Advertisement

அத்தியாயம் –12

 

 

தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே கைவைச்சுட்டு உட்கார்ந்து இருந்தா என்ன பண்ணமுடியும்???” என்றான் கல்யாண்.

 

 

“நீ வேற ஏன்டா கடுப்பை கிளப்புற, ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கலையோ. இத்தனை நாளா எதுவும் சொல்லாம இருக்காளே???”.

 

 

“ஆமா அவளோட பதிலை எப்படி உன்கிட்ட சொல்ல சொன்ன???” என்றான் அவன். “என்னோட போனுக்கு மெசேஜ் அனுப்பச் சொன்னேன், என்னோட எண்ணும் அந்த லெட்டர்ல எழுதி கொடுத்திருக்கேன்” என்றான்.

 

 

“என்னது கடிதமா, என்ன கடிதம் எப்போமே அபி தானே உனக்கு எழுதி கொடுப்பா. ஒரு மாறுதலா இருக்கட்டும்ன்னு நீ எழுதி கொடுத்தியா, என்ன எழுதின???” என்று கேள்விகளை அடுக்கினான் கல்யாண்.

 

 

‘அய்யோ வாயை விட்டுட்டோமே’ என்று தன்னையே நொந்தவன் அவன் பெண் பார்க்க சென்ற அன்று அபியிடம் கொடுத்த கடிதம் பற்றி கல்யாணிடம் கூறினான். “ரொம்ப நல்லவன்டா நீ, இதெல்லாம் உனக்கு தேவையா???”

 

 

“தேவை தான் கல்யாண் அவளுக்கு என்னை பத்தி எல்லாமும் தெரிஞ்சிருக்கணும்ன்னு அதான் அப்படி செஞ்சேன்” என்றவன் ஒரு பெருமூச்சுடன் “என்ன அவகிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை, அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றான் அவன்.

 

 

“விடுடா எல்லாமே நல்லதா தான் நடக்கும், சரி ரொம்ப யோசிக்காத நான் போய் ஒரு டீ சொல்லிட்டு வர்றேன்” என்றுவிட்டு கல்யாண் வேலையை பார்க்கச் சென்றான் அவன்.

 

 

வைபவ் பலவிதமாக குழப்பி தவித்தான். ஒருவேளை அவளுக்கு பிடிக்கலையோ, எதுவாக இருந்தாலும் அதை சொல்லியிருக்கலாமே’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

கண்டதும் காதலா என்று கல்யாண் கேட்ட போது அவனுக்குள் காதல் என்ற உணர்வு இல்லை, ஆனால் எப்போது அவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தானோ அதன்பின் அவனுக்குள் அபியை பற்றிய சிந்தனை அதிகமாகியது.

 

 

அவனறியாமலேயே அவள் அவனுக்குள் ஐக்கியமாயிருந்தாள், தலையில் கை வைத்துக்கொண்டு கண்ணை மூடி மேல் நோக்கி சாய்ந்திருந்தான் அவன். கதவை தட்டிய சத்தம் கேட்டது.

 

 

டீக்கடைக்கார பையன் டீ கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தவன் “வைச்சுட்டு போ” என்றான் அவன் இருந்த நிலை மாறாமலேயே. பத்து நிமிடம் கழித்து மெதுவாக தலையை இறக்கி பார்த்தான்.

 

 

ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு, எதிரில் நிற்பது அபியே தானா என்று தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டான். நிஜம் புரிந்ததும் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவன் “உள்ள வாங்க, எதுக்கு இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க” என்றான் அவன்.

 

 

அவளும் உள்ளே வந்து அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள். அவள் எதிரில் சென்று அமர்ந்தவன் “சொல்லுங்க” என்றான். ஏதோ அவள் வாய் திறந்து அவனுக்கு பதில் சொல்லிவிடுவாள் போன்று அவன் கேட்ட விதம் அவனுக்கே அதிகப்படியாக தோன்ற தலையில் தட்டிக் கொண்டான்.

 

 

அவளோ வந்ததில் இருந்து அவனையே அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘எதுக்கு இப்படி பார்க்குறா’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த வேளை அவள் கைப்பையை திறந்து குறிப்பேடு வெளியில் எடுத்தாள்.

 

 

‘ஆரம்பிச்சுட்டா, இனி போட்டு தாக்க போறா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் முகம் இயல்பாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டான்.

 

 

குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான், என்ன எழுத தரப் போறாளோ… பரீட்சை மதிப்பெண்ணுக்கு கூட நான் பயந்ததில்லை. இப்படி டென்ஷன் ஆனது இல்லை, இவ என்ன சொல்லப் போறாளோன்னு மனசு கிடந்து தவிக்குது.

 

 

இவன் இப்படி யோசைனையில் இருக்கும் போதே இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தான் டீக்கடை பையன். ரெண்டு டீ வந்திருக்கு, கல்யாண் இவளை பார்த்திருப்பானோ, அதான் ரெண்டு டீ சொல்லியிருக்கான் போல என்று நினைத்துக் கொண்டவன் ஒரு டீயை அவள் புறம் நகர்த்தினான்.

 

 

அதற்குள் எழுதி முடித்தவள் அந்த குறிப்பையும் மேலும் அவள் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு நீள கவரும் எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளிடம் இருந்து அதை வாங்கும் போதே அவன் இதயம் வேகமாக துடிக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவள் கொடுத்த கவரை கீழே வைத்துவிட்டு முதலில் அந்த குறிப்பை படித்தான்.

 

 

“என்னடா இவள ரெண்டு நாள்ல பதில் சொல்ல சொன்னோமே இப்போ தான் வந்திருக்கா, அப்படின்னு தானே நினைக்கிறீங்க. நான் ரெண்டு நாள்ல பதில் சொல்லலைன்னா நீங்க என்ன செய்வீங்கன்னு பார்க்கலாமேன்னு நான் எந்த பதிலுமே சொல்லலை

 

 

“அதான் உங்களை நேர்ல பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன், பார்த்திட்டேன், என் பதில் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா, எங்க அம்மா அன்னைக்கு சொன்னதை நீங்க நம்பலையா. சரி என்னோட பதிலை தெரிஞ்சுக்க நீங்க இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கணும்

 

 

“இதோட இருக்க கவர்ல தான் என்னோட பதில் இருக்கு, அதை நீங்க வீட்டுக்கு போன பிறகு தான் படிக்கணும்ன்னு என்னோட விருப்பம். நீங்க என்னை குறுந்தகவல் அனுப்ப சொல்லியிருந்தீங்க. எனக்கு நேர்லயே பார்க்கணும்ன்னு தோணிச்சு அதான் வந்தேன்என்று முடித்திருந்தாள் அவள்.

 

 

‘இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது என்று மனதிற்குள் செல்லமாக வைதான். டீ குடித்து முடித்ததும் கிளம்பும் பாவனையில் அவள் எழுந்து நிற்க, “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமே என்றான் அவன்.

 

 

அவளோ வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்றும் ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று சைகையில் அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள். “சரி ஒரு நிமிஷம் இருங்க, நான் ஆட்டோ வரவைக்கிறேன் அதுலயே போய்டுங்க என்று வைபவ் அவள் மறுத்து தலையை ஆட்டினாள்.

 

அவன் எதையும் லட்சியம் செய்யாமல் யாருக்கோ போன் செய்தான், சற்று நேரத்தில் அவனுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வர பேசிவிட்டு வைத்தவன் “வாங்க போகலாம் என்று அவளோடு வந்தவன் அங்கு வந்து நின்ற ஆட்டோவில் அவளை ஏற்றினான்.

 

 

அவள் ஏறி அமர்ந்ததும் அவனை ஒரு நன்றி பார்வை பார்த்துவிட்டு, குறிப்பாக அவன் கையில் இருந்த கடிதத்தை நோக்கினாள். அவள் நினைத்தது புரிய “கண்டிப்பா வீட்டுக்கு போய் தான் படிப்பேன், இன்னும் இருபது நிமிஷத்துல உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பறேன் என்று சொன்னவனை விசித்திரமாக பார்த்தாள் அவள்.

 

 

“நீங்க நினைக்கிறது புரியுது, நானும் வீட்டுக்கு கிளம்பிட்டேன். என்னோட வேலை எல்லாம் முடிச்சுட்டு தான் கிளம்பறேன். நம்புங்க என்று அவளிடம் சொல்லிவிட்டு திரும்பி நின்று சிரித்துக் கொண்டான்.

 

 

‘கள்ளன் உடனே படிக்க அவசரம், வேலை முடிஞ்சுடுச்சுன்னு சொல்லிட்டு கிளம்புறான், பார்ப்போம் படிச்சுட்டு என்ன சொல்லுறான்னு என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு கையசைத்து விடை பெற்றாள் அவள்.

 

 

அவள் கிளம்பியதும் அவன் கைகள் அப்போதே அந்த கடித உறையை பிரித்து படிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகியது. அவளுக்கு தெரியவா போகிறது, என்று எண்ணம் தோன்றினாலும், அவள் சொல்லுக்கு மதிப்பளிக்கவே அவன் உள்ளம் விழைந்தது.

 

 

கல்யாணிடம் சென்று சொல்லிவிட்டு அவன் விரைவாக கிளம்பினான், பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தவன் வேகமாக அவன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.

 

 

‘என்ன இவன் வந்தான் நேரே அவனோட அறைக்குள்ள நுழைஞ்சு கதவை சாத்திக்கிட்டானே, என்னாச்சு இவனுக்கு என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு காபி கலக்கச் சென்றார் சாந்தி. அறைக்குள் சென்றவன் வேக வேகமாக உறையில் இருந்த கடிதத்தை எடுத்து பிரித்தான்.

 

 

“நான் என்ன சொல்லப் போறேனோன்னு உங்களுக்கு ரொம்பவே டென்ஷன் இருக்கும்ன்னு நினைக்கிறேன்… ஆமா பெரிசா ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு வந்தீங்க… பதில் வரலைனா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா???.

 

 

“எங்கம்மா எனக்கு சம்மதம்ன்னு சொன்னதை நீங்க நம்பலையா???. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா??? நான் ஏன் அப்படி சொன்னேன்னு நிஜமாவே எனக்கு தெரியலை. உங்க கடிதம் எனக்கு அவகாசம் கொடுத்தது எல்லாம் சேர்ந்து நான் ஏன் அப்படி சொன்னேன்னு என்னை யோசிக்க வைச்சது….

 

 

“நீங்க எப்படி என்னை கவர்ந்தீங்கன்னு எனக்கே புரியலை… ஏன்னா நான் ஆண்கள்கிட்ட எப்போமே ஓரடி தள்ளி நின்னு தான் பழக்கம், எங்க அப்பா உட்பட, சின்ன வயசுல என்கிட்ட பாசமா இருந்த அவர், மத்தவங்க பேச்சை கேட்டு என்னை கொஞ்சம் ஒதுக்க ஆரம்பிச்சார்…

 

 

“அதுக்கு என்னோட அண்ணனும் ஒரு காரணம், என்னை ஏதாவது ஒரு விதத்துல எங்க அப்பாகிட்ட மாட்டிக் கொடுத்து அவருக்கு என்னை பிடிக்காம பண்ணிட்டான். இப்ப அவர் என்னை புரிஞ்சுகிட்டாலும் என் மனசு முழுசா அவரை ஏத்துக்கலை…

 

 

“ஆண்கள் எல்லாருமே சுயநலமானவங்க, அவங்க தேவைக்காக என்னவும் செய்வாங்கன்னு நான் இதுவரைக்கு நினைச்சுட்டு இருந்தேன். அந்த நினைப்பு உங்களை பார்த்ததுக்கு அப்புறம் மாறி போச்சு…. முதல்ல உங்களை பார்த்த போது நீங்களும் மத்த ஆண்கள் மாதிரின்னு நினைச்சு தான் அன்னைக்கு மருத்துவமனையில உங்களை வெளிய போகச் சொன்னேன்

 

 

“ஆனா அப்புறம் யோசிச்சு பார்க்கும் போது தான் புரிஞ்சுது, நீங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்கு உதவி செஞ்சது, இருந்தாலும் அதை ஒத்துக்க எனக்கு மனசில்லை… அன்னைக்கு அந்த பேருந்து நிலையத்துல நடந்த சம்பவம் தான் உங்க மேல ஒரு பெரிய மதிப்பை உருவாக்குச்சு…

 

 

“எனக்கே அந்த ஆளை அப்படி தான் அடிக்கணும்ன்னு தோணிச்சு… என்ன தான் அந்த ஆளு செஞ்சது தப்பாயிருந்தாலும் நான் பொதுவா ஆண்களை பகைச்சுக்க நினைச்சது இல்லை… அதுனால தான் அன்னைக்கு அவரை மன்னிச்சு விடச் சொன்னேன்…

 

 

“அது எனக்காக இல்லை நாளைக்கு அந்த வழியில தான் அந்த பொண்ணு போவா, வருவா… அதுனால தான் அப்படி செய்ய சொன்னேன்… அந்த ஆளும் மன்னிப்பு கேட்டார்… என்ன தான் அவர் மன்னிப்பு கேட்டாலும் அவர் செஞ்ச தப்பை என்னால ஏத்துக்க முடியலை…

 

 

“ஒருத்தரோட பலவீனத்தையும், அவங்களோட இயலாமையும் பயன்படுத்தி தான் தைரியமான பெண்களை ஆண்கள் கோழைகளா மாத்திடுறாங்க… வாய் பேச முடியாத அந்த பொண்ணு எதையும் வெளிய சொல்லமாட்டான்னு தானே அப்படி செஞ்சான்… நீங்க எதையும் யோசிக்காம அவனை அறைஞ்சது தான் உங்களை பத்தி என்னை யோசிக்க வைச்சது

 

 

“அன்னைக்கு தான் உங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன், அதுக்கு அப்புறம் உங்களை பார்த்த போது எல்லாம் பேருந்து நிலையத்துல நடந்ததுக்கு உங்களுக்கு நன்றி சொல்லணும்ன்னு நினைச்சேன்… ஆனா ஒரு தடவை கூட என்னால அதை சொல்ல முடிஞ்சது இல்லை…

 

 

“உங்களை எங்க பார்த்தாலும் என்னையறியாமலேயே உங்களை சீண்டுற மாதிரியே நடந்துக்கிட்டேன்… அன்னைக்கு நீங்க தான் என்னை பொண்ணு பார்க்க வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியவே தெரியாது…

 

 

“அங்க உங்களை பார்த்ததும் நம்பவே முடியலை… தெரியாம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டோமே… எந்த மாப்பிள்ளை வந்தாலும் வேண்டாம்ன்னு சொல்லணும்ன்னு தான் நான் முடிவு பண்ணியிருந்தேன்… எங்க அம்மா வந்து கேட்கும் போது சரின்னு சொல்லிட்டேன்

 

 

“அதுக்கு அப்புறம் தான் நீங்க வந்து என்கிட்ட பேசுனீங்க, உங்களை பத்தி நீங்க என்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சு நீங்க எழுதிக் கொடுத்த கடிதம் என்னை ரொம்பவே பாதிச்சுது… நீங்க நினைச்சா என்கிட்டே மறைக்கணும்ன்னு நினைச்சு இருக்கலாம்…

 

 

“அப்படி எதுவும் செய்யாம நீங்க என்கிட்ட வெளிப்படையா இருந்தது எனக்கு பிடிச்சு இருந்தது… என்னை குறையோட பார்க்காத உங்க குணம் எனக்கு பிடிச்சுது… ரொம்பவும் சுத்தி வளைக்கிறேனா… இன்னும் உங்களுக்கு புரியலைன்னா… என்னால எதுவும் செய்ய முடியாது…

 

 

“என்னால பேச முடியாதது கூட ஒருவகையில நல்லது தான்னு எனக்கு தோணுது… என் மனசுல உள்ளது எல்லாமும் உங்ககிட்ட வாய்விட்டு பேச முடிஞ்சா கூட இவ்வளவு தூரம் விளக்கி சொல்லி இருக்க முடியுமான்னு தெரியலை…

 

 

“என் முடிவை ஒரு கவிதையாய் எழுதியிருக்கிறேன், உங்கள் குறுந்தகவலுக்காய் காத்திருப்பேன்…

 

 

யாரும் நுகர்ந்து நோக்கப்
பிடிக்காத வாசமில்லா
காகிதப் பூவாய் நானிருந்தேன்…

அதற்குள்ளும் ஒளிந்திருக்கும்
தேன் துளியாய் எனக்குள்
உன் காதலைக் கண்டு கொண்டேன்…

என் வார்த்தைகளின் வடிவமாய்
என் எண்ணங்களின் வண்ணமாய்
நீயிருப்பாய் என நம்புகிறேன்…

காற்றோடு கலந்து போன
என் வார்த்தைகளும்
உன்னால் உயிர் பெறட்டும்…

உயிருக்கு மெய்யாய்
என் குரலுக்கு உருவமாய்
உன்னில் எனை காண்பேன்…
என் கண்கள் சொல்லும்
உன் மீதான என் காதலை…
என் கவிதைகள் சொல்லும்
என்னுள்ளே நீ வாசம் செய்வதை…

எனக்குள் ஒலியாய் என்
வாழ்வுக்கு ஒளியேற்ற வந்தவனே…
நான் என்னைக் காதலிக்கிறேன்…

எனக்குள் உள்ள உன்னையும்…

 

– அபிநயா

 

 

கடிதத்தை படிக்கும் போதே அவனுக்குள் பலவித உணர்வுகள் வந்து போனது… மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் எத்துனை முறை படித்தானோ அவனே அறியான்… அவளுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதை கூட மறந்தவனாய் அக்கடிதத்தையே வெறித்தவாறு இருந்தான். “வைபவ்… வைபவ்… என்று அவன் அன்னை அழைக்கும் சத்தம் அவன் மூளையில் எங்கோ பதிய சட்டென்று சுய நினைவை அடைந்தான்…

 

 

கதவை திறந்து வேகமாக வெளியில் வந்தவன் “என்னம்மா என்றான். “என்னப்பா என்னாச்சு உடம்பு எதுவும் முடியலியா, நான் ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருக்கேனே என்று அவர் கையை அவன் நெற்றியில் வைத்து ஒற்றினார்.

 

 

“அம்மா அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா, நான் நல்லா தான் இருக்கேன். நீங்க சொல்லுங்கம்மா என்றவன் அப்போது தான் அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தான்.

‘கடவுளே நான் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் மேல ஆகுதே, அய்யோ அபி வேற எனக்காக காத்திட்டு இருந்திருப்பாளே என்று தலையில் தட்டிக் கொண்டான்.

 

 

“தம்பி அபியோட அம்மா போன் பண்ணியிருந்தாங்க, உனக்கும் பண்ணிருப்பாங்க போல நீ தூங்குறேன்னு சொல்லிட்டேன். நீ அவங்களுக்கு போன் போட்டு என்னன்னு கேட்டுக்கோப்பா.

 

 

“அப்படியே அபி என்ன சொன்னான்னு கேளுப்பா, நீ வேற அன்னைக்கு ரெண்டு நாள் அவகாசம்ன்னு சொன்ன, அதுக்கு பிறகு எந்த தகவலும் இல்லை. சரிப்பா நான் போய் உனக்கு காபி கொண்டு வர்றேன் என்று உள்ளே விரைந்தார் அவர்.

 

 

“அம்மா ஒரு நிமிஷம் அபி சம்மதம் சொல்லிட்டாங்கம்மா, அதை சொல்ல தான் அவங்க கூப்பிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன், சரிம்மா நான் அவங்ககிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் என்று விட்டு அவன் அறைக்குச் சென்றான்.

 

 

அவசர அவசரமாக அவன் கைபேசியை தேடி எடுத்தவன் அபியின் அன்னை கற்பகத்திற்கு போன் செய்தான். “ஹலோ நான் வைபவ் பேசறேன் என்றான். “நான் கொஞ்சம் முன்னாடி உங்களுக்கு போன் பண்ணியிருந்தேன், நீங்க எடுக்கலை அதான் அம்மாக்கு போட்டேன், உடம்பு எதுவும் சரியில்லையா என்றார் அவர்.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் நல்லா தான் இருக்கேன். அபி… அபி… அபி வீட்டுக்கு வந்துட்டாங்களா என்றான் அவன். “அப்போவே வந்துட்டா தம்பி என்றார் அவர்.

 

 

“எதுவும் சொன்னாங்களா… என்று திணறியவாறே கேட்க “நான் அதுக்கு தான் உங்களுக்கு போன் பண்ணேன் தம்பி, உங்ககிட்ட சொல்லிட்டாளாமே என்றார் அவர். “சரி அத்தை நாங்க நல்ல நாள் பார்த்திட்டு சொல்றோம், அன்னைக்கு நிச்சயம் பண்ணிடலாம். அபிகிட்ட சொல்லிடுங்க அத்தை என்று அவள் சம்மதத்தை அவன் மறைமுகமாக கூறினான் அவன்.

 

 

“சரிங்க மாப்பிள்ளை, நீங்க அம்மாகிட்ட கலந்து பேசிட்டு சொல்லுங்க என்று அவரும் பதிலுக்கு சொல்லிவிட்டு போனை வைத்தார். ‘சரியான ஆளு தான் அவ, பதில் என்னன்னு என்கிட்ட கேட்க சொல்லியிருக்க.

 

 

‘ஒருவேளை என்னை தேடியிருப்பாளோ, அதை நேரடியா வெளிபடுத்த முடியாம இப்படி அவங்க அம்மா மூலமா பேசவைச்சு இருக்கான்னு நினைக்கிறேன் என்று அவனே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டான். வேக வேகமா அவன் கைபேசியில் இருந்து அவளுக்கு தகவல் அனுப்பினான்.

 

 

“சாரி அபி ரொம்ப தாமதமா உனக்கு தகவல் அனுப்புறதுக்கு, ரொம்ப சந்தோசத்துல இருந்தேன். அதான் என்னை மறந்து இருந்துட்டேன். ரொம்ப நேரம் எனக்காக காத்திட்டு இருந்தியா– வைபவ்

 

 

“……………..

 

 

“ரொம்ப கோவமா இருக்க மாதிரி தெரியுது, தப்பு என்னோடது தான். அந்த கடிதத்தை பலமுறை திரும்ப திரும்ப படிச்சுட்டே இருந்தேன். அதுல தான் நான் எல்லாமே சுத்தமா மறந்துட்டேன். அம்மாகூட ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருந்தாங்க போல. நான் ஒரு வழியா சுய நினைவுக்கு வந்து அப்புறம் தான் கதவை திறந்தேன். இதுக்கு இடையில் அத்தை வேற போன் பண்ணியிருந்தாங்க– வைபவ்

 

 

“ஹா…ஹா…ஹா…

 

 

“சிரிக்கிறீங்களா

 

 

“இல்லை அழுகுறேன்

 

 

“சரி என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க, என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லவே இல்லையே என்று தேவையில்லாத ஒரு வம்பை கட்டி இழுத்தான் வைபவ்.

 

 

“ஓ… அப்படியா… வேணுமின்னா ஒரு ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க நான் சொல்றேன்…

 

 

‘இது உனக்கு தேவையா என்று அவனை நோக்கி அவனே கையை நீட்டி கேட்டுக் கொண்டான். “ரெண்டு நாள் அவகாசமா மறுபடியுமா… அய்யோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை. இனி இப்படி கேட்கவே மாட்டேன். நான் நிச்சயத்துக்கு நாள் குறிக்க ஜோசியரை பார்க்க போகணும், போயிட்டு வந்து தொடர்றேன்

 

 

‘அப்பாடா தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளிடம் விடைபெற்றான் வைபவ். “ஹ்ம்ம்…சரி… இருந்தாலும் ஒரு ரெண்டு நாள் அவகாசம்…

 

 

“வேணாம்… ப்ளீஸ் இனி கேட்க மாட்டேன் என்று அலறாத குறையாக மீண்டும் அவளுக்கு தகவல் அனுப்பினான்.

 

 

“ஹா…ஹா…ஹா… சரி தப்பிச்சு போங்க… bye

 

 

ஜோசியர் வரும் வெள்ளிகிழமை ஒரு நல்ல தேதி இருப்பதாகவும், அதை விட்டால் இரண்டு மாதம் கழித்தே அவர்கள் இருவருக்கும் பொருந்தும் தேதி இருப்பதாகக் கூற சாந்தி கற்பகத்திற்கு போன் செய்து கேட்க அவர்  வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

 

 

சாந்தியும் அதே தேதியை மனதில் நினைத்திருக்க அந்த தேதியை உறுதி செய்துக் கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கினர். எல்லோருக்கும் சொல்லி பெரிதாக செய்ய விரும்பவில்லை இருவீட்டினரும்.

 

 

அவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓரிரு முக்கியமானவர்கள் மட்டுமே திருமண உறுதிக்கு அழைத்தனர். புதன்கிழமை நல்ல நாளாக இருந்ததால் அன்றே புடவை எடுக்க கடைக்கு சென்றனர்.

 

 

அபியின் வீட்டினர் நேரே கடைக்கு வந்துவிடுவதாகக் கூற, கல்யாணின் காரிலேயே மற்றவர்கள் கிளம்பினர். திநகர் நல்லி சில்க்ஸ் கடைக்குள் நுழைந்தனர்.

 

 

கடைக்காரர் விதவிதமாக புடவைகளை எடுத்து போட பிடித்ததாக நான்கு புடவைகளை எடுத்து வைத்து ஒவ்வொன்றாக அவள் மேல் வைத்து அழகு பார்க்க மூன்றாவதாக அவள் மேல் போட்டுக் காண்பித்த மயில் கழுத்து நிற சேலையை வைபவ் திருப்தியாக பார்த்தான்.

 

 

அபிக்கும் அதுவே பிடித்துவிட எல்லோரும் ஒருமனதாகவே புடவையை தேர்ந்துடுத்து முடித்தனர். அதையெல்லாம் பார்க்கும் போது கல்யாணுக்குள் சிறு ஏக்கம் எட்டிப்பார்த்தது.

 

 

தான் இது போல சிறு சிறு சந்தோசங்களை இழந்து விட்டோம் என்று அவனுக்குள் பெரும் ஏக்கம் வந்தது. ஒருவேளை இருவரும் சந்தோசமாக வாழ்ந்திருந்தால் அந்த ஏக்கம் அவனுக்குள் இல்லாதிருந்திருக்குமோ என்னவோ(?)

கார்த்தியை பற்றிய எண்ணம் வந்ததும், முதலில் ஒரு சந்தோசம், பின்பு இயலாமையாகி கோபமாக அவனுக்குள் ஒரு நெருப்பு கனன்றது. கல்யாணின் முகம் மாறியிருப்பதை கண்டு வைபவ் அவனருகில் வந்து மனதை மாற்றும் வண்ணம் வேறு பேச்சை ஆரம்பித்தான்.

 

 

“கல்யாண் இந்த சரயு என்ன தான் ஆனா, உன் கல்யாணத்துக்கு அவ இருந்த மாதிரி என் கல்யாணத்துக்கும் அவ இருக்கணும். எங்க எப்படி இருக்காளோ, அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ, குழந்தை குடும்பம்ன்னு செட்டில் ஆகியிருப்பாளோ, அதான் நம்மை மறந்துட்டாளா என்றான் வைபவ்.

 

 

“நிச்சயம் இருக்காது வைபவ், அவ ஏன் நம்மை மீண்டும் தொடர்பு கொள்ளலைன்னு எனக்கு தெரியலை. நீ வேணா பாரேன் அவ நிச்சயம் உன் கல்யாணத்துக்கு வருவா, அது போல நாம இல்லாமலும் அவளோட கல்யாணம் நடக்காதுன்னு தான் எனக்கு தோணுது என்றான் கல்யாண்.

 

 

“நீ சொல்ற மாதிரி நடந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் என்றான் வைபவ். “சரி வா எல்லாம் முடிஞ்சுருச்சுல நாம சாப்பிட்டு கிளம்பலாம் என்றான் கல்யாண். எல்லோருமாக ஒன்றாக சென்று ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினர்.

 

 

இன்னும் இரு தினங்களில் நிச்சயதார்த்தம் என்பதால் வீடே பரபரப்பாக இருந்தது. மாதவி அவர் பங்குக்கு தேவையானதை வாங்குவதும் போவதுமாக இரு வீட்டினரும் வேலைகளை பகிர்ந்து செய்தனர். கல்யாண் எதையோ இழந்தது போல் இருப்பதை மாதவி ஒரு வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

வெள்ளிக்கிழமை அதிகாலை பொழுது அழகாக புலர்ந்தது. பெண் வீடும் மாப்பிள்ளை வீடும் பரபரப்பாக இயங்கியது. சாப்பாட்டிற்கு அவர்கள் எப்போதும் சொல்லும் அன்னை மெஸ்ஸிலேயே சொல்லியிருந்தான் கல்யாண்.

 

 

அன்னை மெஸ்ஸிற்கு போன் செய்து எல்லாம் சரியாக பெண் வீட்டிற்கு வந்து இறக்கிவிடுமாறு கூறிவிட்டு அவனும் கிளம்பிக் கொண்டிருந்தான். குளித்து வேறு உடைக்கு மாறியவன் தயாராகி வெளியில் வந்தான்.

 

 

“என்னம்மா கிளம்பலாமா, ராம் எங்க என்றான் கல்யாண். “ராம் அவனோட பிரிண்ட் ஒருத்தனை பார்க்க போயிருக்கான், பார்த்துட்டு அவனோட பைக்கிலேயே வந்துடுறேன்னு சொல்லிட்டான் கல்யாண். நாம ரெண்டு பேர் மட்டும் தான் வா கிளம்பலாம் என்றார் அவர்.

“என்னம்மா அவன் நிச்சயத்தை வைச்சுக்கிட்டு அவன்பாட்டுக்கு பிரிண்ட் பார்த்துட்டு வர்றேன் சொல்லிட்டு போயிருக்கான், நீங்களும் சரின்னு அனுப்பி வைச்சு இருக்கீங்க என்று அவரிடம் லேசாக கடிந்து விட்டு அவன் காரை எடுக்கச் சென்றான்.

 

_____________________

 

 

“கார்த்தி… சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு. நாம ஒரு இடத்துக்கு போகணும் என்று சோபாவில் சாவதானமாக அமர்ந்திருந்த மகளை நோக்கி கூறினார் இந்திரா. “என்னம்மா எங்க போகணும் நீங்க இப்போ தான் சொல்றீங்க என்றாள் அவள்.

 

 

“கார்த்திம்மா அவங்க அம்மாவோட சொந்தம்டா, உங்கப்பா இருந்தா அனுப்பமாட்டார். நல்லவேளையா உங்க அண்ணனும் அப்பாவும் நேத்தே ஊருக்கு கிளம்பி போயிருக்காங்க. எனக்காக நீ வாடா என் தங்கம் என்றார் இந்திரா.

 

 

“சரிம்மா வர்றேன், சொந்தகாரங்கன்னு சொல்றீங்க நாங்க பார்த்தே இல்லையே என்றாள் அவள். “உங்கப்பாவுக்கு அவங்களை எல்லாம் பிடிக்காது, அதுனால அவங்க இங்க வர்றது இல்லைம்மா என்றார் அவர்.

 

 

“ஆமா எங்கம்மா உன் செல்லப்பிள்ளை நிர்மல் அவன் கண்டிப்பா உன் பின்னாடியே வருவானே. எங்க போய்ட்டான் அவன் என்றாள் அவள். “நிர்மல் அப்புறமா கார் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான்மா, நீ சீக்கிரம் கிளம்புடா, நேரமாகுது என்று பரபரத்தார் அவள் அன்னை. “சரி சரி கிளம்புறேன் என்று அவள் அறைக்கு சென்றாள் அவள்.

 

 

சிறிது நேரம் கழித்து அவள் அறைக்கு சென்றவர், “என்னம்மா இது பட்டுப்புடவை எடுத்துக்கட்டுடா. அப்படியே இந்த நகை எல்லாம் எடுத்து போட்டுக்கோ என்றார் இந்திரா.

 

 

“அம்மா ஏம்மா இப்படி என் உயிரை வாங்குறீங்க, எனக்கு இந்த புடவை தான் ஓகேவா இருக்கு, ப்ளீஸ்ம்மா நான் இதே கட்டிக்குறேன் என்றாள் கார்த்திகா. “கார்த்திம்மா அம்மாக்காக கட்டுடா அப்படியே அந்த நகையும் போட்டுட்டு சீக்கிரம் வாடா நேரமாகுது என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக சொல்லிவிட்டு அவர் வெளியில் சென்று விட்டார்.

 

 

ஒருவழியாக தயாராகி வந்தவளை அழைத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தார். “என்னம்மா கார் போகலாம் எதுக்கு இப்படி நடத்தியே கூட்டிட்டு போறீங்க என்றாள் அவள்.

 

 

“நாம நடந்து எல்லாம் போகலை, ஆட்டோவில் தான் போகப்போறோம். நீ தயவு செய்து கொஞ்சம் பேசாம வாம்மா என்று அவளை அழைத்துக் கொண்டு ஏற்கனவே தயாராக நின்றிருந்த ஆட்டோவில் ஏறினார் அவர்.

 

____________________

 

 

“அம்மா இப்போ எதுக்கு இந்த வழியா போகச் சொல்றீங்க என்று மூன்றாம் முறையாக கேட்டுவிட்டான் கல்யாண். “அதான் சொன்னேனேப்பா ஒரு பொருள் வாங்க மறந்துட்டேன்னு என்று அவரும் பதில் சொன்னார்.

 

 

“நீங்க அப்படி மறக்கறவங்க இல்லைன்னு எனக்கு தெரியும் சொல்லுங்கம்மா என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மாதவியின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசியவர் “ஹ்ம்ம் கிளம்பியாச்சா, நாங்க வந்துட்டே இருக்கோம். ஒரு அஞ்சு நிமிஷத்தில அங்க இருப்போம்… சரி… சரி… சரி…ஹ்ம்ம் என்று பேசிவிட்டு அவர் வைத்துவிட்டார்.

 

 

“யாரும்மா உன்கிட்ட வழி கேக்குறாங்களா???. “இல்லைப்பா தெரிஞ்சவங்க என்றதற்கு மேல் அவர் எதுவும் சொல்லவில்லை. ‘என்னாச்சு இந்த அம்மாவுக்கு எதையோ மறைக்குறாங்க என்று நினைத்துக் கொண்டவன் மேலும் எதுவும் பேசாமல் காரை செலுத்தினான்.

 

 

“கல்யாண் இங்க கொஞ்சம் நிறுத்துப்பா என்று அவர் கூறியதும் நிறுத்திவிட்டு அவரை திரும்பி நோக்கினான். அவரோ எதுவும் பேசாமல் இறங்கி கிழே நின்று யாரையோ தேடுவது போல் பார்வையை அங்குமிங்கும் துழாவினார்.

 

 

‘யாரை தேடுறாங்க என்று நினைத்துக் கொண்டே காரில் இருந்து இறங்கியவன் கண்களில் கார்த்தியும் அவள் அன்னை இந்திராவும் பட சில்லென்று குளிர்ந்த இதயம் அடுத்த நிமிடம் சூடானது கோபத்தில். பல்லைக் கடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றான்.

 

 

கார்த்தியோ அவள் அன்னையை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருந்தாள். ஆட்டோவை விட்டு இறங்கியதும் சொல்லுகிறேன் என்று அவர் கூறியிருக்க இறங்கியதும் அவள் அந்த கேள்வியை கேட்டாள்.

 

 

“நாம இப்போ வைபவ் தம்பியோட நிச்சயதார்த்தத்துக்கு தான் போறோம் என்றார் இந்திரா. “அம்மா என்னம்மா விளையாடுறீங்களா, எனக்கு வேண்டாதவங்க விஷேசத்துக்கு நாம ஏன் போகணும். நீங்க நம்ம சொந்தம்ன்னு தானே சொல்லி கூட்டிட்டு வந்தீங்க என்று அன்னையின் மேல் பாய்ந்தாள்.

 

 

“இப்போ என்ன நடந்து போச்சு நீ இந்த குதி குதிக்கிற, அந்த தம்பி யாரு நம்ம மாப்பிள்ளைக்கு உறவு போல தானே இருக்கார். அப்போ அவர் நமக்கு சொந்தம் சொன்னதுல என்ன தப்பு என்றார் இந்திரா பதிலுக்கு.

 

 

“அம்மா அதுக்காகவெல்லாம் யாரும் கூப்பிடாம நாம எப்படிம்மா போக முடியும் என்றாள் அவள். “உனக்கும் மாப்பிள்ளைக்கும் நீங்க கேட்டா அந்த வைபவ் தம்பி கல்யாணம் பண்ணி வைச்சாங்க. உங்களுக்காக பார்த்து பார்த்து செஞ்சவருக்கு இன்னைக்கு நிச்சயம் அதுக்கு நீ வரமாட்டியா என்றார் அவர் பதிலுக்கு.

 

 

அவர் வார்த்தையில் அவள் நிதானமடைந்தாலும் “அவராவது ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல என்றாள் ஒரு வருத்தத்துடன். “அவர் யாரு உனக்கு??? உன் புருஷன் தானே, அவர் உனக்கு சொல்லணுமா???

 

 

“நான் வேற குடும்பம் அதுனால எனக்கு சொன்னாங்க, உனக்கு ஏன் சொல்லணும்??? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் வைபவ் தம்பியோட நிச்சயத்தை முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கணும். அதுனால நீ பேசாம வா என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தார்.

 

 

அதற்குள் மாதவி காரில் இருந்து கீழே இறங்கி இருந்த மகனை பார்த்தார். “அம்மா இதுக்கு தான் இங்க நிறுத்த சொன்னீங்களா என்றான் அவன்.

 

 

“கல்யாண் தயவு செய்து எதுவும் சொல்லாதேப்பா நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து வரணும்ங்கறது தான் எங்க எல்லார் விருப்பமும், வைபவ் விருப்பமும் அது தான் என்றார் அவர்.

 

 

“நான் எதுவும் சொல்லலை என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். கார்த்தியும் அவள் அன்னை இந்திராவும் காருக்கு அருகில் வந்ததும் சம்பிரதாயமாக விசாரித்து கொண்டனர். கல்யாணும் மாமியாரிடம் நலம் விசாரித்துக் கொண்டான்

 

 

கல்யாண் கார்த்தியை பார்த்து எதுவும் பேசாமலே நின்றான். மாதவி தான் “கார்த்திம்மா நீ முன்னாடி ஏறிக்கோ நாங்க பின்னாடி உட்கார்ந்துக்கறோம் என்றுவிட்டு இந்திராவும் அவரும் பின்னாடி ஏறிக்கொண்டனர்.

 

 

கல்யாண் காரில் ஏறி அமர்ந்தான், “அம்மா கிளம்பலாமா??? என்றவன் அவர் இம்மென்றதும் காரை கிளப்பினான்.

 

 

‘எப்படி இருக்கன்னு கேட்டா என்ன??? என்று அவள் அவனை பார்த்து மனதிற்குள் குமைந்தாள்.

 

 

‘ஏன் நான் எப்படி இருக்கேன்னு நீ கேட்டா என்னவாம்???– கல்யாண்

 

 

‘என்னை சுத்தமா மறந்து போயிட்டீங்களா???– கார்த்திகா

 

 

‘மறந்தது நான் இல்லை நீ தான்!!! என்று நினைத்த கல்யாண் ச்சே என்றவாறே பார்வையை சாலையின் பக்கம் திருப்பினான்.

 

 

இருவரும் பேசாமல் அமைதியாய் வருவதை பார்த்த மாதவி இருவருக்குள்ளும் பேச்சை ஆரம்பிக்கும் பொருட்டு “ஏன் தம்பி மருமககிட்ட நீ எப்படி இருக்கன்னு கூடவா ஒரு வார்த்தை கேட்க மாட்ட???. இப்படி பேசாம வந்தா என்னப்பா அர்த்தம் என்று மகனை கேட்டார்.

 

 

“ஏம்மா அந்த கேள்வியை உங்க மருமகளையும் பார்த்து கேட்க வேண்டியது தானே, என்னை மட்டும் கேட்டா எப்படி??? என்றான் அவன் வீம்பாக.

 

 

“ஏன் எப்பவும் நீங்க தானே கேட்பீங்க??? இப்போ மட்டும் கேட்டா என்னவாம்??? என்று மனதில் நினைத்ததை வெளியில் கேட்டுவிட்டாள் அவள். “ஓ நான் தான் எப்பவும் உன்னை விசாரிக்கணும், நான் உன் கால்ல வந்து விழணும்ன்னு நினைக்கிறியா??? என்றான் அவன்.

 

 

“அப்போ நான் உங்க கால்ல விழணும்ன்னு நினைக்கிறீங்களா??? என்றாள் அவள். “நான் அப்படி என்னைக்குமே சொன்னது கிடையாது என்றான் அவன். “அப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க??? என்றாள் அவள்.

 

 

“இங்க பாரு இப்போ உன்கிட்ட சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை, ஒரு நல்ல காரியத்துக்கு போய்கிட்டு இருக்கோம். நம்மளை மாதிரி இல்லாம அவனாச்சும் நல்லபடியா அவன் வாழ்க்கையை தொடங்கணும். இதே மனநிலைல போனா நல்லாவா இருக்கும் என்றான் அவன்.

“இப்போ நான் என்ன பண்ணணும்ன்னு நினைக்கிறீங்க??? என்றாள் அவள். “இந்த நல்ல காரியம் நல்லபடியா நடக்கணும்ன்னு உன் மனசுல நினைப்பிருந்தா பேசாம வா, இல்லை இப்படியே இறங்கி போ என்றான் அவன் சற்று காரமாகவே. பேசியதுடன் நில்லாமல் காரை நிறுத்தியும் விட்டான்.

 

 

பேச்சு வேறு திசைக்கு போவதை உணர்ந்த கல்யாணின் அன்னை மாதவி கல்யாணை அமைதியாக இருக்குமாறு அடக்கினார். கோபத்தில் கார் கதவை திறக்க போனவளை இந்திரா தான் தடுத்து நிறுத்தினார். அன்னையும் மாமியாரும் சமாதானப்படுத்தியதில் இருவரும் சற்று அமைதியடைந்தனர்.

 

 

அதன்பின் காரை எடுத்தவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஒருவழியாக பெண் வீட்டிற்கு வந்து காரை நிறுத்த காரில் இருந்து இறங்கியவர்களை கண்டதும் ஒருவித சந்தோசத்துடன் ஓடி வந்து வரவேற்றான் வைபவ்.

 

 

வைபவும் அவன் குடும்பத்தினருடன் அவர்களும் அப்போது தான் வந்து இறங்கியிருந்தனர். காரில் இருந்து இறங்கிய கார்த்தியை கண்டதும் சந்தோசத்துடன் அவள் அருகில் சென்று நலம் விசாரித்தான் அவன்.

 

 

“எப்படி இருக்க கார்த்தி, நீ வரமாட்டான்னு நினைச்சு பயந்துட்டேன். இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நிச்சயம் மட்டும் இல்லாம கல்யாணத்தையும் நடத்திக் கொடுக்கணும் என்றான் உள்ளார்ந்த அன்புடன். “கண்டிப்பா நாங்க நடத்தி கொடுப்போம் என்றான் கல்யாண் அவளை பார்த்துக் கொண்டே.

 

 

‘இதை கூட இவ சொல்ல மாட்டாளா என்று ஒரு கோபமும் அவனுக்குள் எழுந்தது. “ஹாய் அண்ணி எப்படி இருக்கீங்க, கல்யாணம் பாரேன் எங்க அண்ணியை ரொம்ப அழகாகிட்டாங்க, கல்யாணம் ஆனா புதுசுல கொஞ்சம் ஒல்லியா இருந்தாங்க, இப்போ கன்னமெல்லாம் வைச்சு உடம்பு லேசா பூசி பார்க்க சூப்பரா இருக்காங்க இல்ல என்றாள் நந்து.

 

 

மேலும் “எப்படி அண்ணி இப்படி ஆகிட்டீங்க, ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி, ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என்று பாடினாள். நந்துவின் பேச்சில் அருகே நின்றிருந்த மனைவியை அன்று தான் புதிதாக பார்ப்பவன் போல் பார்த்து வைத்தான் அவன். “நீயும் தான் நந்து சூப்பரா இருக்கே என்றாள் கார்த்திகா.

 

 

‘ஆமா அழகாகிட்டா என்று பெருமையுடன் அவன் பார்ப்பதை கண்டும் காணாதவளாக கண்டவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. ‘என்னடா இது இவளுக்கு வெட்கப்படவும் வருது, எதுக்கு இப்படி என்னை இம்சை பண்றா என்று மனதிற்குள் குமைந்தவனுக்கு மீண்டும் இயலாமையும் கோபமும் எழுந்தது.

 

 

வைபவின் அன்னையும் கார்த்திகாவை வந்து அன்புடன் நலம் விசாரிக்க அவளும் இன்முகத்துடன் அவர்களுடன் இணைந்து பேசினாள். ‘எல்லார்கிட்டயும் நல்லாவே பேசுறா, வைபவ்கிட்ட கூட இப்போ ஒழுங்கா தானே பேசுனா, என்னை பார்த்தா மட்டும் எப்படி தெரியுது இவளுக்கு என்று அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

 

 

வாசலுக்கே வந்து வரவேற்றனர் அபியின் தந்தை வைத்தியநாதனும் அன்னை கற்பகமும். “வாங்க வாங்க எல்லாரும் உள்ள வாங்க என்று சந்தனமும் பூவும் கொடுத்து வரவேற்றனர்.

 

 

கற்பகம் கார்த்தியை நோக்க “இவ தான் என்னோட மருமக கார்த்திகா, கல்யாணோட மனைவி என்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

 

“இவங்க அன்னைக்கு பொண்ணு பார்க்க வரலைல அதான் தெரியலை என்றார் கற்பகம். “அன்னைக்கு அவளுக்கு அப்போ தேர்வு இருந்ததுனால தான் வரலை, சரி வாங்க எல்லாரும் உள்ளே போவோம் என்றுவிட்டு உள்ளே சென்றார் மாதவி.

 

 

நந்துவோ கார்த்திகாவை நெருங்கி “அண்ணி வாங்க நாம போய் அபி அண்ணியை பார்க்க போகலாம் என்று அவளை இழுத்துக் கொண்டு அபியின் அறைக்கு சென்றாள்.

 

 

“ஹாய் அண்ணி இவங்க யாருன்னு தெரியுமா கல்யாண் அண்ணாவோட மனைவி கார்த்திகா. எங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் தோழர்கள் மாதிரி நீங்க ரெண்டு பேரும் நெருங்கிய தோழிகளா ஆகணும். அதான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தேன் என்று அபியை பார்த்து ஆரம்பித்தவள் கார்த்தியை பார்த்து முடித்தாள்.

 

 

அபி அவளுக்கு கைகொடுக்க இருவரும் கைக்குலுக்கி கொண்டனர். “அண்ணி நீங்க பேசிட்டு இருங்க இதோ வந்திடறேன் என்று நந்து வெளியில் சென்று விட்டாள்.

 

 

அபி கார்த்தியை நோக்கி “எப்படி இருக்கீங்க என்பதாய் சைகையில் கேட்க “நல்லாயிருக்கேன் என்றாள் அவள் பதிலுக்கு வாய்மொழியில், இருந்தும் மனதில் ஒரு ஓரத்தில் ‘இவள் ஏன் வாயை திறந்து கேட்க மாட்டாளா பெரிய மகாராணியா ஜாடை காட்டுகிறாள் என்று நினைத்துக் கொண்டாள் கார்த்திகா.

 

 

“தேர்வு முடிந்துவிட்டதா, நன்றாக எழுதியிருக்கிறீர்களா என்று மீண்டும் அவள் சைகை மொழி பேச அவளும் பதிலுக்கு “நல்லா எழுதியிருக்கேன் என்றாள்.

 

 

அதற்குள் மீண்டும் நந்து வந்து விட கார்த்திகா நந்துவின் காதை கடித்தாள் “நந்து அவங்க வாயை திறந்து பேசமாட்டாங்களா, எல்லாமே சைகையிலேயே கேட்குறாங்க என்றாள் அவள்.

 

 

“அண்ணி சாரி அண்ணி சொல்ல மறந்துட்டேன், அபி அண்ணி deaf and dump என்றாள் நந்து. அதை கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற கார்த்திக்கு அபியை பார்த்தும் வைபவை நினைத்தும் பெருமையாக இருந்தது. இப்படிபட்ட ஒருத்தனுக்கு தன் கணவன் நண்பன் என்பதில் ஒரு பெருமிதமும் வந்தது அவளுக்கு.

 

 

அபியை பார்த்து சைகையிலேயே ஏதோ சொல்ல முனைந்தாள் கார்த்திகா, நந்துவோ “அண்ணி நீங்க அபி அண்ணிகிட்ட எது சொல்றதா இருந்தாலும் நேரா பார்த்து சொல்லுங்க அவங்க உதட்டசைவை வைத்து புரிஞ்சுக்குவாங்க என்றாள் அவள்.

 

 

“அபி என்னை மன்னிப்பீங்களா என்றாள் கார்த்திகா, ‘என்ன என்பது போல் பார்த்தாள் “நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன், வாயை திறந்து பேசமாட்டீங்களா, பெரிய மகாரா…. என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தினாள் அபி.

 

 

வேகமாக ஒரு காகிதம் எடுத்து எழுதியவள் அதை அவளிடம் கொடுத்தாள், “விடுங்க கார்த்தி, நான் உங்களை தப்பா நினைக்கலை. நீங்க இப்படி இயல்பா பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நமக்குள்ள எதுக்கு மன்னிப்பெல்லாம். நாம நல்ல தோழமையோட இருப்போம் என்று எழுதியிருந்தாள் அபி.

 

 

கார்த்திகாவுக்கு ஒரு நல்ல நட்பு கிடைத்ததில் உண்டான சந்தோசத்தில் அபியை அணைத்துக் கொண்டாள், பின் “பிரிண்ட்ஸ் என்று சொல்லி அவள் கைகொடுக்க அபியும் அவளுக்கு கைக்கொடுத்தாள்

 

 

அபியை அழைத்து வருமாறு கூற அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் கார்த்திகா. கூடத்திற்கு வந்த அபி எல்லோருக்கும் நமஸ்கரித்து வணங்கினாள். ஐயர் திருமண உறுதி பத்திரத்தை படிக்க, முஹுர்த்த தேதியை அன்றே குறித்து பத்திரத்தை மாற்றிக் கொண்டனர்.

 

 

கல்யாணும் கார்த்திகாவும் முன்னின்று அபியின் அன்னை தந்தையிடம்  தாம்பூலத் தட்டை மாற்றிக் கொண்டனர். புடவை தட்டை எல்லோருக்கும் நமஸ்கரித்து அபி வாங்கிக் கொள்ள கார்த்திகாவும் அவளுடன் சென்றாள்.

 

 

அவளே அபிக்கு நேர்த்தியாக புடவையை கட்டிவிட்டாள். ‘என்னமோ குறையுதே என்று நினைத்தவள் அவள் கைப்பையை திறந்து ஏதோதோ எடுத்தவள் அபி தடுக்க தடுக்க அவளை அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அவளை தயார் படுத்தினாள்.

 

 

அவளை திருப்பி கண்ணாடியில் காண்பித்தாள், “இப்போ பாரு எப்படி இருக்குன்னு, அழகான கண்ணு உனக்கு. அதுல ஒரு மை கூட போடாம வைச்சு இருக்க, இப்போ எப்படி இருக்கு எனக்கே உன்னை பார்க்கும் போது எப்படி இருக்கு தெரியுமா என்று சொல்லி திருஷ்டி கழித்து கன்னத்தின் ஓரத்தில் திருஷ்டிக்காக மை போட்டு வைத்தாள்.

 

 

அவளை கூடத்திற்கு அவளே அழைத்து வர நண்பர்கள் இருவரும் தத்தம் இணைகளை இமைக்காது பார்த்தனர். “என்னடா இது என் பொண்டாட்டி உன் பொண்டாட்டியை இப்படி மாத்தி கூட்டிட்டு வந்திருக்கா என்றான் கல்யாண் வைபவின் காதில்.

 

 

“நானும் அதை தான் பார்க்குறேன், அழகா இருக்கால என்றான் வைபவ். “என் தங்கச்சி எப்போவும் அழகு தான் என்றான் கல்யாண். ‘இது எப்போ இருந்துடா என்று திரும்பி நண்பனை பார்த்தான் வைபவ்.

 

 

 

திருமண உறுதி நல்லபடியாக முடிந்ததும் எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர், சாப்பிட்டு முடியும் தருவாயில் கார்த்திகாவின் தம்பி நிர்மல் வந்து சேர்ந்தான். “என்ன நிர்மல் என்னுடைய நிச்சயத்துக்கு நீ இப்போ தான் வர்றதா என்றான் வைபவ்.

 

 

“அய்யோ தப்பா நினைக்காதீங்க அப்பாவும் அண்ணாவும் ஊர்ல இல்லை அதான் ஆபீஸ்க்கு போய் பார்த்திட்டு நேரே இங்க வர்றேன் என்ற நிர்மலை உள்ளே அழைத்துச் சென்றான் வைபவ்.

 

 

“எப்படியிருக்கீங்க மாமா என்றான் நிர்மல் கல்யாணை பார்த்து, “ஏன் நிர்மல் உனக்கு மாமா நினைப்பு இப்போ தான் வருதா, உங்கக்கா தான் என்னை மறந்து இருக்கா நீயுமா என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

 

 

“அப்படிலாம் இல்லை மாமா, என்னை பார்த்தா உங்களுக்கு அக்கா ஞாபகம் தான் வரும். அதான் நான் வர்றது இல்லை மாமா, மத்தபடி நானும் அம்மாவும் உங்களை பத்தி பேசாம இருக்க மாட்டோம் என்றான் அவன்.

 

 

வைபவ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து தவித்துக் கொண்டிருந்தான், அபியிடம் போய் பேசவேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. கல்யாணின் அன்னை மாதவி லேசாக அபியின் அன்னையிடம் பேச்சு கொடுத்தார்.

 

 

“மாப்பிள்ளையும் பெண்ணும் பேசுறதுனா போய் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வரட்டும். அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல என்றார் அவர். கற்பகமோ “இல்லை அது வந்து தனியா எப்படி??? அன்னைக்கு பொண்ணுகிட்ட சம்மதம் கேட்க பேசுனாங்க. ஆனா இப்போ எல்லாரும் ஏதாவது சொல்லுவாங்களோ??? என்று இழுத்தார் அவர்.

 

 

“சரி ஒண்ணு செய்வோம் கல்யாணும் கார்த்திகாவும் அவங்க கூட போகட்டும். நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பேசுறாங்கன்னு சொல்லிடலாம் தானே என்று பேச்சை முடித்தார் மாதவி. கற்பகத்திற்கும் அதுவே சரியென்று பட்டது.

 

 

அபி வீட்டு மொட்டை மாடியில் பந்தல் போடப்பட்டிருந்தது. இரண்டு ஜோடிகளும் படியேறிச் சென்றனர். இரு ஜோடிகளும் என்ன பேசுவார்கள் அடுத்த பதிவில்…

 

 

Advertisement