Advertisement

அத்தியாயம் –2

 

 

“ஹலோ கல்யாண் எங்கடா இருக்க என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம வெளிய போய் சாப்பிடலாமா என்றான் வைபவ்.

 

 

“நான் ஒருமணிகெல்லாம் சாப்பிட்டேன்டா, நீ இன்னுமா சாப்பிடாம இருக்க, மணி நாலரை ஆகப் போகுது என்றான் கல்யாண். “எனக்கு சாப்பிட்டா தான் எதுவும் பேச முடியும், நீயும் கிளம்பிவா என்று சொல்லி இருவரும் வழக்கமாக செல்லும் அந்த ஒட்டலுக்கு வரச்சொல்லிவிட்டு போனை வைத்தான் அவன்.

 

 

வைபவ் முதலில் ஓட்டலை அடைந்தவன் ஆளுக்கொரு வடை செட் சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு மசால் தோசையும் சொல்லிவிட்டு காத்திருக்க கல்யாணும் தாமதியாமல் வந்து சேர்ந்தான்.

 

 

“என்னடா சொல்லிட்டியா இல்லை இனிமே தானா என்றவனிடம் சொல்லியாச்சு என்பதாய் தலையசைத்தான் வைபவ். அவர்கள் சொல்லியிருந்த உணவு வகைகள் வர மளமளவென சாப்பிட ஆரம்பித்தான் வைபவ். ‘ரொம்ப பசியா இருப்பான் போல என்று நினைத்துக் கொண்டு அவன் வடையை சாப்பிட்டான் கல்யாண்.

 

 

சாப்பிட்டு முடித்ததும் கல்யாணுக்கு ஒரு காபி சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு ஜூஸும் சொல்லிவிட்டு அப்போது தான் நண்பனின் பக்கம் திரும்பினான் வைபவ்.

 

 

“என்னடா காலையில ஒரு பொண்ணை பத்தி சொன்னியே அங்க போகலையா என்று விசாரித்தான் கல்யாண். “அதை ஏன்டா கேக்குற இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்டா, முதல்ல கார்த்திகிட்ட வாங்கி கட்டிகிட்டேன், ரெண்டாவது அந்த அபிகிட்ட என்றான் அவன் வருத்தத்துடன்.

 

 

“என்னடா சொல்ற, ரித்தி உன்னை என்ன சொன்னா. இதுக்கு தான் அவகிட்ட நீ போய் எதுவும் பேசாதேன்னு சொன்னேன். அவளுக்கு ரொம்பவும் வாய் அதிகமாகிடுச்சு என்ற கல்யாண் இப்போது கோபத்தில் இருந்தான்.

 

“டேய் நீ எதுக்கு இப்போ டென்சன் ஆகுற, அவ மட்டும் திட்டுனான்னா சொன்னேன். அந்த பொண்ணு அபியும் தான் என்னை திட்டினா என்று மருத்துவமனையில் நடந்த விஷயத்தை அவன் கூறினான்.

 

 

“டேய் நீ அந்த பொண்ணு மேல கோபப்பட்டு பேசி இருக்க அதான் அந்த பொண்ணு அப்படி பேசி இருக்கும் நினைக்கிறேன், விடுடா எதுக்கு கவலை படுற என்றான் கல்யாண்.

 

 

“இல்லை எனக்கு காதலுக்கு, கல்யாணத்துக்கும் தான் ஒத்துவராதுன்னு நினைச்சேன். எனக்கும் பொண்ணுங்களுக்கும் கூட ஒத்துவராதுன்னு ரொம்ப நல்லா புரியுதுடா. என்னோட வாழ்க்கை வடிவேல் பாணில சொல்லணும்னா ககக்கபோ தான் என்றான் அவன்.

 

 

அவன் பேச்சில் ஒரு வெறுமை இருந்ததை கல்யாண் கவனித்துவிட்டான். “டேய் அப்படி எல்லாம் ஏன் நினைக்கிறடா, நீ பார்க்க தான் முரடா தெரியறவன், உன் மனசு பலாசுளை மாதிரிடா. உன்கூட இருக்க எனக்கு தெரியாதா நீ யாருன்னு. உன் மனசை புரிஞ்ச ஒரு பொண்ணு கண்டிப்பா உன்னை தேடி வருவாடா என்றான் அவன் ஆறுதலாக.

 

 

“எதுக்கு என்னை தேடி வரணும் என்றான் அவன். “உன்னை கல்யாணம் பண்ணிக்க என்றான் கல்யாண். “கல்யாணமே எனக்கு இனி இல்லை, எனக்கு அது சரியா வராது கல்யாண் என்றான் வைபவ்.

 

 

“நீ இன்னும் ஷர்மியை நினைச்சுட்டு இருக்கியா என்றான் கல்யாண். “அவளை நான் ஏன் நினைக்கனும், என்னை பொழுது போக்குக்காக காதலிச்சவளை நான் இன்னமும் நினைச்சுட்டு இருப்பேன்னு நீ நம்புறியாகல்யாண் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஜூஸும் காபியும் வர இருவரும் பேச்சை நிறுத்தினர். சப்பிட்டதிற்கு பணம் கொடுத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

 

 

“அப்புறமும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க, அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்கடா என்றான் கல்யாண். “நீயும் ஏன்டா இப்படி பேசற, நான் அவங்களுக்காக தானே பொண்ணு பார்க்க ஒத்துக்கிட்டு போய் பார்த்தோம். முதல்ல பார்த்த பொண்ணு நிச்சயத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது அவ காதலிச்சவனோட ஓடி போயிருச்சு.

 

 

“ரெண்டாவது பார்த்த பொண்ணுகூட நிச்சயமும் நல்லபடியா தான் நடந்துச்சு. அந்த பொண்ணு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னதுக்கு நீ தான்டா காரணம் என்று அவனுக்கு முன்னே கல்யாண் கூறினான்.

“கல்யாண் அந்த பொண்ணு எதிர்பார்க்கற மாதிரி என்னால இருக்க முடியலைடா. கல்யாணத்துக்கு முன்ன வெளிய போறதுகூட என்னால ஒத்துக்க முடிஞ்சுது, ஆனா அந்த பொண்ணு என்கிட்ட எதிர்பார்த்த சின்ன சின்ன சந்தோசத்தை என்னால கொடுக்க முடியலைடா என்றான் வேதனையாக.

 

 

“நீ எந்த உணர்ச்சியும் இல்லாதவன் மாதிரி இருந்ததுனால தான் அந்த பொண்ணு உன்னை விட்டு போனா. நான் தெரியாம தான் கேட்குறேன், நீ இப்படியேவா இருக்க முடியும். கல்யாணம் ஆனா இதெல்லாம் நடக்காதா என்றான் கல்யாண்.

 

 

“கல்யாண் நீ சொல்ற எதுவும் எனக்கு புரியாம இல்லை, என்னால அப்படி எல்லாம் இருக்க முடியலைடா, ஒருவேளை அதுக்கு என்னோட குற்றஉணர்வு காரணமா இருக்கலாம். ஷர்மி வேணா என்னை காதலிக்கறது போல நடிச்சு இருக்கலாம். நான் உண்மையான காதலோட தான் இருந்தேன்.

 

 

“இப்போ தானே அவ நினைப்பு உனக்கு இல்லைன்னு சொன்ன என்றான் கல்யாண். “அவ நினைப்பு இல்லைன்னு தான் சொன்னேன், ஆனா அந்த ஏமாற்றம் அது கொடுத்த வலி தான் நான் இப்படி இருக்கேன் என்றான் வைபவ்.

 

 

“அப்போ கடைசியா பார்த்த அந்த பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்கலை என்றான் கல்யாணும் விடாக் கண்டனாக. “அந்த பொண்ணுகூட தனியா பேசும் போது அது வேற யாரையோ விரும்பறதா சொல்லிச்சு. அதான் கல்யாணம் வேணாம்னு நானே நிறுத்திட்டேன் என்றான் அவன்.

 

 

“விடுடா கல்யாணம் எனக்கு ஒத்து வராது, கல்யாணம் பண்ண நீ மட்டும் இப்போ சந்தோசமாவா இருக்க. நீயும் கார்த்தியும் சீக்கிரமா ஒண்ணு சேருங்க. எனக்கு அது போதும் என்றான் வைபவ்.

 

 

“கார்த்திக்கும் எனக்கும் இடையில இருக்கறது சின்ன சண்டை தான் ரெண்டு பேரும் ஒரு ஈகோவில தான் பிரிஞ்சு இருக்கோம். நான் என் ஈகோவை விட்டுக் கொடுத்தா கூட அவ விட்டு கொடுக்க மாட்டா. அவளா என்னைக்கு மனசு மாறி வர்றான்னு பார்போம் என்றான் கல்யாண் பெருமூச்சுடன்.

 

 

“கார்த்தி உன்னை பிரிஞ்சதுக்கு கூட நான் தான் காரணமா இருப்பானோன்னு தோணுதுடா, ஏன்னா என் ராசி அப்படி என்றான் வைபவ், இதை கேட்டதும் கல்யாண் திடுக்கிட்டான், உண்மை தெரிஞ்சு சொல்கிறானா இல்லை தெரியாமல் தான் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு நண்பனை சமாதானப்படுத்தினான்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவளுக்கு திமிர் அதிகம் அது குறைஞ்சா அவ தன்னை போல கிளம்பி வருவா. நீ எதை பத்தியும் யோசிக்காத என்றான் அவன். “சரி அது இருக்கட்டும் ஒரு நல்ல வரன் வந்திருக்கு உனக்கு பார்க்கலாமா என்றான் அவன்.

 

 

“கல்யாண் கொஞ்ச நாளைக்கு என்னை இப்படி விடு, எனக்கா என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுதோ அன்னைக்கு சொல்றேன், அதுவரைக்கு என்னை தொந்திரவு பண்ணாதடா. நீ நந்துவுக்கு மாப்பிள்ளை பாருடா, அவளோட படிப்பு இந்த வருஷத்தோட முடியுது. அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்டா என்றான் வைபவ்.

 

 

“நந்து சின்ன பொண்ணுடா அவ இப்போ தானே படிப்பை முடிக்க போறா, கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போகட்டும். சுயமா சம்பாதிக்கட்டும், தன் காலில் நிற்கட்டும்டா. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம். முதல்ல உன் கல்யாணம் முடியட்டும் என்றான் கல்யாண்.

 

 

“அதெல்லாம் நான் வேணாம்ன்னு சொல்லலை, ஆனா எங்க அப்பா இருந்திருந்தா என்ன செஞ்சு இருப்பாரோ அதைவிட நான் அவளுக்கு இன்னும் சிறப்பா செய்யணும்னு நினைக்கிறேன் கல்யாண். நாம பார்க்க தானே ஆரம்பிக்க போறோம். நாளைக்கே வா கல்யாணம் பண்ண போறோம் என்றான் ஒரு பொறுப்புள்ள அண்ணனாக.

 

 

“சரி கவலையை விடு ஊர்ல யாருக்காச்சும் பொண்ணு பார்க்கணும்னாலே நாம துளைச்சு எடுத்து வடிகட்டி தான் நம்ம மையத்துல பதிவோம். நம்ம தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்க மாட்டோமா என்றவன் பைக்கில் ஏறி உதைத்தான். “சரி ஆபீஸ்க்கு போகலாம் என்றுவிட்டு அவர்கள் அலுவலகம் நோக்கி விரைந்தனர்.

 

____________________

 

 

“ஏன்மா அவரை அப்படி சொன்ன, அவர் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து சேர்த்தார். நீ இப்படி முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டியே என்றார் மருத்துவர். அவள் பதிலுக்கு எதையோ எழுதிக் காட்ட அவர் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

 

 

அவளை டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப வாசலில் ஆட்டோ நின்றிருந்தது. அவள் மருத்துவரை கேள்வியாய் நோக்க அவர் வைபவ் தான் ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்.

 

 

“இப்போ எப்படிம்மா இருக்கு பரவாயில்லை காலையில ரொம்ப ரத்தம் போயிடுச்சு. அந்த தம்பிகூட ரொம்ப பயந்து போச்சு, உன்னை அது கையிலேயே தூக்கிட்டு வந்து இந்த ஆட்டோல ஏத்திவிட்டுச்சு.

 

 

“இப்போகூட நீங்க தனியா போகப் போறீங்கன்னு தான் என்னை உங்களுக்கு துணையா வைச்சுட்டு போயிருக்கார் தம்பி. நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நானே உங்களை கூட்டிட்டு போய் விட்டுறேன் என்றார் ஆட்டோ டிரைவர்.

 

 

“மறந்துட்டேன்ம்மா உங்க பை எடுத்து கொடுக்கும் போது இந்த கைபேசி ஆட்டோவில விழுந்துருச்சு போல, இந்தாங்க என்று அவளிடம் நீட்டினார் அவர். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முதல் முறையாக அவள் தவறு செய்துவிட்டாளோவென எண்ணி வருந்தினாள்.

 

 

‘தான் அவனை தப்பாக நினைத்துவிட்டோமோ, அவன் தான் கைபேசியை கூட எடுத்திருப்பான் என்று நினைத்துவிட்டேனே. இது வரை அவள் சந்தித்த ஆண்களில் அவன் வித்தியாசமாக தோன்றினான்.

 

 

அவனிடம் எப்படியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோவிற்கு அவள் செல்ல வேண்டிய முகவரியை எழுதிக் கொடுத்தாள். “என்னாச்சும்மா எழுதி தர்றீங்க என்றார் அவர்.

 

 

அவள் தனக்கு பேசமுடியாதென சொல்ல அவர் முகத்தில் ஒரு கணம் அவள் மேல் இரக்கம் வந்ததை அவர் முகம் காட்டியது. “போகலாமா என்பது போல் அவள் கையாட்ட அவர் அவள் செல்ல வேண்டிய முகவரிக்கு அவளை அழைத்துச் சென்றார்.

 

 

அவர் அவள் வீட்டிற்கு அழைத்து சென்று விட இறங்கிக் கொண்டவள் அவருக்கு பணம் கொடுக்க அவரோ வாங்க மறுத்துவிட்டார். அவள் அவரை கட்டாயப்படுத்தி பணத்தை கையில் திணித்துவிட்டு நன்றி என்பதாய் கை குவித்து வீட்டின் உள்ளே சென்றாள்.

 

 

“அபி என்னம்மா என்னாச்சு உனக்கு கைல கட்டு போட்டு இருக்கியே என்று ஓடி வந்து அவளை அணைத்தவாறே கூட்டிச் சென்றார் அவளுடைய அன்னை கற்பகம். அவள் சைகையில் தனக்கு ஒன்றுமில்லை என்பதாய் கூற கற்பகம் விழிகளில் இருந்து கண்ணீர் அரும்பியது.

 

 

அதற்குள் சத்தம் கேட்டு வெளியில் வந்த அவளுடைய தந்தை வைத்தியநாதன் “அபிம்மா என்னாச்சும்மா சொல்லுடா என்றார் அவர் அவளருகில் வந்து கனிவுடன் நின்று, அவள் காகிதம் எடுத்து எழுதிக் காண்பித்தாள் அவள்.

 

 

அவளை உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்தார் கற்பகம். ‘இவளுக்கு மட்டும் ஏன் இப்படி ஏதாவதொரு கஷ்டம் வந்துக் கொண்டிருக்கிறது. இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதா, உடன் பிறந்தவளும், உடன் பிறந்தானும் அவர்கள் வாழ்க்கை தான் பெரிதென்று போய்விட்டனர்.

 

 

‘இவளுக்கு எப்படியாவது ஒரு நல்லது செய்துவிட்டாலே போதும் இறைவா, அதை பார்த்து நாங்கள் நிம்மதியடைவோம் என்று மனமார இறைவனை பிரார்த்தித்தார் அவர். “என்ன கற்பகம் கடவுள்கிட்ட வேண்டுறியா என்றார் வைத்தியநாதன் அவளை படுக்க வைத்துவிட்டு வெளியில் வந்த கற்பகத்தை பார்த்து.

 

 

“ஆமாங்க நந்தனும் விமலாவும் அவங்க வாழ்க்கை தான் பெருசுன்னு அவங்க அவங்க வழியில போயிட்டாங்க. அபி நம்ம பொண்ணுங்க கூட பிறந்தவங்க விட்டுட்டு போன மாதிரி நாம அவளை விட்டு போகமுடியுமா, அவளுக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்க வேண்டாமா. அதை தான் யோசிச்சுட்டு இருந்தேங்க என்றார் அவர்.

 

 

“ஆமா அந்த வரன் பார்க்கற மையத்துல போய் பதிவு பண்ண போறேன்னு சொன்னியே, ஒரு எட்டு போய் பதிஞ்சுட்டு வந்துடு கற்பகம் என்றுவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

 

 

நான்கு நாட்கள் கழிய ஒரு நாள் காலை வைபவ் அலுவலகம் திறக்க வென்று விரைவாக எழுந்து கிளம்பிச் சென்றிருக்க அவனை தேடி அவன் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் அபிநயா.

 

 

‘இவளா இவ எதுக்கு இங்க வந்தா என்று யோசித்தவன் சட்டென்று அவள் கைகளை ஆராய்ந்தான், பரவாயில்லை கட்டு சின்னதா இருக்கு, காயம் குணமாகிருச்சு போல என்று நினைத்துக் கொண்டே அவளை ஆராய்ந்து கொண்டிருக்க அவன் முன்னே அவள் சொடக்கு போட்டாள்.

 

 

‘எவ்வளவு கொழுப்பு என்னையே சொடக்கு போயிட்டு கூப்பிடுறா இவளை… என்று பல்லைக் கடித்தவன் என்ன எனபது போல் கையசைத்தான். அந்த நேரம் கல்யாணும் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.

 

 

“யார் வைபவ் இவங்க, வரன் பதிய தனியா வந்து இருக்காங்க. அம்மா, அப்பா எல்லாம் கூட்டிட்டு வரலையா என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

 

“என்னடா வெளிய வைச்சு பேசிட்டு இருக்க அவங்களை உள்ளே கூப்பிடு என்றவன் “உள்ள வாங்க என்று சொல்லி அவளை அழைத்து உள்ளே அமர வைத்தான்.

 

 

“கல்யாண் இவங்க தான் அபி நான் சொன்னேன்ல அன்னைக்கு இவங்களுக்கு தான் அடிபட்டுச்சு என்று நண்பனிடம் சொல்லிவிட்டு அவளை கேள்வியாய் நோக்கினான். அவள் பணத்தை எடுத்து அவன் முன் நீட்டினாள், அவன் புரியாமல் பார்க்க அவள் காகிதம் எடுத்து எழுதிக் கொடுத்தாள்.

 

 

“அன்று நீங்க மருத்துவமனையில் என்னை சேர்க்கும் போது கட்டிய பணம் தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் உதவிக்கு என்னுடைய மனமாரந்த நன்றிகள். நான் உங்களை ஏதும் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் என்று அவள் எழுதி இருந்தாள்.

 

 

அன்னைக்கு என்னை அசிங்கப்படுத்திட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வந்து மன்னிப்பு கேட்குறா இவளை என்று நினைத்தவன் நன்றி என்று அதே காகிதத்தில் திரும்பி எழுதி அவளிடம் கொடுத்தான்.

 

 

“நீங்க இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க எதாச்சும் சாப்பிடுங்க என்ற கல்யாண் அவளுக்கு புரியுமோ புரியாதோ என்று சைகையில் கேட்க அவள் தனக்கு எதிரில் நின்று பேசுபவர்கள் வாயசைவில் இருந்து அவர்கள் பேசுவதை தெரிந்து கொள்ள முடியும் என்று சைகையிலேயே கூறினாள்.

 

 

அவள் அதெல்லாம் வேண்டாம் என்று அவனிடம் எழுதிக் காண்பித்தாள். வைபவோ ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான். அவள் கிளம்பும் முன் அவள் பறக்கும் முத்தம் கொடுப்பது போல் வாயில் கைவைத்து ஏதோ சைகை செய்ய வைபவுக்கு வேர்த்தது.

 

 

‘அம்மா தாயே நீ முதல்ல கிளம்பு, என்ன இந்த பொண்ணு முத்தமெல்லாம் கொடுக்குது என்று நினைத்துக் கொண்டான் அவன்.

 

அபிநயா அவனுக்கு நன்றி கூறும் பொருட்டே அப்படி செய்தாள் என்பது அவனுக்கு புரியவில்லை. அவள் கல்யாணிடமும் விடைபெற்று கிளம்பினாள். அவள் சென்றதும் கல்யாண் “டேய் என்னடா அந்த பொண்ணு வந்து காசு கொடுத்துட்டு போகுது, நீ என்னடான்னா அந்த பொண்ணையே வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க

 

 

“ஆமா பார்க்குறாங்க, போடா நீ வேற இவ பெரிய உலக அழகி இவளை பார்த்துட்டாலும், இவ சரியான ஊமை கோட்டான்டா பாரேன் கிளம்பும் போது பறக்க முத்தமெல்லாம் கொடுத்துட்டு போறாடா அவ. என்னையே சொடக்கு போட்டு கூப்பிடுறா அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்

 

 

“நீ என்ன லூசாடா, அந்த பொண்ணு என்ன உன் பெயரை சொல்லியா கூப்பிட முடியும், உன்னை அந்த பொண்ணு சொடக்கு போட்டு கூப்பிட்டதுல எந்த தப்புமில்லை. நீ எதுக்கு இவ்வளவு கொதிக்கற எனக்கு புரியவே இல்லையே

 

 

“அதுவும் இல்லாம எதுக்குடா அந்த பொண்ணை அப்படி சொல்ற, அதெல்லாம் தப்புடா ஒருத்தரோட குறையை சுட்டிக்காட்டி நாம அவங்களை பேசக் கூடாது வைபவ்

 

 

கதவு தட்டும் ஒலி கேட்க அவர்கள் திரும்பி பார்த்தனர், அங்கு அபிநயா நின்றிருந்தாள். நாம பேசினது இவளுக்கு கேட்டிருக்குமோ, ச்சே கேட்டிருக்காது இவளுக்கு தான் காது கேட்காதே.

 

 

ஆனா நாம இவளுக்கு எதிர்ல இருந்து பேசி இருக்கோமே ஒருவேளை நம்மை பார்த்திருப்பாளோ என்று எண்ணினான் வைபவ். “வாங்க என்ன விஷயம் போனதும் திரும்பி வந்து இருக்கீங்க என்றான் கல்யாண்.

 

 

அவள் மேஜையை சுட்டிக்காட்ட அவள் கைபேசியை அங்கு விட்டுச் சென்றிருந்தது புரிந்தது அதை எடுத்து கல்யாண் அவள் கைகளில் கொடுத்தான். அவள் ஒரு காகிதம் எடுத்து எதையோ எழுதிக் கொடுத்து விட்டு வைபவை ஒரு பார்வை பார்த்து விட்டு கல்யாணிடம் கூறிவிட்டுச் சென்றாள்.

 

 

‘இவ எதுக்கு இப்படி பார்க்குறா ஏதோ கொலைக்குத்தம் பண்ணவனை பார்க்குற மாதிரி என்று நினைத்துக் கொண்டான்.

 

 

“என்னடா என்ன எழுதி இருக்கா என்று சொல்லி கல்யாணிடம் சென்று நின்றான். “நீ சொன்னியே அவ உனக்கு பறக்கற முத்தம் கொடுத்தான்னு அது பறக்கற முத்தம் இல்லையாம், அவங்க சைகை மொழியில அவ தேங்க்ஸ்ன்னு சொல்லி இருக்காளாம் என்று சொல்லி அந்த காகிதத்தை அவனிடம் கொடுத்தான் கல்யாண்.

 

 

“நான் ஒண்ணும் உலக அழகி கிடையாது அவரிடம் சொல்லுங்கள் நான் ஒன்றும் அவரை மயக்க வரவில்லை நன்றி சொன்னதைக் கூட தப்பாக புரிந்து கொண்டார். அவருக்கு என்ன அவர் மனதில் மன்மதன் என்ற நினைப்பா என்று எழுதி இருந்தது.

 

 

‘இவளுக்கு ரொம்பவும் கொழுப்பு தான் என்று யோசித்தவன் தலையை சிலுப்பிக் கொண்டான். “என்னடா இப்பவாச்சும் புரிஞ்சுதா என்றான் கல்யாண். “இனிமே அப்படி பேசாதேடா என்றான் அவன் மேலும்.

 

 

“இல்லைடா நான் அப்படி பேசியிருக்க கூடாது தான் ஆனா எனக்கென்னமோ அந்த பொண்ணை பார்த்தா பேச முடியாத பொண்ணு மாதிரியே தோணலை. அதான் நான் அப்படி பேசிட்டேன். நான் பேசினது தப்பு தான் இனிமே அப்படி பேசமாட்டேன் என்றவன் யோசைனையில் ஆழ்ந்தான்.

 

 

‘என்னாச்சு இவனுக்கு அந்த பொண்ணை பார்த்தா பேச முடியாத பொண்ணு மாதிரியே தெரியலைன்னுசொல்றான். என்ன நடக்குது இங்க என்று யோசித்துவிட்டு அவன் வெளியில் கிளம்பிவிட்டான்.

 

 

கல்யாண் ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளே நுழைந்து அங்கிருந்த மேலாளரிடம் அவர்களுக்கு அடுத்தடுத்து திருமண ஆர்டர்கள் இருப்பதால் மொத்தமாக சரக்கு போடுவது பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

அவரிடம் பேசி முடித்துவிட்டு அவனுக்கு தேவையான சில சாமானை வாங்கவென்று அவன் திரும்ப கார்த்திகா உள்ளே நுழைந்தாள். இவனைக் கண்டதும் அப்படி நின்றுவிட்டாள் அவள்.

 

 

‘இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான், நான் போற இடமெல்லாம் வர வேண்டியதே இவன் வேலையா போச்சு. அன்னைக்கு அந்த லூசை அனுப்பி என்கிட்ட பேச வைச்சான். இன்னைக்கு நேர்லயே வந்துட்டானே என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

“கொஞ்சம் உன் எண்ணத்தை எல்லாம் நிறுத்தறியா, நீ போற இடமெல்லாம் நான் ஒண்ணும் பின்னாடியே வரலை. நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா உன் பின்னாடியே வர்றதுக்கு

 

 

“எனக்கு வேலை இருந்துச்சு அதான் வந்தேன். இந்த இடம் என்ன உனக்கு மட்டும் பட்டா போட்டா கொடுத்திருக்கு நீ மட்டும் தான் வரலாம்ன்னு ஏதாச்சும் சட்டமிருக்கா என்றான் அவன்.

 

 

‘அப்போல இருந்து இப்படி தான் நான் மனசுல நினைக்கிறதை எப்படி தான் கண்டு பிடிக்கிறானோ தெரியலை என்று நினைத்தவள், “நான் எதுவும் உன்கிட்ட கேட்கலையே என்றாள் அவள். “மரியாதையே உனக்கு வராதா கட்டின புருஷன்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா என்றவனை முறைத்தாள் அவள்.

 

 

“என்னடி முறைக்கிற அன்னைக்கு என்னடி பேசுன வைபவ்கிட்ட அவன் உனக்கு என்ன பண்ணான். நாம சேரணும்னு அவன் நினைச்சு உன்கிட்ட வந்து பேசினது தப்பா???

 

 

“அதை கூட விடு அவனை ஒரு நண்பனா நினைச்சு கூட நீ பேசாம, அவனை திட்டி அனுப்பி இருக்க. உன்னோட இந்த ஆணவம் தான் உனக்கு எதிரி, என்னைக்கு அது உன்னை விட்டு போகுதோ அன்னைக்கு தான் நீ அடங்குவ என்றான் அவன்.

 

 

“ஹலோ என்ன ரொம்ப பேசுற என்று அவள் பேச ஆரம்பிக்க “ஹேய் என்னடி கை நீட்டி பேசுற என்று அவன் சூழ்நிலை மறந்து கையை ஓங்கிவிட்டான். “சீய் என்று விட்டு அவன் நகர, “கொஞ்சம் நில்லு, என்ன ஆணவத்தை நீ என்கிட்ட பார்த்துட்டா, என்னோட அப்பா, அம்மா, கூட பிறந்த எல்லாரயும் விட்டுட்டு நான் உன்கூட வந்து வாழலை

 

 

“அந்த ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை நான் உன்கூட வாழ்ந்தது மறந்துட்டு பேசுறியா. உனக்கு எப்போமோ நான் பெரிசா இருந்தது இல்லை, உனக்கு உன் அம்மா, உன்னோட நண்பன்னு எப்போ பார்த்தாலும் உனக்கு அவங்க தான் முக்கியம். அவங்களுக்காக தானே நீ என்னை பிரிஞ்ச என்றாள் அவள்.

 

 

“தப்பா சொல்லாதே, நீ தான் என்னை விட்டு போன, நான் உன்னை பிரியணும்னு என்னைக்குமே நினைச்சது இல்லை. என்ன கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவை நான் முக்கியமா நினைக்கிறது தப்பா???

 

 

“வைபவ் எனக்கு மட்டும் தான் நண்பனா நீ எப்போல இருந்து இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச, நாம ஒண்ணா சேர்றதுக்கே அவன் தானே காரணம். அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு என்றான் அவன்.

 

 

“மறக்கலை, நாம ஒண்ணா சேர்ந்ததுக்கு அவன் தான் காரணம் நாம இப்போ பிரிஞ்சு இருக்கவும் அவன் தான் காரணம். இதோட அவனை பத்தி பேசாதே, அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்

 

 

“எப்போ பார்த்தாலும் அவனை பத்தி பேசி பேசியே என்னை உன்கிட்ட இருந்து விலக்கிட்ட, போதும் நிறுத்து. நீ என்னைக்கு அவனை விட்டு வர்றியோ அன்னைக்கு தான் நீ உருப்படுவ, அன்னைக்கு சொல்லியனுப்பு நான் உன்கூட வந்து குடித்தனம் பண்றேன் என்றாள் அவள் ஆத்திரமாக.

 

 

“இங்க பாரு நீயா என்னைக்கு என்னை புரிஞ்சு வர்றியோ அன்னைக்கு வா, அவனை விட்டுட்டு வான்னு நீ எனக்கு உபதேசம் பண்ணாத நான் சாகற வரை அவன் எனக்கு நண்பனா என்கூட தான் இருப்பான் போதுமா என்று பதிலுக்கு அவனும் சினந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

 

உன் ஓரவிழி பார்வையாலே

என்னை ஓரம் கட்டிவிட்டாயடி…

சகியே… என்னவளே…

என் மைத்துனன் எப்படியடி

இருக்கிறான்… அது தான்

உன் பிடிவாதம்… அவன் தான்

உன் உடன்பிறந்தவன்

ஆயிற்றே… நம் மணத்திற்கு

பின்னும் உன்னை பிரியாமல்

உன்னுடன் இருப்பவனாயிற்றே…

உன்னுள் கலந்தவனை விட்டு

உடன் பிறந்தானுடன்

என்னைவிட்டு சென்றுவிட்டாயடி…

 

Advertisement