Advertisement

அத்தியாயம் –22

 

 

வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ் என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த தான் கூப்பிட்டேன் என்றான் அவன்.

 

 

“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு வைபவ், நான் அதுக்காக தான் சீர்வரிசை சாமான் எல்லாம் வாங்க வந்திருக்கேன். நீ எதுவும் கவலைப்பட வேணாம், எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நாளைக்கு நேரா கல்யாணத்துக்கு வந்திடுவ தானே என்றான் அவன்.

 

 

“ஹ்ம்ம் வந்திடுவேன் கல்யாண், அதெப்படி வராமல் போவேன், அது நம்ம வீட்டு விசேஷம் போல தானே என்றான் அவன். மேலும் ஏதேதோ பேசிவிட்டு போனை வைத்தான் வைபவ். விடிந்ததும் முதல் வேலையாக குளித்து கிளம்பியவன் கல்யாண மண்டபத்திற்கு கிளம்பினான்.

 

 

வாயிலிலேயே அவனை வரவேற்றான் கல்யாண். “எனக்கு முன்னாடியே வந்துட்டியாடா, நான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். மேடம் உள்ள தான் இருக்காங்களா என்றான் வைபவ். “ஆமாம் வைபவ் நீ போய் பாரு, நான் இங்க கவனிச்சுக்கறேன் என்றான் கல்யாண்.

 

 

உள்ளே சென்றவன் நேரே சமையலறைக்கு சென்று மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தான். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க அதுவரை வைபவ், கல்யாண் சொல்லிக் கொண்டிருந்த அந்த பெண்மணி அவனை அழைக்க சமையலறைக்கே வந்தார்.

 

 

“என்ன வைபவ் முகூர்த்தம் நெருங்க போகுது பொண்ணுக்கு அண்ணனா நீயும், கல்யாணும் தானே நிற்கணும் வாங்க என்று அவனை அழைத்துச் சென்றார் அந்த மாதுரி. வைபவும் அவன் சட்டையை சரி செய்தவாறே மணமேடைக்கு அருகில் சென்றான்.

 

 

மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யம் இட வந்திருந்தவர்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தினர். சரியாக வைபவ் அபியின் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்க, மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் போது வைபவுக்கு அவன் அபிக்கு தாலி கட்டுவது போல் தோன்றி சந்தோஷ ஊற்று அவனுக்குள் சுரக்க ஆரம்பித்தது.

 

 

அடுத்த வாரம் இதே நேரம் நமக்கும் திருமணம் முடிந்திருக்கும், அபி அதன் பின் அவனுடனே இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு தித்திப்பாக இருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள், மாதுரி, கல்யாண் மற்றும் வைபவ் காலில் விழ, வைபவ் அவன் காலில் விழும் போது தடுத்துவிட்டான்.

 

 

மாதுரி கல்யாணுக்கும் வைபவுக்கும் நன்றி கூறினார். “ரொம்ப சந்தோசம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யற தொழிலே ஒரு மங்களகரமான ஒரு தொழில். அதிலும் இப்படி வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இப்படி யாருமற்றவர்களுக்கு முன்னின்று எல்லாமும் செய்து மற்றவர்கள் போலவே அவர்களும் திருமணம் முடிக்க நீங்கள் உதவுகிறீர்கள்

 

 

“இதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை எனக்கு என்றார் மாதுரி. “என்ன மேடம் நீங்க நாங்க எதுவுமே பெரிசா செய்யலையே, உங்க அளவுக்கு எல்லாம் நாங்க எதுவுமே செய்யலையே மேடம். நீங்க சொன்ன மாதிரி வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு நல்ல காரியம் செய்கிறோம் அவ்வளவு தான்

 

 

“ஆனால் இவர்கள் போன்றோருக்கு நீங்கள் தானே மேடம் ஆதரவு கொடுக்கிறீர்கள். அந்த நல்ல செயலுக்கு ஈடேயாகாது மேடம் என்றான் கல்யாண். “ஆமாம் மேடம் கல்யாண் சொன்னது தான் எனக்கும் தோணிச்சு என்றான் வைபவ்.

 

 

“அப்புறம் வைபவ் அடுத்த வாரம் உங்க திருமணம், வேலைகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்றார் அவர். “ஹ்ம்ம் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு மேடம். என்னை எதுவும் செய்ய விடாம இதோ நிக்குறானே இவனே எல்லாமும் இழுத்து போட்டுட்டு செய்யறான் என்றான் கல்யாணை பார்த்து.

 

 

அதன் பின் சீர்வரிசை எல்லாம் கொடுத்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு வைபவும், கல்யாணும் அங்கிருந்து கிளம்பினர். வழியில் ஏதோ யோசனையுடனே இருந்தான் வைபவ். “என்னாச்சு வைபவ் என்ன யோசனை என்றான் கல்யாண்.

 

 

“ம் ப்ச் ஒண்ணும்மில்லைடா கல்யாண் என்றான் அவன். வைபவுக்கு ராஜேஷை பற்றி பெங்களூரில் இருந்து வந்த தகவல் அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. அவன் எண்ணம் ஏதோ ஒரு வகையில் சரியே என்பது போல் இருந்தது அது.

 

 

அவனுக்கு இரண்டு நாட்களாக இதே யோசனை தான். கல்யாணை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டு அவனுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தான் அவன். எதுவோ நடக்கப் போகிறது என்று அவன் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

 

 

இதுவரை எது நடக்கிறதோ அதன் வழியே பயணித்துக் கொண்டிருந்தவன் அபிக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று ஒவ்வொரு கணமும் யோசித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு சீக்கிரம் இந்த திருமணம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தன்னுடன் அழைத்து வர வேண்டும் என்று அவனுக்குள் வேட்கை எழுந்தது.

 

 

இப்போதெல்லாம் அபியிடம் இருந்து அவ்வளவாக அவனுக்கு குறுந்தகவல் பரிமாற்றம் இல்லை. திருமண நெருக்கம் ஆகிவிட்டதால் இருவருமே சற்று வேலையாக இருந்தனர். சரியாக அவர்களால் தகவல் பரிமாறிக் கொள்ள முடியவில்லை.

 

 

இருந்தும் காலை வணக்கம், இரவு வணக்கம், இடைப்பட்ட பொழுதில் சாப்பிட்டாச்சா போன்ற தகவல்கள் பரிமாறிக் கொண்டுதானிருந்தனர். இருந்தும் வைபவ் அவ்வப்போது அவன் கைபேசியை எடுப்பதும் பார்ப்பதுமாகவே இருந்தான்.

 

 

ஏதோ யோசனையில் இருந்தவன், சிக்னலில் நின்றிருந்த போது அவன் கைபேசி அழைப்பு விடுக்க, சுத்தி இருந்த வாகனங்களின் இரைச்சலில் அவன் காதுக்கு அந்த சத்தம் எட்டவேயில்லை. வைபவ் இரண்டு நாட்கள் முன் கூட அபியிடம் யதார்த்தம் போல் அவள் தங்கையின் கணவர் வந்துவிட்டாரா என்று விசாரித்தான். அவர் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வருவதாக தங்கை கூறியதாக அவள் கூறினாள்.

 

 

அபியின் தங்கை முதல் வாரமே வந்திருக்க அவள் கணவன் வந்திருக்கவில்லை என்பது வைபவுக்கு சற்றே நிம்மதியை கொடுத்தது. மீண்டும் அவன் கைபேசி அழைப்பு விடுக்க இம்முறையும் இன்னும் சிக்னல் விழாத கடுப்பில் சுற்றி உள்ளோர் ஒவ்வொருவராக ஹாரன் அடித்துக் கொண்டிருந்த சத்தத்தில் அவனுக்கு கேட்கவேயில்லை.

 

____________________

 

 

விடிந்தும் விடியாததுமாக அழைப்பு மணி அடிக்க கற்பகம் சென்று கதவை திறந்தார். எதிரில் நின்றவனை பார்த்து சந்தோசத்துடன் “வாங்க மாப்பிள்ளை உள்ள வாங்க நீங்க ரெண்டு நாள் முன்ன தான் வருவீங்கன்னு விமலா சொன்னா, இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க என்றவர் ராஜேஷை வரவேற்று அமர வைத்தார்.

 

 

“இல்லை அத்தை, ஒரு முக்கிய வேலையில மாட்டிக்கிட்டேன். அந்த வேலை கொஞ்சம் சீக்கிரமே முடிஞ்சு போச்சு. அதான் தாமதிக்காம வந்திட்டேன், ஆமா விமலா உள்ளே தூங்குறாளா என்றான் உள்ளே பார்த்தவாறு.

 

 

அவன் வாய் மட்டுமே விமலாவை கேட்டது, கண்ணோ உள்ளே அபியின் அறையை நோட்டமிட்டது, மாமியார் நோக்காத வண்ணம் அவன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். “விமலா உள்ளே தான் படுத்திருக்கா மாப்பிள்ளை, நீங்களும் போய் கொஞ்ச நேரம் படுங்க. அப்புறமா எழுந்து பேசிக்கலாம் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

 

 

காலையில் கண் விழித்ததும் அபி அவள் அன்னைக்கு உதவி செய்துக் கொண்டிருக்க அவரோ, இன்னும் ஒரு வாரம் இருக்கிறது நீயேன் செய்கிறாய், நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா என்று அவளை அனுப்பி வைக்க முனைந்து கொண்டிருந்தார்.

 

 

அந்நேரம் வாசலில் நிழலாட அபியின் உள்ளுணர்வு ஏதோ எச்சரிக்கை செய்ய நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள். ராஜேஷ் அறைவாயிலில் நின்றிருந்தான். அவள் திகைத்து விழிக்க கற்பகம் “என்ன மாப்பிள்ளை இங்க நிக்கறீங்க, நீங்க போய் உட்காருங்க, நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வர்றேன் என்றவர் அவனுக்கு காபி தயாரிக்க சென்றார்.

 

 

ராஜேஷ் கற்பகம் பார்க்காத பொழுது அபியை பார்த்து கண்ணடிக்க அபிக்கு வயிற்றில் புளியை கரைத்தது. இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறானே திருந்தி வந்திருப்பான் என்று பார்த்தால் இவன் இப்படி செய்கிறானே என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கற்பகம் அவள் கையில் காபியை திணித்து அவனுக்கு கொடுத்துவரும் படி பணித்தார்.

 

 

விமலா இன்னும் துயில் கலையாததால் கற்பகம் அவளிடம் கொடுத்திருக்க, வேறு வழியில்லாமல் அவள் அவனுக்கு காபி எடுத்து சென்றாள். நல்லவேளையாக கூடத்தில் வைத்தியநாதனும் அமர்ந்திருக்க அபி அவனிடம் சென்று காபி கோப்பையை கொடுத்தாள்.

 

 

கையை நீட்டி அவன் வாங்க முனைய அவளோ அதை மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றாள். ‘போடி போ, நீ என்கிட்ட மாட்டாமலா போய்டுவ, போன தடவை விட்ட மாதிரி இந்த தடவை விடமாட்டேன் என்று மனதிற்குள் சூளுரைத்தான்.

 

 

அன்று முழுவதும் அவன் அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொள்ள அபிக்கு கூட காலையில் அவன் அவளை பார்த்து கண்ணடித்தானா, ஒரு வேளை நம் பிரமையாய் இருக்குமோ என்றே எண்ணத் தோன்றியது. அந்தளவுக்கு அவன் அபி இருக்கும் பக்கம் கூட வரவேயில்லை.

 

 

மறுநாள் காலை அபியின் அன்னையும் தந்தையும் கோவிலில் பொங்கல் வைக்க போவதாக சொல்லி கிளம்பினர். அபி கல்யாணப் பெண் என்பதால் வீட்டிலிருக்க விமலாவை அவளுக்கு துணை வைத்துச் சென்றனர். விமலா அவள் கணவனையும் கோவிலுக்கு செல்லுமாறு கூற அவனோ தனக்கு வெளியில் ஒரு முக்கிய வேலை இருப்பதாக கூறி சென்றுவிட்டான்.

 

 

விமலா ஏதோ நிம்மதியுடன் பெருமூச்சு விடுவது போல் அபிக்கு தோன்றியது. இந்த முறை விமலாவின் செயல்கள் அனைத்தும் அபிக்கு சற்றே வித்தியாசமாகப்பட்டது. சந்தோசமாகவும் இருந்தது, அதே சமயம் எதுவோ அவளை உறுத்தியது.

 

 

விமலாவுக்கு அபியின் மீது பொறாமை எப்போதும் உண்டு, இதுவரை அவள் பெற்றோரிடமும் அபியிடமும் பலமுறை கோபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு போன் செய்தாலும் சண்டையுடன் தான் அது முடியும்.

 

 

ஆனால் இந்த முறை அவள் அபியின் மீது அளவில்லா அன்பை பொழிந்தாள். அவளுக்காக பார்த்து பார்த்து செய்தாள், எப்போதும் அபியை விட எனக்கே நன்றாக உடை எடுக்க வேண்டும் என்று சண்டையிடும் விமலா, புடவை காட்டிக் கொண்டிருந்தவரிடம், இந்த புடவை என் அக்காவுக்கு நன்றாக இருக்கும் அது நன்றாக இருக்கும் என்று அபியின் முன்னே கடை பரப்பி இருந்தாள்.

 

 

சகஜமாக சிரித்து பேச முயன்ற போதும் அவள் கண்களில் அவ்வப்போது ஏதோ ஒரு கலக்கம் தோன்றுவது போல் இருந்தது அபிக்கு, அவள் அப்படி எதுவும் இருக்குமா என்று யோசிக்கும் போதே அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்பது போல் விமலா சாதாரணமாக இருந்தாள்.

 

 

அக்காவும் தங்கையும் சந்தோசமாக காலை உணவை அருந்தினர், இன்னும் இரண்டு நாளில் விருந்தினர் கூட்டம் வீட்டை நிறைக்கும் என்பதால் இருவருமாக சேர்ந்து வீட்டை ஒதுக்கிக் கொண்டிருந்தனர். நேரம் மதியத்தை நெருங்க வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ராஜேஷ்.

 

 

ராஜேஷ் வந்ததும் அறைக்குள் சென்று அடைந்த அபி வெளியே வரவேயில்லை. விமலா அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க இருவருமாக சாப்பிட்டு அவர்கள் அறைக்கு செல்வதை பார்த்த பின்னே அபியும் சென்று உணவருந்தி வந்தாள்.

 

 

அவள் அறைக்கு சென்று கதவை அடைக்க எண்ணியவள் ராஜேஷ் வந்ததில் வீட்டை ஒதுக்கி கொண்டிருந்தவர்கள் அதை பாதியிலேயே விட்டிருக்க ஞாபகம் வந்தவளாக அபி மீண்டும் ஒதுக்க ஆரம்பித்தாள். என்ன வேலை செய்த போதும் அவள் கண்கள் அவ்வபோது விமலாவின் அறைக்கதவில் படிந்து மீளுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

 

வேலை முடிந்து சோர்ந்தவள் அவள் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தாள். கண்கள் சொருக அவள் உறங்க ஆரம்பித்த வேளை உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய உறங்கு உறங்கு என்று கண்கள் கெஞ்சிய போதும் பிரிக்க முடியாமல் பிரித்தாள் அபி.

 

 

கண்டவள் திகைத்து எழ முற்பட அவளை அணைத்தாற்போல் கைகளை வைத்திருந்தான் ராஜேஷ். அபி சட்டென்று அவன் கைகளை தட்டிவிட்டு வேகமாக எழுந்து அவனை வெளியே போகுமாறு கையை நீட்டி காண்பித்தாள்.

 

 

அவள் கையை தட்டி விட்டதுமே சுதாரித்தவன் எழுந்து அவள் கையை பிடித்து இழுத்தான். “என்ன மேடம் என்னை ஒரேடியா மறந்துட்டீங்க போல. உங்க தங்கையால தான் இங்க வர முடியலை, இவ வேற எப்போ பார்த்தாலும் உங்க கூட சண்டை போட்டுட்டு நான் கூப்பிடும் போதெல்லாம் வர மாட்டேன் வரமாட்டேன்னு என் உயிரை வாங்கிட்டு இருந்தா. அதுனால தான் இங்க ரொம்ப வர முடியலை

 

 

“ஆனாலும் உனக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் என்னால என்னை கட்டுப்படுத்திக்கவே முடியலை. அடுத்தவன் உன்னை தொடறதுக்கு முன்னாடி நான் எப்படியும் உன்னை தொடணும்ன்னு நினைச்சேன். அதான் உன் தங்கையை சமாதானப்படுத்தி முதல்ல அனுப்பி வைச்சேன். பின்னாடியே நானும் வந்தேன்.

 

 

“அப்புறம் கேட்க மறந்துட்டேன், சகலை எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார், நான் முதல்ல ஒரு ஒப்பந்தம் சொல்லியிருந்தேனே அதுக்கு ஒத்து வருவார் தானே

 

 

“ஒத்து வந்து தானே ஆகணும், ஆமா உங்கப்பா உன்னை கட்டிக்க போற மாப்பிள்ளைக்கு நெறைய டௌரி கொடுத்திருக்காரோ. அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க உடனே சம்மதம் சொல்லிட்டான் போல, டௌரி வேற அப்புறம் பொண்ணு வேற பார்க்க அழகா அம்சமா ரதி மாதிரி இருக்கே, அவனுக்கு கசக்குமா என்ன

 

 

“சும்மா சொல்லக் கூடாது, முன்னாடிக்கு நீ இப்போ கும்முன்னு இருக்க, உன் முகத்தில கல்யாண களை வந்திருச்சு. அது வேற உன்னை இன்னும் அழகா காட்டுது. அழகு நிலையம் வேற போய் இன்னும் அழகா வேற தெரியறடா கண்ணு என்று கண்களில் ஒரு மயக்கத்துடன் சொன்னவனை அருவருப்புடன் ஏறிட்டாள் அவள்.

 

 

அவன் பேசிக் கொண்டிருந்த வேளையில் அபி அவள் கைபேசியை கையில் எடுத்திருந்தாள், விடாது அவள் வைபவ் எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். அவன் கண் மூடி நின்றிருந்த தருணம் வேகமாக வெளியில் ஓடிச் சென்றாள் அபி.

 

 

ராஜேஷ் எல்லாவற்றையும் முன்பே எதிர்பார்த்தவன் போலும் வெளிக்கதவை இழுத்து தாளிட்டிருந்தான், சன்னல்களையும் இழுத்து அடைத்திருந்தான். வெளியில் ஓடியவளின் பின்னேயே வேகமாக வந்தவன் நொடிப்பொழுதில் அவள் காலில் தட்டிவிட அபி கிழே விழுந்தாள். அபி எழுவதற்குள் ராஜேஷ் அவளை நெருங்கியிருந்தான்.

­

____________________

 

 

வைபவ் இரண்டு முறை கைபேசி அடித்ததை கவனிக்காத போதும் ஏதோ தோன்ற அவன் கைபேசியை எடுத்து பார்த்தான். அபியிடம் இருந்து தான் அழைப்பு என்றதும் அவனுக்கு எதுவோ தப்பாக தோன்றியது, அவளுக்கு அவன் அழைப்பு விடுக்க அது அடித்துக் கொண்டே இருந்தது.

 

 

ஏற்கனவே யோசனையில் இருந்தவன், இந்த நான்கைந்து நாட்களாக அபியின் வீட்டு பக்கமே சுத்திக் கொண்டிருந்தான். அது போல் அன்றும் அவள் வீட்டுக்கு அடுத்த தெருவில் நின்றிருந்தவன் நொடியும் தாமதிக்காமல் அவள் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

 

 

அவள் வீட்டு வாசலில் சென்று வண்டியை நிறுத்தியவனை மூடியிருந்த கதவே வரவேற்க அழைப்பு மணியில் கை வைக்க போனவன் அப்படியே நிறுத்திவிட்டு அவள் வீட்டை சுற்றி வந்தான். பின் பக்கம் கதவு இருக்க, கிரில் கதவை லேசாக தாள் போட்டிருக்க அதை திறந்தவன் அடுத்திருந்த கதவை தள்ள அதுவும் திறந்தது.

 

 

கதவை அடைக்காமல் விட்டு போயிருக்கிறார்கள் போல, என்று எண்ணியவன் கதவை திறந்து உள்ள செல்லவும் ராஜேஷ் அபியை மேலும் நெருங்கவும் சரியாக இருந்தது. உள்ளே வந்தவன் அந்த காட்சியை கண்டு அவன் கண்கள் சிவந்து துடித்தது..

 

 

அவனை பிடித்து வேகமாக இழுத்தவன் கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான். அவன் அடியை பார்த்து பயந்தவன் பம்மியிருக்க வலியில் ராஜேஷ் முனகியவாறே தரையில் படுத்திருந்தான்.

 

 

அபி வேகமாக வைபவை இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு விரைந்தவள், திக்கியவாறே “எ..எ..என்ன…ங்க.. வி…விட்டுடுங்க… ஆணாம்… அ…அவனை அடிக்க… ஆணாம்… எ..எ.. தங்கை வாழ்க்கை… வீ… வீணாப் போகும்… எ…எனக்காக… என்றாள் விழிகளில் நீரை தேக்கி.

 

 

வைபவ் “முடியாது அபி, அவனை கொன்னா தான் என் ஆத்திரம் தீரும் என்று வேகமாக உரைத்தவனுக்கு அப்போது தான் அது உரைத்தது அவன் அபி அவனிடம் பேசினாளா, இது எப்படி நடந்தது, என்று விழியில் ஆச்சரியத்தை தேக்கி அவளை பார்த்தான் அவன்.

 

 

அவளோ எதையும் உணராதவளாக அவனிடம் கண்களாலேயே யாசிக்க “நீ சொல்றதுனால விடுறேன், ஆனா இவனை நான் இனி பார்க்கக் கூடாது. பார்த்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்றான் அவன். “நீங்க மட்டும் இல்லை மாமா நானும் இவனை இந்த ஜென்மத்தில பார்க்கறது இதுவே கடைசியா இருக்கணும்ன்னு விரும்பறேன் என்ற குரலை கேட்டு திரும்பினான் வைபவ்.

 

 

அங்கு விமலா நின்றிருந்தாள், அவள் கண்களில் ஒரு கொலை வெறி இருந்தது, ராஜேஷை அவள் பார்த்த பார்வை அவனை சுட்டெரித்து விடுவாள் போல் இருந்தது. “என்னம்மா என்னாச்சு, நீ எதுக்கு இப்படி எல்லாம் பேசுற என்றான் வைபவ் நிதானமாக.

 

 

“வேண்டாம் மாமா இவன் எனக்கு வேணாம். இனி இவனோட நான் வாழவே கூடாதுன்னு தான் சென்னைக்கே வந்தேன். நான் முதல்லயே வந்தா அக்காவுக்கு கல்யாணம் நடக்காம போய்டுமோன்னு தான் வராம இருந்தேன்

 

 

“இவனால நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. கடவுளே உனக்கு நான் நன்றி சொல்லணும், நல்ல வேளையா இவனால என் வயித்துல ஒரு புழு பூச்சி உருவாகலை. அப்படி உருவாகி அதுவும் இவனை போலிருந்தா என்னவாகியிருக்கும் என்று கலங்கியவளை கண்டு வருந்தினான் அவன்.

 

 

அவளை பார்க்கும் போது அவன் தங்கை நந்துவாக அவள் அந்த கணம் அவனுக்கு தோன்றினாள். “விமலா எதுக்கும்மா அழற என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா, தீர்க்க முடியாத பிரச்சனை என்பது எதுவுமில்லை. இவனை என்னால சரி பண்ணமுடியும் நான் சரி பண்ணுறேன். நீ இதுக்காக எல்லாம் கலங்கி போகாதேம்மா என்றான் அவன்.

 

 

“இல்லை மாமா இவன் கூட எந்த பொண்ணுமே வாழ முடியாது. நான் எங்க அக்கா மேல பொறாமைபட்டதுக்கு தண்டனை மாமா நான் இவனை கட்டினது. நல்லவேளை எங்க அக்கா இவன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டா, எங்க அக்காவுக்கு உங்களை போல ஒரு நல்லவர் கிடைச்சு இருக்கார். அது அவ செஞ்ச புண்ணியம்

 

 

“நான் எங்க அக்கா மேல துவேஷம் கொண்டதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனை இது. எங்க கல்யாணம் நடந்து நான் பெங்களூர்க்கு போனதும் தான் தெரிஞ்சது இவங்க முதல்ல எங்க அக்காவை தான் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. ஆனா அவளுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாதுன்னு இவங்க வீட்டில எங்க அக்காவை வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க

 

 

“அதுக்கு அப்புறம் அவங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லவும் இவரும் சரின்னு சொல்லிட்டு என்னை பெண் பார்க்க வந்து திருமணமும் செய்துகிட்டார். முதலில் கொஞ்சம் வருத்தமாயிருந்தது பிறகு மனதை தேற்றிக் கொண்டேன்

 

 

“மறுவீட்டுக்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு ரெண்டு பேருமா சென்னை வந்து சேர்ந்தோம். ஆனா அப்போ தான் எனக்கு இவரோட சுயரூபம் தெரிஞ்சுது. எங்க வீட்டில கோவிலுக்கு போயிருந்த சமயம் இவர் எனக்கு குடிக்கற ஜூஸ்ல தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார்

 

 

“அதுக்கு அப்புறம் தான் அக்காகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சிருக்கார். அக்காவுக்கு உடம்பு முடியாம போய்ட்டதாலே வேற வழி இல்லாம என்னை எழுப்பி இருக்கிறார். முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவேயில்லை, அதன்பின் நான் நடந்த விஷயங்களை கோர்வைபடுத்தி உண்மையை அறிந்தேன்

 

 

“அதை உறுதிபடுத்திக் கொள்ள இருவரையும் கவனித்தேன். இவரை அக்கா கேவலமாக பார்ப்பது தெரிந்தது, இனியும் இங்கிருந்தால் அக்காவுக்கு என்னால் பிரச்சனை வரும் என்று தோன்ற எங்கள் வீட்டினரிடம் தேவையில்லாத சண்டையை ஆரம்பித்து நான் கோபித்துக் கொள்வதாக நடித்து வீட்டை விட்டு சென்றேன்

 

 

“அதன் பின்னும் வேண்டுமென்றே பலமுறை எங்கள் வீட்டினரிடம் வலுக்கட்டாயமாக சண்டை இழுத்து இங்கு வருவதையே நிறுத்திவிட்டேன். அக்காவுக்கு திருமணம் என்றதும் திருமணத்தன்று வரவேண்டும் என்றே எண்ணியிருந்தேன்

 

 

“என்னிடம் நைசாக பேசி நீ முதலில் சென்று வா நான் திருமணத்திற்கு முதல் நாள் வருகிறேன் என்று சொன்னவன் பாவி நேற்றே வந்துவிட்டான். அப்போதும் ஒருவேளை இத்தனை நாள் ஆச்சே!!! ஒருவேளை இவன் திருந்தி இருப்பானோன்னு என்று ஒரு நப்பாசை எனக்கு ஒட்டிட்டு இருந்துச்சு

 

 

“இருந்தும் இவனை கண்கொத்தி பாம்பாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று காலை வெளியில் சென்றுவிட்டானே என்று சந்தோசப்பட்டேன். திரும்பி வந்ததும் எனக்கு என்ன செய்வானோ என்று அவனுக்கு சாப்பாடு வைப்பது முதல் நானே செய்தேன்

 

 

“இவன் எப்படியோ என் கண்ணில் மண்ணை தூவி எனக்கு தூக்க மாத்திரையை கொடுத்திருக்கிறான். எப்போது கலந்தான் எதில் கலந்தான் என்று எனக்கு தெரியவில்லை. இப்போது கூட என்னால எழமுடியாமலே எழுந்து வந்தேன் மாமா

 

 

“இவன் எனக்கு வேண்டாம், இவன் ஒரு அரக்கன். தினம் ஒரு விதமாக இன்பம் காண நினைப்பவன், இவனால் நான் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைகளை அனுபவித்திருக்கிறேன். தயவு செய்து என்னை இவனோட வாழச் சொல்லாதீர்கள் மாமா என்று கதறி அழுதவளை அபி வந்து தூக்கினாள்.

 

 

இப்பது வைபவின் ஆத்திரம் இன்னும் அதிகமானது, வேகமாக எழுந்தவன் நின்றவாறே அவனை ஓங்கி மிதித்தான், “என்னை தப்பா எடுத்துக்காதேம்மா விமலா என்றவன் அவனை எழுப்பி நிற்க வைத்து பளார் பளார் என்று அறைந்தான்.

 

 

“மாமா நான் ஏன் தப்பா நினைக்க போறேன், நீங்க அடிக்கலைன்னா தான் தப்பா நினைப்பேன் என்றாள் அவள். மனதில் எவ்வளவு வேதனை இருந்தால் கட்டிய கணவனை அடிக்க அவள் சம்மதித்திருப்பாள் என்று அவன் எண்ணம் ஓடியது.

 

 

இதற்குள் கோவிலுக்கு சென்றவர்கள் வீடு திரும்பி இருக்க வீட்டிற்குள் கேட்ட சத்தத்தில் அவர்கள் சன்னலின் வழியாக எட்டி பார்த்தனர். நடந்தவைகளை ஒன்று விடாமல் கேட்டு விட பதறியவாறே வந்து கதவை தட்டினார் கற்பகம்.

 

 

விமலா வேகமாக சென்று கதவை திறக்க வைத்தியநாதன் பாய்ந்து வந்து ராஜேஷின் சட்டையை பிடித்தார். அவருக்கு இருந்த கோபத்தில் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் அவர். அவர் கோபம் எல்லை மீறுவது போல் இருக்க வைபவ் அவரை தடுத்தான்.

 

 

“வேண்டாம் மாமா விட்டுடுங்க, இதுக்கு மேல அடிக்க வேண்டாம். ஏற்கனவே நான் அடிச்சதுல அவர் வாய்ல இருந்து ரத்தம் கொட்டுது. இதுக்கு மேல அடிச்சா அவன் தாங்க மாட்டான் என்றான் வைபவ்.

 

 

“விடுங்க மாப்பிள்ளை அவனை, இவனை என் கையால கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது. அபிக்கு நடந்த பிரச்சனைக்கு நானும் ஒரு காரணம்ன்னு எத்தனை நாள் நான் புழுங்கி இருப்பேன். என் பொண்ணு இப்போ வரைக்கும் என் கூட சரியா பேசுறதும் இல்லை

 

 

“இப்போ என் சின்ன பொண்ணு வாழ்க்கையும் கெட்டு போச்சு, என் பெரிய பொண்ணுக்கும் இவனால தொல்லை. இவனையெல்லாம்… என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவனை அடிக்க செல்ல “மாமா தயவு செய்து விட்டுடுங்க, அவனை மருத்துவமனையில் சேர்த்திடலாம்.

 

 

“எதுக்கு மாப்பிள்ளை இவனை இப்படியே விட சொல்றீங்க, என்னால முடியாது என்றார் அவர் சிறுகுழந்தை போல். “அவங்க வீட்டுக்கு சொல்லிடுவோம், இனி அவங்க பார்த்துப்பாங்க மாமா. விமலா தான் அவனோட வாழ முடியாதுன்னு சொல்லிட்டா. இனி நாம அவனை சட்டரீதியா சந்திச்சுக்கலாம் என்றான் வைபவ்.

 

 

“எதுக்கு மாப்பிள்ளை இவனை அப்படியே விடணும், நாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமே என்றார் அவர். “வேண்டாம் மாமா விட்டுடுங்க, அவனை மன்னிச்சு இதோட விட்டுடுங்க. உங்க பெரிய பொண்ணுக்கு அதெல்லாம் பிடிக்காது என்று அவளை திரும்பி அர்த்தத்துடன் பார்த்தான்.

 

 

ராஜேஷை எழுப்பி அவனை கூட்டிக்கொண்டு அவன் வெளியில் வர “மாப்பிள்ளை நானே அவனை மருத்துவமனையில சேர்த்துக்கறேன். அவங்க வீட்டுக்கும் சொல்லிடறேன். நீங்க கல்யாண மாப்பிள்ளை எங்கயும் அலைய வேண்டாம். நீங்க வீட்டுக்கு போங்க என்றார் வைத்தியநாதன்.

 

 

“சரிங்க மாமா என்றவன் இழுத்தான், “மாமா… என்றான். “நான் கொஞ்சம் அபிக்கிட்ட பேசணும் என்றான் அவன். “எதுக்கு மாப்பிள்ளை தயங்குறீங்க, நீங்க போய் தைரியமா பேசுங்க. தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் புரிஞ்சுடுச்சு மாப்பிள்ளை என்றவர் அவனை அர்த்தமுடன் பார்த்தார்.

 

 

கண்களாலேயே அவருக்கு நன்றியுரைத்தவன் அபியை பார்க்க அவள் அவனை அழைத்துக் கொண்டு அவன் அறைக்குள் சென்றாள். அப்போது தான் வைபவ் அவளை நன்றாக பார்த்தான். காது கேட்கும் கருவியை அவள் காதின் உள்ளே பொருத்தியிருந்தாள்.

அவனுக்கு தான் இந்த கணம் எப்படி உணர்கிறோம் என்பதே தெரியவில்லை. அவனுக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அந்த நொடி எதையும் பேச தோன்றவில்லை. அபியும் எதுவும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

 

வைபவுக்கு அவளை பார்த்துக் கொண்டிருப்பது சுகமே என்றாலும் வெகு நேரம் அப்படியே இருக்க முடியாது என்பது உரைக்க தொண்டையை செருமினான் அவன். “அபி என்று அவன் அழைக்க என்ன என்பது போல் அவள் அவனை நோக்கினாள்.

 

 

‘அதான் வாயை திறந்து பேசியாச்சே, இன்னும் விழிகளிலே பேச வேண்டுமா என்று மனதிற்குள் நினைத்ததை அப்படியே கேட்டும் விட்டான். “வாயை திறந்து பேசலாமே என்று அவன் சொன்னதும் தான் அவள் அவனிடம் வாய்விட்டு பேசியதையே உணர்ந்தாள்.

 

 

“எப்படி அபி உன்னால பேச முடியுது. அன்னைக்கு காது கேட்கும் கருவியை வாங்கி மாட்டிக் கொள்ளலாம் என்று உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் என்று அவ்வளவு கோபம் கொண்டாயே. இப்போது இது எப்படி சாத்தியமாகிற்று என்று அவளிடம் நேராகவே கேட்டுவிட்டான் அவன்.

 

 

“எ…என்னால… இன்னும் தெ…தெளிவா… பே…பேசமுடியாது. தொ…தொடர்ந்து பேச பேச ச…சரியாகிடும் சொல்லி இ…இருக்காங்க என்றவள் இடைவெளி விட்டாள்.

 

 

“உங்…உங்க ஆசை தெ…தெரிஞ்ச அன்னைக்கே மு…முடிவெடுத்துட்டேன் (அபி திக்கி திக்கி பேசுனதை உங்களுக்கு முழுசாவே கொடுத்திர்றேன்). நான் என்னோட பயிற்சியை தொடரணும்ன்னு நினைச்சது, உங்ககிட்ட வாய்விட்டு மனசுவிட்டு பேசணும்ன்னு எனக்கு ஆசை வந்தது எல்லாமே அன்னைக்கு தான்

 

 

“அதுக்கு அப்புறம் அதுக்கான மருத்துவரை பார்த்தேன், காது கேட்கும் கருவி பொருத்தினேன். பேச முயற்சி செய்தேன், வெகு நாளைக்கு பிந்திய பயிற்சி என்பதால் முதலில் சற்றே சிரமாகவே இருந்தது. காலை மாலை என்று இடைவிடாத பயிற்சியால் என்னால் இப்போது இந்த அளவுக்கு பேச முடிகிறது என்றாள் அவள்.

 

 

“வகுப்புல எவ்வளவோ பேசி இருக்கலாம் ஆனா வெளிய நான் யார்கிட்டயும் பேசவேயில்லை, ஏன் எங்கம்மாகிட்ட கூட நான் பேசலை. அன்னைக்கு டாக்டர்கிட்ட பேசினதோட சரி. முதன் முதலா உங்ககிட்ட தான் பேசணும்ன்னு ஆசைப்பட்டேன். என் மனசுவிட்டு உங்ககிட்ட பேசணும். அப்புறம்… அப்புறம்… நீங்க சொன்ன மாதிரி… என்றவள் இடைநிறுத்தினாள்.

 

 

“நான் சொன்ன மாதிரி… என்று அவனும் அவளை போலவே இழுத்துக் காட்டினான். “நீங்க சொன்ன மாதிரி, நம்ம… நம்ம குழந்தையோட அழுகை சத்தம் கேட்கணும் என்று முடிக்காமலே விட்டாள் அவள். அதை சொல்லி முடிக்கும் முன் அவள் முகம் வெட்கத்தை குத்தகை எடுத்தது.

 

 

ரசனையாக அவளை பார்த்தான் அவன், அவன் கைகள் அவளை அணைக்க துடித்தாலும் அன்று எதுவும் களேபரம் ஆகிவிடுமோ என்ற பயம் அவனுக்குள் லேசாக எழுந்து அவன் ஆசையை தள்ளி வைத்தது.

 

 

“சரி நான் ஒண்ணு சொல்லித் தரேன் சொல்றியா என்றான் அவன். “ஹ்ம்ம் சொல்லுங்க என்றாள் அவள். “வே..ணா..ம்… இல்லை அப்படி சொல்ல வேண்டாம். நீ இப்படி சொல்லு வே…ண்…டா…ம்… வேண்டாம் என்றான் அவன். அவள் அவனை முறைத்தாள்.

 

 

“முறைக்காதே அபி, நான் சொன்ன மாதிரி சொல்லு. அதென்ன உனக்கு வேணாம்ன்னு சொல்றதுக்கு பதில் ஆணாம்ன்னு வருது, இனி நீ அப்படி சொன்னா எனக்கு என்னமோ ஆகுது. நீ வேண்டாம்ன்னு சொல்ல பழகிக்கோ என்றான் அவன்.

 

 

“இல்லை சின்ன வயசுல இருந்தே அந்த வார்த்தை அப்படியே சொல்லி பழகிருச்சு. மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு, அதான் அப்படியே சொல்லறேன். இனி மாத்திக்கறேன், நான் வேற ஏதாவது சந்தர்ப்பத்துல உங்ககிட்ட அப்படி சொல்லியிருக்கேனா என்றாள் அவள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம். இனி எப்பவும் அப்படி நீ சொல்ற மாதிரி இருக்காது என்றான் ஏதோவொரு சிந்தனையுடன். “அப்புறம் அபி நீ அந்த டாக்டர் பார்த்தியா என்றான். “ஹ்ம்ம் போய் பார்த்துட்டேன், இன்னும் ரெண்டு முறை அவரை வந்து பார்க்க சொல்லி இருக்கார். நாளைக்கு போகணும், அப்புறம் நம்ம கல்யாணம் முடிஞ்சதும் ஒரு முறை போகணும் என்றாள் அவள்.

 

 

“உங்ககிட்ட எதுவும் சொன்னாரா என்றவளிடம் “இல்லை என்றான் அவன். “சரி விமலாவை பத்திரமா பார்த்துக்கோ, ரொம்பவும் மனசு ஒடிஞ்சு போயிருக்கா. அவளுக்கு தைரியம் கொடுக்கற விதமா பேசு. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் அவளுக்கு ஒரு வழி செய்வோம் என்றுவிட்டு எல்லோரிடமும் விடைபெற்றான்.

 

கிளம்பும் முன் விமலாவை தனியே அழைத்து அவளிடம் ஆறுதல் தரும் விதமாக பேசிவிட்டு மீண்டும் ஒரு முறை அவள் எடுத்த முடிவை பரிசீலித்து பார்க்குமாறு சொல்லிவிட்டு சென்றான்.

 

 

அங்கிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு செல்லாமல் நேரே மருத்துவமனைக்கு சென்றான். அபியை பார்க்கும் மருத்துவரிடம் சென்று அமர்ந்தான். “வாங்க சார், உங்களுக்கு நானே போன் பண்ணலாம்னு நினைச்சேன், நீங்களே வந்து நிற்கறீங்க என்றார் மருத்துவர்.

 

 

“சொல்லுங்க டாக்டர், அபி இங்க வந்திருந்தேன்னு சொன்னா. அதான் உங்களை பார்த்திட்டு விபரம் கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன் என்றான் அவன்.

 

 

“அவங்க உங்ககிட்ட எதுவும் சொல்லலையா என்றார் அவர். “இல்லை டாக்டர், நான் அவகிட்ட எதுவும் கேட்கலை. என்கிட்ட சொல்ல அவளுக்கு சங்கடமா இருக்கலாம், அதான் என்றான் அவன்.

 

 

“சூப்பர் சார் நீங்க, உங்களை அவங்க அவங்களோட மனசுல ஒரு பெரிய இடத்துல வைச்சிருக்காங்க அவங்க. அவங்க பார்த்த கதாநாயகன் நீங்க தான் என்றார் மருத்துவர். “என்ன சார் சொல்றீங்க, ஒண்ணுமே புரியலை என்றார் வைபவ்.

 

 

“அபி பேசுறாங்களே என்றார் அவர். “ஹ்ம்ம் ஆமாம் டாக்டர், எனக்கே அது இப்போ தான் தெரியும் என்றான் அவன். “அதுக்கூட உங்களுக்காக தான் என்றார் அவர். “சொன்னா டாக்டர் என்றான் அவன். “அவங்களுக்கு குணமாகிடும்ன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா என்றார் அவர்.

 

 

“அவளுக்கு என்ன பிரச்சனை டாக்டர், நீங்க அதை பத்தி இன்னும் எந்த விபரமும் சொல்லவேயில்லையே. அவளுக்கு பெரிசா எந்த பிரச்சனையும் இல்லைன்னு நான் நம்புறேன், எந்த பிரச்சனையா இருந்தாலும் சீக்கிரம் சரியாகிடும்ன்னு நம்புறேன் என்றான் அவன்.

 

 

“உங்க எண்ணம் சரி தான் வைபவ், அவங்களோட பிரச்சனை எல்லாம் ஓரளவு உங்களால தான் தீர்ந்திருக்கு, இனியும் தீர்ந்திடும்ன்னு அவங்க நம்புறாங்க என்றவர் சிறிது இடைவெளி விட்டு சொல்ல ஆரம்பித்தார்.

 

 

“அவங்ககிட்ட பேசி பார்த்ததுல அவங்க சிறுவயதுல ஏற்பட்ட அந்த பிரச்சனையால மனரீதியா பாதிக்கபட்டிருக்காங்க, அதுக்கு அப்புறம் அவளோட வாழ்க்கையில பிரச்சனையா வந்தது அவங்க தங்கையோட கணவர்

 

 

“அங்கிருந்தும் அவங்க எப்படியோ தப்பிச்சு இருக்காங்க, அதுக்கு அப்புறம் அவங்களுக்கு ஆண்கள் மேல எந்த அபிப்பிராயமும் இல்லாம போச்சு. அலுவலகத்திலும் அவர்கள் சென்று வழியிலும் என்று சின்ன சின்ன பிரச்சனைகள் அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது

 

 

“அன்னைக்கு உங்க கூட இருக்கும் போது அவங்களுக்கு அப்படி ஆனது கூட அவங்க தங்கை வருவாங்கன்னு சொன்னதும் அவங்களோட அவங்க கணவரும் வருவாங்கன்னு அவங்க நினைச்சதுனால தான். உங்களுக்குள் நடந்த நிகழ்வு அவங்களுக்கு எதுவும் நடந்திருமோன்னு பயம் கொள்ள வைச்சிருக்கு

 

 

“அது தான் உங்களை எதிர்க்க வைச்சிருக்கு, அதை நினைச்சு அவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. அவங்க இன்னும் ஒரு இரண்டு தரம் இங்கு வந்து முறையாக கவுன்சிலிங் எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்களோட பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும் என்றார் அவர். “நிஜமாவே அவங்க இங்க வந்து கவுன்சிலிங் எடுத்துகிட்டா எல்லாம் சரியாகிடுமா டாக்டர் என்றான் வைபவ்.

 

 

“அதுக்கு உங்க ஒத்துழைப்பும் கொஞ்சம் தேவை என்றார் அவர். “கண்டிப்பா டாக்டர், என்னாலான எதையும் செய்ய நான் தயாரா இருக்கேன் டாக்டர் என்றான் அவன். “இவ்வளவு பிரச்சனை நடந்த போதும், அவங்க அதுல இருந்து தப்பிச்சுட்டாங்க அப்படிங்கறதையும் மீறி அவங்களுக்குள்ள ஒரு கவலை இருக்கு

 

 

“அது அவங்க பேச்சில வெளிப்பட்டது, அது தான் அவங்க பிரச்சனைக்கு காரணம்ன்னு நான் நினைக்கிறேன். “அது என்ன டாக்டர் என்றான் வைபவ். “அந்த சிவநேசனும், ராஜேஷும் தண்டிக்கப்படலைன்னு அவங்க நினைக்கிறாங்க

 

 

“நான் எந்த தப்பும் செய்யலையே, எனக்கு மட்டும் அவங்களால கஷ்டம். தப்பு செஞ்ச அவங்களுக்கு எந்த தண்டனையும் இல்லைங்கற மாதிரி இருந்தது அவங்க பேச்சு என்றார் அவர். “என்ன தான் மன்னிப்புன்னு சொல்லி அவங்களை மன்னிச்சாலும் அவங்க செய்த தப்புக்கு எந்த தண்டனையும் இல்லைங்கற எண்ணம் அவங்களுக்குள்ள இருக்கு

 

 

“அவங்க பயணம் செஞ்ச பேருந்துல ஒருத்தர் வம்பு பண்றதை பார்த்து நீங்க அவரை அடிச்சிருக்கீங்க, அவங்க அந்த விஷயத்தை சொல்லும் போது ரொம்பவும் சந்தோசப்பட்டாங்க. அந்த ஆளுக்கு அபி சொல்லி நீங்க மன்னிப்பும் கொடுத்திருக்கீங்க

 

 

“அப்போ தான் அவங்க மனசுல நீங்க இடம் பிடிச்சு இருக்கீங்க, அதுமட்டுமில்லாம அவங்க அலுவலகத்துல அவங்களை ரொம்ப நாளா தொல்லை செஞ்சுட்டு இருந்த செந்தில் அப்படிங்கறவரையும் நீங்க அடிச்சு இருக்கீங்க

 

 

“அவரும் இப்போ திருந்திட்டார் அதையும் சொன்னாங்க. இதெல்லாம் தான் அவங்களுக்கு இப்போ ஒரு நிம்மதியை கொடுத்திருக்கு, தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும் அப்படிங்கறதை உங்க மூலமா அவங்க உணர்ந்திருக்காங்க

 

 

“இன்னமும் அந்த சிவநேசனும் ராஜேஷும் தண்டிக்க படலைன்னு அவங்களுக்கு சின்ன வருத்தமிருக்கு. அவங்களோட மத்த பிரச்சனை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அது நாளடைவில் சரியாகி போகும்.

 

 

“ஏன்னா உங்களை பத்தி பேசும் போது அவங்க கண்ணுல ஒரு காதல், கனிவு இப்படி உணர்வுகள் தான் தெரியுது. உங்களை பற்றி உயர்த்தி நான் ஓரிரு வார்த்தைகளை பேசிப்பார்த்தேன். உங்களை பத்தி பேசும் போது அவங்களுக்கு வெட்கமும் வருது. கண்டிப்பா சொல்றேன், உங்க திருமண வாழ்க்கை எந்தவித பிரச்சனையும் இல்லாம இருக்கும்

 

 

“ஆனா அதுக்கு முன்னாடி அந்த சிவநேசன் என்ன ஆனார்ன்னு அவங்களுக்கு தெரியணும், அது போலவே ராஜேஷும் என்றார் அவர். அதுவரை அவர் பேசியதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தவன் “டாக்டர் அந்த ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட அடிவாங்கிட்டான்

 

 

“என்னது என்ன சொல்றீங்க, சூப்பர் சார் நீங்க. அவங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க முன்னாடி போய் நிற்கறீங்க, எப்படி என்னாச்சு என்றார் அவர். அவன் நடந்த விஷயத்தை சுருங்கக் கூறினான். “அவனுக்கு தேவை தான், நீங்க கொடுத்ததை விட பெரிய தண்டனை அவங்க மனைவி கொடுத்திட்டாங்க

 

 

“சரி விடுங்க அந்த சிவநேசன் பத்தி என்ன ஏதுன்னு விசாரிங்க, அவரை பற்றி விபரத்தை அபிக்கு எப்படியாச்சும் தெரியப்படுத்துங்க என்றார் அவர். “அந்த சிவநேசன் விஷயம் அவங்க அம்மா சொன்னதுமே நான் என்னோட நண்பன் மூலமா அவரை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன் என்று நிறுத்தினான் அவன்.

 

 

“என்னது அவரை பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்களா, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு உங்களை பார்க்கும் போது. சரி அதை விடுங்க அந்த சிவநேசன் என்ன ஆனார் அதை பத்தி சொல்லுங்க என்றார் அவர். “அது அவருக்கு ஒரு பொண்ணும் மனைவியும் தஞ்சாவூர்ல இருந்தாங்க

 

 

“அவரோட இந்த நடத்தை பத்தி அவங்களுக்கு தெரிய வந்திருக்கு ரொம்பவும் மனசு வெறுத்து போனவங்க. இன்னைக்கு நண்பனோட மகள்கிட்ட விளையாட துணிஞ்ச நீ நாளைக்கு நம்ம பொண்ணுக்கிட்டயும் அப்படி நடத்துக்க மாட்டேன்னு என்ன நிச்சயம், அதுனால இனி நாம எப்பவும் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு அவரை விட்டு பிரிஞ்சு போய்ட்டாங்க

 

 

“அவர் பண்ணது தப்புன்னு ரொம்பவும் மனவேதனை பட்டு சொந்த மனைவியும் விட்டு பிரிஞ்சு அவங்க சொந்தங்களும் கைவிட்ட நிலையில இருக்காரு. அவரோட தப்புக்கு பிராயச்சித்தமா அவர் சம்பாதிக்கற எல்லாமும் ஒரு சேவை மையத்துக்கு கொடுத்திட்டு அவரும் அங்கேயே தங்கி அவங்களுக்கு சேவையும் பண்ணிட்டு வர்றதா கேள்வி பட்டேன் என்றான் அவன்.

 

 

“ஆமா நீங்க அவரை பத்தி ஏன் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சீங்க என்றார் மருத்துவர். “ஒரு சின்ன குழந்தைக்கிட்ட அப்படி நடந்துக்கிட்ட அந்த கேவலமானவன் என்ன ஆனான்னு தெரிஞ்சுக்கணும் நினைச்சேன், அவன் மட்டும் நல்லாயிருந்திருந்தா நானே போய் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கணும்ன்னு தோணிச்சு. ஆனா கடவுளே அவருக்கு தண்டனை கொடுத்திட்டார்

 

 

“அதுனால தான் நான் எதுவும் செய்யலை என்றான் அவன். “நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ அவரை பற்றிய தகவல்களை சேகரிச்சு இருக்கீங்க, இந்த விஷயம் அபிக்கு எப்படியாச்சும் தெரியணும், அவங்க அம்மாக்கு இதை பத்தி சொல்லிடுங்க, அவங்க பக்குவமா சொல்லிக்குவாங்க என்று ஆலோசனை வழங்கினார்.

 

 

“சரி வைபவ் உங்க கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு இல்லையா நீங்க போய் அதுக்கான வேலைகளை பாருங்க. எல்லாமே சரியாகிடும் என்றார் அவர்.

 

 

வைபவ் தயங்குவது போல் தோன்ற, “நீங்க எந்த கவலையும் படவேண்டாம் வைபவ். அபி சரியாகிடுவாங்க, இது பெரிய பிரச்சனையே இல்லை, நிம்மதியா போயிட்டு வாங்க என்று அவனை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார் அவர்.

 

____________________

அதிகாலை பொழுது இனிதாக புலர்ந்தது, அத்திருமண மண்டபம் ஒளியும், ஒலியும் பெற்று புத்துணர்வுடன் பொலிவாக காணப்பட்டது. கல்யாணும் கார்த்திகாவும் ஒரு பக்கம் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் முத்துவும், சரயுவும் வரவேற்ப்பில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

 

 

வைபவ் தனியாக இருப்பான் என்று கருதிய கல்யாண் அவன் அறையை நோக்கி நடந்தான். வழியில் நிர்மல் அமைதியுடன் தனித்து அமர்ந்திருப்பது கண்ணில்பட்டு அவனுக்கு உறுத்தலாக இருந்தது. அவனுடைய கண்கள் சிட்டுக்குருவியை போல் வளைய வந்த நந்துவின் மேல் இருப்பதை கல்யாண் கண்டுகொண்டான்.

 

 

வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயன்று அவன் தோற்றுக் கொண்டிருப்பது புரிந்தது. தலையை சிலுப்பிக் கொண்டு வைபவின் அறைக்குள் நுழைந்தான். “என்னடா கல்யாண மாப்பிள்ளை தயார் ஆகிட்டியா, இன்னும் கொஞ்சம் நேரம் தான் அப்புறம் உனக்கு கல்யாணம் நடந்திரும். ரொம்ப சந்தோசமா இருக்குடா எனக்கு என்றான் கல்யாண்.

 

 

“என்னடா கல்யாண மாப்பிள்ளை நானு, நீ என்னைவிட சந்தோசமா இருக்கே என்றான் வைபவ். “அது இன்னைக்கு ஒரு விஷயம் நடந்துச்சு என்று நிறுத்த, “என்னடா என்றான் வைபவ். “ரித்தி… ரித்தி வந்து என்று முழுங்கினான் அவன். “எதுக்குடா புது பொண்ணு மாதிரி மென்னு முழுங்குற என்றான் அவன். “ரித்தி முழுகாம இருக்காடா, இன்னைக்கு ரொம்ப தலைசுத்தலா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா

 

 

“என்னன்னு கேட்டேன், தயங்கிட்டே சொன்னா. அப்போ தான் தெரியும். கல்யாணம் முடிஞ்சதும் ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டணும்டா அவளை என்றான் சந்தோசத்துடன்.

 

 

“அடப்பாவி, நான் இப்போ தான் மாப்பிள்ளையே ஆகியிருக்கேன், நீ அப்பாவாகிட்டே ரொம்ப வேகம்டா என்று நண்பனை கிண்டலடித்தவன் உண்மையில் மகிழ்வுடனே காணப்பட்டான் நண்பன் சொன்ன செய்தியில்.

 

 

அபியின் அறையில் அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு ஒன்று அவளை ஆட்படுத்தி பயமும், வெட்கமும் கொள்ளச் செய்தது. எப்போதடா வெளியில் செல்வோம் என்று ஒரு புறம் தோன்ற, கால்களோ வேரூன்றியது போல் நகரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

 

 

“பொண்ணை அழைச்சுட்டு வர சொல்றாங்க என்று சரயு அவள் அறைக்குள் வந்தாள். “என்னங்க அபி கிளம்பலாமா என்று கூற அவள் மென்மையாக தலையசைத்தாள். முகம் வியர்த்திருந்தது, விமலா அருகில் வந்தவள் “என்னக்கா நீ எதுக்கு பயம், எதுக்கு உனக்கு இப்படி வியர்த்திருக்கு

 

 

“உனக்குள்ள இந்த பதட்டம், பயம் எல்லாம் இருக்கும். இது சகஜமும் கூட, மாமா மாதிரி ஒருத்தரை கட்டிக்க பயமே வேணாம், உன்னை அவர் உயிருக்கு மேலா பார்த்துக்குவாரு. நீ நம்ம வீட்டில இருந்த மாதிரியே அங்கேயும் போய் இருக்கலாம் அக்கா, வீணா எதையும் போட்டு குழப்பிக்காதே என்று பெரிய மனுஷி போல் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

“விமலா சொல்றதும் சரி தான் அபி, எனக்கும் இப்படி தான் பயம், எல்லாம் இருந்தது. ஆனா இப்போ என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது சொல்லுங்க, நான் தான் அவரை பயமுறுத்திட்டு இருக்கேன். எல்லாம் நம்ம கையில தான் இருக்கு என்று சூழ்நிலையை கலகலப்பாக்க முயன்றாள்.

 

 

சரயு அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்று மணமேடையில் வைபவின் அருகில் அமரச்செய்ய இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது. யார் என்ன சொன்ன போதும், முதல் நாளில் இருந்தே அவளுக்குள் ஏதோ ஒன்று உருளத் தொடங்கியது.

 

 

வைரமுத்துவின் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டோடிக் கொண்டிருந்தது. நாம மட்டும் தான் இப்படி இருக்கோமா, இவர் நல்லா சகஜமா இருக்காரே என்று எண்ணி வைபவை பார்க்க அவன் முகத்தில் வியர்வை ஆறாக பெருகிக் கொண்டிருந்தது.

 

 

குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் அவனுக்கு ஏன் இப்படி வியர்க்கிறது என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள் அபி. அபி அவனை நோக்குவதை பார்த்த வைபவ் திரும்பி அவளை நேருக்கு நேர் பார்க்க அபியோ தலை தாழ்ந்தாள்.

 

 

அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளை பார்த்து “எதுக்கு குனிஞ்சுட்ட அபி, இன்னும் கொஞ்சம் நேரம் உன்னை பார்த்துக்கறனே என்றான் அவன். மீண்டும் அவனை அவள் நிமிர்ந்து பார்க்க இம்முறை அவன் சும்மா இல்லாமல் அவளை பார்த்து கண்சிமிட்ட அபி பதட்டமானாள்.

 

 

“சரி சரி நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ என்னை பாரேன் என்று அவன் கெஞ்சுவது போல் கேட்க அவனருகில் வந்த கல்யாண். “என்னடா நீ ரொம்ப அமைதியா இருக்கியேன்னு நினைச்சேன், இங்க இதான் நடக்குதா, கொஞ்ச நேரம் பேசாம இரேன்டா

 

 

“பாவம் அய்யர் அவர் பாட்டுக்கு தனியா மந்திரம் சொல்லிட்டு இருக்கார், நீ என்னடான்னா உன் பாட்டுக்கு வேற ஏதோ செய்யறே, இன்னும் ஐந்தே நிமிடம் தான் நீ அபி கழுத்துல தாலி கட்டிடுவே போதுமா, அது வரைக்கும் கப்சிப் ஓகேவா என்றுவிட்டு சிரித்தவாறே எழுந்து சென்றான் கல்யாண்.

 

 

“கெட்டி மேளம், கெட்டி மேளம் என்று குரல் கொடுக்க அனைவரின் ஆசிர்வாதத்தில் அபியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான் வைபவ். அவன் அவளை தொட்டு தாலி அணிவித்த அந்த கணம் சொல்லொணாத ஒரு உணர்வு அவளை ஆட்படுத்தியது.

 

 

கண்களில் கண்ணீர் துளிர்த்து அவன் கைகளில் விழுந்திருக்க தாலி அணிவித்து முடித்தவன் “வேண்டாம் அபி இனி உனக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்க நானிருக்கேன் உனக்கு நீ எதுக்கு கண் கலங்குற என்றான் அவன்.

 

 

“இல்லைங்க இந்த நிமிஷம் நிஜம், இது சந்தோஷ கண்ணீர் உங்களை அடைஞ்சதுல என்றாள் அவள். வைபவ் தற்செயலாக மேடைக்கு கிழே பார்க்க நிர்மல் ஒரு ஓரமாக தனித்து அமர்ந்திருந்தான். கல்யாணிடம் சொல்லி அவனை மேடைக்கு அழைத்து வரச் சொன்னான்.

 

 

“என்ன நிர்மல் எங்க கல்யாணத்துல உனக்கு சந்தோசமில்லையா, ஏன் இப்படி உம்னு இருக்கே என்றான் வைபவ். “அய்யோ என்ன மாமா நீங்க இப்படி பேசறீங்க, அப்படி எல்லாம் எதுவுமில்லை, நான் ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன் என்றான் அவன்.

 

 

நந்து மேடையேறி வர, “நந்து இங்க வா உட்காரு என்று அவளை நிர்மல் அருகில் அமர வைத்தான் அவன். “சரி மாமா நான் கிழே போறேன் என்றான் நிர்மல். “கொஞ்சம் உட்காரு நிர்மல், தனியா இருக்க எனக்கு சங்கடமா இருக்கு என்று சொல்லி அவனருகில் அமர வைத்தான்.

 

 

நிர்மலோ தவித்து போய் அமர்ந்திருந்தான். நந்துவை சாதாரணமாக பார்த்தாலே விழியெடுக்காமல் பார்ப்பவன், அண்ணனின் திருமணத்திற்காக பிரத்யேகமாக அலங்கரித்து புடவையில் வலம் வந்துக் கொண்டிருப்பவளை பார்த்தால் என்ன செய்வான்.

 

 

வெகு நெருக்கமாக வேறு அவள் அமர்ந்திருக்க முள் மேல் அமர்ந்திருப்பவனது நிலைமையானது அவனுக்கு. இன்னும் ஏதேதோ சடங்குகள் எல்லாம் நடந்துக் கொண்டிருக்க வைபவ் நிர்மலை அருகிலேயே வைத்துக் கொண்டான்.

 

 

எல்லா வைபவங்களும் இனிதே நடந்தேறி முடிய அபி புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள். திருமணத்திற்கு அவள் அண்ணன் நந்தன் அவன் மனைவி குழந்தையுடன் வந்திருந்து தங்கையை ஆசீர்வதித்தான்.  

 

 

நந்தன் பாசமில்லாமல் இருந்த போதும் அவன் மனைவிக்கு ஏனோ அபியை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போக இருந்து அனைத்தும் நாத்தனாருக்கு செய்துவிட்டு கிளம்பினாள் அவள்.

 

____________________

 

 

வைபவ் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். ஒரு இனிய உணர்வு அவனை அவஸ்தை கொள்ளச் செய்திருந்தது. அபியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான். சன்னலின் வழியே வெளியே பார்க்க முழு நிலவு களங்கமில்லாமல் அவனை பார்த்து சிரித்தது.

 

 

நிலவையே வெகு நேரம் உற்று பார்த்துக் கொண்டிருக்க நிலவில் முதன் முதலில் கோபத்துடன் பார்த்த அபியின் முகம் தோன்றி அவனுக்குள் பழைய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது. அறைக்கதவை திறந்து அபி உள்ளே நுழைய அவன் புன்னகையுடன் நின்றிருந்தான்.

 

 

“என்ன சிரிச்சுட்டே இருக்கீங்க என்றாள் அவள். “ஹ்ம்ம் உன்னை பத்தி தான் நினைச்சுட்டே இருந்தேன் என்றான் அவன். “என்னை பத்தி நினைச்சா சிரிப்பா வருதா என்றாள் அவள். “அதில்லை நம்மோட முதல் சந்திப்பை நினைச்சு சிரிச்சேன் என்றான் அவன்.

 

 

அவளுக்குமே அதை நினைத்ததும் சிரிப்பு தான் வந்தது. “உட்காரு அபி என்று சொல்லி அவளை அமர வைத்தான் அவன். “ஹ்ம்ம் அப்புறம் என்றான் அவன். “அப்புறம் நீங்க தான் சொல்லணும் என்றாள் அவள். “இனி சொல்ல என்ன இருக்கு காரியத்தில இறங்கிட வேண்டியது தான் என்று வைபவ் எழுந்திருக்கவும் அபி பயந்து போனாள்.

 

 

‘அய்யோ என்ன இது இப்படி பேசுகிறார் என்று அவள் நினைக்க எழுந்தவன் நேராக சென்று அங்கிருந்த சிடி பிளேயரை இயக்கி இளையராஜா பாடல்களை அதில் ஒலிக்க விட்டான். அந்த இரவின் ஏகாந்தத்தில் இனிமையான அந்த பாடல்கள் அவர்கள் இருவரின் உள்ளத்தையும் நிறைத்தது.

 

 

“அபி எனக்கு ஒரு ஆசை என்றான் அவன். “ஹ்ம்ம் சொல்லுங்க என்றாள். கட்டிலில் வசதியாக சாய்ந்து அமர்ந்தவன் அவள் பக்கம் கையை நீட்ட அவன் கைகளுக்கு சந்தோசமாகவும் கூச்சத்துடனும் அவள் கைகளை கொடுத்தாள்.

 

 

அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டவன் நிம்மதியுடன் அந்த பாடல்களை கண் மூடி ரசிக்க ஆரம்பித்தான். “பிடிச்சிருக்கா என்று அவளிடம் கேட்க “ரொம்ப என்றவள் சற்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

 

அவளின் முத்தத்தில் சூடானவன் பதிலுக்கு அவளை கிறக்கத்துடன் பார்க்க அவளோ அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். அவள் முகவாயை நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான். சற்றே இறங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் இதழ்களை தன்வசமாக்கினான்.

 

 

சிறிது நேரம் நீண்ட அந்த இதழ் பயணம் கலைந்து இருவரும் விலகினர். அபிக்கு அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் கூச்சமாக இருக்க, தலை தாழ்த்தி அமர்ந்திருந்தாள். “அபி தூங்கலாமா என்றான் அவன். அவனை ஏற இறங்க அவள் பார்த்தாள்.

 

 

அபி ஏதோ பேச நினைக்க “எதுக்குமே அவசரமில்லை, இந்த இரண்டு நாளா உனக்கு சரியான உறக்கம் கூட இருந்திருக்காது நீ நல்லா தூங்கி ஓய்வேடு, நானும் தான். எப்போடா உன்னை கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சு நினைச்சு நானும் நெறைய தூக்கத்தை கெடுத்துட்டேன். தூங்கலாம் என்று தலையணையை சரி செய்துவிட்டு படுத்தான். அபியும் அவனருகில் அவனை பார்த்தவாறே படுத்துக் கொண்டாள். அபிக்கு வைபவின் இந்த செயல் பிடித்தது.

 

 

கண்ணை மூடி இருப்பது போல் படுத்திருந்தாலும் அபி அவனையே பார்ப்பதை வைபவ் உணர்ந்திருந்தான். கண் விழித்தவன் “ஆனா அபி ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் என்று நிறுத்த ‘என்ன என்பது போல் அவள் அவனை நோக்கினாள்.

 

 

“நான் ஒரேடியா நல்லவனா எல்லாம் இருக்க முடியாது அதுனால… என்று மீண்டும் இழுக்க அபி விழித்தாள். “உன் மேல கை போட்டு தான் தூங்குவேன் என்று சொல்லி அவளை அணைத்தவாறே கைகளை அவள் மேல் கொண்டான்.

 

அபி புதுவித உணர்வுடன் அவன் அணைப்பு தந்த இனிமையிலும், இளையராஜாவின் இசையிலும் நிம்மதியாக கண்ணயர்ந்தாள். இளையராஜாவின் கானம் ஒருபக்கம் இசைத்துக் கொண்டிருக்க இருவரும் ஆழ்ந்த துயில் கொண்டனர்.

 

 

மௌனமானநேரம்
இளமனதில்என்னபாரம்
மௌனமானநேரம்
இளமனதில்என்னபாரம்
மனதில்ஓசைகள்இதழில்மௌனங்கள்
மனதில்ஓசைகள்இதழில்மௌனங்கள்
ஏனென்றுகேளுங்கள்
இதுமௌனமானநேரம்
இளமனதில்என்னபாரம்…

 

 

Advertisement