Advertisement

அத்தியாயம் –15

 

 

ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க என்று ஆட்டோக்காரர் கூற “இல்லை இவங்களை கூட்டி போக தான் நான் வந்திருக்கேன், தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா என்றான் அவன்.

 

 

“யாருய்யா நீ வேற வந்து என் பொழைப்பை கெடுக்குற என்று அலுத்துக் கொண்டார். “அண்ணா அவங்க என்னோட மனைவி தான். நான் வர கொஞ்சம் நேரமாகிடுச்சு அதான் ஆட்டோ பிடிச்சுட்டாங்க. இந்தாங்க இந்த காசை வைச்சுக்கோங்க என்று அவர் கையில் காசை திணிக்க அவரோ “இல்லை சார் உங்க பொண்டாட்டியை தானே கூட்டி போறீங்க விடுங்க பரவாயில்லை என்றார்.

 

 

அதுவரை அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஏதும் பேசவேயில்லை. “இன்னும் எவ்வளவு நேரம் வண்டியிலேயே உட்கார்ந்திருக்க போற, வா போகலாம் என்று அவள் பெட்டியை எடுத்தான்.

 

 

பின்னோடு இறங்கியவள் “நீங்க நினைச்சது சாதிச்சுட்டீங்க, இப்போ சந்தோசம் தானே என்றவளிடம் “உனக்கு வர இஷ்டம் இல்லைன்னா நீ இப்படியே கிளம்பு. உங்க வீடு இங்க தானே, போறதுன்னா அப்படியே கிளம்பி போ என்றான் அவன். “என்ன வர்றியா இல்லை உங்க வீட்டுக்கு… என்று அவன் முடிப்பதற்குள் காரை திறந்து அதில் ஏறினாள்.

 

“நீங்க சொன்னதுக்காக எல்லாம் நான் வரலை. எங்க அண்ணாவோட கல்யாணம் என்னால… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “இங்க பாரு உன்னோட விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை, போகலாம் என்றுவிட்டு அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்.

 

 

மனம் முழுதும் அவள் மீண்டும் வந்ததில் சந்தோசமிருந்தாலும் அவள் பேச்சு அவனுக்கு வருத்தமாகவே இருந்தது. அவள் வீட்டில் அவள் பெட்டியுடன் வந்து நின்ற போதே இந்திரா கல்யாணுக்கு போன் செய்து விட்டார்.

 

 

“மாப்பிள்ளை இங்க ஒரு பிரச்சனை, கார்த்தி இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க கிளம்பி வருவா. அவ முழுசா மாறிட்டான்னு சொல்ல மாட்டேன். அவளை இங்க இருந்து கிளப்புற வேலையை செஞ்சாச்சு, இனி அவளை நீங்க தான் பார்த்துக்கணும் என்றே இந்திரா சொல்லியிருந்தார்.

 

 

அவள் வருகிறாள் என்றதும் அடித்து பிடித்து அவசரமாக குளித்து கிளம்பியவன் வீட்டில் சொல்லிவிட்டு அவளை அழைக்க வந்திருந்தான். காரை ஓட்டிக் கொண்டிருப்பவனின் முகத்தை அவள் பார்க்க அவன் கலைந்த தலையை கூட வாராமல் அவசரமாக கிளம்பி வந்திருப்பது புரிந்தது.

 

 

எனக்காக தான் இப்படி விரைவா கிளம்பி வந்திருப்பானோ என்று அவள் உள்மனம் இளகியது. எப்படியிருந்த போதும் அவளால் உண்மையை ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. வீட்டிற்கு வந்ததும் முதலில் இறங்கியவன் அவளுக்கு கதவை திறந்துவிட்டான்.

 

 

அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு வர வைபவ், சாந்தி, நந்து, மாதவி, ராம் எல்லோரும் வாசலில் நின்றிருந்தனர். “வா கார்த்தி, இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு. இனி இந்த வீடு நிறைஞ்சு இருக்கும் என்றான் வைபவ்.

 

 

“உள்ள வாம்மா என்று மாதவி அழைக்க “ஒரு நிமிஷம் மாதவி ஆரத்தி எடுத்து கூட்டி போவோம். ஒரு நிமிஷம் நில்லும்மா என்றார் வைபவின் அன்னை சாந்தி. வேகமா உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவர் நந்துவை விட்டு சுற்ற சொல்லி அவர்களை உள்ளே அழைத்தனர்.

 

 

கல்யாண் உள்ளே சென்று பெட்டியை அவர்கள் அறையில் வைத்துவிட்டு வர “நீங்க ரெண்டு பேரும் வந்து சாமி கும்பிடுங்க என்றார் கல்யாணின் அன்னை மாதவி. “விளக்கேத்தும்மா என்று அவர் சொல்ல அவள் பூஜையறையில் விளக்கேற்றினாள்.

 

“இந்த பூஜையறைக்கு இன்னைக்கு தான் வெளிச்சம் வந்திருக்கு. இந்த வீட்டுக்கு வந்தது போல என்ற சாந்தியை புரியாமல் பார்த்தாள் கார்த்திகா. “என்னம்மா பார்க்கிற, உன் மாமியார் நீ இல்லாத இந்த வீட்டுல விளக்கு கூட ஏத்தாம வைச்சு இருந்தா

 

 

“தினமும் பூஜையறையை சுத்தம் பண்ணி பூ போடுவா ஆனா விளக்கு மட்டும் ஏத்தமாட்டா, இந்த வீட்டுக்கு விளக்கேத்த வந்த பொண்ணு இல்லாம இந்த வீடு ஒளியில்லாம இருக்கு, என்னைக்கு அவ வருவாளோ அன்னைக்கு தான் ஏத்துவேன்னு சொல்லிட்டா என்றார் அவர்.

 

 

மனம் முழுதும் மொத்தமாக இளகியது அவளுக்கு எதுவும் பேசத் தோன்றாமல் வேகமாக சென்று மாதவின் கைகளை பிடித்துக் கொண்டு “மன்னிச்சுடுங்க அத்தை, உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று கண்கள் கலங்க கேட்டவளை “விடும்மா ஏதோ கெட்ட நேரம் போல, அதான் இப்படி எல்லாம் நடந்து போச்சு. இனி எல்லாம் நல்லது தான் நடக்கும் நீ அழாதே என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டார்.

 

 

“நீ உள்ளே போம்மா, கல்யாண் கூட்டிட்டு போ என்றார் அவர். “வா என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து சென்றான். அதுவரை அவள் கண்ணில் படாத அந்த மாற்றம் அப்போது தான் அவள் கண்களுக்கு புலப்பட்டது.

 

 

பூஜைக்கென்று தனியறை இருந்தது அப்போது தான் அவளுக்கு உரைத்தது. அவர்கள் அறையும் முற்றிலும் மாறியிருந்தது. டைல்ஸ் தரை மாறி மார்பிள் தரையாக உருமாறியிருந்தது.

 

 

பெரிய மெத்தையுடன் கூடிய கட்டிலும் அவள் முதலில் அங்கிருந்த போது வாங்கிய அலங்கார பொருட்கள் வைப்பதற்கு தனியாக கண்ணாடி பதித்த அலமாரி, துணிகளை வைக்க மரத்தினால் ஆனா அலமாரி ஒன்று இருந்தது.

 

 

எதெல்லாம் இல்லை என்று முன்பு அவள் கூறினாலோ அதையெல்லாம் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்த அறையில் புதிதாக ஏசி ஒன்று மாட்டப்பட்டிருந்தது. எல்லாம் தனக்காக தான் என்பது அவள் அறிவுக்கு எட்டாமலில்லை. எதுவும் பேசாமல் கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

அவள் நெகிழ்ந்த மனநிலையில் இருக்க காதருகில் சென்று அவன் “ரித்தி என்று அழைக்க, வெகு நாளைக்கு பின் அவனின் அன்பான அழைப்பில் அவளுக்கு நிம்மதி வந்திருந்தது. எல்லா வசதிகள் இருந்த அவள் வீட்டில் அவளுக்கு கிடைக்காத அமைதி அவள் இங்கு வந்ததும் கிடைத்தது போல் இருந்தது அவளுக்கு. “ஹ்ம்ம் என்றாள் முனகலுடன். அதற்குள் மாதவி அவர்களை சாப்பிட அழைத்தார்.

 

 

வைபவும் வெளியில் இருந்து அழைத்தான், “டேய் கல்யாண், கார்த்தி ரெண்டு பேரும் வாங்க எனக்கு பசிக்குது. அம்மா பொங்கல் செஞ்சிருக்காங்க. நீங்க வர்றதுக்காக தான் காத்திட்டு இருந்தோம். சீக்கிரம் வாங்க என்றான் அவன்.

 

 

கார்த்திக்கு அங்கு வந்ததினால் உண்டான உற்சாகமோ அல்லது கல்யாணிடம் மீண்டும் வந்த சந்தோசமோ ஏதோ என்று அவளை பழைய மாதிரி மாற்றியிருந்தது போலும், அந்த குஷியில் “என்ன வைபவ் நீங்க ரெண்டு பேரும் இந்த பொங்கலை சாப்பிடுற பழக்கத்தை விடலையா

 

 

“ரெண்டு அத்தைகளும் சேர்ந்து இவங்களுக்கு பொங்கல் செஞ்சுக் கொடுத்து கெடுத்து வைச்சு இருக்கீங்க. நல்லா நெய் பொங்கல் சாப்பிட்டு சாப்பிட்டு இவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க பாருங்க என்று அவள் கூற கல்யாணும் வைபவும் அவளை சந்தோசத்துடன் பார்த்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கவில்லை.

 

 

எங்கே அதை சொன்னால் அவள் பழைய மாதிரி ஆகிவிடுவாளோ என்று நினைத்து அமைதியாய் இருந்தனர். நம் நந்து வாயாடி சும்மா இல்லாமல் அவளுடன் சேர்ந்து  கொண்டாள். “நல்லா சொன்னீங்க அண்ணி, இந்த ரெண்டு பேரையும் இவங்க எப்படி வளர்த்து வைச்சு இருக்காங்க பாருங்க

 

 

“கல்யாணம் அங்க வந்தா அம்மா அவனுக்கு பிடிக்குமேன்னு பொங்கல் பண்றாங்க, வைபவ் அண்ணா இங்க வந்தா மாதவியம்மா பொங்கல் பண்றாங்க. அய்யோ இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே அய்யோய்யோ என்று அவள் அலுத்துக் கொள்வதை பார்த்து கார்த்திகா வாய்விட்டு சிரித்தாள்.

 

 

“சரி சரி பேசிட்டு இருந்தது போதும் சாப்பிடுங்க என்று அவர்களை அழைத்தார் மாதவி. “அம்மா நான் கடைக்கு கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு ராம் கிளம்பிவிட்டான். “ஆமா வைபவ் நீங்க எப்போ இங்க வந்தீங்க என்றாள் கார்த்திகா.

 

 

“எல்லாத்துக்கு காரணம் உன் புருஷன் தான் காலையிலே எனக்கு போன் பண்ணிட்டான். நீ வீட்டுக்கு வரப் போறன்னு, அதான் உன்னை பார்க்க நாங்க எல்லாரும் வந்திட்டோம் என்றான் வைபவ்.

 

 

“அபி எப்படி இருக்கா??? என்று அவனிடம் விசாரித்துக் கொண்டாள் அவள். மருமகள் இயல்பாக இருப்பதை சந்தோசத்துடன் பார்த்துக் கொண்டார் மாதவி. “அப்புறம் கல்யாண் இன்னைக்கு நீ லீவ் தானே என்று ஒரு மர்மப்புன்னகை வீசினான் நண்பனை பார்த்து.

 

 

“ஆமாடா இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் நாளைக்கு வர்றேன் என்ற அவன் வைபவிடம் கூற அவன் ஒரு ரகசிய சிரிப்புடன் தலையாட்டி விட்டு வைபவ் குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர்.

 

 

கல்யாண் அவளை அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். “ரித்தி, இங்க பாரு. நீ கூச்சப்படாம சகஜமா இருக்க முயற்சி பண்ணு. இது எப்பவும் உன்னோட வீடு தான் என்று கூறி அவளை இயல்பாக்க முனைந்தான். எல்லோருமே அவளை அப்படியே ஏற்றுக் கொண்டது அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்வை கொடுத்தாலும் அவளுக்குள் குற்ற உணர்வாக இருந்தது.

 

 

“அப்புறம் வீடு கொஞ்சம் மாத்தி கட்டியிருக்கோம். தம்பிக்கு அடுத்து கல்யாணம் பண்ணணும்ல இந்த மாற்றம். பிடிச்சிருக்கா??? என்றான் அவள் காதருகில். சற்று முன் கடினமாக பேசியவனா இவன் என்ற ஆச்சரியம் அவள் விழிகளில் தேங்கி நின்றது.

 

 

வழியில் அவனிடம் பேசிய அளவு கூட அவன் வீட்டில் அவள் பேசவே இல்லை என்பதை அவன் மனம் குறித்துக் கொண்டது. கார்த்திகாவோ அவன் அவள் மேல் காட்டிய அன்பில் இளகியிருந்தாள். “என்னமோ தெரியலை இன்னைக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ரித்தி, நாம எங்காச்சும் கொஞ்சம் வெளிய போகலாமா??? என்றான் அவன்.

 

 

“இப்போவே வா, சாயங்காலம் போகலாமா??? என்றாள் அவள். அவள் வர்றேன் என்றதே அவனுக்கு பெரிதாக இருக்க “சரியென்றான். “சரி ரித்தி நீ கொஞ்சம் படுத்து ஓய்வேடு என்றான்.

 

 

அவள் கைபேசி அழைக்க எடுத்தவள் அதை காதுக்கு கொடுத்தாள் “ஹலோ கார்த்திம்மா அம்மா பேசறேன்டா என்றார் இந்திரா. “அம்மா சொல்லுங்கம்மா, ஹ்ம்ம் நான் வீட்டுக்கு வந்துட்டேன். ஹ்ம்ம் சரிம்மா, சரி, சரிம்மா நான் பார்த்துக்கறேன். ஹம்ம் சரிம்மா சரி வைக்கிறேன் என்று போனை வைத்தாள்.

 

 

“என்னாச்சு, அத்தை என்ன சொல்றாங்க என்றான் அவன். “அது அம்மாவுக்கும் பொண்ணுக்குமான விஷயம். அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது என்றாள் அவள். “ஓ அப்படியா, சரி நான் அத்தைகிட்டயே கேட்டுக்கறேன் என்றான் அவன்.

 

 

“கேட்டுக்கோங்க என்றுவிட்டு அவள் எழுந்து சமையலறை சென்றாள். “அத்தை நான் உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணட்டுமா??? எனக்கு சமைக்கக் கூட தெரியாது. எனக்கு…எனக்கு கத்துக் கொடுப்பீங்களா??? என்றாள் அன்று தான் அந்த வீட்டிற்கு வந்த புது மருமகள் போன்று தயக்கத்துடன்.

 

 

“அதுக்கென்னமா கத்து கொடுத்திட்டா போச்சு. சமையல் ரொம்ப சுலபமான விஷயம்மா. நாம ஈடுபாட்டோட செஞ்சாலே போதும் என்றார் மாதவி. “அத்தை அப்போ எனக்கு பொங்கல் வைக்க சொல்லி தர்றீங்களா, அவருக்கு… உங்க மகனுக்கு அது தானே ரொம்ப பிடிக்கும் என்றாள் அவள்.

 

 

அவர் லேசாக சிரித்துவிட்டு “கண்டிப்பா சொல்லி தர்றேன். ஆனா அவனுக்கு பொங்கல் மட்டும்மில்லை, இன்னும் நிறைய பிடிக்கும் என்று அவர் பட்டியல் போட அவளும் அதையெல்லாம் சமைக்க கற்றுக்கொடுக்க சொல்லிவிட்டு அவனுக்கு பிடித்ததை மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

 

 

“அத்தை இங்க நான் இருந்த அந்த நாட்கள்ல ஒரு தரம் கூட இப்படி நானா வந்து உங்களுக்கு எந்த உதவியும் செஞ்சதில்லை. உங்களுக்கு என் மேல எந்த வருத்தமுமில்லையா அத்தை??? என்ற அவளின் கேள்விக்கு அவள் பதில் கூறும் முன் கல்யாண் அழைத்தான்.

 

 

“ரித்தி என்று கல்யாண் அழைக்கும் குரல் கேட்க, “உன்னை தான்மா கூப்பிடுறான். போய் என்னன்னு கேட்டுட்டு வா, நீ நாளைக்கு சமையல் எல்லாம் படிக்கலாம். நாம அப்புறம் பேசுவோம் என்று அவளை அனுப்பி வைத்தார்.

 

 

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன். மதியம் சேர்ந்து சாப்பிடலாம், சாயங்காலம் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறேன் என்றான் கல்யாண். “இன்னைக்கு உங்களுக்கு லீவ்ன்னு வைபவ் சொன்னார் என்றாள் அவள்.

 

 

“ஹ்ம்ம் லீவ் தான் ஆனா ஒரு முக்கிய வேலை சீக்கிரம் முடிச்சுட்டு வர்றேன். ஆனா… நீ ஒண்ணும் என்னை தேடலையே. நான் வீட்டிலேயே இருக்கணும்ன்னு நீ விரும்புறியா என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறே. “அப்படிலாம் ஒண்ணும்மில்லை, நீங்க முதல்ல கிளம்புங்க என்று அவனை அனுப்பி வைத்தாள்.

மீண்டும் சமையலறை வந்து மாதவியிடம் சென்று பேசிக்கொண்டிருந்தாள். “சொல்லுங்க அத்தை உங்களுக்கு என் மேல எந்த கோபமும் இல்லையா??? மாதவி அவளிடம் ஏதோ சொல்ல வந்து நிறுத்தியதை போலிருக்க “என்ன அத்தை, எதுவா இருந்தாலும் கேளுங்க என்றாள் அவள்.

 

 

“இல்லைம்மா உனக்கும் அவன் மேல் இவ்வளவு பிரியம் இருக்க, அப்புறம் ஏன் உங்களுக்குள்ள இப்படி ஒரு பிரிவும் இடைவெளியும் வந்துச்சுன்னு யோசிச்சேன்ம்மா என்றார் அவர் மனதில் உள்ளதை ஒளியாமல்.

 

 

“இவ்வளவு நாளா ஏன் அவரை பிரிஞ்சு இருந்தேன்னு கேட்க்குறீங்க. தப்பு என் மேல தான் அத்தை, வாழ்க்கைன்னா என்னனே தெரிய ஆரம்பிக்கறதுக்கு முன்னயே எங்க கல்யாணம் நடந்திருச்சு. நான் புரிஞ்சுக்காம நெறய தப்பு பண்ணியிருக்கேன். அதை அவர்கூட இருக்கும் போது நான் புரிஞ்சுக்கவே இல்லை.

 

 

“அவரை விட்டு பிரிந்த போதும் கூட நான் உணரவில்லை. ஏன் இத்தனை வருட பிரிவில் அவரை விட்டு இருக்கிறோமே என்று கவலை அடைந்திருக்கிறேனே தவிர நான் நினைத்ததில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்தாக இருந்தது

 

 

“கிஷோர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணும் போது தான் நான் யாருங்கறதை உணர்ந்தேன் என்றவள் அன்றைய நிகழ்வை அவரிடம் கூறினாள்.

 

 

“அப்போதும் கூட என்னை நான் முழுதாக உணரவில்லை. அன்னைக்கு அம்மா ஒண்ணு சொன்னாங்க இன்னமும் உன் மனசுல மாப்பிள்ளை தான் இருக்கிறார்ன்னு. அதுக்கு பிறகு தான் என் கோபம் வருத்தம் எல்லாம் நியாயமில்லாததா எனக்கு தோணவே ஆரம்பிச்சுச்சு

 

 

“ஆனா அப்போவும் எனக்கு உண்மையை ஒத்துக்க மனசில்லை. ஈகோ பார்த்திட்டு இருந்தேன், அவரா என்னை வந்து கூட்டிட்டு போகணும்ன்னு நினைச்சுட்டு வீம்பா இருந்தேன். வைபவ் நிச்சயம் அன்னைக்கு அவர் பேசியதும் நான் ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன்

 

 

“அப்போவே அவர் கூடவே கிளம்பி வந்திருப்பேன், ஆனா அவர் பேசினதுக்காக தான் நான் கிளம்பி வர்றேன்னு நினைப்பாரோன்னு தான் பேசாம இருந்துட்டேன். எப்படி கிளம்பி வர்றதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கும் போது தான் எங்க வீட்டில அண்ணாக்கு பார்த்த பொண்ணு வீட்டில இருந்து ஒரு தகவல் வந்துச்சு என்று முன்தினம் அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்வுகளை கூறினாள்.

 

 

“அந்த சாக்கை வைச்சு தான் நான் இங்க கிளம்பி வந்துட்டேன். எனக்கு அவரை பிரிஞ்சது தான் தண்டனைன்னு நினைச்சா நீங்க எல்லாரும் என்னை ஒருவார்த்தை கூட கேட்காதது தான் எனக்கு பெரிய தண்டனையா இருந்துச்சு எனக்கு

 

 

“எங்க வீட்டில எல்லாருக்கும் இவரை பிடிச்சிருக்கு, நானும் இவரும் சேரணும்னு எங்க அண்ணா உட்பட எல்லாரும் விரும்புறாங்கன்னு நேத்து ஆளாளுக்கு அவருக்கு பரிஞ்சு பேசும் போது புரிஞ்சுது. அவர் கூடவே ஆறு மாசம் வாழ்ந்த எனக்கு புரியலைன்னு நினைக்கும் போது எனக்கே என்னை நினைச்சா வெட்கமா இருந்துச்சு அத்தை.

 

 

“விடும்மா நடந்தது எல்லாம் போகட்டும். இனி நீங்க ரெண்டு பேரும் பிரியாம எப்பவும் ஒண்ணா இருக்கணும் என்றார் மாதவி. “இல்லை அத்தை நான் சிறுபிள்ளைதனமா இருந்து உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். வாழ்க்கைன்னா என்ன குடும்பம்ன்னா என்னன்னு எனக்கு இப்போ தான் புரியுது அத்தை

 

 

“என் மேல உங்களுக்கு கோபமில்லையே??? எங்கம்மாகிட்ட கூட நான் ஒட்டுதலா இருந்ததில்லை, அவங்க அருமை எனக்கு இப்போ தான் அத்தை புரியுது. அங்க இருக்கும் போது தான் நான் எங்கம்மாகிட்ட ஒட்டுதலா இல்லை, இங்க உங்ககூட நான் அப்படி இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன் அத்தை என்றவளின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டார் மாதவி.

 

 

“போனது எல்லாமே போனதாவே இருக்கட்டும்மா. இப்போ உனக்கு அவனை புரிஞ்சு போச்சுல, இது தான் எனக்கு வேணும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழணும். அது மட்டும் தான் என்னோட ஆசை. உன் மேல எனக்கு வருத்தமிருந்துச்சு, ஆனா கோபமிருந்தது இல்லை

 

 

“இனி நீங்க உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க. மனசுவிட்டு பேசுங்க, உங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவுவும் வேணாம். இன்னும் கொஞ்சம் நேரத்துல அவன் வந்திடுவான். நாம சமையலை முடிச்சிடுவோம் என்று அவள் ஆறுதல் கொள்ளும் விதமாக பேசினார் அவர்.

 

 

மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்த கல்யாணுக்கு மருமகளையே பரிமாற சொல்லிவிட்டு அவர் படுக்க போவதாக சொல்லி உள்ளே செல்ல போக, “என்னம்மா புதுசா நீங்க தானே எனக்கு சாப்பாடு போடுவீங்க என்றான் அவன் அவளை பார்த்துக் கொண்டே.

 

 

“அதான் உன் பொண்டாட்டி வந்துட்டாளே, இனி அவளே போடுவா. எனக்கு கொஞ்ச நேரம் படுக்கணும் போல இருக்கு, உனக்கு எது வேணுமின்னாலும் நீ உன் பொண்டாட்டியை கேட்டுக்கோ என்றுவிட்டு அவர் அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் உள்ளே விரைந்து விட்டார்.

 

 

“இன்னைக்கு என் பொண்டாட்டி இங்க இருக்கா, நாளைக்கே அவளுக்கு மூடு மாறிடும். அப்போ நான் தானே கஷ்டப்படணும் என்று முணுமுணுப்பது போல் சத்தமாகவே சொன்னான். அதை சொல்லும் போதும் அவனுக்குள் ஒரு வலி எழுவதை தடுக்க முடியவில்லை.

 

 

எதுவும் பேசாமல் பரிமாறியவள் கண்களில் திரண்டிருந்த நீர் அவன் கைகளில் பட்டுத்தெறித்தது. மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் சாப்பிட ஆரம்பித்தவன் “எதுக்கு நிக்குற, நீயும் உட்காரு சேர்ந்தே சாப்பிடுவோம் என்றான்.

 

 

“இல்லை நான் அப்புறம் சாப்பிடுறேன் என்றவளை “எப்புறம் சாப்பிடுவ, பேசாம உட்காரு. இப்போகூட நான் சொல்றதை நீ கேட்க மாட்டியா என்று அவன் சொன்னதும் சட்டென்று இருக்கையில் அமர்ந்தாள். அவள் புறம் ஒரு தட்டை நகர்த்தியவன் அவனே மறுகையால் அவளுக்கு பரிமாறினான்.

 

 

அன்று மாலை இருவரையும் அழைத்த மாதவி “கல்யாண் முதல்ல நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க. இன்னைக்கு நாளும் ரொம்ப நல்லா இருக்கு என்றார். “என்ன போகலாமா என்றான் அவளிடம் திரும்பி. “ஒரு பத்து நிமிஷம் இருக்கீங்களா, நான் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன் என்றாள் அவள்.

 

 

அவர்கள் அறைக்கு சென்று அவள் அந்த அலமாரியை திறக்க அவன் அவளுக்கு வாங்கி கொடுத்திருந்த அத்தனை உடைகளும் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவள் ஆசையாக அவன் எடுத்துக் கொடுத்த புடவையை எடுத்து அணிந்துக் கொண்டாள். “போகலாம் என்று எதிரில் வந்து நின்றவளை பார்த்ததும் அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது.

 

 

அவன் வாங்கி கொடுத்திருந்த புடவையை கட்டிக் கொண்டு வந்தவளை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் “ஹ்ம்ம் போகலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.

 

 

அவன் பைக்கை எடுத்து வர “ஏன் கார்ல போகலையா என்றாள் அவள். “இல்லை இது தான் வசதி என்று அவன் சொல்ல ஏறி அமர்ந்தவள் அவன் வலது தோளை பற்றிக் கொண்டாள். அவன் திரும்பி ஒரு அர்த்தத்துடன் அவளை பார்த்துக் கொண்டான்.

 

 

இருவருமாக கோவிலுக்கு சென்றார்கள். அந்த நேரம் பார்த்து கார்த்திகா கைபேசியில் அழைப்பு வர அழைத்தது அவள் தந்தை என்பதை பார்த்தவள் கோவிலுக்குள் செல்ல வேண்டி அவர் அழைப்பை ஏற்காமலிருந்தாள். அவரோ விடாமல் முயற்சிக்க அவள் கைபேசியை அணைத்து அவள் பையில் வைத்தாள், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்.

 

 

கோவிலுக்கு சென்றுவிட்டு அவர்கள் வீட்டிற்கு செல்ல கார்த்திகா மாதவிக்கு உதவி செய்ய இரவு உணவு முடிந்தது. வீட்டிற்கு வந்த பின்னும் அவள் தந்தை அழைத்ததை மறந்து போனவள் அவருக்கு போன் செய்யும் எண்ணம் கூட இல்லாமல் போனாள்.

 

 

இருவருமாக அவர்கள் அறைக்குள் நுழைய இருவருடைய மனநிலையுமே ஒரு நிலையில் இல்லாதிருந்தது. கார்த்திகாவோ புதுப்பெண் போல தயங்கி தயங்கி நிற்க “இன்னும் என்ன அங்க நிக்குற??? வா வந்து படு என்றுவிட்டு அவன் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

 

 

‘ஹப்பா போய்ட்டார் என்று மனதிற்குள் நினைத்தவள் வேகமாக கட்டிலின் மீது ஏறி சுவரின் பக்கம் பார்வையை பதித்தவாறே படுத்துக் கொண்டாள். குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் மனைவி வேறு புறம் படுத்து இருப்பதை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

 

 

‘இன்னைக்கு இல்லைன்னா என்ன நீ என்கிட்ட மாட்டாமலா போய்டுவா என்று நினைத்துக் கொண்டு விளக்கணைத்து அவனும் அவளருகில் படுத்துக் கொண்டான். ஏனோ மனைவியை அன்று இன்முகமாக பார்த்ததினாலோ என்னவோ கல்யாணுக்கு அன்றைய பொழுது மகிழ்வாக இருந்தது.

 

 

அவளை இப்போதே அணைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்த கரங்களை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். ‘இப்போ தான் மனசு மாறி வந்திருக்கா, அதை நாமா கெடுத்துக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

 

 

மறுநாள் மாதவி இருவரையும் திருவேற்காடு கோவிலுக்கு சென்று வரச்சொல்ல கல்யாணும் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

கோவிலை முடித்து அவன் அடுத்து அவளை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். இராமநாதன் பல்பொருள் அங்காடி என்று பெயரிட்டிருந்த அந்த கடையின் முன் அவன் பைக்கை நிறுத்தியிருக்க அவள் வியப்புடன் ஏறிட்டாள். “என்ன ஏதாவது வீட்டுக்கு வாங்கிட்டு போகணுமா என்றாள் அவனிடம்.

 

 

“உள்ள வா என்றவன் வேறு எதுவும் பேசவில்லை. ராம் அங்கு பணம் வாங்கும் மிடத்தில் அமர்ந்திருக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “வாங்கண்ணி என்று ராம் வரவேற்க்க “ராம் இது தான் நீங்க வேலை பார்க்கற கடையா? என்றாள் அவள்.

 

 

“அண்ணா நீங்க அண்ணிகிட்ட எதுவும் சொல்லலையா? என்றான் ராம். “ரித்தி இது நம்ம கடை தான். அம்மாவுக்கு ஓய்வு கொடுத்து வீட்டில இருக்க சொல்லிட்டோம், ராம் படிப்பு முடியறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் இந்த கடை விலைக்கு வந்தது வங்கி கடன் வாங்கி தான் இந்த கடையை வாங்கினோம்.

 

 

“ஆச்சு ரெண்டு வருஷம் நல்லா போயிட்டு இருக்கு கடை, கடனும் கொஞ்சம் அடைஞ்சிருச்சு, இன்னும் ஒரு நாலு மாசம்த்தில கடனும் முடிஞ்சிரும் என்றான் அவன். “அண்ணா நீங்க பேசிட்டு இருங்க நான் உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொடுத்து அனுப்பறேன் என்றுவிட்டு நாசுக்காக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

 

“உள்ளே போய் உட்காரு என்றான். “நானா…!!! என்றாள் தயங்கியவாறே, “ஆமாம்… நீ தான் போய் உட்காரு, இனிமே நீ தான் இந்த கடையை பார்த்துக்க போற என்றான் அவன். “என்னது என்று அதிர்ந்தாள் அவள்.

 

 

“எதுக்கு ரித்தி அதிர்ச்சி ஆகுற, பார்த்துக்குவ தானே என்றான் அவன். “நான் எப்படிங்க… அப்போ ராம் என்றாள் அவள். “பாருடா என் பொண்டாட்டிக்கு இப்போலாம் அடிக்கடி என்னை மரியாதையா பேச வருதே என்று ஆச்சரியப்பட்டான்.

 

 

“ராம் பத்தி நீ கவலைப்படாதே, இன்னொரு கடை கிரயத்துக்கு எடுத்திருக்கோம். அதுக்கான வேலை போயிட்டு இருக்கு, இனி அவன் அந்த கடையை பார்த்துக்குவான். இப்போ சொல்லு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் அரவம் கேட்டது.

 

 

அவன் வாயிலை பார்க்க அங்கு ராஜசேகர் வாயிற்காவலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். கார்த்திகாவும் வாயிலை பார்க்க அவள் தந்தை வருவது தெரிந்ததும் இருக்கையில் இருந்து “அப்பா என்றவாறே எழுந்தாள். கல்யாணின் முகம் இருண்டது.

 

 

நேரே உள்ளே வந்தவர் பல பேர் முன்னில் “என்னடா என்ன நினைச்சுட்டு இருக்க??? என் பொண்ணை பிரிச்சு கூட்டிட்டு வந்துட்ட, இப்போ அவளை உன் கடைக்கு வேலைக்காரியா வைச்சுக்கலாம்ன்னு பார்க்குறியா??? என்று குதித்தார்.

 

 

(இவர் எப்படி இங்கு வந்தார் என்பதை பார்ப்போம். மகள் போனை எடுக்கவில்லை என்றதும்இரவு முழுவதும் பலத்த யோசனையிலேயே இருந்தவர், விடிந்ததும் முதல் வேலையாக கிளம்பியவர் நேரே சென்றது கல்யாணின் வீட்டுக்கு தான். கல்யாணின் அன்னை அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு கடைக்கு செல்லும் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் அந்த இடத்தை காலி செய்திருந்தார்).

 

 

“அதுக்கு தான் நான் என் பொண்ணை கஷ்டப்பட்டு படிக்க வைச்சேனா. நாங்க கஷ்டப்பட்டு வளர்த்து நல்லா படிக்க வைப்போமாம் இவர் வந்து நோகாம கூட்டிட்டு வந்து இந்த மளிகைக்கடையில உட்கார வைப்பாராம் என்று அவர் பொரிய கல்யாண் முகம் அவமானத்தில் சிறுத்தது.

 

 

பல பேர் முன்னிலையில் அவர் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருக்க ஏதும் பேசாமல் நின்றிருந்த மனைவியின் மேல் கோபம் வந்தது. அவளை திரும்பி பார்க்க அவள் பார்வை குற்றம் சாட்டும் பார்வையாய் தோன்ற அவன் கூனி குறுகி நின்றான்.

 

 

ஏதோ சொல்ல வாயெடுத்தவனை பேசவே விடாத அளவுக்கு அவர் பேசினார். “என்ன சொன்னீங்க??? நீங்க கஷ்டப்பட்டு படிக்க வைச்சீங்களா??? என்ற குரல் பின்னால் கேட்க திரும்பி பார்த்தவரின் பின்னால் இந்திரா நின்றுக் கொண்டிருந்தார். “நீ எதுக்கு இங்க வந்த??? என்று குரல் கொடுத்தவர் “இவன் விட்டுட்டு போன என் பொண்ணை நான் தானே படிக்க வைச்சேன் என்றார் அவர்.

 

 

“இதுக்கு மேல நீங்க ஏதாவது பேசினீங்கன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். நீங்க ஒண்ணும் இவளை படிக்க வைக்கலை, என் பொண்டாட்டியை நான் தான் படிக்க வைக்கணும்ன்னு மாப்பிள்ளை தான் உங்க பொண்ணுக்கு பணம் கட்டினார்

 

 

“என்ன உளர்ற??? என்று அவர் முடிக்கும் முன் “நீங்க உங்க பொண்ணுக்கு கட்டிய பணம் எல்லாம் முத்து பேர்லயும் நிர்மல் பேர்லயும் இருப்பு வைச்சிருக்கேன். அன்னைக்கு அவர் என்கிட்ட பணம் கொடுக்கும் போது ரொம்ப வருத்தப்பட்டேன். எதுக்கு கொடுக்கறீங்க எங்க பொண்ணுக்கு நாங்க செய்ய மாட்டோமான்னு

 

 

“இல்லை அத்தை என் பொண்டாட்டிக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது. இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு ஒரு வார்த்தை வந்திடக் கூடாதுன்னு சொன்னார். அன்னைக்கு இப்படி ஒரு வார்த்தை வரும்ன்னு நான் நினைக்கவே இல்லை

 

 

“அதும் நீங்க பேசுவீங்கன்னு, பெத்த பொண்ணுக்கும் பையனுக்கும் செய்யறதை யாராவது சொல்லிக் காட்டுவாங்களா. அது நம்மோட கடமை இல்லையா, ச்சே இனிமே நீங்க நம்ம பொண்ணு வீட்டுக்கு போறதோ, இல்லை அவளை பார்க்கறதோ இருந்தீங்கன்னா அப்புறம் நீங்க எங்களை உயிரோடவே பார்க்க மாட்டீங்க. வாங்க போகலாம் என்றவர் திரும்பினார்.

 

 

“இங்க பாரு உனக்கும் கடைசியா சொல்லிக்கறேன். இனிமே அம்மா, அப்பான்னு நீயும் அந்த பக்கம் வராதே. இனி நீ இருக்க வேண்டிய வீடு மாப்பிள்ளை வீடு தான். எந்த காரணம் கொண்டு நீ அங்க வராதே, அப்படி வர்றதா இருந்தா உன் புருஷனோட தான் வரணும் என்றார்.

 

 

“மாப்பிள்ளை அவர் பேசினதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும் என்று கண்ணீர் குரலில் அவர் கேட்க “நீங்க எதுக்கு அத்தை மன்னிப்பு கேட்குறீங்க, இப்போ என் மானம் போகாம காத்த தெய்வமே நீங்க தான். உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும் என்றான் அவன்.

 

 

“சரி மாப்பிள்ளை நான் கிளம்புறேன் என்றவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் கிளம்பியதும் “ராம் என்று உரக்க அழைத்தவன் குரலை கேட்டு வேகமாக வந்த ராம் “என்ன அண்ணா, என்ன ஆச்சு என்று மூச்சு வாங்க வந்து நின்றான்.

 

 

“இந்த கடையை நீ தான் பார்த்துக்க போற, புதுக்கடைக்கு உனக்கு நம்பிக்கையான ஒரு ஆளா உன்னோட ஒரு நல்ல நண்பனை போட்டுக்கோ. நான் கிளம்புறேன் என்றுவிட்டு அவன் முன்னே சென்று விட்டான்.

 

 

கண்களில் கரகரவென கண்ணீர் வழிய அவன் பின்னேயே சென்றாள் கார்த்திகா. “என்னங்க என்று அவள் திரும்ப திரும்ப அழைத்ததை காதிலே வாங்காமல் சென்றான் கல்யாண். அவள் தந்தை கூறும் போது அவள் பார்த்த அந்த பார்வை ‘நீ இதற்காக தான் என்னை கூட்டி வந்தாயா என்பது போல் இருக்க அந்த கணமே நொறுங்கி போனான் அவன்.

பைக்கில் ஏறி அமர்ந்தவன் பைக்கை உதைத்து கிளப்பி உறும விட்டுக் கொண்டே இருக்க அவள் செய்வதறியாது முழித்தவள் பின்னே ஏறி அமர்ந்தாள். நேரே வீட்டுக்கு சென்று அவளை விட்டுவிட்டு வெளியில் சென்றவன் இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான்.

 

 

கார்த்திகா அவர்களின் அறையில் இருக்க அன்னையிடம் சாப்பிட்டுவிட்டதாக பொய்யுரைத்து அவர்கள் அறைக்கு சென்றான் அவன். கட்டிலில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பவளை பார்த்து அவனுக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக அவள் மேல் கோபமே வந்தது.

 

 

அவனுக்காக ஒரு வார்த்தை கூட தந்தையை எதிர்த்து பேசாமல் இருந்தவள் இப்போது மட்டும் எதற்கு அழுகிறாள் என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு. அவளிடம் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துவிட்டான் அவன்.

 

 

அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தவள் அவன் பேசாமலே படுக்க “உங்ககிட்ட பேசணும் என்றாள். அவனிடம் சலனம் இல்லை என்பதை அறிந்தவள் எழுந்து விளக்கை போட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.

 

 

“என் மேல உங்களுக்கு என்ன கோபம், காலையில நல்லா தானே இருந்தீங்க. அப்பா பேசினதுக்கு நான் என்ன செய்வேன் என்று அழுதவளை எந்த சலனமும் இல்லாமல் நோக்கினான்.

 

 

“என்ன பேசணும், இல்ல இன்னும் நான் என்ன பேசணும். அதான் உங்கப்பா எல்லாமே பேசிட்டு போயிட்டாரே. நீ தான் அவருக்கு தப்பாம பிறந்த மகளாச்சே, அவர் வார்த்தையில சொன்னதை, ஒரு கேவலமான பார்வை பார்த்து அவர் சொன்னது சரின்னு தான் நீ எனக்கு சொல்லிட்டியே. இன்னும் என்ன சொல்லணும் உனக்கு. ஒரு வார்த்தை நீ எனக்காக பேசியிருப்பியா

 

 

“அப்புறம் எதுக்குடி என்னை கல்யாணம் பண்ணிகிட்ட, உன்னை நான் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணேனான்னு தினமும் எனக்கு நானே கேட்டுக்குவேன். இப்போவும் அது தான் நடக்குது, எனக்குள்ள இருந்த அந்த அன்பு உனக்குள்ள இல்லைன்னு நல்லாவே தெரிஞ்சு போச்சு. இனி உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு??

 

 

“கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் செத்து போச்சு. எனக்குள்ள இருந்த அன்பு, நேசம் எல்லாம் இப்போ காணாமலே போய்டுச்சு. இனி உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. நான் நிம்மதியா இருக்கணும்ன்னு உனக்கு கொஞ்சமாவது தோணிச்சுன்னா இனி என்கிட்ட நீ பேசவே பேசாதே என்றுவிட்டு படுத்துக் கொண்டான் அவன்.

 

 

அழுது அழுது சோர்ந்து போனவள் எப்போது உறங்கினாள் என்பதே அறியவில்லை. விடிந்து வெகு நேரமாகியிருந்தது. கண் விழித்து பார்த்த போது கல்யாண் அருகில் இல்லை சூரிய வெளிச்சம் சன்னலின் வழியாக லேசாக கசிந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தது.

 

 

பதறி எழுந்தவள் மாதவியை தேடிச் சென்றாள், “என்னாச்சும்மா என்று அவர் கேட்ட கேள்வியில் கண்ணீர் உகுக்க நடந்ததை சொன்னாள் அவள். “அத்தை நீங்க என்னை அப்படி பார்க்காதீங்க, நான் அவரை தப்பா நினைச்சு அப்படி பார்க்கலை. எனக்காக எவ்வளவோ மாற்றங்களை இந்த வீட்டில செஞ்சவரை போய் எங்கப்பா தப்பா பேசுறாரேன்னு தான் அவரை பார்த்தேன்.

 

 

“எங்கப்பாகிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே எங்கம்மா வந்துட்டாங்க, என்னால அவர்கிட்ட எதுவும் பேச முடியலை. அதுக்குள்ள என்னென்னமோ நடந்து போச்சு. அவர் என் மேல கோபமா இருக்கார் என்று அழுதவளை ஆறுதல் படுத்த அவரால் முடியவில்லை.

 

 

“இதை உன்னால மட்டும் தான்ம்மா சரி செய்யா முடியும், நாங்க யாரும் உனக்காக இந்த விஷயத்துல பேச முடியாது. அவன் மனசு மாறி உன்னை புரிஞ்சுக்கற வரைக்கும் காத்திட்டு தான் இருக்கணும் என்றார் மாதவி.

 

 

கார்த்திகாவின் கோபம் முழுதும் தந்தையின் மேல் திரும்பியது, மாமியாரிடம் சொல்லிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள் அவள். அவள் வீட்டிற்குள் நுழையும் முன்பே “கார்த்தி நீ எதுக்கு இங்க வந்தே என்று வந்து நின்றார் அவளின் அன்னை இந்திரா.

 

 

“அம்மா நான் ஒண்ணும் இங்கயே வந்து இருக்க வரலை. எங்கம்மா அவரு கூப்பிடும்மா அவரை என்றவள் “அப்பா… அப்பா… என்று அந்த வீடே அதிர கத்தினாள். மேலிருந்து கிழீறங்கி வந்தார் ராஜசேகர். “என்னம்மாவந்துட்டியா, நான் சொன்னதை புரிஞ்சு வந்துட்டியாம்மா. இந்திரா நேத்து என்னை அவ்வளோ சத்தம் போட்டியே. இன்னைக்கு பாரு என்னை புரிஞ்சு அவனை விட்டுட்டு என் பொண்ணு என்னை தேடி வந்துட்டா பாரு. நீங்க எல்லாரும் அவளை இங்க இருந்து போக வைச்சீங்க, என் பேச்சை கேட்டு அவ வந்திட்டா பாரு என்றார்.

 

 

“அப்பா போதும் நிறுத்துங்க, நீங்க உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. நேத்து என் முன்னாடியே நீங்க அவரை அவ்வளவு பேசுறீங்க. நாங்க பேசலைன்னா நீங்க என்ன வேணா பேசுவீங்களா. நான் பேசுறதுக்கு முன்னாடி அம்மா வந்திட்டாங்க

 

 

“என் வாழ்க்கையை கெடுக்கணும்ன்னு முடிவு பண்ணியே நீங்க இப்படி எல்லாம் செய்யறீங்களா. நான் ஒண்ணும் நீங்க சொல்றது எல்லாம் கேட்டு நடக்கறதுக்கு ஒண்ணும் தெரியாத பொண்ணு இல்லை. அதெல்லாம் அப்போ, நம்ம அப்பா நம்ம நல்லதுக்கு தான் சொல்வார்ன்னு நினைச்சு, நீங்க சொல்றது எல்லாம் கேட்டேன். அவரையும் பிரிஞ்சு வந்தேன்

 

 

“என் மனசு மாறி ரொம்ப நாள் ஆச்சுப்பா, நம்ம வீட்டில யாரும் எதுவும் சொல்லலைன்னா கூட இன்னும் இரண்டு மூணு நாள்ல நானே எங்க வீட்டுக்கு போயிருப்பேன்ப்பா. ஆனா நீங்க இப்படி நடுவுல வந்து எங்களுக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ணிட்டீங்களே.

 

 

“அவரை பேச நீங்க யாருப்பா, உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது. நீங்களாம் ஒரு அப்பா, இப்படி உங்க பொண்ணு வாழ்க்கையை நீங்களே கெடுக்க நினைக்கிறீங்களே என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கன்னத்தில் அறை விழுந்தது.

 

 

சுதாரித்து நிமிர்ந்தவளின் முன் இந்திரா நின்றிருந்தார். “என்னடி ரொம்ப பேசிட்டே போற, அவரை கேள்வி கேட்குற உரிமையை உனக்கு யார் கொடுத்தது முதல்ல. என்னமோ அவர் தான் எல்லா தப்பும் பண்ண மாதிரி பேசிட்டே போற

 

 

“உன் மேல உள்ள பாசத்துல தானே அவர் அப்படி செஞ்சார், நீ கஷ்டப்படுறன்னு நினைச்சு தானே அப்படி செஞ்சார். அவர் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி, அப்படியே தலையை ஆட்டிட்டு கேட்பியா. நான் உனக்கு எத்தனை தரம் நல்லது சொல்லியிருப்பேன். அப்போ ஒரு தரம் கூட நீ காது கொடுத்து கேட்டது இல்லையே. அப்போவெல்லாம் உனக்கு உங்கப்பா பேச்சு சக்கரைக்கட்டியா இனிச்சுது. இப்போ மட்டும் கசக்குதோ.

 

 

“முடிவு பண்ணிட்டல்ல இது தான் உன் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டல்ல நீ கிளம்பு முதல்ல. உன் புருஷன் வீட்டுக்கு போ, என் புருஷனை பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் பேசியதில் அங்கிருந்த எல்லோருமே அதிர்ந்து நின்றனர்.

 

 

கார்த்திகாவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினாள். மகள் பேசியதில் திகைத்து போனவர், மனைவியின் பேச்சில் ஆறுதல் அடைந்தார், இருந்தும் அவர் கவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் ஏதும் பேசாமல் அவர் அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டார்.

 

Advertisement