Advertisement

அத்தியாயம் –20

 

 

கல்யாணும் கார்த்திகாவும் அபி வீட்டினரை விருந்துக்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதெல்லாமே வைபவின் ஏற்பாடு, சென்ற முறை அவன் சென்றிருந்த போது வைத்தியநாதன் சற்று முறைப்பாக இருந்ததால் அவன் செல்லாமல் கல்யாணை அனுப்பி வைத்தான்.

 

 

“வாங்க… வாங்க என்று சம்பிரதாயமாக வரவேற்றார் வைத்தியநாதன். “வாங்க தம்பி, வாம்மா என்று கற்பகமும் அழைக்க இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். ‘என்ன விஷயமா வந்திருப்பாங்க, ஒரு வேளை கல்யாணம் பத்தி பேச வந்திருப்பாங்களோ என்று யோசித்துக் கொண்டிருந்தார் வைத்தியநாதன்.

 

 

“அபி வீட்டில இருக்காங்களா அம்மா என்றாள் கார்த்திகா. “ஹ்ம்ம் இருக்காம்மா உள்ள இருக்கா, நீ வா என்று அவளை அழைத்துச் சென்றார். ‘அப்புறம் வந்த விஷயம் என்ன என்பது போல் நெற்றியை சுருக்கி ஒரு யோசனையுடன் கல்யாணை பார்த்தார் அபியின் தந்தை.

 

 

“சரயு பத்தி ஆன்ட்டி சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எங்களோட தோழி, நாங்க எல்லாரும் ஒண்ணா ஒரே கல்லூரில தான் படிச்சோம். முத்து என்னோட சொந்த மச்சினன். நாளைக்கு எங்க வீட்டில முத்துவுக்கும் சரயுவுக்கும் விருந்து. அதான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தோம். நீங்க எல்லாரும் நாளைக்கு குடும்பத்தோட வரணும் என்று அழைப்பு விடுத்தான் அவன்.

 

 

நம் அபியின் தந்தைக்கு புஸ்சென்று கோபம் வந்தது, “அதெப்படி திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்திக்க முடியும். அவரும் அங்கு வருவார் தானே. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. அதனால் இதெல்லாம் சரியாக வராது என்றார் அவர்.

 

 

இப்போது கோபம் வருவது கல்யாணின் முறையாகி போனது. “என்ன சார் பேசறீங்க, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க. இப்படி சொல்றவர் உங்க பொண்ணை வீட்டில பூட்டி வைக்கலையே. வேலைக்கு தானே அனுப்பறீங்க, ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க

 

 

“உங்களுக்கு தெரியாம அவங்க சந்திக்கவே முடியாதா, அது பெரிய உலகமகா கஷ்டமா. வைபவ் நேரா அபியோட அலுவலகம் போனாலே பார்த்திடலாமே, இல்லை அவங்க வெளிய கூட பார்க்க முடியும். அவனுக்கு பார்க்கணும்ன்னா நேரா உங்க வீட்டுக்கே வந்து பார்த்திடுவான்.

 

 

“என்னமோ சின்னபிள்ளைதனமா சொல்றீங்களே, அவங்க ரெண்டு பேருக்கும் தானே கல்யாணம் நடக்கப் போகுது. அவன் வீட்டில நடந்தா அபியால வரமுடியாதுன்னு நினைச்சு தான் எங்க வீட்டில வைக்கிறோம். அதுக்கும் நீங்க தடை போடுறீங்க, சரயு அபியை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கா. நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் என்றான் அவன்.

 

 

“தம்பி இந்தாங்க காபி என்று நீட்டினார் கற்பகம். “அவர் பேசினதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, அவர் விவரம் புரியாம பண்ணிட்டு இருக்கார். இன்னும் எங்க காலத்துல எங்க மாமியார் கத்துக் கொடுத்த பழக்கம் அவருக்கு மாறலை. நீங்க ஒண்ணும் நினைக்காதீங்க, நாளைக்கு நானும் அபியும் வர்றோம் என்று சொல்லி அவன் வயிற்றில் பாலை வார்த்தார்.

 

 

“அப்போ நான் வரவேணாமா என்றார் வைத்தியநாதன். “நீங்க தான் கல்யாண வேலையா வெளிய போறதா சொன்னீங்க போகலையா என்றார் அவர். “அட ஆமாம் மறந்துட்டேன், நீங்க போயிட்டு வாங்க என்று தன்னையறியாமல் சம்மதம் கொடுத்துவிட்டார்.

 

 

அதற்குள் உள்ளே கார்த்திகா அபியை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள். கற்பகம் அபியின் அறையில் அவளை விட்டு சென்றதும் அவள் அறைக்குள் நுழைந்தாள் கார்த்திகா. அபி அவள் கைபேசியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். அவள் பின்னே சென்று நின்ற கார்த்தி அவள் தோளை தட்ட அபி கைபேசியை தவறவிட கார்த்திகா அதை பிடித்து அவளிடமே கொடுத்தாள்.

 

 

அபியை பார்த்து அவள் சிநேக புன்னகை பூக்க பதிலுக்கு அபி அவளிடம் எப்போது வந்தார்கள் என்று கண்களாலே ஜாடை காட்டினாள். “இப்போ தான் வந்தோம், அப்புறம் நீ ரொம்ப பிஸியா இருக்கே போல. உன் அவர்கூட ரொமான்ஸா போன்ல என்றதும் அபியின் முகம் சிவந்தது.

 

 

இல்லை என்பது போல் முதலில் தலையை ஆட்டி பின் ஆம் என்பது போல் ஆட்டினாள். “கள்ளி என்கிட்ட மறைக்க முடியுமா என்று அவள் முகவாயை இடித்தாள் மற்றவள். ‘அவரும் வந்திருக்காரா, எதுவும் சொல்லலையே என்று சைகையில் கேட்டுக் கொண்டு அவள் பார்வை வெளியே சென்றது.

 

 

“மேடம் மேடம் இருங்க உங்க அவர் எல்லாம் வரலை, நாங்க மட்டும் தான் வந்திருக்கோம். நாளைக்கு சரயுவுக்கு எங்க வீட்டில விருந்து அதுக்கு உங்களை எல்லாம் அழைச்சுட்டு போக தான் வந்தோம். உங்க அவர் வந்தா அவர் மாமனார் ரொம்ப முறைக்கிறாராம் அதான் வரலை.

 

 

“உங்க அவர் வீட்டில இருக்கார், நாளைக்கு உங்களை எப்போ பார்ப்போம்ன்னு கனவு காண்கிறார் வீட்டில். அவரை ரொம்ப காக்க வைக்காமே சீக்கிரமா வந்து சேருங்க ஓகே வா என்று அவளிடம் பேசி மேலும் அவளை கிண்டல் செய்தாள். பின் கல்யாணம் கார்த்திகாவும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

_____________________

 

 

விருந்து நடக்க போகும் அந்த ஞாயிறு எந்த சலனமும் இல்லாமல் விடிந்தது. வைபவ் சாந்தியையும் நந்துவையும் விரட்டிக் கொண்டிருந்தான் வேகமாக கிளம்பும் படி, அதைக் கண்டு கொதித்த அவன் தங்கை வேகமாக அவனருகில் வந்தாள்.

 

 

“எங்களை மட்டும் சொன்னியே காலையிலேயே தூங்கவிடாம எழுப்பினியே நீ முதல்ல குளிச்சியா, இப்படி கேவலமா ஒரு சட்டை போட்டிடிருக்க. முதல்ல போய் குளி, குளிச்சுட்டு கிளம்பி வா. இல்லைன்னா நான் உன்கூட வரமாட்டேன்” என்றாள் அவள்.

 

 

“அம்மா பாருங்கம்மா இவளை, நீங்க எங்களை மீன், கறி வாங்க கடைக்கு அனுப்புவீங்க. அதெல்லாம் வாங்கி கொடுத்திட்டு நான் குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிக்கலாம்ன்னா இவ எப்படி பேசுறா பாருங்க. நான் என்ன உன்னை மாதிரி ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமா குளிக்கறேன். ரெண்டு வேளை குளிக்கறவன், நேற்று இரவு நன்றாக குளித்துவிட்டேன். நீ உன் வேலையை பார்” என்று பதிலடி கொடுத்தான் அவன்.

 

 

“இந்த சட்டைக்கு என்ன குறை” என்றான் அவன் மேலும். “எப்படியோ போ, தயவுசெய்து எங்களை ஆட்டோல அனுப்பிடு. உன்கூடலாம் நான் வரமாட்டேன்” என்றாள் அவள்.

 

 

அப்போது தான் அவன் எடுத்த வைத்திருந்தவற்றை நன்றாக கவனித்தாள் அவள். “அம்மா இங்க பாரேன் அண்ணாவை, புது சட்டை, பேண்ட், சென்ட், இதென்ன தலைக்கு போடுற ஜெல். ரொம்ப பெரிய முன்னேற்றம் அண்ணா. கலக்குற போ எல்லாம் அண்ணிக்காவா. நடத்து நடத்து” என்று அவனை ஓட்டினாள்.

 

 

“அம்மா இந்த வாயாடிக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்மா. அப்போ தான் வாய் அடங்கும், நல்லா பேசக்கத்துகிட்டாம்மா” என்றான் அவளை நோக்கியவாறே.

 

 

“முதல்ல உன்னோட கல்யாணம் முடியட்டும் அப்புறம் எனக்கு பார்க்கலாம்” என்றாள் அவள். “என் கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் பண்ணிடணும்” என்றான் அவன் விளையாட்டாக ஆனால் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.

 

 

“முடியாது அண்ணா, எனக்கு நீயும் அண்ணியும் தான் அப்பா, அம்மா இடத்தில இருந்து எல்லாம் செய்யணும். எனக்கு அப்பா முகத்தை விட உன் முகம் தான் அண்ணா பதிஞ்சு போச்சு” என்றவளின் குரல் தழுதழுத்து.

 

 

“ஹேய் என்னடி பேச்சு இது, விடு உன்னை பார்த்து அவனும் கலங்குறான் பாரு. உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு நீங்க நல்லாவே இருப்பீங்க. முதல்ல உங்க அண்ணன் கல்யாணம் முடியட்டும். அவன்கிட்ட ஏதோ பேசி அவன் எப்படி கலங்குறான் பாரு” என்றார் சாந்தி.

 

 

“விடுங்கம்மா நான் இவளை ரொம்ப சின்ன பொண்ணுன்னு நினைச்சேன். எப்படி எல்லாம் பேசுறா பாருங்கம்மா, பெரிய பொண்ணாகிட்டாம்மா இவ. இவளை ஒரு நல்லவன் கையில சேர்க்கணும்மா” என்றான் கலங்கிய விழிகளுடன். “சொல்லு நந்து உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்” என்றான் அவன்.

 

“அண்ணா நீ பார்த்து யாரை கை காண்பிச்சாலும் நான் அவரை கட்டிக்குவேன். எனக்கு நீயே நல்ல மாப்பிள்ளையா பாருண்ணா” என்றாள் அவள். “ஏம்மா உனக்கு யாரையாச்சும் பிடிச்சிருந்தா சொல்லுடா” என்றான் அவனும் விடாமல். “என்னண்ணா நீ வேற அப்படி யாரையும் பிடிச்சிருந்தா இந்நேரம் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா” என்றாள் அவள்.

 

 

“பேசி முடிச்சிட்டீங்களா, என்னை நீங்க கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்களா. இல்லை நீங்களே நடத்திக்குவீங்களா. ரெண்டு பேரையும் பேசவிட்டா ஒண்ணு அடிச்சிக்கறீங்க. இல்லை இப்படி கொஞ்சிக்கறீங்க. நல்ல பிள்ளைங்க போங்க, கிளம்பற எண்ணமிருக்கா இல்லை நாளைக்கு போய்க்கலாமா” என்றார் சாந்தி.

 

 

“ஹேய் வாலு எல்லாம் உன்னால தான் என்கிட்ட வாய் பேசிட்டு இருக்க, என் வாயை பார்க்காம போய் கிளம்புற வழியை பாரு. நான் போய் ஆட்டோவை கூட்டிட்டு வர்றேன்” என்று வெளியில் சென்றான் வைபவ்.

 

அவர்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு அவன் மோட்டார் சைக்கிளில் அவர்கள் பின்னேயே சென்றான். கல்யாண் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அவனுக்கும் கல்யாணுக்கும் வேலை கொடுத்து அனுப்பினர் மாதவியும், சாந்தியும்.

 

 

இருவருமாக ஒரு பத்து முறைக்கு மேல் கடைக்கு அதை வாங்க இதை வாங்க என்று சென்று வந்தனர். “வைபவ்… டேய் எங்கடா போய்ட்ட என்று கல்யாண் அவனை தேடிக் கொண்டிருக்க இடையில் வழி மறித்த நந்து “கல்யாணம் நீ எங்க அண்ணனை தானே தேடுற, ரொம்ப கஷ்டம் நீ அவனை பார்க்க குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும் பரவாயில்லையா என்றாள்.

 

 

“ஏன் என்னாச்சு எங்க போனான் அவன் என்றான் கல்யாண். “அண்ணி வர்றாங்கல அதான் உரசி உரசி குளிக்க ஒரு அரை மணி நேரம், அதுக்கு அப்புறம் அவன் சென்ட் அடிச்சு மேக்அப் போட்டுன்னு அதுக்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். உங்களுக்கு எதுவும் வேலை இருந்தா போய் பாருங்க என்றாள் அவள்.

 

 

“இவன் எப்போ வெளிய வருவான், ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று யோசிக்க ஆரம்பித்தான் கல்யாண். நந்து சிறிது நேரம் கண்கள் மூடி யோசனை செய்தாள். “ஹ்ம்ம் அண்ணா ஒரு ஐடியா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்து குடும்ப சகிதமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

 

 

“வாங்க அத்தை, வாங்க அண்ணி என்று சம்மந்தமில்லாமல் அவள் கூற கல்யாண் அவளை புரியாமல் பார்த்தான். வர்றது சரயு வீட்டில இருந்து ‘இவ யாரை அத்தை, அண்ணின்னு கூப்பிடுறா என்று முழித்துக் கொண்டிருந்தான்.

 

 

அதற்குள் வைபவ் இருந்த அறைக்கதவு வேகமாக திறந்தது. கதவை திறந்தவன் ஆர்வமாக வெளியில் எட்டி பார்த்தான். நந்து இப்போது கல்யாணை அர்த்தத்துடன் பார்த்தாள்.

 

 

நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே அங்கு வந்த கார்த்திகாவை பார்த்து “வாங்கண்ணி, இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு அத்தை, அக்கா, மாமா எல்லாரும் வந்திருக்காங்க என்றாள்.

 

 

“ஆமா யாரை அத்தைன்னு கூப்பிட்ட என்றான் வைபவ் புரியாமல். “இவங்க தான் என்று சொல்லிஇந்திராவின் கைகளை பிடித்துக் கொண்டாள். “நீங்க தானே அன்னைக்கு என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாதே அத்தைன்னு கூப்பிடுன்னு சொன்னீங்க என்று சொல்லி அவர் கைகளில் அழுத்தம் கொடுத்தாள்.

 

 

“என்ன மாமா என்ன அக்கா நான் சொன்னது சரி தானே. ஆன்ட்டின்னு கூப்பிடறதுக்கு பதில் அத்தைன்னு கூப்பிடுறேன். நான் சரியா தானே சொல்லி இருக்கேன் என்றாள் அவள். மற்றவர்களுக்கு எப்படியோ நிர்மல் மிதந்து கொண்டிருந்தான். அவனையே அவள் மாமா என்று அழைத்தது போல் அவனுக்குள் ஒரு உற்சாக ஊற்று பீறிட்டு எழுந்தது. அவன் அன்னையை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டான்.

 

 

அவள் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த கல்யாண் அவளை பார்த்துக் கொண்டிருக்க வந்தவர்கள் திருதிருவென விழிப்பதை பார்த்து அவர்களுக்கு விளக்கினான். அதற்குள் விஷயம் புரிந்த வைபவ் அவள் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தான்.

 

 

“உனக்கு செல்லம் கொடுத்து கொடுத்து நீ ரொம்ப கெட்டு போய்ட்ட, முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி கிளப்பணும். இல்லைன்னா நீ என்னை ஒருவழியாக்கிடுவா என்றான் வைபவ்.

 

 

“அண்ணா காலையில என்ன சொன்னே, இப்போ என்ன சொல்ற மாத்தி மாத்தி பேசக்கூடாது. பேச்சு பேச்சா தான் இருக்கணும் என்றவள் கல்யாணிடம் திரும்பி, “கல்யாணம் நீ கேட்க மாட்டியா என்றாள் அவனிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

 

அவனும் அவளின் தலையில் ஒரு குட்டு வைத்தவன் “இந்த விஷயத்தில நான் வைபவ் கட்சி தான். ஏன்னா இவன் என் நண்பேன்டா என்று சொல்லி திரைப்படத்தில் வருவது போல் நண்பனை கட்டி பிடித்தான்.

 

 

“ஒண்ணு கூடிட்டீங்களா, இந்த ராம் எங்க போய்ட்டான். அவனாச்சும் எனக்காக பேசுறானான்னு பார்க்கறேன். டேய் ராமா கொஞ்சம் வாடா என்று மிக மரியாதையாக அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

“எதுக்கு ராமா ராமான்னு ஓலம் போட்டிடிருக்க, வைபவ் அண்ணா சொன்னது எல்லாம் காதுல விழுந்துச்சு. அண்ணா நீங்க ரொம்ப நல்ல முடிவெடுத்திருக்கீங்க, சீக்கிரமா இவளை புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைங்க. அப்போ தான் எனக்கும் நிம்மதியா இருக்கும். என்ன நந்து பார்க்குற, இவங்க என் அண்ணனுங்க என்று அவனும் வீரம் பட டயலாக் பேசினான்.

 

 

“போதும் நிறுத்துங்க, எல்லாரும் என்ன எனக்கு படம் காட்டுறீங்களா, சரயு அக்கா நீங்க எப்படி நீங்களும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ண போறீங்களா என்றாள்.

 

 

“ஹ்ம்ம் என்று யோசித்தவள் “ஆமாம் நந்து, நானும் உன் கல்யாணம் நடக்கணும்ன்னு தான் விரும்புறேன் என்றவள் நிர்மலை அர்த்தத்துடன் பார்த்தாள். “அடபோங்கப்பா நான் இங்க இருந்து கிளம்புறேன், நீங்க எல்லாரும் ஒண்ணு கூடிட்டீங்க. எனக்குன்னு பேச யாருமே இல்லை. நான் உங்களுக்கு தண்டனை கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன் என்றவள் உள்ளே விரைந்தாள்.

 

 

மற்றவர்கள் புரியாமல் விழிக்க தங்கையை அறிந்த வைபவ் “உங்க எல்லாருக்கும் சாப்பிட எதாச்சும் கொண்டு வரப்போறா, எல்லாரும் கவனமா இருங்க என்றான் வைபவ்.

 

 

நிர்மலோ ‘இவளுக்கு காபி தவிர வேற எதுவும் தெரியாதா. என்ன கொண்டு வரப்போறாளோ என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தான். அவளுக்குள் அவளை நினைத்து மெலிதான ஒரு ஆச்சரியம் இருந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று அவள் எப்போதுமே கலகலப்புடன் இருப்பது அவனுக்கு பிடித்தது.

 

 

அவர்கள் வீட்டிற்கு வந்த அன்று கூட அவள் அண்ணனை பற்றிய நினைவில் சில நொடிகள் கண்கள் கலங்கினாலும் அடுத்த நிமிடமே அவள் தன்னை மாற்றிக் கொண்டு கலகலத்தது அவன் எண்ணத்தில் வந்து போனது.

 

 

தான் மட்டும் ஏன் தன் இயல்பை இவள் முன் தொலைத்துவிட்டு நிற்க வேண்டும், அவளை போலவே என்ன நடந்தாலும் இது தான் என் குணம் என்று இருப்பது தானே சரி என்று தோன்றியது. எது நடந்தாலும் தன் இயல்பை தொலைக்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்.

 

 

உள்ளே சென்றவள் தட்டில் கோப்பைகளுடன் வெளியில் வந்தாள். நிர்மலை நோக்கி நேரே வந்தவள் “இந்தாங்க என்று அவனிடம் முதல் கோப்பையை நீட்டினாள். மனதுக்குள் அவன் மிகவும் மகிழ்ந்தான் என்று சொல்லவும் வேண்டுமா. (உண்மை தெரிந்தால் அவன் முகம் போகும் போக்கு எப்படி இருக்கும்).

 

 

‘ஆமா இவ எதுக்கு நமக்கு முதல்ல கொடுக்குறா என்று மனதில் நினைத்தவன் அதை மறைக்காமல் அவளிடம் கேட்டான். “ஏன்னா நான் என்ன செஞ்சாலும் நீங்க தான் சோதனை எலியா முதல்ல வர்றீங்க. அதான் உங்களுக்கு முதல்ல என்றாள் அவள்.

 

 

“புரியலியே என்றான் அவன். “அன்னைக்கு முதன் முதல்ல காபி போட்டப்ப வந்து சிக்குன்னு ஆளு நீங்க தான். இன்னைக்கும் நான் ஜூஸ் போட முயற்சி செஞ்சேன். இப்பவும் நீங்க இங்க இருக்கீங்க, அதான் உங்களுக்கு முதல்ல என்றாள் அவள்.

 

 

“என்னது நான் தான் சோதனை எலியா, அப்போ அன்னைக்கு சொன்னது எல்லாம்… என்று இழுத்தான் அவன். “இன்னுமா புரியலை அதெல்லாம் பொய், நான் அன்னைக்கு தான் முதல் தடவையா காபியே போட்டேன் என்று நமுட்டு சிரிப்புடன் மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

‘என்னை கலாய்க்கிறதே இவளுக்கு வேலையா போச்சு என்று மனதிற்குள் அவளை செல்லமாக வைதாலும், அவனுக்குள் இனித்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அபியும் அவள் அன்னையும் வந்து சேர்ந்தனர். வைபவின் கண்கள் ஒரு எதிர்பார்ப்புடன் அபியையே நோக்கியது.

 

 

அவளோ வந்தவள் நேராக கார்த்திகாவிடம் வந்து நின்றாள். சாந்தியும் மாதவியும் வந்ததும் அவர்களுடன் சென்று நின்று கொண்டாள். வைபவ் அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட கல்யாண் அவனருகில் வந்தான்.

 

 

“என்னடா அபி உன்னை பார்க்கலைன்னு இப்படியா பார்க்குறது. பாரு இந்த இடமே நிரம்பி வழியுது, ஆனாலும் நீ பாவம் கஷ்டப்பட்டு அழகா டிரஸ் பண்ணி அதை நீ பார்க்க வேண்டிய ஆளு பார்க்கலைன்னா கஷ்டமா தான் இருக்கும் என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருந்தான் கல்யாண். வைபவ் பாவமா முழித்துக் கொண்டிருந்தான்.

 

 

எல்லோரும் வரவேற்ப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அபியை சரயுவுக்கு அறிமுகப்படுத்த அவளை பார்த்து சினேக புன்னகை பூத்தாள் அபி. அபியை பார்த்ததும் சரயு வைபவை பற்றி வளவளத்துக் கொண்டிருந்தாள்.

 

 

வைபவை பற்றி சரயு சொன்னதை ஒரு வித ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அபி. எல்லோரிடமும் சந்தோசமாக பார்த்துக் கொண்டிருந்தவள் வைபவ் இருந்த பக்கம் திரும்பக் கூட இல்லை.

 

 

வைபவ் வெறுத்து போய் எழுந்து உள்ளே சென்று விட்டான். அபி அவள் அன்னையை தேடி சமையலறைக்கு சென்ற சமயம் சரயுவின் அருகில் வந்த கல்யாண் “சரயு பாவம் வைபவ் அபியை பார்க்க தவியா தவிச்சுட்டு இருக்கான். அவங்களை தனியா சந்திக்க வைக்க எதாச்சும் ஏற்பாடு பண்ணனும் என்ன செய்யலாம் என்றான் அவன்.

 

 

சரயுவின் அருகில் இருந்த முத்து ஒரு யோசனை சொல்ல இருவரையும் தனியே சந்திக்க வைக்க நண்பர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். எல்லோரும் மதிய உணவு அருந்தி முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பாத்திரங்களை ஒழித்து போட்டு தேய்த்துக் கொண்டிருக்க அபியும் அவள் அன்னையும் பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தார்கள் பின்னில் அமர்ந்து.

 

 

அது தான் தக்க சமயம் என்று நினைத்த சரயு அபியை தேடி சமையலறை சென்றவள் அவளிடம் பேச வேண்டும் என்று ஜாடை செய்து கார்த்திகாவையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

 

 

“அபி வாங்களேன், நாம எல்லாரும் போய் மாடியில இருக்கற அறையில உட்கார்ந்து பேசிட்டு இருக்கலாம் என்று சொல்லி அவளை அழைத்து சென்றாள். பெண்கள் மூவரும் அமர்ந்திருக்க சரயுவும் கார்த்திகாவும் அபியிடம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அபி.

 

 

சமயங்களில் இருவருக்கும் சைகையில் பதில் கொடுத்துக் கொண்டுமிருந்தாள். யதேச்சையாக முத்துவும், கல்யாணும் அவரவர் துணைகளை கூப்பிட ஒருவர் மாற்றி மற்றொருவர் செல்ல, செல்லும் முன் அவளை அங்கேயே இருக்குமாறும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாக கூறி சென்றனர் இருவரும்.

 

 

கல்யாணின் அறையில் அமர்ந்து கொண்டு கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த வைபவை கல்யாண் அழைத்தான். கைபேசியை அணைத்துவிட்டு வந்தவன் “என்னடா என்றான் கல்யாணிடம்.

 

 

“வைபவ் மேல இருக்கற அறையில நீ கேட்டிருந்த அந்த புத்தகம் இருக்கு போய் எடுத்துக்கோடா. நான் இதோ வந்துடறேன் என்று பேச்சுவாக்கில் சொல்வது போல் அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

‘நான் எப்போ இவன்கிட்ட புத்தகம் கேட்டேன், இவன் என்ன புத்தகம் பற்றி சொல்றான். சரி மேல போய் பார்போம் என்று நினைத்தவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறினான். மாடியில் இருந்த அறைக்குள் நுழைந்த பின்னே கல்யாண் எதற்கு அப்படி சொன்னான் என்று புரிந்தது அவனுக்கு.

 

 

வாசலில் நிழலாடுவதை பார்த்து நிமிர்ந்த அபி சத்தியமாக வைபவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அபி அவனையே பார்த்துக் கொண்டிருக்க வைபவ் உள்ளே வந்தான்.

 

 

“என்னாச்சு அபி எதுக்கு என்னை பார்க்குறதை தவிர்க்குற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, எல்லாரையும் பார்த்து சந்தோசமா இருக்கே. ஆனா என்னை மட்டும் பார்க்கவே மாட்டேங்குற என்றான் ஒருவித ஏக்கத்துடன்.

 

 

அபியோ அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ அவளுக்கு தன்னுடன் பேச விருப்பமில்லை போல என்று நினைத்து வைபவ் அங்கிருந்து கிளம்ப திரும்பினான். அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்திருந்தவள் அவன் செல்வது பொறுக்காமல் அவன் கைகளை பிடித்தாள்.

 

 

கையை பிடித்தவளின் கண்களை பார்க்க அது வெட்கத்தை பிரதிபலித்தது. ‘அபிக்கு வெட்கமா என்னை பார்த்தா, வெளி போ என்று அன்று மருத்துவமனையில் சொல்லியவளா இவள்!! உங்களை யாரும் மயக்க வரலை என்றவளா இவள்!! என்று ஆச்சரியத்துடன் அவளையே பார்த்தான் வைபவ்.

 

 

திரும்பி அவள் விழியோடு அவன் விழிகள் கலக்க அவளின் கண்களோடு உறவாடிக் கொண்டிருந்தான் அவன். எப்பொழுது அவள் கைகளை பிடித்தான் என்பதை அறியாமல் விழியகல பார்த்துக் கொண்டிருந்தவளையே விழுங்கிக் கொண்டிருந்தான் அவன்.

 

 

தாளமுடியாமல் அவளை இழுத்து அணைத்தவன் அவளை முத்தமிட துவங்கினான். சில மணித்துளிகள் அவளிடம் தன்னை தொலைத்திருந்தவன் திடுக்கிட்டு போனான். ஏனெனில் அபி அவனை பிடித்து தள்ளி விட்டிருந்தாள். கீழே விழுந்தவன் அதிர்ச்சியுடன் எழுந்து அபியை பார்க்க அவளிடம் இருந்து “ஆணாம் ஆணாம் என்ற முனகல் ஒலி கேட்க அதிர்ச்சியுடனே அவளை உலுக்கினான்.

 

 

அவளோ அவனிடம் இருந்து திமிறிக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் “ஆணாம் ஆணாம் என்ற மெல்லிய ஒலி கேட்க அவள் ஒரு ஆக்ரோஷத்துடன் அவனை பிடித்து தள்ளிக் கொண்டிருந்தாள். சில மணி துளிகளில் வாயில் நுரை தள்ள அவள் மயங்கி சரிந்தாள்.

 

 

அவள் கீழே விழாமல் பிடித்துக் கொண்ட வைபவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சத்தம் போட்டு அழைக்கவும் அவனால் முடியவில்லை, மெதுவாக அபியை தாங்கியவாறே சென்று அவளை கட்டிலில் கிடத்தினான்.

 

 

வெளியில் சென்றவன் கல்யாண் என்று அழைக்க வைபவின் குரல் வித்தியாசமாக ஒலிப்பது போல் தோன்ற வேகமாக படியேறி மாடிக்கு வந்தான் கல்யாண். அவன் பின்னோடே கார்த்திகாவும் வர “என்னடா எதுக்கு கூப்பிட்ட என்று கேட்டவாறே வந்தவனிடம் எதையுமே கூற முடியாமல் திகைத்திருந்தான் வைபவ்.

 

 

நண்பனின் கையை பிடித்து வேகமாக அவன் இருந்த அறைக்குள் நுழைந்தவன் அபியின் கோலத்தை காட்ட என்ன ஏது என்று அவன் கேட்பதற்குள் அபியின் உடல் தூக்கி தூக்கி போடுவதை பார்த்து வைபவ் மனதில் வலி எழுந்தது.

 

 

“வைபவ் எதையும் யோசிக்காதே முதல்ல அபியை தூக்கு அவளை மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லலாம் மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம் என்றவன் வேகமாக கட்டிலின் அருகே சென்றான்.

 

 

இருவருமாக அவளை தூக்கிக் கொண்டு கிழே இறங்கி வர அபியின் அன்னை பதட்டமானார். “என்னாயிற்று என்று அவர் கேட்க வைபவ் திகைத்து நிற்க கல்யாணோ “எல்லாரும் பேசிட்டு இருந்தோம், பேசிட்டு இருக்கும் போதே அபிக்கு திடிர்னு இப்படி ஆகிப் போச்சு என்றான்.

 

 

அங்கிருந்த எல்லோருமே பதட்டமாகி இருந்தனர், நிர்மல் வேகமாக வெளியில் சென்று காரை எடுக்க அவனோட முன்னில் ஏறிக்கொண்டான் கல்யாண். அபியின் அன்னையும் கார்த்திகாவும் அபியை தாங்கியவாறு நடுவில் அமர்ந்து கொள்ள வைபவ் தவிப்புடன் பின்னால் ஏறிக்கொண்டான்.

 

 

அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று அவளை சேர்த்துவிட்டு வெளியே காத்திருந்தனர் எல்லோரும். அபியின் அன்னையிடம் சென்ற வைபவ் “அத்தை நான் ஒண்ணு கேட்பேன், பதில் சொல்வீங்களா என்றான்.

 

 

அவர் லேசாக தலையை ஆட்டியவாறே என்ன சொல்லப் போகிறார் என்பது போல் பார்த்தார். “அபிக்கு இதுக்கு முன்ன இந்த மாதிரி வந்திருக்கா என்றான். அவர் சற்று யோசிக்க ஒரு கணம் அவர் முகத்தில் திகைப்பும் அதிர்ச்சியும் வந்து போனது.

 

 

“வந்திருக்கு இதுக்கு முன்ன ரெண்டு தடவை இப்படி வந்திருக்கு என்றார் அவர். “எப்போ என்று அவன் அடுத்த கேள்வியை முன் வைத்தான். “அபியோட சி…சிறு வயசுல ஒரு முறை அப்புறம் எங்க சின்ன பொண்ணு கல்யாணம் முடிஞ்சு ஒரு முறை வந்திருக்கு என்றார்.

 

 

“எதனால அப்படி நடந்துச்சு… என்று அவன் கேட்கும் போதே அவர் முகம் மாற அதற்குள் மருத்துவர் வெளியில் வந்தார். மருத்துவர் அபியின் அன்னையை தனியே அழைத்து சென்று ஏதோ பேசினார்.

 

 

சற்று நேரத்தில் மீண்டும் அபியை பார்வையிட சென்றவர் வெளியில் வந்து “அவங்களுக்கு ஏதோ அதிர்ச்சி அதான் இப்படி ஆகியிருக்கு, இப்போ கண்ணு முழிச்சுட்டாங்க நீங்க போய் பாருங்க என்றார். அபியின் அன்னை வேகமாக உள்ளே சென்றார், கார்த்திகா, நிர்மல், கல்யாணும் கூட உள்ளே சென்று அவளை பார்த்தனர். வைபவோ தயங்கியவாறே வெளியிலேயே நின்றுவிட்டான்.

 

 

கண் விழித்த அபியோ சுற்றி நின்றவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசலை நோக்கினாள். அவள் கண்கள் வைபவையே தேடுகிறது என்பதை நொடிப்பொழுதில் கண்ட கல்யாண் வேகமாக வெளியில் சென்றான். “என்னடா இங்க நிற்குற, உள்ள வா என்றான் கல்யாண்.

 

 

“நான் வரலைடா, எனக்கு அவளை பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. என்னால தான் அவளுக்கு இப்படி ஆகிபோச்சோன்னு தோணுது என்றான் வைபவ். “இங்க அபி உன்னை தான் தேடுறாங்க, சுத்தி அத்தனை பேரு இருந்தும் அவ உன்னை தான் தேடுற, நீ வா என்று சொல்லி அவனை இழுத்து சென்றான்.

 

 

வைபவ் உள்ளே நுழைந்ததை கண்ட அபியின் முகம் மலர்வதை கண்டு அவனும் சந்தோஷித்தான். அபியின் அன்னை அவளிடம் “என்னடா அபி திடிர்னு உனக்கு என்னாச்சு என்று சைகையில் வினவ வைபவின் முகம் இருண்டது. “என்ன ஆன்ட்டி நீங்க அவங்களே சோர்வா இருக்காங்க, இப்போ போய் இதெல்லாம் கேட்டுட்டு அபி எங்க கூட பேசிட்டு இருக்கும் போது திடிர்னு இப்படி ஆகிபோச்சு

 

 

“நீங்க கண்டதும் போட்டு யோசிக்காதீங்க, அபிக்கு சரியாகிடும். என்ன அபி இது இப்படி எங்க எல்லாரையும் பயமுறுத்திட்டியே என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாக உரைத்துவிட்டு அபியை பார்த்தாள் கார்த்திகா.

 

 

அவளோ நாம் வைபவிடம் தானே கடைசியாக பேசிக் கொண்டிருந்தோம் என்று எண்ணியவள் மெதுவாக நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ குற்றவுணர்வுடன் நின்றான். ஆனா நாங்க ரெண்டும் பேரும் தான் இருந்தோம், அப்புறம் என்னாச்சு என்று சிந்தித்தவளுக்கு மேலே எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை.

 

 

அதற்கு மேல் அங்கிருந்தால் அவனுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருக்க அபியிடம் ஒரு கண்ணசைவில் விடைபெற்று வெளியில் சென்று விட்டான். சென்றவன் நேராக அங்கிருந்த வேறு ஒரு மருத்துவரிடம் சென்று நீண்ட நேரமாக பேசிவிட்டு பின் ஒரு தெளிவுடன் வெளியில் வந்தான்.

 

 

காக்க வைத்தாய்

உன்னை தேட வைத்தாய்

பார்க்க மாட்டாயோ

என்று ஏங்க வைத்தாய்…

 

கண்டதும் உன்

முகம் நாணத்தில்

நிலம் நோக்க

களங்கமில்லா உன்

விழிகளை கள்ளுண்ணும்

வண்டாய் மாறி

களித்தேன்… உன்னுள்

தொலைந்து போனேன்…

 

சட்டென்ற கலவரத்தில்

கலங்கி போனேன்

உன் நிலை கண்டு

வருந்தி போனேன்…

நானோ காரணம் என்று

நாணிப் போனேன்…

 

 

 

Advertisement