Advertisement

அத்தியாயம் –16

 

 

அன்று மாலை கல்யாண் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வைபவ் வீட்டிற்குள் நுழைந்தான். “என்னடா திடீர் விஜயம் என்கிட்ட ஒண்ணும் சொல்லவே இல்லை என்றான் கல்யாண். “அம்மா தான் போன் பண்ணியிருந்தாங்க, என்னை வரச்சொல்லி என்றான் நண்பன் பதிலுக்கு.

 

 

“அம்மா எதுக்கு வரச்சொன்னாங்க என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே என்றவன் வாயை மூடுவதற்குள் “வாப்பா வைபவ் கிளம்பலாமா என்றார் மாதவி. “எங்கம்மா கிளம்பப் போறீங்க என்றான் கல்யாண்.

 

 

“கல்யாண வேலை தான், நமக்கு தெரிஞ்ச கோவில் குருக்களை பார்த்து கல்யாணத்துக்கு மந்திரம் ஓத கூப்பிடணும் என்றார் அவர். “யாருன்னு சொல்லுங்கம்மா, நாங்க போய் சொல்லிட்டு வர்றோம் என்றான் கல்யாணும் விடாமல்.

 

 

“இல்லை கல்யாண் நானே போய் பார்த்திட்டு வந்திடறேன், அப்படியே உன் தம்பி ஜாதகமும் பார்த்திட்டு அவனுக்கு எப்போ பொண்ணு அமையும் எல்லாம் கேட்டுட்டு வரணும். நான் வைபவ் கூட போயிட்டு வந்திடறேன், ராம் வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும்.

 

 

“வீட்டில கார்த்திகா தனியா இருக்கா, நீ அவளை தனியா விட்டுட்டு எங்கயாச்சும் கிளம்பிடாதே. நான் போய்ட்டு ஒரு மணி நேரத்தில வந்திடுவேன் என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ‘அம்மா வேணுமின்னே என்னையும் அவளையும் தனியா இருக்க வைக்க தான் இப்படி செய்யறாங்களோ என்று நினைத்தான் அவன்.

 

 

அவனுக்கு அவர் எங்கு வெளியில் சென்றிருக்கிறார் என்று தெரியாமல் அவன் பாட்டுக்கு யோசனை செய்து கொண்டிருந்தான். “சாப்பிட வாங்க என்றவளை திரும்பிகூட அவன் பார்க்கவில்லை. “உங்களுக்கு என் மேல தானே கோபம் சாப்பாடு மேல என்ன கோபம். வந்து சாப்பிடுங்க என்றாள் அவள்.

 

 

“தேவையில்லை அம்மா வந்ததும் நான் சாப்பிட்டுக்கறேன் என்றான் அவன் வீம்பாக. “அப்பவும் நான் தான் உங்களுக்கு சாப்பாடு போடுவேன், எதில இருந்து தப்பிக்க இப்படி செய்யறீங்க என்றாள்.

 

“இப்போ உனக்கு என்ன வேணும், அதான் அன்னைக்கே சொல்லிட்டேன்ல என்கிட்ட பேசாதேன்னு, திரும்ப திரும்ப எதுக்கு வந்து என்கிட்ட பேசற என்று பொரிந்தான் அவன். “உங்கம்மாகிட்ட வேற என்ன சொல்லி வைச்சேன்னு எனக்கு தெரியலை, அவங்க என் பொண்ணை நல்லா பார்த்துக்கோங்கன்னு போன் பண்ணாங்க

 

 

“என்னமோ நான் தான் உன்னை கொடுமை படுத்தற மாதிரி இருக்கு. உண்மையிலேயே நான் தான் நிம்மதி இழந்து தவிக்கிறேன். ச்சே… என்றான் அவன் சலிப்புடன். “நான் எதுவும் எங்கம்மாகிட்ட சொல்லலை என்றாள் அவள். “நீங்க வந்து சாப்பிடுங்க ப்ளீஸ் என்றாள் நீர் நிறைந்த விழிகளுடன்.

 

 

எதுவும் பேசாமல் சாப்பிட அமர்ந்தான் அவன், அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் வைபவ் மாதவியுடன் வந்து சேர்ந்தான். “என்னம்மா என்ன சொன்னாங்க என்றான் கல்யாண். “எதை பத்திப்பா என்றார் அவன் அன்னை மாதவி.

 

 

“அதான்மா தம்பிக்கு ஜாதகம் பார்க்க போறேன்னு சொன்னீங்களே, அதான் என்னாச்சுன்னு கேட்டேன் என்றான் அவன். “அவனுக்கு இப்போ நேரம் வரலையாம் என்றவர் வைபவிடம் ஏதோ ஜாடை காட்டினார். “சரிடா நான் கிளம்பறேன், கிளம்பறேன்மா கார்த்தி நான் போய்ட்டு வர்றேன் என்று அவன் விடைபெற்றான்.

 

 

‘இவன் ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுறான் என்று நினைத்துக் கொண்டு கல்யாண் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான். மறுநாள் அலுவலகம் சென்றான் ஒருவருக்கு கொடுக்கவென்று எடுத்து வந்திருந்த கல்யாண சிடியை வீட்டிலேயே விட்டு வந்தது ஞாபகம் வர அதை எடுத்து வரவென்று வீட்டிற்கு வந்தான்.

 

 

“என்னப்பா இந்த நேரத்துல வந்திருக்க என்னாச்சு என்றார் அவன் அன்னை மாதவி. “ஒண்ணுமில்லைம்மா ஒரு சிடி விட்டுட்டு போயிட்டேன் அதை எடுக்க தான் வந்தேன். ஆமா உங்க மருமக எங்க என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அறைக்குள் நுழைந்தவன் அவர் அடுத்து சொன்னதை கவனிக்கவில்லை.

 

 

பீரோவை திறந்து உள்ளேயிருந்த சிடி எடுக்க தவறி அது கிழே விழுந்தது. பீரோ கதவை அடைத்துவிட்டு அவன் குனித்து அதை தேட துணியை காயப்போட்டுவிட்டு அவர்கள் அறைக்கு வந்தாள் கார்த்திகா.

 

 

உடுத்தியிருந்த புடவை ஈரமாக இருப்பது போல் தோன்ற வேறு புடவை கட்டலாம் என்றெண்ணியவள் கட்டிலுக்கு மறுபக்கம் குனிந்து சிடியை தேடுபவனை கவனிக்காது அந்த பக்கம் செல்லவும் அவன் சிடியை எடுத்துக் கொண்டு எழவும் சரியாக இருக்க, திடிரென்று கண் முன் நிற்பவனை பார்த்து ஒரு கணம் பயத்தில் திகைத்து நின்றாள்.

 

 

வேகமாக அவன் எழுந்ததில் அவள் மேல் அவன் இடித்தது அவளுக்கு அப்போது தான் வலியை ஏற்படுத்த “ம்மா…. என்று முனகினாள். “என்னாச்சு ஏன் இப்படி முனகுற என்றான் அவன். “நீங்க… நீங்க எப்போ வந்தீங்க என்றாள் அவள். “இல்லை சிடி வீட்டுல வைச்சுட்டு போயிட்டேன் அதை எடுக்க வந்தேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு என்றான் அவன்.

 

 

அப்போது தான் அவன் கேட்டது மனதில் உரைக்க “ஒண்ணுமில்லை நீங்க எழும் போது இடிச்சிட்டீங்க, அதான் வலிக்குது. பரவாயில்லை இப்போ ஒண்ணும் வலியில்லை. நீங்க கிளம்புங்க என்றாள்.

 

 

“எங்க வலிக்குதுன்னு சொல்லு, வலியில முனகிட்டு பரவாயில்லைங்கற என்று சிடுசிடுத்தான் அவன். அவன் எழும் போது அவன் அவள் நெஞ்சில் வேகமாக இடித்ததில் அவளுக்கு வலது புறம் வலியாக இருந்தது, அவனிடம் எங்கே என்று அவள் காட்டுவாள்.

 

 

முகம் சிவக்க “இல்லை பரவாயில்லை நான் பார்த்துக்கறேன் என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள். அவள் சென்ற பின் அவன் யோசிக்க அவன் கை அவள் மேல் வேகமாக இடித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. தோளை குலுக்கிக் கொண்டு வேலையை பார்க்க சென்றான்.

 

 

ஏனோ கண் முன்னே அவள் சிவந்த முகமே அவனுக்கு வந்து போனது. அன்று மாலை நேரம் வேலை எதுவுமில்லை என்பதால் கல்யாண் சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டான். அவனுக்கு முன்னே அவன் வீட்டில் வைபவ் நின்றிருந்தான்.

 

 

“டேய் நீ எங்கடா இங்க நீ வளசரவாக்கம் போறேன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ற என்றான் கல்யாண். “இல்லை இங்க… என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே மாதவி குறுக்கிட்டு “நான் தான் அவனை வரச்சொன்னேன் என்றார்.

 

 

அவர் அங்கிருந்து நகர “என்னடா என்று கல்யாண் நண்பனை பார்க்க “ஒண்ணுமில்லை இன்னைக்கு நாள் நல்லாயிருக்காம், அதான்… என்று இழுத்தான். “என்ன அதான்… இன்னைக்கு நாள் நல்லா இருந்தா என்ன என்று புரியாமல் விழித்தான் கல்யாண். “ஹ்ம்ம்… தெரியாத மாதிரியே நடிடா என்றான் வைபவ் கிண்டலாக.

 

 

“நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலை என்ன சங்கதிநீயாச்சும் சொல்லுடா??? என்றான் கல்யாண். “இன்னைக்கு உனக்கு முதலிரவு, அதுக்கு தான் ஏற்பாடு நடந்திட்டு இருக்கு என்றான் வைபவ். “ஹேய் என்னடா இதெல்லாம், எனக்கு கல்யாணம் நேத்து தான் ஆனா மாதிரி என்ன கன்றாவிடா இதெல்லாம்??? என்றான் கல்யாண்.

 

 

“இப்போ இது ரொம்ப அவசியமா!!! என்று அவன் பொரிய, “நிஜமா சொல்லு இது அவசியம் இல்லைன்னு என்று அவன் கண்களை பார்த்து வைபவ் கேட்க கல்யாண் பேச்சிழந்தான்.

 

 

“இப்போ எதுக்கு இந்த ஏற்பாடு அதுக்கு என்ன அவசியம் என்று முகத்தை எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க “நடக்க வேண்டியது காலாகாலத்துல நடக்கலைன்னு அர்த்தம், காலம் கடந்தாலும் அது நடக்கணும்ன்னு அர்த்தம் என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வைபவ்.

 

 

கல்யாண் மொட்டை மாடிக்கு சென்று மதிலில் அமர்ந்தான். அவன் மனம் எப்படி உணர்கிறது என்றே அவனுக்கு புரியவில்லை, அவள் மேல் இருந்த கோபம் அவன் நினைவுக்கு வர முகம் இறுகியது.

 

 

கீழே இறங்கி வர “என்ஜாய் பண்ணுடா என்று வைபவ் நண்பனை அணைத்துக் கொள்ள “நீ வேற ஏன்டா படுத்துற அப்படி எல்லாம் எதுவும் நடக்காது, நீ கிளம்பு என்று எரிச்சலுடன் மொழிந்தான் அவன். “அடப்போடா என்று சிரித்துக் கொண்டே வைபவ் தோளை குலுக்கிவிட்டு சென்றான்.

 

 

கதவை அடைத்துவிட்டு டிவியை உசுப்பினான். கார்த்திகாவோ வெளியே வரவேயில்லை. ஒரு ஒரு சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான். பசி வேறு வயிற்றை கிள்ளியது. மாதவி சாப்பிட்டு அப்போதே தூங்க சென்றுவிட்டார். இன்னும் உள்ள உட்கார்ந்து என்ன தான் பண்ணிட்டு இருக்கா எனக்கு பசிக்குது.

 

 

கூப்பிடலாமா வேணாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கைவளை சரசரக்க அவர்கள் அறையில் இருந்து அவள் வெளியில் வந்தாள். சோபாவில் படுத்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் நிமிர்ந்து பார்க்காமலே தெரிந்தது அவள் நடமாடுவது.

 

 

அவள் சாப்பிட அழைத்தால் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்க, “சாப்பிட வாங்க என்று அவள் அழைத்ததும் எதுவும் பேசாமல் எழுந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்தான். ‘ச்சே நான் சாப்பிட போகக் கூடாதுன்னு நினைச்சேன், ஏன் இப்படி செஞ்சேன் என்று அவனை அவனே திட்டிக் கொண்டான்.

 

 

சாப்பிட்டு முடித்தவன் மீண்டும் சோபாவில் சென்று படுத்துக் கொண்டு டிவியை பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் மல்லிகை மணம் நாசியை துளைக்க அவனுக்குள் ஏதோ செய்ய டிவியை சத்தமாக வைத்து அந்த காமெடி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தான். “ஏங்க வந்து படுக்கறீங்களா, எனக்கு தூக்கம் வருது என்றாள் அவள்.

 

 

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ என்னை எதுக்கு கூப்பிடுற அம்மா ஏதோ ஏற்பாடு பண்ணிட்டா நீ கனவு காண ஆரம்பிச்சுடுவியா. உன்னை பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு என்றவன் “உனக்கு தூக்கம் வந்தா நீ போய் தூங்கு என்னால வரமுடியாது என்றுவிட்டு வேறு சேனலை மாற்றி பார்க்க ஆரம்பித்தான்.

 

 

அவள் பதில் ஏதும் சொல்லாமல் போனது சட்டென்று ஒரு வெறுமையை அவனுக்குள் உண்டு பண்ணியது. ‘அப்போ நான் கோபப்பட்டா இவளுக்கு ஒண்ணுமில்லையா, என்னை சமாதானப் படுத்த மாட்டாளா என்று அதற்கும் அவளையே திட்டினான்.

 

 

எதிரில் இருந்த சோபாவில் ஒரு விரிப்பையும் தலையணையும் எடுத்து வந்து போட்டவள் அதிலேயே படுக்க போக “எதுக்கு இங்க படுக்கற உள்ள படுக்க வேண்டியது தானே என்றான் அவன்.

 

 

“எனக்கு தனியா படுக்க ஒரு மாதிரியா இருக்கு, ப்ளீஸ் நான் இங்கேயே படுத்துக்கறேன் என்றாள் அவள். சட்டென்று எழுந்து அமர்ந்தவன் டிவியை அணைத்தான். “உள்ளே வா என்றுவிட்டு சென்றுவிட்டான். விளக்கை அணைத்துவிட்டு அவளும் பின்னே வர “உட்காரு என்றான்.

 

 

“என்ன வேணும் உனக்கு என்றான் அவளை பார்த்து, “எனக்கு நீங்க வேணும் என்றாள். அவன் ஏதோ மேலே பேச வாயெடுக்கும் முன் “நான் பேசிடறேன், நான் சொன்னதோட அர்த்தத்தை நீங்க முழுசா கேட்டுட்டு பேசுங்க.

 

 

“பேச வேண்டிய நேரத்துல பேசாம போனதுனால தான் இப்போ நீங்க என்கிட்ட பேசாம இருக்கீங்க. இந்த ரெண்டு நாளா நீங்க என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசலை. உங்களோட இத்தனை வருஷ வலி என்னன்னு இந்த நாள்ல நான் நல்லவே தெரிஞ்சுக்கிட்டேன். என் மனசுல உள்ளது எல்லாம் உங்ககிட்ட பேசிடணும். தயவு செய்து நான் பேச வர்றது என்னன்னு கேளுங்க என்று அவள் இடைவெளிவிட அவன் வாயை மூடிக் கொண்டு அவள் என்ன பேசப் போகிறாள் என்று பார்த்தான்.

 

 

“எனக்கு நீங்க வேணும், உங்க அன்பு வேணும். நம்ம குடும்பம் வேணும்ன்னு தான் நான் இங்க வந்தேன். நிச்சயமா நீங்க கூப்பிட்டதும் தான் வந்தேன் ஒத்துக்கறேன், ஆனா அதுக்கு முன்னாடியே என் மனசு கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுடுச்சு. எப்படி நானா உங்களை தேடி வர்றதுங்கற ஈகோ தான் என்னை வரவிடாம தடுத்துச்சு.

 

 

“நீங்க வந்து என்னை கூப்பிடணும்ன்னு ஒரு எண்ணம். அதுக்கு எனக்கு தகுதியில்லை தான். ஆனா எனக்குள்ள ஒரு ஆசை அப்படி இருந்தது. அப்புறம் இன்னொரு விஷயம், இது எப்பவும் மன்னிக்க முடியாதது தான் என்று அவள் நிறுத்த என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் முகத்தை பார்த்தான். “புரோ…புரோக்கர்ன்னு… என்று அவள் சொல்லும் போதே அவன் முகமும் உடலும் இறுகியது.

 

 

“அப்படி நான் சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுதுங்க. நீங்க செய்யறது வெறும் வேலையா மட்டும் நினைக்காம ஒரு சேவையாவும் செஞ்சுட்டு வர்றது புரியாம ரொம்ப தப்பா பேசிட்டேன் என்றவளை ‘இப்போது மட்டும் உனக்கு எப்படி புரிந்தது என்பது போல் அவன் புருவம் சுருக்கினான்.

 

 

“இப்போ மட்டும் உனக்கு எப்படி புரியுதுன்னு நினைக்கிறீங்களா. அது புரிய ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு என்றவளின் முன் அந்த நாள் நிழலாடியது.

 

____________________

 

 

கார்த்திகாவின் கல்லூரியில் உடன் பயின்ற தோழி செல்லம்மாவை சில மாதங்களுக்கு முன் சந்தித்தாள். “ஹேய் கார்த்தி… கார்த்தி என்று குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள். “ஹாய் செல்லம் எப்படிடி இருக்க, என்ன இந்த பக்கம் என்றாள் கார்த்தி.

 

 

“என் கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்தேன் என்றாள் அவள் வெட்கத்துடன். “ஹேய் நிஜமாவா சொல்ற, அப்போ உங்கக்கா கல்யாணம் என்னாச்சு என்றாள் கார்த்திகா.

 

 

“அக்கா கல்யாணம் முடிஞ்சிருச்சு என்றவளை வியப்புடன் பார்த்தாள் கார்த்திகா. “சாரிடி உன்னோட முகவரியை வாங்கம விட்டுட்டேன் அதான் உன்னை அழைக்க முடியலை. கடவுள் புண்ணியத்துல… எங்க அக்கா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது என்றாள் செல்லம்மா.

 

 

“கடவுள் புண்ணியமா… கொஞ்சம் தெளிவா சொல்லுடி என்றாள் கார்த்திகா. “உனக்கு தான் தெரியுமே எங்க அக்காவுக்கு போலியோ அட்டாக்னால ஒரு கையும் காலும் சரியா வாராதுன்னு. எப்படி மாப்பிள்ளை பார்க்க போறோம்ன்னு பலதடவை நான் அதை பத்தி உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல

 

 

“அப்போ தான் ஒருத்தர் சொன்னாங்கன்னு, நாங்க கல்யாண வைபவத்துல பதிஞ்சோம்… என்றவளை இடைமறித்து “அங்க எதுக்கு பதிவு செஞ்சீங்க. உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா என்றாள் கார்த்திகா. “ஏன்டி எங்க பதிஞ்சா என்ன, இப்போ அதுவா முக்கியம், நடந்ததை கேளுடி முதல்ல என்று செல்லம்மா தொடர்ந்தாள்.

 

 

“அங்க பதிவு செஞ்சதுக்கு அப்புறம் எங்களுக்கு நல்ல குணமான வசதியான அக்காவை புரிஞ்ச மாப்பிள்ளையே கிடைச்சாங்க. இதுல என்ன ஒரு நல்ல விஷயம்ன்னா மாப்பிள்ளை வீட்டுல எங்க அக்காவுக்கு எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க

 

 

“ஆனாலும் நாங்க எப்படியாச்சும் எங்களால முடிஞ்சதை எங்க அக்காவுக்கு செய்யணும்ன்னு நினைச்சோம். அப்பாவுக்கு வேற வேலை போய் பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஒரு விஷயம் தெரியுமா நாங்க பதிவு பண்ண கல்யாண வைபவம் கல்யாண் சாரும், வைபவ் சாருமே எங்க அக்காவுக்கு எல்லா செலவும் செய்யறேன்ன்னு சொல்லி நல்லபடியா சிறப்பா கல்யாணம் நடத்தி வைச்சாங்க தெரியுமா

 

 

“என்ன தான் மாப்பிள்ளை வீட்டுல நகை நட்டு வேணாம்ன்னு சொன்னாலும் கல்யாண செலவுன்னு ஒண்ணு இருக்குல. கல்யாண சீர் முதல், கல்யாண சாப்பாடு வந்தவர்களை உபசரிப்பது என்று அவர்கள் வீட்டு விசேஷம் போலவே நடத்தினாங்க. நாங்க கூட எதுக்கு சார் எங்களுக்கு மட்டும் செய்யறீங்கன்னு கேட்டோம். அவங்க சிரிச்சுட்டே இதுல ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குதுன்னு சொன்னாங்க. இதை அவங்க ஒரு சேவையாவே செஞ்சுட்டு வர்றாங்க போல

                   

 

“எங்க அக்கா கல்யாணம் நடந்த அதே மண்டபத்துல ஒரு கண்ணு தெரியாத பொண்ணுக்கு கூட சிறப்பா கல்யாணம் நடந்திச்சி. அதுவும் கூட அவங்க ஏற்பாடு தான் போல. மாப்பிள்ளை வீட்டை பொறுத்த வரை நாங்க தான் இதை செஞ்சதா நினைச்சுட்டு இருக்காங்க. அவங்க செஞ்சதை கூட யாருக்கும் சொல்லிக்காட்டவே இல்லை.

 

“யாருக்கும் தெரியாமலே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க. ஒரு நல்லது பண்ணிட்டு ஊருக்கே விளம்பரம் போட்டு காட்டுறவங்க மத்தியில இவங்க சத்தமே இல்லாம நல்ல காரியம் செஞ்சுட்டு அந்த பெருமையும் கூட தங்களுக்கு வேண்டாம்ன்னு இருக்காங்க. எவ்வளோ நல்ல மனசு அவங்களுக்குன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்குடி

 

 

“பொண்ணை பார்த்தோமா மாப்பிள்ளை ஜாதகம் பொருந்தியிருக்கா, கமிஷன் வாங்கினோமான்னு இல்லாம, பொண்ணு, மாப்பிள்ளைன்னு எல்லா தரப்பும் நல்லா விசாரிச்சு அவங்க பார்த்து பண்ணி வைக்கிற கல்யாணம் எல்லாமே நல்லாவே இருக்கு. முதல்ல எல்லா வரன் பார்க்குற மையம் மாதிரின்னு நினைச்சு தான் நாங்களும் பதிவு செஞ்சோம். இப்போ அவங்களால நல்ல உறவுகள் எங்களுக்கு கிடைச்சுருக்கு.

 

 

“எனக்கு எங்க மாமா சொந்தத்துலயே ஒரு வரன் வந்திருக்கு, எங்க மாமா தான் பேசி முடிச்சாங்க. அக்காவை அவங்க அப்படி தாங்குறாங்க, அவங்க புண்ணியத்துல எனக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்கார். எல்லாத்துக்குமே காரணம் கல்யாண் சாரும் வைபவ் சாரும் தான் என்றாள் அவள் சந்தோசத்துடன்.

____________________

 

 

“நீங்க எவ்வளவு ஒரு நல்ல விஷயமா செஞ்சுட்டு வர்ற உங்க வேலையை நான் எவ்வளவு கேவலமா பேசியிருக்கேன். என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு, உண்மையிலேயே உங்களை தப்பா பேசின நான் தான் கேவலமானவ என்று அவள் கூற அவள் வாயை பொத்தினான். “வேற பேசு என்றான் கல்யாண்.

 

 

“நீங்க அன்னைக்கு வைபவ் நிச்சயத்துல பேசினது என் ஈகோ விடவைச்சது. அப்பவே உங்ககூட வந்துடணும்ன்னு நான் துடிச்ச துடிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். அப்பவே உங்ககூட வந்திருந்தா நீங்க சொன்னதை கேட்டு நான் வந்துட்டேன்னு நினைப்பீங்கன்னு உங்ககூட வரலை.

 

 

“எப்படி கிளம்பி வர்றதுன்னு யோசிக்கும் போது தான் எங்க அண்ணா கல்யாணம் பண்ணிக்க போற வீட்டில இருந்து ஒரு சின்ன பிரச்சனை கிளம்புச்சு. எல்லாரும் நான் இங்க கிளம்பி வரணும்னு மாத்தி மாத்தி பேசினாங்க, நானும் அது தான் சாக்குன்னு கிளம்பி வந்துட்டேன்

 

 

அவள் பேசுவதை எந்த குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தவன் முகத்தில் லேசான சலனம் வந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் அடுத்து என்ன பேசுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “அன்னைக்கு அப்பா உங்களை பேசும் போது நான் உங்களுக்காக பேசாதது தப்பு தான்

 

 

“அன்னைக்கு நான் உங்களை பார்த்ததை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, உங்களை போய் அப்பா தப்பா பேசுறாங்களேன்னு தான் நான் உங்களை பார்த்தேன். உங்களை விட்டு இத்தனை வருஷம் பிரிஞ்சு போன என்னோட நினைவாவே நீங்க இருந்திருக்கிறீங்க உங்களை போய் அப்பா தப்பா பேசிட்டாங்கன்னு எனக்கும் அப்பா மேல ரொம்பவே கோபம். நான் அவங்களை எதிர்த்து பேசுறதுக்கு முன்னாடி அம்மா வந்துட்டாங்க என்று நிறுத்தினாள் அவள்.

 

 

அப்போதும் அவன் பேசாமலே இருக்க அவள் தொடர்ந்தாள் “ஆனா எனக்கு மனசு கேக்கலை, மறுநாள் எங்க வீட்டுக்கு போய் அப்பாவை ரொம்பவே பேசிட்டேன். முதல் முறையா எங்கம்மா என்னை திட்டிட்டாங்க அப்பாவை எதிர்த்து பேசினதுக்காக

 

 

“எல்லா தப்பும் நான் பண்ணிட்டு அவரை போய் நான் பேசுறதுல என்ன புண்ணியம்ன்னு அப்புறம் தான் தோணிச்சு என்று சொல்லிக் கொண்டிருந்தவள் கட்டிலின் கிழே அவன் காலடியில் அமர்ந்து அவன் கால்களை பிடித்துக் கொண்டாள்.

 

 

“என்னை மன்னிப்பீங்களா கல்யாண், நான் உங்களை புரிஞ்சுக்காம பண்ணதை மறந்து என்னை மன்னிப்பீங்களா. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீங்களா. இனி உங்களை என் வாழ்நாள் இருக்கும் வரை நான் பிரியவே மாட்டேன். வாழ்க்கைன்னா என்னன்னு நான் இப்போ தான் புரிஞ்சுக்கவே ஆரம்பிச்சு இருக்கேன். காதல் வாழ்க்கை வேற கல்யாண வாழ்க்கை வேறன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு என்று சொல்லி கதறி அழுதவளை எழுப்பி தன்னருகில் அமர வைத்தான்.

 

 

அவளின் மாற்றம் அவனை ஏதோ செய்தது, அவள் மாறியிருக்கிறாள் என்பது இந்த இரண்டு நாளில் புரிந்தாலும் முதல் நாள் கடையில் நடந்த நிகழ்வு அவனை அவளிடத்தில் பேசவிடாமல் செய்தது. அவனை புரிந்து தான் அவள் வந்திருக்கிறாள் என்றதில் அவனுக்கு சந்தோசம் வந்திருந்தது.

 

 

“விடு ரித்தி பழசு எதுவும் இனி பேச வேண்டாம், நீ என்னை புரிஞ்சுக்காம வந்திருக்கன்னு தான் என்னோட கோபமே, அன்னைக்கு நீ பார்த்த பார்வையும் அதை பிரதிபலிச்சதா எனக்கு தோணிச்சு. அது தான் என்னோட கோபத்தை அதிக படுத்துச்சு. இப்போ எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்றான் கண்களில் ஏக்கத்தை தேக்கி.

 

“எனக்கும் தான் சந்தோசமா இருக்கு என்றாள் அவள். “அதை பத்தடி தள்ளி உட்கார்ந்தா சொல்லுவ என்றான் அவன். “நான் பக்கத்துல வந்தா தான் உங்களுக்கு பிடிக்கலையே என்றாள் அவள். “நான் எப்போ அப்படி சொன்னேன் என்றான் அவன்.

 

 

“நான் உங்களுக்கு சாப்பாடு போடக்கூடாதுன்னு வெளியவே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னா ஆளு தானே நீங்க என்றாள் அவள். “அது சும்மா சொன்னேன், அதுக்காக நீ என்கூட சண்டை போட்டு என்னை சாப்பிட சொல்லமாட்டியா, அப்படியே பேசாம இருந்துடுவியா என்றான் அவன்.

 

 

“அடக்கடவுளே இது எனக்கு தெரியாம போச்சே, சண்டை தான் போடணும்ன்னா அன்னைக்கே சண்டை போட்டிருப்பேனே. ச்சே நம்ம பிரச்சனை அன்னைக்கே முடிச்சிருக்குமே என்று விசனப்பட்டாள் அவள்.

 

 

“இப்போ மட்டும் என்ன கெட்டு போச்சு. இப்படி எல்லாம் நமக்கு அலங்காரம் செஞ்சு நம்ம முதலிரவு நடக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. இந்த வைபவ் நல்லாவே அலங்கரிச்சு வைச்சிருக்கான் என்றவனின் பார்வை காதலியாய் இருந்த மனைவியின் கிறக்கமாக மேல் பாய்ந்தது.

 

 

அவன் பார்வை அவளை தாபத்துடன் தீண்ட அவள் தள்ளி அமர்ந்தாள். “ஹேய் என்ன இப்போ என்னாச்சுன்னு தள்ளி போற, போதும் போதும் இதுக்கு மேல எல்லாம் என்னால ரொம்ப நல்ல பையனா இருக்க முடியாது ரித்தி, நான் ரொம்ப பாவம். அஞ்சு வருஷமா உனக்காக காத்திட்டு இருக்கேன் என்றவன் அவன் தேடலை அவள் இதழில் தொடங்கினான்.

 

 

இதுவரை ஒருவரை ஒருவர் பிரிந்திருந்தவர்கள் மனதாலும் உடலாலும் இணைந்தார்கள். கல்யாணின் கைபேசி விடாமல் அடித்து ஓய அடுத்ததாக கார்த்திகாவின் கைபேசி சிணுங்கியது. கண்ணை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எழுந்து அவள் கைபேசியை எடுக்க முயற்சி செய்ய கல்யாண் அதை தடுத்தான்.

 

 

“இப்போ போன் எடுத்து நீ என்ன செய்ய போற, அது அடிக்கட்டும் என்றவன் அவளை எழவிடவில்லை.மீண்டும் அவன் கைபேசி சிணுங்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தான் கல்யாண். “ஹலோ என்றான் அழைப்பு யாரிடம் என்று பார்க்காமலே “என்னடா இன்னைக்கு ஆபீஸ் வர்ற எண்ணம் உனக்கு இருக்கா, இல்லையா என்றது எதிர்முனை.

 

 

அழைத்தது வைபவ் என்று அறிந்தவன் “ஆபீஸ்க்கு தானே கண்டிப்பா வர்றேன் வைபவ். இப்போ என்ன மணியாச்சு அதுக்குள்ள இப்படி கேட்குற என்றான் கல்யாண். “நீ ரொம்ப நல்லவன்டா இப்போ என்ன மணியாச்சுன்னு நான் போனை வைச்சதுக்கு அப்புறம் பார்த்து தெரிஞ்சுக்கோ

 

 

“நீ இன்னைக்கு ஆபீஸ் வரவேணாம், உனக்கு இன்னைக்கு லீவு. நேத்து யாரோ ஒருத்தர் அப்படி எல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைன்னு சொன்னார். இப்போ பார்த்தா… என்று எதிர்முனையில் வைபவ் கிண்டலாக சிரிக்கும் சத்தம் கேட்டது.

 

 

“ஹேய்… ஹேய்… நிறுத்துடா ஓவரா கற்பனை எல்லாம் பண்ணாதே, நேத்து நைட் கொஞ்சம் வேலை எனக்கு. அதான் கூட கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லை என்ற கல்யாணின் குரலை கேட்டு இப்போது வைபவ் சத்தமாகவே சிரித்தான்.

 

 

“சரி மணி பன்னிரண்டு ஆகப் போகது, பசிக்கும் எழுந்து சாப்பிடுங்க என்று கிண்டலுடன் போனை வைத்தான் வைபவ். “அடப்பாவி என் மானமே போச்சே என்று வாய்விட்டு புலம்பினான் கல்யாண். “என்னாச்சுங்க என்றவளிடம், “என்ன என்னாச்சுங்க, மணி என்ன தெரியுமா பன்னிரண்டு, இன்னுமா தூங்குவ என்று கார்த்திகாவை முறைக்க அவள் பதிலுக்கு முறைத்த முறைப்பில் கல்யாண் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.

 

____________________

 

 

இரண்டு நாட்கள் கடந்திருக்க அவர்கள் வீட்டின் முன் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டு வாசலின் முன் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க வெளியில் வந்து பார்த்தாள் கார்த்திகா. அவளின் அன்னையும், அண்ணனும் தம்பியும் வந்துக் கொண்டிருந்தனர்.

 

 

என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டே நின்றிருந்தாள்… கல்யாணும் அந்நேரம் வீட்டில் இருந்ததால் அவனும் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தான். ஒரு வேலை அவன் இருக்கும் நேரமாக பார்த்து வந்தார்களோ… வாசலுக்கு வந்தவன் வந்தவர்களை வரவேற்கும் விதமாக தலையசைத்தான்.

 

 

“வாங்க அத்தை… வாங்க என்று வாய் மொழியாகவும் வரவேற்க கார்த்திகாவோ என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள். அவள் அன்னை அவளை கண்டிக்கும் விதமாக பார்க்க அவளுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் புரியவில்லை.

 

 

எதற்கு எல்லாருமாக சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்று அதையே யோசித்துக் கொண்டிருந்தாள். “அம்மா என்று குரல் கொடுத்து அவன் அன்னையை அழைத்தான். அதற்குள் கார்த்திகா வேகமாக உள்ளே சென்று மாமியாரை அழைத்து வந்தாள்.

 

 

சமையலறைக்கு சென்று வந்தவர்களுக்கு காபி போட்டுக் கொண்டு வந்தாள். கார்த்திகாவின் தாய் மகளின் அந்த செயலில் அவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தார். வேலை அதிகம் செய்து பழகாத தன் மகள் இவ்வளவு அனுசரணையாக வந்தவர்களை கவனித்தது அவரை கவர்ந்தது.

 

 

மகள் முழுவதுமாக மாறியிருக்கிறாள் என்பதை குறித்துக் கொண்டார் அவர். இருந்தும் அவராக மகளிடம் ஏதும் சொன்னாரில்லை. இந்திரா எழுந்து சென்று கல்யாணின் அன்னை மாதவியிடம் பேசிக் கொண்டிருக்க நிர்மல் ஏதோ போன் வந்ததென்று வெளியில் சென்று பேசிக் கொண்டிருந்தான்.

 

 

கார்த்திகாவுக்கோ அன்னை எதுவும் பேசவில்லை என்பதில் மனம் வருத்தம் கொண்டது, வந்தவர்களுக்கு டிபன் செய்யலாம் என்று அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். தனித்திருந்த முத்துக்குமார் கல்யாணிடம் எப்படி பேசுவது என்று முழித்துக் கொண்டிருந்தான்.

 

 

“வந்து… வந்து என்னை மன்னிப்பீங்களா மாப்…மச்…மச்சான் என்று ஒருவாறு திணறியவாறே கூறினான். “மன்னிக்கற அளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யலையே என்றான் கல்யாண். “இல்லை நானும் உங்களை தப்பா தான் கணிச்சிருந்தேன். என்னோட கணிப்பு தப்புன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். அதான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன்

 

 

“இனி நாம சகஜமா பேசணும்ன்னு விரும்பறேன் மாப்பிள்ளை. நான் எதுவும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுருங்க என்றான் அவன் மீண்டும். “விடுங்க அப்படி எதுவும் நடக்கலை. மன்னிப்பு நமக்குள்ள அவசியம் இல்லை என்றான் கல்யாண்.

 

 

“நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் என்றான் முத்துக்குமார். “எப்படி முத்து நானும் உங்ககிட்ட அதையே தான் சொல்ல நினைச்சேன். நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க சரியா என்றான் அவன். அதற்குள் வெளியில் இருந்து உள்ளே வந்த நிர்மல் இருவரும் சகஜமாக உரையாடுவதை பார்த்தான்.

 

 

“என்னடா நடக்குது இங்க, நான் ஒருத்தன் போன் பேசப் போன கொஞ்சம் இடைவெளியில இங்க என்னென்னமோ நடக்குதே. ஏன் மாமா என்னை விட்டுட்டு நீங்க மட்டும் என்ன பேசறீங்க என்றான் அவன். “ஒண்ணும் பேசலை நிர்மல் என்றான் கல்யாண்.

 

 

“டேய் வாயாடி பேசாம இருடா, உனக்கு எதுக்கு பொறாமை மாமனும் மச்சானும் ஆயிரம் பேசுவோம் என்றான் முத்துக்குமார். “அடாடா உலக அதிசயம்டா சாமி, இன்னைக்கு மழை கொட்டு கொட்டுன்னு கொட்டப் போகுது. எங்கண்ணன் நெறைய பேசிட்டான். இப்படி எல்லாம் கூட உனக்கு பேசவருமா அண்ணா. இதெல்லாம் அண்ணி செஞ்ச மாயமோ என்று அவன் கலாய்க்க விளையாட்டாக அவனை அடிக்க கையை ஓங்கினான் முத்து.

 

 

மகளின் ஏக்கம் நிறைந்த விழிகள் பெற்றவரின் கண்ணில் படாமல் போகுமா… மகளையே அளவெடுத்தவர் அவளுடன் பேச முடிவெடுத்தார். அதற்குள் வந்த விஷயம் ஞாபகம் வர அதை பற்றி ஆரம்பித்தார். “மாப்பிள்ளை பொண்ணு வீட்டில இருந்து பேசினாங்க

 

 

“அதை பற்றி பேசத் தான் வந்தோம், வர்ற புதன்கிழமை நிச்சயம் வைச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தோம். நீங்க எல்லாரும் முன்னாடி இருந்து இந்த விஷேசத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும் என்றார் அவர்.

 

 

முத்துவும் கல்யாணிடம் அதை பற்றி கூறி கண்டிப்பாக வருமாறு அழைத்தான், வைபவின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டவன் அவனையும் அந்த விஷேசத்திற்கு அழைக்கப் போவதாகக் கூறினான். “இல்லை முத்து அவன் வரமுடியாது, அவனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குல வீட்டில அனுப்ப மாட்டாங்க

 

 

“நாங்க கண்டிப்பா வருவோம், நீங்க கவலையே படவேணாம் என்றான் கல்யாண். “கல்யாண் அப்பா வந்து கூப்பிடலைன்னு வருத்தப்படாதீங்க, அவர் கொஞ்சம் மாறியிருக்காரு. ஆனா இன்னும் முழுசா மாறலை. தப்பா எடுத்துக்காதீங்க என்று நிஜமான அக்கறையுடன் கூறினான்முத்து.

 

 

மாமியாருக்காகவும் வீடு தேடி வந்து உறவு பாராட்டிய மச்சினனுக்காகவும் அவன் அந்த விழாவிற்கு செல்ல முடிவு செய்தான். “அதெல்லாம் விடுங்க, அதை பத்தி எதுவும் பேசவேண்டாம். நாங்க கண்டிப்பா வருவோம் என்றான் கல்யாண். கார்த்திகாவிற்கும் அண்ணன் திருமணம் நிச்சயம் ஆனதில் சந்தோசமே. கார்த்தியை தனியே அழைத்துச் சென்றார்.

 

 

அன்னை தனியே அழைத்ததில் மகிழ்வுற்றிருந்தவள் அவரை அணைத்துக் கொண்டாள். “அம்மா மன்னிச்சுடும்மா நான் அன்னைக்கு பேசினது தப்பு தான். எல்லா தப்பும் என்னோடது தான், இவர் ரொம்ப கோபமா இருந்தார், அந்த கோபத்தில தான் நான் அங்க வந்து அப்பாவை பேசிட்டேன்ம்மா என்று அவர் மடியில் படுத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். மகளின் இந்த செயல் புதிது என்பதை தாயுள்ளம் கண்டு கொண்டது.

 

 

“எதை பத்திம்மா கேட்குறீங்க என்றாள் அவள். “மாப்பிள்ளை உன்னிடம் எதுவும் கோபித்துக் கொண்டாரா என்றார் அவர். “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லம்மா நாங்க சமாதானம் ஆகிட்டோம் என்றவள் வெட்கத்துடன் நடந்ததை அன்னையிடம் பகிர்ந்தாள். இந்திரா மிகுந்த மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினார், மகளின் வாழ்க்கை சீராகி விட்டதில் சந்தொஷித்திருந்தார்.

 

____________________

 

 

“இன்று உன்னை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். உன் அலுவலகத்தில் அரைநாள் விடுப்பு எடுத்து வர முடியுமா என்று வைபவ் அபிக்கு குறுந்தகவல் அனுப்பினான். அவள் மடி மீது இருந்த கைபேசி வைபரேட் ஆக குனிந்து பார்த்தாள் அபிநயா. வெள்ளை திரையில் அவளுக்கு குறுந்தகவல் என்று காட்ட அவசரமாக எடுத்து அவளுக்கு வந்த தகவலை பார்த்தாள்.

 

 

வைபவ் இப்படி அவளை அழைத்ததில்லை என்பதால் கண்ணை மூடி சில நொடிகள் யோசித்தாள். பின் ஒரு முடிவுடன் அவள் ப்ராஜெக்ட் மேனேஜர் ரஞ்சித்தை பார்க்கச் சென்றாள். எப்போதும் வேலை முடித்துவிட்டால் அபிநயா ரஞ்சித்துக்கு  மெயில் மட்டுமே அனுப்புவாள்.

 

 

இன்று அவள் நேரிலேயே எழுந்து வருகிறாளே என்ன விஷயமாக இருக்கும் என்று ரஞ்சித் யோசிக்க அவன் அறைக்கதவு லேசாக தட்டப்பட்டது. “வாங்க என்பதாக அவளுக்கு சைகை செய்ய அவன் அறைக்குள் நுழைந்தாள். அவள் தேவையை ஒரு காகிதத்தில் எழுதி அவனிடம் நீட்ட அவன் யோசனையானான்.

 

 

“என்னாச்சு அபி வீட்டில எதுவும் பிரச்சனையா என்றான் வாய்விட்டு. அப்படி எல்லாம் எதுவுமில்லை என்பதாக அவள் தலையை ஆட்ட “உங்களுக்கு உடம்புக்கு… என்று அவன் ஆரம்பிப்பதற்குள் “இல்லை என்பதாய் மீண்டும் தலையை ஆட்டினாள்.

 

 

இதற்கு மேல் கேள்வி கேட்டால் நன்றாக இருக்காது என்று உணர்ந்தவன் “சரி கிளம்புங்க என்று அனுமதி கொடுத்தான். அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது, அவள் வைபவுக்கு வருவதாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு எங்கு வரவேண்டும் என்று விபரம் கேட்டு அனுப்ப அவனே வந்து அழைத்துக் கொள்வதாக பதில் அனுப்பியிருந்தான் அவன்.

 

 

அவள் பையை எடுத்துக் கொண்டு வர அவள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் செந்தில் அவள் வழியை மறித்து அவளை பார்த்து நன்றாக வழிந்தான். அவனை வெறுப்புடன் முறைத்தவாறே வேகமாக சென்று மின்தூக்கியில் ஏறி கதவை அடைத்தாள். அவள் அலுவலகத்தில் பணிபுரியும் செந்திலுக்கு அபிநயாவின் மேல் ஒரு கண்.

 

 

அவள் மேல் மட்டுமல்ல அந்த அலுவலகத்தில் பணிபுரியும் எல்லா பெண்கள் மீதும் தான், அவர்கள் அலுவலக சேர்மனுக்கு அவன் உறவினன் என்பதால் எல்லோரும் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டனர். அவன் அபியிடத்தில் ஒரு முறை வம்பு செய்து அவளிடம் நன்றாக வாங்கியிருக்கிறான். ‘எங்க போய்ட போறா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

அபிநயா அவள் அலுவலகத்தில் இருந்து வெளியே வரவும் வைபவ் அவன் பைக்குடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “சரி வா கிளம்பலாம் என்று அவன் பைக்கை உதைக்க அபி அப்படியே நின்றிருந்தாள். “திரும்பி அவளை பார்த்தவன் அவள் ஏறாதிருப்பது கண்டு “என்ன அபி ஏறு என்றான்.

 

 

அவள் திருதிருவென்று விழிக்க அவள் தயக்கம் புரிந்தவன் “கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நீ என்கூட பைக்ல வரமாட்டியா என்றான் அவள் கண்களை பார்த்து. எதுவும் பேசாமல் ஒரு தயக்கத்துடன் ஏறி அமர்ந்தாள் அவள்.

 

 

அவள் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று உணர்ந்தவன் முதலில் அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அவளுக்கு பிடித்ததை அவள் அன்னையிடம் முன்னமே கேட்டு அறிந்திருந்தவன் அவளுக்கு தேவையானதை அவனே ஆர்டர் செய்ய ஒருவித பெருமையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

‘இவனுக்கு மட்டும் என் மேல அப்படி என்ன கரிசனம். இதுவரை நான் கண்ட ஆண்கள் போல் இல்லையே இவன். இதுவரை நான் பார்த்த ஆண்கள் எல்லாருமே என்னோட அழகை பார்த்தும் என் இயலாமையை பயன்படுத்தியுமே என் மனதில் இடம் பிடிக்க நினைத்தனர். இவன் எந்த வகையில் நம்மை கவர்ந்தான். இவனை முதலில் பார்க்கும் போது அவ்வளவு கேவலமாக நடத்தியும் எனக்கு உதவி செய்தானே என்று பழைய நினைவுகள் அவள் நெஞ்சில் வலம் வந்துக் கொண்டிருந்தது.

 

அவள் முன் கையாட நிமிர்ந்து அவனை பார்த்தாள். “என்னை பத்தி என்ன யோசனை!!! என்று அவள் மனதில் அவனை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை கண்டு கொண்டவன் போல் கேட்டான் அவன். ‘ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து பசிக்கிறது என்பதாய் வயிற்றை தடவினாள் அவள்.

 

 

அதற்குள் அவர்கள் சொல்லியிருந்த உணவு வந்திருக்க இருவருமாக ஒருவரை ஒருவர் பார்வையால் பருகிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அவன் அருகாமை அவளுக்கு ஏதேதோ செய்ய முகம் சிவந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

சாப்பிட்டுவிட்டு அவன் அழைத்து சென்ற இடத்திற்கு செல்லும் வரை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. அவன் மருத்துவமனை வாயிலில் கொண்டு சென்று நிறுத்த “யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டதா என்று பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

 

 

“ஒண்ணும்மில்லை உள்ளே வா என்று அவன் அவளை அழைத்து சென்றான். அவன் வரவேற்பில் சென்று டாக்டர் ராமகிருஷ்ணனை சந்திக்க வேண்டும் என்று கூற அவன் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்ததால் அவனை உடனே உள்ளே அனுப்பினர்.

 

 

“வா என்று அவள் கையை தன் கைக்குள் கோர்த்துக் கொண்டு மருத்துவரை பார்க்கச் சென்றான் அவன். அங்கு சென்றதும் மருத்துவரிடம் அவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க மருத்துவர் வாயசைப்பை கவனித்துக் கொண்டிருந்த அபியின் முகம் கருத்தது. ‘இதற்கு தானா இதற்கு தான் இவன் என்னை இங்கு அழைத்து வந்தானா??. கடைசியில் இவனும் மற்ற ஆண்கள் போல் ஆகிவிட்டானே!!

 

 

‘என்னை இவன் எனக்காக ஏற்கவில்லை, என் குறை தெரிந்து தானே என்னை திருமணம் செய்யக் கோரினார் என்று அவள் மனம் பிதற்றிக் கொண்டிருந்தது. “அபி வாங்க என்பது போல் மருத்துவர் அவளை அழைக்க திரும்பி வைபவை பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாமல் வெளியில் எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

“சாரி டாக்டர் என்றவன் “ஒரு நிமிஷம் நான் அவங்களை கூட்டிட்டு வந்திடுறேன், அவங்ககிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்துட்டேன். ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு நினைச்சேன். அவங்க கோவிச்சுக்கிட்டாங்க போல இதோ வந்திடுறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

 

 

அதற்குள் அபி ஒரு காகிதத்தில் வேகமாக எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தான். அவள் திரும்பி பார்க்க “அபி என்னாச்சு உனக்கு, எதுக்கு இப்படி பண்ற. உன்கிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்தது தப்பு தான். இவர் ரொம்ப பெரிய டாக்டர் தெரியுமா?? உன்னை பத்தி இவர்கிட்ட சொல்லியிருக்கேன்

 

 

“உனக்கு காது கேட்கும் கருவி வாங்கி மாட்டினா நல்லா காது கேட்கும்ன்னு சொன்னார். உனக்கு சின்ன வயசில இருந்து இந்த பிரச்சனை இருக்குன்னு சொன்னேன், அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை. இப்போ நவீன கருவிகள் எல்லாம் வந்திருக்குன்னு சொன்னார். உன்னை பரிசோதிச்சுட்டு அப்புறம் எந்த கருவின்னு பரிந்துரை செய்யறேன் சொன்னார்

 

 

“உன்னை அதுக்கு தான் அபி கூட்டிட்டு வந்தேன். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு நினைச்சு தான் கூட்டிட்டு வந்தேன். எனக்காக வா அபி என்று அவன் அவளை பார்த்து சொல்லிக் கொண்டிருக்க அவள் கண்களில் மளுக்கென்று நீர் வடிந்தது. “அபி என்று திகைத்தவனிடம் காகிதத்தை திணித்தவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.

 

 

“கடைசியிலே நீங்களும் என் குறையை தானே பார்க்குறீங்க. உங்களுக்கு நான் இப்படி இருக்கறது பிடிக்கலைல, என்னை எனக்காக நீங்க விரும்பலை தானே என்று எழுதியிருந்தது. மருத்துவரிடம் வேகமாக சென்று மன்னிப்பு கோரிவிட்டு விரைவாக வெளியில் வந்து அவளை தேடினான். அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து இலக்கின்றி வெறித்து பார்த்தாள் அவள். அவள் அருகில் சென்று அமர்ந்தான் வைபவ்.

 

 

“அபி… அபி… என்று அழைத்தவாறே அவள் கையை பிடிக்க அவள் அவன் கையை உதறினாள். “ஒரு நிமிஷம் எனக்காக ப்ளீஸ்… என்னை பாரு என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்தான்.

 

 

“நான் சொல்றதை கவனி, என் கூட வா. கண்டிப்பா உன்னை டாக்டர்கிட்ட கூட்டி போக கூப்பிடலை. அங்க போய் சொல்றேன் நான் ஏன் இப்படி செஞ்சேன்னு என்றவன் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு அவளை பைக்கில் ஏற்றி கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் கலந்தான்.

 

 

அமைதியாக இருந்த ஓரிடத்தில் நிறுத்தி அனுமதி பெற்று அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் அவளை அழைத்து செல்ல அவளுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. ‘என்ன இது யாருமற்ற இடத்தில் ஏதோ ஒரு வீட்டிற்கு இந்த நேரத்தில் அழைத்து செல்கிறானே. நாமும் எதுவும் சொல்லாமல் வருகிறோமே என்று நினைத்தாலும் அவனை முழுதாக தவறாக நினைக்க அவளால் முடியவில்லை.

 

 

எதுவும் பேசாமல் அவன் உடன் சென்றாள். அவளை உள்ளே அழைத்து சென்று பின் வாசல் கூட்டிச் சென்றவன் நேரே கடற்கரைக்கு சென்றான் அங்கிருந்த சிறுகுடையின் நிழலில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அவளை அமரச் செய்துவிட்டு அவனும் அமர்ந்தான்.

 

 

அதில் அமர்ந்தவள் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்தாள். ‘என்ன பேச வேண்டுமோ அதை பேசுங்கள் என்பது போல் அவனை பார்த்தாள். “உனக்கு பிடிக்கலைன்னா நான் எதுவும் செய்ய மாட்டேன் அபி. ஆனா ஒரு விஷயம் நான் செஞ்சது தப்புன்னு நீ நினைக்கிறியா என்றான் அவன்.

 

 

அவள் அவனை நன்றாக முறைத்தாள், செய்வதும் செய்துவிட்டு இப்படி ஒரு கேள்வியா என்பது போல் இருந்தது அவள் பார்வை. “நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது. உனக்கு பிடிக்கலை அது தானே, நான் ஏன் அப்படி செஞ்சிருப்பேன்னு நீ யோசிச்சியா என்றான் அவன்.

 

 

அவள் பார்வை யோசனையை கொண்டிருக்க “விடு நீ எதுவும் யோசிக்க வேண்டாம். நானே சொல்றேன், ஏன் அபி நீ கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும்ன்னு நினைக்கிறியா… தயவு செய்து கோபப்படாம நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் உன் கோபத்தை வைச்சுக்கோ என்றவன் தொடர்ந்தான். “உனக்கு என்னோட குரலை கேட்கணும்ன்னு ஆசையா இல்லையா அபி என்ற அவன் கேள்வியில் அவள் துவண்டு போனாள். ‘நாம் ஏன் இப்படி யோசிக்கவில்லை என்று யோசனையானாள் அவள்.

 

 

“சடசடப்பாய் சிறு துளியாய் பூமியில் விழும் மழைத்துளி!!! ஜோன்னு பெய்யற மழையோட சத்தம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?? ஆர்பரிக்கும் அலையோட ஓசையை ஒரு பௌர்ணமி இரவு கடற்கரை மணலில் அமர்ந்து கேட்பதற்கு இணையே இல்லை தெரியுமா!!!

 

 

“இரவில் கேட்கும் சுவர்க்கோழி சத்தம் எப்படியிருக்கும் தெரியுமா?? விடிகாலை வேளையில் பறவைகளின் ரீங்காரம் எப்படியிருக்கும் தெரியுமா?? இது எல்லாம் விட அழும் நம் குழுந்தையின் அழுகுரல் கேட்க கூட உனக்கு ஆசையில்லையா அபி என்று அவன் கேட்க அவள் விழிகள் வெள்ளமாகியது.

 

 

“நான் ரசிச்ச ரசிக்க போகும் எல்லாத்தையும் நீயும் நானும் கேட்கணும், பார்க்கணும்ன்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா. உன்கிட்ட சொல்லாம கூட்டிட்டு போனது தான் என் தப்பு, நீ கேட்கணும்ன்னு நான் நினைச்சதுல எந்த தப்பும் இருக்கறதா எனக்கு தெரியலை

 

 

“இரவு நேரத்துல இளையராஜாவின் மெல்லிசையை உன்கூட சேர்ந்து கேட்கணும் நெறைய ஆசை எனக்கு. இந்த கடல் அழகுன்னு உன் கண்ணுக்கு தெரியும், இதோட ஓசை எப்படியிருக்கும்ன்னு ஒரு நாள் ஒரு வேளை கூட நீ கேட்கணும்ன்னு ஆசைப்பட்டதே இல்லையா அபி என்று அவன் பேசிக் கொண்டேயிருக்க அவள் கண்கள் நிறுத்தாமல் கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது.

 

 

அவள் அழுகை ஓயப்போவதில்லை என்பதை உணர்ந்தவன் “சரி அபி தப்பு என்னோடது தான், இனி இப்படி எப்பவும் நடக்காது. இன்னொரு விஷயம் உன்னை உனக்காக தான் எனக்கு பிடிச்சுது, உனக்கு இருக்கறது குறையில்லை. அதை நீ முதல்ல நம்பு, அதுல இருந்து வெளிய வரப் பாரு

 

 

“போதும் அபி இதுக்கு மேல நீ அழுதா என்னால தாங்கவே முடியாது. உன்னை அழவைக்கிறதுக்காக நான் இப்படி செய்யலை. தயவு செய்து அழாதே அபி என்றவன் நொடிப்பொழுதில் எழுந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

அவன் மார்பினில் தஞ்சம் புகுந்தவளுக்கு அளவில்லாத நிம்மதி அக்கணம் தோன்றியது. அவள் அழுகை குறைந்தது போல் இருந்தது, அவள் தலையில் முத்தமிட்டவன் “போகலாம் அபி என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்….

 

உன் கண் பார்த்தது

உன் கருத்தை நிறைக்க

வேண்டுமென்ற ஆசை எனக்கு…

 

அபிநயம் பிடிக்கும்

உன் விழியோரம் என்

ஆசையால் நனைந்தது

பிடிக்கவில்லை எனக்கு…

 

உன் குழலில் கை நுழைத்து

உனை மார்மீது சாய்த்துக்

கொள்ள விருப்பமெனக்கு…

 

கொஞ்சும் உன்

விழிகள் கெஞ்சுவது

பிடிக்கவில்லை எனக்கு…

 

உன்னை என் மனச்சிறையில்

பூட்டி வைக்க

எண்ணமில்லை எனக்கு…

 

என்னுள் சுதந்திரமாக

என் உயிரில் கலந்த உதிரமாக

எங்கும் நீ நிறைந்திருக்க

விருப்பமெனக்கு…

 

 

 

Advertisement