Advertisement

அத்தியாயம் –13

 

 

இரு ஜோடிகளும் படியேறி மாடிக்கு வந்தனர். அபியையும் வைபவையும் தனியாக விட்டு கல்யாணும் கார்த்திகாவும் அந்த மாடியின் மறுகோடிக்கு சென்றனர்.முன்தினம் செய்தியில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், சூரியன் சுட்டெரிக்காத அந்த பகல் பொழுது ஒரு ஜோடிக்கு ரம்யமாய் இருக்க மறு ஜோடிக்கு புயலுக்கு முந்தைய அமைதியை தாங்கியிருந்தது.

 

 

வந்ததில் இருந்து அமைதியாகவே நின்றிருந்தான் கல்யாண், அவன் ஏதாவது பேசுவான் பேசுவான் என்று நினைத்து ஆவலோடு காத்திருந்த கார்த்திகா அவன் அமைதியை கண்டு சற்றே பயம் கொண்டாள்.

 

 

என்றுமில்லாமல் ஏதோ ஒரு சலனம் வந்தது கார்த்திகாவுக்குள், கண்களை சுழலவிட்டு எதிர் கோடியில் பார்க்க தங்களை மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கியபடி நின்றிருந்தனர் வைபவும் அபியும். ‘அவங்க எப்படி இருக்காங்க, ஆனா இவர் ஏன் இப்படி பேசாமயே இருக்கார், சரி நாமளாச்சும் பேசலாம் என்று நினைத்தாள் அவள்.

 

 

“என்ன எதுவும் பேசாம நிக்குறீங்க என்று ஆரம்பித்தாள், அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

 

 

“இப்படி எதுவும் பேசாம அமைதியா நின்னா என்ன அர்த்தம், என்னை குறை சொல்லணும்ன்னா தான் வாயை திறப்பீங்களா. சலிப்புடன் திரும்பி அவளை பார்த்தவன் “என்ன பேசணும் என்றான்.

 

 

“இப்படி பேசுனா என்ன சொல்ல முடியும் என்றாள். “வேற என்ன பேசணும், நான் பேசினா நீ ரொம்ப வருத்தபடுவ. பேசாம இரு என்றவனிடம்“ஏன் நான் வருத்தப்படுற அளவுக்கு என்ன பேசுவீங்க என்றாள்.

 

 

“சரி நான் எப்பவும் கேட்குறது தான் சொல்லு, நீ எப்போ நம்ம வீட்டுக்கு வரப்போற என்றான்.

 

 

“இதுக்கு நீங்க பேசாமலே இருந்திருக்கலாம் என்றவள் “அது தான் ஏற்கனவே சொல்லியாச்சே திரும்ப திரும்ப அதையே கேட்குறீங்க என்றாள்.“இப்பவும் உன் முடிவு அது தானா என்றான் அவன்.

 

 

இந்த நிமிடம் அவளுக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை என்பதே உண்மை, ஆனாலும் அவள் தந்தை என்ன சொல்லுவாரோ என்ற எண்ணமே அவளுக்கு வந்தது.

 

 

“அப்பாவும் அதை தானே விரும்பு… என்று அவள் முடிப்பதற்குள், “இங்க பாரு நான் ஒண்ணும் உன் அப்பா கூட குடும்பம் நடத்தப் போறதில்லை, உன் கூட தான் குடும்பம் நடத்தப் போறேன். உன்னோட முடிவை மட்டும் சொல்லு என்றான் அவன்.

 

 

“உங்களை மாதிரி யாரை பத்தியும் யோசிக்காம என்னால பேச முடியாது, ஒரு தடவை எங்கப்பாவை விட்டு நான் வந்ததுல அவர் எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா. அவர் முடிவு தான் என்னோட முடிவும் என்றாள் அவள்.

 

 

“போதும் நிறுத்துடி எப்போ பார்த்தாலும் அப்பா அப்பான்னு சொல்லிட்டு இருக்கறதுக்கு நீ எதுக்கு என்னை கட்டிக்கிட்ட, என்னை எதுக்கு காதலிச்ச, உங்க வீட்டிலேயே இருந்திருக்க வேண்டியது தானே

 

 

“நீ எல்லாரையும் பத்தி யோசிக்கிறவளா, அப்படி நீ உண்மையாவே யோசிக்கறவளா இருந்தா என்னை விட்டு போயிருக்க மாட்ட. உன்னை மகளை போல பார்த்துகிட்ட எங்கம்மாவை விட்டு போயிருக்க மாட்ட, நம்ம வீட்டை வீட்டு போயிருக்க மாட்ட. ஊரெல்லாம் எங்களை பேசுற அளவுக்கும் விட்டிருக்கமாட்ட

 

 

“உனக்கு தான் எங்க யாரை பத்தியும் கவலையே இல்லையே, நீ எதுக்கு அதை பத்தி எல்லாம் பேசுற. உன்னோட முடிவு இது தான்னா என்னோட முடிவையும் கேட்டுக்கோ. உனக்கு கடைசி வாய்ப்பு தர்றேன்

 

 

“இன்னும் ரெண்டு மாசத்துல நீயா நம்ம வீட்டுக்கு வர்ற, என்னடா ரெண்டு மாசம் அவகாசம்ன்னு நினைக்கிறியா. வைபவ் கல்யாணத்துக்கு இருக்குற அதே அவகாசம் தான்.

 

 

“அதுக்குள்ள நீ வரலைன்னா உன்னை தேடி நான் அனுப்பற விவாகரத்து பத்திரம் தான் வந்து சேரும். அதுக்கு மேல உன்னிஷ்டம் என்று அவளிடம் அடிக்குரலில் கூறிவிட்டு திரும்பியும் பார்க்காமல் வேகமாக கிழே இறங்கி சென்றுவிட்டான் அவன்.

 

 

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகாவின் கண்கள் குளம் கட்டியது. கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு, அவன் சென்ற திசையை வெறித்தவாறு கண்களில் இருந்து வழியும் நீரை சுண்டிவிடக் கூட இல்லாமல் நின்றிருந்தாள்.

 

 

கல்யாண் வேகமாக போவதை பார்த்ததும் அபியும் வைபவும் ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்து அவளருகே வந்தனர். அபிக்கு அவர்களின் விஷயம் ஓரளவு தெரியும் வைபவ் அவனை பற்றி சொல்லும் போதே அவன் கல்யாண் கார்த்திகா பற்றியும் கூறியிருந்தான்.

 

 

கார்த்திகாவின் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்து அபி அதை துடைக்க முயல அவளோ அபியின் கழுத்தை கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். வைபவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “கார்த்தி என்னாச்சு கார்த்தி எதுக்கு இப்படி அழற அவன் என்ன சொல்லிட்டு போறான். எதுவா இருந்தாலும் சொல்லு என்றான் அவன்.

“ஹ்ம்ம்… இல்லை… ஒண்ணுமில்லை என்று அழுகையினூடே சொல்லியவள் நிமிர்ந்து அவள் கண்களை துடைத்துக் கொண்டாள். வைபவ் அபியிடம் கிழே செல்வதாக ஜாடை காட்டிவிட்டு சென்றான்.

 

 

கார்த்திகா அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தில் அடித்து நன்றாக  கழுவினாள், பின் அழுந்த துடைத்துவிட்டு அபியிடம் அழுதது போல் இருக்கிறதா என்று கேட்க அவள் ஒன்றுமில்லை என்பதாய் சைகை செய்ய இருவருமாக கிழே இறங்கி சென்றனர்.

 

 

முதலில் வேகமாக இறங்கி சென்ற கல்யாண் கார்த்திகாவின் அன்னை இந்திராவையும், தம்பி நிர்மலையும் அழைத்து அவன் கார்த்திகாவிடம் பேசிய விபரத்தை பற்றி கூறினான்.

 

 

“அத்தை நான் பேசியது கஷ்டமா இருந்தா மன்னிச்சுடுங்க அத்தை. இனியும் அவளை இப்படியே இருக்கவிட என்னால முடியாது. அவளை நல்லா பார்த்துக்கணும் அதுக்கு நான் நல்லா சம்பாதிக்கணும்ன்னு தான் நினைச்சேன்

 

 

“உங்க உயரத்துக்கு வரமுடியாது ஆனாலும் என் பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கற அளவு அவள் கஷ்டபடாத அளவுக்கு என்னோட வருமானம் இப்போ இருக்குன்னு நான் நம்புறேன். உங்களுக்கும் என் மேல நம்பிக்கை இருந்தா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவ திரும்ப எங்க வீட்டுக்கு வர்றதுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்களா

 

 

“நீங்க எதுக்கு மாப்பிள்ளை மன்னிப்பு கேட்குறீங்க, நீங்க பேசினதுல எந்த தப்பும் இல்லை. உங்க மேல இன்னைக்கு இல்லை என் பொண்ணு உங்களை கைபிடிச்ச அன்னைலயிருந்தே எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. நீங்க தைரியமா இருங்க அவளை உங்களோட சேர்த்து வைக்க நாங்க பொறுப்பு என்றார் கார்த்தியின் அன்னை.

 

 

எல்லோருமாக அபியின் வீட்டினரிடம் விடைபெற்று கிளம்பினர். கார்த்திகாவின் கையை ஆறுதலாக பற்றியிருந்தாள் அபி. நிர்மல் பெரிய கார் கொண்டு வந்திருந்ததால் அதிலேயே அவன் எல்லோரையும் வைபவ் வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட, இந்திராவும் வற்புறுத்தியதால் எல்லோரும் அதில் ஏறி அமர்ந்தனர். ராம் அவனுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 

 

நிர்மல் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொள்ள வைபவ் அவனுக்கருகில் அமர்ந்தான். சாந்தி, மாதவியை நடுவில் அமர சொல்லிவிட்டு இந்திரா நந்துவை கூட்டிக் கொண்டு பின்னால் ஏறி அமர்ந்தார்.

 

 

எல்லோரும் சென்றுவிட தனித்து நின்றிருந்த கார்த்திகா வண்டியின் அருகில் சென்றாள். “அக்கா நீ என்ன இங்க நிக்குற??? நீ போய் அந்த கார்ல ஏறு. நாங்க எல்லாரையும் மாமா வீட்டில இறங்கி விட்டுட்டு அப்புறம் அங்கிருந்து நாம வீட்டுக்கு போகலாம் என்றான் அவன்.

 

 

அவன் மாமா என்றதும் வைபவ் திருதிருவென்று விழித்தான், “கல்யாண் மாமாவோட நண்பர் எனக்கு மாமா தானே அப்படி கூப்பிடலாம் தானே என்றான் நிர்மல். “அதுகென்ன சரியா தானே கூப்பிட்டு இருக்க நிர்மல் என்றான் அவன்.

 

 

கல்யாண் அவளருகில் வந்தவன், “இங்க எந்த நாடகமும் போடாம ஒழுங்கா போய் கார்ல ஏறு என்றான். “நான் என்ன… என்று அவள் தொடங்க, “இதை தான் சொன்னேன், நான் எது சொன்னாலும் மறுத்து பேசியே ஆகணுமா உனக்கு என்று அவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூற வேறு வழியில்லாமல் அவள் காரில் ஏறி அமர்ந்தாள்.

 

 

அபிக்கு கைகாட்டி விட்டு அவள் அமர அவனும் காரை கிளப்பினான். “எதுக்கு அப்படி பேசுனீங்க என்றாள் அவள் கோபமாக, “என்ன பேசினேனோ அதை சரியா தான் பேசினேன்

 

 

“என் வாழ்க்கை இப்படி ஆகிபோச்சுன்னு என் தம்பியை கல்யாணம் பண்ணிக்க சொன்னா அவன் என்னடான்னா என் வாழ்க்கை சரியானா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றான்.

 

 

“எங்கம்மாவுக்கும் பேரன், பேத்தின்னு மத்தவங்க மாதிரி ஆசை இருக்காதா, அதுனால தான் நான் அப்படி ஒரு முடிவெடுத்தேன். ஒண்ணு நீ வந்து என்னோட வாழு, இல்லை விலகு என்றான் மனச்சாட்சி அற்றவனாக.

 

 

“நாம நிறைய பேசியாச்சு, இனி நீ தான் முடிவெடுக்கணும். உன் வாழ்க்கை பற்றி நீ தான் முடிவெடுக்கணும் இதையும் உங்கப்பா கையில கொடுத்து எப்போமே வருந்தற மாதிரி ஆக்கிடாதே என்றான் அவன்.

 

 

வைபவின் வீட்டை வந்தடைந்ததும் இறங்கியவன் நேரே உள்ளே சென்றவன் தான் அதற்கு மேல் அவளிடம் ஏதும் பேசவில்லை. “என்ன கல்யாணம் நாங்க வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆச்சு. நீயும் அதே வழியா தானே வந்த உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம் என்று நந்து அவன் மானத்தை வாங்கினாள்.

 

 

நந்து விளையாட்டாக கேட்டாலும் அதில் உண்மையிருந்தது, அவளை பார்த்துக் கொண்டு இருக்கும் ஆவலில் அவளை திட்டுவது போல் திட்டிக் கொண்டு ஊரை சுற்றிக் கொண்டு அவன் மிகத்தாமதமாகவே வீட்டுக்கு வந்திருந்தான்.

 

 

உள்ளே வந்து அமர்ந்தவள் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாள். கல்யாண் வைபவின் அறைக்கு சென்று நுழைந்தவன் தான் வெளியில் வரவேயில்லை.

 

 

கார்த்திகாவின் அன்னை இந்திரா அன்று சந்தோஷ மனநிலையில் இருந்தார், அவருக்கு கல்யாண், வைபவ் நட்பின் மீது மட்டுமல்ல, சாந்தி, மாதவியின் நட்பை பார்த்தும் சந்தோசமாக இருந்தது.

 

 

அவர்களும் இயல்பாக அவருடன் ஒட்டிக் கொண்டதில் அவர் சிறுவயதில் தொலைத்த நட்பை பார்த்தார். அதனால் அவர் வயதொத்தவர்களுடன் பேசுவதில் சந்தோஷித்திருந்தார்.

 

 

வைபவ், கல்யாணுடன் இருக்க கார்த்திகா கூடத்தில் தனித்திருந்தாள். நிர்மல் வீட்டை சுற்றி பார்ப்பது போல் சென்றவன் நந்துவிடம் பேச்சு கொடுத்தான். “ஹாய் என்னை ஞாபகம் இருக்கா என்றான் அவன்.

 

 

“யார் நீங்க என்றாள் அவள். “என்னங்க அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா என்றான் அவன். “மறக்கலையே இப்போ தானே உங்ககூட கார்ல வந்திறங்கினோம் அதெப்படி மறப்பேன் என்றாள் அவள்.

 

 

“நான் இப்போ பார்த்ததை கேட்கலை, நாம இதுக்கு முன்னாடி ஒரு தரம் பார்த்திருக்கோம்மறந்துட்டீங்களா என்றான் நிர்மல். “சாரி எனக்கு ஞாபகம் இல்லை என்றுவிட்டு அவள் நகரமுற்பட்டாள்.

 

 

“ஹலோ நில்லுங்க, நானே ஞாபகப்படுத்தறேன் என்று சொல்லிவிட்டு அவன் ஆள்காட்டி விரலை சுற்றினான். “என்ன பண்றீங்க என்றாள் அவள். “அதாங்க பிளாஷ்பேக் சொல்லபோறேன் என்றான்.

 

 

“அதுக்கு… விரலை சுத்தினா பிளாஷ்பேக் வர்றதுக்கு இதென்ன சினிமாவா? நான் போய் காபி போடணும். என் வேலையை கெடுக்காதீங்க என்றுவிட்டு அவள் மீண்டும் நகர முனைந்தாள். “சரி சரி போகாதீங்க சொல்லிடறேன் என்றான்.

 

____________________

 

 

கல்யாண், கார்த்திகாவுக்கு திருமணம் ஆகி ஒரு மூன்று மாதம் முடிந்திருக்கும். ஒரு நாள் கார்த்திகாவை அழைத்து வர அவள் தந்தை ராஜசேகர் நிர்மலை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

 

 

கல்யாணின் வீட்டில் தனியாக இருக்கும் கார்த்திகாவிற்கு துணையாக காலையில் வீட்டிற்கு வந்த நந்துவை விட்டு சென்றனர். அவள் வீட்டில் இருந்து வந்து கூட்டிச் செல்லும் வரை அவளை துணையிருக்க சொல்லிவிட்டு மாதவி கடைக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

 

கார்த்திகா குளிக்க சென்றிருக்க, நந்து அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். வாசலில் கதவை தட்டும் ஒலி கேட்க எழுந்து சென்று கதவை திறந்தாள். “யார் நீங்க என்ன வேணும் உங்களுக்கு என்றாள் எதிரில் நின்றவனை பார்த்து.

 

 

நிர்மலோ அது தான் முதல் முறை அவன் அந்த வீட்டிற்கு வருவது, ‘சரியா தான் வந்திருக்கோமா, மாமாவுக்கு தங்கச்சி யாரும் இல்லையே, யார் இந்த பொண்ணு என்று நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

 

 

“ஹலோ நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன், யாருங்க நீங்க என்றாள் கடுமையாக. “கல்யாண்… என்று திக்கினான் அவன். “அவங்க இந்த நேரம் ஆபீஸ்ல தான் இருப்பாங்கன்னு தெரியாதா, போங்க போய் அங்க பாருங்க என்றுவிட்டு கதவை அடைக்கப் போனாள்.

 

 

“ஹலோ… ஹலோ… நில்லுங்க, கார்த்திகா வீடு தானே. அவங்க இல்லையா? என்றான் அவன். “நீங்க யாரு நீங்க பாட்டுக்கு வந்தீங்க, முதல்ல எங்க அண்ணனை பற்றி கேட்டீங்க, இப்போ அண்ணியை விசாரிக்கிறீங்க என்று இழுத்தாள் அவள்.

 

 

“நான் அவங்களோட தம்பி என்றான் அவன். “தம்பியா??? அண்ணிக்கு ஒரு அண்ணன் தானே இருக்காங்க என்றாள் யோசித்துக் கொண்டே, “சரி இங்கேயே நில்லுங்க நான் போய் அவங்களை கேட்டுட்டு வர்றேன் என்றுவிட்டு கதவை அடைத்துக் கொண்டு உள்ளே விரைந்து கார்த்திகாவிடம் சென்றாள்.

 

 

‘அய்யோ பெயர் என்னன்னு கேக்காம விட்டுட்டோமே என்று நினைத்தவள் குளியலறை கதவை தட்டப் போக அவளே வெளியில் வந்தாள். “என்ன நந்து என்றாள் கார்த்திகா. “அண்ணி உங்களுக்கு தம்பி இருக்காங்களா? ஒருத்தர் உங்க தம்பின்னு சொல்லிட்டு வந்திருக்கார் என்றாள் நந்து.

 

 

“யாரு நிர்மலா??? என்றவள் வேகமாக வெளியே விரைந்தாள். ‘என்ன யாரையும் காணோம் என்று அவள் நினைப்பதற்குள் வாசலுக்கு வந்து கதவை திறந்தாள் நந்து. “இதோ இங்க இருக்காங்க அண்ணி, யாருன்னு எனக்கு தெரியாதுல அதான் கதவை அடைச்சு வைச்சேன். சாரி அண்ணி, சாரிங்க என்றாள் அவள்.

 

 

“யாருக்கா இந்த லூசு இப்படி தான் வந்தவங்களை மரியாதை இல்லாம வெளிய நிக்க வைப்பாங்களா என்று பொரிந்தான் நிர்மல். “என்னடா நீ இவ்வளவு கோபப்பட மாட்டியே, ரொம்ப டென்ஷன் ஆகிட்டியா, இரு உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன் என்று எழுந்தாள் கார்த்திகா.

 

 

“அண்ணி நீங்க இருங்க நானே காபி போட்டு கொண்டு வர்றேன் என்றவள் போகும் போது அவனை முறைத்துவிட்டு சென்றாள். “நீ இருடா நான் போய் டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுட்டு வர்றேன். நாம கிளம்பலாம் என்றாள் அவள்.

 

 

“அக்கா இவ யாருன்னு சொல்லவே இல்லையே??? என்றான் அவன். “வைபவோட தங்கை நந்து, இங்க அடிக்கடி வருவா, நல்ல பொண்ணுடா. தப்பா எடுத்துக்காத அவளை என்றுவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

 

 

‘பரவாயில்லையே ரொம்பவே உஷாரா தான் இருக்கா என்று மனதிற்குள் அவளை மெச்சிக் கொண்டான். சற்று நேரத்தில் காபியுடன் வந்து நின்றாள் அவள். “இந்தாங்க என்றாள்.

 

 

அதை வாங்கியவன் “பயப்படாம குடிக்கலாம்ல, இது மிளகாய்தூளோ இல்லை உப்போ கொட்டி வைக்கலையே என்றான் அவன். ‘இவன் என்ன சொல்றான் என்று புரியாமல் விழித்தாள் அவள்.

 

 

“இல்லை உள்ள போகும் போது என்னை முறைச்சுட்டே போனீங்களா, அதான் என்னை பழிவாங்க இதுல அப்படி செஞ்சு இருப்பீங்களோன்னு நினைச்சேன் என்றான் அவன்.

 

 

“என்ன படிக்கிற??? என்றான் அவன் இயல்பாக, “காபி போட நல்லாவே படிச்சிருக்கேன் என்று நொடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள். ‘இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இந்த பொண்ணு இந்த வெட்டு வெட்டுது என்று நினைத்தான் அவன்.

 

 

“அண்ணி நீங்க இப்போ கிளம்புறீங்க தானே, சரி நானும் வீட்டை பூட்டிட்டு கிளம்பறேன். சாவியை கடையில கொண்டு போய் கொடுத்துறேன் என்றாள் நந்து. “சரி நந்து என்றாள் கார்த்திகா. “அக்கா நாம போகும் போது அவங்களை கடையில விட்டுட்டு போகலாமே என்றான் நிர்மல்.

 

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் முன்னபின்ன தெரியாதவங்க வண்டியில எல்லாம் நான் வர்றது இல்லை என்றாள் அவள். “ஏன் நந்து இப்படி சொல்ற, நானும் தான் கூட வர்றேனே, வா நாம போய் இறங்கிக்கலாம் என்றாள் கார்த்திகா.

 

 

“இல்லை அண்ணி நீங்க கிளம்புங்க நான் துணி எல்லாம் எடுத்து மடிச்சு வைச்சுட்டு அப்புறம் என் தோழி ஒருத்தியை பார்க்க போகணும், நான் போய்க்கறேன் என்றாள் அவள்.

 

 

“சரி நீ பார்த்து கிளம்பு நந்து சரியா. டேய் நிர்மல் வா நாம கிளம்பலாம் என்றுவிட்டு நந்து காருக்கு சென்றுவிட்டாள். அவளருகில் வந்தவன் “வேணுமின்னு தானே அப்படி சொன்ன, நான் உன்னை கடிச்சா திங்க போறேன்

 

 

“பாவம் தனியா போவியேன்னு கூப்பிட்டா ரொம்ப ஓவரா பண்ணிக்கற, ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை என் வண்டியில கூட்டிட்டு போறானா இல்லையான்னு பாரு என்று ஏதோ வேகத்தில் தன்னையறியாமல் சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். “சரியான லூசு என்று வாய்விட்டு முணுமுணுத்தாள் அவள்.

 

____________________

 

 

“சொல்லி முடிச்சுட்டீங்களா, ஆமா இந்த மொக்கை பிளாஷ்பேக்கை எதுக்கு இப்போ ஞாபகப்படுத்துனீங்க??? என்றாள் அவள். ‘மொக்கை பிளாஷ்பேக்கா, அடிப்பாவி கஷ்டப்பட்டு ஞாபகப்படுத்தினா இப்படி மூக்கை உடைச்சுட்டாளே என்று நொந்தான் நிர்மல்.

 

 

“அது ஒண்ணுமில்லை… என்று அவன் தொடர்வதற்குள் “ஒண்ணுமில்லாமலா இதை சொன்னீங்க, அய்யோ ச்சே என் நேரம் எல்லாம் வேஸ்ட்டா போச்சு என்றாள் அவள். உண்மையிலேயே அவனுக்கு ஏன் அதை பற்றி அவளிடம் ஆரம்பித்தோம் என்றே தெரியவில்லை.

 

 

கல்லூரியில் எத்தனை பெண்களை பார்த்திருந்தும் எந்த பாதிப்பும் இல்லாதிருந்தவன் அன்று சிறு குழந்தையாய் விளையாட்டாய் பேசிய அவள் முகம் அவனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது.

 

 

அன்றைய நிகழ்வுக்கு பின் அவன் அவளை காண வேண்டும் என்று எண்ணியதில்லை, ஆனால் அவ்வப்போது அவள் எண்ணம் அவனுக்கு வந்து போனது. அவளை மீண்டும் காணும் ஆவல் அவனுக்கு இப்போது தான் வந்தது.

 

 

வைபவ் நிச்சயம் பற்றி கேள்வி பட்டதில் இருந்து அவனுக்கு நந்துவின் ஞாபகம் மீண்டும் வந்தது. அவனும் வருவதாக அன்னையிடம் கூறி இதோ வந்தும் விட்டான். நிச்சயத்தில் அவளை பார்த்ததில் இருந்து அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

 

 

அழகாக தாவணி உடுத்தி எல்லோரையும் கேலி செய்துக் கொண்டு இயல்பாக வளைய வந்தவளை யாருக்கும் பிடிக்காமல் போகுமா. ஆசையாய் இவளை பார்க்க வந்தால் நம்மையே கேலி செய்கிறாளே என்று நினைத்தவன் அவளிடம் மேலும் தொடர்ந்தான்.

 

 

“ஹலோ, என்னங்க கொஞ்சம் என்னை பேசவிடுங்க. நான் பேசறதுக்குள்ள நீங்களா பேசிட்டு இருக்கீங்க என்றான் அவன். ‘என்ன சொல்லுங்க என்பது போல் அவனை பார்த்தாள் அவள்.

 

 

“அன்னைக்கு என்கூட வரமாட்டேன்னு சொன்னீங்களே இன்னைக்கு மட்டும் என்கூட கார்ல வந்தீங்களே. இப்போ மட்டும் என்னை உங்களுக்கு நல்லா தெரிஞ்சுதா??? என்றான் அவன்.

 

 

“நானும் நீங்களும் மட்டுமா தனியா வந்தோம்??? எங்க அம்மா, அண்ணன் எல்லாரும் தானே வந்தாங்க அதான் நானும் வந்தேன், இப்போவும் நீங்க யாரோ தான்??? என்று கழுத்தை ஒடித்துவிட்டு போனாள் அவள்.

 

 

‘உன்னை என்ன செய்யறதுன்னே எனக்கு தெரியலை, என்னையா தெரியாதவன்னு சொல்ற. சீக்கிரமே உரிமையா உன்னை என் கார்ல ஏத்திட்டு போறேன் பாரு.

 

 

‘நீயும் நானும் மட்டும் தனியா போவோம், அன்னைக்கும் நீ இப்படி தான் சொல்லுவியான்னு பார்போம். ஆறு வருஷமா உன்னை மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன். அன்னைக்கு தான் நீ சின்ன பொண்ணு உனக்கு விபரம் தெரியாது

 

 

‘இப்போ தான் நல்லா வளர்ந்து கல்லூரிக்கு எல்லாம் போறயே, உன்னையே சுத்தி சுத்தி வரேன் ஏன்னு உனக்கு புரியலையா. மொக்கை பிளாஷ்பேக் எதுக்கு ஞாபகப்படுத்துறீங்கன்னு கேட்குற. எனக்கே புரியலை நான் ஏன் இப்படி செய்யுறேன்னு என்று தன்னையே நொந்தவன் ‘இது நடக்குமா என்ற எண்ணம் வந்ததும் எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பி சென்றான்.

 

 

ஹாலில் கார்த்திகா தனித்து அமர்ந்திருப்பது கண்டு அவனுக்கு யோசனை வந்தது. ‘ச்சே அக்கா இப்படி வாழாமல் இருக்கும் போது நமக்கு ஏன் இப்படி எல்லாம் எண்ணம் வருகிறது. எப்படியும் நம் கனவு பலிக்க போவதில்லை. அக்காவின் வாழ்வு நன்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

 

 

“என்ன அக்கா??? என்ன யோசனை??? என்றான் நிர்மல். “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை என்றாள் தன் நினைவுகளில் இருந்து கலைந்தவளாய். “சரி வீட்டுக்கு கிளம்பலாம் என்றான் அவன்.

 

 

“எங்கே??? என்றாள் யோசனையுடனே. “என்னக்கா??? மாமா கூடவே வீட்டுக்கு போகணும்ன்னு தோணுதா??? என்றான் அவள் எண்ணத்தை படித்தவன் போல். “உளறாதேடா வா கிளம்பலாம் என்று எழுந்து நின்றாள் அவள்.

 

 

“அண்ணி எங்க கிளம்பிட்டீங்க??? நான் போடற காபில இருந்து தப்பிக்கலாம்ன்னு பார்க்குறீங்களா. நீங்க காபி சாப்பிட்டு தான் போகணும் என்றவள் ஒரு கோப்பையை அவளிடம் கொடுத்தாள்.

 

 

“எடுத்துக்கோங்க என்று நிர்மலிடமும் நீட்ட அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் கோப்பையை எடுத்துக் கொண்டான். ‘இவ்வளோ நேரம் வந்து பேசிட்டு இருந்துச்சு இந்த லூசு, இப்போ பொண்ணு பார்க்க வரும் போது பொண்ணு தலையை குனிந்து இருக்கற மாதிரி இருக்கறான் என்று நினைத்துக் கொண்டு தோளை குலுக்கி சென்று விட்டாள்.

 

ஒருவழியாக இந்திரா, கார்த்திகா, நிர்மல் எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினர். கார்த்திகா தவிர மற்ற இருவரும் உள்ளே சென்று கல்யாணிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

 

 

அவளோ அவன் வெளியே வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்திருந்தாள். அவன் வேண்டுமென்றே வெளியில் வராமல் இருந்தான். ஆனால் அவள் காரில் ஏறிச் செல்வதை ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டு தானிருந்தான்.

 

 

வீட்டிற்கு வந்த பின்னும் கார்த்திகா முகம் வாடியிருக்க தலை வலிப்பதாக கூறி அவள் அறைக்கு சென்று விட்டாள். இந்திராவும் நிர்மலும் எப்படி அவளை கல்யாணுடன் சேர்த்து வைப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் விரைவில் அமைய போவதை அவர்கள் அறியவில்லை.

 

 

அன்று இரவு ஊருக்கு சென்றிருந்த ராஜசேகரும் முத்துக்குமாரும் வந்திறங்கினர். வீட்டிற்குள்ளே வந்தவர் பயங்கர சந்தோசத்துடன் காணப்பட்டார்.

 

 

வந்தவர்களை வரவேற்று எல்லோருக்கும் இரவு உணவு தயாரித்தார் கார்த்திகாவின் அன்னை இந்திரா. அவர்கள் வந்ததில் இருந்து வெளியில் வராத மகளை தேடினார் ராஜசேகர்.

 

 

“இந்திரா, எங்க கார்த்திகா ஆளையே காணோம் என்றார். “அவ அவளோட அறையில தான் இருக்காங்க என்றார் அவர் பதிலுக்கு. “சரி போய் கூட்டிட்டுவா, எல்லாரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிடலாம் என்றார் அவர்.

 

 

மகளை அவள் அறைக்கு சென்று அழைத்து வந்தார் இந்திரா. “என்னம்மா கார்த்தி என்னாச்சுடா ஏன் ஒரு மாதிரியா இருக்க, உடம்புக்கு எதுவும் முடியலியா. இந்திரா நீ இதையெல்லாம் பார்க்க மாட்டியா??? என்று மகளிடம் பரிவுடன் ஆரம்பித்து மனைவியிடம் கோபத்துடன் முடித்தார் அவர்.

 

 

“இல்லைப்பா ஒண்ணுமில்லை, லேசா தலைவலி அதான். விடுங்கப்பா என்றாள் அவள். “இல்லைம்மா நீ வா நாம டாக்டர்கிட்ட போகலாம் என்றார் அவர். “இல்லைப்பா அந்தளவுக்கு எல்லாம் எதுவும் இல்லை, இப்போ கொஞ்சம் பரவாயில்லைப்பா என்றாள் அவள்.

 

 

அவளுக்கு கண்ணை கரித்தது, ஒரு பக்கம் தந்தையின் பாசப்பிணைப்பு மறுபுறம் விரும்பி திருமணம் செய்தவன், இருவரில் ஒருவர் பக்கம் தான் அவளிருக்க முடியும். இருதலைகொள்ளி எறும்பை போல் ஆனது அவள் நிலை.

 

 

“உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோசமான விஷயம் சொல்லணும் நினைச்சேன். என்ன தெரியுமா??? நாங்க ஊருக்கு போனோம்ல அங்க நம்ம நிலத்தை விற்க போன இடத்துல நம்ம தூரத்து சொந்தம் ஒருத்தவங்களை பார்த்தோம்.

 

 

“நல்ல வசதியானவங்க நிலபுலன் தோட்டம் துரவுன்னு பரம்பரையா இருக்கவங்க, அவங்க பொண்ணுக்கு நம்ம முத்துக்குமாரை பேசிட்டேன். அடுத்த வாரம் அவங்க நம்ம வீட்டை பார்க்க இங்க வர்றாங்க என்றார் சந்தோசத்துடன். இந்திராவுக்கு லேசாக முகம் வாடியது.

 

 

பெற்ற தாயிடம் ஒரு வார்த்தை கூட கேளாமல் முடிவெடுத்ததில் அவருக்கு கணவரின் மேல் சற்று வருத்தமே. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தவாறே அங்கிருந்து எழுந்துவிட்டார்.

 

 

அன்னை உள்ளே செல்வதை பார்த்த இளைய மகனும் அவர் பின்னேயே சென்றான். “என்னம்மா இதெல்லாம்??? வீட்டில நாம எல்லாம் இல்லையா இவரே எல்லாம் பேசி முடிச்சுட்டு வந்து தான் சொல்லுவாரா??? நீயாச்சும் கேட்கக் கூடாதாம்மா??? என்றான் நிர்மல்.

 

 

“நாம பேசறதை என்னைக்கு உங்கப்பா கேட்டிருக்கார், விடு நிர்மல். வர்ற பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா சந்தோசம் தான் என்று அவர் இயல்பாக பேசுவது போல் பேசி அவர் வருத்தத்தை மறைந்துக் கொண்டார் அவர்.

 

மறுவாரம் பெண் வீட்டில் இருந்து பெண்ணின் தாய், தந்தை, தாய் மாமன் புடைசூழ அவர்கள் வந்திறங்கினர். “இந்திரா எங்க தான் போவியோ??? அவங்க வர்ற நேரமாச்சு வா சீக்கிரம் நாம அவங்களை போய் வரவேற்க வேணாமா??? என்றார் ராஜசேகர்.

 

 

‘இதற்கு மட்டும் நான் முன்னால் நிற்க வேண்டும் என்று சலித்தாலும் மகன் திருமணம் என்பதால் அவரும் எதுவும் பேசாமல் அவருடன் சென்றார். “வாங்க, வாங்க என்று வாய் நிறைய வரவேற்று அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர்.

 

 

எல்லோரும் கூடத்தில் அமர்ந்திருக்க கார்த்திகாவும் வந்து அவர்களை வரவேற்றாள். பெண்ணின் தாய் இயல்பாக விசாரிப்பது போல் இந்திராவிடம் விசாரித்தார்.

“அப்புறம் உங்க பொண்ணும் இந்த ஊர்ல தான் இருக்காங்களா??? உங்க மருமகன் என்ன செய்யுறார் என்றார். “அவர் கல்யாண வைபவம்ன்னு ஒரு வரன் பார்க்கும் மையம் வைச்சு நடத்திட்டு இருக்காங்க. வரன் பார்க்கறது, கல்யாணத்திற்கு தேவையான அனைத்தும் செய்வது இது போன்ற வேலைகள் அதில் அடக்கம் என்றார் குரலில் பெருமிதத்துடன்.

 

 

“ஆமாம் இன்னைக்கு அவர் ஏன் வரலை??? என்று அடுத்த கொக்கியை போட்டார் அவர். மனைவியை முந்திக்கொண்டு பதிலிறுத்தார் ராஜசேகர், “அவருக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை, அதான் வர முடியலை என்றார் அவர்.

 

 

“எங்க பொண்ணு சக்திக்கு ஏத்த மாதிரி ஆளுங்களா இருக்கீங்க, ரொம்ப சந்தோசம் என்று இயல்பாக பேசினார் பெண்ணின் தாய். “ஆமாங்க என்னோட மனைவி சொல்றது சரி தான் எல்லாரும் நல்ல மனுஷங்களா தெரியறீங்க

 

 

“எங்களுக்கு பூரண திருப்திங்க என்றார் பெண்ணின் தந்தை, உடன் வந்தவர்களும் அதை ஆமோதிக்க அவர்கள் சந்தோசத்துடன் விடைபெற்றனர். முத்துக்குமார் முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம் இருந்தது.

 

 

பெண்ணை பார்த்ததும் அவனுக்கு பிடித்துவிட்டதே, அவன் முகம் ஜொலிப்பிற்கும் அதுவே காரணம். இந்திராவுக்கு இந்த கல்யாணத்தின் மூலம் மகள் தன் கணவனுடன் சேர்ந்து விடுவாள் என்று ஏதோ ஒரு நம்பிக்கை தோன்றியது.

 

 

அது உண்மை என்பது போல மறுவாரமே பெண் வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது ராஜசேகருக்கு. இரு குடும்பத்திற்கும் இடைப்பட்ட ஒருவர் அவருக்கு போன் செய்திருந்தார்.

 

 

“ஹலோ நான் கந்தசாமி பேசறேன்ப்பா, ராஜசேகர் தானே என்றார் அவர். “ஆமாங்க அய்யா, சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்றார் அவரும் சம்பிரதாயமாக.

 

 

“நல்லாயிருக்கோம்ப்பா, ஒரு சின்ன தகவல் அதை சொல்லலாம்ன்னு தான் கூப்பிட்டேன் என்றார் அவர் பீடிகையுடன். என்ன விஷயமாக இருக்கும், பெண் வீட்டினர் பேசாமல் இடையில் உள்ளவர் பேசும் போதே அவருக்கு ஒரு நெருடல் இருந்தது.

 

 

“சொல்லுங்கய்யா என்றார் அவர். “அதுவந்து உன் பொண்ணு புருஷனோட வாழலையாமே, உன் வீட்டில தான் இருக்குன்னு கேள்விப்பட்டோம். அது உன் பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிகிச்சுன்னு எனக்கு தெரியும்

 

 

“ஆனா புருஷனோட வாழாம உன் வீட்டில தான் வந்து இருக்கறது இப்போ தான் தெரிஞ்சுது. நீயாவது ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஒரு பொண்ணு வாழாம உன் வீட்டில இருக்கும் போது இன்னொரு பொண்ணு எப்படி வந்து அங்க வாழும்.

 

 

“உன்னோட பொண்ணுக்கும் அது கஷ்டமா தானே இருக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னா நீ உன் பொண்ணை சமாதானம் செஞ்சு அது புருஷன் வீட்டில விட்டுட்டு வாப்பா, நாம அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வைச்சுக்கலாம் என்றார் அவர். மேலும் அவருக்கு தோன்றிய அத்தனை அறிவுரையும் வழங்கிவிட்டு அவர் போனை வைக்க, அவருக்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தார் ராஜசேகர்.

 

 

போனை வைத்ததும் கோபமாக கத்தினார், “என்ன பெரிய சம்மந்தம் இவன் தான் பெரிய ஆளுன்னு நினைக்கிறானா, என் பொண்ணு எங்க இருந்தா இவனுக்கு என்ன. அவ புருஷனோட வாழலை அப்படி இப்படின்னு பேசுறாங்க என்று இரைந்தார் அவர்.

 

 

கணவர் கோபத்தில் பேசியதை கேட்ட இந்திராவுக்கு உள்ளூர மிகுந்த சந்தோசமாக இருந்தது. பெண் வீட்டினர் மீது அவருக்கு மிகுந்த மதிப்பு வந்தது. ராஜசேகரோ மேலும் கத்திக் கொண்டிருந்தார்.

 

 

நல்லவேளையாக கார்த்திகா அப்போது வீட்டில் இல்லை, “இவன் பொண்ணை எல்லாம் கட்டுறதுக்கு சும்மாவே இருக்கலாம். என் பையனுக்கு வேற பொண்ணா கிடைக்காது என்றவர் முத்துக்குமாரிடமும் அது பற்றி கூற அவரை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் அமைதியாக சென்றுவிட்டான் அவன் வழக்கம் போல்.

 

 

மனதிற்குள் கட்டினால் அந்த பெண்ணை தான் கட்டவேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்குள் எழுந்தது, இருந்தாலும் தங்கையை பற்றிய விமர்சனம் அவனுக்குள் வருத்தத்தையே ஏற்படுத்தியது.

 

 

மாலையில் வீட்டிற்கு வந்த சின்ன மகனை தனியே அழைத்துச் சென்ற இந்திரா நடந்த விபரத்தை நிர்மலிடம் கூறினார். இருவருமாக அந்த சம்பவத்தை வைத்து கார்த்திகாவை அவள் வீட்டிற்கு அனுப்ப திட்டம் தீட்டினர்.

 

 

Advertisement