Advertisement

அத்தியாயம் –11

 

 

கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க அவர் பதில் கூறத் தொடங்கினார்.

 

 

“ஆமா கற்பகம் நல்லா விசாரிச்சுட்டேன், பூரண திருப்தியா இருக்கு. அந்த தம்பி அவரை பத்தி சொன்ன எல்லா தகவலுமே உண்மை தான். அவர் குடும்பத்து மேல மட்டும் அன்பு வைக்கலை. அவரோட நண்பர்கள் மேலயும் அவர் உயிரா இருக்க ஒரு நல்ல மனுஷன்

 

 

“இப்படி எல்லார்மேலயும் அன்பா இருக்கற ஒருத்தர் கண்டிப்பா நம்ம பொண்ணையும் நல்லா வைச்சு பார்த்துக்குவார் என்று மனமார தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் வைத்தியநாதன்.

 

 

“அப்போ ஒரு நல்ல நாள் பார்த்து அவங்களை பெண் பார்க்க வரச் சொல்லிடலாம் தானே என்றார் கற்பகம். “ஆமா கற்பகம் உடனே அவங்ககிட்ட பேசிடலாம், சீக்கிரமே அவங்களை பெண் பார்க்க வரச் சொல்லலாம் என்றவர் சற்று நிறுத்தி “நம்ம நந்தனுக்கும், விமலாவுக்கு சொல்லி வரச் சொல்லலாமா என்றார் அவர்.

 

 

“நீங்க புரிஞ்சு தான் பேசறீங்களா, அவங்க ரெண்டு பேரும் அவங்கவங்க வாழ்க்கை தான் முக்கியம்ன்னு போய்ட்டாங்க. நாம ஏன் அவங்களை இந்த நல்ல காரியத்துக்கு கூப்பிடணும்.

 

 

“கல்யாணம் நிச்சயம் பண்ணும் போது அவங்ககிட்ட சொல்லிக்கலாம். இப்போ அவங்க அவசியம் இல்லைஎன்றுவிட்டு அவர் வைபவ் வீட்டிற்கு போன் செய்ய சென்று விட்டார்.

 

 

“ஹலோ, நான் கற்பகம் பேசறேன். அபியோட அம்மா என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள “சொல்லுங்கம்மா நான் வைபவ் தான் பேசறேன் என்றான் அவன் எதிர்முனையில்.

 

 

“வந்து வீட்டில பெரியவங்க இல்லையா, நான் அவங்ககிட்ட பேசலாமா என்றார் அவர். “ஒரு நிமிஷம் இருங்க நான் எங்க அம்மாகிட்ட போனை கொடுக்கிறேன் என்றுவிட்டு அவன் அன்னையிடம் போனை திணித்தான்.

 

 

“அம்மா அபியோட அம்மா பேசறாங்க, நான் சொன்னேன்ல அன்னைக்கு அவங்களை பார்த்து பேசினதை பத்தி. அவங்க அது விஷயமா தான் ஏதோ பேசப் போறாங்கன்னு நினைக்கிறேன். உங்ககிட்ட தான் பேசணுமாம், பேசுங்க என்று சொல்லி போனை கொடுத்தான்.

 

 

“ஹலோ நான் அபியோட அம்மா கற்பகம் பேசறேங்க, எப்படி இருக்கீங்க என்று சம்பிரதாயமாக ஆரம்பித்தார் அவர். “ரொம்ப நல்லா இருக்கோம், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. அபி எப்படி இருக்கா என்று சாந்தி அபியை விசாரித்தார்.

 

 

“அபி நல்லா இருக்கா, தம்பி உங்ககிட்ட சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் நாங்க ஜாதகம் எல்லாம் பார்த்திட்டோம், ரொம்பவே நல்லா பொருந்தியிருக்கு. ஒரு நல்ல நாள் பார்த்து நீங்க முறைப்படி பொண்ணு கேட்க வாங்க என்றார் அவர்.

 

 

“அவங்ககிட்ட இதெல்லாம் பேச முடியாதுன்னு தான் உங்ககிட்ட பேசறேன். அது தானே முறையும் கூட, தம்பி எதுவும் தப்பா எடுத்துக்க போறாங்க, நீங்க சொல்லிடுங்க என்றார் கற்பகம்.

 

 

“ரொம்ப சந்தோசம், நாங்களும் ஏற்கனவே ஜாதகம் எல்லாம் பார்த்திட்டோம். நல்லா அம்சமா பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டாங்க. நீங்கஒண்ணும் வருத்தப்பட வேண்டாம்.

 

 

“அவன் எதுவும் தப்பாக நினைக்க மாட்டான். நாங்கள் ஜோசியரை பார்த்து நல்ல நாள் குறிச்சுட்டு பெண் பார்க்க வருகிறோம். ஜோசியரை பார்த்துவிட்டு வந்ததும் உங்களுக்கு தேதி சொல்கிறோம் என்று மேலும் ஏதோ பேசிவிட்டு சாந்தி போனை அணைத்தார்.

 

 

கற்பகத்திடம் பேசிவிட்டு வைத்தவரின் முகம் மலர்ந்திருந்ததும் அவன் அன்னை பேசியது ஒன்றிரண்டு அவன் காதில் விழுந்திருந்ததில் நல்ல விஷயம் என்றே அவனுக்கு தோன்றியது. “அம்மா என்றழைத்தான்.

 

 

“தம்பி அவங்க நல்ல நாள் பார்த்து நம்மை பெண் கேட்டு வரச்சொல்லிட்டாங்க. நானும் மாதவியும் இன்னைக்கே போய் ஜோசியரை பார்த்து பெண் பார்க்க நாள் குறிச்சுட்டு வந்திடுறோம் என்றார் சாந்தி மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன்.

 

 

வைபவிற்கும் ஏதோ பறப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது. சாந்தியும் மாதவியும் ஜோசியரை பார்த்து விட்டு நல்ல நாள் குறித்துக் கொண்டு வந்தனர். “வைபவ் என்றழைத்தார் சாந்தி.

 

 

“சொல்லுங்கம்மா என்று அவர் முன் நின்றான் அவன். “தம்பி நாளைக்கே நாள் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. அதுனால நாம நாளைக்கே பெண் பார்க்க போறோம். நீ சம்மந்தி அம்மாவுக்கு போன் போட்டு கொடுப்பா. நான் அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்.

 

 

அதன்பின் அவன் அலைபேசியில் கற்பகத்திற்கு போன் போட்டுக் கொடுக்க சாந்தி விஷயத்தை அவரிடம் சொல்லி நேரமும் கூறிவிட்டு போனை வைத்தார். மாதவியும் வீட்டிற்கு வந்திருக்க இருவருமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

 

கல்யாணை போன் செய்து வைபவின் வீட்டிற்கு வரச்சொன்னார் மாதவி. கல்யாண் வைபவ் வீட்டிற்குள் நுழைய மூக்கு வேர்த்தார் போல் வந்து நின்றாள் நந்திதா.

 

 

“டேய் கல்யாணம் என்னடா அதிசயம் நீ வீட்டுக்கு வந்திருக்க!!! அம்மா அன்னைக்கு உன்னை கேட்ட கேள்விக்கு நீ ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வர மாட்டேன்னுல நான் நினைச்சேன்

 

 

“என் நினைப்பை பொய் ஆக்கிட்டியே கல்யாணம், பொய் ஆக்கிட்டியே, இது நியாயமா, தர்மமா, இது உனக்கு அடுக்குமா என்று அவனை அடுக்கடுக்காய் கேள்விக்கணைகள் தொடுத்து அயர வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

“ஏய் நந்து என்ன உனக்கு வர வர வாய் நீளுது, அண்ணன்னு மரியாதை இல்லாம பேசுற. போ… உள்ள போய் அண்ணனுக்கு காபி கொண்டுவா என்று மகளை விரட்டினார் சாந்தி. “சொல்லுங்கம்மா என்ன விஷயம் என்னை போன் போட்டு வரவைச்சு இருக்கீங்க என்றான் கல்யாண்.

 

 

‘எதுக்கு இவனை போன் பண்ணி வரச்சொல்லி இருக்காங்க என்று யோசித்தவாறே வைபவும் அங்கு வந்து அமர்ந்தான்.

 

 

“நாளைக்கே நாம அபி வீட்டுக்கு பெண் பார்க்க போறோம். அதுக்கு சிலது எல்லாம் வாங்க வேண்டி இருக்கு, மாப்பிள்ளையே எல்லாதுக்கும் அனுப்ப முடியுமா. அதான்பா உன்னை வரச் சொன்னேன் என்றார் மாதவி.

 

 

“அம்மா என்னம்மா நீங்க இந்த காலத்துல போய் இப்படி எல்லாம் பேசிட்டு, உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொன்னா நான் போய் வாங்கிட்டு வர மாட்டேனா. பாவம் வேலையை விட்டு அவனை வர வைச்சு இருக்கீங்க என்று சலித்தான் வைபவ்.

 

 

“சரிப்பா நீ வருத்தப்படாதே, நீங்க ரெண்டு பேருமா போய் இதுல இருக்கற எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று அவர்களிடம் ஒரு தாளை நீட்டினார் வைபவின் அன்னை சாந்தி.

 

 

கல்யாண் வைபவை அவன் வண்டியில் ஏற்றிக் கொள்ள இருவருமாக அன்னையர் அவர்களுக்கு இட்ட பணியை நிறைவேற்றக் கிளம்பினர். வைபவ் ஏதோ யோசனையுடனே இருப்பது போல் தோன்றியது கல்யாணுக்கு.

 

 

“வைபவ் என்னாச்சு என்ன யோசனை உனக்கு. அவங்க தான் உன்னை பெண் பார்க்க வரச் சொல்லிட்டாங்கல. அப்புறமும் ஏன் கவலையா இருக்க மாதிரி தெரியற என்றான் கல்யாண்.

 

 

“அது இல்லை கல்யாண், நான் தான் அபியை பெண் பார்க்க வர்றேன்னு அவளுக்கு தெரியுமான்னு தான் யோசனை பண்றேன். ஒரு வேளை நான்னு தெரியாம இருந்தா அவ என்ன பண்ணுவான்னு கொஞ்சம் பதட்டமா இருக்கு என்றான் அவன் மனதை ஒளியாமல்.

 

 

கல்யாணுக்கும் அந்த பயம் கொஞ்சம் இருந்தது, மனதில் நினைத்ததை வெளியில் சொல்லி நண்பனை கலவரப்படுத்த அவன் விரும்பவில்லை. அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவே பேசினான் அவன்.

 

 

“ஒரு வேளை இந்த விஷயம் தெரிஞ்சு அவ ஒத்துக்கிட்டு இருந்தா சந்தோசம் தானே வைபவ். நீயா எதுக்கு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு எல்லாமே நல்லாவே நடக்கும். நீ தைரியமா இரு என்றான் கல்யாண்.

 

 

“கல்யாண் போகும் போது அந்த துணிக்கடைக்கு போயிட்டு போகலாம் என்றான் வைபவ். “எதுக்குடா என்றான் மற்றவன். “நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம்ல அதான் புது துணி எடுக்கப் போறேன் என்றவனை ‘அவனாடா நீ என்பது போல் ஏற இறங்க பார்த்தான் கல்யாண்.

 

 

மறுநாளைய பொழுது அழகாக விடிந்தது. ஒரு பக்கம் அபியின் வீட்டில் அபியின் அன்னை அவளை அன்று விடுப்பு எடுக்க சொல்லி இருக்க, அவள் மறுத்துக் கொண்டிருக்க என்று அவர்கள் வீட்டில் களேபரம் தொடங்கியது. ஒருவழியாக அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அன்று விடுப்பு எடுத்தாள் அபிநயா.

 

 

வைபவ் வீட்டிலும் எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்க வைபவ் அவன் அறையில் இருந்து வெளியில் வந்த பாடில்லை. “டேய் அண்ணா என்னடா மேக்கப் பண்ணுற, பொண்ணு கூட இவ்வளவு மேக்கப் போடாது போல இருக்கே, இவன் பண்ணுற அலும்பல் தாங்க முடியலையே… என்று அலுத்துக் கொண்டிருந்தாள் நந்து.

 

 

“டேய் கல்யாணம் ஆபத்பாந்தவா எங்க இருக்க???, உடனே ஓடி வா உன் நண்பனை வந்து கொஞ்சம் கிளப்பு என்று சத்தமாக புலம்பியவளின் எதிரில் வந்து நின்றான் கல்யாண்.

 

 

“என்ன நந்தும்மா என்னை கூப்பிட்ட மாதிரி இருந்ததுசொல்லுடா என்றான் அவன். “அப்பாடா கடவுளே நேர்ல வந்த மாதிரி வந்து சேர்ந்துட்டியா. டேய் அண்ணா உன்னோட நண்பன் அவன் அறையில இருந்து இன்னும் வெளிய வரலை. கொஞ்சம் போய் என்னன்னு பாரு என்று புலம்பினாள் அவள்.

 

 

அந்த நேரம் சரியாக அவன் அறையில் இருந்து வெளியில் வந்தான் வைபவ். நந்துவும் மற்றவர்களும் வாயை பிளந்துக் கொண்டு வைபவையே பார்த்துக் கொண்டிருந்தனர். “அண்ணா இது நீயா என்றவள் சும்மா இராமல் கல்யாணை கிள்ளி சோதிக்க அவன் ஆவென்று அலறினான்.

 

 

“இப்படி சின்ன பையன் மாதிரி ஆகிட்டியே, நீ ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் போட மாட்டியே என்று இழுத்தவளை “நந்து போதும் கொஞ்சம் வாயை மூடு என்ற சாந்தி மகன் புறம் திரும்பினார்.

 

 

“தம்பி ஜீன்ஸ் எல்லாம் வேணாம்ப்பா, நீ வேணா பட்டு வேட்டி சட்டை போட்டுக்கோயேன் என்றார் அவர். “வேணாம் அண்ணா அம்மா சொல்ற மாதிரி கேட்காதே அப்புறம் நீ மாப்பிள்ளை மாதிரி இருக்கமாட்ட கல்யாண புரோக்கர் மாதிரி இருப்ப என்று கிண்டல் செய்தாள் நந்து.

 

 

புரோக்கர் என்ற சொல் கல்யாணை காயப்படுத்தியது. நந்து வைபவை கிண்டல் செய்ய அந்த வார்த்தை சொல்லியிருந்தாலும், கார்த்திகாவும், அவள் தந்தையும் அவனை அவ்வாறு அழைத்ததை எண்ணி வருந்தினான் அவன். சில நொடிகளில் தன்னை சரி செய்தவன், “வைபவ் நீ வா என்று அவனை அழைத்துக் கொண்டு வைபவின் அறைக்குள் நுழைந்தான்.

 

 

வெளியில் வந்தவன் வெள்ளை நிற முழுக்கை சட்டையை அணிந்து தனி கம்பீரமாக மாப்பிள்ளை போலவே தயாராகி வந்தான். “பரவாயில்லை கல்யாண் உனக்கு என்கூட பழகி பழகி கொஞ்சம் புத்திசாலித்தனம் வந்து ஒட்டிக்கிச்சு என்று தாராளமாக புகழ்ந்தாள் நந்து.

 

 

எல்லோருமாக சிரித்து பேசி ஒருவழியாக அவள் வீட்டை அடைந்தனர். வைபவின் இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது. அவள் இன்று ஏதேனும் தன்னை கலாட்டா செய்து விடுவாளோ என்று ஒரு பயமும் அவனுள் ஓடியது.

 

 

கல்யாண், அவன் அன்னை மாதவி, தம்பி ராம், வைபவ், வைபவின் அன்னை சாந்தி மற்றும் நந்து புடைசூழ அவர்கள் உள்ளே நுழைந்தனர். வாசலுக்கே வந்து வரவேற்றனர் வைத்தியநாதன், கற்பகம் தம்பதியர்.

 

அவர்களை தவிர வேறு யாரும் இல்லாததில் வைபவுக்கு சற்று நிம்மதி தோன்றியது. அவன் இப்படியிருக்க அபியோ அதை விட பெரும் தவிப்பில் இருந்தாள். அன்று வைபவ் ஏதேதோ சொன்னான் என்று திருமணத்திற்கு சம்மதம் சொன்னது தப்பாக போய்விட்டதே.

 

 

இப்படி மாப்பிள்ளை வீட்டினரை நேரே வரச்சொல்லும் அளவிற்கு விட்டுவிட்டோமே என்று முழித்துக் கொண்டிருந்தாள். முதல்நாள் மாலை அவள் அன்னை அவளை அழைத்து அவளை பெண் பார்க்க வரும் விஷயம் சொல்ல அபி ஒன்றும் சொல்ல முடியாமல் போனது.

 

 

மாப்பிள்ளை வந்து பார்க்கட்டும், பிறகு பிடிக்கவில்லை என்று சொல்லி திருமண பேச்சை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்று தனக்குள் பல சமாதானங்கள் சொல்லிக் கொண்டாள்.

 

 

“ஆன்ட்டி நான் போய் அண்ணியை பார்க்கலாமா என்று இயல்பாக கேட்ட நந்துவை கற்பகத்திற்கு பிடித்துப் போனது. “வாம்மா என்று அவளை அபியின் அறைக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.

 

 

“ஹாய் அண்ணி நான் நந்து… நந்திதா என்று அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள். கற்பகம் அவளை விட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். “எப்படி இருக்கீங்க என்று அவள் முன் நின்று கேட்டாள் அவள்.

 

 

அவளும் இயல்பாக தலையசைத்தாள், அப்போது தான் அபிக்கு ஒன்று தோன்றியது, இவர்களுக்கு என் நிலை பற்றி தெரியமாஎன்று எண்ணம் தோன்றியது. அதற்கு ஏற்றாற்போல் நந்துவிடமிருந்து அதற்கு பதில் வந்தது.

 

 

“என்ன அண்ணி எனக்கு எல்லாம் தெரியுமான்னு யோசிக்கிறீங்களா, அதான் எங்க அண்ணன் ஏற்கனவே சொல்லிட்டானே. நான் கூட கேட்டேன் அண்ணிகூட சண்டை போடணும்ன்னு எனக்கு ஆசைன்னு சொன்னேன், அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா, உங்ககூட நான் கத்தி சண்டை எல்லாம் போட முடியாதாம், நீங்க நல்லா காகித சண்டை போடுவீங்களாம் என்றாள் அவள்.

 

 

‘என்ன இது அவ சொல்றது பார்த்தா ஏற்கனவே என்னை பத்தி நல்லா தெரிஞ்ச ஒருத்தர் தான் இங்க பொண்ணு பார்க்க வந்திருக்காங்க போல இருக்கே. யாரா இருக்கும் என்னை பத்தி அவங்க வீட்டில எல்லாம் சொல்லி இருக்காங்களே என்று யோசனையில் ஆழ்ந்தாள் அபி.

 

 

“அண்ணி… அண்ணி என்று அழைத்து நந்து அபியை உலுக்க பிறகு தான் அவள் வெகு நேரமாக தன்னை உலுக்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது அபிக்கு. என்ன என்பது போல் நந்துவை பார்த்தாள் அவள்.

 

 

“என்ன அண்ணி நீங்க தலையில பூவே வைக்கல என்றாள் அவள். அப்போது தான் கற்பகமும் அபியின் அறைக்குள் நுழைந்தார். “அய்யோ பாரும்மா காலையில இருந்து அங்கயும் இங்கயும் அலைஞ்சுட்டு இருந்ததுல பூக்காரிகிட்ட பூ சொல்லியிருந்ததை மறந்துட்டேன்.

 

 

“அவ வேற வரலை போல இருக்கே, இப்ப என்ன செய்ய என்று கையை பிசைந்தார் அவர். “அத்தை நீங்க எதுக்கு கவலைபடுறீங்க, இருங்க என்றுவிட்டு வேகமாக வெளியில் விரைந்தாள் அவள்.

 

 

அபி என்ன விஷயம் என்று அன்னையிடம் சைகையில் கேட்க அவரும் பூ வாங்கவில்லை என்பதை பற்றி அவளிடம் சைகையிலேயே தெரிவித்தார். ‘என்ன இந்த பொண்ணு அண்ணி அண்ணின்னு வேற கூப்பிடுது, பாசமா வேற பேசுது. இன்னைக்கே நிச்சயம் பண்ணிடுவாங்களோ என்று யோசித்தாள் அபி.

 

 

‘ஆனா பாவம் நல்லா பொண்ணா இருக்கா, இவளுக்கு ஒத்து போகற நல்ல அண்ணியா வரட்டும் என்று அவளுக்காக பிரார்த்தனையும் செய்தாள் அவள். வெளியில் சென்ற நந்து கையில் பூவுடன் வந்தாள்.

 

 

“அத்தை பூ ஏதுன்னு பார்க்குறீங்களா, எல்லாம் நாங்க வாங்கிட்டு வந்தது தான். அண்ணிக்காக தானே வாங்கிட்டு வந்தோம், அதை அவங்களுக்கு வைச்சு விடவேண்டியது தானேமுறை என்று சொல்லிவிட்டு அவள் கையோடு கொண்டு வந்திருந்த கைப்பையில் இருந்து ஹேர்பின்ன்னும் எடுத்து அவளே அபிக்கு பூவும் வைத்துவிட்டாள்.

 

 

“இப்போ பாருங்க எவ்வளவு சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு அபியை அவள் கைகளால் நெட்டி முறித்தாள். தன்னையே திரும்பி நிலைக்கண்ணாடியில் பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது.

 

 

‘நன்றாக தான் இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அபி. “சரி சரி வாங்க அண்ணி எல்லாரும் ரொம்ப நேரமா காத்திட்டு இருக்காங்க, அத்தை நான் அண்ணையை கூட்டிட்டு போகலாம் தானே என்றாள் அவள்.

 

 

அவர் சிரித்துவிட்டு “உனக்கு அவ்வளவு அவசரமா இப்போவே உங்க அண்ணியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவ போலயிருக்கே என்றார் அவர். “அண்ணி மட்டும் இம்ன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும் கையோட கூட்டிட்டு போய்ட மாட்டேன் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“சரிம்மா நீ கூட்டிட்டு போ என்று நந்துவிடம் கூறிவர், திரும்பி மகளிடம் சைகையில் அவள் அழைத்து போவதை பற்றி கூறி அவளுடன் செல்லுமாறு சைகை செய்தார்.

 

 

‘கடவுளே எனக்கு ஏன் இப்படி திக் திக்ன்னு அடிச்சுக்குது, நான் எப்படி வெளிய போவேன். என்னை எல்லாரும் ஒரு காட்சி பொருள் மாதிரி பார்ப்பாங்களே, பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது’.

 

 

‘இந்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னா வேற மாப்பிள்ளை இப்படி வந்து பார்ப்பாங்க என்று மனதுக்குள் குமைந்து கொண்டு நின்றிருந்தாள். நந்து “அண்ணி வாங்க நானே உங்களுக்கு எல்லாரையும் அறிமுகப்படுத்தறேன் என்று அவளை பார்த்து சொல்லிவிட்டு அவளை வெளியில் அழைத்துச் சென்றாள்.

 

 

வெளியில் இருந்த வைபவுக்கும் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. அபி வெளியில் வந்து என்ன செய்வாளோ, ஒரு வேளை வழக்கம் போல் என்னை கலாய்த்து விடுவாளோ என்றே அவன் எண்ணம் சுழன்றது.

 

 

“என்னடா உனக்கு இப்படி வேர்த்திருக்கு, எதுக்கு இப்படி அரண்டவனாட்டம் இருக்க என்றான் வைபவ் கல்யாணை பார்த்து. “அடப்போடா நீ வேற, உனக்கென்ன நீ மாப்பிள்ளை தனியா போய் உட்கார்ந்திட்ட, நான் என் மாமானருக்குகூட இப்படி பயந்தது இல்லை, உன் மாமனார் கேள்வி கேட்டே என்னை அரள வைக்கிறார் என்றான் கல்யாண் வைபவின் காதில் கிசுகிசுத்தவாறே.

 

 

“உன் மாமானருக்கு தண்ணி காமிச்சல, இப்போ அவர் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு. அப்படி என்ன தான்டா உன்னை கேட்குறார் என்று அவனும் கிசுகிசுப்பான குரலில்.

 

 

“உன்னை பத்தி என்கிட்ட தனியா விசாரணை கமிஷன் வைச்சு இருக்கார் உன் மாமனார் என்றான் அவனும். “சரி சரி பார்த்து நல்லவிதமா சொல்லி வை என்றான் வைபவ். இருவரும் இவ்வாறு ரகசியமாக பேசிக்கொண்டிருந்த வேளையில் நந்து அபியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

 

 

நண்பனிடம் பேசியதில் சற்று ஆசுவாசத்துடன் இருந்தவன் நிமிரிந்து எதிரில் இருந்தவளை பார்த்தான். எளிமையாக வெளியில் வந்தவளை இமைக்காது பார்த்தான். அவள் செய்திருந்த லேசான ஒப்பனையும் கூட அவனுக்காய் தானே என்று நினைத்ததும் அவனுக்குள் சிலிர்த்தது.

 

 

‘கொஞ்சம் நிமிர்ந்து என்னை பார்த்தா தான் என்ன என்று அவளிடம் மனதில் உரையாடிக் கொண்டிருந்தான். நந்து அபியை அழைத்துக் கொண்டு வந்து அவள் அன்னைக்கும் கல்யாணின் அன்னைக்கும் இடையில் அமர்த்தினாள்.

 

 

நந்து அவள் எதிரில் அமர்ந்து கொண்டு ஒவ்வொருவராக அறிமுகம் செய்தாள். “அண்ணி இவங்க எங்க அம்மா பேரு சாந்தி, எல்லாருக்கும் ரொம்ப சாந்தமானவங்க, ஆனா எனக்கும் எங்க அண்ணனுக்கும் இவங்க வெறும் சாந்தி இல்லை விஜயசாந்தி என்றாள் அவள்.

 

 

“ஹேய் வாலு சும்மா இரு இப்படி தான் அறிமுகம் செய்வியா என்றார் மாதவி. “இங்க பாருங்க அவங்களை அறிமுகம் செய்யலைன்னு மாதவி அம்மா என்னை கோவிக்கிறாங்க, இவங்க கல்யாண் அண்ணாவோட அம்மா, ரொம்ப நல்லவங்க. எங்க அம்மா மாதிரி தான் இவங்களும்

 

 

“அதோ எதிர்ல இருக்கானே அவன் ராம், கல்யாண் அண்ணாவோட தம்பி, அப்புறம் உங்க அப்பா பக்கத்துல உட்கார்ந்து இருக்கறது கல்யாண் அண்ணா, எங்க அண்ணாவோட நண்பன் என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

அபிக்கு அவள் பேசியதில் பாதி புரிந்தும் புரியாமல் விழித்தாள். “அங்க பாருங்க என்றழைத்து அவள் எதிரில் சுட்டிக் காட்டினாள் “அது தான் எங்க அண்ணா என்றாள் நந்து.

 

 

அதுவரை நந்து பேசியதை புரிந்தும் புரியாமலும் கேட்டவள் அவள் சுட்டிக் காட்டிய திசையில் அமர்ந்திருந்தவனை பார்த்து உறைந்து போனாள். ‘இவனா, இவனா என்னை பெண் பார்க்க வந்தது என்று யோசித்தவளின் யோசனை அவன் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததில் மறந்து போனது.

 

 

எவ்வளவு நேரம் அவள் தன்னை மறந்து அவனை பார்த்திருந்தாளோ அபியின் அன்னை வந்து அவளை உள்ளே அழைத்து சென்ற போதும் ஒருவித மோன நிலையிலேயே எழுந்து சென்றாள் அவள்.

 

 

வைபவுக்கு சற்று நிம்மதி வந்திருந்தது. மாதவி தான் ஆரம்பித்தார், “பொண்ணுக்கிட்ட மாப்பிள்ளையை பிடிச்சுருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுடுங்க என்றார் அவர்.

 

 

‘அய்யோ இந்த பொண்ணு என்ன சொல்லுவாளோ என்று பதட்டத்துடன் உள்ளே சென்றார் அவர், கணவரையும் ஒரு கண் பார்த்துவிட்டு உள்ளே சென்றார் அவர்.

 

 

ஐந்து நிமிடம் கழித்து வெளியில் வந்தவர் “அபிக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் என்றவரின் முகத்தில் திருப்தி இருந்தது. வைபவ்க்கு அந்த வார்த்தைகள் சந்தோசம் கொடுத்தாலும் ஏதோ யோசனையாய் இருந்தான் அவன்.

 

 

“அங்கிள் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் அபிக்கிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசலாமா என்றான் அவன். சற்று யோசித்தவர் மனைவியின் முகத்தை பார்த்தார், அவர் சம்மதமாய் பார்க்கவும். “பேசுங்க தம்பி என்றார்.

 

 

அவன் உள்ளே செல்வதற்கு முன் அபியின் அறைக்கு சென்று கற்பகம் அவளிடம் வைபவ் பேச விரும்புவதை பற்றி கூறிவிட்டு வந்தார். அவர் வந்ததும் வைபவ் உள்ளே நுழைந்தான், இருவருக்குமே இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ‘என்கிட்ட என்ன பேசணும் இவருக்கு என்று யோசனையுடன் அவனை பார்த்தாள் அவள். “நீங்க சம்மதம்ன்னு சொன்னதா உங்க அம்மா சொன்னாங்க அது உண்மையா என்றான் அவன்.

 

 

அவள் அமைதியாக அவனை பார்த்தாள், “நீங்களா சம்மதம் சொன்னீங்களா இல்லை உங்களை கட்டாயப்படுத்துனாங்களான்னு எனக்கு தெரியலை, என்னை பத்தி நீங்க முழுசா தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன். இதுல நான் உங்ககிட்ட சொல்ல நினைச்சது எல்லாமே எழுதியிருக்கேன்

 

 

“இதை படிச்சுட்டு அதுக்கு அப்புறம் நீங்க ஒரு ரெண்டு நாள்ல உங்க முடிவை சொன்னா போதும் என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசத் தோன்றாமல் வெளியே செல்ல நினைத்தவன் அவள் முன் வந்து “எனக்கு உங்களை பிடிச்சுருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

 

 

வெளியில் வந்தவன் எல்லோரிடமும் பொதுப்படையாக, “அவங்ககிட்ட பேசிட்டேன், அவங்க யோசிச்சு பதில் சொல்லட்டும், அதுவரைக்கும் நான் காத்திருக்கேன் என்றான் அவன்.

 

 

கற்பகம் எதையோ பேச வாயெடுக்க “அவங்க உங்களுக்காக சம்மதம் சொல்லியிருக்கலாம், அவங்களுக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடுப்போமோ, ப்ளீஸ் என்றான் அவன்.

 

 

 

Advertisement