Advertisement

அத்தியாயம் –19

 

 

மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம் பதித்தாள். கணவனுடன் நுழையும் போது ஏதோ ஒரு கூச்சமும், வெட்கமும், பெருமையும் என்று பலவித உணர்வுகள் அவளை சூழ்ந்து கொண்டது.

 

 

முத்து அவள் உடமைகளை எடுத்துக் கொண்டு அவளை அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அறைக்கு சென்று அவள் பெட்டியை கீழே வைத்துவிட்டு அறைக்கதவை அடைத்தவன் பிடிகளில் இருந்தாள் சரயு. “என்னங்க என்ன விளையாட்டு விடுங்க என்னை என்றவளின் குரல் அவன் காதுக்கு எட்டவேயில்லை.

 

 

அவன் தேவை முடிந்த பின்னே அவளை விடுவித்தான். “என்னங்க இப்படி அநியாயம் பண்றீங்க. வீட்டுக்குள்ள நுழையலை இப்படி பண்றீங்களே என்று சரயு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“வீட்டுக்கு தான் வந்துட்டியே பொண்டாட்டி, அதுவும் என்னோட அறைக்குள்ள உன்னை பார்த்ததும் என்னால நம்பவே முடியலை. எவ்வளோ நாளா கனவு கண்டுட்டு இருந்திருப்பேன். நீ எப்போ வருவன்னு அதான் நீ வந்ததும் எனக்கு சந்தோசம் தாங்கலை. அதான் அதை கொண்டாடிட்டேன் போதுமா” என்றான் முத்து.

 

 

“சரி நீங்க கீழே போங்க, நான் என்னோட உடை எல்லாம் எடுத்து அடுக்கி வைச்சுட்டு வர்றேன் என்றால் சரயு. “எதுக்கு நான் கீழே போகணும், நானும் உனக்கு உதவியா இருக்கேன் என்று அடம்பிடித்தான் அவன்.

 

 

“நீங்க தானே எனக்கு ரொம்ப நல்லா உதவி பண்ணுவீங்க, என் வேலை கெடும், நீங்க முதல்ல கீழே போங்க என்றாள் அவள். “சரி போறேன், கீழே போறேன், அப்புறம் நான் போயிட்டேன்னு வருத்தப்படாதே சரியா என்றுவிட்டு கதவை அடைத்துக் கொண்டு செல்வது போல் நடித்தான் அவன்.

 

 

அவன் சென்றுவிட்டதாக எண்ணி அவள் பீரோவை திறந்து அவள் துணிகளை அடுக்கலானாள். பின்னிருந்து அவளை வேகமாக அணைக்கவும் பயந்தவள் அணைப்பது அவன் என தெரிந்ததும் அமைதியடைந்தாள். “உங்களை… ஏங்க இப்படி பண்றீங்க… என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் அறைக்கதவு வேகமாக திறக்கப்பட்டது அண்ணா என்ற குரலுடன்.

 

பழைய ஞாபகத்தில் அண்ணனின் அறைக்கதவை தட்டாமல் நுழைந்துவிட்ட கார்த்திகா திருதிருவென்று விழிக்க முத்துவிடம் இருந்து வேகமாக பிரிந்த சரயு தள்ளி நின்றாள். “சொல்லும்மா கார்த்தி என்றான் முத்து. “சாரிண்ணா, அம்மா கூப்பிட்டாங்க அதான் வந்தேன். நீ அப்புறம் வாண்ணா என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

 

 

“உங்க தங்கச்சி முன்னாடி என் மானத்தை வாங்கிட்டீங்களே, இப்போ சந்தோசமா உங்களுக்கு என்று பொரிந்தாள் சரயு. “இல்லை சந்தோசமில்லை என்றவன் அவளருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு “இப்போ தான் சந்தோசம் என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.

 

 

‘இவர் இவ்வளவு சேட்டை எல்லாம் பண்ணுவாரா என்று அவனை பற்றிய சிந்தனைகளில் முழ்கினாள் அவள். திரும்பி வந்தவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை சுற்றிக் காட்டினான். பின்னிருந்த தோட்டத்தை கண்டவள் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது.

 

 

“இதெல்லாம் யாரோட ஐடியா, இந்த தோட்டம் சூப்பரா இருக்கே என்று பாராட்டினாள். “எங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம், எல்லாம் அம்மாவோட கைவண்ணம் தான் என்றான் முத்து. “அத்தை சூப்பர்ங்க உங்களையும் கவனிச்சு, இப்படி அழகான தோட்டம் வைச்சு அதை எப்படி அழகா பராமரிக்கறாங்க என்று வியந்தாள் அவள். “ஹ்ம்ம் இப்பவே மாமியார்க்கு பரிஞ்சாச்சா என்றா முத்து.

 

 

“ஏன் மாமியாரும் மருமகளும் ஒண்ணா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே என்று இடித்தாள் அவள். “அம்மா தாயே நீங்க எப்படி வேணா இருங்க அதுக்கு எதுக்கு நீ என்னை இந்த இடி இடிக்கிற என்றான் அவன். பின் மதிய உணவு உண்டு அவர்கள் அறைக்கு திரும்பினார்கள் அவர்கள்.

 

 

“ஏங்க உங்களுக்கு என் மேல எதுவும் கோபமிருக்கா என்றாள். “ஏன் சக்தி அப்படி கேக்குற, எனக்கு உன் மேல என்ன கோபம், அப்படி எதுவுமில்லையே. ஆமா ஏன் அப்படி கேட்குற என்றான் அவன்.

 

 

“உண்மையை சொல்லுங்க நம்ம நிச்சயத்தன்னைக்கு உங்க முகத்துல ஒரு கோபம் தெரிஞ்சுதே. அதை தான் நான் அன்றே பார்த்தேனே என்றாள். “ஹ்ம்ம் அன்னைக்கு தானே கோபம் இருந்துச்சு, அது அன்னைக்கே போச்சு என்றான் அவன்.

 

 

“அது தான் என்னன்னு சொல்லுங்களேன் என்றாள் ஒரு தவிப்புடன். “இப்போ எதுக்கு அதை பத்தி கேட்குற என்றான் அவன். “எனக்கு தெரியும் நான் அன்னைக்கு உங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க வருத்தமா தான் இருந்திருப்பீங்க. ஆனாலும் எப்படி என்னை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன் என்றாள் அவள்.

 

 

“அதுக்கு காரணம் கார்த்தி தான். அன்னைக்கு நெஜமாவே ரொம்ப கோபமா தான் இருந்தேன். அப்புறம் கார்த்தி தான் எனக்கு புரிய வைச்சா என்று சொல்லி அன்றைய நிகழ்வை பகிர்ந்தான் அவன். “கார்த்தி எனக்கு சப்போர்ட் பண்ணி எல்லாம் பேசுறாளா என்று வியந்தாள் சரயு.

 

 

“என் தங்கச்சியை நீ என்ன நினைச்ச, அதெல்லாம் அண்ணி மேல அவளுக்கு நெறைய பாசமிருக்கு என்று சட்டை காலரை உயர்த்தினான் அவன். முத்து எங்கோ வெளியில் சென்றுவிட கார்த்தி சரயுவின் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

“உள்ளே வரலாமா என்று அவள் கதவை தட்டவும், “என்ன கார்த்தி கேட்கணுமா உள்ள வா என்றாள் சரயு. “இல்லை அது வந்து… என்று தயங்கி நின்றவளிடம் “என்ன சொல்லணும் சொல்லு கார்த்தி என்றாள் சரயு.

 

 

“சாரி நான் கதவை தட்டாம ஏதோ பழைய ஞாபகத்துல வந்துட்டேன். மன்னிச்சுடுங்க அ…அண்ணி… என்று திணறியவாறே முடித்தாள் அவள். “அண்ணியா… என்று ஆச்சரியம் கொண்ட சரயு அவளின் அந்த அழைப்பில் அன்னியமாக உணர்ந்தாள். “கார்த்தி நீ எப்பவும் போலவே என்னை கூப்பிடு ஏதோ அன்னியாம தெரியுது எனக்கு என்றாள்.

 

“இல்லை அண்ணி, என்ன இருந்தாலும் நீங்க அண்ணாவோட மனைவி. வயசுலயும் பெரியவங்க தானே, அப்படி தான் கூப்பிடணும் என்றாள் பவ்வியமாக. “சரி உன்னிஷ்டம், இங்க பாரு கார்த்தி இது உன்னோட வீடு. நான் வர்றதுக்கு முன்னாடில இருந்தே இது உன் வீடு தான். நான் தப்பா நினைப்பேன்னு நீ எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குற

 

 

“அதெல்லாம் வேண்டாம், நீ பழைய கார்த்தியா இருந்தா நான் சந்தோசப்படுவேன் என்றாள் சரயு. “அதெல்லாம் நான் பழைய கார்த்தி தான் அண்ணிங்கறது மரியாதைக்காக கூப்பிட்டேன். அதுக்காக ரொம்பலாம் யோசிக்க வேணாம் என்று போகும் தருவாயில் கலாய்த்து விட்டு சென்றாள் அவள்.

 

 

இரண்டு நாட்கள் கழிந்த வேளையில் வைபவ் தன் தங்கையுடன் சரயுவின் இல்லத்திற்கு வந்திருந்தான். கல்யாணும், கார்த்திகாவும் தனியே வந்து சேர்ந்தனர். “ஹேய் என்ன இன்னைக்கு எல்லாருமா வந்து சந்தோஷ அதிர்ச்சி கொடுக்கறீங்க என்றாள் சரயு.

 

 

“எல்லாம் உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு கூப்பிட தான் வந்தோம் என்றான் வைபவ். “விருந்தா, எதுக்குடா இந்த சம்பிரதாயம் எல்லாம் என்றாள் சரயு. “உன்னை யாரு சம்பிரதாயமா கூப்பிட வந்தாங்க, எல்லாம் எங்க வீட்டு மாப்பிள்ளையை தான் கூப்பிட வந்தோம் என்றான் அவன்.

 

 

“சரயு இதுல இன்னொரு விஷயமும் இருக்கு என்று நிறுத்தினான் கல்யாண். “அப்படியா என்ன விஷயம் என்றாள் சரயு. “இந்த விருந்தை முன்னிட்டு நம் வைபவ் அவர்கள் அவர் மனைவியாகப் போகும் அபி என்ற அபிநயாவை அழைக்க உள்ளார்” என்றான் அறிவிப்பு பாணியில்.

 

 

“ஹேய் நெஜமாவா அபி வருவாங்களா, எனக்கும் அவங்களை பார்க்கணும்ன்னு தோணிச்சு. நானே கேட்கணும்ன்னு நினைச்சேன், சூப்பர்டா நீயே வரவைக்கிற” என்று மகிழ்ந்தாள் சரயு.

 

 

“ஹலோ ஹலோ கொஞ்சம் இரும்மா, என்னமோ அவன் உனக்கு அபியை காட்ட தான் அவங்களை வரவைக்கிற மாதிரி அதிகமா பேசுறியே. உங்களுக்கு சமையல் விருந்துன்னா அவனுக்கு கண்களுக்கு விருந்து. எல்லாம் அவனுக்காக தான் வரவைக்கிறான்

 

 

நீ இவனை நம்ம பழைய வைபவ்ன்னு நினைக்காதே. துணிக்கடையில ஒரு ஆறே ஓடிச்சு, அதை நேர்ல பார்த்த எங்களுக்கு தானே தெரியும். உனக்கு சந்தேகமா இருந்தா இதோ நம்ம முத்துவையே கேளேன்” என்று வைபவை கலாட்டா செய்தான்.

 

 

“டேய் டேய் போதும் போதும் ரொம்ப கலாட்டா பண்ணாதே, நீங்க எல்லாம் செய்யாததையா நான் செய்துட்டேன். வந்துட்டாங்க என்னை பேசுறதுக்கு, அடப்போங்கப்பா” என்றவன் சரயுவிடமும் முத்துவிடமும் திரும்பினான்.

 

 

“சரி நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க, இந்த வாரம் உங்களுக்கு ஓகே தானா. இல்லை வேற ஏதாவது யோசனை வைச்சு இருக்கீங்களா” என்றான். “என்ன வைபவ் நீங்க, நீங்க கூப்பிட்டா நாங்க வரமாட்டோமா. எங்களுக்கு வேற எங்கயும் போற யோசனை எல்லாம் இல்லை. நாங்க கண்டிப்பா வர்றோம்” என்றான் சரயுவை பார்த்துக் கொண்டே.

 

 

“டேய் வைபவ் முத்துக்கிட்ட கத்துக்கோடா எப்படி பேசணும்ன்னு சரயுகிட்ட கண்லயே சம்மதம் வாங்கிட்டு நம்மகிட்ட சொல்றார். நமக்கு தான் இப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று கார்த்திகாவை பார்த்து பெருமூச்சு விட்டான்.

“சும்மா நடிக்காதீங்க” என்று அவனை இடித்தாள் அவள். “பார்த்துக்கோங்க எனக்கு இடி தான் கிடைக்குது” என்று வருத்தபடுவது போல் நடித்தான் அவன். எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு காபி கலக்க சென்ற இந்திராவுக்கு துணையாக நம் நந்துவும் சமையலறையில் நுழைந்தாள்.

 

 

“நீ எதுக்கும்மா இங்க எல்லாம் வந்துக்கிட்டு, நான் பார்த்துக்கறேன் நீ போய் பேசிட்டு இரு” என்றார் இந்திரா. “அய்யோ அதெல்லாம் எனக்கு ஒரு சிரமும் இல்லை ஆன்ட்டி எங்கம்மான்னா செய்ய மாட்டேனா அது போல தானே. இதுவும் நம்ம வீடு தானே”

 

 

“அதுவும் இல்லாம அவங்க நண்பர்கள் அவங்க பேசிக்க நெறைய இருக்கும். இந்த வைபவ் என்னை கிளாஸ்ல விட சொன்னா இங்க வந்துட்டு போகலாம்ன்னு கூட்டி வந்துட்டான். அவங்க கூட உட்கார்ந்தா எனக்கும் போர் அடிக்கும் ஆன்ட்டி. தயவுசெய்து நான் உங்களுக்கு உதவுறேனே” என்று அவருக்கு சிறு சிறு உதவிகள் செய்துக் கொண்டிருந்தாள்.

 

 

“அம்மா… அம்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே நிர்மல் உள்ளே நுழைந்தான். “வந்துட்டான் அம்மா கோண்டு” என்று கிண்டலடித்தாள் கார்த்திகா. “ஹேய் உன் வேலையை பார்த்துட்டு போ…” என்றவன் கல்யாணை பார்த்ததும் “போக்கா” என்று முடித்தான். “வாங்க மாமா எப்போ வந்தீங்க, எப்படி இருக்கீங்க” என்று கல்யாணையும் வைபவையும் பார்த்து கேட்டான்.

 

 

“வா நிர்மல் அன்னைக்கு இருந்த டென்ஷன்ல உனக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியாம போச்சு. தப்பா எடுத்துக்காதே நிர்மல், அபி கூட உனக்கு நன்றி சொல்லணும்ன்னு சொன்னா” என்றான் வைபவ். “ஏன் மாமா நன்றி சொல்லி என்னை தூர நிறுத்தலாம்ன்னு பார்க்குறீங்களா. எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்றீங்க” என்று முகம் வாடினான்.

 

 

எழுந்து அவனருகில் சென்றவன் அவன் தோளைப்பற்றிக் கொண்டு “அதுக்கில்லை நிர்மல், இந்த விசயம் தெரியாமலே போயிருந்தா என்னவாகியிருக்கும்ன்னு எனக்கு தெரியலை. சரியான சமயத்துல நீ சொன்ன தகவல் எவ்வளவு உதவியா இருந்ததுன்னு உனக்கு தெரியாது. அதான் நன்றி சொல்லிட்டேன். சரி விடு, நீயும் இவங்களோட ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு வந்திடு. விருந்து உன்னோட அக்கா வீட்டில தான் வராம இருந்திடாதே” என்றான் அவன்.

 

 

“சரி மாமா கண்டிப்பா வர்றேன்” என்றவன் “சரி நீங்க பேசிட்டு இருங்க நான் உள்ளே போறேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தான் அவன். “என்ன வைபவ் பார்க்குறீங்க அவன் உள்ளே போறேன்னு சொல்லிட்டு சமையலறைக்கு போறானேன்னு பார்க்குறீங்களா. அதான் சொன்னேனே அவன் சரியான அம்மா கோண்டு எங்கம்மாவை வீட்டுக்கு வந்ததும் பார்த்தா தான் அவனுக்கு தூக்கமே வரும். அப்புறம் தான் அவனோட அறைக்கு போவான்” என்றாள் கார்த்திகா.

 

 

“அம்மா…” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அங்கிருந்தவளை கண்டதும் அவன் குரல் உள்ளே போயிற்று. “என்னடா வந்ததும் நேரா இங்க வந்துட்டியா” என்றவர் நந்துவிடம் திரும்பி “நந்தும்மா அவனுக்கு காபி கொடுத்திறேன், நான் எல்லாருக்கும் இதை கொடுத்துட்டு வந்துர்றேன்” என்றுவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

 

“ஹலோ… ஹலோ… ஹலோ…” என்று நிர்மல் காதருகில் கத்தினாள் நந்து. “என்னங்க” என்றான் அவன். “எவ்வளோ நேரமா நான் உங்களை கூப்பிட்டுட்டு இருக்கேன். காதுலையே விழலையா” என்றாள் நந்து.

 

 

“இல்லை ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன், ஆமா நீங்க எப்படி இங்க” என்றான் அவன். “இந்தாங்க முதல்ல இந்த காபியை புடிங்க” என்று அவன் கையில் திணித்தாள். “நீங்க என் கையால தான் காபி சாப்பிடணும் போல இருக்கே, நெறைய தடவை இதே தான் நடக்குதுல” என்று அவள் சாதாரணமாக சொல்ல நிர்மலுக்கு கற்பனை ரெக்கை கட்டி பறந்தது. “நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலியே” என்றான் அவன்.

 

 

“நான் இங்க வந்ததா, ஏன் நான் வரக்கூடாதா. வந்தா வேணாம்ன்னு சொல்லிடுவீங்களா” என்று மல்லுக்கட்டுவது போல பேசியவள் இந்திரா உள்ளே நுழையவும் பவ்வியமானாள். “அண்ணாவோட வந்தேன், என்னை கிளாஸ்க்கு கொண்டு போய் விடாம இங்க வந்துட்டு போகலாம்ன்னு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஏன் நான் இங்க வரக்கூடாதா” என்றாள் இப்போது வேறு பாணியில்.

 

 

“ஏம்மா அப்படி சொல்ற, இங்க வர்றதுக்கு எல்லா உரிமையும் உனக்கு இருக்கும்மா. இவன் எதுவும் உன்னை சொல்லிட்டானா, என்னடா நிர்மல் அந்த பிள்ளையை என்ன சொன்னே” என்று அவளிடம் ஆரம்பித்து மகனிடம் திரும்பினார்.

 

 

“அம்மா நான் எதுவும் சொல்லலை, நம்ம வீட்டு பக்கம் அதிசயமா வந்திருக்காங்களே, அது தான் எப்படின்னு கேட்டுட்டு இருந்தேன். அதை ரெண்டு பேரும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க” என்று அவளை பார்த்துக் கொண்டே காபியை உறிஞ்சினான்.

 

அவளோ வேறு ஏதோ வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள், அவனை கண்டு கொள்ளவே இல்லை. “நந்து நீ வேலை பார்த்தது எல்லாம் போதும், போய் அங்க உட்காரும்மா” என்றார் இந்திரா.

 

 

“ஆன்ட்டி எனக்கு போரடிக்கும், நான் வேணா வீட்டை சுத்தி பார்க்கட்டுமா. நான் வரும் போதே பார்த்தேன், இங்க ஒரு தோட்டம் இருக்கு தானே, எனக்கு அதை பார்க்கணும், சுத்தி காட்டுறீங்களா” என்றாள் ஆவலுடன்.

 

 

“நிர்மல் உனக்கு சுத்தி காட்டுவான் சரியா” என்றவர் நிர்மலிடம் திரும்ப “சுத்தி காட்டுறேன்ம்மா” என்றவன் “வாங்க போகலாம்” என்று அவளுடன் அவர்கள் வீட்டு பின் பக்கம் சென்றான்.

 

 

“இவ்வளவு பெரிய தோட்டமா, இங்க எல்லா காய்கறியும் இருக்கு. பூக்களும் இருக்கு, பழங்களும் இருக்கு, கீரை வகைகள்ன்னு எல்லாமே வைச்சு இருக்காங்க, எப்படிங்க” என்று அவனிடம் வியந்தாள்.

 

 

“எல்லாம் அம்மா பார்த்து பார்த்து வைச்சது, நான் எப்பாவாவது அம்மாவுக்கு துணையா இருக்கறதுண்டு” என்றான் அவன். “நான் மட்டும் இருந்தேன்னா முழு நேரமும் அவங்ககூடவே இருந்து இதை பார்த்துக்குவேன்” என்றாள் ஆவலுடன். “உனக்கு தோட்டம்ன்னா பிடிக்குமா” என்றான் நிர்மல்.

 

 

“பிடிக்குமாவா, நான் தாவரவியல் மாணவி. என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்களே. எங்கம்மா நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க வீட்டை சுத்தி சின்ன சின்ன செடி வைப்பாங்க. அப்போல இருந்து அவங்களோடவே இருந்தேனா அதான் ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

 

 

“ஹையோ மஞ்சள், வெள்ளை, குங்கும கலர்ல கூட ரோஜா பூத்திருக்கு, எவ்வளோ அழகு” என்று அருகில் சென்று தொட்டு பார்த்தாள். “உனக்கு வேணுமா” என்றான் அவன். சற்று யோசித்தவள் “ஹ்ம்ம் வேணும்” என்றாள். அவளிடம் “இரு” என்றவன் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கத்தரியை எடுத்து வந்தான்.

 

 

அவள் கேட்ட எல்லா நிற ரோஜாவையும் அவன் வெட்டப் போக “அய்யோ எல்லாமே வெட்டாதீங்க, அது பாவம். எனக்கு ஒண்ணு போதும், நான் ஒண்ணு தானே தலையில வைக்க போறேன். எனக்கு அந்த குங்கும கலர் ரோஜா எடுத்து கொடுங்க” என்றாள் அவள்.

 

 

ஏதோ காதல் பரிசை அவளிடம் நீட்டுவது போல் அந்த ரோஜாவை அவளிடம் நீட்டினான் அவன். “தேங்க்ஸ் என்று சொல்லி வாங்கியவள் அதை உடனே தலையில் சூடிக்கொண்டாள். “மாடி வேற இருக்கா போய் பார்க்கலாமா என்றாள் அவனிடம்.

 

 

“ஹ்ம்ம் வாங்க கூட்டிட்டு போறேன் என்றான் அவன். வேகமாக இரண்டு படிகள் ஏறியவள் சட்டென்று பின்னால் வந்து அவன் மேல் மோதிக் கொண்டு நின்றாள். “என்னாச்சு என்றான் அவன். “இல்லை இருட்டற நேரமா இருக்கு, அதான் கொஞ்சம் பயமா இருக்கு. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே ஏறுவோமே என்று அவனருகில் வந்து நின்று கொண்டு அவனுடன் ஏறலானாள்.

 

 

“நான் தான் பின்னாலேயே வர்றேனே அப்புறம் என்ன பயம்” என்றான் அவன். அவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை, வாய்விட்டே நகைத்தான் அவன். “எதுக்கு இப்போ சிரிக்கறீங்க, எல்லாருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எனக்கு இது தான் பலவீனம் என்று அவள் ஒத்துக்கொண்டாள்.

 

 

“இல்லை எல்லாரையும் அந்த வாங்கு வாங்குற, உனக்கு பயமான்னு நினைச்சு தான் சிரிச்சேன், வேற ஏதும் இல்லை. ஆமா உங்க வீட்டில என்ன பண்ணுவ, யாராச்சும் எப்பவும் உனக்கு துணையா வருவாங்களா என்றான் அவன்.

 

 

“அதெல்லாம் இல்லை, எங்க வீட்டில எங்க அண்ணன் மாடியில பெரிய டியூப்லைட் போட்டிருக்கார். நான் மாடிக்கு போறதா இருந்தா கீழேயே லைட் போட்டுட்டு தான் போவேன் என்று மிகப் பெருமிதமாக கூறிக்கொண்டாள். “ஆமா உனக்கு உங்க அண்ணான்னா ரொம்ப பிடிக்குமா என்றான் நிர்மல்.

 

 

அவள் கண்களில் ஒரு ஒளி வந்தது போன்று தோன்றியது. “நான் இங்க உட்கார்ந்துக்கறேன் என்று மொட்டை மாடி சுவற்றின் மேல் ஏறி அமர்ந்தவள் வைபவை பற்றி கூறலானாள். “எனக்கு எங்க அண்ணாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னடா எல்லாரும் சொல்ற மாதிரி நானும் சொல்றேன்னு நினைக்காதீங்க

 

 

“சின்ன வயசில எல்லாம் அண்ணா என்னோட விளையாடாம பேப்பர் போட போய்டறாங்கன்னு எவ்வளோ நாள் அவங்ககிட்ட சண்டை போட்டிருக்கேன் தெரியுமா. பக்கத்துக்கு வீட்டில எல்லாம் அவங்க அண்ணா, தங்கை, அக்கா, தம்பின்னு சேர்ந்து விளையாடுறது பார்த்து ரொம்ப சண்டை பிடிப்பேன்

 

 

“ஆனா அண்ணா பாவம், எங்க அப்பாவுக்கு அப்புறம் அம்மாவுக்கு துணையா இருந்து, அவங்களை எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்தாம அவங்களே உழைச்சாங்க. நான் கொஞ்சம் பெரிசா ஆனதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது, அதுக்கு அப்புறம் நான் எதுக்காவும் அவங்களை கஷ்டப்படுத்தியது இல்லை

 

 

“அப்பாவோட முகம் எனக்கு ஞாபகத்துலயே இல்லை, ஆனா எங்க அண்ணா தான் எனக்கு அப்பா மாதிரி என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது. மனம் தாளாமல் “மன்னிச்சுடுங்க நீங்க இப்படி பீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா மாமா பத்தி கேட்டிருக்கவே மாட்டேன் என்றவன் அவன் கைக்குட்டையை எடுத்து அவளிடம் கொடுத்தான் கண்ணீரை துடைக்குமாறு.

 

 

அதை வாங்கி கண்களை துடைத்தவள் மூக்கை சிந்திவிட்டே அவனிடம் கொடுத்தாள். “ச்சே, ஏதேதோ கேட்டு என்னை அழ வைச்சுட்டீங்களே, நான் அழறதில்லைன்னு இருந்தேன். சரி பரவாயில்லை விடுங்க, அப்புறம் கேட்க மறந்துட்டேன் உங்க வாட்ச்மேன் உத்தியோகம் எப்படி போயிட்டு இருக்கு என்றாள் அவள்.

 

 

‘அதானே பார்த்தேன் என்னை கலாய்க்கலன்னா இவளுக்கு தூக்கமே வராதே என்று மனம் நொந்தவன் “ஹ்ம்ம் நல்லா போயிட்டிருக்கு உங்க புண்ணியத்துல என்றான் அவன்.

 

 

“ஏங்க நான் இந்த செடி பக்கத்துல நிக்குறேன் ஒரு போட்டோ எடுக்கறீங்களா. நீங்க மாடில கூட இப்படி அழகா தோட்டம் பண்ணி வைச்சு இருக்கீங்க. அதான் ஆசையா இருக்கு என்றாள் அவள். “ஹ்ம்ம் போய் நில்லுங்க நான் போட்டோ எடுக்கறேன் என்றவன், அவள் கைபேசியை வாங்கி அதில் அவளை புகைப்படம் எடுத்தான். எதற்கும் இருக்கட்டும் என்று அவன் கைபேசியிலும் ஒரு புகைப்படம் எடுத்தான்.

 

 

“எனக்கு ஒரு சந்தேகம் என்றான் அவன். “என்ன என்றாள் அவள். “இல்லை இப்போ போட்டோ எடுக்கும் போது நீங்க தூரமா நிக்குறீங்க, இப்போ உங்களுக்கு பயமா இல்லையா என்றான் அவன். “அதெப்படி வரும் நீங்க தான் எனக்கு எதிர்ல இருக்கீங்கள்ள, எனக்கு பயமில்லையே என்றாள் அவள்.

 

 

“உங்க பின்னாடி யாரோ நிக்குறாங்க என்றான் அவன். ‘அய்யோ என்றவாறே வேகமாக வந்து அவன் இரு தோள்களையும் பற்றி கண்ணை இருக்க மூடி அவன் மேல் சாய்ந்து நின்றாள் பயத்தில்.

 

 

‘கடவுளே இன்னைக்கு நீ என் மேல அதிக கருணை காட்டுறியே, இது இப்படியே காலம் முழுமைக்கும் இருக்கணும். அவங்க அண்ணா இவளை எப்படி பார்த்துகிட்டாங்களோ அதை விட நான் இன்னும் நல்லா பார்த்துப்பேன். இவளை என்கிட்ட சேர்த்து வைச்சுடு ஆண்டவா என்று பிரார்த்தனை செய்தான் அவன்.

 

 

“என்ன நதி பயந்துட்டீங்களா நான் சும்மா தான் சொன்னேன் என்றான் அவன். நிமிர்ந்து அவனை முறைத்தவள் “எதுக்கு என்னை பயமுறுத்தறீங்க, எங்க அண்ணனும் இப்படி தான் செய்வான். அவனுக்கு கிறுக்கு பிடிச்ச மாதிரி உங்களுக்கும் அப்பப்போ கிறுக்கு பிடிச்சுக்கும் போல இருக்கே

 

 

“சரி போட்டோ எங்கே என்றாள் அவள். அவள் கைபேசியை அவளிடம் கொடுத்தான் அவன். “உங்க போன்ல எடுத்தது எனக்கு அனுப்புங்க, அனுப்பினதும் டெலிட் பண்ணிடுங்க என்றாள் அவள்.

 

 

‘ரொம்ப தான் விவரம் என்று நினைத்தவன் அவசர அவசரமாக அந்த புகைப்படத்தை ஒரு நகல் எடுத்து வேறு ஒரு அடைவில் வைத்துவிட்டு அவளிடம் அவன் கைபேசியை நீட்டினான். “நீயே டெலிட் பண்ணிடு அப்புறம் நான் பண்ணலைன்னு நினைச்சுக்க கூடாது என்று அவளிடமே கொடுத்தான் அவன். அதை வாங்கி அவள் டெலிட் செய்து அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

 

 

“சரி ரொம்ப இருட்டி போச்சு, அண்ணா தேடுவாங்க. எனக்கும் கிளாஸ்க்கு நேரமாச்சு. போகலாமா என்றாள். “ஹ்ம்ம் போகலாம் வாங்க என்றவன் முதலில் கீழே இறங்க முயல, “என்ன மறந்துட்டீங்களா, இருங்க நானும் வர்றேன் என்றவள் அவனுடன் சேர்ந்தவாறே இறங்கினாள்.

 

 

“ஆமா நீ எப்போமே இப்படி தானா, வளவளன்னு பேசிட்டே இருப்பியா என்றான் அவன். “என்ன என்னை பார்த்தா சின்ன பாப்பா மாதிரி தெரியுதா, விவரம் இல்லாம சின்ன குழந்தையா நடந்துக்கறேன்னு நினைக்கறீங்களா என்றாள்.

 

 

“விளையாட்டுத்தனமா இருப்பேன் அதுக்காக விளையாட்டா இருக்க மாட்டேன். எல்லாரும் சந்தோசமா இருக்கணும், நான் பேசிட்டே இருந்தா எங்க வீட்டில சந்தோசப்படுவாங்க, அதுனால அதுவே என்னோட சுபாவமா ஆகிப்போச்சு. அதுக்காக என்னை லூசுன்னு நினைக்க வேண்டாம் என்றாள் அவள்.

 

 

“உன்னை அப்படி யாருமே சொல்ல முடியாது, நீ பேசிட்டே இருக்கியேன்னு தான் கேட்டேன் வேற ஒண்ணுமில்லை என்றான் அவன். வந்தவர்கள் எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினர். அவர்கள் சென்றதும் நிர்மலை அழைத்தார் இந்திரா.

 

 

உடைமாற்றி வந்தவன் “என்னம்மா என்றவாறே அவரருகில் அமர்ந்தான். எதிரில் முத்துவும் சரயுவும் அமர்ந்திருந்தனர். ஏதோ அவனை உட்கார வைத்து விசாரணை நடத்துவது போல் தோன்றியது அவனுக்கு. ‘எதுக்கு இப்படி எல்லாரும் என்னையவே குறுகுறுன்னு பார்த்துட்டே இருக்காங்க என்று வடிவேல் போல் நினைத்துக் கொண்டான்.

 

 

“சொல்லு நிர்மல் என்றார் அவர். “என்னம்மா சொல்லணும் என்றான் அவன். “உன் மனசில என்ன இருக்குன்னு சொல்லு என்றார் அவர். ஆடு திருடியவன் மாட்டிக்கொண்டது போல் முழித்தான் அவன். ‘இவங்க எதை பத்தி கேட்குறாங்க என்று மெல்லிய பதட்டமும் அவனுக்குள் உருவாகியது.

 

 

“என்ன நீங்க அத்தை கேட்குறாங்கலே என்ன ஏதுன்னு சொல்லுங்க என்று சரயுவும் கேட்க அவனுக்கு வேர்க்கவே ஆரம்பித்துவிட்டது. “என்ன சொல்லணும் என்றான் பதிலுக்கு.

 

 

“சரி நான் நேரடியாவே கேட்குறேன், நீங்க நந்துவை விரும்பறீங்களா என்றாள் சரயு. நடுக்கூடத்தில் வைத்து ஏதோ குற்றவாளியை கேள்வி கேட்பது போல் நம்மை கேள்வி கேட்கிறார்களே என்று எண்ணினான் நிர்மல்.

 

 

“அது… அது… என்று இழுத்தான் அவன். “தம்பி காயப்போட்ட துணியை எடுக்கலாம்ன்னு மாடிக்கு வந்தேன். இதுக்கு மேல எதும் சொல்லலை, நீங்க சொல்லுங்க தம்பி. நாங்க என்ன வேணாம்ன்னா சொல்லப் போறோம் என்றாள் சரயு.

 

 

“ஏன்பா எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லுவ, உனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு அதை மட்டும் என்கிட்ட சொல்லாம விட்டுட்டியே என்று வருந்தினார் இந்திரா. அன்னையின் வருத்தம் தாங்காதவன் “அம்மா தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா

 

 

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு மட்டும் தான் அவளை பிடிச்சிருக்கு, அவளுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. அண்ணி நீங்க மேல பார்த்தது நான் அவளை பயமுறுத்தினேன் அதுனால பயந்து போய் என் சட்டையை பிடிச்சா வேற ஏதும் இல்லை

 

 

“அம்மா இது நடக்குமான்னே தெரியாம எப்படிம்மா நான் உங்ககிட்ட சொல்லுவேன். அப்பா எத்தனை முறை வைபவ் மாமாவை அவமானப்படுத்தி அனுப்பி இருப்பார்னு உங்களுக்கு தெரியாதும்மா. அண்ணாவுக்கு நல்லா தெரியும் கேட்டுக்கோங்க

 

“அவங்க எப்படி நம்ம அப்பா பத்தி தெரிஞ்சு பொண்ணு கொடுப்பாங்க. எனக்கு ஆசை இருந்து என்ன பிரயோஜனம் அது நடக்காதுன்னு தெரியுது. அப்புறம் எப்படிம்மா நான் உங்ககிட்ட சொல்ல முடியும், எனக்காக வேற நீங்க கவலைப்படணுமா என்றான் இயலாமையுடன்.

 

 

சிறிய மகன் விளையாட்டுத்தனமானவன் எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைப்பதும், பொறுப்பாக யோசிப்பதும் என்று இருப்பவன் இப்படி விரக்தியுடன் பேசுவது பெற்றவருக்கு சங்கடத்தை கொடுத்தது.

 

 

“அம்மா அவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கும்மா, நான் பலதடவை பார்த்திருக்கேன். ஆனா பாவம் வைபவ் ஒரு தரம்கூட அதை சொல்லிக்காட்டியதே இல்லை. இன்னைக்கு வீட்டுக்கு வரும் போது அப்பா இருக்கிறாரா இல்லையா என்று கேட்டபின் தான் நம் வீட்டுக்கே வந்தார். அப்பா அந்த அளவுக்கு அவரை காயப்படுத்தி இருக்கிறார் அம்மா என்றான் முத்துவும்.

 

 

“என்ன பேசறீங்க நீங்க, வைபவ் அப்படிபட்டவன் இல்லை. அவன் இதுக்காக எல்லாம் நம்ம நிர்மலை வேண்டாம்ன்னு சொல்லவே மாட்டான். அவனை பத்தி உங்க யாருக்கும் தெரியலை, அப்படி இந்த குடும்பம் வேண்டாம்ன்னு நினைச்சிருந்தா என்னையும் கல்யாணையும் கூட அவன் தடுத்திருப்பானே. அவன் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் இந்த திருமணமே நடந்திருக்காதே என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்து உடல் விறைத்தான்.

 

 

‘அவள் நண்பன் திருமணம் வேண்டாம் என்றால் என்னை வேண்டாம் என்று போயிருப்பாளா என்று எண்ணி முத்து கடினமானான். மெதுவாக அவன் எழுந்து அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான். சரயுவோ நிர்மலிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

“அண்ணி நீங்க ஊர்ல இருந்தீங்க உங்களுக்கு எங்கப்பாவை தெரியாது. அதான் கல்யாணம் நடந்திருச்சு என்றான் நிர்மல். “இந்த குடும்பத்தை பத்தி எனக்கு நான் காலேஜ் படிக்கும் போதே தெரியும் தம்பி. மாமா அத்தையோட சம்மதம் கூட எதிர்பார்க்காம அவருக்கு பார்த்ததும் பிடிச்சு போச்சுன்னு யாரை பற்றியும் யோசிக்காமல் ஒரு இக்கட்டில் நிறுத்தி தான் அத்தையை கல்யாணம் முடிச்சாங்க. அது தெரியுமா உங்களுக்கு என்றாள்.

 

 

“கல்யாண் என்னைக்கு கார்த்தியை விரும்பறான்னு தெரிஞ்சுதோ அன்னைக்கே உங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு சொல்லிட்டான். இது எல்லாத்துக்கும் மேல அவன் எதுவும் சொல்லாததுக்கு என்ன காரணம் தெரியுமா, எங்களோட விருப்பம் தான்

 

 

“அவனை பொறுத்தவரை ஒருத்தரோட விருப்பத்துக்கு தான் முதல்ல மதிப்பு கொடுப்பான். நீங்க கவலைப்படாதீங்க தம்பி. உங்க கல்யாணம் எங்க பொறுப்பு என்றாள் அவள் நீளமாக.

 

 

“தேங்க்ஸ் அண்ணி என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டான் நிர்மல். “அம்மா என் மேல கோபமா என்று அன்னையை பார்த்து கேட்டான். இல்லையென்பதாய் அவர் தலையசைக்க அவர் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டான்.

 

 

“என்னடா இது சின்ன குழந்தை மாதிரி என்றார் அவர். “அம்மா உனக்கு நான் குழந்தை தானே, இன்னைக்கு தான் மனசு நிம்மதியா இருக்கும்மா. எதையோ மறைக்கிறோம்ன்னு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. இன்னைக்கு எல்லாம் சொல்லிட்டதுல மனசு நிம்மதியா இருக்கும்மா என்றான் அவன்.

 

 

“சரயு நீ உள்ளே போம்மா என்று அவளிடம் ஏதோ சைகை காட்டினார் அவர், நான் பார்த்துக்கறேன் என்பது போல் சைகை செய்துவிட்டு சரயு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

கோபத்துடன் பலகணியில் நின்றிருந்தான் முத்து. மெதுவாக அவனருகே வந்தவள் பின்னிருந்து அவனை அணைத்தப்படி அவன் மேல் சாய்ந்தாள். அவன் உடல் சட்டென்று விறைக்க தள்ளி நின்றான்.

 

“என்ன என்றான் அவளை பார்த்து, “என்ன என்றாள் அவளும் பதிலுக்கு. “என்ன வேணும் உனக்கு என்றான், “நீங்க தான் வேணும் என்றாள் அவள் பதிலுக்கு. “எதுக்கு பொய் சொல்ற, அதான் சொன்னியே உன்னோட நண்பன் இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்லியிருந்தா இந்த கல்யாணம் நடந்தே இருக்காதுன்னு

 

 

“அப்போ உனக்குன்னு எந்த விருப்பமும் இல்லை, உனக்கு என்னை பிடிக்கலைன்னா அன்னைக்கே சொல்லியிருக்கலாம்ல. எதுக்கு இப்படி என்னை கஷ்டப்படுத்துற என்றான் வேதனையுடன்.

 

 

“பேசிட்டீங்களா, நீங்க எப்போமே இப்படி தான் புரியாம பேசுவீங்களா. நான் சொல்ல வந்ததை முழுசா கேட்காம கோவமா எழுந்து வர்றது. ஆமாம் சொன்னேன், அவன் சொல்லியிருந்தா கல்யாணம் நடந்திருக்காதுன்னு அதுல என்ன தப்பு என்றாள் அவள்.

அவள் கை முஷ்டியை இறுக்கினான். “ஆனா அப்படி தான் எதுவும் நடக்கலையே, ஏன்னு யோசிச்சீங்களா என்றாள் அவள். முத்து புரியாமல் விழித்தான். “எனக்கு உங்களை பிடிச்சிருந்துச்சு அதான் யாரும் எதுவும் சொல்லலை போதுமா

 

 

“அன்னைக்கு உங்க மாப்பிள்ளை என்னை ஒரு கேள்வி கேட்டான். நீ எங்ககூட பேசணும்ங்கறதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியான்னு கேட்டான், அதுக்கு வைபவ் என் முகத்தை பார்த்தே சொன்னான்

 

 

“என்ன சொன்னான்னு தெரியுமா, அவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்காமலா சரின்னு சொல்லியிருப்பா. அவளை பார்த்தாலே தெரியலையா என்று சொன்னான். ஆனா நீங்க எதுவும் புரியாம எதையும் யோசிக்காம என் மேல கோபப்படுறீங்க என்றவள் கண்களில் நீர் துளிர்க்க கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

 

 

வழக்கம் போல தன் முன்கோபத்தை எண்ணி வருத்தம் கொண்டான் முத்து. என்னோட முன்கோபம் போனால் தான் எல்லாம் சரியாகும் என்று அவனை அவனே திட்டிக் கொண்டான். மெதுவாக கட்டிலில் அவளருகில் அமர்ந்தான். அவளோ வேகமாக எழுந்து பலகணிக்கு சென்று நின்றாள்.

 

 

பின்னோடு எழுந்து சென்றவன் அவள் நகர முடியாதவாறு அவள் இருபுறமும் கைகளை வைத்து சிறை செய்தான். “ஹேய் ப்ளீஸ் சக்தி என்னை புரிஞ்சுக்கோ. உனக்கு தான் என்னை பத்தி தெரியும்ல, கோபம் வந்ததும் ஏதோ கேட்டுட்டேன். என் மூளையும் வேலை செய்யாம போய்டுச்சு

 

 

“இதுல இருந்து உனக்கு ஒண்ணு புரியலியா, நான் புரிஞ்சுக்காம இருந்த மாதிரி நீயும் என்னை புரிஞ்சுக்காம இருந்திடாதே சக்தி. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, அதான் இவ்வளவு கோபம் வந்திரிச்சு. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ. நான் முன்கோபக்காரன் கொஞ்ச கொஞ்சமா அதை விட்டுறேன் சக்தி

 

 

“நீ பேசமா இருந்தா எனக்கு சக்தியே இல்லாம போய்டும் ப்ளீஸ் சக்தி என்று பல ப்ளீஸ்களை அவளிடம் அள்ளி வைத்தான். “நீங்க கோபக்காரர்ன்னு தெரியாமலா கல்யாணம் பண்ணேன். எல்லாம் தெரியும், உங்களுக்கு கொஞ்சம் உங்கப்பா குணம் உண்டு. இப்போ தான் மாறியிருக்கீங்க என்றாள் அவள்.

 

 

“உனக்கு எப்படி தெரியும் என்றான் அவன். “எல்லாம் இந்த வைபவ் கடன்காரன் தான் சொன்னான் என்று அவனிடம் பகிர்ந்தாள் அவள். “அப்போ உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா என்றான் அவன். “உங்களை பிடிக்காமலா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்றாள் அவள்.

 

 

“சரி நாம அதை கொண்டாடிடுவோமா என்றான் அவன். “எப்படிங்க இந்த நேரத்துல வெளிய போகப் போறமா என்றாள் அவள் ஆர்வமாக. “அதெல்லாம் இல்லை நாம இங்கயே கொண்டாடுவோம் என்றான் அவன் விஷமசிரிப்புடன்.

 

 

அவன் நோக்கம் புரிந்தவள் “நான் எந்த கொண்டாட்டத்துக்கும் வரலை, ஆளை விடுங்க என்றவள் அவனிடம் இருந்து நழுவி அந்த அறைக்குள்ளேயே அவனுக்கு கண்ணாமூச்சு காட்டினாள்.

 

 

“ஏய் சக்தி போதும் எனக்கு மூச்சு வாங்குது என்று கட்டிலின் மேல் அமர்ந்தவன் நெஞ்சை பிடித்துக் கொண்டான். “என்னங்க என்னாச்சு என்று பதறி அவள் அருகில் வரவும் அவளை கட்டிக்கொண்டவன், அவன் கொண்டாட்டத்தையும் தொடங்கினான்.

 

 

இவர்கள் கொண்டாட்டம் இப்படியிருக்க நிர்மல் இனிய கனவுகளில் முழ்க ஆரம்பித்தான். வீட்டில் எல்லோரிடமும் பேசியது அவனுக்கு ஒரு தெம்பை கொடுத்திருந்தது. கைபேசியில் இருந்த அவள் புகைப்படத்தை எடுத்தவன் அவள் நிழலுடன் உரையாட ஆரம்பித்தான்…

 

 

காதலியாய் உனை அடைய

எண்ணமில்லை எனக்கு

மனைவியாய் உனை கொண்டாட

ஆசை எனக்கு…

 

இரவின் நிசப்தத்தில்

விடியும் வரையில்

உன் பேச்சை ரசிக்க

எண்ணமெனக்கு…

 

 

அன்னையிடம் அனைத்தும்

பகிரும் வழக்கமெனக்கு…

உன்னை கண்ட நொடி முதல்

அனைத்தும் உன்னிடமும்

சொல்ல ஆசையெனக்கு…

 

 

என் தாய்க்கு சேயாய்

இருக்கும் எனக்கு…

என் சேய்க்கு உன்னை தாயாய்

ஆக்க விருப்பமெனக்கு…

 

Advertisement