Advertisement

அத்தியாயம் –18

 

அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க, ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப ஓவரா பண்றீங்களே என்றாள் கார்த்திகா.

 

 

“ஹேய் வாயை மூடிட்டு பேசாம போடி, வந்துட்டா நாட்டாமை பண்ண என்று சரயுவின் மேல் இருந்த கோபத்தை கார்த்திகாவின் மேல் காட்டினான் கல்யாண். கார்த்திகா வேகமாக அறையை விட்டு செல்ல முயல “ஹேய் பேசாம போய் மூலைல உட்காரு, உன்னை யாரும் வெளிய போகச் சொல்லலை என்றான் கல்யாண்.

 

 

“எதுக்கு கல்யாண் அவளை திட்டுற, உனக்கு என் மேல தானே கோபம் என்னை திட்ட வேண்டியது தானே என்றாள் சரயு அவளின் மௌனத்தை உடைத்து. “அப்படியா உன்னை திட்டலாமா, அதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு என்றான் கல்யாண்.

 

 

“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற என்றாள் சரயு வருத்தத்துடன். “வேற எப்படி பேசணும் சரயு நீயே சொல்லு. நாங்க யாரும் வேணாம்ன்னு போனவளுக்கு திடிர்னு என்ன எங்க மேல அக்கறை பொங்கி வழியுது. உன்னை பத்தி ஒரு நாளாவது நாங்க பேசாமா இருந்திருப்போமா??? இல்லை நினைக்காம தான் இருந்திருப்போமா???

 

 

“உன்னை பார்க்க வரலாம்னு எத்தனை தடவை நினைச்சு இருக்கோம் தெரியுமா. நான் தான் இவனை தடுத்தேன், திடுதிப்புன்னு நாங்க வந்து நின்னா உனக்கு பிரச்சனை வந்திருமோன்னு நினைச்சோம். ஆனா நீ எங்களை பத்தி நினைச்சிருப்பியா, ஒரு போன்… ஒரு போன் உன்னால பண்ண முடிஞ்சுதா. இப்போ வந்து நாங்க இவளை திட்டணுமாம், ஆளை பாரு என்றான் அவன் அவளை திட்டி முடித்துவிட்டு.

 

 

“நீ ஏன்டா பேசாம இருக்க, அவன் பேசி முடிச்சுட்டான். உனக்கென்ன நீயும் என்னை திட்டு, எப்போமே நீ தான் என்கூட சண்டை போடுவ, அவன் சமாதானப்படுத்துவான். இன்னைக்கு அவன் சண்டை போட்டு முடிச்சுட்டான், நீ என்ன செய்யப் போற என்றாள் சரயு.

 

 

வைபவ் மௌனம் காக்க, “இப்படி நீ மௌனமா இருக்கறதுக்கு என்னை ரெண்டு அடி கூட அடிச்சிரு என்றாள் நீர் நிறைந்த விழிகளுடன். “வேணாம் சரயு எதுக்கு அழற, நாங்க உன்னை அழ வைக்கிறதுக்காக அங்க இருந்து வரலை

 

 

“உன்னை பார்க்கணும்ன்னு தோணிச்சு வந்தாச்சு, பார்த்தாச்சு. உனக்கு எப்போ எங்க கூட பேசணும்ன்னு தோணுதோ அப்போ பேசு. உன்னை வருத்தப்பட வைக்க எனக்கு எப்பவும் விருப்பம் கிடையாது என்றான் வைபவ் வருத்தமாக.

 

 

“இதுக்கு நீ என்னை நல்லா அடிச்சிருக்கலாம், ஏன்டா என்னை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா. அந்த ஷர்மி நான் ஊருக்கு கிளம்புற அன்னைக்கு என்னை என்னலாம் சொன்னா தெரியுமா. என்னால தான் அவ உன்னை காதலிச்சு ஏமாத்தினாலாம், அவளுக்கு எந்த பாவமும் சேராதாம்

 

 

“எல்லா பாவமும் எனக்கு தான் வந்து சேருமாம், கல்யாணுக்கு அவசர கல்யாணம் பண்ணதுக்கும் நான் தான் காரணமாம். அவனும் நல்லாவே இருக்க மாட்டான்னு என்கிட்ட சொல்லி என்னை ரொம்பவே காயப்படுத்திட்டா, எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவளை நல்லா நாலு அறை விட்டேன்

 

 

“ஆனாலும் எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு என்னால தான் உங்க வாழ்க்கையில பிரச்சனை வருதோன்னு, அதுனால தான் நான் உங்களை விட்டு விலகி இருந்தேன். நான் ஒண்ணும் உங்களை ஒரேடியா விட்டுட்டு இருக்கணும்ன்னு நினைக்கவே இல்லை

 

 

“என்னவோ பெரிசா சொன்னியே, உன்னை நினைக்காத நாளே இல்லைன்னு. நீங்க மட்டும் தான் அப்படி இருந்தீங்களா, நானும் அப்படி தான் இருந்தேன். உங்களை எப்படியாவது வந்து பார்க்கணும்ன்னு தோணும். எங்க உங்களை வந்து பார்த்து திரும்பவும் உங்க வாழ்க்கையில எதுவும் பிரச்சனை வந்திருமோன்னு நினைச்சேன் என்றாள் கலங்கிய குரலில்.

 

 

“நான் பண்ணது முட்டாள்தனம்ன்னு எனக்கே தெரியுது, ஆனா என் நண்பர்களின் நல்லதுக்காக நான் அந்த முட்டாள் தனத்தை செய்தேன். அவரை பார்க்கற வரை எனக்கு சென்னை பற்றி வந்த நினைவுகளை ஒதுக்கியே வைத்திருந்தேன்

 

 

“என்னைக்கு என்னை பெண் பார்க்க அவர் வந்தாரோ அன்னையில இருந்து சென்னைக்கு வரணும், உங்களை பார்க்கணும்ன்னு எனக்குள்ள தீராத ஒரு எண்ணம் வந்திருச்சு. அதுவும் அவர் கார்த்தியோட அண்ணான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு

 

 

‘அடிப்பாவி அப்போ எங்க அண்ணாவை நீ இவனுங்களுக்காக தான் கல்யாணம் பண்றியா. அவரை பிடிக்காம தான் கல்யாணம் பண்ணப் போறியா. இது தெரியாம அவரு ஏகப்பட்ட கற்பனையில இருக்காரே என்று அண்ணனுக்காக உருகினாள் அங்கு ஓரத்தில் நின்றிருந்த கார்த்திகா.

 

 

சரயு பேசியதை கேட்டபிறகும் நண்பர்கள் இருவரும் மனம் உருகாமல் இருப்பரோ என்ன… “விடு சரயு எனக்கு உன் மேல வருத்தம் தான் கோவம் எதுவும் இல்லை. நீ ஒரு போனாவது பேசியிருக்கலாம்… போனது போகட்டும் விடு என்றான் வைபவ்.

 

 

“நானும் அதே தான் சரயு சொல்றேன், எனக்கு உன் மேல கோபம் ஒரு வார்த்தை பேசியிருக்கலாமேன்னு தான். சரி அதெல்லாம் இருக்கட்டும், நீ எங்களுக்காக தான் முத்துவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சியா என்று கார்த்திகா மனதில் நினைத்ததை கல்யாண் நேரடியாக கேட்டுவிட்டான்.

 

 

“முத்து பாவம் சரயு… உனக்காக எங்ககிட்ட வந்து பேசினார், உன்கிட்ட நாங்க கோபமா பேசக் கூடாதாம். நீ என்னடான்னா இப்படி சொல்ற என்றான் கல்யாண். “டேய் அவளை பார்த்தா உனக்கு தெரியலையா, பிடிக்காமலா சம்மதம் சொல்லியிருப்பா என்று வைபவ் அவளுக்காக வக்காலத்து வாங்கினான்.

 

 

“டேய் மக்குங்களா, அவரை பிடிக்காமலா சம்மதம் சொல்லியிருப்பேன். அவர் சென்னைன்னு தெரிஞ்சதும் கூடுதல் சந்தோசம் நல்லா மண்டையை ஆட்டிட்டேன். எங்க பெரியம்மா கூட என்னை ரொம்பவே கேலி பண்ணாங்க, ஜன்னல் வழியா மாப்பிள்ளையை பார்த்திட்டே இருக்கியேன்னு என்று சொல்லும் போது அவள் முகத்தில் வெட்கம் வந்தது.

 

 

வைபவும் கல்யாணும் பெருமூச்சு விட்டனர், அவளுக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்பதில் வந்த சந்தோஷ பெருமூச்சு அது. சரயு மேலும் தொடர்ந்தாள். “அவர் கார்த்தியோட அண்ணன்னு சொன்னதும் கொஞ்சம் கூடுதல் சந்தோசம், இந்த கார்த்தி என்னை காலேஜ்ல எப்படி எல்லாம் ஓட்டியிருப்பா. அதுக்கு நான் பழிக்கு பழி வாங்க வேண்டாமா என்றாள் அவள்.

 

 

“அதுக்கு உனக்கு என் பொண்டாட்டி தான் கிடைச்சாளா. அவளுக்கு ஒண்ணுன்னா நான் வந்து உன்னை கேட்பேன் என்றான் கல்யாண். “ஆமா… என் பொண்டாட்டி எங்க என்று அப்போது தான் அவன் மனைவியை பற்றி அவனுக்கு சிந்தனை எழுந்தது.

 

 

“நீ ரொம்ப நல்லவன்டா, அங்க பாரு அவ பாவமா உட்கார்ந்திருக்கா, அவளை திட்டி உட்கார வைச்சுட்டு, இப்போ வந்து என் பொண்டாட்டி எங்கன்னு வியாக்கியானம் பேசிட்டு இருக்கான். போ… போய் அவளை சமாதானப்படுத்து என்றான் வைபவ்.

 

 

“ஆமா… ஆமா… போ… போ… போய் நல்லா கூஜா தூக்கு என்று கிண்டல் செய்தாள் சரயு. “எனக்கு ஒண்ணும் என் பொண்டாட்டிக்காக கூஜா தூக்க எல்லாம் கஷ்டமில்லை. வெளிய பாரு முத்து கூஜாவோட உட்கார்ந்திருக்கார். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க நான் என் பொண்டாட்டியை சமாதானப்படுத்தி கூட்டி வர்றேன் என்றான் கல்யாண்.

 

 

“டேய் இங்க நெறைய பேரு இருக்கோம், எங்களை வெளிய அனுப்பிட்டு நீ ரொமான்ஸ் பண்ணப் போறியா என்றாள் சரயு. “அப்படியே இங்க ரொமான்ஸ் பண்ணிட்டாலும், நாங்க என்னமோ உன்னை கடத்திட்டு போகப் போற ரேஞ்சுக்கு உங்க வீட்டு ஆளுக அப்பப்போ எட்டி பார்த்திட்டு இருக்காங்க, ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய போங்களேன்

 

 

“நான் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றேன் என்றான் கல்யாண். “ஐந்து நிமிடம் போதுமாடா, முடியுமா என்றாள் சரயு. கல்யாண் பாவமாக வைபவை பார்க்க அவன் “சரயு வா கிளம்பலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.

 

 

அவர்கள் சென்றதும் கார்த்திகாவின் அருகில் வந்தவன் “ரித்தி… ரித்தி என்று அழைக்க அவளிடம் இருந்து பதிலில்லை. “சாரிம்மா கோபமா என்றான் அவன். “என்னை டின்னு சொல்லிட்டீங்க, போடின்னு சொல்லிட்டீங்க என்று கண்ணீர் மறைக்க அமர்ந்திருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

 

“தயவு செய்து புரிஞ்சுக்கோ நானே அவ மேல கோபமா இருந்தேன், நீ நடுவுல ஆரம்பிக்கவும் என்னோட கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன். ஏன் ரித்தி, நான் உன்கிட்ட என் கோபத்தை காட்டக் கூடாதா. நான் உன் புருஷன் தானே உன்கிட்ட கோபப்படாமே வேற யார்கிட்ட கோபப்படுறதாம் என்றான் கல்யாண்.

 

 

“முறைக்காதே செல்லம், சரயு மேல இருந்த கோபம் வேற, ஆனா உன்கிட்ட காமிச்சது ஒரு இயலாமைல வந்தது, அந்த மாதிரி எதுக்குன்னே தெரியாத இயலாமை கோபம் எல்லாம் பொண்டாட்டிகிட்ட தான் காட்ட முடியும். என்னை புரிஞ்சு நீ என்னை சமாதானப்படுத்த மாட்டியா. இப்படி தான் கோவிச்சுக்கிட்டு வந்து உட்காருவியா என்றான் கல்யாண்.

 

 

“இன்னும் என்னம்மா கோவம் உனக்கு என்றான் அவன். “அவ தான் எனக்கு அண்ணின்னு நினைச்சா எனக்கு பீதியாவே இருக்கு, பாருங்க உங்க முன்னாடியே என்னை பழிக்கு பழி வாங்க போறேன்னு சொல்லிட்டு போறா… இல்லை போறாங்க… என்று சீரியஸாக சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

 

“ஹேய் அவ சும்மா உன்னை கலாட்டா பண்றா, நீ நம்புறியா. அப்படி சொல்றவ தான் நாம சேர்றதுக்கும் ஒரு வகையில காரணம். அதை எப்படி நீ மறந்தாய் என்றான் அவன். “நான் ரொம்ப பேசிட்டேன், தொண்டை தண்ணி எல்லாம் வத்தி போச்சு என்று அவளை மேலும் அவனுடன் இறுக்கினான் அவன்.

 

 

“அதுக்கு… அதுக்கு நான் என்ன பண்ணனும்… விடுங்க என்று பின் வாங்க அவள் எடுத்த முயற்சிகளை முறியடித்து அவள் இதழ்களை சிறை பிடித்து அவன் தாகம் தனித்துக் கொண்டான். “போங்க, எங்க வந்து என்ன வேலை பார்த்து வைக்கிறீங்க. எல்லாரும் என்ன நினைப்பாங்க என்றாள் கார்த்திகா சிவந்த முகத்துடன்.

 

 

“நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டின்னு நினைப்பாங்க, இப்போ தான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கு போலன்னு நினைப்பாங்க. நினைச்சா நினைச்சுட்டு போறாங்க. போதுமா, வா போகலாம், இதுக்கு மேல இங்க வேற எதுவும் செய்ய முடியாது. நாம மத்ததெல்லாம் நம்ம அறைக்கு போய் வைச்சுக்கலாம் என்று கிண்டல் அடிக்க கார்த்திகா தலையில் அடித்துக் கொண்டு அவனுடன் சென்றாள்.

 

 

கோபமாக சென்றவர்கள் முகம் தெளிந்து சந்தோசமாக மாறியிருப்பதை பார்த்து எல்லோருமே மகிழ்ச்சி அடைந்தனர். சரயு வைபவ், கல்யாணுடன் பேசிக் கொண்டிருப்பதை ஒரு ஏக்கத்துடன் பார்த்தான் முத்துக்குமார்.

 

 

‘இங்க ஒருத்தன் இருக்கானேன்னு இவளுக்கு ஞாபகம் இருக்கா, அவளோட நண்பர்கள்கிட்ட மட்டும் நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுறா என்று மனதிற்குள் பொருமியவனுக்குள் சட்டென்று பழைய முத்து எட்டி பார்க்க அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

 

 

அவளை இழுத்து வந்து அவன் அருகில் உட்கார வைக்க வேண்டும் என்று எண்ணம் ஓடியது. அவனையே கவனித்துக் கொண்டிருந்த நிர்மல் அவனருகில் வந்தான். “என்ன அண்ணா என்ன பார்த்திட்டு இருக்க என்றான் அவன். “ஹ்ம்ம்… ஒண்ணுமில்லை என்றான் முத்து. “சும்மா சொல்லு அண்ணா அண்ணியை தானே பார்த்திட்டு இருக்க என்றான் அவன்.

 

“நான் தான் பார்க்குறேன், அவளுக்கு தான் நான் முக்கியமில்லையே. என்கிட்ட அவ இப்படி பேசினதே இல்லை, பாரு அவ முகத்துல எவ்வளவு சந்தோசம் என்று வெளிப்படையாக பொறாமைபட்டான் அவன். அவர்கள் பேசுவது கேட்டு அருகில் வந்த கார்த்திகா, “என்ன அண்ணா நீ புரிஞ்சுக்காம பேசுற

 

 

“நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு என்றாள் அவள். ‘என்ன என்பது போல் அவளை பார்த்தான் முத்துக்குமார். “எனக்கு அவரும் நீயும் ஒண்ணா என்றாள் சம்மந்தமே இல்லாமல், “ஹேய் என்ன லூசு மாதிரி கேட்குற, நான் உனக்கு அண்ணன். அவர் உனக்கு புருஷன் நாங்க எப்படி உனக்கு ஒண்ணா இருக்க முடியும் என்றான் எரிச்சலுடன்.

 

 

“நான் அவர்கிட்ட பேசுற மாதிரி உன்கிட்ட பேச முடியுமா, இல்லை உன்கிட்ட பேசுற மாதிரி அவர்கிட்ட பேச முடியுமா, சொல்லு என்றாள் அவள். “நீ என்ன தான் சொல்ல வர்றே என்றான் அவன் நேரடியாக. “ச…சரயு… அண்ணிக்கும் அதே தான்

 

 

“வைபவும் அவரும் அவங்களோட நண்பர்கள், அவங்களும் நீயும் எப்படி ஒண்ணாக முடியும். அவங்ககிட்ட பேசுற மாதிரியே எப்படி உன்கிட்ட பேச முடியும். நீ இதுக்காக அவங்க மேல கோபமோ பொறாமையோ படாதே அண்ணா. அவங்க ரெண்டு பேரும் அவளுக்கு ரொம்ப முக்கியமானவங்க, நீ அவங்களுக்கு உயிரானவன். இதை புரிஞ்சுக்கோ, எப்போமே அவங்களை கஷ்டப்படுத்தியோ காயப்படுத்தியோ பார்க்காதே என்றாள் கார்த்திகா.

 

 

முத்துவின் முகம் நன்றாக தெளிவடைந்தது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது. அந்நேரம் கல்யாண் முத்துவை அழைக்க அவன் அங்கு சென்றான். “என்ன கல்யாண் எதுக்கு கூப்பிட்டீங்க என்றான் முத்து.

 

 

“ஹேய் வைபவ் இங்க பாருடா இங்க சரயு… சரயுன்னு… ஒரு வாயாடி இருந்தா, இப்போ அவ எங்கடா போனா என்று கிண்டலடித்தான். “என்னாச்சு எதுக்கு கிண்டல் பண்றீங்க என்றான் முத்து.

 

 

“முத்து உங்க ஆளு நீங்க வந்ததும் எப்படி வாயை மூடிக்கிட்டா பாருங்க. இவ்வளவு நேரம் வாயடிச்சிட்டு இருந்தா, நான் நீங்க வந்ததும் இப்படியே பேசுவியான்னு கேட்டேன். அதெல்லாம் பேசுவேன்னு சொல்லிட்டு இப்போ எப்படி நிற்குறா பாருங்க என்றான் கல்யாண்.

 

 

“கல்யாண் நம்ம சரயுவுக்கு வெட்கம் எல்லாம் வருது போலிருக்கு என்றான் வைபவ். “டேய்…!!! என்று பல்லைக் கடித்தாள் சரயு. “அடக்கடவுளே கல்யாண் பேச்சு போனது நம்ம சரயுவுக்கு மட்டுமில்லை, நம்ம மாப்பிள்ளை சாருக்கும் தான் இங்க பாருடா. ரெண்டு பேரும் கண்ணுலேயே பேசிக்கறாங்க என்றான் வைபவ்.

 

 

அதுவரை சரயுவின் மேல் சிறு கோபமும், வருத்தமும், இயலாமையுமாக இருந்தவன் மனதை கார்த்திகா தன் பேச்சால் மாற்றியிருக்க சரயுவின் பார்வை அவனுக்குள் சில்லென்று மழைச்சாரல் வீசுவது போல் இருந்தது. யாரோ மனதை மயிலிறகால் வருடுவது போன்ற ஒரு சுகம் தோன்றியது.

 

 

‘எப்போதடா இவளை என்னவள் ஆக்கிக் கொள்வேன் என்ற துடிப்பு அவன் கண்களில் தெரிந்தது, அவன் கைகள் அப்போதே அவளை அணைக்க துடித்தது. அவன் விழிகளில் ஒரு ஆர்வம் வந்திருக்க அவளை இமைக்காது பார்த்தான். அவன் பார்வை சொல்லிய சேதி அவளுக்குள் ஏதோ செய்ய இமை தாழ்ந்தாள்.

 

 

“ஹ்க்கும்… ஹ்க்கும்… என்று கனைத்தான் கல்யாண். “நாங்க இங்க தான் இருக்கோம், கார்த்தி இங்க வா என்று அவன் மனைவியை அழைத்து அருகில் வைத்துக் கொண்டான். “ஏன்டா என்னை உசுப்பேத்தறீங்க என்று அப்பாவியாய் முழித்தான் வைபவ்.

 

 

“உன்னை நாங்க புதுசா வேற உசுப்பேத்தணுமா, உன்னை நான் நல்லவன்னு நம்பிட்டு இருந்தது எல்லாம் ரொம்ப பழைய காலம். உன்னை புடவை கடையில எப்போ பார்த்தேனோ அப்போல இருந்து என்னோட முடிவுல மாற்றம் வந்திருச்சு என்றான் கல்யாண் சீரியஸாக.

 

 

“டேய் நாம இவ்வளவு பேசிட்டு இருக்கோம், இதுங்க ரெண்டும் எந்த லோகத்துக்கு போச்சுங்க, எப்போ வருவாங்க. எனக்கு வேற பசிக்குது, நிச்சயத்தார்த்தமாச்சே நல்ல சாப்பாடு போடுவாங்கன்னு பார்த்தா, இவங்க பார்த்தே கொல்றாங்களே என்று புலம்பினான் கல்யாண்.

 

 

“அப்பா சாமிங்களா நீங்க கொஞ்சம் எங்களையும் கவனிங்க, ரொம்ப நேரமா நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். உங்க காதுல எதுவுமே விழலையா. சரயு உங்க ஊர்ல இருக்க எல்லாரும் நல்லா வாட்ச்மேன் வேலை பார்க்குறாங்க

 

 

“அந்த கிடா மீசைக்காரன் முறைக்கிறதை பார்த்தாலே பயமா இருக்கு. இன்னைக்கு நம்மை தான் பிரியாணி ஆக்கிருவானுங்க போல. இதுக்கு மேல நாம பேசிட்டு இருந்தோம் அவ்வளவு தான், ஒவ்வொரு மீசையும் ஒரு ஒரு கிலோ தேறும் போல. என்னத்தை போட்டு வளர்க்குறானுங்க வைபவ்.

 

 

“முத்து வாங்க போகலாம் என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள் அவர்கள். நிச்சயம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்த வேளையில் எல்லோரும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் இருக்க நிர்மல் அவனுக்கு வந்த அழைப்பில் என்ன கேட்டானோ முகம் இறுக நின்றிருந்தான்.

 

 

வைபவிடம் வந்தவன் “மாமா உங்ககிட்ட தனியா பேசணும் என்று அவனை தனியே அழைத்துச் சென்றான். “சொல்லு நிர்மல் என்ன விஷயம் என்றான் வைபவ். “நான்… நாம புடவை எடுத்தோம்ல அதுக்கு மறுநாள் அபி அக்காவை பார்க்க போயிருந்தேன் என்று நிறுத்தினான்.

 

 

‘இவன் எதுக்கு அவளை பார்க்க போனான் என்று யோசித்தவன் ‘அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தான். “அங்க தான் என்னோட காலேஜ்ல படிச்ச அன்வரை பார்த்தேன். யாரை பார்க்க வந்திருக்கேன்னு விசாரிச்சுட்டு இருந்தான். அபி அக்காவை பார்க்க தான் வந்திருக்கேன்னு சொல்லிட்டு அப்புறம் நான் அபி அக்காகிட்ட பேச போயிட்டேன்

 

 

“இன்னைக்கு அவன் எனக்கு போன் பண்ணியிருந்தான், இப்போ தான் பேசினான். அவன் ஒரு தகவல் சொல்ல தான் என்னை கூப்பிட்டான். அது…அது… என்று அவன் தயங்க பொறுமையிழந்த வைபவ் “என்னாச்சு நிர்மல், அபிக்கு எதுவும் பிரச்சனையா என்றான் பதட்டமான குரலில்.

 

 

“ஆமா மாமா யாரோ செந்திலாம் அவங்க கூட வேலை பார்க்கறவங்க, அன்வர் டீம்ல இருக்கறவராம். பொதுவா எல்லா பொண்ணுங்களையும் பார்த்து ரொம்ப வழிவானாம். ரெண்டு நாள் முன்ன கூட அபி அக்காகிட்ட ஏதோ வம்பு பண்ணியிருப்பான் போல அக்கா அவனை அடிச்சுட்டாங்களாம்

 

 

“அதை அன்னைக்கே அவன் எதேச்சையா பார்த்திருக்கான், ஆனா அதை பத்தி அன்னைக்கு என்கிட்ட எதுவும் சொல்லலை. இப்போ அவன் திரும்பவும் அவங்ககிட்ட ஏதோ வம்பு பண்றான் போல, இவன் நல்லவேளையா அந்த பக்கம் போக அக்கா தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு அங்க இருந்து ஓடினாங்களாம்

 

 

“அந்த செந்தில் வேற யார்கிட்டயோ அவளை சும்மா விடமாட்டேன்னு சொல்லியிருக்கான் அதை சொல்ல தான் அவன் எனக்கு போன் பண்ணியிருந்தான் மாமா என்று அவன் சொல்லி முடித்துவிட்டு வைபவை பார்த்தான். இதுவரை அவன் வைபவை அப்படி பார்த்ததே இல்லை அவ்வளவு ருத்திரமாக இருந்தது அவன் முகம்.

 

 

உடலில் இருந்த ஒட்டுமொத்த ரத்தமும் முகத்தில் வந்துவிட்டது போலும், கோபத்தில் முகம் சிவந்திருந்தது. அவன் கைமுஷ்டி இறுகியிருப்பது தெரிந்தது. “மாமா என்று அவன் அழைக்க அவனிடத்தில் இருந்து எந்த பதிலுமில்லை.

 

 

மீண்டும் நிர்மல் அழைக்க அப்போது அவனை பார்த்தான் வைபவ். “நிர்மல் எனக்கு ஒரு உதவி பண்ணனும், எனக்கு இன்னைக்கே ஊருக்கு போக பஸ்ல டிக்கெட் கிடைக்குமா என்றான் அவன். “நான் ரெண்டு நாள்ல திரும்பி வந்திடுவேன், இங்க ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ என்றான் அவன்.

 

 

“மாமா நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நானும் உங்ககூட வர்றேனே என்றான் நிர்மல். “வேணாம் நிர்மல் நீ எதுக்கு இங்க நெறைய வேலை இருக்கும், நீ அதை பாரு என்று மறுத்தான் அவன். “இல்லை மாமா நான் வந்தா அன்வரை பார்த்து பேசன்னு கொஞ்சம் சுலபமா இருக்கும்

 

 

“அதுவுமில்லாம உங்களை மட்டும் அனுப்பிட்டு என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது சரின்னு சொல்லுங்க என்றான் சிறுபிள்ளை போல். அவன் சொல்வதும் ஓரளவு சரியென்றே தோன்ற சரியென்றான் அவன். இருவருமாக கல்யாணை சந்தித்து விபரம் கூறிவிட்டு அன்றே சென்னைக்கு கிளம்பினர்.

 

 

சரயு தான் அவனை கிண்டல் செய்தாள், “உன்னால அபியை பார்க்காம இருக்க முடியலை அதான் ஊருக்கு போறே என்று கேலி செய்து அனுப்பினாள். கோயம்பேட்டில் இறங்கியதும் நிர்மல் வைபவிடம் விடைபெற வேண்டி திரும்பினான்.

 

 

“மாமா நீங்க வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வாங்க, நான் இப்படியே என் நண்பனோட வீட்டுக்கு போய்ட்டு குளிச்சுட்டு நேரா அபி அக்கா ஆபீஸ் வந்திடுறேன் என்றான் அவன். “என்ன நிர்மல் விளையாடுறியா, நீ என்னோட வீட்டுக்கு வா, இவ்வளவு தூரம் வந்திட்டு உன் நண்பன் வீட்டுக்கு போகப் போறியா, அதெல்லாம் சரிப்படாது என்று அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

 

நிர்மல் தான் தவித்து போனான், ‘அய்யோ அங்க அவ இருப்பாளே, நாம பேசலைன்னா கூட நம்மகிட்ட பேசி உசுப்பேத்துவாளே. அவளை எப்படி பார்க்க போறேனோ என்று பதட்டம் வந்தது அவனுக்கு. அவளை பார்க்கும் ஆவலும் ஒருசேர எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அபியிடம் பேசியது ஞாபகம் வரவும் மனம் சற்று சமனப்பட்டது.

 

 

வைபவை திடிரென்று எதிர்பார்க்காததால் கதவை திறந்த சாந்தி என்னவோ ஏதோ என்று பதட்டமானார். “அம்மா ஒண்ணுமில்லை இங்க ஒரு சின்ன வேளை அதான் கிளம்ப வேண்டியதா போச்சு. அங்க சிக்னல் சரியில்லை, அதான் உங்களுக்கு ஒரு போன் கூட பண்ண முடியலைம்மா என்றான் வைபவ்.

 

 

“அப்புறம் அம்மா நிர்மலும் இங்க ஒரு வேலையா வந்திருக்கான், நம்ம வீட்டில தான் தங்க போறான். அவங்க வீட்டில தான் எல்லாரும் ஊர்ல இருக்காங்க இல்லையா அதான் என்னோடவே கூட்டிட்டு வந்துட்டேன். அவன் என்னோட அறையிலேயே தங்கிக்குவான், பார்த்துக்கோங்கம்மா என்றான் தொடர்ந்து.

 

 

“சரிப்பா அதுக்கென்ன தங்கமா தங்கிட்டு போகட்டும். உள்ளே போப்பா, கூச்சப்படாதே என்றார் சாந்தி. அவரை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்ற நிர்மலின் கண்கள் அலை பாய்ந்தது. “நிர்மல் நீ இந்த குளியறையில் குளிச்சுட்டு வந்திடு நானும் இப்போ குளிச்சு தயார் ஆகிடுவேன், நாம கிளம்பலாம் என்றுவிட்டு வைபவ் சென்றுவிட்டான்.

 

 

இருவரும் குளித்து தயார் ஆகி வெளியே வரும் வரையும் நந்துவை அவனால் பார்க்க முடியவில்லை, இருவரும் சாப்பிட்டு கிளம்பும் போது எங்கோ வெளியில் சென்றிருந்தவள் வீட்டிற்குள் நுழைந்தாள். “டேய் அண்ணா நீ எப்போ வந்தே, கல்யாணம் முடிஞ்சு தானே வருவேன்னு சொன்னே என்றாள் அவள்.

 

 

“அந்த கதை எல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டேன், நீ அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு நிர்மலை அழைத்துக் கொண்டு கிளம்பினான் அவன்.

 

 

அபியின் அலுவலகத்திற்கு சற்று முன்னாலேயே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நின்றார்கள் இருவரும். நிர்மல் ஏற்கனவே அன்வருக்கு போன் செய்து வரச்சொல்லி இருந்தான். அந்த பழச்சாறு கடையின் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.

 

 

வைபவின் நல்ல நேரமோ இல்லை செந்திலின் கெட்ட நேரமோ அவனே அந்த கடைக்கு வந்தான். பக்கத்தில் இருந்த கடையில் புகை பிடிக்க வந்தவன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரையுமே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். இவனுங்க தானே அன்னைக்கு வந்தவனுங்க என்ற ஆத்திரம் வர அறிவிழந்தவன் நேரே அவர்கள் எதிரில் சென்று நின்றான்.

 

“டேய் நீங்க ரெண்டு பேரும் தானேடா அன்னைக்கு அந்த ஊமை குசும்பியை பார்க்க வந்தீங்க, அவளுக்கு வாய் தான் இல்லை. ஆனா நல்லா ஆளுங்களை பிடிக்கிறா, ஆமா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க, சொல்லுங்க உங்ககூட மட்டும் வர்றாளே, நான் அதைவிட அதிகமா கொடு…… என்று முடிப்பதற்குள் அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறை விழுந்தது.

 

 

“டேய் யாரை பத்தி என்ன பேசுற, அவளை தப்பா பேசின உன்னை தொலைச்சுருவேன். என்னடா தெரியும் உனக்கு அவளை, நான் யாருன்னு தெரியுமா, இல்லை இவன் யாருன்னு உனக்கு தெரியுமா. தெரியாம எதுக்குடா வார்த்தையை விடறேஎன்றவனின் ஆத்திரம் அடங்காமல் மீண்டும் அவனை அறையச் செய்தது.

 

 

“நான் அபியை கட்டிக்க போறவன், இவன் அவளுக்கு தம்பி. பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு கேவலமா, அவளால வாய் பேச முடியலைன்னா அதுவும் உனக்கு கேவலமா. உன்னை மாதிரி கேவலமா பேசுறவனுக்கு எல்லாம் எதுக்கு வாய்

 

 

“யாருக்கும் கெட்டது நினைக்காத அவளுக்கு வாய் இல்லைன்னாலும் நல்ல மனசிருக்கு. நீ அழுக்கு பிடிச்சவன், நல்லவேளை நீ பேசினதை கேட்க ஆண்டவன் அவளுக்கு கேட்கும் திறனை கொடுக்கலை, இல்லன்னா அவ எப்படி துடிச்சிருப்பாளோ. சீய் நீயும் ஒரு மனுசனா என்றவன் செந்திலின் சட்டையை இழுக்க அன்வர் வேகமாக வந்தான்.

 

 

நிர்மலும் அன்வருமாக அவனை தடுத்தனர், “மாமா விடுங்க மாமா, ஆத்திரப்படாதீங்க. பாருங்க எல்லாரும் நம்மை தான் பார்க்குறாங்க. வாங்க போகலாம் என்று அவனை தள்ளிக் கொண்டு நடந்தான். “என்னடா அன்வர் சீக்கிரம் வரமாட்டியா என்று நண்பனை கடிந்தான்.

 

 

“இல்லைடா ஒரு வேலையா இருந்தேன், முடிச்சுட்டு வர்றதுக்குள்ள இங்க என்னென்னமோ ஆகிப் போச்சு. சாரிடா என்றான் அவன் மன்னிப்பு கோரும் குரலில். “மாமா இவன் தான் அன்வர் என்று வைபவிற்கு அறிமுகம் செய்தான்.

 

 

“அன்வர் எனக்கொரு உதவி பண்ணணும், எனக்கு அபியோட மேனேஜரை பார்க்கணும். முடியுமா, இப்போவே பார்க்கணும் என்றான் அவன். “சார் அவரை எதுக்கு பார்க்கணும், நான் பார்த்துக்கறேன் சார், இனி செந்தில் அபி அக்கா வழில வராம நான் பார்த்துக்கறேன் என்றான் அவன். “அதுக்கில்லை அன்வர் தயவு செய்து ஏற்பாடு பண்ணுங்களேன் என்றான் கெஞ்சும் குரலில்.

 

 

“சரி வாங்க சார் என்று அவர்களை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகம் சென்றான். “சார் ஒரு நிமிஷம் நான் போய் ரஞ்சித் சார்கிட்ட பேசிட்டு வர்றேன் என்றுவிட்டு உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர்களை அழைத்தான்.

 

 

“நிர்மல் நீ இங்கேயே இரு, நான் போய் பேசிட்டு வந்திடறேன் என்று கூறிவிட்டு அவன் அன்வருடன் உள்ளே சென்றான். ஏதோ வேலையாக அமர்ந்திருந்த அபி ஏதோ தோன்ற வாசலை நோக்கினாள். வைபவ் உள்ளே நடந்து வருவது போல் தோன்ற கண்களை நன்றாக கசக்கி பார்த்தாள்.

 

 

வந்தது அவனே தான், நேராக நடந்து வந்தவன் வளைவில் திரும்பும் போது அவளை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு அன்வருடன் சென்றான். அபிக்கு படபடப்பாக இருந்தது, என்னை தேடி தான் வந்திருக்கிறாரோ, ஆனால் என்னிடம் பேசாமல் எங்கு செல்கிறார் என்று யோசனையுடன் நின்றிருந்தாள்.

 

 

அன்வர் ரஞ்சித்தின் அறைக்கதவை தட்டிவிட்டு அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். “ஹேய் வைபவ் எப்படி இருக்கீங்க என்றவாறே இருக்கையில் இருந்து எழுந்து வந்தான் ரஞ்சித். “அன்வர் நீங்க போங்க நான் இவர்கிட்ட பேசிக்கறேன், இவரை எனக்கு நல்லா தெரியும் என்று தொடர்ந்து கூறினான்.

 

 

அன்வர் வெளியில் சென்றதும் வைபவ் ரஞ்சித்தை பார்த்து புன்னகைத்தான். “அப்புறம் உங்க மனைவி எப்படி இருக்காங்க என்று விசாரித்தான் வைபவ். “என்ன வைபவ் நீங்க பார்த்து தானே எங்க கல்யாணம் நடந்திச்சு, ரொம்ப நல்லா இருக்கோம் என்றான் ரஞ்சித்.

 

 

“சொல்லுங்க வைபவ் நீங்க ஏதோ என்கிட்ட பேசணும்ன்னு அன்வர் சொன்னான், என்ன விஷயம் என்றான் அவன் நேரிடையாக. “நன்றி ரஞ்சித், நான் பேச வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிக்கறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன், நீங்களே கேட்டுடீங்க என்றவன் செந்திலை பற்றியும் அவன் வைபவிடம் பேசியது பற்றியும் கூறினான்.

 

 

“அபியை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் திருமணம் என்று முடித்தான் வைபவ். “வாழ்த்துக்கள் வைபவ். அப்புறம் மன்னிச்சுடுங்க உங்களுக்கு தேவையில்லாத சங்கடம் வேற, செந்திலை கூப்பிட்டு நான் கண்டிக்கறேன் என்றான் ரஞ்சித்.

 

 

“ரஞ்சித் எனக்கு உங்க சேர்மனை பார்க்கணும், இந்த செந்தில் உங்க சேர்மனுக்கு சொந்தம்ன்னு கேள்வி பட்டேன். நான் அவர்கிட்ட பேசணுமே என்றான் பீடிகையாக. நெற்றி சுருக்கி யோசித்த ரஞ்சித் “சரி பார்க்கலாம் என்றவன் மேஜையில் இருந்த போனை எடுத்து பேசிவிட்டு வைபவை அழைத்துக் கொண்டு சேர்மனை சந்திக்கச் சென்றான்.

 

 

மரியாதை நிமித்தம் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றனர். “வாங்க ரஞ்சித், வாங்க சார்… ஹேய் நீங்க ரஞ்சித் கல்யாணம் பண்ணி வைச்ச அந்த கல்யாண வைபவம் ஆளுங்க தானே. ஆமா எங்க உங்களோட இருப்பாரே இன்னொருத்தர் என்றார் அவர்.

 

 

“சார் இவங்க கல்யாணம் நடந்து ஒரு மூணு வருஷமிருக்கும், இன்னும் எங்களை மறக்காம ஞாபகமா கேட்குறீங்க. ரொம்ப நன்றி சார், கல்யாண் நல்லாயிருக்கான், ஊருக்கு போயிருக்கான் என்றான் வைபவ்.

 

 

“உன்னை சீக்கிரமே நான் தேடி வருவேன்ப்பா என்றார் அவர், “என்ன சார் உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறீங்களா என்றான் வைபவ். “அடப்போப்பா நீ வேற என் பொண்ணு இப்போ தான் பன்னிரண்டாவது படிக்கிறா, அவளுக்கு கல்யாணமா. எல்லாம் என் பொண்டாட்டியோட தம்பிக்கு தான் என்றார் அவர்.

 

 

“சொல்லுங்க சார் பார்த்திடலாம் என்றான் வைபவ். இடையில் ரஞ்சித் “சார் என்றதை அப்போது தான் கவனித்த சேர்மன், “சாரி ரஞ்சித் நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க, சொல்லுங்க என்ன விஷயம் என்றார் அவர். “சார் இவர் உங்களை பார்க்க தான் வந்திருக்கார், இவர் அபி விஷயமா உங்ககிட்ட பேச வந்திருக்கார் என்று நிறுத்திவிட்டு அவன் வைபவை பார்த்தான்.

 

 

“ஆமா சார் அபி எனக்கு மனைவியாக போறவங்க… என்று ஆரம்பித்தவன் செந்திலை பற்றி கூறினான். சேர்மனின் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. “ரஞ்சித் இதை ஏன் நீங்க முதல்லயே என்கிட்ட சொல்லலை என்றார் ரஞ்சித்தை பார்த்து.

 

 

“நீங்க சொல்லி இருக்கீங்க, ஆனா அவன் எல்லா பொண்ணுங்ககிட்டயும் ஏதோ வழியறான்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனா அபிகிட்ட இப்படி நடந்துகிட்டது ரொம்பவே தப்பு என்று தொடர்ந்தார்.

 

 

“செந்தில் என்னோட சொந்தம்கறது எல்லாம் இந்த அலுவலகத்திற்கு வெளியே தான், இங்க அவனும் ஒரு தொழிலாளி தான். நீங்க எனக்காக எந்த சலுகையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம், எந்த சலுகையும் காட்ட வேண்டாம். அவன் மேலே என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க என்றார் அவர்.

 

“சார் அதெல்லாம் எதுவும் வேணாம் சார். உங்ககிட்ட இந்த விஷயம் சொல்லணும்ன்னு தான் நினைச்சேன், ஆனா அவன் மேல நடவடிக்கை எடுத்து அவர் வேலை என்னால பாதிக்க வேண்டாம் என்றான் வைபவ். “சார் அப்புறம் செந்திலை இங்க வர சொல்ல முடியுமா என்றான் அவன்.

 

 

யோசனையாக வைபவை நோக்கியவர் யாருக்கோ போன் செய்தார் சிறிது நேரத்தில் செந்தில் அந்த அறைக்குள் நுழைந்தான். வைபவிடம் அடி வாங்கியவன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று வந்தவனை சேர்மன் அழைப்பதாகக் கூற அவனும் அவரை பார்க்க என்று வந்திருந்தான்.

 

 

அவன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது, சேர்மனையும் வைபவையும் மாறி மாறி பார்த்தான். இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த வைபவ் செந்திலின் கைகளை பிடித்துக் கொண்டு “என்னை மன்னிச்சுடுங்க செந்தில், நான் ஏதோ கோபத்தில உங்களை அடிச்சிட்டேன். மனசுல வைச்சுக்காதீங்க, தப்பு என்னோடது தான் என்றதும் திகைத்து விழித்தான் அவன்.

 

 

“சார் தப்பு பண்ணது நான், நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறீங்க. நீங்க தான் சார் என்னை மன்னிக்கணும். அபிகிட்ட நான் அப்படி நடந்துகிட்டது தப்பு சார். நீங்க யாருன்னு தெரியாம உங்ககிட்ட ரொம்ப தப்பா பேசிட்டேன் என்றவன் குறுகினான்.

 

 

“இப்போ எதுக்கு செந்தில் கூனி குறுகி நிக்குற, தப்பு பண்ணும் போது இருக்கணும் இதெல்லாம். பொண்ணுங்க வேலைக்கு வர்றதே பெரிய விஷயம், அதுலயும் இந்த பொண்ணு அதோட குறைகளை ஜெயிச்சு நம் அலுவலகத்தில ரொம்ப நல்லா வேலை பார்த்திட்டு இருக்கா, அவகிட்ட போய் இப்படி எல்லாம் பண்ணியிருக்க

 

 

“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை உன்கிட்ட, உனக்காக இவர்கிட்ட பொண்ணு பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தேன், ச்சே என்று சேர்மன் முகத்தை திருப்பினார். “மாமா தப்பு தான் மாமா மன்னிச்சுடுங்க என்று அவர் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

 

“சார் நீங்க இவருக்கு தான் பொண்ணு பார்க்க சொன்னீங்களா, நான் பார்த்து கொடுக்கறேன் சார். விட்டுடுங்க அவர் தப்பை உணர்ந்திட்டார், அவரை தண்டிக்காதீங்க. அபி இதெல்லாம் விரும்பமாட்டா என்றார். “எப்படி வைபவ் நீங்க இப்படி இருக்கீங்க, உங்களை பார்த்தா ஆச்சரியமா இருக்கு, அபி ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்காங்க நீங்க கிடைக்க, நீங்களும் தான் அபி மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும் என்றார் அவர்.

 

 

“சரி சார் நான் கிளம்பறேன் என்றான் வைபவ். “வைபவ் நீங்க அபிகிட்ட பேசணுமா என்றார் முகத்தில் புன்னகையை தேக்கி, “இல்லை சார் இது வேலை நேரம், நான் இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய் பேசிக்கறேன். ரொம்ப நன்றி சார், செந்தில் மன்னிச்சுடுங்க என்றுவிட்டு கிளம்பினான் அவன்.

 

 

“சார் நீங்க உண்மையாவே ரொம்ப லக்கி தான், அதான் அபி உங்களுக்கு கிடைச்சு இருக்காங்க என்றவனின் குரலில் ஒருவித இயலாமையும் ஏக்கமும் வந்து போனது போல் இருந்தது. சட்டென்று திரும்பியவன் “நீங்க அபியை… என்று இழுக்க, “விரும்பினேன்னு சொன்னா ரொம்ப கீழ்த்தரமா இருக்கும் சார்

 

 

“உண்மையாவே விரும்பி இருந்தா அவங்களை தப்பா பேசியிருக்க என்னால முடியுமா, உங்களுக்கும் அவங்களுக்கும் இன்னும் கல்யாணம் கூட நடக்கலை ஆனா அவங்க விருப்பு வெறுப்பு எல்லாம் நீங்க அறிஞ்சு நடக்கறீங்க. இனிமே என்னால அவங்களுக்கு… அவங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் எந்த தொல்லையும் இருக்காது என்றான் செந்தில்.

 

 

வைபவ் வெளியில் காத்திருந்த நிர்மலை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அபி வெளியில் பரிதவிப்பில் இருந்தது புரியாமல் வைபவ் அவளிடம் எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டான். செல்லும் முன் அவளை நிறைவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.

 

 

‘என்னாச்சு இவருக்கு, வந்தாரு, உள்ள போய் ரஞ்சித்கிட்ட பேசினாரு, அப்புறம் சேர்மன் அறைக்கு போனாரு. இப்போ அவர் பாட்டுக்கு வெளிய போறாரு, அப்போ என்னை பார்க்க அவர் வரவே இல்லையா என்று அவள் மனம் சிணுங்கியது.

 

 

நிர்மலும் அவனுடன் வந்திருந்தது நிர்மல் அனுப்பிய குறுந்தகவலில் இருந்து அறிந்தாள், அங்கு என்ன நடந்தது என்பதை எப்படியோ ரஞ்சித், நிர்மல் மூலமாக அறிந்து கொண்டவளின் மனம் தன்னவனின் துணிவில் சிலிர்த்தது. அவன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லியிருந்ததை ரஞ்சித்தின் மூலம் அறிந்தவள் அவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினாள்.

 

 

நிர்மலுடன் அவன் அலுவலகத்திற்கு சென்று சில வேலைகளை முடித்துக் கொண்டு மாலை நிர்மலுடனே அவன் வீட்டிற்கு வந்தான். அவன் அன்னை கோவிலுக்கு சென்றிருக்க அவன் தங்கை நந்து மட்டுமே வீட்டிலிருந்தாள். “என்ன அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட என்றாள் அவள்.

 

 

வீட்டிற்கு வந்து குளித்து வேறு உடைக்கு மாறியவன் நிர்மலிடம் “நிர்மல் நான் கொஞ்சம் வெளிய ஒரு வேலையா போறேன், நீங்க வீட்டில இருங்க நான் வந்திடுவேன் என்று சொல்லிவிட்டு நந்துவிடம் திரும்பி “நந்து அம்மா வந்தா சொல்லிடு நான் எப்படியும் ஒரு மணி நேரத்துல வந்திடுவேன், சரியா, அப்புறம் நிர்மலை கொஞ்சம் பார்த்துக்கோ என்றுவிட்டு கிளம்பினான்.

 

 

“மாமா நானும் உங்ககூட வர்றேனே, எனக்கும் வீட்டில போரடிக்கும். இல்லன்னா நான் என்னோட நண்பன் வீடு பக்கத்துல தான் இருக்கு போய் பார்த்திட்டு வந்திடறேன் என்று கிளம்பினான்.

 

 

“நிர்மல் கொஞ்சம் நேரம் வீட்டில இருங்க, ரொம்ப போரடிச்சா நீங்க கிளம்புங்க. இவகிட்ட நான் சொல்லிவைக்கிறேன், இவளுக்கு பயந்து எல்லாம் நீங்க கிளம்ப வேணாம் என்று நந்துவிடம் பழிப்பு காட்டிவிட்டு வைபவ் கிளம்பினான்.

 

 

பதிலுக்கு அவளும் பழிப்பு காட்ட அதற்குள் வைபவ் கிளம்பி சென்றிருந்தான், அவன் சென்றதும் நிர்மலை முறைத்தாள் அவள். “ஹலோ என்னங்க நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?? நீங்க என்னமோ என்னைய கண்டு தான் கிளம்புறீங்கன்னு எங்க அண்ணன் வேற கிண்டல் பண்ணிட்டு போறான்

 

 

“நான் அப்படியா உங்களை பயமுருத்தறேன் என்றாள் அவள். “அய்யோ அப்படிலாம் இல்லைங்க மாமா ஏதோ விளையாட்டா சொல்லிட்டு போறார். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்றான் நிர்மல் சமாளிக்கும் விதமாக, ஆனால் மனதிற்குள் ‘உண்மை அது தானே என்று நினைத்தான்.

 

 

“சரி உட்காருங்க, நான் போய் காபி கொண்டு வர்றேன். நான் போடுற காபியை நல்லா இருக்குன்னு குடிக்கிற ஒரே ஆளு நீங்க தான், நீங்க பல நாளுக்கு பிறகு இன்னைக்கு தான் சிக்கி இருக்கீங்க என்று உள்ளே விரைந்தவள் மணக்கும் காபியுடன் வந்தாள்.

 

 

“நிஜமாவே ரொம்ப நல்ல காபி ஆனா ஏன் எல்லாரும் உங்க காபியை குறை சொல்றாங்க என்றான் நிர்மல். “எல்லாம் என் நேரம் அதை விடுங்க, எனக்கு இப்போ ரொம்ப போரடிக்குது, நாம எதாச்சும் பேசலாமா என்றவளை விசித்திரமாக பார்த்தான் நிர்மல்.

 

 

“நீ மொக்கை போட நான் தான் உனக்கு கிடைச்சேனான்னு நீங்க கேட்கறது எனக்கு புரியுதுங்க, ஆனாலும் பாருங்க எனக்கு வேற வழியில்லை. எங்க வீட்டில டிவி வேற நேத்துல இருந்து வேலை செய்யலை. எங்கண்ணன் அவனோட லேப்டாப் கையோட கொண்டு போயிட்டானா

 

 

“எனக்கு படம் பார்க்கவும் வழியில்லை, அதான் உங்ககூட பேசலாம்னு. ஆமா நீங்க என்ன வேலை பார்க்குறீங்க, என்ன படிச்சு இருக்கீங்க என்றாள் அவள். மனதிற்குள் இது உனக்கு தேவையா என்று அவனை அவனே திட்டிக் கொண்டு அவளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

 

 

“நான் படிச்சது இஞ்சினீயரிங், வேலை பார்க்கறது ஒரு பன்னாட்டு நிறுவனத்துல என்றான் அவன். “ஆமா உங்கப்பா ஆபீஸ்ல நீங்க வேலை பார்க்கலையா என்றாள் அவள். “இல்லை எனக்கு பிடிக்கலை அது என் அப்பாவோட ஆபீஸ்ன்னு நீயே சொல்லிட்டியே அப்புறம் எப்படி நான் அங்க வேலை பார்க்க முடியும் என்றான் அவன் பதிலுக்கு

 

 

“என்னவா வேலை பார்க்கறீங்க என்று விடாமல் அடுத்த கேள்வியை கேட்டாள் அவள். “ப்ராஜெக்ட் மேனேஜர் என்றான், “அப்படின்னா என்ன வேலை என்றாள் அவள். “எனக்கு கீழே ஒரு முப்பது பேர் இருக்காங்க, நாலு டீம் இருக்கு. அவங்களுக்கு நாலு லீடர் இருக்காங்க

 

 

“என்னோட வேலை அவங்க எப்படி வேலை செய்யறாங்கன்னு பார்க்கறது. அவங்களுக்கு உதவுறது, அவங்க கொடுக்கிற ரிப்போர்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும், அப்புறம் எல்லாத்தையும் நான் என்னோட மேலதிகாரிக்கு சமர்பிக்கணும். இதெல்லாம் தான் என்னோட வேலை என்றான் அவன்.

 

 

“அடடா நீங்க பார்க்கறது வாட்ச்மேன் வேலை இதுக்கு பேரு ப்ராஜெக்ட் மேனேஜர். அய்யோ… அய்யோ… அவங்க என்ன வேலை பண்றாங்கன்னு பார்த்திட்டே இருந்தா நீங்க ப்போ தான் வேலை பார்ப்பீங்க. உங்களுக்கு இதுக்கு சம்பளம் வேற கொடுக்கறாங்க என்று அவள் தலையில் வேறு அடித்துக் கொண்டாள்.

 

 

‘அடியே என்னை வாட்ச்மேன்னா சொல்ற, இப்படி தொணதொணன்னு பேசுற உன் வாயை எப்படி தான் மூடுறதுன்னு தெரியலியே என்றவனின் கண்கள் பேசும் அவள் இதழையே நோக்கிக் கொண்டிருந்தது, அவன் எண்ணம் வேறு எங்கோ பயணம் செய்ய, முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், வேலையிருப்பதாக கூறி வெளியில் சென்றுவிட்டான்.

 

_____________________

வைபவ் அபியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான், அவள் வீட்டில் அவள் தந்தை அந்நேரம் வீட்டில் தான் இருந்தார். அவனை வரவேற்று அமர வைத்தார் அவர். ‘இந்நேரம் எதுக்கு வந்திருக்கார் என்ற எண்ணம் அவருக்குள் ஓடியது. “கற்பகம் மாப்பிள்ளை வந்திருக்கார், காபி எடுத்துட்டு வா என்று மனைவியை ஏவினார்.

 

 

“பரவாயில்லை இருக்கட்டும் மாமா, உங்க பொண்ணுக்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். உங்க அனுமதி வேணும் என்றான் நேரிடையாக அவரை பார்த்து. ‘கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடக்கப் போகுது, இந்த நேரத்துல என்ன பேசப்போறார்.

 

 

‘என்கிட்டயே வந்து என் பொண்ணுக்கிட்ட பேசணும்ன்னு சொல்லிட்டு என் முன்னாடி உட்கார்ந்திருக்காரே என்று அவருக்குள் முணுக்கென்று ஒரு கோபம் எழுந்தது. “இல்லை அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருந்தீங்க, ஏதோ சம்மதம் கேட்க பேசினீங்க, எங்கள்ள இப்படி எல்லாம் அனுமதிக்க மாட்டோம், தப்பா எடுத்துக்காதீங்க என்று மறுத்துக் கொண்டிருந்தார் அவர்.

 

 

‘இதுக்கு இவர் பொண்ணை வீட்டிலேயே வைச்சுட்டு இருக்க வேண்டியது தானே, எதுக்கு வேலைக்கு அனுப்பறார் என்று நினைத்துக் கொண்டான் வைபவ். “என்னங்க கொஞ்சம் பேசாம இருங்க இந்த காலத்துல போய் இதெல்லாம் பார்த்திட்டு. அவர் எவ்வளவு மரியாதையா நம்மகிட்ட வந்து கேட்குறார்

 

 

“அவர் என்ன மத்தவங்க மாதிரி வீட்டுக்கு தெரியாமையா நம்ம பொண்ணை வெளிய கூட்டிட்டு போய் பேசுறார். நம்மகிட்ட அனுமதி கேட்டு பேசணும்ன்னு நினைக்கிறார், நீங்க என்னமோ வியாக்கியானம் பேசிட்டு இருக்கீங்க என்றார் கற்பகம்.

 

 

வைத்தியநாதனுக்கும் மனைவி சொன்னது உறைக்க அதை ஒத்துக் கொள்ள மனமில்லாதவர், “எனக்கு வெளிய வேலை இருக்கு, நடராஜ்கிட்ட பத்திரிக்கைக்கு எப்படி அடிக்கணும்ன்னு சொல்லியிருந்தேன், நான் போய் ஒரு எட்டு பார்த்திட்டு வர்றேன் என்று அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

 

 

‘அனுமதி கொடுத்துவிட்டாராம் அது தான் அந்த பார்வை. “மாப்பிள்ளை நீங்க போய் பேசுங்க, எனக்கு பக்கத்துல ஒரு வேலை இருக்கு நான் அரைமணி நேரத்துல வந்திடுவேன், நீங்க வந்திருக்கீங்கன்னு நான் அபிகிட்ட சொல்லிட்டேன். நீங்க போய் பாருங்க என்றுவிட்டு அவர் வெளியே கிளம்பி சென்றுவிட்டார்.

 

மெதுவாக அபியின் அறைக்குள் நுழைந்தான் வைபவ், அவன் எப்போது வருவான் என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் காலடி தடம் கண்டதும் சொல்லொணாத மகிழ்ச்சி ஏற்பட்டது. வேகமாக எழுந்து நின்றவள் என்ன நினைத்தாலோ விரைந்து வந்து அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

 

 

அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள், வைபவ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் முதுகை தடவிக் கொடுத்தான். அவன் சட்டை நனைவது போல் இருக்க அவளை தன்னில் இருந்து பிரிக்க முயன்று தோற்றான் அவன். வெகுவாக முயன்று அவளை தன்னில் இருந்து பிரித்தான் அவன்.

 

 

“அபி எதுக்கு அழறே உன்னை பார்க்கலாம்ன்னு ஆசையா ஓடி வந்தா, நீ இப்படி தான் அழுவியா, அழற அளவுக்கு எதுவுமே நடக்கலையே. ஆனா நீ இந்த விஷயத்தை என்கிட்ட முன்னமீ சொல்லியிருக்கலாம், எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்றான் அவன்.

 

 

வேகமாக ஒரு காகிதம் எடுத்து அவனை பார்த்துக் கொண்டே எழுதியவள் அதை அவனிடத்தில் கொடுத்தாள். “உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கலை, நீங்க சரயுவை தேடி கிளம்புற நேரத்துல இதை பத்தி சொல்ல வேணாம்ன்னு தான் நான் சொல்லலை

 

 

“உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஆனா உங்களை பார்க்கணும்ன்னு தோணிட்டே இருந்துச்சு. உங்களை எப்போ பார்ப்போன்னு நான் ஏங்கிட்டு இருந்தேன். உங்களோட ஒவ்வொரு செயலும் எனக்கு உங்க மேல உள்ள நேசத்தையும் அன்பையும் கூட்டுது. நான் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி உணர்ந்ததே இல்லை என்று முடித்திருந்தாள் அவள். அவள் அருகில் வந்தவன் அவள் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

 

 

“இப்போ நான் இங்க தான் இருக்கேன், நல்லா பார்த்துக்கோ. நீ இன்னும் கூட என் மேல அன்பை காட்டலாம் என்று அவன் இருகன்னத்தையும் தொட்டு காண்பிக்க அவள் முகம் நாணத்தில் சிவந்தது, நிலம் நோக்கி அவள் சிரம் தாழ அவளை அவன் புறம் திருப்பினான்.

 

 

அந்த ஏகாந்த தனிமை அவனுக்கு தெம்பூட்ட தன்னை பார்த்து சிவந்து நிற்பவளின் தோற்றம் அவனுக்குள் ஏதோ செய்ய அவளை தன்புறம் இழுத்து அவள் இடைபற்றி அவன் மேல் அழுத்தியவன் அவள் இதழ்களை தன்வசமாக்கினான்.

 

 

அவள் மூச்சுக்கு ஏங்குவது புரிய மெதுவாக அவளை விடுவித்தவன் அவளை அவன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவளை விடுவித்து “சரி அபி நான் கிளம்புறேன், அங்க இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம், அதை முடிச்ச மறுநாளே நான் இங்க இருப்பேன். சரியா இப்போ நான் கிளம்பறேன். உங்கப்பா வேற வந்திடுவார் என்று சொல்லி அவன் கிளம்பினான்.

 

 

கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்க்க “அபி தயவு செய்து நீ இப்படி கண்ணீர் விடாதே, நீ ஒண்ணும் கோழையில்லை. எப்போமே நீ தானே என்னை அழ வைப்பே, அதாவது கலாட்டா பண்ணுவே, இப்போலாம் இப்படி கண்ணுலேயே ரொமான்ஸ் பண்ணா அப்புறம் நான் என்ன செய்வேன். அப்புறம் நீ அழறது எனக்கு பிடிக்கலை, இனி அதை எப்போதும் செய்யாதே என்றான் அவன்.

 

 

அவள் கண்ணீரை வேகமாக துடைத்தாள் அவள், சைகையிலேயே சரயுவை பார்க்க வேண்டும் என்று கூற அப்போது தான் நினைவு வந்தவனாக அவன் ஊரில் எடுத்த புகைப்படம் எல்லாம் அவளுக்கு காண்பித்தான்.

 

 

முத்துவின் புகைப்படம் காட்டியதும் விழித்தவள் அவனை நோக்க, “பாரு நீ கொடுத்த முத்தத்தில நான் மொத்தமாவே சொல்ல வந்ததை சொல்ல மறந்துட்டேன் என்றவன் ஊரில் நடந்த கதைகளை அவளிடம் கூறினான்.

 

 

அவளை மீண்டும் அணைத்து செம்மையான கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விடைபெற மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் அவன். மறுநாளே நிர்மலும் அவனுமாக ஊருக்கு கிளம்பி சென்றனர்.

 

 

மறுநாள் அவன் தேனியில் சென்று இறங்க சரயு அவனை வாரிக் கொண்டிருந்தாள். “வாங்க மாப்பிள்ளை சார், உங்களுக்கு இப்போ தான் இந்த ஊருக்கு வர்றதுக்கு வழி தெரியுதா, அப்புறம் அபியின் தரிசனம் வாங்கியாச்சா என்ன சொன்னாங்க. என்னை பத்தி சொல்லி இருக்கியா என்று விடாமல் அவனை கேள்விகளால் துளைத்தாள்.

 

 

“அவளுக்கு உன்னை நல்லா தெரியும், நீயும் கல்யாணும் எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு நான் அவளை பெண் பார்த்த அன்னைக்கே சொல்லிட்டேன். நீயும் முத்துவுமா இருக்க புகைப்படமும் அவகிட்ட காட்டினேன், அவளுக்கு ரொம்ப சந்தோசம். உன்னை நேர்ல பார்க்க அவ்வளோ ஆசையா இருக்கா

 

 

“இங்க வரமுடியலைன்னு அவளுக்கு லேசா ஒரு வருத்தமிருக்கு என்றான் வைபவ். “எனக்கும் அவங்களை பார்க்கணும். சென்னைக்கு வந்ததும் முதல் வேலை அது தான். என்னங்க சரி தானே என்று சொல்லி தள்ளி நின்றிருந்த முத்துவை பார்த்தாள். அவள் என்ன பேசினாள் என்று கூட கேட்காமல், “சரி சக்தி என்று அவன் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்தான்.

 

 

“அய்யோ அண்ணா அண்ணி என்ன சொல்றாங்கன்னு கூட கேட்காம இப்படி தலையை ஆட்டி வைக்கிறியே என்றான் நிர்மல். வைபவ், நிர்மல் இருவரையும் தனியே அழைத்து நடந்த விபரங்களை கேட்டறிந்தான் கல்யாண். பிரச்சனை முடிந்ததில் அவனுக்கு சற்று நிம்மதி வந்திருந்தது.

 

 

சரயு கல்யாண், வைபவ் இருவரையும் கூட்டிக் கொண்டு அவள் வேண்டுதலின் படி அவள் ஊர் கோவிலில் பொங்கல் வைத்தாள். “அய்யோ சரயு இவனுங்களை மலையிறக்கவா நீ வேண்டுதல் வைச்சே. என்கிட்ட சொல்லியிருந்தா உனக்கு சுலபமா ஒரு வழி சொல்லியிருப்பேனே என்றாள் கார்த்திகா.

 

 

“ரித்தி என்ன இது அவளை இப்படி தான் கூப்பிடுவியா என்றான் கல்யாண். “சாரி சாரி அண்ணி என்றாள் அவள். “என்னடா அவ எப்போவும் என்னை இப்படி தானே கூப்பிடுவா, நீ எதுக்கு புதுசா இப்படி எல்லாம் கூப்பிட சொல்ற என்றான் சரயு.

 

 

“அதெல்லாம் அப்போ சரயு, இப்போ அவ உன்னை அண்ணின்னு தான் கூப்பிடணும். அவ அப்படியே கூப்பிட்டு பழகட்டும் என்றான் கல்யாண். “சரி விடு என்றவள் கார்த்தியை நோக்கி “சொல்லு கார்த்தி அது என்ன சுலப வழி என்றாள் ஆர்வமாக.

 

 

“நீ… நீங்க உங்க குலசாமிக்கு பொங்கல் வைக்கறதுக்கு பதிலா, நல்லா நெய்யை ஊத்தி பொங்கல் செஞ்சு இந்த ரெண்டு ஆசாமிகளுக்கும் வைச்சிருந்தாலே இவங்க கிளீன் போல்ட் ஆகி இருப்பாங்க. ரெண்டும் நல்லா பொங்கல் தின்னு தின்னு எப்படி இருக்காங்க பாரு என்றாள் பாதி மரியாதை கொடுத்தும் கொடுக்காமலும்.

 

 

“அடடா இந்த உண்மை எனக்கு தெரியாம போச்சே, இப்போ மட்டும் என்ன கார்த்தி. சாமிக்கு படைச்சுட்டு நான் செய்யற இந்த பொங்கலை இவனுங்களுக்கே கொடுக்க வேண்டியது தான் என்றாள் சரயு. “அய்யோ நீ செய்ய போறியா, இனிமே நாங்க பொங்கலே சாப்பிட மாட்டோம் என்று ஓடினர் வைபவும் கல்யாணும்.

 

 

இரண்டு நாள் கடக்க பொழுது அழகாக விடிந்தது சரயுவின் கல்யாண மேளச் சத்தத்துடன், முகுர்த்த வேளை நெருங்க அழகிய வாடாமல்லி நிறத்தில் முழுதும் சரிகை இழையோட கட்டியிருந்த பட்டுசேலை சரசரக்க மணப்பெண்ணிற்கு உரிய நாணத்துடன் சரயு முத்துவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

 

முத்து பொன் தாலி எடுத்து அவள் கழுத்தில் அணிவித்து முடிச்சு போட கார்த்திகா அவள் பங்கை செவ்வனே செய்து கடைசி முடிச்சிட்டாள். உறவினர் புடைசூழ சுற்றமும் நட்பும் மனதார இருவரையும் வாழ்த்தி மங்கள அட்சதை தூவி வாழ்த்தினார்.

 

 

சரயுவிற்கு தன் சொந்தகளை விட்டுப் போகப் போகிறோம் என்ற உண்மை அந்த கணம் உறைக்க கண்களில் நீர் கோர்த்தது. “சக்தி சந்தோசப்பட வேண்டிய நேரத்துல எதுக்கும்மா கண் கலங்குற, உனக்கு எல்லாமுமா நான் கண்டிப்பா இருப்பேன்

 

 

“உன்னோட சொந்தம் எனக்கும் சொந்தம் தான் அவங்களை விட்டு போறோமேன்னு நினைச்சு வருத்தப்படாதே என்று சொல்லி அவள் கைகளில் தன் கையை வைத்து ஆறுதல் படுத்தினான். இருவரின் கையையும் இணைத்து அவன் மேல் துண்டை கட்டி அக்னியை வலம் வரும் போது முத்து அவளின் கையை ஆறுதலாகவே பற்றியிருந்தான்.

 

 

சரயு மனம் நிறைவாக உணர்ந்தாள், திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற சிறு சிறு சடங்குகளில் வைபவும் கல்யாணுமாக சேர்ந்து அவர்கள் இருவரையும் கலாட்டா செய்துக் கொண்டிருந்தனர். “இதுக்குள்ள போட்ட மோதிரத்தை கொஞ்சம் எடுங்க

 

 

“அது வைர மோதிரம் நீங்க எடுத்துட்டா அந்த மோதிரத்தை நீங்களே வைச்சுக்கலாம் என்றான் கல்யாண். “இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு கல்யாண், நான் தான் எடுப்பேன் என்று சொல்லி வேகமாக அவள் குடத்திற்குள் கையை விட பின்னோடு கையை விட்ட முத்து அவள் கையை விடாமல் பற்றினான்.

 

 

அவன் அவள் எடுத்திருப்பாளோ என்று எண்ணி அவள் கையை விடாமல் முதலில் ஆட்டம் காண்பிக்க பின் வேண்டுமென்றே அவள் கையோடு தன் கையை பிணைத்து விளையாடினான். அவள் அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

 

 

“போதுமா நல்லா விளையாடிட்டீங்களா, என் கையில போட்டிருக்க மோதிரத்தை நீங்க எப்படிப்பா குடத்துக்குள்ள தேடுவீங்க என்று வைபவ் அவன் கையை தூக்கி காண்பிக்க முத்து அசடு வழிந்துக் கொண்டிருந்தான்.

எல்லாம் உங்களால தான் என்பது போல் சரயு அவனை முறைத்தாள். “முத்து இன்னைக்கு உன் பாடு கஷ்டம் தான் சரயு வேற ரொம்ப முறைக்கிறா, நீ ஒருவேளை செய், நான் ஒண்ணு சொல்லி தரேன் அதை செஞ்சு பாரு அப்புறம் இவ சரண்டர் ஆகிடுவா என்றான் வெகு சீரியசாக.

 

 

“என்ன மாப்பிள்ளை சொல்லுங்க செஞ்சிருவோம் என்றான் முத்துவும். “அது பெரிசா ஒண்ணுமில்லை யாரும் பக்கத்துல இல்லாத நேரமா பார்த்து, அதாவது உங்க அறை கதைவை நல்லா அடைச்சுட்டு… என்று நிறுத்தினான்.

 

 

“டேய் இங்க கல்யாணம் ஆகாத ரெண்டு கன்னி பசங்க இருக்கோம் நீ வேற எதையாச்சும் பப்ளிக்கா சொல்லி வைக்காதேடா என்றான் வைபவ். “ஆமாம் மாமா வேணாம் எதுவும் சொல்லாதீங்க என்றான் நிர்மலும். “அட சின்ன பசங்களா இங்க இருக்கறதை நான் பார்க்கலையே, பரவாயில்லை நீங்களும் கேளுங்க, நாளைக்கு உங்களுக்கும் உதவும் என்றவன் தொடர்ந்தான்.

 

 

“கதவு நல்லா அடைச்சு இருக்கான்னு பார்த்திட்டு, சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்திட்டு அவங்ககிட்ட நெருங்கி போய் தொபுகடீர்ன்னு அவங்க கால்ல விழுந்திடுங்க மச்சான். அப்புறம் அவங்க சமாதானம் ஆகிடுவாங்க. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோங்க, தினமும் என் பொழைப்பு இப்படி தான் ஓடுது என்றான் அப்பாவியாக.

 

 

“உங்களை… நான் இப்படியா உங்களை செய்ய சொன்னேன். இப்படி என் மானத்தை வாங்குறீங்களே என்று அவனை அடிக்க துரத்தினாள் கார்த்திகா. “மச்சான் நான் தப்பா சொல்லிட்டேன் அதான் உங்க தங்கச்சி அடிக்க வர்றா, நீங்க ரெண்டு கையையும் மேலே தூக்கி வைச்சு என்னை மன்னிச்சுடுங்க அப்படிங்கற மாதிரி விழணுமாம். என்ன ரித்தி சரி தானே என்று சொல்லிக் கொண்டு அவள் கைகளுக்கு சிக்காமல் ஓடினான்.

 

 

சந்தோசமும் கலகலப்புமாக முத்து-சரயு திருமணம் முடிய,  வைபவ் அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டான். மற்றவர்கள் மறுவீட்டு விருந்து முடித்து இரண்டு நாளில் வந்து சேருவதாகக் கூறினார். வைபவை இருக்க சொன்னால் அவன் கிளம்பியே தீர வேண்டும் என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

 

 

முத்து சரயுவிற்கு மறுவாரம் விருந்தளிக்க அவன் மனதிற்குள் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். அபியை எப்படி அதற்கு வர வைக்க வேண்டும் என்று யோசனை செய்துக் கொண்டிருந்தான் அவன்.

 

 

 

Advertisement