Advertisement

அத்தியாயம் –21

 

 

அன்னைக்கு கைபேசியில் அழைத்து விபரம் சொன்னவன் அவர்களை நேரே கிளம்பி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். மருத்துவர் அபிக்கு ட்ரிப்ஸ் ஏற்றி முடித்ததும் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட நிர்மலும் கல்யாணும் உடனிருந்து அவர்களை வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தனர்.

 

 

அபியோ வைபவையே தேடிக் கொண்டிருந்தாள், நம் மேல் ஏதோ கோபமாக இருக்கிறாரோ என்ற எண்ணமே அவளை அலைகழித்தது. பழைய அபியாக இருந்திருந்தால் போடா என்று போயிருப்பாள். அவன் புறக்கணிப்பு அவளுக்கு கண்ணோரம் கரித்து வந்தது.

 

 

அவளை வீட்டில் விட்டதும் கல்யாண் அவர்கள் வீட்டுக்கு செல்ல வைபவ் வீட்டுக்கு போய்விட்டதாக அவர்கள் கூற வைபவின் அன்னையையும் தங்கையையும் அவனே வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வைபவை தேடினான்.

 

 

வைபவ் மொட்டை மாடியில் இருக்க அவனை தேடி அங்கு சென்றான் கல்யாண். மொட்டை மாடியின் சுவற்றில் ஏறி அமர்ந்திருந்தவன் வானத்தையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்த கல்யாண் “என்னடா ஆச்சு எதுக்கு இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கே. அபிக்கு நீ வந்து வீட்டுக்கு விடலைன்னு ஒரு வருத்தம் இருக்குன்னு நினைக்கிறேன்

 

 

“அப்புறமா நீ போய் நேர்ல பாருடா என்றான் அவன். “இல்லைடா இப்போதைக்கு என்னால அவளை போய் பார்க்க முடியாது என்றான் வேதனையுடன். “என்னடா என்னாச்சு, எதுவும் பிரச்சனையா என்றான் கல்யாண்.

 

 

வைபவ் சங்கடத்துடன் நடந்த விஷயத்தை சொல்ல கல்யாண் யோசனையானான். “வைபவ் அவளுக்கு எதுவும் பிரச்சனை இருக்கும்ன்னு நினைக்கிறியா என்றான் அவன்.

 

 

“பிரச்சனை இருக்காதுன்னு நீ நினைக்கிறியா, பார்போம் அதை எப்படி சரி பண்ணுறதுன்னு என்றவன் கல்யாணிடம் பேச்சை மாற்றி வேறு பேசலானான்.

 

 

நண்பனை புரிந்தவனாக கல்யாணும் அதை விடுத்து வேறு பேசலானான். அன்று இரவு வைபவுக்கு அபியிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. “நீங்க ஏன் வீடு வரைக்கும் வந்து என்னை கூட்டிட்டு வரலை என்று. அவள் அனுப்பிய தகவலையே வெகு நேரம் வெறித்தவன் அவளுக்கு பதில் அனுப்பினான்.

 

 

“ஏன்னு உனக்கு தெரியாதா என்ற அவன் பதில் இப்போது அவளை குழப்பியது. இன்று என்ன நடந்தது என்று ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி பார்க்க ஆரம்பித்தாள்.

 

மதிய உணவுக்கு பின் கார்த்திகா, சரயுவுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் அவரவர் கணவன்மார் கூப்பிட்டதும் அவர்கள் இருவரும் தனித்தனியாக வெளியில் சென்றார்கள். காலையில் இருந்து வைபவை பார்ப்பதை அவள் தவிர்த்திருந்தாள்.

 

 

சென்ற முறை அவர்களின் சந்திப்பு அவள் நினைவுக்கு வந்து தொலைக்க அதுவே வைபவை பார்க்க முடியாமல் செய்தது. அவனை எப்படி பார்க்க போகிறோம் என்ற குறுகுறுப்பு அவளுக்குள் தோன்றியது. அவன் பார்க்கும் போது தவிர்ப்பதும் அவன் பார்க்காத போது அவனை கண்ணுக்குள் நிறைப்பதுமாக அவனுக்கு கண்ணாம்பூச்சி காட்டியது நினைவுக்கு வந்தது.

 

 

கார்த்திகா, சரயு வெளியில் சென்றதும் வைபவ் உள்ளே வந்தது நினைவுக்கு வந்தது. அவனை தவிர்ப்பதை பற்றி அவன் கேட்டதும் அவள் அவன் முகம் காண முடியாமல் தலை தாழ்ந்ததும் அவன் திரும்பி செல்வது பொறுக்காமல் அவன் கையை பிடித்தது அவளுக்குள் வந்து போனது.

 

 

அதன் பின் அன்று போலவே அவன் நெருங்கி வந்ததும் என்று யோசித்தவள் பிறகு பிறகு என்ன ஆயிற்று, ஐயோ கடவுளே நான் அவரை ஏதோ ஒரு விதத்தில் எதிர்த்து இருக்கிறேனா. இது போல் எனக்கு இப்படி நடப்பது மூன்றாம் முறையாயிற்றே என்று எண்ணியவள் முன் நடந்த நிகழ்வுகளை வரிசைபடுத்த அவள் முகம் சொல்லொணாத வேதனையை சுமந்தது.

 

 

அங்கு வைபவோ மறுநாள் அபியின் அன்னையை சந்தித்து பேசுவது என்று முடிவுக்கு வந்தான். அவனுக்கு அப்போது அபியை சேர்த்திருந்த மருத்துவமனையில் இருந்த மனோதத்துவ மருத்துவரை சந்தித்த நினைவுகளை அசை போட்டான்.

 

____________________

 

 

அபியின் அறையில் இருந்து வெளி வந்த வைபவ் அதே மருத்துவமனையில் இருந்த மனோதத்துவ மருத்துவரை காணச்சென்றான். “வாங்க உட்காருங்க என்று அவனை அமர்த்தியவர், “சொல்லுங்க உங்க பேரு என்ன என்று விசாரித்தார். “டாக்டர் என்னோடு பேரு வைபவ், உங்ககிட்ட ஒரு விஷயத்தை பேசி தெளிவு படுத்திக்கலாம்ன்னு தான் வந்தேன்.

 

 

“உங்களுக்கு என்ன தெரியணும் சொல்லுங்க என்றார் அவர். தயங்கியவாறே அபிக்கும் அவனுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளை அவரிடம் விவரித்தான். பொறுமையுடன் அவன் கூறுவதை கேட்டவர் “நீங்க சொல்றது வைச்சு பார்க்கும் போது அவங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

“நான் அவங்களை நேர்ல பார்க்கணும் அப்போ தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதை அவங்களை பார்த்து பேசி தான் தெளிவு படுத்திக்க முடியும் என்றார் அவர். டாக்டர் அவங்களுக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என்று வைபவ் சொல்ல, “அப்போ அவங்க அம்மாவையும் கூட வர சொல்லுங்க, முடிஞ்ச வரை என்ன அவங்ககிட்ட என்ன விஷயம்ன்னு கேட்டுக்கலாம் என்றார் அவர்.

 

 

“அப்புறம் டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம், இன்னைக்கு இப்படி ஆகும் போது தான் அவளுக்கு இந்த மாதிரி நடந்தது. தயக்கத்துடனே “இதுக்கு முன்னாடி ஒரு முறை இப்படி நடக்கும் போது அவகிட்ட எந்த எதிர்ப்பும் இருக்கலை. அது… அதுக்கு என்ன காரணம் என்றான் அவன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளும் பொருட்டு. “அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அது தான் காரணம்

 

 

“இன்னைக்கு நடந்தது அவங்களையும் மீறி அவங்க உள்ளுணர்வு அவங்களை பாதிச்சு அவங்க தன்னிலை மறந்து அவங்க ஆழ்மனசு தட்டி எழுப்பிய உணர்வுகளால தான் உங்களை எதிர்த்து இருக்காங்கன்னு நினைக்கிறேன். நிச்சயம் அவங்க உங்களை எதிர்க்கலை

 

 

“அவங்களை பாதிச்ச விஷயம் தான் உங்களை எதிர்க்க வைச்சு இருக்கு, நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியுதா. இதுக்கு மேல விளக்கமா சொல்லணும்ன்னா நான் அவங்களை நேர்ல பார்க்கணும். நீங்க அவங்களை கூட்டிட்டு வாங்க, இது சரி செய்ய கூடிய ஒரு விஷயம் தான் அப்படியே விட்டா பின்னால அதுவே அவங்களுக்கு அழுத்தத்தை கொடுத்திடும் என்றார் அவர்.

 

 

மேலும் அவனிடம் சில விஷயங்கள் பேச வைபவுக்கு அந்த தகவலே போதுமானதாக இருந்தது, அபியின் அன்னையிடம் லேசாக விசாரித்த விஷயங்கள் அவனுக்குள் வந்து போக அதை பற்றி மேலும் தகவல் அவனுக்கு தேவைப்பட்டது. அதற்காகவே அவரை சந்திக்க அவன் முடிவெடுத்தான்.

 

____________________

 

 

திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்க இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையை அவன் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிக்கையுடன் அபியின் அன்னைக்கு போன் செய்தான்.

 

 

அபியின் அன்னை வைபவ் போன் செய்வான் என்று எதிர்பார்த்தார். “சொல்லுங்க மாப்பிள்ளை என்றார். “அத்தை உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும், நாளைக்கு காலையிலே நீங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கோவிலுக்கு வர முடியுமா என்றான்.

 

 

அபி உடல் நிலை இப்படி ஆகி போனதில் வருந்தியவர், எப்படியும் வைபவிடம் சில விஷயங்களை உடைத்து பேச வேண்டும் என்று முடிவெடுத்தார். வைபவே போன் செய்ய அவனிடம் சரியென்று உரைத்தவர் விடியலை எதிர்நோக்கி காத்திருந்தார்.

 

 

‘கடவுளே என் பெண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காக சோதனைகளை கொடுக்கிறாய். சிறு வயதில் இருந்தே அவள் ஏதாவதொரு கஷ்டத்தை மாறி மாறி அனுபவிக்கிறாளே, இனியாவது எல்லாம் சரியாகி விடும் என்று நிம்மதி கொண்டேனே இப்படி செய்கிறாயே என்று கடவுளை நிந்தித்துக் கொண்டிருந்தார் அவர்.

 

____________________

 

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குழப்பத்தில் இருக்க நிர்மல் அன்று காலை நிகழ்வுகளை அசை போட்டான். சரயு கல்யாணிடம் தனியே பேச வேண்டும் என்று கூறி அவனை தனியே அழைத்து சென்றாள்.

 

 

“கல்யாண் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றாள் தயக்கத்துடன். “என்ன சரயு என்கிட்ட என்ன சொல்லணும், எதுக்கு இத்தனை தயக்கம் உனக்கு என்றான் அவன்.

 

 

“நிர்மலுக்கு நந்துவை கொடுப்பீங்களா என்று நேரடியாகவே விஷயத்தை போட்டு உடைத்தாள். “என்ன… என்ன சொல்ற சரயு என்றான் அவன். “நிர்மல்க்கு நந்துவை ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறார் என்றாள் அவள்.

 

 

“அதெப்படி நடக்கும் சரயு, இது சரியா வராது என்றான் அவன் மொட்டையாக. “ஏன் கல்யாண் அவனுக்கு எந்த தகுதியும் இல்லைன்னு நீ நினைக்கிறியா என்றாள் அவள்.

 

 

“என்ன சரயு நீ?? நிர்மலை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவனை யாருக்கும் பிடிக்காமல் போகாது, தங்கமான குணம் அவனுக்கு. என்னைவிட நல்லவன் என்று கூட சொல்லுவேன். இவனை போல் மாப்பிள்ளை தேடினாலும் கிடைப்பது அரிது என்றவன் நிறுத்தினான்.

 

 

“அப்புறம் ஏன் யோசிக்கிற என்றாள் அவள். “உனக்கு மாமா பத்தி தெரியாது சரயு, இந்த வைபவ் இருக்கானே நான் வருத்தப்படுவேன்னு என்னை கார்த்தியோட சேர்த்து வைக்கணும்ன்னு எத்தனை தடவை அவங்க வீட்டுக்கு நடையா நடந்திருப்பான் தெரியுமா

 

 

“மாமா ஒவ்வொரு தடவை அவனை எவ்வளவு அவமானப்படுத்தி அனுப்பி இருக்காங்க தெரியுமா. இவன் எதையுமே என்கிட்ட சொன்னதில்லை, எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கான் முட்டாள், ஆனா எல்லாம் எனக்கு தெரியும். அதுனால தான் அவன் கடைசியா போயிட்டு வரும் போது கார்த்தியா மனசு திருந்தி வந்தா வரட்டும். யாரும் அவளுக்காக அங்க போய் கெஞ்சக் கூடாதுன்னு சொன்னேன்

 

 

“அதுல இருந்து அவன் அவங்க வீட்டுக்கு போகலைன்னாலும் கார்த்தியை பார்க்கும் போதெல்லாம் அவளை பார்த்து எனக்காக பேச ஆரம்பித்தான். இதை எதுக்கு சொல்றேன்னா அவன் ரொம்ப பொறுமையானவன் தான் எந்த அவமானத்தையும் அவன் தாங்கிப்பான்

 

 

“மாமா அவ்வளவு அவமானப்படுத்திய இடத்துல எப்படி நந்துவை கொடுக்க முடியும். காலம் பூரா அவன் அவர்கிட்ட ஏதாவது ஒருவிதத்துல அவமானம் பட்டுட்டே இருக்கணுமா. மாமாவே என் மகனை மயக்கி கல்யாணம் பண்ணிகிட்டான்னு பேசமாட்டார்

 

 

“அவர் கண்டிப்பா பேசக்கூடிய ஆளு தான், நந்து கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா வைபவ் மட்டும் இல்லை நானும் மனுஷனாவே இருக்க மாட்டேன், ஏன்னா அவ எனக்கும் தங்கை தான். எங்களை விட கோபக்காரன் ராம் அவனுக்கு நந்துன்னா அவ்வளவு பிடிக்கும்

 

 

“ஒருத்தன் அவளை இடிச்சதுக்கே அவனை அடிச்சு கலவரப்படுத்தினவன், அவ கண்ணு கலங்கி நின்னா அதுக்கு காரணமானவங்களை கொலை பண்ணக் கூட தயங்க மாட்டான் என்றான் கல்யாண்.

 

 

“இதை எல்லாம் நான் யோசிச்சு இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா கல்யாண். நந்து மேல எனக்கும் அக்கறை இருக்கு, நான் அந்த வீட்டில இருக்கும் போது நீ எதுக்கு அனாவசியமா வருத்தபடுற என்றாள் அவள்.

 

 

“போதும் சரயு நீ எதுவும் சொல்ல வேணாம், இது நடக்காது. நடக்கவே நடக்காது, நீ இதை பத்தி வைபவ்கிட்ட பேசாதே. சந்தோசமா இருக்கற நேரத்தை இப்படி பேசி கெடுத்துக்க வேண்டாம் என்று லேசான கோபத்துடனும் கண்டிப்புடனும் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியில் சென்றான்.

 

 

தற்செயலாக சரயுவை அழைக்க வந்த நிர்மலின் காதில் அந்த உரையாடல் விழ இடிந்து போய் நின்றிருந்தான் அவன். வெளியில் வந்த கல்யாண் நிர்மலை பார்த்ததும் முதலில் திகைத்து பின் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

 

 

நிர்மலுக்கு அதற்கு மேல் அங்கிருப்பது முள்ளின் மேல் நிற்பது போல் பெரும் அவஸ்தையாக இருந்தது. நண்பன் அவசரமாக அழைத்ததாக சரயுவிடம் பொய்யுரைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அவன்.

 

 

அவன் வெளியில் வந்து அந்த தெருமுனை கூட தாண்டியிருக்க மாட்டான், கல்யாணிடம் இருந்து அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லுங்க மாமா என்றான். “நீ உடனே வீட்டுக்கு வா நிர்மல் என்றான் அவன் எதிர்முனையில். “இல்லை மாமா வெளி… வெளிய ஒரு வேலை இருக்கு அதான் கிளம்பிட்டேன் என்றான் அவன்.

 

 

“உனக்கு உண்மையிலேயே என் மேல மதிப்பிருந்தா நீ கிளம்பி வீட்டுக்கு வா. எல்லாமே இன்னைக்கே முடிவெடுக்க போறதில்லை, நடக்கணும்ன்னு இருந்தா யார் தடுத்தாலும் அது நடக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியுது இல்லை என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

 

நிர்மல் கிளம்பி வீட்டுக்கு வரும் வழியில் கடையில் செயற்கை பானம் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சரயு அவனை பார்க்க அவளை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தான் நிர்மல்.

 

 

“சாரி அண்ணி மனசு சரியில்லை அதான் கிளம்பினேன், மாமா தான் சத்தம் போட்டார். அதான் வந்துட்டேன், யாராச்சும் கேட்டா ஜூஸ் வாங்க போனேன்னு சொல்லிடுங்க அண்ணி ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

 

 

அவள் எதுவும் பேசாமல் அவன் கையில் இருந்த ஜூஸை வாங்க வேகமாக அவனே திறந்தான். அவன் திறக்கவும் நந்து அவன் கையில் இருந்து ஜூஸை பிடுங்கவும் சரியாக இருந்தது.

 

 

“ஹைய் எனக்கு பிடிச்ச ஜூஸ், நல்ல வேளை நான் போட்ட ஜூஸை நானே எப்படி குடிக்கிறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ், அப்புறம் சாரி. ஜூஸ் கொட்டினதுக்கு என்று விட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். அவள் பிடுங்கியதில் ஜூஸ் அவன் சட்டையில் கொட்டியிருந்தது.

 

 

கல்யாணின் தம்பி ராம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் “வாங்க நிர்மல் என்னோட சட்டையை மாத்தி போட்டுக்கோங்க, நமக்கு ஒரே சைஸ் தான்னு நினைக்கிறேன் என்று அவனை அழைத்தான்.

 

 

“இல்லை பரவாயில்லைங்க லேசா கழுவினா போய்டும் என்று சமாளித்தான் அவன். “அட பரவாயில்லை வாங்க என்று அவனை அவனின் அறைக்கு அழைத்துச் சென்று அவன் அதுவரை அணிந்திராத புதிய சட்டையை எடுத்துக் கொடுத்தான்.

 

 

நிர்மல் மறுக்க அவனை கட்டாயப்படுத்தி அணிந்துக் கொள்ளச் செய்தான். “உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா என்றான் பீடிகையுடன். “கேளுங்க ராம் என்றான் அவன். “தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்றான் அவன் மீண்டும் பீடிகையாகவே.

 

 

‘என்ன கேட்க போறான் என்று நினைத்த நிர்மல் “தப்பாவா நானா அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன். நீங்க கேளுங்க என்றான் அவன். “உங்களுக்கு நந்துவை பிடிச்சிருக்கா என்றான் அவன். ‘இதென்னடா வம்பாக போய்விட்டது. என் முகத்தில் அப்பட்டமாகவா தெரிகிறது, நான் அவளை விரும்புவது என்று நினைத்தவன் செய்த தவறு அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்தது.

 

 

‘ஹ்ம்ம் அப்படி எதுவும் தெரியவில்லையே என்று எண்ணியவன் “ஏன் அப்படி கேட்குறீங்க, அப்படி எதுவுமில்லை என்று சொல்ல, ராம் வாய்விட்டு சிரித்தான். “அதான் கண்ணாடியை பார்த்து நான் நினைச்சது சரின்னு உறுதி பண்ணிட்டீங்களே என்று சொல்ல நிர்மல் தலையில் குட்டிக் கொண்டான்.

 

 

“எனக்கு அவளை பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என்றான் நிர்மல் அவன் முகத்தை நேராக பார்த்து. “கேட்டேன் அண்ணா சொன்னதை கேட்டேன். ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, நல்லதே நடக்கும்ன்னு. நீங்க வருத்தப்படாதீங்க, நந்துக்கு பொருத்தமானவர் தான் நீங்க என்று ராம் சொன்னதும் அளவில்லா சந்தோசம் கொண்ட நிர்மல் அவனை கட்டிக் கொண்டான்.

 

 

“இப்போவரைக்கும் எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாம தான் இருந்தேன் ராம். நீங்க பேசுனது எனக்கு ஆறுதலா மட்டுமில்லை, ரொம்பவும் நம்பிக்கையை கொடுத்திருக்கு. நிச்சயம் உங்க தங்கையை நான் நல்லா பார்த்துக்குவேன் என்றான் அவன். இப்படியாக நிர்மல் அன்று நடந்தவைகளை நினைவு கூர்ந்து கொண்டிருந்தான்.

 

____________________

 

 

வைபவ் வெளியில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நேராக அபியின் அன்னையை காண கோவிலுக்கு சென்று கொண்டிருந்தான். அபி அலுவலகம் சென்றதும் கணவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு கற்பகம் கோவிலுக்கு விரைந்தார்.

 

 

கடவுளை தரிசனம் செய்துவிட்டு அவர் பிரகாரத்தில் வந்து அமரவும் வைபவ் அவர் பின்னேயே வரவும் சரியாக இருந்தது. “உட்காருங்க அத்தை என்றவன் அவனும் சற்று தள்ளி அமர்ந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவன் அமைதியாகவே அமர்ந்திருக்க அந்த மௌனத்தை அவரே கலைத்து “சொல்லுங்க மாப்பிள்ளை என்றார் கற்பகம்.

 

 

“அத்தை அபிக்கு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி உடம்பு சரியில்லாம போச்சுன்னு சொன்னீங்கள்ள அது எப்படி நடந்துச்சு என்றான் அவன். “அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம் நேத்து அபிக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் தான் காரணம் என்று ஒரு வித தர்மசங்கடத்துடன் நடந்தவற்றை அப்படியே கூற கற்பகத்தின் எண்ணத்தில் வைபவ் உயர்ந்து கொண்டே போனான்.

 

 

“இப்போ நீங்க சொல்லுங்க அத்தை அபிக்கு என்னாச்சு என்றான். கற்பகம் அபிக்கு என்னவாயிற்று என்று அவர் கூற ஆரம்பித்தார்.

 

____________________

 

 

பெங்களூரின் புறநகர் பகுதில் அமைந்திருந்தது அவர்கள் இருந்த குடியிருப்பு. வைத்தியநாதன், கற்பகம் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவன் தான் நந்தன். அவனுக்கு அடுத்த பிறந்த அபி அவள் தந்தை வைத்தியநாதனுக்கு செல்லம், காண்போரை தன் வசம் இழுக்கும் துருதுரு குழந்தை அவள்.

 

 

அவளுக்கு வாய் பேச முடியாது என்பதோ காது கேட்காதோ என்பதோ முதலில் அவர்களுக்கு தெரியவே இல்லை. சில குழந்தைகள் ஒன்று அல்லது ஒண்ணரை வயதுக்கு மேல் கூட பேசும் என்று முதலில் இருவரும் பேசாமல் இருக்க, நாளாக ஆக அவளிடம் இருந்து எந்த முயற்சியும் இல்லை என்பதை உணர்ந்து பதறி அவளை மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

 

 

மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தைக்கு பிறந்தது முதலே காது கேட்காததால் பேசவும் முடியாமல் போய்விட்டது. தற்போது இதெல்லாம் பெரிய குறைபாடே அல்ல என்றும் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் அவளுக்கு உரிய மருத்துவம் பார்த்து காது கேட்கும் கருவி பொருத்தலாம்.

 

 

பின்பு வாய் பேசமுடியாதோர்க்கு என்று இருக்கும் பிரத்யேகமான இடத்தில் சேர்த்து அவளை பேச வைக்கவும் முடியும் என்று அவர் நம்பிக்கை அளிக்க நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றனர் பெற்றோர்.

 

 

இதற்கிடையில் நந்தனுக்கு அபி பிறந்ததில் இருந்து பெற்றோர் தன்னை கவனிப்பதில்லை என்ற குறை இருந்தது, அதனால் அபியை அவனுக்கு பிடிக்காமலே போய்விட்டது. குழந்தையை கிள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பது அடிப்பது வளர்ந்த பின்பு அவளை பற்றி எதாவது புகார் சொல்வது என்று அவளை தந்தையிடம் மாட்டி வைத்துக் கொண்டிருந்தான்.

 

 

இந்த நிலையில் கற்பகம் மீண்டும் கருவுற்றார். அபிக்கு நான்கு வயது நிரம்பியிருக்க கற்பகம் மீண்டும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். குழந்தைக்கு விமலா என்று பெயரிட்டனர். அபியையும் விமலாவையும் ஒரே சேர கவனிக்க முடியாத கற்பகம் அபியை தன் அன்னை வீட்டில் விட்டு வைத்தார்.

 

 

அவர் அன்னை வீட்டின் அருகில் இருந்த வாய் பேச முடியாதோர்க்கான பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டிருந்தனர் அவர்கள். கற்பகத்தின் தாய் வெளியில் எங்கும் அலைய முடியாது என்பதால் வைத்தியநாதனின் நண்பர் சிவநேசனை தினமும் அபி பள்ளிக்கு கூட்டிச் சென்று கூட்டி வருமாறு வேண்டுகோள் விடுக்க அவரும் ஆமோதித்து அதை செய்து கொண்டிருந்தார்.

 

 

திங்கள் முதல் வெள்ளி வரை பாட்டி வீட்டில் இருக்கும் அபி ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பகத்தை பார்க்க வந்துவிடுவாள். அப்படி ஒரு முறை வந்திருந்த குழந்தை திரும்பி பாட்டி வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று முதன் முதலாக அடம்பிடிக்க அதை பொருட்படுத்தாது அவளை அங்கு அனுப்பி வைத்தனர்.

 

 

மறுவாரமும் வீட்டிற்கு வந்த குழந்தை அதையே செய்ய பொறுமையிழந்த கற்பகம் குழந்தையை அடித்து அனுப்பி வைத்தார். இப்படியே ஒரு மாதம் கடந்தது, அபியின் பாட்டி அன்று ஏதோ செக்கப் என்று மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

 

 

சிவநேசனிடம் குழந்தையை அவர்கள் வீட்டில் வைத்திருக்குமாறு கூறிவிட்டே அவர் சென்றிருந்தார். சிவநேசன் மனைவி குழந்தைகளை அவரின் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு பெங்களூரில் வந்து தனியே வேலை பார்ப்பவர்.

 

 

அபியின் பாட்டி அன்று மருத்துவமனையில் மருத்துவர் வேறு ஏதோ அறுவை சிகிச்சை இருப்பதால் தாமதமாகும் என்றும் மறுநாள் வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கூறிவிட அவர் விரைவாகவே வீடு திரும்பினார்.

 

 

வீடு திரும்பியவர் அபியை கூட்டிச் செல்லவென்று சிவநேசன் வீட்டு அழைப்பு மணியை அழுத்த மின்சாரம் இல்லாததால் சத்தம் கேட்காமல் அவர் வந்து கதவை திறக்கவில்லை. அபியின் பாட்டி சரி ஜன்னல் வழியாக அவரை அழைப்போம் என்று திறந்திருந்த சன்னலின் வழியே அவரின் அறையை நோக்கியவர் பதறிப் போனார்.

 

 

சிவநேசன் அபி சிறு குழந்தை என்றும் பாராமல் அவளிடம் தப்பாக நடக்க முயற்சி செய்துக் கொண்டிருக்க குழந்தை “ஆணாம் ஆணாம்” என்று லேசாக முனகியது அவருக்கு கேட்டது. பாட்டி போட்ட கூச்சலில் பயந்த சிவநேசன் கதவை திறக்க பாட்டி வந்திருந்த ஆட்டோவின் ஓட்டுனர் பாய்ந்து வந்து சிவநேசனின் சட்டையை பிடித்து அவரை விளாசி தள்ளி விட்டார்.

 

 

அதற்குள் அபிக்கு வாயில் நுரை தள்ளியிருக்க குழந்தைக்கு தூக்கி தூக்கி போட ஆரம்பித்ததை பார்த்த பாட்டி கதற ஆரம்பித்தார். சூழ்நிலை உணர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குழந்தையை அள்ளி ஆட்டோவில் போட்டுக் கொண்டு பாட்டியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

 

 

அபியின் அன்னைக்கு விவரம் தெரிவிக்கபட கதறி துடித்துக் கொண்டு வந்தார் போகமாட்டேன் என்ற குழந்தையை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தேனே. என் குழந்தை என்ன பாடுபட்டாளோ தெரியவில்லையே என்று கூறி அவர் கதறிய கதறலில் அந்த மருத்துவமனையே ஆடியது.

 

 

குழந்தைக்கும் அவ்வப்போது தூக்கி தூக்கி போட குழந்தை பயத்தில் அவ்வப்போது கதறியது. அபியின் உடல் நிலை தேறி அவளை வீட்டுக்கு அழைத்து வர முழுதாக ஒரு மாதம் ஆனது.

 

 

அதற்கு பின் அபி வாய் பேசமுடியாதோருக்கு பேச பயிற்சி அளிக்கும் பள்ளிக்கு செல்லவில்லை. கற்பகமும் அவளிடம் சைகையில் கேட்டு பார்க்க மீறி கேட்டால் குழந்தை அழ ஆரம்பிக்கவும் அவரும் அத்துடன் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார்.

 

இருந்தாலும் அவளுக்கு படிப்பு முக்கியம் என்று கருதியவர் சைகை மொழியை அவள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். தினமும் அவரே அவளை கூட்டிச் சென்று பள்ளியில் விடுவதும் அழைத்து வருவதும் என்று அபியுடனே இருந்தார்.

 

 

அபியின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணம் என்று வைத்தியநாதன் வருந்தினார், குழந்தையிடம் அவர் நெருங்க முயற்சிக்க அவளோ அவரை விட்டு தள்ளிச் சென்றாள். அவளுக்கு ஆண்களை கண்டாலே ஒரு பயம் எழ ஆரம்பித்தது.

 

 

அபி தங்கை விமலாவிடமும் அன்னையிடமும் மட்டுமே அதிக ஒட்டுதலாக இருந்தாள். கற்பகம் எல்லா ஆண்களும் அப்படியில்லை ஒரேடியாக ஆண்களை கண்டு ஒதுங்கக்கூடாது என்று பலவிதமாக எடுத்துரைக்க கொஞ்சம் கொஞ்சமாக அவள் சாதாரண பெண்ணாக மாறினாள்.

 

 

விமலா வளர வளர அவளுக்கு அபியிடம் ஒரு பொறாமை உருவாக ஆரம்பித்தது, அபி அவள் அன்னையை போல் அழகையும் நிறத்தையும் கொண்டிருக்க விமலா அவள் தந்தை வழி பாட்டியை போல் இருந்தாள். அதிக நிறம் இல்லாவிட்டாலும் அவளும் அழகே.

 

 

ஆனாலும் அபியை போன்று காண்போரை வசீகரிக்கும் அளவுக்கு அவள் இல்லை என்று அவள் மனதிற்குள் ஒரு குறை. அவள் தோழிகளும் அவளை கிண்டல் செய்திருக்க அவள் அபியிடம் இருந்து சற்று ஒதுங்க ஆரம்பித்தாள்.

 

 

அபி பட்டப்படிப்பு முடித்திருக்க கற்பகம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அபி திருமணமே வேண்டாம் என்று மறுக்க கற்பகம் பலவிதமாக அவளுக்கு அறிவுரை கூறி அவளை சம்மதிக்க வைத்திருந்தார். அன்று காலை மாப்பிள்ளை வீட்டினர் வந்திறங்கினர். வந்தவர்கள் பெண்ணை அழைத்து வரச் சொல்ல அபியை அழைத்து வர அவள் அன்னை உள்ளே விரைய மாப்பிள்ளை வீட்டினர் சின்னவள் விமலாவை பெண் கேட்டு வந்திருப்பதாகக் கூறினர்.

 

 

அந்த நிமிடம் எல்லோருக்கும் தர்மசங்கடமாக அமைய அபி தான் அவள் அன்னையை சமாதானப்படுத்தி விமலாவிற்கு முதலில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். மாப்பிள்ளை நல்ல இடம் என்பதால் அவர்களும் முதலில் விமலாவின் திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டனர்.

 

 

விமலாவுக்கு அதீத சந்தோசம் மாப்பிள்ளை அவளை தேடி வந்து திருமணம் செய்துக் கொள்கிறார் என்று பெருமிதமாக உணர்ந்தாள். அவள் திருமணமும் முடிந்தது, அவளின் திருமணம் முடிந்து ஒரு வாரமிருக்கும். மாப்பிள்ளையும் பெண்ணும் மறுவீட்டுக்கு வந்திருக்க, மீண்டும் ஒரு முறை அபிக்கு வலிப்பு வந்து அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

 

 

மறுவீட்டுக்கு வந்திருந்தவர்களை வீட்டில் விட்டு விட்டு அன்னை மருத்துவமனையே கதி என்று இருக்க, விமலா அவள் அன்னையிடம் சண்டையிட்டாள். எப்போதும் அவருக்கு பெரிய மகளின் மீதே அன்பு இருப்பதாகவும் சிறு வயது முதலே இப்படி பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று அவரிடம் சண்டையிட்டவள் இனி இந்த வீட்டிற்கே வரமாட்டேன் என்று சென்றுவிட்டாள்.

_____________________

 

 

அபியின் அன்னை கண் கலங்கியவாறே சொல்லி முடிக்க வைபவுக்கு அளவில்லாத ஆத்திரமும் கோபமும் வந்தது. அபியை பற்றி முன்பு அவன் எண்ணியது அப்படியே நடந்திருக்க அவன் மனம் வேதனையை சுமந்தது. அவளுக்கு தன்னால் எந்த வித கஷ்டமும் பாதிப்பும் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தான்.

 

 

அவன் மனதில் வேறு ஏதோ ஒன்று குடைந்தது. அபியின் அன்னையிடம் “அத்தை உங்க சின்ன பொண்ணு கல்யாணம் நடந்தப்போ என்ன நடந்துச்சு. அப்பவும் இது போல எதுவும் நடந்துச்சா” என்றான் அவன்.

 

 

“இல்லை மாப்பிள்ளை அப்படி எதுவும் நடக்கவேயில்லை, நானும் அபிக்கிட்ட ஜாடை மாடையா விசாரிச்சு பார்த்திட்டேன். அபி அப்படி எதுவுமில்லைன்னு சொல்லிட்டா” என்றார் அவர் உறுதியாக. வைபவுக்கு நிச்சயமாக ஏதோ நடந்திருக்கிறது என்று தோன்றியது. அவரிடம் பலவிதமாக விசாரித்து வைத்துக் கொண்டான்.

 

____________________

 

அதே நேரம் அபியும் அவள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தியிருந்தாள். விமலாவின் திருமணம் முடிந்த திருப்தியில் எல்லோருமே சந்தோசமாக இருந்தனர். அபிக்கு விமலா வீட்டில் இல்லாதது கஷ்டமாக இருந்தாலும் நல்லபடியாக திருமணம் முடிந்து அவள் புகுந்த வீடு சென்றிருக்கிறாள் என்று சந்தோசம் கொண்டாள்.

 

 

அந்த வாரம் விமலா அவள் கணவனுடன் மறுவீட்டு விருந்துக்கு வந்திருந்தாள். அபியின் அண்ணன் நந்தன் படிப்பு முடிந்து வெளிநாட்டுக்கு சென்றவன் விமலாவின் திருமணத்திற்கு கூட வந்திருக்கவில்லை. அவ்வளவு பாசக்காரன் (சுயநலக்காரன்).

 

 

மறுவீட்டு விருந்துக்கு விமலா வந்திருந்த தினத்திற்கு மறுநாள் அபியின் அன்னையும் தந்தையும் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வெளியே சென்றவர்கள் வீடு திரும்ப மாலையாகிவிடும் என்று சொல்லி சென்றுவிட்டனர்.

 

 

வீட்டில் அபி, விமலா மற்றும் விமலாவின் கணவன் ராஜேஷ் மட்டுமே இருந்தனர். விமலா ஏனோ அன்று அவள் அறையை விட்டு எழுந்து வரவேயில்லை. அபி மதிய உணவிற்கு தேவையானதை எல்லாம் செய்துக் கொண்டிருக்க அவள் பின்னே யாரோ நிற்பது போல் தோன்றியது.

 

 

பெண்களின் இயல்பான எச்சரிக்கை குணம் தலைத்தூக்க அவள் திரும்பி பார்த்தாள். ராஜேஷ் அவளை நெருங்கி வந்து அவளை உரசி நின்றான். பதறிய அபி சற்றே பின்னெட்டு வைக்க அவன் சற்றும் தாமதியாமல் அபிநயா என்று சொல்லிக் கொண்டு அவளை இடக்கையால் பற்றினான்.

 

 

“என்ன பார்க்கற அபிநயா, நான் முதன் முதல்ல ஆசைப்பட்டது உன்னை தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை ஆசையா வந்தேன், ஆனா வீட்டில எல்லாரும் உன்னால பேச முடியாது உனக்கு காது கேட்காது. அப்படி பொண்ணு எதுக்கு உனக்கு அவளை விட அவளோட தங்கை விமலாவை நீ கட்டிக்கன்னு சொன்னாங்க”

 

 

“நானும் யோசிச்சேன், எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. அப்புறம் தான் உங்க வீட்டுக்கு வந்ததும் உன் தங்கையை பிடிச்சிருக்குன்னு சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் கல்யாணத்துல உன்னை பார்த்து அசந்து போயிட்டேன்”

 

 

“எப்படி இருந்தாலும் நான் உன்னை கட்டியிருக்கணும்ன்னு இப்போ எனக்கு தோணுது. நீ சாதாரணமாகவே அழகு, அதுவும் உன் தங்கை திருமணத்தில் பட்டுபுடவை கட்டி அலங்காரமாக நீ இருந்ததை பார்த்து என் மனம் என்னிடமே இல்லை அபிநயா”

 

 

“எப்படியும் உன்னை யாரும் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க, நான் இங்க வரும் போதெல்லாம் நாம இது போல சந்திச்சு சந்தோசமா இருக்கலாம். நீ என்ன சொல்ற, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா” என்றவன் அவளை மேலும் நெருங்கி இருகைகளாலும் அவளை அணைத்து அவள் இடையை பற்றி அவள் இதழ்களை நோக்கி குனிய முற்பட அபி அவனிடம் இருந்து திமிர முற்பட்டாள்.

 

 

கையில் தட்டுபட்ட காய்கறிகளை எடுத்து ஏறிய முற்பட அவனோ அவள் முயற்சியை உடைத்து அவளை லாவகமாக தடுக்க, எதுவும் நடந்து விடுமோ என்று அவள் நினைக்க ஆரம்பித்த வேளை அவள் உடல் கட்டுப்பாட்டை இழக்க அவளிடம் இருந்து “ஆணாம் ஆணாம்” என்ற முனகல் கேட்க வாயெல்லாம் நுரைத்து அவள் மயங்கி விழுந்தாள்.

 

 

அதன்பின் அவள் உடல் தூக்கி தூக்கி போடுவதை பார்த்து பயந்தவன் தூங்கிக் கொண்டிருந்த விமலாவை எழுப்பி வந்து அபியை காண்பித்து அவளை மருத்துவமனையில் சேர்த்தான். அப்போது தான் விமலா வீட்டினருடன் சண்டையிட்டு வீட்டிற்கு வரமாட்டேன் என்று சென்றுவிட்டாள்.

 

 

அபியின் அன்னை மருத்துவமனையில் எதுவும் பிரச்சனையா என்று கேட்க அபியோ தங்கையின் வாழ்க்கையை உத்தேசித்து ராஜேஷை பற்றி எதுவும் சொல்லாமல் விடுத்தாள்.

 

 

அதன்பின் ஓரோர் முறை வீட்டிற்கு வந்தாலும் வருபவள் ஒரே நாளில் சண்டை போட்டுக் கொண்டு அவள் மாமியார் வீட்டுக்கு சென்று விடுவாள். அபிக்கு சென்னையில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்தபின் விமலா வரவேயில்லை.

 

 

அபிக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண் முன் வந்து மீண்டும் ஒரு கணம் தூக்கி போடுவது போல் இருந்தது. ஆனால் இவர்களை நினைத்து வைபவை காயப்படுத்தியிருக்கிறோமே என்று அவளுக்கு குற்ற உணர்வு எழுந்தது.

 

 

தனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது திருமணம் எப்படி சாத்தியம் என்று எண்ணியவள் வைபவின் வாழ்க்கையை தான் கெடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்.

 

 

அதன்பின்னே அவளுக்கு சற்று நிம்மதி வந்தது, ஆனாலும் அவளால் ஒரேடியாக நிம்மதியாக இருக்க முடியவில்லை. வைபவின் மீது அவளுக்கு காதல் வந்திருந்தது. அவனை பிரிய வேண்டும் என்று நினைக்கும் போது அவளால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை.

 

 

இருதலைகொள்ளி எறும்பு போல் அவள் உள்ளம் ஆனது, ஒரு மனம் அவன் வாழ்க்கையை பாழாக்காதே என்றும் மற்றொன்று அவனை விட்டு பிரியாதே என்று அவளை குழப்பிக் கொண்டிருந்தது. இறுதியில் அவனை விட்டு பிரிவது என்று முடிவெடுத்தாள்.

 

 

வைபவுக்கு குறுந்தகவல் அனுப்பினாள் அவனை சந்திக்க வேண்டும் என்று. வைபவ் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தான். அன்று மாலையே அவளை சந்தித்தான். அபி அவள் எழுதி வைத்திருந்ததை அவனிடம் நீட்ட அதை படித்தவன் சாவதானமாக அதை கிழித்துப் போட்டான்.

 

 

அபி எழுதியிருந்தது, “என்னை மன்னிச்சுடுங்க நான் உங்களுக்கு தகுதியான மனைவியாக இருக்க முடியாது. இந்த கல்யாணம் நமக்கு வேண்டாம், நீங்க வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னோட பிரச்சனை உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சீக்கிரமே உங்க கல்யாணம் நடக்கட்டும் என்னோட வாழ்த்துக்கள்” என்று அவள் எழுதியிருந்ததையே அவன் கிழித்து போட்டான்.

 

 

அளவில்லாத கோபம் அவன் முகத்தில் எழுந்தது. கண்களை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை நோக்கி, “போதுமா இன்னும் எதுவும் வைச்சிருக்கியா என்னை காயப்படுத்த” என்றவனின் விழிகளில் தெரிந்த வேதனை அவளை உலுக்குவதாக இருந்தது.

 

 

பார்க்கில் ஒரு ஓர பெஞ்சில் அவர்கள் அமர்ந்திருந்தனர். விழியோரம் கலங்க இதோ கசிந்து வெளியே வந்துவிடுவேன் என்பது போல் இருக்க அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் வேதனை அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவனை விட்டு பிரிவது என்று உறுதியாகவே நினைத்தாள்.

 

 

அவள் கைப்பையில் இருந்து மீண்டும் ஒரு கடிதத்தை எடுத்து அவனிடத்தில் நீட்டினாள். “இன்னும் எத்தனை தான் வைச்சிருக்க எடுத்து மொத்தமா கொடுத்திரு. எதுக்கு ஒண்ணொண்ணா கொடுக்கிற என்றான் சற்றே கோபத்துடன்.

 

 

அவள் கைகள் வேறு இல்லை என்பதாய் அசைக்க அதை பிரித்து படித்தான். “நீங்க முதல் கடிதத்தை கிழிச்சு போடுவீங்கன்னு தெரியும். அதுனால தான் இந்த ரெண்டாவது கடிதம், தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க, என்னால உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா இருக்க முடியாது நாம பிரியறது தான் நல்லது

 

 

“என்னோட பிரச்சனையை இத்தனை நாளா நான் உணராமலே இருந்திருக்கேன். உங்களுக்கு என்னைவிட நல்ல பெண் கிடைப்பாங்க வைபவ். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால குற்ற உணர்ச்சியோட வாழ முடியாது. நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம், நடக்கவே வேண்டாம் என்று எழுதியிருக்க கடிதத்தில் அவள் கண்ணீரின் அடையாளம் கண்டவன் அவளை நிமிர்த்தி ‘இதென்ன என்பது போல் கேட்டான்.

 

 

அவன் என்ன காட்டுகிறான் என்பது விளங்காமல் அவள் அவன் முகம் பார்க்க கண்ணீர் கரை பட்டு மொடமொடப்பாக இருந்த இடத்தை சுட்டி காண்பிக்க பிரிவை பற்றி எழுதும் போது தன்னை மீறி கண்ணீர் வடிக்க அந்த இடத்தில் அவள் கண்ணீரின் அடையாளம்.

 

 

“எதுக்கு அபி நீ உன்னையே ஏமாத்திக்கிற. இங்க பாரு அபி உனக்கு விருப்பமில்லைன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும். உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் மட்டுமில்லை நம்ம நிச்சயம் எப்போ முடிஞ்சுதோ அப்போல இருந்து பிரியறதில்லைன்னு முடிவெடுத்து இருக்கேன், பிரியவும் மாட்டேன். அதையே தான் நான் கல்யாணுக்கு சத்தியமாவும் சொல்லியிருக்கேன்”.

 

 

“உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது சில நொடி சந்தோசத்திற்காக அல்ல, உன்னோடு நான் வாழ்நாள் முழுதும் வாழும் சந்தோசத்திற்காக மட்டுமே. உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம், உன்னை கஷ்டப்படாமலும் காயப்படுத்தாமலும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்”

 

 

“அதை நீ முதலில் நம்பு, உனக்கு என்னை பிடித்திருக்கிறது என்று எனக்கு தெரியும். என் சந்தோசம் என்று சொல்லி என்னை பிரிய நினைத்து நம் சந்தோசத்தை குழி தோண்டி புதைத்து விடாதே”

 

 

“உன் பிரச்சனை பெரிதானது அல்ல அது சரி செய்யக் கூடியதே, நீ ஒத்துழைத்தால் அது காலப்போக்கில் சரியாகி போகும். உனக்கு நம்பிக்கை இருந்தால் இந்த மருத்துவரை சென்று பார்” என்று சொல்லி அவள் கையில் மருத்துவரின் விலாச அட்டையை திணித்தான்.

 

 

வழிந்துவிடுவேன் என்று இருந்த விழி நீர் விழிகளை தாண்டி வெளியே வந்து அவள் கன்னங்களை நனைத்து அவன் கைகளில் பட்டுத் தெறித்தது. “அபி நான் உனக்கு முதல்லயே சொல்லி இருக்கேன், நீ என்னை கோபமா பார்த்தா கூட என்னால தாங்கிக்க முடியும்”

 

 

“தயவு செய்து அழ மட்டும் செய்யாதே அபி, என்னால் தாங்க முடியாது” என்றவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள அதுவரை தேக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் வெளியில் வந்தது.

 

 

வைபவ் அவளை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவள் மொத்தமாக அழுது தீர்த்த பின்னே அவனை நிமிர்ந்து பார்த்தாள். மேலும் சற்று நெருங்கி வந்து அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டவள் அவன் கைகளை எடுத்து தன்னோடு பிணைத்துக் கொண்டாள்.

 

 

எல்லையில்லா நிம்மதி அந்த கணம் அவளுக்குள் தோன்றியது, என்னவன் எனக்கானவன் என்னை தாங்குபவன் என்ற எண்ணம் எழுந்து அந்த நொடி அவளை கர்வப்படுத்தியது.

 

 

“அபி…” என்றவன் அவளை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க செய்தான். அவள் வெட்கத்துடன் தலை கவிழ “தயவு செய்து என்னை பாரு அபி” என்று மீண்டும் அவள் முகம் நிமிர்த்தி அவள் கண்களை சந்தித்தான். “அபி இப்பவும் நீ அதையே தான் சொல்றியா, உனக்கு நான் வேணாமா” என்று அவன் முடிப்பதற்குள் அவள் கைகள் உயர்ந்து அவன் வாயை மூடியது.

 

 

அதில் நிம்மதியுற்றவன் அவள் மெல்லிய விரல்களில் மென்மையாக முத்தமிட்டான். “இனிமே இப்படி சொல்லமாட்டியே” என்றான் அவன். அவள் இல்லையென்பதாய் தலையசைத்தாள். “அப்படி சொன்னா தண்டனை பெரிசா இருக்கும்” என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தான்.

 

 

அபியின் முகம் வெட்கத்தில் சிவந்தது, வைபவ் மனதிற்குள் ‘அபி அன்னைக்கு பேசின மாதிரி வாயை திறந்து நீ என்கிட்ட பேசுவியா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அவளை பேச வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் அவன், அவளே அவனிடம் வாயை திறந்து பேசப் போவது அறியாமல்…

 

 

“இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு நம்ம கல்யாணத்துக்கு, உங்க வீட்டில உங்க அண்ணன் எப்போ வருவார். உன் தங்கை எப்போது வருவாள்” என்று இயல்பாக விசாரிப்பது போல் விசாரித்தான் வைபவ்.

 

 

அவளின் அண்ணன் திருமணத்திற்கு முதல் நாள் வருவான் என்றும், தங்கை இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவாள் என்றும் அவள் கூறினாள். தங்கை மட்டும் தான் வருவாளா அவள் கணவரும் வருவாரா என்று பலவிதமாக அவன் அவளை விசாரித்துக் கொண்டிருந்தான்.

 

 

அபிக்கு தெரியாது வைபவுக்கு ராஜேஷின் மீது சந்தேகம் வந்துவிட்டது என்று, அவன் சந்தேகத்தை உறுதி படுத்திக் கொள்ள அவன் முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவள் அறியாத விசயம்.

 

காலையில் அவள் அன்னையை பார்த்ததுமே பெங்களூரில் இருக்கும் அவன் நண்பனிடம் பேசி விசாரிக்க சொல்லிவிட்டான் அவன். அவன் நண்பனிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை அதற்காகவே காத்திருக்கிறான்.

 

 

கிளம்பும் முன் அபியை மறுநாள் அந்த மருத்துவரை பார்க்கச் சொல்லிவிட்டு அவளுக்கு பல அறிவுரை வழங்கிவிட்டே விடைபெற மனமில்லாமல் விடை பெற்றான்.

 

 

வாயில்லை என்றால்

வாலாட்டலாமோ…

கேட்க முடியவில்லை

என்றால் யாரும்

கேளாமல் போய்விடுவர்

என்று எண்ணலாமோ…

 

 

என்னவளின் துயர்

துடைக்க யான்

அக்கணம் அங்கில்லாமல்

போனேனே…

 

பேதையவள்

துடிப்பு கண்முன்

நிழலாட அரண்டவளின்

இன்னலை சன்னலின்

வழியே புறந்தள்ள

இக்கணம் நானிருக்கிறேன்

இனி நெருங்க முடியாது

யாரும் அவளை…

 

 

Advertisement