Advertisement

அத்தியாயம் –17

 

 

வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம் கேட்காமல் அவள் செல்லும் ஆட்டோவை பின் தொடர்ந்தான்.

 

 

அவள் வீட்டில் இறங்கி பணம் கொடுத்துவிட்டு உள்ளே செல்வதை பார்த்த பின்பே அங்கிருந்து கிளம்பினான். அபிக்கு ஏனோ அவன் பின் தொடருவான் என்று தோன்ற ஆட்டோவில் ஏறியவள் ஒரு முறை திரும்பி பார்க்க அவன் பைக்கில் தொடர்வது தெரிந்தது.

 

 

மனதிற்குள் சட்டென்று இனம்புரியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. அவன் தொடர்ந்ததை அவள் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவில்லை. ஆட்டோவிற்கு பணம் கொடுக்கும் போதும் அடிக்கண்ணால் அவனை நோட்டமிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

 

அவள் வீட்டில் இருந்து கிளம்பியவனுக்கு மனதில் ஏதோ பாரம் அழுத்த தவறிழைத்து விட்டோமோ அவளை காயப்படுத்திவிட்டோமோ என்ற குற்ற உணர்வு எழுந்தது. வண்டியை அவன் வீட்டிற்கு விட்டான். அவன் உள்ளே நுழையும் முன்பே வீட்டின் முன் நின்றிருந்த காரைக் கண்டான்.

 

 

யார் இந்நேரம் நம் வீட்டிற்கு வந்திருப்பார்கள் அதுவும் காரில் வேறு வந்திருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைய கூடத்தில் முத்துவும் இந்திராவும் நிச்சயத்திற்கு அவர்களை அழைக்கவென்று வந்திருந்தனர். சம்பிரதாயமாக அவர்களை பார்த்து தலையசைத்தான் அவன். “எப்போ வந்தீங்க, வந்து ரொம்ப நேரமாச்சா என்று விசாரித்தான் அவன்.

 

 

“இல்லை இப்போ தான் உள்ளே நுழைச்சோம், ஆன்ட்டி உட்கார சொன்னாங்க. நீங்களும் வந்துட்டீங்க என்றான் முத்து. “அம்மா அவங்களுக்கு காபி என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவர் காபியுடன் நின்றிருந்தார். “அம்மா ரொம்ப வேகம் தான் என்றான் வைபவ்.

 

 

இந்திராவே ஆரம்பித்தார், “முத்துவுக்கு நிச்சயம் வைச்சிருக்கோம். அப்படியே ஒரு வாரத்துல கல்யாணமும் வைச்சாச்சு. இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொண்ணு வீட்டில இருந்து சொன்னாங்க. ரெண்டு பேரோட ஜாதகத்துக்கு பொருத்தமான முஹுர்த்த தேதி இப்போ தான் வருதாம்

 

 

“அதை விட்டா ஒரு வருஷம் தள்ளி போயிரும்ன்னு சொன்னாங்க, அதான் நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். இன்னும் கார்த்திகிட்டயும் மாப்பிள்ளைகிட்டயும் கூட சொல்லவே இல்லை. உங்களுக்கு சொல்லிட்டு அங்க தான் போகலாம்ன்னு இருக்கோம்

 

 

“நீங்க குடும்பத்தோட ரெண்டு விழாவுக்கும் வந்து ஆசிர்வாதம் பண்ணணும் என்று சாந்தியை பார்த்து கூறினார் இந்திரா. “வைபவ் தப்பா எடுத்துக்காதீங்க இதுவரைக்கும் நான் உங்ககிட்ட அவ்வளவா பேசினது கூட கிடையாது. எனக்கு உறவுகளோட அருமை, நட்போட பெருமை எல்லாம் இப்போ தான் புரியுது. என்னையும் உங்கள்ள ஒருத்தனா நினைச்சு எங்க வீட்டு விசேஷத்துக்கு நீங்க வரணும் என்றான் அவன்.

 

 

வைபவுக்கு அதிசயமாக இருந்தது, முத்து இவ்வளவு பேசுவானா என்று யோசித்தான் அவன். ஆனாலும் அவனுக்கு அந்த திருமணத்திற்கு போக விருப்பம் இல்லை. காரணம் ராஜசேகர், கார்த்திகாவை சந்தித்து பேசவென்று அவன் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்க அவர் அவனை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார்.

 

 

இருந்தும் அவன் கல்யாணுக்காக மீண்டும் மீண்டும் சென்று அவர் அவனை திட்டி அனுப்பியிருக்கிறார். அவன் முதல் முறை வந்த விபரம் மட்டுமே எல்லோருக்கும் தெரியும்.

 

 

அதன் பிறகு வந்தவனை காவலாளியிடம் சொல்லி அவரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு கூறியிருக்க அவன் வந்த விபரத்தை அவன் முதலாளியிடம் சொல்லி அவர் வாசலிலேயே அவனை திட்டி அனுப்பியதால் யாருக்குமே தெரிந்ததில்லை.

 

 

முத்து சகஜமாக பேசியபோதும், இந்திரா அன்பாக அழைத்த போதும் அவனால் ராஜசேகர் பேசியதை மறக்கமுடியவில்லை. கல்யாண் கார்த்திகாவுக்காக அவன் சென்றாலும் அவர் மீண்டும் அவனை அவமானப்படுத்த மாட்டார் என்று என்ன நிச்சயம் என்று அவன் மனம் யோசித்தது.

 

 

எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறினான் அவன். “என்னாச்சு வைபவ் என்ன யோசிக்கிறீங்க என்றான் முத்து விடாமல். “இல்லை தப்பா எடுத்துக்காதீங்க, கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து அம்மா நான் எங்கயும் வெளியூர் போக வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க. நான் முடிஞ்ச வரைக்கும் எப்படியாவது வர முயற்சி பண்றேன் என்று பட்டும் படாமலும் கூறியவாறே அவன் அன்னையை பார்த்தான்.

 

 

அவன் கண்கள் சொல்லிய சேதி புரிந்தவர் “ஆமாம் கல்யாணம் நிச்சயம் ஆகிட்டா வெளிய எங்கயும் போக வேண்டாம்ன்னு சொல்லியிருந்தேன். அதை தான் சொல்றான், இது ரொம்ப முக்கிய விசேஷம் வைபவ் நீ மட்டுமாச்சும் போயிட்டு வந்துடு என்றார் சாந்தி.

 

 

‘அய்யோ அம்மா கவுத்திட்டீங்களே என்று நினைத்துக் கொண்டான். “அப்புறம் பொண்ணு எந்த ஊரு. நீங்க ஊர்ல தான் கல்யாணம் வைக்க போறீங்களா என்றான் அவன். “ஆமாம் எங்க சொந்த ஊர்ல தான் கல்யாணம், நிச்சயம் பொண்ணு வீட்டில. கல்யாணம் தேனில நடக்கப் போகுது என்றான் முத்துக்குமார்.

 

 

“பொண்ணு பேரு என்றவன் பத்திரிக்கையை எடுத்து திருப்பினான். “ஓ சக்தியா நல்ல பேரு, உங்களோட சக்தி எல்லாமே இனி அவங்க தானா என்றதும் முத்துவின் முகம் சந்தோசத்தில் பளபளத்தது. அவர்கள் விடைபெற்று சென்றனர்.

 

 

அவர்கள் சென்றதும் சாந்தி அவனிடம் “என்ன வைபவ் நீ ஏன் கல்யாணத்துக்கு போக வேணாம்ன்னு நினைக்கிறே என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் சாந்தி. “அம்மா எனக்கும் போகணும்ன்னு தான் தோணுது, ஆனா கார்த்தியோட அப்பா… என்றுவிட்டு அவன் நிறுத்தினான்.

 

 

“அவர் என்ன சொன்னா என்னப்பா நம்ம கல்யாண், கார்த்தியை பார்க்க வேண்டாமா. இந்திரா ரொம்பவும் நல்லவங்க, முத்துவும் முன்ன ஒரு மாதிரியா இருந்த தம்பி அதுவே வந்து நம்மை பாசத்தோட அழைக்கும் போது போகாம இருந்தா நல்லாவா இருக்கும் என்றார் சாந்தி. “சரிம்மா பார்க்கலாம் என்று அந்த பேச்சை அத்துடன் முடித்துவிட்டு எழுந்து உள்ளே சென்றான் அவன்.

அவன் அறைக்கு சென்றவன் அபி வீட்டிற்கு சென்றுவிட்டாளா என்று குறுந்தகவல் அனுப்பினான். ஆனால் அவளிடம் இருந்து பதிலேதும் வரவில்லை. அவன் மீண்டும் மீண்டும் தகவல் அனுப்ப எந்த பதிலும் அவளிடத்தில் இருந்து வரவேயில்லை. வைபவுக்கு நெஞ்சம் பதறியது.

 

 

அங்கு அபியோ அவன் அவளிடத்தில் பேசிய விஷயத்தையே யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் கைபேசியை வீட்டிற்கு வந்ததும் ஓரிடத்தில் வைத்தவள் தான், அதை எடுத்துக்கூட பார்க்கவில்லை. அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது.

 

 

அவளுக்காக பார்த்து பார்த்து செய்பவனை நினைத்து பெருமிதம் வந்தது. எனக்காக அவன் யோசித்தது என்று நினைப்பதை விட நமக்காக என்று அவன் யோசித்தது அவளுக்கு நெகிழ்சியை கொடுத்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

 

 

அபியிடம் இருந்து பதிலேதும் வராததில் நொந்து போன வைபவ் வேறுவழியில்லாமல் அவள் அன்னைக்கு போன் செய்தான். “ஹலோ அத்தை நான் வைபவ் பேசறேன் என்றான் அவன். “சொல்லுங்க மாப்பிள்ளை என்றார் அவர்.

 

 

“நாளைக்கு முகூர்த்த புடவை எடுக்க போகணும், அம்மா சொன்னாங்களா?? நீங்க ஒரு ஒன்பதரை மணிக்கே கிளம்பிடுங்க என்று அவன் அன்னை சொன்ன விஷயத்தை மறுஒலிபரப்பு செய்தான் அவன். “அம்மா சொல்லிட்டாங்க மாப்பிள்ளை என்றார் அவர்.

 

 

“அபி…அபி… வீட்டுக்கு வந்தாச்சா?? என்றான் அவன். “ஹ்ம்ம் அவ அப்போவே வந்துட்டா மாப்பிள்ளை என்றார் அவர். “சரி அத்தை நான் வைச்சுடறேன் என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

அவள் கோபம் இன்னும் தீரவில்லை என்று எண்ணிக் கொண்டான் அவன். நாளை நேரில் பார்க்கும் போது அவளிடம் எப்படியாவது பேசி சமாதானம் செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

 

மறுநாள் காலை வேலைக்கு சென்று வருபவர்களுக்கு வரப்பிரசாதமான ஒரு நாள், தாமதமாக எழலாமே, அப்படி ஒரு சோம்பலான ஞாயிறு சுறுசுறுப்பாய் எழுந்து வைபவ் கிளம்பிக் கொண்டிருந்தான். வழக்கம் போல நந்து புலம்பலை தொடர்ந்தாள். “கல்யாணம் நான் கூப்பிடும் போதெல்லாம் வருவியே இப்பவும் வந்து என்னை கொஞ்சம் காப்பாத்து எங்கண்ணன் லொள்ளு தாங்கலை என்று புலம்பினாள் அவள்.

“அபயம் அளித்தோம் மகளே என்று அவள் புலம்பலுக்கு செவி சாய்த்தவன் போல் வந்து சேர்ந்தான் கல்யாண். “வாங்கண்ணி என்று கார்த்திகாவை வரவேற்றவள் கல்யாணிடம் புலம்ப ஆரம்பித்தாள்.

 

 

“என்ன நந்து என்னாச்சு என்றான் கல்யாண் கதை கேட்பவன் போல். “எல்லாம் உன் உயிர் தோழன் பற்றி தான், எங்கயாச்சும் கொஞ்சம் அடங்குறானா பாரு. இவன் காலையில எத்தனை மணிக்கு எழுந்தான் தெரியுமா

 

 

“எத்தனை மணிக்கு என்றான் கல்யாண். “கோழி கூட எழுந்திருக்கலை, இவன் எழுந்துட்டான். எழுந்தவன் சும்மா இல்லாம என்னையும் வேற எழுப்பி சீக்கிரம் கிளம்பு. புடவை எடுக்க போகணும்ன்னு என்னை வேற கிளம்ப சொல்லி படுத்தறான்

 

 

“ஏழு மணிக்கு அவனோட அறை கதவை அடைச்சவன் இன்னும் திறக்கலை என்றாள் அவன் அறை வாசலில் காவல் நின்றவள் போல். “நீயே கூப்பிடு கல்யாணம் என்றுவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

“வைபவ், டேய் வைபவ் என்று அவன் அறைக்கதவை தட்ட “வர்றேன்… வர்றேன் என்று ஒரு பத்து நிமிடமாக குரல் மட்டுமே வந்துக் கொண்டிருக்க கல்யாண் பொறுமையிழந்தான்.

 

 

“நீ வர தாமதமான நாங்க மட்டும் அபியை கூட்டிட்டு போய் புடவை எடுத்து கொடுத்திட்டு வந்திடறோம். ரித்தி கிளம்பு போகலாம் என்று கல்யாண் கூற வைபவின் அறை கதவை படீர் என திறந்தது.

 

 

“என்னடா மனுஷனை ஒரு டிரஸ் பண்ண விடமாட்டீங்களே என்று பொருமியவாறே வந்தான் வைபவ். “என்னது நீ பண்றதுக்கு பேரு ட்ரெஸ்ஸா பாவம் நந்து உன்னை கூப்பிட்டு பார்த்து ஓய்ஞ்சு போய்ட்டா. இந்நேரம் அபி கூட கிளம்பியிருப்பா, நீ தான் பொண்ணு கணக்கா சீவி சிங்காரிச்சு வர்ற என்றான் கல்யாண்.

 

 

“ஹேய் அபியை பார்க்க போறேன்ல அதான்டா என்றான் வைபவ். “என்னமோ இன்னைக்கு தான் அவளை முதல் தடவையா பார்க்க போற மாதிரி ஓவரா பிலிம் காட்டுறியேடா என்றான் கல்யாண். “நீ கார்த்திகிட்ட காட்டாத பிலிமா நாங்க காட்டிட்டோம் என்று பதிலுக்கு வாரினான் வைபவ். “நேத்து தானே அபியை பார்த்த…” என்றான் கல்யாண். அவன் அப்படி சொன்னதும் வைபவின் முகம் ஒரு முறை இறுகி பின் இயல்பானது போல் இருந்தது.

அதற்கு மேல் கல்யாண் அவனிடம் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. எல்லோருமாக கிளம்பி புடவை கடைக்கு சென்றனர். ராம் மாதவியை அழைத்துக் கொண்டு வந்து கடையில் விட்டுவிட்டு சென்றான். அபியும் அவள் அன்னையும் நேரே கடைக்கு வந்திருக்க, அவள் தந்தைக்கு முக்கியமான அலுவல் இருப்பதால் அவள் வரவில்லை.

 

 

கடைக்கு சென்றதில் இருந்து அபி பார்ப்பாளா என்று வைபவ் அவளின் பார்வைக்காய் காத்திருந்தான். அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை. அவனால் அவள் மேல் கோபப்படவும் முடியவில்லை, அவனால் இயல்பாகவும் இருக்க முடியவில்லை.

 

 

கல்யாண் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு அவன் அருகில் நின்று பேச்சுக் கொடுத்தான். கார்த்திகாவும் அபியும் நட்புடன் சிரித்துக் கொண்டனர். அபி அவளிடம் வெகு தீவிரமாக சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க பதிலுக்கு கார்த்திகாவும் சைகை செய்தாள்.

 

 

“என்னை பார்த்தா மட்டும் தான் இவளுக்கு கசக்குது. எங்கயாச்சும் ஒரு பார்வை என்னை பார்க்குறாளான்னு பாரு. என்னை பார்த்தா பாவமா தெரியலையா, நான் என்னடி பண்ணேன் என்று மனதிற்குள் நினைப்பதாக எண்ணிக் கொண்டு வாய்விட்டு புலம்ப கல்யாண் அவன் தோளில் கையை போட்டான்.

 

 

“டேய் வைபவ் ஒரே ஒரு நல்லவன் இந்த ஊருக்குள்ள இருந்தான், சன்னியாசி போல அவன் இருந்தான்டா, அவனை இப்போ காணோமாம் என்று சீரியஸாக சொல்ல “என்னடா என்பது போல் வைபவ் கல்யாணை பார்த்தான்.

 

 

“யாரை காணோம் என்றான் வைபவ். “வைபவ்ன்னு ஒரு நல்லவன் அவனை தான் காணோம் என்று அவன் சொல்ல வைபவ் முழித்தான். “என்னடா பார்க்குற இங்க நிக்குறது வைபவ் இல்லை ரொமான்ஸ் மன்னன், என்னை எவ்வளவு கலாட்டா பண்ணியிருப்ப, இப்போ நல்லா அனுபவி ராஜா அனுபவி என்றான் கல்யாண்.

 

 

“உன்னை பார்க்க அப்படி தான் கசக்கும், உன்னை பார்த்தா எல்லாம் பாவமா இருக்கவே இருக்காது. எப்போமே அவங்க அப்படி தான் செய்வாங்க என்றான் கல்யாண். “என்னோட அபி அப்படி எல்லாம் இல்லைஎன்றான் வைபவ். “பாருடா இப்போவே பொண்டாட்டிக்கு ஒத்து ஊத ஆரம்பிச்சுட்டான் என்று சிரித்தான் கல்யாண்.

 

 

“அண்ணா நீ என்ன இங்க வேடிக்கை பார்த்திட்டு இருக்க, வா உனக்கு போய் துணி எல்லாம் எடுக்கணும். எனக்கு நீயும் கல்யாணமும் சேர்ந்து சுடிதார் எடுத்து கொடுங்க என்று அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். கிளம்பும்முன் வைபவ் சாந்தியின் அருகில் வந்து “அம்மா சரயுவுக்கும் புடவை எடுங்கம்மா என்றான்.

 

 

அபி புருவம் தூக்கி அவனை பார்க்க அவள் மனதிற்குள் கொடுத்து வைத்தவள் இப்படி ஒருவன் அவளுக்கு நண்பனாக கிடைத்திருக்கிறான் என்று பெருமிதமும் சற்றே அவளின் மேல் பொறாமையும் கொண்டாள் அவள்.

 

 

சரயுவை எப்போதும் பார்போம் என்ற ஆவல் அவளுக்குள்ளும் எழுந்தது. வைபவ் அவளை பற்றி நிறையவே அவளிடம் பேசியிருப்பதால் அவளுக்கு சரயுவை பற்றி தெரியும். ‘இவங்க அம்மா தான் அவளுக்கு புடவை எடுக்கணுமா, நாங்க எல்லாம் எடுக்க மாட்டோமா என்று நினைத்தாள் அவள்.

 

 

“என்னப்பா என்கிட்ட போய் சொல்ற, அபிக்கும் கார்த்திக்கும் தான் அவளுக்கு எப்படி எடுக்கணும்ன்னு தெரியும் அவங்ககிட்ட சொல்லுப்பா என்றார் அவர். ‘அத்தை இப்படி சொல்லிட்டீங்களே என்று நினைத்துக் கொண்டாள். “அ…அபி… என்று அவன் அழைக்க கார்த்திகா அவன் அழைப்பை கண்டு அபியின் கையை பிடித்து இழுத்து வைபவை பார்க்குமாறு கூறினாள்.

 

 

“அபி சரயுவுக்கும் ஒரு புடவை எடுங்க என்று அவளை கண்களால் பருகிக் கொண்டே “கார்த்தி நீயும் தான் ரெண்டு பேரும் சேர்ந்து எடுங்க, உங்களுக்கு பிடிச்சதும் பார்த்து வைங்க. நாங்க கொஞ்ச நேரத்துல வந்திடறோம் என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.

 

 

அப்போது கார்த்திகாவின் கைபேசி சிணுங்க “ஹலோ என்றாள் அதை காதில் வைத்தவாறு. “ஹ்ம்ம் சொல்லுங்கம்மா, கடைக்கா நாளைக்கு தானே போகணும்ன்னு சொன்னீங்க. இப்பவேவா, நாங்க வைபவ் கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்திருக்கோம்

 

 

“நீங்களும் வர்றீங்களா… ஹ்ம்ம்… சரி…சரிம்மா… அப்போ நல்லி சில்க்ஸ் வந்திடுங்க… சரி… சரி நான் அவர்கிட்ட சொல்லிடறேன் என்றுவிட்டு போனை வைத்தாள்.

 

 

மாதவியிடம் திரும்பி “அத்தை அம்மாவும் புடவை எடுக்க வர்றதா சொன்னாங்க, அவங்க முதல்ல நாளைக்கு தானே எடுக்கறதா சொன்னாங்க. நாளைக்கே ஊருக்கு கிளம்பணுமாம்

 

“அதான் இன்னைக்கே வந்து எல்லா வேலையும் முடிக்கணும்ன்னு சொன்னாங்க. இந்த கடைக்கே அவங்களை வரச்சொல்லிட்டேன் அத்தை. உங்ககிட்ட சொல்லிட சொன்னாங்க என்றாள் அவள்.

 

 

“நல்லதா போச்சு, உனக்கும் ஒரே வேலையா முடிஞ்சுடும் என்றார் மாதவி. பிறகு அவர்கள் பேசிக்கொண்டே புடவை எடுக்க நிர்மல், முத்துக்குமார் சகிதம் இந்திரா கடைக்குள் நுழைந்தார். அவர்கள் நேரே பட்டுப்புடவை எடுக்கும் இடத்திற்கு வந்தனர்.

 

 

இந்திரா எல்லோரிடமும் நலம் விசாரித்துக் கொண்டார். நிர்மல் தான் அபியை முத்துவுக்கு அறிமுகப்படுத்தினான். அபியின் தோள் தொட்டு “ஹாய் அக்கா என்றவனின் அழைப்பில் உணர்ச்சிவயமானாள் அவள். அவள் தங்கை கூட இது வரை அவளை உரிமையுடன் அக்கா என்று அழைத்ததில்லை.

 

 

பெயர் சொல்லியே கூப்பிட்டு அவளுக்கு வழக்கம். அபியிடம் அன்பாக கூட அவள் பேசியத்தில்லை என்பதால் நிர்மலின் அழைப்பு அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. “அக்கா இவங்க தான் என்னோட அண்ணா முத்துக்குமார் என்று அவளுக்கு அறிமுகப்படுத்தியவன் முத்துவிடம் “இவங்க தான் அபி அக்கா வைபவ் மாமா கட்டிக்கப் போறவங்க என்றான் அவன்.

 

 

முத்துவும் அவளை பார்த்து சிநேகமாக சிரித்தான். வணக்கம் என்று கரம் குவிக்க அவனோ “என்னம்மா நீ எனக்கு போய் மரியாதை எல்லாம் செய்யற, கார்த்திக்கு அண்ணா என்றால் நான் உனக்கும் அண்ணன் தான், அது தான் நிர்மல் அக்கா என்று அழைத்துவிட்டானே

 

 

“நமக்குள் எதற்கு இதெல்லாம் என்றான் முத்துக்குமார். அவள் வலது கையை வாய்க்கருகில் கொண்டு சென்று நன்றி என்பதாய் சைகை செய்ய அபியின் அன்னை அவள் சொல்ல வந்ததை கூறினார். “பார்த்தியா மறுபடியும் இப்படியே செய்யற என்று அவன் பார்க்க அவளும் பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள்.

 

 

“எங்கண்ணனுக்கு என்ன ஆச்சு தெரியலையே. இப்போலாம் ரொம்ப சென்டிமென்ட்டா பேசுறான், அக்கறையா இருக்கான். என்னடா நடக்குது எனக்கொண்ணும் புரியலையே என்றான் அவன். “டேய் நிர்மல் எல்லாம் சக்தி கொடுக்கும் சக்தி தான்டா என்றாள் கார்த்திகா.

 

 

அவர்கள் இப்படி கலகலத்துக் கொண்டிருக்க கல்யாணும், வைபவும் வந்து சேர்ந்தார்கள் வளவள நந்துவுடன். “அண்ணா என்ன நீ இவ்வளவு சீக்கிரம் என்னை கூட்டிட்டு வந்துட்ட??? கல்யாணம் நீயாவது எனக்காக பேசேன் என்று அவள் கல்யாணை பார்க்க அவன் பார்வை வேறு திக்கை நோக்கியது. தூரத்திலேயே அவன் மாமியார் குடும்பத்தை பார்த்துவிட வேகநடை போட்டு அங்கு சென்றான்.

 

 

அதுவரை கலகலத்துக் கொண்டிருந்த நிர்மலின் பேச்சு சட்டென்று நின்றது. “ஹலோ வாங்க வாங்க… எல்லாரும் எப்படி இருக்கீங்க… நீங்க தான் முத்துவா உங்களுக்கு தான் கல்யாணமா?? அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்திருந்தீங்களாம். வாழ்த்துக்கள் என்று அவள் அவனையும் விடாமல் பேசினாள்.

 

 

“ஹலோ என்னங்க எங்கயோ பார்க்குறீங்க, யாரையோ பார்க்கற மாதிரி பார்க்குறீங்க. என்னை தெரியலை, காபி எல்லாம் போட்டுக் கொடுத்தேனே மறந்துட்டீங்களா நீங்க, ரொம்ப நாள் முன்னாடி போட்டு கொடுத்த காபி கூட ஞாபகமா சொன்னீங்க. இப்போ யாரோ மாதிரி முழிச்சுட்டு நிக்குறீங்க என்றாள் நந்து நிர்மலை பார்த்து.

 

 

எல்லோரும் வேறு பேச்சில் கவனமாயிருக்க அவர்களை யாரும் கவனிக்கவில்லை. ‘இவ தெரிஞ்சு தான் என்கிட்ட பேசுறாளா, இல்லை தெரியாம பேசுறாளா. வேணாம் நிர்மல் உன் ஆசை எல்லாம் நடக்காது, பேசாம இங்க இருந்து கிளம்பு

 

 

‘இவ இருப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேனே என்று அவன் நினைக்க அவன் மனமோ ‘டேய் மடையா அவ இருப்பான்னு நினைச்சு தானே நீ வந்த என்று இடித்துரைத்தது. தற்செயலாக நிர்மலை கவனித்துக் கொண்டிருந்த அபியின் கண்களில் நிர்மலின் கண்களில் நந்துவை பார்த்து ஒரு ஏக்கம் தோன்றுவது தெரிந்தது.

 

 

ஒரு பெருமூச்சுடன் அவன் அன்னையிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் சற்று தள்ளிச் சென்று நின்று ஒரு முறை நந்துவை பார்த்துவிட்டு பின் சென்றான் அவன். அபி நந்துவை பார்க்க அவள் முகத்தில் நிர்மலை குறித்து எந்த சலனமும் இல்லை என்பது தெரிந்தது. யாரும் அறியாமல் அபி வாயிலுக்கு சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தாள்.

 

 

“என்ன புடவை எடுத்தாச்சா என்று வைபவ் கேட்க கார்த்திகா அவர்கள் தேர்வு செய்திருந்த சில புடவையில் இருந்து ஒரு ஒரு புடவையாக எடுத்து அபியின் மேல் வைத்துக் காட்டினாள்.

 

 

வெளிர் சாக்லேட் நிற சேலையில் உடல் முழுதும் தங்க நிற சரிகைகள் ஓட அடர்ந்த மெரூன் நிற கரையிட்ட சேலையை அவள் மேல் வைத்ததும் அவன் திருப்தியாய் பார்க்க கண்களால் அபியிடம் அவள் சம்மதத்தை கேட்டான் அவன். அவளும் முழுமனதுடன் கண்களாலேயே அவனுக்கு பதில் கொடுத்தாள்.

 

 

“சரி எல்லாரும் புடவை எடுத்தாச்சா, சரயுவுக்கு எடுத்தாச்சா கார்த்தி என்றான் வைபவ். சரயுவின் பெயரை கேட்டதும் முத்துவும் இந்திராவும் ஒன்றாக திரும்பி பார்த்தனர். “சரயு… யாருங்க… உங்க தங்கையா என்றான் முத்து. “அவ எங்களோட தோழி முத்து என்றான் கல்யாண்.

 

 

“உங்க தோழிக்கு கூட புடவை எல்லாம் எடுப்பீங்களா என்றான் அவன் மேலும். “அண்ணா உனக்கு சரயு பத்தி தெரியாதா, இவங்க மூணு பேரும் ரொம்ப பிரண்ட்ஸ் அண்ணா. அவங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவாங்க, அதுக்கு தான் வைபவ் புடவை எடுக்கிறார் என்றாள் அவள்.

 

 

அபியை போலவே முத்துவுக்கும் அவர்கள் நட்பின் மேல் பொறாமையாக இருந்தது. முத்து சிறு வயதில் இருந்தே பணக்கார தோரணையுடன் வளர்ந்ததாலோ அன்றி அவன் தந்தையை கொஞ்சம் கொண்டிருந்ததாலோ அவனுக்கு நண்பர்கள் அதிகமில்லை.

 

 

அப்படியே இருந்தாலும் இப்படி உயிரை கொடுக்கும் நண்பர்கள் அவனுக்கு இருந்ததேயில்லை, அவர்கள் நட்பை கண்டு வியப்பும் பொறாமையும் அவனுக்கு எட்டிப் பார்த்தது. சக்தி நல்ல நட்பை தான் பெற்றிருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

“அண்ணா அண்ணியை எப்போ காட்டப் போறே, புடவை எடு எடுன்னு சொன்னா. நான் எப்படி எடுக்கறதாம். அவங்க எப்படி இருப்பாங்கன்னு ஒரு போட்டோ கூட காட்டவே மாட்டேங்குற என்று பொருமினாள் கார்த்திகா.

 

 

“உங்க அண்ணியை நானே பார்க்கலை கார்த்திம்மா. உங்க அண்ணன் போன் தான் ஊருக்கு போயிட்டு வந்தப்ப காணாம போயிருச்சே. அதுல தான் பொண்ணு போட்டு இருந்திருக்கு போல, விடு அதான் அவன் பொண்ணை பார்த்துட்டான்ல எல்லாம் நல்லா தான் இருப்பா. முத்து சக்திக்கு நீயே புடவை எடுப்பா என்றார் இந்திரா.

 

 

“எப்படியோ போங்க என்று சிணுங்கினாள் கார்த்திகா. “ரித்தி அதான் அத்தை சொல்றாங்கல, விடு. முத்து ஊர்லயாச்சும் எங்களுக்கு பொண்ணை காட்டுவீங்க தானே என்றான் கல்யாண். “கண்டிப்பா கல்யாண் என்றான் அவன்.

 

சரயுவிற்கு வாடாமல்லி நிறத்தில் தங்க சரிகைகள் இழையோட அவன் எடுத்த புடவை மிக அழகாக இருந்தது. “அண்ணி ரொம்ப கலரோ என்றாள் கார்த்திகா. “உனக்கு ஏன் பொறாமை ரித்தி என்று வாரினான் கல்யாண். “ஒரு ஆமையும் இல்லை. இப்படியாச்சும் எங்கண்ணன் வாயை திறக்குறானான்னு பார்த்தேன் என்றாள் அவள்.

 

 

புடவைக்கு பணம் செலுத்திக்  கொண்டிருந்தனர், அந்நேரம் வைபவுக்கு ஒரு அழைப்பு வந்தது. முகம் மலர போனை எடுத்தவன் “சொல்லு காயு. ச… என்று ஆரம்பித்து அதை பாதியிலே விட்டு “நீ எப்படி இருக்க, காயு, உன்னோட கணவர், குழந்தைகள் எல்லாம் எப்படியிருக்காங்க என்றான் வைபவ்.

 

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க. நீ முதல்ல சரயுன்னு ஆரம்பிச்சுட்டு பாதியில நிறுத்திட்ட, சரி உன்னோட அக்கறை புரியுது. நான் அவளை பத்தி சொல்ல தான் கூப்பிட்டேன். உன்னால புதன்கிழமை தேனிக்கு வரமுடியுமா. நான் அன்னைக்கு தான் எங்க வீட்டுக்கு போறேன்

 

 

“நான் எங்க வீட்டுக்கு போகும் போது உன்னை அப்படியே சரயு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், என்ன சொல்ற என்றாள் காயத்ரி. “இதென்ன கேள்வி காயத்ரி நான் கண்டிப்பா வர்றேன் என்றான் வைபவ். எதிர்முனையில் ஒரு நமுட்டு சிரிப்பு கேட்டது போல் இருந்தது.

 

 

“ஹேய் யாருடா என்றான் வைபவ் ‘காயு என்று சத்தமில்லாமல் சொல்ல கல்யாண் அவனிடம் இருந்து போனை பறித்தான். “ஹலோ காயு எங்க இருக்கா அந்த ராட்சசி. எங்களை எல்லாம் ஒரேடியா மறந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்காளாம்

 

 

“அவளை நேர்ல பார்க்கற அன்னைக்கு இருக்கு அவளுக்கு கச்சேரி, இப்போ என்ன விஷயமா நீ வைபவ்க்கு பேசின, அவளை எங்கயும் பார்த்தியா சொல்லு என்றான் கல்யாண். “டேய் நீ தானா ரொம்ப நல்லவன்டா நீ, உனக்கு எப்போ போன் பண்ணாலும் சிக்னல் கிடைக்காம போய்டுமே

 

 

“இப்போ மட்டும் உனக்கு எப்படி என்கூட பேச தோணிச்சு என்றாள் காயத்ரி கிண்டலாக. “அ…அது… நீ எப்போ போன் பண்ணாலும் ரித்திகிட்ட பேசணும்ன்னு சொல்லிட்டு இருந்தா அதான் அப்படி சொன்னேன் என்றான் அவன். “ரித்தியா யாருடா அது என்றாள் அவள்.

 

 

“கார்த்திகாவை தான் நான் அப்படி சொன்னேன் என்றான் அவன் பதிலுக்கு. “செல்ல பேரு மட்டும் வைக்க தெரியுது, அவகிட்ட பேசணும்ன்னு சொன்னா மட்டும் கொடுக்க தெரியாது என்றாள் அவள். “உனக்கென்ன இப்போ அவகிட்ட பேசணும் அதானே, இரு அவகிட்ட தர்றேன் நீயே பேசு. அதுக்கு முன்னாடி அந்த சரயு விஷயம் என்னன்னு சொல்லு என்று அவள் வைபவிடம் பேசிய விஷயத்தை மீண்டும் கூட காதில் வாங்கிக் கொண்டான் அவன்.

 

 

“சரி நீ ரித்தி கூட பேசு என்றுவிட்டு கார்த்திகாவை அழைத்து விபரம் கூறி அவளிடம் போனை கொடுத்து பேசுமாறு கூறிவிட்டு அவனும் வைபவும் பேச ஆரம்பித்துவிட்டனர். “என்னடா நாங்க ஊருக்கு போற அன்னைக்கு தான் இவளும் வரச் சொல்றா என்ன பண்ணலாம் என்றான் கல்யாண்.

 

 

“ஒண்ணு செய்வோம் கல்யாண், நானும் உங்ககூடவே ஊருக்கு வர்றேன், நீ போய் நிச்சயதார்த்தத்தை பாரு. நான் காயத்ரி கூட போய் சரயுவை பார்க்கறேன். அப்புறமா நீயும் நானும் சேர்ந்து போய் அவளை மறுபடியும் பார்போம்

 

 

“நானும் உன்னோடவே இருந்து முத்து கல்யாணம் மட்டும் பார்த்திட்டு உங்களோடவே வந்திடுறேன் சரியா என்றான் அவன். “எனக்கும் அது தான் சரின்னு படுது வைபவ். சரி நாம எப்படி போகலாம் என்றான் கல்யாண். “கார்ல போய்டலாம் கல்யாண், நீ கார் எடுத்திட்டு வந்திடு, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டிக்கலாம் என்றான் அவன்.

 

 

“என்னது… நீ… கார் ஓட்டப் போறியா… இது எப்போ இருந்து. நீ தான் கார் வாங்க அவ்வளவு யோசிச்சியே, இப்போ எப்படி ஓட்டக் கத்துக்கிட்ட என்றான் கல்யாண் வியப்புடன். “எனக்கு அப்போ தேவையிருக்கலை அதனால கார் வாங்கலை

 

 

“நானும் அம்மாவும் போறதா இருந்தா பைக்ல போவோம். நந்துவையும் கூட்டிட்டு போறதா இருந்தா ஆட்டோவில போவோம். இனி நாங்க நாலு பேரும் போறதா இருந்தா எப்படிடா போறது. அதான் வீட்டு பக்கத்துல ஒரு டிரைவர் அண்ணா இருக்காங்க அவங்ககிட்ட ஒரு பதினைஞ்சு நாளா ஓட்டப்படிச்சேன்

 

 

“உனக்கு சர்ப்ரைஸா சொல்லலாம்ன்னு நினைச்சேன், இப்போவே சொல்லிட்டேன் என்றான் வைபவ். “நல்ல முன்னேற்றம்டா என்னை மட்டும் எப்படி கிண்டல் பண்ண, சரி நீ எப்படி ஓட்டுவன்னே தெரியாம எப்படிடா உன்கிட்ட காரை கொடுக்கறது என்று தீவிரமாக கேட்டான் கல்யாண்.

 

 

“அதெல்லாம் ஓட்டுவோம், எங்களை நம்பலாம் என்ற வைபவ் அவன் அன்னை அழைப்பினில் வேகமாக பணம் செலுத்துமிடம் சென்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தான். “இந்தா கார் சாவி நீயே காரை ஓட்டு என்று வைபவிடம் சாவியை கொடுக்க “என்னடா இப்போ தான் கொடுக்க முடியுமான்னு கேட்ட என்றான் வைபவ். “நீ எப்படி ஓட்டுறேன்னு பார்க்க தான் என்றான் கல்யாண்.

 

 

வைபவே காரை ஓட்ட அவன் ஓட்டிய விதம் கல்யாணுக்கு திருப்தியை கொடுத்தது, முதலில் அபி வீட்டிற்கு சென்று அவர்களை விட்டுவிட்டு பின் மீண்டும் கடைக்கு வந்து மற்றவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

 

 

மறுநாள் காலை வைபவ் சாந்தியிடம் அவன் முத்துவின் திருமணத்திற்கு ஊருக்கு போவதாகக் கூறினான். “என்னப்பா சொல்ற போக விருப்பம் இல்லாத மாதிரி இருந்தியே, இப்போ என்னாச்சு என்று அவனை கூர்மையாக பார்த்து கேட்டார்.

 

 

“அம்மா சரயு வீடு கூட அந்த ஊர் பக்கம் தான், சரயுவை தேடி காயத்ரிகிட்ட பேசினோம்ல அது விஷயமாவும் தான் போறேன்ம்மா. அவளை என்னோட கல்யாணத்துக்கு அழைக்க வேண்டாமா. அவ எப்படியிருக்கா எல்லாம் பார்த்துட்டு வரலாம்ன்னு தான் போறேன்ம்மா என்று உண்மையை ஒப்புக் கொண்டான் அவன்.

 

 

“அதானே பார்த்தேன் சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு, சரிப்பா போய் பார்த்திட்டு அந்த பொண்ணை கல்யாணத்து கூப்பிடு. அந்த பொண்ணுக்கும் கல்யாணம் எல்லாம் ஆகி குழந்தையோட இருக்கும்ல என்றார் அவர்.

 

 

வைபவின் முகம் வருத்தமாக மாறியது ‘அப்படியும் இருக்குமோ, நம்மை எல்லாம் அழைக்காமல் நடந்திருக்குமோ என்று நினைத்தவன் அன்னையிடம் “இருக்கலாம் என்று பதிலிறுத்தான்.

 

 

அன்றே அவர்கள் கிளம்பி வேண்டியிருந்ததால் தேவையானவற்றை தயார் செய்தான் வைபவ். அபிக்கு குறுந்தகவல் அனுப்பினான். “உன்னை பார்க்கணும் உன் அலுவலகம் வரட்டுமா, இன்று இரவு முத்துவின் திருமணத்திற்காக ஊருக்கு செல்கிறேன் என்று தகவல் அனுப்பினான்.

 

 

வேலையில் இருந்த அபி அரைமணி நேரம் கழித்தே அந்த தகவலை பார்த்தாள், மதிய இடைவேளையில் பார்ப்பதாக சொல்லி அவனுக்கு பதில் அனுப்பினாள். ஒரு மணி ஆனதும் அவள் கைப்பையை தூக்கிக் கொண்டு கிளம்ப அவள் உடன் பணியாற்றும் தோழியிடம் மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தாள் அவள்.

 

 

அவள் பையை தூக்கிக் கொண்டு போவதை கண்ட செந்தில் யாரும் அறியாவண்ணம் அவளை பின் தொடர்ந்தான். அவள் மின்தூக்கியில் ஏறும் முன் அவள் கையை பற்றி நிறுத்தினான்.

 

 

“என்ன செல்லம் எங்க கிளம்பிட்ட என்கிட்ட சொல்லிட்டு போறது இல்லையா என்றவனின் கை அவள் தோளை பற்ற நினைக்க அவனை பிடித்து தள்ளி விட்டு கேவலமான பார்வை ஒன்றை அவன் மேல் செலுத்திவிட்டு அவள் சடுதியில் மின்தூக்கியில் சென்று கதவை லாக் செய்தாள்.

 

 

படபடப்பாக இருந்தது அவளுக்கு, இவன் ஏன் இப்படி என்னை தொந்திரவு செய்கிறான், சீக்கிரமே வேலையை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் மேல் கோபத்தில் இருந்த செந்தில் அவள் எங்கு செல்கிறாள் என்று பார்க்க பின்னேயே வந்ததை அவள் அறியவில்லை.

 

 

கீழே இறங்கி வந்தவள் வைபவை தேட அவன் வண்டி நிறுத்துமிடத்தில் நின்றிருந்தான். அவனை பார்த்து போகலாம் என்பதாய் தலையசைக்க அவளை ஏற்றிக் கொண்டு அவன் அருகில் இருந்த ஓட்டலுக்கு சென்றான். செந்தில் ஒரு வன்மத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

‘நான் பக்கத்துல வந்தா தள்ளிவிடற இப்ப எவன் கூடவோ பைக்ல போற, இருடி உன்னை வைச்சுக்கறேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

ஓட்டலுக்கு சென்றும் அவளின் படபடப்பு குறையவில்லை, வைபவ் அவள் ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்று புரிந்து என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தாள் அவள். அவளுக்கு பிடித்த உணவு வகைகளையே அன்று போல் இன்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 

அன்றைய நினைவில் அவள் முகம் சட்டென்று வாடியது, அப்போது நினைவுக்கு வந்தவனாய் வைபவ் அவளிடம் “ஏன் அபி அன்னைக்கு நடந்தது உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கா. வீட்டுக்கு போயிட்டேன்னு ஒரு தகவல் கூட நீ சொல்லவே இல்லை

 

 

“என் மேல அவ்வளவு கோபமா, கடையில கூட என்னை முறைச்சு பார்த்துட்டே இருந்த, இன்னைக்கு கூட நீ வருவியோ மாட்டியோன்னு நினைச்சேன். சொல்லு அபி என்றான் அவன்.

 

 

அவன் பேசியதை கூர்ந்து கவனித்தவள் குனிந்து எதையோ தேடினாள். அவள் பையில் இருந்து அவள் எப்போதும் வைத்திருக்கும் குறிப்பேடை எடுத்தவள் அவன் சட்டை பையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த பேனாவை சட்டென்று உருவினாள்.

 

 

ஒரு கணம் அவன் இதயமே வெளியே வந்து விழுந்தது போல் இருந்தது அவனுக்கு. ஏதோ ஒரு பரவசம் அவனை சிலிர்க்க செய்தது. அவள் நீட்டிய கடிதத்தை படித்ததும் வாய் விட்டு சிரித்தான்.

 

 

“நான் வீட்டுக்கு போனது உங்களுக்கு தெரியாதா, அப்புறம் ஏன் அப்படி கேட்டீங்க. வீட்டு வாசல் வரைக்கும் வந்தவருக்கு நான் வீட்டுக்கு உள்ளே போனேனா இல்லையான்னு தெரியாது அப்படி தானே… என்று எழுதி சிரிக்கும் பொம்மையை வரைந்து வைத்திருந்தாள்.

 

 

‘அய்யோ இவளுக்கு தெரியுமா, எப்போ பார்த்தா, எப்படி பார்த்தா, கள்ளி என்று வைதான். “அதுக்காக ஒரு பதில் கூட சொல்ல மாட்டியா?? என்றான் அவன் விடாமல். மீண்டும் அவள் அதே கடிதத்தில் எதையோ எழுதிக் கொடுத்தாள். “இல்லை அன்னைக்கு ஏதோ மனசு சரியில்லை உங்க மெசேஜ் நான் ரொம்ப லேட்டா தான் பார்த்தேன்

 

 

“பார்த்ததும் சிரிப்பு வந்திடுச்சு, நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு நினைச்சு விட்டுட்டேன் என்று எழுதியிருந்தாள். திடிரென்று தீவரமானவன் அவளை நோக்கி “அபி நான் திரும்பவும் கேட்குறேன் தப்பா எடுத்துக்காதே, அன்னைக்கு நடந்த விஷயத்தை பத்தி தான்

 

 

“இப்போ உனக்கு என்ன தோணுது நான் சொன்னது சரின்னு… என்று அவன் முடிப்பதற்குள் பிறகு பேசலாம் என்பது போல் அவள் சைகை செய்ய “இனிமே நானா இதை பற்றி உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன் அபி. உனக்கா எப்போ என்கிட்ட இதை பற்றி சொல்லணும்ன்னு தோணுதோ சொல்லு என்றுவிட்டு வந்திருந்த உணவு வகைகளை இருவருமாக ஒருவருக்கொருவர் பரிமாறியவாறே சாப்பிட்டு முடித்தனர்.

 

 

ஆரஞ்சு சாரு அருந்திக் கொண்டிருக்கும் போது தான் வைபவ் அவன் ஊருக்கு போகும் விஷயத்தை அவளிடம் கூறினான். “அபி நான் ஒரு வாரம் ஊர்ல இருக்க மாட்டேன். முத்துவோட கல்யாணத்துக்கு ஊருக்கு போறேன் என்றான்.

 

 

அவள் முகம் சட்டென்று வாடியதை அவன் குறித்துக் கொண்டான். ஒரு புறம் அந்த வாட்டம் அவனுக்குள் ஒரு சில்லிப்பை ஏற்படுத்தியது, மறுபுறம் அவளின் வாட்டம் புரிய அமைதி காத்தான். “சரயு பத்தி சொல்லியிருக்கேன்ல அவளோட ஊரும் அங்க தான் அவளை பார்த்து நம்ம கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வரலாம்ன்னு தான் போறேன் என்றான் அவன்.

 

 

சரயுவுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பார்களா என்று சைகையில் கேட்க ஒரு கணம் அவன் முகம் சுருங்கியது. ‘என்ன இவளும் அன்னை கேட்டது போலவே கேட்கிறாள் என்று நினைத்தவன் ‘தெரியவில்லை என்பதாக சைகை செய்தான்.

 

 

பணம் கொடுத்ததும் இருவருமாக வெளியே வந்தனர். “அபி நான் ஊருக்கு போறேன் ஒரு வாரம் இருக்க மாட்டேன். நீ என்னை தேட மாட்டியா என்றான் அபியை நோக்கி ஒரு ஏக்கப் பார்வையுடன். அவன் அவளிடம் எதையோ எதிர்பார்ப்பது போல் இருந்தது. அவன் பார்வை அவளுக்கு ஏதோ செய்ய அவள் முகம் சிவந்து போனது.

 

 

ரசனையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “போகலாமா என்று கூற தலையசைத்தாள் அவள். அவன் பைக்கில் ஏறிக் கொண்டு அவளை ஏற்றிக் கொள்ள முதல் முறையாக பிடிப்புக்காவோ அன்றி அவனை ஒரு வாரம் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினாலோ அவள் அவன் தோளை பிடித்துக் கொண்டாள்.

 

 

முன்புறம் அமர்ந்திருந்தவன் மனமோ ரெக்கை கட்டி பறந்தது. ஒரு சிரிப்புடனே பைக்கை ஓட்டினான். வேண்டுமென்றே மெதுவாக ஓட்டி வந்தாலும் அவள் அலுவலகம் விரைவாகவே வந்தது. அவளை இறக்கிவிட்டவன் அவள் கைகளை எடுத்து தனக்குள் அடக்கி ஆறுதலாக பற்றினான்.

 

 

பின் அவள் கைகளை விடுவித்தவன் சிவந்திருந்த அவள் முகம் பார்த்து சந்தோஷித்து அவளிடம் குறுந்தகவல் அனுப்புவதாகக் கூறிவிட்டு ஒரு சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சென்றதும் அவன் முன் வந்து நின்ற செந்தில் அவளை முறைத்தான்.

 

 

“என்னடி யாரிவன் ஆபீஸ்ல எங்க யாரையும் கண்டுக்க கூட மாட்ட, புதுசா எவனோ வர்றான். உன் கையை வேற பிடிச்சுட்டு நிக்குறான், நீயும் அவனை எதுவும் சொல்லாம நிக்குற அவன் கூட பைக்குல போயிட்டு வர்ற. ஒருவேளை நாங்களும் உன்னை அப்படி கூப்பிட்டு போகணும்ன்னு நினைக்கிறியா என்று அவன் முடிப்பதற்குள் அவள் கை அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

 

 

‘ச்சே தினம் இவனுடன் போராட்டமாக போய்விட்டதே, பேசாமல் வேலையை விட்டுவிடலாமா. அவர் ஊரில் இருந்து வரட்டும் பிறகு முடிவெடுப்போம். அதுவரை சமாளிப்போம் இல்லையேல் சேர்மனுக்கு இவன் செய்யும் வேலைகளை தெரிவித்துவிடுவோம் என்று முடிவெடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள் அவள்.

 

 

அன்று இரவே கார் பயணம் செய்தவர்கள் விடிவதற்கு முன்பே தேனியை அடைந்திருந்தனர். முன்பே தேனி இன்டர்நேஷனல் ஓட்டலில் பதிவு செய்திருக்க நேரே ஓட்டலுக்கே சென்றுவிட்டனர். பதிவு செய்திருந்த இரு அறைகளில் ஒன்றில் கல்யாணும் கார்த்திகாவும் இருக்க மற்றொன்றில் வைபவ் தங்கிக் கொண்டான். சிறிது நேரம் அவர்கள் படுத்துறங்க வைபவின் கைபேசி சிணுங்கியது.

 

 

கண் விழிக்காமலே அதை எடுத்து பார்த்தான். அழைப்பு நின்றிருக்க வேகமாக எழுந்து அமர்ந்து யார் அழைத்தது என்று பார்க்க அபியே அழைத்திருந்தாள். ‘இவள் அழைக்க மாட்டாளே என்று சிந்தனையுடன் பார்க்க அவன் கைபேசிக்கு அவளிடம் இருந்து பல குறுந்தகவல் வந்திருந்தது.

 

 

இரவில் இருவருமாக மாறி மாறி காரை ஓட்டியதில் அவன் அதை கவனிக்கவே இல்லை. ஒரு குற்ற உணர்ச்சியுடன் அந்த தகவல்களை பார்த்து அவளுக்கு மன்னிப்பு கோரி பதில் அனுப்பினான். கடைசியாக வந்த தகவலில் “IMISS U” என்று அவள் அனுப்பியிருக்க அவனும் பதில் அனுப்பி விட்டு குளிக்க விரைந்தான்.

 

 

அவன் குளித்து வருவதற்குள் காயத்ரியிடம் இருந்து அழைப்பு வந்திருக்க அவளிடம் எங்கு வரவேண்டும் என்று விபரம் கேட்டறிந்தவன் அவன் அறைக்கதவை பூட்டிக் கொண்டு கல்யாணை தேடி வந்தான். அவன் அறைக்கு வெளியே நின்று கதவை தட்ட அவனும் தயாராகி வெளியே வந்தான்.

 

 

“என்னடா காயு போன் பண்ணாளா, கிளம்பிட்டியா என்றான் கல்யாண். “ஹ்ம்ம்… ஆமாம் கல்யாண், நான் கிளம்பறேன், நீங்களும் கிளம்பிட்டீங்களா, எப்படி போகப் போறீங்க என்றான் வைபவ். “கார்ல தான் போறோம் வைபவ், அத்தை தெரிஞ்ச ஒருத்தரை அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்க, அவங்களை கூட்டிக்கிட்டு நாங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்.

 

 

“நீ அவளை பார்த்துட்டு எனக்கு போன் பண்ணு, அவ மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன்னு சொல்லிடு என்றான் கல்யாண். வைபவ் அவனிடம் விடைபெற்று காயத்ரியை பார்க்க சென்றான். பேருந்து நிலையம் அருகில் அவள் வந்து நிற்க சொல்லியிருக்க அவளுக்காக அவன் பத்து நிமிடம் காத்திருந்தான்.

 

 

தூரத்திலேயே அவளை கண்டுவிட்டவன் சத்தம் போட்டு கூப்பிட முயல அவளுடன் வந்த கடாமீசைக்காரனை பார்த்து அமைதி காத்தான். அவளோ சுற்று முற்றும் தேட அவளுக்கு போன் செய்து அவன் அவளை பார்த்துவிட்டதை கூறினான்.

 

 

அவளும் திரும்பி அவனை பார்த்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் அந்த கடாமீசைக்காரனையும் அழைத்துக் கொண்டு அவனருகில் வந்தாள். அருகில் வந்ததும் “எப்படியிருக்கீங்க வைபவ், இவங்க தான் என்னோட கணவர் பேரு பழனி. இவங்க என்னோட பசங்க மாலினி, ஷாலினி என்று அறிமுகம் செய்தாள்.

 

 

அவள் மரியாதையாக அவனை அழைக்கும் போதே புரிந்தது, அவள் கணவனிடம் ஹாய் என்று கைக்குலுக்க நினைத்தவன் இருகரம் கூப்பி “வணக்கங்க என்றான் மரியாதையாக. பதிலுக்கு மனைவியை நோக்கி மெச்சும் பார்வை பார்த்த கடாமீசைக்காரன் பதில் வணக்கம் செய்தான்.

 

 

“ஒரு நிமிஷம் என்றுவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்பு பலகாரம் வாங்கி வந்து அவர்களிடம் கொடுத்தான். “இதெல்லாம் எதுக்குங்க வைபவ், நீங்க சாப்பிட்டாச்சா என்றாள் அவள். அவன் இல்லை என்பதாய் தலையசைக்க எல்லோருமாக அருகில் இருந்த ஓட்டலுக்கு உணவருந்த சென்றனர்.

 

 

“சார் என்ன பண்ணறீங்க என்று அந்த கடாமீசைக்காரனை பார்த்து கேள்வி கேட்டான் வைபவ். “பலகாரக்கடை வைச்சுருக்கோமுங்க என்றார் அவர், பட்டணத்தில் பொறியாளர் படிப்பை படித்துவிட்டு கிராமத்தில் பலகாரக்கடை வைத்திருப்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக குடும்பம் நடத்துவதை ஆச்சரியமாக பார்த்தான் அவன்.

 

 

அவருமே பார்க்க படித்தவர் போன்றே இருந்தாலும் அச்சு அசல் கிராமத்து மனிதனாகவே தெரிந்தார். சாப்பிட்டு முடித்து அருகில் இருந்த வாடகை கார் நிறுத்துமிடத்தில் காரை எடுத்துக் கொண்டு அவர்கள் சரயு ஊரை நோக்கிச் சென்றனர்.

 

 

வைபவிடம் கடாமீசை பழனி ஏதோ கேட்டுக் கொண்டு வர அவனும் பதில் சொல்லிக் கொண்டே வந்தான். ‘முன்னாடி போறது கல்யாணோடா கார் மாதிரியே இருக்கு என்று நினைத்தவன் அவனும் இந்த வழியாக தான் ஊருக்கு செல்கிறான் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

 

 

ஏதோ சொல்ல முடியாத உணர்வொன்று அவனை தாக்க அமைதியாகவே அவன் பயணம் செய்தான். அதுவரை குழந்தைகளிடம் பேசி விளையாடிவன் தீடிரென்று அமைதியானதும் காயத்ரி யோசனை செய்தாள். ‘என்னாச்சு இவனுக்கு பேசாம வர்றான் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

சரயுவின் வீட்டிற்கு அருகில் நெருங்கவும் அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது. காரில் இருந்து இறங்கியவனின் முகம் இறுகி போய் இருக்க காயத்ரிக்கு உள்ளுர குளிர் பிறந்தது. இவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ, ஏன் இப்படி பேயறைந்தது போல் இருக்கிறான் என்று எண்ணியவாறே அவனை நோக்கினாள். சரியாக கல்யாணின் காரும் அந்த நேரத்தில் நுழைந்தது.

 

 

காரில் இருந்து இறங்கியவன் “என்னடா சரயுவை பார்க்க போறேன்னு சொல்லிட்டு இங்க நிக்குற என்றான் கல்யாண். “அங்க தான் வந்திருக்கோம் என்று அருகில் இருந்த பேனரை காட்ட அதில் முத்துவும் சரயுவும் சிரித்துக் கொண்டிருக்க அவர்கள் திருமண வாழ்த்து இருந்தது.

 

 

காயத்ரி அவர்கள் அருகில் வந்து “உள்ளே போகலாம் என்று கூற “கல்யாண் நான் கிளம்பறேன் என்றான் வைபவ். “வைபவ் கொஞ்சம் நில்லு, இவ்வளவு தூரம் வந்துட்டு நீ கிளம்பாதே, இரு எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசி தீர்த்துக்கலாம் வா உள்ளே போகலாம் என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான் அவன்.

 

 

“என்னங்க இங்கே நின்னுட்டு இருக்கீங்க என்று கார்த்திகா கேட்க “ஹ்ம்ம் அங்க பாரு என்று அவனும் பேனரை கை காண்பித்தான். “என்னது சரயு எனக்கு அண்ணியா என்று அதிர்ச்சி ஆனாள் அவள். “உனக்கு உன் கவலை என்றுவிட்டு அவன் உள்ளே நுழைந்தான்.

 

 

எதிரில் அவன் மாமனார் வர அவர் அவர்களை கண்டு முறைத்தாரோ இல்லை அவர் பார்வையே அப்படியோ தெரியவில்லை. “ஏன்டா இந்த மனுஷனுக்கு சிரிக்கவே வராதா, எப்போ பாரு இஞ்சியை தின்றவர் மாதிரியே இருக்காரு என்றான் கல்யாண்.

 

 

“டேய் உன் மாமனாரை இஞ்சி தின்ன குரங்குன்னு சொல்றியா என்றான் வைபவ் கவலை மறந்தவனாக, “இல்லைங்கறியா… என்றான் அவனும் சிரிக்காமலே, வைபவுக்கு தான் சிரிப்பு வந்துவிட்டது. அப்பாடா உன்னை சிரிக்க வைக்க என் மாமனாரை குரங்குன்னு சொல்ல வேண்டி இருக்கு என்றான் கல்யாண்.

 

 

“வாங்க மாப்பிள்ளை, வாங்க தம்பி உள்ள வாங்க என்று இந்திரா வாசலிலேயே அவர்களை வரவேற்க அவர்களை தொடர்ந்து அங்கிருந்த அருவா மீசை, கடாமீசை வைத்திருந்த சில பல தலைகள் வந்து அவர்களும் வரவேற்றனர்.

 

 

அவர்கள் வந்ததும் விழா தொடங்கிவிட சபையில் சென்று அவர்களை முன்னில் அமர வைத்தார் இந்திரா. “டேய் என்னை எதுக்குடா இங்க உட்கார வைக்கிறாங்க, அங்க பாரு அந்த ஜெம் என்னை பார்த்து முறைக்கிறார் என்றான் வைபவ்.

 

 

“எல்லாம் உன் மாமனார் தான்டா… என்று வைபவ் தொடர அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து சிரித்தான் கல்யாண். அதற்குள் பெரியவர்கள் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். முத்து கல்யாணின் அருகில் அமர்ந்திருந்தான்.

 

 

எப்போது சரயுவின் தரிசனம் கிடைக்கும் என்று அவன் ஆவலாக அமர்ந்து இருக்க சிறிது நேரத்தில் அங்கிருந்த பெரியவர் ஒருவர் “பொண்ணை வரச் சொல்லுங்கப்பா, நிச்சயப்புடவையை கொடுத்துவிடுவோம் என்று கூற முத்துவின் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது.

 

 

வெட்கத்துடன் உள்ளிருந்து வந்தவளின் பார்வை வெளியில் வந்ததும் முத்துவை நோக்குவதை விட்டு ஒரு ஆர்வத்துடன் அவள் நண்பர்களை தேடி சுழன்றது. முத்துவுக்குள் ஒரு ஏமாற்றம் சட்டென்று வந்து போனது. பெண்ணை அழைக்க சொன்னதுமே தலையை குனிந்து அமர்ந்தான் வைபவ்.

 

 

அதற்குமாறாக கல்யாண் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து அவளை வெளிப்படையாகவே முறைத்தான். ‘போச்சு, போச்சு ரெண்டு சாமியும் ஆளுக்கு ஒரு பக்கமா மலையேறி இருக்கு, காளியாத்தா எனக்கு கொஞ்சம் தெம்பை கொடு. இவனுங்களை சமாளிக்க, இவனுங்களை சமாதானப்படுத்தி நானே உன் கோவிலுக்கு இவங்களோட வந்து பொங்க வைக்கிறேன் ஆத்தா என்று சட்டென்று அவள் ஊரில் இருந்த காளியாத்தாவிடம் வேண்டுதலை வைத்தாள்.

 

 

அடுத்தடுத்து காரியங்கள் வேக வேகமாக நடக்க அரைமணி நேரத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. நிச்சயம் முடிந்ததும் கிளம்புகிறேன் என்று கிளம்பிய வைபவை நிறுத்தி வைப்பது கல்யாணுக்கு பெரும்பாடாக இருந்தது. அவனுக்கும் அவள் கோபமிருக்கிறது.

எதையும் பேசி தீர்ப்போம் என்று காத்திருந்தான் கல்யாண், முத்து தயங்கி தயங்கி அவனருகில் வர ‘இவன் எதுக்கு இப்போ வர்றான், இவனுக்கு உண்மை தெரிஞ்சி இருக்குமோ என்று கல்யாண் நினைக்க வந்தவனும் அதையே ஊர்ஜிதப்படுத்தினான்.

 

 

“கல்யாண் தப்பா எடுத்துக்காதீங்க, அவ உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்ன்னு தான் முன்னாடியே சொல்ல வேணாம்ன்னு சொன்னா, உங்க முகத்தை பார்த்தா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு தெரியுது

 

 

“உங்களைவிட்டு பிரிஞ்சிருந்தாலும் உங்களை எல்லாம் நினைச்சுட்டு தான் இருந்திருக்கா போல, அவளை எதுவும் கோபமா பேசிடாதீங்க, தாங்க மாட்டா என்று அவன் கூறவும் கல்யாணுக்கு கோபம் ஜிவுஜிவு என்றேறியது.

 

 

‘உனக்கு முன்னாடி அவன் எங்களோட சினேகிதி எங்களுக்கு தெரியாதா அவகிட்ட எப்படி நடக்கணும்னு என்று கோபமாக நினைத்தவன் முகம் அப்படியே அதை பிரதிபலித்தது.

 

 

அவர்கள் பேசுவதை பார்த்த நிர்மல் சமாதானப்படுத்தவென்று அவன் அன்னையை அந்த நேரம் அங்கு அனுப்பி வைத்தான். அவர்கள் இருக்குமிடம் வந்தவர் “முத்து நீ உள்ள போப்பா, நீயோ இல்லை நானோ பேசி அவங்களை சமாதானப்படுத்த முடியாது

 

 

“என்ன பேசணும்னாலும் அதை அவங்களே பேசி தீர்த்துக்குவாங்க, நீ போய் நிர்மல் கூட உட்காரு என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். “மாப்பிள்ளை… தம்பி… நான் உங்களுக்கு எந்த சமாதானமும் சொல்லலை. சரயு உங்ககிட்ட பேசணுமாம் நீங்க போய் பேசுங்க என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

 

 

அவர்கள் உள்ளே செல்ல முனைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவர்கள் அருகில் வந்து “தம்பி நான் செல்வியோட பெரியம்மா, அவளை தப்பா நினைக்காதீங்க தம்பி. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் நடந்த தப்புக்கு தான் தான் காரணம் நினைச்சு உங்களை விட்டு விலகி இருந்திருக்கா

 

 

“கல்யாணமே வேணாம்னு இவ்வளவு நாளும் தள்ளிப்போட்டவ இந்த மாப்பிள்ளைக்கு மட்டும் தான் சரின்னு தலையை ஆட்டுனா, ஒரு வேளை சென்னைக்கு வந்தா உங்களை பார்க்கலாம்ன்னு நினைச்சு தான் சரின்னு சொன்னாளோ என்னவோ. நீங்க போய் பேசுங்க தம்பி என்றவர் தொடர்ந்தவாறே “தம்பி… உங்க சம்சாரத்தையும் கூட்டிட்டு போங்க, நீங்க ஆம்பிளைங்களா போய் பேசிட்டு இருந்தா தப்பா எடுத்துகுவாக, இது கிராமம் என்று சேர்த்து சொன்னார் அவர்.

 

 

பல்லைக் கடித்தவன் “கார்த்தி என்று குரல் கொடுத்தான் கல்யாண். வாசலில் நின்றிருந்தவள் “என்னங்க என்றவாறே வந்தாள். “வா எங்களோட என்று சொல்லிவிட்டு அவளுடன் கல்யாணும், வைபவும் சரயுவின் அறைக்குள் நுழைந்தனர்.

 

 

ஒரு கோபத்துடனும் மற்றொருவன் வருத்தத்துடனும் உள்ளே நுழைய சரயுவோ அவர்களை எப்படி சமாதானப்படுத்தப் போகிறோம் என்று கலக்கத்துடேன் இருந்தாள், கார்த்தியோ ‘அய்யோ காலேஜ் படிக்கும் போதே இவ என்னை ஓட்டுவாளே… ஓட்டுவாங்களே… இப்போ என்ன பண்ணுவாங்களோ என்று சரயுவை பற்றி எண்ணினாள்.

 

 

கண்டதும் காதலாகும்

நட்பாகுமா என்றேன்…

ஆகுமென்றாய் நீ…

 

ஆண் பெண் சினேகம்

சாத்தியமாகுமா என்றேன்

ஆகுமென்றாய் நீ…

 

கண்டபடி பேசுவார்கள்

என்றேன் குருடர்கள்

அவர்கள் என்றாய் நீ…

 

உனை கண்டவர்கள்

கேட்டால் என் செய்வாய்

என்றேன் புன்னகையுடன்

என் சினேகிதன் அவன்

என்பேன் என்றாய் நீ…

 

தமக்கையாய் தங்கையாய்

அன்னையாய் தோழியாய்

அன்பாய் பண்பாய்

நட்பாய் சினேகமாய்

இருந்தவள் வேண்டாம்

என்று ஏன் போனாய் நீயே…

 

 

 

Advertisement