வாள் அவள் குணம் என்ன என்பது ஓரளவு என்னால் கணிக்க முடிகிறது, இதற்கு மேல் நீ என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் என்றான் அவன்.

 

 

“உனக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு, ஏதோ இன்னைக்கு தான் அந்த பொண்ணுக்கு உன் மேல ஒரு நல்ல அபிப்பிராயமே வந்திருக்கும். ஏன் வைபவ் நீ மட்டுமே யோசிச்சா போதுமா அந்த பொண்ணு இதுக்கு ஒத்துக்க வேண்டாமா

 

 

“அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. அப்புறம் நாங்க அடிக்கடி சண்டை போட்டா தான் வாழ்க்கை சுவாரசியமானதா இருக்கும். நான் சந்தோசமா அதை அனுபவிப்பேன், எக்காரணம் கொண்டும் அவளை வருத்தமாட்டேன்.

 

 

“எனக்காக நீங்க தானே இது வரைக்கும் பொண்ணு பார்த்தீங்க, இப்போ நான் சொல்றேன் அபி தான் எனக்கானவ. அவளை நான் கல்யாணம் பண்ணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்டா போதுமா என்றான் வைபவ்.

 

 

“ஏன் கல்யாண் உனக்கு நான் அவளை கல்யாணம் பண்ண நினைக்கிறது பிடிக்கலையா என்றான் வைபவ். “நான் அதுக்காக உன்னை இவ்வளவு கேள்வி கேட்கலைடா, நீ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதே எனக்கு சந்தோசம் தான்டா என்று நிறுத்தினான்.

 

 

“உன்னோட எண்ணத்தை முழுசா தெரிஞ்சிக்க தான் கேட்டேன் வைபவ், நீ அந்த பொண்ணை சந்தோசமா வைச்சுக்குவேன் எனக்கு புரிஞ்சு போச்சு. சரி அதெல்லாம் இருக்கட்டும். நீ அம்மாகிட்டயும் தங்கச்சிகிட்டயும் இதை பத்தி எப்படி சொல்லப் போற அதை யோசிச்சியா என்றான் அவன்.

 

 

“இன்னைக்கே போய் நான் அவங்ககிட்ட பேசறேன்டா, எனக்கு இப்போதைய கவலை என்னன்னா அந்த பொண்ணை பற்றி எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு தான், அவங்க வீடு எங்க இருக்கு என்னன்னு முழுசா தெரிஞ்சா தானே அவங்க வீட்டில போய் பொண்ணு கேட்க முடியும் என்றான் வைபவ்.

 

 

“அந்த கவலையை நீ என்கிட்ட விடு, அந்த பொண்ணு எந்த நிறுத்தத்தில் ஏறினாள்ன்னு மட்டும் சொல்லு. மத்ததெல்லாம்  நான் பார்த்துக்கறேன். இந்த விஷயத்தில் நானே கோதாவில இறங்குறேன்

 

 

“அந்த பொண்ணை பத்திய விவரம் சேகரிக்கறேன், அப்புறமா நாம அவங்க வீட்டுக்கு போய் எப்படி பொண்ணு கேட்கறதுன்னு யோசிப்போம் என்றான் கல்யாண். கல்யாணுடன் பேசிவிட்டு வைபவ் வெளியில் சென்று அன்றைய வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

 

 

வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் அவன் பலத்த யோசனையிலேயே இருந்தான். கல்யாணிடம் பேசி அவனுக்கு புரிய வைத்தாயிற்று, ஆனால் வீட்டில் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது.

 

 

தன் முடிவை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றாலும், அவர்கள் மனதார இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. வீட்டிற்கு வந்தவன் குளித்து உடைமாற்றி விட்டு மொட்டைமாடிக்கு சென்று உலாவிக் கொண்டு இருந்தான்.

 

 

எப்படி இந்த விஷயத்தை ஆரம்பிப்பது என்று யோசித்தான். “என்ன அண்ணா பலமா யோசிக்கிற, உன்கிட்ட இல்லாதது எல்லாம் ஏன் செய்யுற என்றவாறே மேலேறி வந்தாள் நந்திதா.

 

 

“ஹேய் வாலு என்ன உளர்ற என்றான் வைபவ். “உனக்கு தான் மூளைன்னு ஒண்ணு இல்லவே இல்லையே, அப்புறம் என்ன யோசிக்கிற மாதிரி நடிக்கிற என்றாள் அவள் சிரிப்புடன்.

 

 

“நந்து பேசாம இருக்க மாட்டியா, எதுக்கு இப்படி பேசுற, அவன் உனக்கு அண்ணன் அந்த மரியாதையோட பேசு என்று அவளை அதட்டிக் கொண்டே சாந்தியும் மேலே வந்தார்.

 

 

இது தான் விஷயத்தை ஆரம்பிக்க நல்ல நேரம் என்பதை வைபவ் உணர்ந்தான். நந்து கையோடு கொண்டு வந்திருந்த பாயை விரித்து அதில் உட்கார்ந்தாள். சாந்தி இருவருக்கும் உருண்டை பிடித்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் என்பதால் சாதம் பிசைந்து கொண்டு வந்திருந்தார்.

 

 

“வைபவ் இங்க வந்து உட்காருப்பா, ரெண்டு பேருக்கும் நான் உருண்டை உருட்டி தர்றேன் சாப்பிடுங்க என்றார் அவர். “அம்மா அதுக்கு முன்ன நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்றான் வைபவ் திக்கித் திணறியவாறே.

 

 

‘அண்ணன் என்ன இன்னைக்கு ஒரு புது தினுசா பேசுது, இப்படி அமைதியா அண்ணன் வீட்டில பேசாதே. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு தானே பேசும். என்ன பேசப் போகுது என்று நந்துவும் அதை கேட்க ஆர்வமானாள்.

 

 

“அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணிட்டேன் என்று சொல்லி நிறுத்தினான். “அண்ணா காலையில வேண்டாம்ன்னு சொன்ன, இப்ப சரின்னு சொல்லிட்டியே, அம்மா உன் புள்ளைக்கு ஞானோதயம் வந்திருச்சும்மா, உன் வேண்டுதல் பலிச்சுருச்சு என்றாள் நந்து சந்தோசமாக.

 

ஆனால் இதை கேட்ட சாந்தியோ மகன் இன்னும் பேசி முடிக்கவில்லை என்பதை உணர்ந்தவராக அவன் அடுத்து பேசப்போவதை கவனித்துக் கொண்டிருந்தார்.

 

 

“சொல்லுப்பா என்று அவர் ஊக்க அவன் அபியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி அவளை அவன் முதன் முறை பார்த்தது முதல் அன்று காலை நடந்த  சம்பவம் வரை ஒன்று விடாமல் கூறினான்.

 

 

“என்ன அண்ணா சொல்ற இது சரிபட்டு வருமா, நாங்க உனக்கு எப்படி பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கோம், நீ இப்படி சொல்றியே. அதெப்படி அண்ணா உனக்கு அவங்களை பார்த்ததும் திருமணம் செய்யணும்ன்னு தோணிச்சு என்றாள் அவள்.

 

 

“இந்த கேள்வி எல்லாம் கல்யாணும் காலையிலேயே கேட்டுட்டான், மறுபடியும் நீ ஆரம்பிக்கிறியா என்றான் அவன். “நந்து நான் அண்ணாவுக்கு பிடிக்குமேன்னு உருளைக்கிழங்கு வறுத்தேன், அதை எடுத்துட்டு வராம வந்துட்டேன், நீ போய் அதை எடுத்துட்டு குடிக்க தண்ணியும் கொண்டுவா என்று சாந்தி அவளை பேச்சை திசை திருப்பி கீழே அனுப்பி வைத்தார்.

 

 

“போம்மா இங்க என்ன நடக்குது நீ என்னை கீழ போய் அதை எடுத்து வா இதை எடுத்து வான்னு சொல்லிட்டு இருக்க என்று சிணுங்கிக் கொண்டிருந்தாலும் எழுந்து சென்றாள்.

 

 

அவள் சென்றதும் அன்னை என்ன சொல்லுவாரோ என்று நினைத்தவன் அவரிடம் திரும்பி “அம்மா நீங்க என்ன நினைக்கிறீங்க சொல்லுங்கம்மா, இது என்னோட விருப்பம் மட்டும் தான் உங்களுக்கும் பிடிச்சா இதை தொடரலாம். இல்லன்னா அப்படியே விட்டுடலாம் சொல்லுங்கம்மா என்றான் அவன்.

 

 

“நாங்க எந்த பொண்ணை பார்த்தாலும் உனக்கு பிடிக்கணும்ன்னு தான் நினைப்போம், உனக்கு இந்த பொண்ணு தான் பிடிச்சுருக்குன்னா எங்களுக்கு முழு சம்மதம்ப்பா என்றார் சாந்தி அமைதியாக.

 

 

“அம்மா நான் இப்பவும் சொல்றேன் உங்களுடைய சம்மதம் முழு மனசோட இருக்கணும். நீங்க எனக்காக சம்மதம் சொல்ற மாதிரி இருக்கும்மா என்றான் வைபவ்.

 

 

அதற்குள் மாடியேறி வந்த நந்திதாவும் “அம்மா உங்களுக்கு வேணாம்ன்னு சொல்லிடுங்க, நாம அண்ணாவுக்கு வேற பொண்ணு பார்த்துக்கலாம். அதான் அண்ணா உங்களை கேட்குறாங்கல சொல்லுங்கம்மா என்றாள் அவள்.

 

 

“நந்து நீ பேசாம இரு வைபவ் நான் மனசார தான் சொல்றேன்ப்பா எனக்கு இதுல முழு சம்மதம். நந்து உனக்கு இதுல எதுவும் சங்கடமா இருக்கா என்றார் அவர். “ஆமாம் நந்து உனக்கும் பிடிக்கணும் சொல்லும்மா என்றான் அவனும்

 

 

“அம்மா அண்ணா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே எனக்கு சந்தோசம் தான்ம்மா. அண்ணா நான் உனக்காக தான் பார்த்தேன், நீங்க ரெண்டு பேருமே சம்மதம் சொல்லும் போது எனக்கென்ன சொல்லுங்க.

 

 

“எனக்கு ஒரு வருத்தம் தான் அண்ணா எங்க அண்ணியும் நானும் ஜாலியா நாத்தனார் சண்டை போடலாம்ன்னா முடியாது போல இருக்கே என்றாள் முகத்தை சோகம் போல் வைத்துக் கொண்டு.

 

 

“ஹேய் உனக்கு அவகிட்ட சண்டை தானே போடணும் நல்லா போடு, அவளும் நல்லா சண்டை போடுவா என்ன கத்தி சண்டை எல்லாம் இல்லை காகித சண்டை தான் பரவாயில்லையா என்றான் அவன். அவர்கள் சம்மதத்தில் அவன் முகம் மலர்ந்ததை அந்த அன்னை கண்டுகொண்டார்.

 

 

“அம்மா நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன், அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்கு. அதை பத்தி நான் கல்யாண்கிட்ட பேச மறந்துட்டேன், பேசிட்டு இதோ வந்துடறேன். அப்புறம் நாம சேர்ந்து சாப்பிடலாம் என்றவன் இறங்கி சென்றான். அவன் தலை மறைந்ததும் நந்திதா சாந்தியை பிடித்துக் கொண்டாள்.

 

 

“அம்மா நிஜமாவே உங்களுக்கு இதுல பரிபூரண சம்மதமாம்மா என்றாள் அவள். “ஏன் நந்தும்மா அப்படி கேக்குற, உன் அண்ணனுக்கு பிடிக்கறது தான் முக்கியம், பார்த்தியா அவன் முகத்தை அவன் எவ்வளவு சந்தோசமா இருக்கான்

 

 

“உங்க அண்ணன் சம்மதம் தான் நமக்கு இப்போ முக்கியம், நாம கூட அவனுக்கு ஒரு பொண்ணை நிச்சயம் எல்லாம் பண்ணோம், ஆனா அந்த சம்மந்தம் நிச்சயத்தோட நின்னு போச்சு

 

 

“என்ன காரணம் இவன் நமக்காக தான் அந்த பொண்ணை கட்டிக்க சம்மத்திச்சான், ஆனா ஒரு பிடிப்பே இல்லாம தானே அந்த பொண்ணு கூட பேசி இருக்கான், கடைசியா என்ன நடந்துச்சு அந்த பொண்ணு இந்த மாப்பிள்ளை வேணாம்ன்னு சொல்லி கல்யாணம் நின்னு போச்சு”.

 

 

“அபியை நாம பார்க்கலை உங்க அண்ணன் தான் பார்த்திருக்கான், அவனுக்கு அந்த பொண்ணை பிடிக்கும் போது நமக்கு பிடிக்காம போகுமா, அதுனால தான் நான் சரின்னு சொன்னேன்.

 

 

“அதுவும் இல்லாம வாழப் போறவன் அவன். அவனுக்கு பிடிச்சு தான் நாம கல்யாணம் பண்ணணும், அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஏன் நந்து உனக்கு பிடிக்கலையா என்றார் அவர்.

 

 

“அம்மா நீ நினைச்சது தான் நானும் நினைச்சேன், இருந்தாலும் அண்ணா என்ன மனநிலையோட அதை சொல்லிச்சுன்னு தெரிஞ்சுக்க தான் அப்படி கேட்டேன்மா என்றாள் அவள்.

 

 

அப்போது வைபவ் மாடியேறி வந்தான், “அம்மா சாப்பிடலாமா எவ்வளோ நாள் ஆச்சு, உருண்டை சாதம் சாப்பிட்டு. நந்து வா சாப்பிடலாம் என்றான் அவன். சாந்தி இருவருக்கும் உருண்டை பிடித்துக் கொடுக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.

 

____________________

 

 

“வைபவ் இந்த வாரம் கருணாகரன் சார் பொண்ணுக்கு கல்யாணம் நாம போயிட்டு வரணும்டா. அந்த சமையல்காரர் கொடுத்த முன்பணம் பத்தலைன்னு கேட்டு இருந்தார், என்ன பண்ணலாம் என்றான் கல்யாண்.

 

 

“கொடுத்திருடா காய்கறி விலை வேற ஏறிப்போச்சு அவரும் மொத்தமா வாங்கும் போது கொஞ்சம் குறைவா இருக்கும், அதுக்கு தான் கேட்டு இருப்பாரு கல்யாண் என்றான் அவன்.

 

 

“சரி அப்போ நான் நாளைக்கு பேங்க்ல இருந்து பணம் எடுத்துட்டு வந்து அவருக்கு கொடுத்துடுறேன். நீ என்ன பண்ணுற அந்த கச்சேரிக்கு ஆளுங்களை தயார் பண்ணிடு, மேளக்காரங்களுக்கும் ஒரு தடவை ஞாபகப்படுத்திடுடா என்றான் கல்யாண்.

 

 

“கல்யாண் அடுத்த மாசமும் அதுக்கு அடுத்த மாசமும் நிறைய கல்யாணம் இருக்கே, நமக்கு ஆளுங்க பத்தமாட்டாங்க என்ன செய்யலாம் என்றான் வைபவ்.

 

 

“நானும் அதே தான் யோசிச்சேன் வைபவ் நாம இப்போ புதுசா ஆளுங்க எடுத்தா அதுக்கு அப்புறம் அவங்களுக்கும் தொடர்ந்து சம்பளம் கொடுக்கணும். இப்போ ரெண்டு மாசம் நமக்கு நிறைய கல்யாணம் இருக்கு, அதுக்கு அப்புறம் இப்படி இல்லைன்னா நாம எப்படி சமாளிக்கறது என்றான் கல்யாண்.

 

 

“நாம எப்படியாச்சும் சமாளிக்க பார்போம், முடியலைன்னா நெருக்கத்தில ஆளுங்களை சேர்த்துக்கலாம். சரி நீ அதை விடு அபியை பத்தி எதாச்சும் தெரிஞ்சுதா என்றான் வைபவ்.

 

 

“இல்லை வைபவ் நான் இன்னும் அந்த வேலையை ஆரம்பிக்கவே இல்லை. நாளைக்கு நான் வீட்டுக்கு வர்றேன், நீயும் நானுமா அந்த நிறுத்தத்துக்கு போவோம், அப்புறம் என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம் என்றான் கல்யாண்.

 

 

சொன்னது போலவே காலையில் வைபவ் வீட்டிற்கு அவன் வர “வா கல்யாணம் இப்போ தான் உனக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரியுதா என்றாள் நந்து.

 

 

“நந்து என் பேரு கல்யாண் நீ எதுக்கு இப்படி நீட்டி முழக்கி கல்யாணம்ன்னு கூப்பிட்டு என் மானத்தை வாங்குற. உங்க அண்ணன் சொல்ற மாதிரி உனக்கு வாய் அதிகம் ஆகிபோச்சு அதுனால உனக்கு சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிச்சுட வேண்டியது தான் என்றான் கல்யாண்.

 

 

“அதை சொல்லுப்பா கல்யாண் வைபவ் கல்யாணம் முடிஞ்சதும் இவளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி அனுப்பிடணும் ரொம்பவும் வாயாடுறா. அம்மா, தம்பி எல்லாம் எப்படி இருக்காங்கப்பா என்றார் சாந்தி.

 

 

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, அம்மா உங்களை பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க இந்த வாரம் வந்து உங்களை பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன் என்றான் அவன்.

 

 

“கல்யாண் நீ எப்போ கார்த்திகாவை கூப்பிட்டு வரப்போற என்றார் அவர். “இல்லைம்மா இதுல நான் போய் கூப்பிட என்ன இருக்கு, நான் அவளை போக சொல்லலையே, அவளா தானே போனா, அவளாவே வரட்டும்மா என்றான் அவன் விட்டேத்தியாக.

 

 

“அப்படி எல்லாம் சொல்லாதப்பா நாம இப்படியே பார்த்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அம்மாவும் உங்க ரெண்டு பேரையும் நினைச்சு தான் கவலையா இருக்காங்க, யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து போகணும்ப்பா.

 

 

“சீக்கிரமா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வாப்பா, வைபவ் கல்யாணத்துக்குள்ள நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து இருக்கணும் சரியாப்பா என்றார் சாந்தி.

 

 

“சரிம்மா என்றான் அவன் இறுக்கத்துடன். “அம்மா நீ வேற எப்போ பார்த்தாலும் இதை பத்தியே அண்ணாகிட்ட பேசிட்டு இருக்க, அதான் கல்யாணம் இப்போலாம் நம்ம வீட்டுக்கு வர்றதே இல்லை

 

 

“நீ வேற எதாவது பேசும்மா, கல்யாணம் முகத்தை பாரு எப்படி ஆகிபோச்சுன்னு. நீ கவலைப்படாதே கல்யாணம் என்றாள் நந்து. “நந்து சந்தடி சாக்கில நீ என்னை எத்தனை தடவை பேர் சொல்லி கூப்பிடுவ உன்னை உதைக்கிறேன் இரு. சரி அண்ணா கிளம்பிட்டானா பாரு மணியாச்சு என்றார் கல்யாண். “கல்யாண் நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்காதப்பா, உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்ப்பா. நீ அதுக்காகலாம் இங்க வராம இருக்காதே என்றார் சாந்தி கவலையுடன்.

 

 

“அம்மா நீங்க வேற, நந்து சொல்ற மாதிரி எதுவும் இல்லைம்மா. உங்களுக்கே தெரியும் வேலை கொஞ்சம் அதிகம்மா அதான் வரலை. இனி இப்படி இருக்க மாட்டேன் கண்டிப்பா அடிக்கடி வந்து போறேன் போதுமா என்றான் அவன்.

 

 

“நந்து பாரு நீ பண்ண வேலையாலே அம்மா வருத்தப்படுறாங்க. சரி உங்க அண்ணன் இன்னுமா குளிச்சுட்டு இருக்கான், எப்போ தான் தயார் ஆவான் என்றான் கல்யாண்.

 

 

அப்போது வைபவ் தயாராகி வெளியில் வந்தான். என்றும் இல்லாமல் முதன் முறையாக முழுக்கை சட்டை அணிந்து இன் செய்திருந்தான். ஆகாய வண்ணத்தில் சட்டையும் அதற்கேற்றார் போல் கால்சட்டையும் அணிந்திருந்தவனை எல்லோருமே வியப்புடன் பார்த்தனர்.

 

 

“அண்ணா என்ன நீ இன்னைக்கு ரொம்ப அழாக உடை அணிந்திருக்கிறாய், இந்த சட்டை உனக்கு ரொம்ப அழகா இருக்குண்ணா, ஆமா என்ன விஷேசம் நீ இப்படி ஒரேடியா மாறக் காரணம் யாரு அண்ணியா….

 

 

“ஒரு வேளை, அடக்கடவுளே நீ அவங்களை தான் பார்க்க போறியா, அதான் இப்படி ஜம்முனு டிரஸ் பண்ணி இருக்கியா. நடக்கட்டும் தம்பி நல்லா நடக்கட்டும் என்றாள் அவள் வைபவை கிண்டலடித்துக் கொண்டே.

 

 

“நந்து உனக்கு வாய் அதிகம் ஆகிப் போச்சு, உன்னை என்று அவளை  அடிக்க கை ஓங்கி வந்தான். அவள் “அய்யோ அம்மா என்று கத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், அவனோ அவள் தலையை செல்லமாக வருடினான்.

 

 

“என்ன நான் அடிக்கப் போறேன்னு பயந்துட்டியா, சும்மா உன்னை பயமுறுத்தினேன். தேங்க்ஸ் நந்தும்மா என்று சொல்லி சிரித்துவிட்டு “கல்யாண் வாடா கிளம்பலாம் என்றான் நண்பனை பார்த்து.

 

 

“இருங்கப்பா உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கும்ன்னு பொங்கலும் கொத்சும் பண்ணி வடை சுட்டிருக்கேன். முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிட்டு போங்க, நந்து உனக்கும் நேரம் ஆகுதுல நீயும் சாப்பிட்டு காலேஜ்க்கு கிளம்பு என்றார் அவர் அன்பு கட்டளையாக. நண்பர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு கல்யாணின் பைக்கிலேயே கிளம்பினர்.

 

“கல்யாண் அவளை பார்ப்போமா, அவங்க வீட்டை கண்டு பிடிச்சுடலாம் தானே என்றான் வைபவ். என்றுமில்லாமல் நண்பனின் போக்கில் தெரிந்த வித்தியாசம் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டான் கல்யாண்.

 

 

அவள் அன்று ஏறிய நிறுத்தத்தில் வந்து நின்ற நண்பர்கள் இருவரும் அவள் வருகிறாளா என்று நாலாப்பக்கமும் கண்களை சுழல விட்டனர். தூரத்தில் அவள் வருவது தெரிய அவள் எந்த பக்கத்தில் இருந்து வருகிறாள் என்று கல்யாண் மனதிற்குள் குறித்துக் கொண்டு வைபவை அழைத்தான்.

 

 

“டேய் அங்க பாரு அபி வர்றாங்க என்றான் அவன். அவன் காட்டிய திசையில் திரும்பி பார்த்தான் வைபவ். இவர்கள் அவளின் முகவரியை தேடிக் கொண்டிருக்க தேடாமலே அவள் இவர்களை தேடி வரப்போவது அறியாமல் இருந்தனர் இருவரும்…………

 

 

என் முகவரி இனி

நம் முகவரியாக்க

விழைந்து…

உன்முகவரி தேடி

அலைந்தேன் நானே…

 

உன் கரம் பிடித்து

நம் முகவரிக்கு

அழைத்து செல்ல…

 

என் கரம் சேர்ந்து

என்னுடன் வருவாயா

கண்மணியாளே…

 

என் உறவை ஏற்று

என்னை அங்கீகரிப்பாயா

என்னவளே…

 

 

 

Advertisement