Advertisement

அத்தியாயம் –10

 

 

மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும் வந்திருக்கியே என்றார் மாதவி.

 

 

“அம்மா அது வந்து உங்ககிட்ட ஒரு விஷயம்… என்று தடுமாறிக் கொண்டிருந்தான் வைபவ். “என்னப்பா ஏதாச்சும் குண்டு தூக்கி போடப்போறியா என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

 

 

“ஒரு வேளை இந்த கல்யாண் என்கிட்ட எதுவும் கேட்க யோசிச்சுக்கிட்டு உன்னை தூது அனுப்பிட்டானா என்றார் தொடர்ந்தவாறே. “நீங்க சொன்னது ஒரளவு சரி தான் அம்மா என்று இழுத்தான். அதுவரை அவன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைத்தவர் அவனை சற்று யோசனையாக பார்த்தார் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று.

 

 

வைபவ் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவன் அவர்கள் திருமணம் பற்றி சொல்லி முடிக்க வைபவின் அன்னை சாந்தி உள்ளே நுழைந்தார். “போதும் நிறுத்துடா என்றார் அவர் கோபமாக.

 

 

‘அய்யோ அம்மாவை சமாதானப்படுத்த வரச்சொன்னா அவங்க கோபமா வர்றாங்க என்று யோசித்தான் வைபவ்.

 

 

“நீ யாருடா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க, அவனுக்கு அம்மான்னு ஒருத்தி இங்க குத்துகல்லாட்டம் இருக்கா, நீ பாட்டுக்கு அந்த பெரிய மனுஷனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா. ஏன் கல்யாணம் பண்ணணும்ன்னு யோசிச்சீங்கள்ள அப்போவே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா என்றார் சாந்தி.

 

 

“அம்மா அது வந்து அவங்க கல்யாண விஷயம் வெளிய தெரிஞ்சா கார்த்தியோட அப்பா எதுவும் பிரச்சனை பண்ணுவாரோன்னு நினைச்சோம். அவர் இங்கயும் வந்து தகராறு பண்ணிடுவாரோன்னு ஒரு பயம் அதான்மா சொல்லலை என்றான் அவன்.

 

 

“அதுக்காக சொல்லாம இருந்துடுவீங்களா, அப்போ இப்ப மட்டும் அந்த பொண்ணோட அப்பா வந்து தகராறு பண்ண மாட்டாரா. இப்போ மட்டும் உங்களுக்கு எப்படி சொல்லணும்ன்னு தோணிச்சு என்று அவர் விடாமல் அவனை வசைபாடினார்.

 

 

“விடு சாந்தி, நீ எதுக்கு வைபவை திட்டிட்டு இருக்க. இனி திட்டி என்ன ஆகப் போகுது, அவங்க வேணுமின்னு இப்படி செஞ்சு இருக்க மாட்டாங்க, நாளைக்கு கடைசி தேர்வு இருக்கும் போது இன்னைக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்கன்னா எந்த அளவுக்கு அந்த பிரச்சனை இருந்திருக்கும்

 

 

“கல்யாணும் அவன் வாழ்க்கை இது தான்னு தீர்மானிச்சு தானே இருக்கான். இது தான் கடவுள் போட்ட முடிச்சு போல நடக்கறது நடக்கட்டும். சொல்லுப்பா வைபவ் அவங்க இங்க வீட்டுக்கு வருவாங்களா இல்லை… என்று அவர் கூறி முடிக்குமுன் “இங்க தான் வர்றாங்கம்மா அவங்க இப்போ தான் கோவில்ல இருந்து கிளம்பி இருப்பாங்க என்றான் அவன்.

 

 

அவன் கைபேசியில் இருந்து பேசியவன் அவர்களை உடனே கிளம்புமாறு கூற அவர்கள் நேரே வீட்டிற்கு வந்தனர். “சாந்தி ஆரத்தி சுத்தணுமே அவங்களுக்கு யாரு சுத்துவாங்க. நம்ம நந்துவையே சுத்த சொல்லுவோம் என்றார் அவர்.

 

 

“சரி மாது நான் அவளையே சுத்த சொல்றேன் என்றவர் அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். மணமக்களை ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். மாதவி, சாந்தியிடம் சொல்லி கார்த்திகாவை பூஜை அறையில் விளகேற்ற சொன்னார்.

 

 

பூஜை அறையில் அவள் விளக்கேற்றியதும் இருவரும் கண் மூடி பிரார்த்தித்தனர். வெளியில் வந்தவன் நேரே அவன் அன்னையை நாடிச் சென்றான். சரயுவும் அவர்களுடன் வந்திருக்க கார்த்திகாவை அவளிடம் விட்டுவிட்டு சென்றான் கல்யாண். “அம்மா என்று அவன் அழைக்க அவன் அழைப்பை காதில் வாங்காதவராக நின்றிருந்தார்.

 

 

“வைபவ் என்று அவர் அழைக்க “என்னம்மா என்றவாறே அவர் முன் வந்து நின்றான் அவன். “இவன் பண்ணது சரியா தப்பான்னு நான் எதுவும் விவாதிக்க விரும்பலை. என்னால இதை உடனே ஏத்துக்க முடியலை. நானா மனசு மாறி பேசுற வரைக்கும் இவனை என்கிட்ட பேச வேணாம்ன்னு சொல்லிடு என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

 

கல்யாணுக்கு கண்கள் கலங்கிவிட்டது, வைபவ் அவனை அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்கு சென்றான். நண்பனை அணைத்து ஆறுதல் சொன்னான்.

 

 

“விடு கல்யாண், அம்மா தான் சொல்றாங்கல, கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் சரியாகிடும், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுங்க அவங்க எல்லாம் மறந்திருவாங்க என்றான் வைபவ்.

 

 

“இல்லைடா வைபவ், எங்களுக்குள்ள அப்படி எதுவும் இப்போதைக்கு நடக்காது. அவளுக்கு இன்னும் இரண்டு வருஷ படிப்பு இருக்கு, அதெல்லாம் முடியட்டும். அதுக்குள்ள எனக்கு வேலை நிரந்தரமாகணும் அதுவரை எதுவும் வேண்டாம் என்றான் கல்யாண்.

 

 

“அதெல்லாம் உன்னால் முடியுமா எதுக்கு அதெல்லாம் பேசிட்டு விடு. நடக்குறது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்றான் வைபவ். “என்னடா என்னால முடியாதுன்னு சொல்றியா, நான் உறுதியா தான் சொல்றேன். அவளும் சின்ன பொண்ணுடா அவ நல்லா படிக்கணும். நானும் நல்ல வேலைக்கு போகணும்

 

 

“அதெல்லாம் நடக்கட்டும், எங்கம்மா மனசு மாறட்டும். அவங்க வீட்டிலையும் சம்மதிக்கட்டும். அப்புறம் தான் மத்ததெல்லாம் என்றான் அவனும் விடாப்பிடியாக. “சரிடா நீ சொல்றதும் சரி தான் பார்த்து இருந்துக்கோ, அவளை நல்லா பார்த்துக்கோ என்றான் வைபவ்.

 

 

“அப்புறம் அம்மா பேசலைன்னு வருத்தப்படாதே எல்லாம் மாறிடும் என்று சொன்னவன் அவனையும் அழைத்துக் கொண்டு கிழே இறங்கி வந்தான். வைபவை தனியே அழைத்த மாதவி அவனிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து கல்யாணிடம் கொடுத்து கார்த்திகாவுக்கு உடைகள் எடுத்து தரச்சொன்னார்.

 

 

வைபவ் அந்த பணத்தை கல்யாணிடம் கொடுத்து மேலும் கொஞ்சம் பணத்தையும் சேர்த்துக் கொடுத்து கார்த்திகாவுக்கு உடைகள் எடுக்கச் சொல்லி கொடுத்தான்.

 

 

“டேய் அம்மா உன்கிட்ட எவ்வளவு கொடுத்தாங்கன்னு எனக்கு தெரியும் நீ எதுக்கு கூட காசு கொடுக்குற. நீ வேற என்னை கஷ்டப்படுத்தாதே என்கிட்டயும் கொஞ்சம் காசிருக்கு நானே அவளுக்கு வாங்கி கொடுக்கிறேன்டா என்றான் அவன்.

 

 

சரயுவுக்கு அங்கு நடப்பது ஏனோ கஷ்டமாகவே இருந்தது. முதலில் வைபவுக்கு நடந்தது எல்லாம் தன்னால் தான் என்று மருகியவள், கல்யாணின் திடீர் திருமணத்தினால் அவன் அன்னை பேசாமல் போனதிற்கும் அவளே காரணமாக எண்ணி வருந்த ஆரம்பித்தாள்.

 

 

கல்யாண் கார்த்திக்காவை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்கு சென்று வேண்டிய துணிமணிகள் வாங்கி கொடுக்க சென்று விட்டான். சரயுவும் தனக்கு தலைவலியாக இருக்கிறது என்று சொல்லி விரைவாகவே கிளம்பிவிட்டாள்.

மாதவியை தேடி வந்த வைபவ் “அம்மா ஏன்மா அவன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டீங்க, அவன் எதுவும் வேணுமின்னு செய்யலையே. எல்லாத்துக்கும் நான் தானே காரணம் என்றான் அவன்.

 

 

“டேய் கள்ளா நீயும் சாந்தியும் சேர்ந்து ஆடின கள்ளாட்டம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா. உங்கம்மா உன்னை திட்டுறது போல திட்டுறதும் நீயும் பயந்து பயந்து பதில் சொல்றதும் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா

 

 

“உங்கம்மா கூட எப்போ பழக ஆரம்பிச்சேனோ அப்போல இருந்து உங்க இரண்டு பேரையும் எனக்கு நல்லாவே தெரியும். என் பையன் எது செஞ்சாலும் அது நல்லதா தான் இருக்கும்ன்னு உங்கம்மா அடிக்கடி சொல்லுவா

 

 

“எனக்கும் முதல்ல கோபம் வந்துச்சு, நிச்சயமா நான் அவங்களை வெளிய போக சொல்லி இருப்பேன். ஆனா சாந்தியும் நீயும் மாறி மாறி பேசினதும் எனக்கு புரிஞ்சுது அதுக்கு பிறகு தான் என் மனசு அமைதியாச்சு.

 

 

“என்னைக்கும் திட்டாத சாந்தி உன்னை திட்டும் போது நான் கண்டுபிடிக்க மாட்டேனா என்றார் மாதவி. “மாது கண்டுபிடிச்சுட்டியா என்று சாந்தி மாதவியின் கைகளை பிடித்துக்கொள்ள வைபவ் அசடு வழிந்தான்.

 

 

அன்று இரவு வைபவ் அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட கல்யாணும் அவனுமாக மறுநாள் நடக்கப் போகும் கடைசி தேர்வுக்கு இரவு விழித்து படித்தனர். மாதவி இருவருக்குமாக டீ போட்டுக் கொடுக்க கல்யாணுக்கு தன் அன்னையை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

 

 

தந்தை இறந்த போது துவண்டு போயிருந்த அன்னை இல்லை அவர், சாந்தியும் வைபவும் அவ்வப்போது கொடுத்த ஊக்கத்தில் அந்த குடும்பத்ததை தாங்கும் ஆணிவேராக மாறி போயிருந்தார் அவர்.

 

 

கார்த்திகாவை ஒரு அறையில் படுக்க சொல்லிவிட்டு இருவருமாக தேர்வுக்கு தயாராயினர். ஏற்கனவே இருவரும் கேம்பஸில் தேர்வாகி இருக்க அவர்கள் தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வந்ததும் அவர்களை வேலையில் சேர சொல்லியிருந்தனர்.

 

 

நல்லபடியாக அவர்களுக்கு தேர்வு முடிய கல்யாண் கார்த்திகாவை தேர்வுக்கு தயார்படுத்தினான். அவனும் அவளுடன் விழித்திருந்து அவள் தேர்வு நன்றாக செய்ய உதவினான்.

 

 

கார்த்திகாவுக்கு முதலில் அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் சற்று பிடிபடவே கஷ்டப்பட்டாள். கல்யாண் அவன் அன்னை வேலை செய்வதை பார்த்து அவளை ஓரிரு வேலைகளாவது செய்யுமாறு சொல்ல அவள் முதலில் விழித்தாள்.

 

 

“ஏன் இதெல்லாம் நீ உங்க வீட்டுல செஞ்சது இல்லையா என்றான் அவன். “இல்லை என்றாள் அவள். “அப்போ அதெல்லாம் யார் செய்வா என்றான் அவன். “எங்கம்மா செய்வாங்க, வீட்டுல வேலை செய்யறவங்க தான் செய்வாங்க என்றவளை என்ன செய்வது என்பது போல் பார்த்தான் அவன்.

 

 

முதலில் வீடு பெருக்க, பாத்திரம் கழுவ, அவள் துணிமணியை அவளே துவைக்க என்று மெல்ல மெல்ல அவன் சொல்லிக் கொடுக்க அவளாக ஓரிரு வேலைகளை செய்தாள்.

 

 

இதற்கிடையில் வைபவுக்கும், கல்யாணுக்கும் வேலைக்கான ஆர்டர் வந்திருக்க இருவருக்கும் போஸ்டிங் பெங்களூரில் கிடைத்தது. இருவருமே தங்கள் குடும்பத்தை பிரிந்து வேறு ஊருக்கு போக விரும்பாமல் கிடைத்த வேலையை தூக்கியெறிந்தனர்.

 

 

அடுத்து என்ன செய்வது என்று இருவருமாக வேலைக்காக அலைய, அப்போது தான் வைபவ் ஒரு நாள் பேருந்தில் திருமண தரகர் ஒருவரை சந்திக்க அவர் பேசியது அவனுக்கு ஏதோ செய்ய அதன்பின் உதித்ததே கல்யாண வைபவம்.

 

 

கல்யாணிடம் வைபவ் அதை பற்றி யோசனை கேட்க இருவருமாக சேர்ந்தே அதை செய்வது என்று முடிவு செய்தனர். கார்த்திகாவுக்கு லேசான வருத்தமிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 

 

“நீங்கள் ஏன் உங்கள் கடையை விரிவுபடுத்தி பல்பொருள் அங்காடி வைக்கக் கூடாது என்று ஆரம்பித்து பல யோசனைகளை அடுக்க கல்யாண் மொத்தமாக மறுத்து அவளை சமாதானப்படுத்தி அவள் கைகளாலேயே அவர்கள் கல்யாண வைபவத்திற்கு விளக்கேற்ற வைத்தான்.

 

____________________

 

 

ராஜசேகர் முதலில் கார்த்திகாவின் திருமணத்தை மறுத்திருந்தாலும் மகள் இல்லாத வீடு அவருக்கு வெறுமையாக இருந்தது. மகள் மேல் கொள்ளை கொள்ளையாக பாசம் வைத்திருந்தவராயிற்றே.

 

 

மகளை பிரிந்த தருணத்தில் இருந்து அவளை பற்றிய கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது. மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்தவர்களை முகத்தில் அடித்தது போல் பேசி வெளியே போகச் சொன்னவருக்கு தன் தசை ஆட்டி பார்த்தது.

 

 

தன் ரத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்க அவர் விழைந்தார். நேரடியாக அவரே இறங்கிக் செல்ல அவருக்கு மனமில்லாமல் தன் மகனையும் மனைவியையும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

 

 

மகள் திடீர் திருமணம் முடித்ததில் முதலில் இந்திராவுக்கு வருத்தமிருந்தாலும், அவர்கள் திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்கு பின் ஒரு நாள் மாதவியை கோவிலில் சந்தித்தார். “வணக்கங்க, என் பேரு இந்திரா. நான் கார்த்திகாவோட அம்மா என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

 

 

“வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றார் மாதவி.  “நல்லாயிருக்கேன், உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம். என் பொண்ணு சரியான இடத்துக்கு தான் வந்து சேர்ந்திருக்கா எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு. என் பொண்ணை பத்தி நான் பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க

 

 

“அவ அவங்க அப்பா மாதிரி தான், அவர் பேச்சை கேட்டு கேட்டு வளர்ந்தவ அவ விவரம் இல்லாமலோ சின்னபிள்ளை தனமா ஏதாவது செய்தாலோ பேசினாலோ அவளை நீங்க மன்னிக்கணும். அவளை உங்க பொண்ணா நினைச்சு அவளோட தப்பை கண்டிச்சு நீங்க தான் அவளை இனிமே பார்த்துக்கணும் என்று சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கியது.

 

 

“இங்க பாருங்க, நீங்க கலங்கறதுக்கு எதுவுமில்லை. பெண் இல்லாத எங்க வீட்டுக்கு அவ மருமக மட்டும் இல்லை. மூத்த மகளும் உங்க பெண்ணை என் பெண்ணா தான் நான் பார்க்குறேன். நீங்க சந்தோசமா இருங்க என்று மாதவி ஆறுதல் கூற அதன்பின் மகளை நினைத்தும் அவள் வாக்கப்பட்டிருக்கும் வீட்டையும் வீட்டிடினரை நினைத்தும் பெருமை கொண்டார் இந்திரா.

 

 

கணவர் தன் மனத்தாங்கலை விட்டு மகளை பார்த்து வரச் சொன்னதில் ஒரு விதத்தில் அவர் மகிழ்ந்தாலும் ஏதோ ஒரு மூலையில் அவருக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது. அந்த வாரத்தில் ஒரு நல்ல நாளாக பார்த்து செல்வது என முடிவெடுத்தனர்.

 

____________________

 

 

“ரித்தி, ரித்தி என்றவாறே உள்ளே நுழைந்தான் கல்யாண். “சார்க்கு இப்போ தான் என்னை ரித்தின்னு கூப்பிடணும்ன்னு தோணிச்சா, எவ்வளோ நாள் ஆச்சு நீங்க என்னை இப்படி கூப்பிட்டு என்றாள் அவள் ஒரு பெருமூச்சுடன்.

 

 

அவனும் அப்போது தான் அதை உணர்ந்தான். “அப்படி எல்லாம் இல்லை ரித்தி ஏதோ கொஞ்சம் வேலை டென்ஷன் என்னை புரிஞ்சுக்க மாட்டியா என்றான் அவன். “சரி விடுங்க என்று சலித்தார் போல் சொல்லிவிட்டு அவள் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன தேடுற என்றாவாறே அவள் அருகில் அவன் செல்ல அவளும் அவனுக்கு பதில் கூறவென திரும்ப அவன் மேல் மோதி நின்றாள். அந்த நெருக்கம் இருவருக்குள்ளும் ஏதோ மாற்றம் செய்ய கல்யாண் அவளை இறுக்கி அணைத்தான்.

 

 

அவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தம் வைக்க அவன் சிந்தனை வைபவ் முதல் நாள் சொன்னதில் வந்து நின்றது. அதெல்லாம் கட்டுப்பாடா இருக்க முடியாது என்று அவன் சொன்னது நினைவு வர தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன் அவளை விடுவித்தான்.

 

 

“ரித்தி கொஞ்சம் வெளிய போய் எனக்கு காபி எடுத்துட்டு வர்றியா என்றான் அவன். “என்னாச்சு என்று அங்கேயே நின்று கேள்வி கேட்டவளின் மேல் அவனுக்கு கோபம் வந்தது. “இப்ப இங்க இருந்து கிளம்புறியா இல்லையா, சும்மா தொணதொணன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க என்றான் அவன்.

 

 

அவள் வேகமாக அங்கிருந்து வெளியில் சென்றாள். பத்து நிமிடம் சென்றதும் ராம் வந்து அவனை அழைத்தான் அன்னை அழைப்பதாகக் கூறி, கல்யாண் வேக வேகமாக வெளியில் வந்தவன் அன்னையை நாடிச் சென்றான்.

 

 

“சொல்லுங்கம்மா ராம் சொன்னான் நீங்க கூப்பிட்டீங்கன்னு என்ன விஷயம்மா என்றான் அவன். “ராம் உங்க அண்ணன் உன் அண்ணிக்கிட்ட எதுக்கு சண்டை போட்டான்னு கேளு. நம்மை நம்பி வந்த பொண்ணை எதுக்கு அழ வைக்கிறான் என்றார் அவர்.

 

 

அவனுக்கு அப்போது தான் கார்த்தியை திட்டியது ஞாபகம் வந்தது, அன்னையிடம் “அம்மா எங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லைம்மா. அவளுக்கு வீட்டுக்கு ஞாபகம் வந்திருச்சு அதான் என்று சமாளித்தான் அவன்.

 

 

“புகுந்த வீட்டுக்கு வர்ற பொண்ணு பிறந்த வீட்டை நினைச்சு அழறான்னா அவளுக்கு இங்க சந்தோசம் இல்லைன்னு தானே அர்த்தம். அதுவும் இல்லாம இது விரும்பி செய்த கல்யாணம் அந்த பெண்ணுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டியவனே அழ வைத்தால் அவள் வேறு எங்கு போவாள் என்று மருமகளுக்காக பரிந்தார் அவர்.

 

 

“இல்லைம்மா நான் பார்த்துக்கறேன், இனி இப்படி நடக்காது என்றான் அவன். கார்த்திகாவை தேடி படியேறி மாடிக்கு வந்தவன் அவள் திண்டின் மேல் அமர்ந்து அழுது கொண்டிருந்தது கண்டு அங்கு சென்றான்.

 

 

அவள் அருகில் சென்றவன் அவள் தலைகோத அவன் கையை தட்டிவிட்டாள். “ரித்தி என்னை பாரேன், மன்னிச்சுடு ரித்தி. நான் உன்கிட்ட கோபமா பேசினது தப்பு தான்டா. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோயேன் என்றான் அவன்.

 

 

அவள் ஏதும் பேசாமலிருக்க அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள அவள் திமிறினாள். “ரித்தி சாரிடா, இனி இப்படி நடக்காது. நான் தான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டுட்டேன் என்றான் அவன்.

 

 

“விடுங்க என்னை நீங்க அணைப்பீங்க, அப்புறம் போன்னு விரட்டுவீங்க, விடுங்க என்னை என்று அவள் திமிற, “ரித்தி அது ஏன்னு உனக்கு புரியலையா??? என்றான் அவன். “நடந்ததுல என்ன தப்பு இருக்கு நீங்க என்னோட புருஷன் தானே என்றாள் அவள்.

 

 

“அது இல்லை ரித்திம்மா உனக்கு இன்னும் இரண்டு வருஷ படிப்பிருக்கு, என்னோட வேலையும் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்திட்டு இருக்கு. உங்க வீட்டிலையும் நம்மை இன்னும் ஏத்துக்கலை, எங்கம்மாவும் என்கிட்ட இன்னும் பேசவே இல்லை

 

 

“இதெல்லாம் இப்படி இருக்கும் போது நாம நம்ம வாழ்க்கையை எப்படி தொடங்கறது??? எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் நாம அப்போ நம்மோட வாழ்க்கையை தொடங்கலாமே

 

 

“வேலை பெரிய வேலை, நீங்க ஒழுங்கா அந்த பெங்களூர் வேலைக்கு போயிருந்தா இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்குமாஎன்று அவள் அவனை இடித்தாள். அவளை ஏதேதோ கூறி சமாதானப்படுத்தினான் அவன்.

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிலிருக்க வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யாராக இருக்கும் என்று வெளியில் எட்டிப்பார்த்தவள் துள்ளி குதித்து ஓடுவதை பார்த்த கல்யாண் அவள் சென்ற திசையை நோக்கினான்.

 

 

அங்கு கார்த்திகாவின் அண்ணன் முத்துக்குமாரும் அன்னையும் வந்துக் கொண்டிருந்தனர். “வாங்க என்று வரவேற்றவனை முத்துக்குமார் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே வந்தான்.

 

 

இந்திரா நேரே அவனிடம் வந்து எல்லோரையும் நலம் விசாரித்தவர், மாதவியின் அருகில் சென்று அவரிடம் பேச ஆரம்பித்தார்.. ‘இவளோட அண்ணனுக்கு அப்படியே அவங்க அப்பன் குணம், இவங்க அத்தையை மாதிரி இருந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டான் கல்யாண்.

 

 

வந்தவன் பொதுவாக “வந்து… வந்து கார்த்திம்மா அப்பா உன்னை வீட்டுக்கு வரச் சொன்னார் என்றான் அவன். “போங்கண்ணா இப்போ தான் உங்களுக்கு என் ஞாபகம் வருதா. அப்பா நீயெல்லாம் என்னை மறந்துட்டீங்கன்னு நினைச்சேன் என்று அவள் அண்ணனை பிடித்துக் கொண்டு ஆயிரம் கேள்விகள் கேட்டாள்.

 

 

“முத்து உனக்கு ஒழுங்காவே பேசத் தெரியாதா என்று மகனை கடிந்தவர், “தம்பி தப்பா எடுத்துக்காதீங்க, நீங்களும் எங்க பொண்ணும் சேர்ந்து எங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்து தங்கிட்டு தான் போகணும் என்று மரியாதையாக கல்யாணிடம் அழைப்பு விடுத்தார் அவர்.

 

 

சற்று யோசித்தவன் “அத்தை நீங்களும் என்னை தப்பா எடுத்துக்காதீங்க, மாமா இன்னும் எங்க மேல கோவமா தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் அவங்க இங்க வரலை, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து கூப்பிட்டா தானே எங்களுக்கும் சந்தோசமா இருக்கும் என்றான் தயங்கியாவாறே.

 

 

அவனை மறுத்து ஏதோ பேச வந்த முத்துக்குமாரை சற்று அமைதியாக இருக்குமாறு பணித்தார் இந்திரா. “நீங்க சொல்றதும் சரி தான் தம்பி கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றோம் என்றார் அவர்.

 

 

“ச்சே என்னம்மா நீங்க… என்று காலை உதைத்துக்கொண்டு  வெளியே சென்றவனின் பின்னேயே கார்த்திகாவும் ஓடினாள். இந்திரா கல்யாணின் அருகில் வந்தவர், “மாப்பிள்ளை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, அவன் எப்பவும் இப்படி தான்

 

 

“எதையும் யோசிக்க மாட்டான். அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். கோவில்ல உங்கம்மாவை பார்த்து பேசும் போதே எனக்கு உங்க குடும்பத்தை ரொம்பவே பிடிச்சு போச்சு. என் பொண்ணு நல்ல இடத்துல தான் இருக்கான்னு நான் ரொம்பவே சந்தோசப்படறேன்.

 

 

“அவ சிறுபிள்ளைதனமா நடந்துகிட்டா அவளுக்கு எடுத்து சொல்லுங்க, புரிஞ்சுக்குவா. நீங்க அவளை கொஞ்சம் பொறுத்து போவீங்களா, என்னடா எல்லாரும் பொண்ணை தானே பொறுத்துக்க சொல்லுவாங்க. நான் என்னடான்னா உங்களை அனுசரிச்சு போகச் சொல்றேன்னு நினைக்காதீங்க.

 

 

“என் பொண்ணு வளர்ந்த விதம் அப்படி, அவங்க அப்பா செல்லம், அவர் பேச்சு கேட்டே வளர்ந்திட்டா. அவ அவங்க அப்பாவை எதிர்த்து செய்த ஒரே காரியம் உங்களை கல்யாணம் செஞ்சது தான். உங்களை அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு அது தான் காரணம் என்று நீளமாக மகளுக்காக பேசியவரை “என்னத்தை நீங்க அவ இப்போ என்னோட மனைவி அவளை அனுசரிச்சு நான் போக மாட்டேனா

 

 

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, நான் அவளை நல்லா பார்த்துக்குவேன் என்றான் அவன். “சரி தம்பி நாங்க கிளம்புறோம் என்றுவிட்டு மாதவியிடமும் விடைபெற்று கிளம்பினார் அவர்.

 

 

அவர் வெளியில் வரவும் “என்னம்மா நீங்க என்னை விட்டுட்டு அவர்கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க நீங்க என்று சிணுங்கினாள் மகள். “உனக்கு எப்போ தான் கார்த்தி பொறுப்பு வரும் என்ற அன்னையை விசித்திரமாக பார்த்தாள் அவள்.

 

 

“அண்ணா அப்பாக்கிட்ட எனக்காக வரசொல்லுங்க ப்ளீஸ் என்றாள் அவள். “கண்டிப்பா சொல்றேன்ம்மா நீயும் நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வைச்சுக்கோ என்று காரை எடுத்தான் அவன்.

 

 

“நீ அவகிட்ட என்ன சொன்ன என்றார் இந்திரா. “ஒண்ணுமில்லைமா என்றுவிட்டு அவன் காரை எடுத்தான். ‘என்ன சொல்லியிருப்பான் என்று யோசித்தார் அவர்.

 

____________________

 

 

“கல்யாண் இந்த சரயுக்கு என்ன தான் ஆச்சு, தேர்வு முடிஞ்சு ஊருக்கு போனவ போனவ தான் இப்போ வரைக்கும் நம்ம ரெண்டு பேரையும் தொடர்பு கொள்ளவே இல்லை. நாம அவளோட போனுக்கு போட்டாலும் இந்த தற்போது உபயோகத்தில் இல்லைன்னு வருது என்றான் வைபவ்.

 

 

“ஆமா வைபவ் நானும் பல தடவை முயற்சி பண்ணி பார்த்துட்டேன், எனக்கு அதே தான் வருது. நம்மகூட படிச்ச அந்த காயத்ரிகூட அவளோட ஊர் தானே அவகிட்ட கேட்டு பார்க்கலாமா என்றான் கல்யாண்.

 

 

“நான் அவகிட்ட போன் பண்ணி விசாரிச்சுட்டேன். காயத்ரியோட ஊர் சரயுவோட ஊர்ல இருந்து ரொம்ப தூரமாம், அதும் இல்லாம காயத்ரிக்கு கல்யாணம் ஆகி அவ இப்போ அவளோட புருஷன் வீட்டுல இருக்கா. பேசாம நாம அவ வீட்டுக்கே போய் பார்த்துட்டா என்ன என்றான் வைபவ்.

 

 

“என்ன பேசுற வைபவ், அவ தான் சொல்லி இருக்கால, அந்த ஊர்ல இருந்து அவளை இவ்வளவு தூரம் படிக்க அனுப்பினதே பெரிய விஷயமாம். ரொம்பவும் கட்டுக்கோப்பான ஊர் அது. நாம ரெண்டு பேரும் திடுதிப்புன்னு போய் அவளை பத்தி விசாரிச்சா அவளை தப்பா நினைக்க மாட்டாங்களா

 

 

“அவளோட ஊர் இன்னமும் பழமையில தான் இருக்கு, அவங்க வீட்டுல இருக்கவங்க புரிஞ்சாலும் அக்கம் பக்கம் உள்ள நாலு பேர் நாலு விதமா பேசமாட்டாங்களா என்றான் அவன். “அதுவும் சரி தான் என்றவர்கள் அவ்வப்போது அவளை பற்றி நினைத்துக் கொள்வர்.

 

 

மகனும் மனைவியும் வீட்டிற்கு வந்து சொன்னதும் தாம்தூம் என குதித்தார் ராஜசேகர். “அவனுக்கு என்ன அவ்வளவு பெரிய இதுவா, நான் அவன் காலில் விழுந்து கூழை கும்பிடு போடவேண்டும் என்று நினைக்கிறானா அவன். கடவுளே என் பெண் அவனை கட்டிக் கொண்டு என்ன பாடுபடுகிறாளோ என்று அங்கலாய்த்தார் அவர்.

 

 

“அவ அங்க ரொம்பவே சந்தோசமா இருக்கா என்று மனைவியும் “அப்பா அவ அங்க ரொம்பவே கஷ்டப்படுறா என்று மகனும் மாறுபட்ட கருத்தை கூறினர். “என்ன சொல்ற குமார் அவ கஷ்டப்படுறாளா. அப்போ ஏன் இந்திரா அப்படி சொல்றா என்றார் அவர்.

 

 

“அப்பா அம்மாவை பத்தி உங்களுக்கு தெரியாதா, நீங்க அம்மா சொல்றதை கேட்காதீங்க. கார்த்திகிட்ட நானே விசாரிச்சேன், பாவம், அவளே தான் வீட்டு வேலை எல்லாம் செய்யறாளாம். வீடு கூட்டுறது, பாத்திரம் விளக்குறது, துணி துவைக்கறதுன்னு எல்லாம் செய்யுறா

 

 

“எனக்கே அவளை பார்த்தா பாவமா இருக்குப்பா என்று அவன் பேசியதை கேட்ட இந்திரா அதிர்ந்தார். ‘கடவுளே இவன் இப்படி தான் அவளுக்கு தப்பாக கருத்து கூறி இருப்பான் போலிருக்கிறதே என்று கவலை கொண்டார் இந்திரா.

 

 

“என் பொண்ணை கஷ்டப்பட வைக்கிறானா, கேட்கறது யாரும் இல்லைன்னு நினைச்சானா அவன் என்று மேலும் குதித்தார் அவர். உச்சாணிக்கொம்பில் இருந்த அவருக்கு பலவிதமாக வேப்பிலை அடித்து மகளை மறுவீட்டுக்கு அழைக்கவென்று அழைத்துச் சென்றார் இந்திரா.

 

____________________

 

 

கார்த்திகா அவள் வீட்டினர் வந்து போன அன்றில் இருந்து சற்று மாறியிருந்தாள். முதலில் அவளுடைய மாற்றத்தை கல்யாண் உணரவேயில்லை.

 

 

எப்போதும் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வருபவள், சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மாலையானதும் வீட்டை கூட்டி, பாத்திரம் விளக்கி வைத்துவிட்டு அதன்பின் படிக்க உட்காருவாள்.

 

 

இப்போதெல்லாம் கல்லூரியில் இருந்து வருபவள் அவர்கள் அறைக்குள் நுழைந்து புத்தகமும் கையுமாகவே காட்சியளித்தாள். ஒரு வாரத்திற்கு பின்பே அவள் மாற்றம் உணர்ந்தவன் அவளிடம் வந்தான்.

 

“கார்த்தி என்றான். “என்ன கல்யாண் என்றாள் அவள். “ஏன் இப்படி இருக்க, என்னாச்சு உனக்கு என்றான் அவன். “என்ன மாதிரி இருக்கேன், நான் நல்லா தானே இருக்கேன் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“எப்போ பார்த்தாலும் புத்தகத்தை கையிலேயே வைச்சுட்டு இருக்க, அம்மாவுக்கு கூடமாட ஒத்தாசை பண்ணலாம்ல

 

 

“அப்போ நான் படிக்க வேண்டாமா, பெயில்லானா பரவாயில்லையா என்றாள் அவள். “ஹேய் நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற, வீடு கூட்டி, நாலு பாத்திரம் விளக்கி வைக்கிறது ஒரு கஷ்டமான விஷயமா. உன் துணியை கூட நீ துவைச்சுக்க மாட்டியா

 

 

“அதுவும் அம்மா தான் துவைச்சு போடணுமா, உன்னை என்ன எல்லார் துணியுமா துவைக்க சொன்னாங்க என்றவனிடம் “அதுக்கு நீங்க ஒரு வாஷிங் மெஷின்வாங்கி வைச்சு இருக்கணும். எங்க வீட்டுல நான் ஒருவேலை செய்ததில்லை தெரியுமா. இங்க வந்து நான் படுற கஷ்டம் பார்த்து எங்க அண்ணன் கூட கேட்டான் என்று கண்கள் கலங்கினாள் அவள்.

 

 

அவள் பேசியது அவனுக்கு அபத்தமாகவே தோன்றியது, அவள் அண்ணன் ஏதோ துர்போதனை செய்து போயிருக்கிறான், இவள் ஆட ஆரம்பித்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

 

 

அவனுக்கு அவள் பேசியதில் அதிகமாக கோபம் எட்டிப்பார்த்தது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு “நீ ரொம்பவும் மாறிட்ட கார்த்தி. நான் முதல்ல பார்த்த கார்த்தி இல்லை நீ என்றுவிட்டு வெளியில் சென்று விட்டான்.

 

 

மறுநாள் காலை ராஜசேகரும் இந்திராவும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீட்டை பார்த்ததுமே புலம்ப ஆரம்பித்தார் ராஜசேகர், “இப்படி ஒரு வீட்லையா என் பொண்ணு இருக்கா என்றவரை இழுத்துச் செல்லாத குறையாக உள்ளே அழைத்து சென்றார் இந்திரா.

 

 

“வாங்க மாமா, வாங்க அத்தை என்று இருகரம் கூப்பி அவர்களை வரவேற்றான் கல்யாண். தந்தையை கண்டதும் வேகமாக வெளியில் வந்தவள் தயங்கியபடி நிற்க “என்னம்மா உனக்கு அப்பா மேல கோபம் போகலையா என்று அவர் கூறியதும் ஓடிச் சென்று அவரை கட்டிக் கொண்டாள் அவள்.

 

 

சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தை பேசியவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “நீங்க ரெண்டு பேரும் விருந்துக்கு வந்து தங்கிட்டு போகணும் என்று யாருக்கோ சொல்வது போல அவர் சொல்ல கல்யாணுக்குள் ஆத்திரம் எழுந்தது.

 

 

அவன் அன்னையை பார்க்க அவர் எதுவும் மறுத்து பேசாதே என்பது போல் மகனை பார்த்தார். மாமியாரின் கண்களும் அதையே யாசிப்பது போல் தோன்ற, “கண்டிப்பா வர்றோம் என்றான் அவன்.

 

 

“அப்போ வாங்க கிளம்பலாம் என்று அவர் பரபரக்க, “வர்றோம் ஒரு நல்ல நாள் பார்த்து வர்றோம். இன்னைக்கே வரச்சொன்னா எப்படி??? என்றான் அவனும் முறுக்காக.

 

 

‘திமிர் பிடிச்சவன், இவனை எல்லாம்… என்று நினைத்து தனக்குள் பல்லைக் கடித்துக் கொண்டவர் ‘என் பொண்ணுக்காக சும்மா விடறேன் என்று அவரே அவருக்கு சமாதானம் கூறிக் கொண்டார்.

 

 

“சரிங்க ரொம்ப சந்தோசம், அப்போ நாங்க புறப்படறோம். வா இந்திரா கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார் அவர். தந்தை கோபமாக சென்றதில் கார்த்திகாவும் வருந்தினாள்.

 

 

“அவர் எப்படி மனுஷன்னு தெரியுமா உங்களுக்கு அவரை எப்படி நீங்க அவமானப்படுத்தறீங்க???. அவர் பாவம் எனக்காக தான் பொறுத்து போறார், அவர் கூப்பிட்டதும் நாம போனா தான் என்ன??? என்றாள் அவள்.

 

 

‘அவர் மட்டுமா உனக்காக பொறுத்துக்கறார் நானும் தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் அவன். “கார்த்தி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால தான் அப்படி சொன்னேன், போதுமா. அதுவும் இல்லாம உங்கப்பா நம்மை எப்படி கூப்பிட்டார். விருந்துக்கு வந்திடுங்க மாப்பிள்ளைன்னு வாய் நிறைய கூப்பிட்டிருந்தா எவ்வளோ சந்தோசமா இருந்திருக்கும்

 

 

“யாரோ ரோட்ல போறவன்கிட்ட பேசுற மாதிரி பேசுறார், எனக்கு கஷ்டமா இருக்காதா??? என்றான் அவன். “அவர் எங்கப்பா கல்யாண், அவர் எப்படிபட்டவர் தெரியுமா, அவரை தேடி எத்தனை பேரு வருவாங்க தெரியுமா அவர் வந்து உங்க கால்ல விழணும்ன்னு நினைக்கிறீங்களா??? என்றாள்.

 

 

“நான் ஒண்ணும் அவரை என் கால்ல விழச் சொல்லலை கார்த்தி, மரியாதையா பேசியிருக்கலாம்ன்னு சொல்றேன் என்றான். “அவர் நம்மளை மன்னிச்சதே பெரிய விஷயம் நீங்க என்னனென்னமோ பேசறீங்க??? என்றாள்.

 

 

அதற்கு மேல் பேசி அவளுக்கு புரிய வைக்க முடியாது என நினைத்தவன் வேறு எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தான். முதன் முறையாக தன் வாழ்க்கையில் தவறாக முடிவெடுத்து விட்டோமோ என யோசிக்க தொடங்கினான் அவன்.

 

 

அவனுக்கு அப்போது தான் புரிந்தது காதல் வேறு, கல்யாணம் வேறு என்பது. காதல் என்பது கல்லூரியில் படிக்கும் பாடம் போன்றது. அது ஒரு அனுபவம் மட்டுமே, திருமணம் என்பது தான் நிதர்சனம் நிஜவாழ்க்கை என்ற உண்மை புரிந்தது அவனுக்கு. காதலிக்கும் போது இனிப்பாக இருந்தவள், இப்போது கசப்பாக பேசுகிறாளே என்ற வருத்தம் மேலோங்கியது அவனுக்கு.

 

 

ஒருவழியாக அவர்கள் கிளம்பி கார்த்தியின் வீட்டை அடைந்தனர். மணமக்களை வாசலில் நிறுத்தி ஆலம் சுற்றினார் இந்திரா. வீட்டிற்குள் வந்ததும் மருமகனை சோபாவில் அமரச் சொன்னார் அவர்.

 

 

கார்த்தியோ உள்ளே நுழைந்ததும் நேரே மாடியில் இருந்த அவள் அறைக்கு ஓடிச் சென்றாள். ராஜசேகரும் அவனை அழைக்கவென வாசல் வரை வந்திருக்கவில்லை. ஒரு வேளை வீட்டில் இல்லையோ என்று அவன் நினைக்க மேலிருந்து தந்தையும் மகளும் பேசுவது ஸ்பஷ்டமாக அவன் காதில் விழுந்தது.

 

 

தனித்து விடப்பட்டவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். தான் இங்கு வந்திருக்கவே கூடாதோ என்று அவன் நினைத்த வேளை நிர்மல் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

“வாங்க மாமா எப்படியிருக்கீங்க என்ற அவன் உபசரிப்பில் இந்த வீட்டில் தாயை போல ஒரு பிள்ளை இருப்பது கண்டு அவன் சற்று மகிழ்ச்சி அடைந்தான். நிர்மலும் அவனுடன் நன்றாக வளவளக்க கல்யாணுக்கு அவனை பிடித்து போனது.

 

 

அன்று இரவு அவன் அறைக்குள் சென்று வெகு நேரம் காத்திருக்க கார்த்தி அறைக்கு வரவே இல்லை. காத்திருந்தவன் எப்போது தூங்கினானோ அவனுக்கே தெரியவில்லை.

 

 

மறுநாள் எழுந்ததும் ஒரு நிமிடம் எங்கிருக்கிறோம் என்று அவனுக்கு புரியவே இல்லை. சற்று நேரத்தில் எல்லாம் புரிய இரவு கார்த்தி வருவாள் என்று காத்திருந்து உறங்கியது புரிந்தது.

 

 

காலைக்கடனை எல்லாம் முடித்து குளித்து வேறு உடைக்கு மாறியவன் ஹாலுக்கு வந்தான். அப்போது தான் கார்த்தி சோம்பலுடன் ஹாலுக்கு வந்து அவள் அன்னையிடம் காபி கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

“கார்த்தி நேத்து நைட் நீ அறைக்கு வராம எங்க போன என்றான் சற்று ஏறிய குரலில். “என்ன கல்யாண் நம்ம வீட்டில தான் ஒரு சின்ன அறை என்னால தனியா தூங்க முடியலை. எங்க வீட்டில எனக்குன்னு தனியா ஒரு அறை இருக்கு, இங்கயாச்சும் நான் தனியா படுத்தனே என்றாள் அவள்.

 

 

“கார்த்தி நான் உன்னை மாப்பிள்ளை அறைக்கு தானே போகச் சொன்னேன். நீ எதுக்கு தனி அறையில படுத்த முட்டாளா நீ??? என்று அவர் அவளை திட்ட “என்னமா நீ எப்போ பார்த்தாலும் என்னையே திட்டிட்டே இருக்க??? என்றாள் கார்த்திகா.

 

 

“விடுங்க அத்தை, அவ இங்க வரும் போது தானே இப்படி இருக்க முடியும். அவ எப்படி இருக்காளோ அப்படியே இருக்கட்டும் என்று அவன் மனதில் எதையோ வைத்துக் கொண்டு பேசினான். அவன் பேசியது இனி இங்கு வந்தால் தானே என்ற ரீதியில் இருந்தது.

 

 

இந்திராவுக்கு சற்று கஷ்டமாக இருந்தாலும் அவன் பேசியதில் தவறில்லை என்றே தோன்றியது. இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு ராஜசேகர் ஹாலுக்கு வந்தார். வந்தவர் அவனை கண்டுகொள்ளாமல் மகளிடமே ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

 

 

“கார்த்தி சீக்கிரம் கிளம்பு நாம வீட்டுக்கு போகலாம். அத்தை உங்களுக்காக நாங்க இங்க வந்தாச்சு. விருந்தும் சாப்பிட்டு தங்கவும் செஞ்சாச்சு. நெறய வேலை இருக்கு அத்தை நாங்க கிளம்பறோம் என்றான்.

 

 

“அதுக்குள்ள கிளம்பணுமா, நீங்க வேணா கிளம்புங்க என் பொண்ணு ஒரு வாரம் பத்து நாளைக்கு இங்கயே இருக்கட்டும் என்று ராஜசேகர் கூற அவனோ அவரை கண்டுகொள்ளாமல் கார்த்தியிடம் பேசினான்.

 

 

“என்ன கார்த்தி கிளம்புறியா இல்லையா, நாளைக்கு உனக்கு செமஸ்டர் தொடங்குது. நீ படிக்க வேணாமா இப்படியே இங்கயே இருக்கியா, என்ன பண்ணப்போற என்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.

 

 

ராஜசேகரின் முகம் மாறுவதை கண்ட இந்திரா இடையில் புகுந்து “கார்த்திம்மா நீ மாப்பிள்ளையோட கிளம்பு, நாளைக்கு உனக்கு தேர்வு இருக்குல, அவர் கிளம்பினா நீயும் அவரோடவே கிளம்ப வேண்டியது தானே. எங்களை எதுக்கு பார்த்திட்டு நிக்குற, இனிமே அது தான் உன்னோட வீடு என்று தாயாக அவளுக்கு கூறினார்.

 

 

“இந்திரா…….. என்ற கணவரின் அதட்டலில் திரும்பியவர் “நீங்க கூப்பிட்டா, நீங்க சொன்னா நான் கேட்குறேன்ல அது மாதிரி தானே நம்ம பொண்ணும் இருக்கணும். அவ மாப்பிள்ளையோட கிளம்பட்டும் என்றார்.

 

 

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன், அதுக்குள்ள நீ குளிச்சு தயாரா இரு என்றுவிட்டு யார் பதிலுக்காகவும் காத்திராமல் வெளியில் சென்றுவிட்டான். “என்னம்மா இவன் ரொம்ப பேசறான், வீட்டிலையும் இப்படி தான் நடந்துப்பானா என்று அவர் மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

 

“என்னங்க அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை, அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுறீங்க என்றார் இந்திரா. “அம்மா விடுங்கம்மா நம்ம அண்ணா மாதிரி அவரை நினைச்சு அப்பா பேசியிருப்பாங்க. அப்பா அவர் ரொம்ப நல்ல மாதிரிப்பா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றவள் கிளம்புவதற்கு தயாரானாள்.

 

 

வெளியில் சென்றுவிட்டு வீடு வந்தவன் கால் டாக்ஸியோடு வந்தான். “கார்த்தி கிளம்பிட்டியா, வா போகலாம் கால் டாக்ஸி தயாரா இருக்கு என்றழைத்தான் அவன். “எதுக்கு இப்போ கால் டாக்ஸி இங்க இல்லாத காரா என்றார் ராஜசேகர் கர்ஜனையாக.

 

 

“எனக்கு இப்போ கார் வாங்கற வசதி வேணா இல்லாம இருக்கலாம், என் பொண்டாடியை கார் வைச்சு கூட்டிப் போற வசதி எனக்கு இருக்கு. மாமனார் வீட்டு காசுல குளிர்காயற ஆள் நான் இல்லை என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு “கிளம்புறோம் அத்தை என்றுவிட்டு கார்த்திகாவை இழுக்காத குறையாக இழுத்துச் சென்றான்.

 

 

இப்படியே நாட்கள் மெதுவாக சென்றது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது அவள் தந்தை வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி இருந்தாள். அது படிப்படியாக குறைந்து வாரத்தில் இரண்டு நாட்கள் அவள் அங்கேயே தங்க என ஓடியது.

 

 

அவள் வீட்டிற்கு சென்று வந்தாலே வீட்டில் அவர்களுக்குள் ஒரு சண்டை ஆரம்பமாக போகிறது என்று அர்த்தம். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்று வந்தவள் அன்று இரவே ஆரம்பித்தாள்.

 

 

“கல்யாண் நீங்க எப்போ இந்த புரோக்கர் வேலையை விடப்போறீங்க என்று அவள் ஆரம்பிக்க “என்னடி சொன்ன என்றான் அவன் ஆத்திரத்துடன். “என்னது டி…யா… என்றாள் அவள்.

 

 

“புரோக்கர் வேலையா, என்ன பேசுற நீ, எப்போல இருந்து இப்படி பேச ஆரம்பிச்ச நீ. நானும் பார்த்திட்டே தான் இருக்கேன், நீ பேசற விதமும் நடந்துக்கற விதமும் கொஞ்சமும் சரியில்லை, ஞாபகத்தில வைச்சுக்கோ என்று பொரிந்தான் அவன்.

 

 

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன், உண்மையை தானே சொன்னேன். எல்லாம் அந்த வைபவால வந்தது. அவனுக்கு யோசனை வந்தா அவன் செய்ய வேண்டியது தானே இந்த வேலையை, இதுல உங்களை எதுக்கு இழுத்துவிட்டான். முதல்ல நீங்க அவனோட பேசுறதும் பழகுறதும் நிறுத்துங்க எல்லாம் சரியாகிடும் என்றாள் அவள்.

 

 

“நீயெல்லாம் மனுஷியா புரிஞ்சு தான் பேசறியா. வைபவ் தானே நமக்கு கல்யாணம் செஞ்சு வைச்சான் அந்த நன்றி கூட மனசில இல்லாம பேசற, எப்படி இதெல்லாம் உன்னால முடியுது என்றான் அவன்.

 

 

“கல்யாண் பண்ணி வைச்சா அதுக்கு நன்றி வேணா சொல்லலாம். அதுக்காக அவன் சொல்றது எல்லாம் கேட்க முடியுமா என்ன இல்லை அவன் கால்ல தான் விழணும்ன்னு சொல்றீங்களா என்றாள் அவளும் பதிலாக.

 

 

வழக்கம்போல் அவளிடம் பேச முடியாது என்று நினைத்துக் கொண்டவன் கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். நாளுக்கு நாள் அவள் பேச்சு அவனுக்கு கோபத்தையே கொடுத்தது, அவன் அன்னையின் அறிவுரைக்காகவே அவன் அமைதியாக போய்க் கொண்டிருந்தான்.

 

 

அடுத்த வாரம் முழுதும் அவளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அன்று இரவே கிளம்பி அவள் தந்தையை பார்க்க சென்றுவிட்டாள். கல்யாணோ ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தான். ‘கடவுளே இந்த முறையாவது இவள் சண்டை போடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டான். அவன் பிரார்த்தனை பொய்த்து போனது.

 

 

ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வந்தவள் பேச்சு அதிகபட்ச வித்தியாசமாக இருந்தது. அவன் அறைக்குள் நுழைந்து குளித்து உடைமாற்றி வெளியில் வந்தான் அவன். “கல்யாண் என்ற அழைப்பே அவனுக்கு உணர்த்தியது இன்று ஏதோ விபரீதம் என்று.

 

 

“என்ன என்றான் அவன். “போன வாரம் நான் சொன்னதை நீங்க யோசிச்சீங்களா என்றாள் அவள். “என்ன விஷயம் என்றான் அவன். “அதான் இந்த புரோக்கர் வேலை என்றாள் அவள்.

 

 

“இங்க பாரு புரோக்கர் வேலை அது இதுன்னு பேசுன அடிச்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல் என்றான் அவன் மிதமிஞ்சிய கோபத்தில். “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல அப்போ நீ என்னை பார்த்து காதலிக்கலை

 

 

“உனக்கு நான் முக்கியமில்லை, என்னோட தொழில் தான் முக்கியம் அப்படி தானே. அதுக்கு எதுக்கு என்னை காதலிச்ச, என்னையே கல்யாணம் பண்ணிகிட்ட, உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையையே கட்டியிருக்க வேண்டியது தானே என்ற அவன் உரத்த குரலில் வாயடைத்து நின்றாள் அவள்.

 

 

எதுவும் பேசாமல் அவள் கைபேசியுடன் வெளியில் செல்ல அவனுக்கு சந்தேகம் முளைத்தது. அவள் அவனுடன் சண்டையிடும் முன்னோ அல்லது சண்டைக்கு பின்னோ அவள் கைபேசியுடன் வெளியில் செல்வதை முதலில் சாதாரணமாக எடுத்தவன் என்ன நடக்கிறது என்று பார்க்க அவளை பின் தொடர்ந்தான்.

 

 

“ஹ்ம்ம்… சரிப்பா… நான் பேசறேன்… இல்லைப்பா ரொம்ப கோபமா பேசுறார். நான் பார்த்துக்கறேன்…ஹ்ம்ம்…ஹ்ம்ம்… சரி… சரி… சரிப்பா… நான் வைக்கிறேன் என்று ஓரிரு வரிகளில் அவள் பேசிக் கொண்டிருப்பதிலேயே தெரிந்தது அவள் தந்தையிடம் தான் பேசியிருக்கிறாள் என்று.

 

 

அவள் அறைக்கு வந்ததும் “என்ன உங்கப்பாகிட்ட எல்லாமும் ஒப்பிச்சாச்சா. என் புருஷன் ரொம்ப கொடுமை படுத்துறான்னு சொல்லிட்டியா என்றான் அவன் நக்கலாக.

 

 

“என்ன ஒட்டுக்கேட்டீங்களா என்றாள் அவளும் காட்டமாக. “இதுக்கு ஒட்டு வேற கேட்கணுமா, நீ பேசுறது எதுவும் நீயா பேசலைன்னு எனக்கு நல்லாவே புரியுது. வேணாம் கார்த்தி உன்னோட வாழ்க்கையை நீ தான் வாழணும், அதை உங்கப்பாகிட்ட கொடுத்து அதுபடி ஆடணும்னா உனக்குன்னு ஒரு தனித்தன்மையே இல்லாம போய்டும். உன் வாழ்கையும் தொலைஞ்சு போய்டும் என்றான் அவன்.

 

 

“உனக்கு இப்போ என்ன தான் வேணும், நான் உன்னை நல்லா தானே பார்த்துக்கறேன். நான் என்ன தப்பான வேலையா செய்யறேன், நல்ல முறையில யாருக்கும் கெடுதல் நினைக்காம செய்யற எந்த வேலையும் உசத்தியான வேலை தான். உன்னோட எண்ணத்தை மாத்திக்கோ, நாம சந்தோசமா வாழலாம் என்றான் அவன் கிளிபிள்ளைக்கு சொல்வது போல்.

 

 

“என்ன சந்தோசமா வாழலாம், எப்படி இந்த ஒத்த அறையில எத்தனை நாளைக்கு சந்தோசமா இருக்க முடியும். என்ன இருக்கு இங்க, எனக்கு உங்க வேலை பிடிக்கலை. யாராவது கேட்டா நீங்க என்ன வேலை செய்யுறீங்கன்னு நான் சொல்லுவேன்

 

 

“விட்டுடுங்க, இந்த வேலையை வைபவ் வேணா செய்யட்டும். உங்களுக்கு இது வேணாம், நீங்க நம்ம கடையை பெரிசு பண்ணுங்க காசு பத்தலைன்னா எங்கப்பாகிட்ட வாங்கிக்கலாம் என்றாள் அவள்.

“என்ன உங்கப்பா எனக்கு பிச்சை போடுறாரா, எனக்கு எதுக்கு அவரோட பணம். என்னால என்னோட திறமையால முன்னுக்கு வரமுடியும் என்றான். “எப்படி வரமுடியும் நீங்க அந்த வைபவோட சேர்ந்து இந்த புரோக்கர் வேலை பார்க்கற வரை நாம முன்னுக்கு வரவே முடியாது என்றாள்.

 

 

“நீ எதுக்கு எப்போ பார்த்தாலும் வைபவை இழுக்குற, இன்னொரு தரம் புரோக்கர்னு சொன்ன அவ்வளோ தான் தெரிஞ்சுக்கோ என்று கையை ஓங்கியவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கீழே இறங்கினான். அவர்கள் சண்டையிட்டு கொள்ளும் சத்தம் வெளியில் கேட்க மாதவி தவித்து போனார்.

 

 

இப்போதெல்லாம் தினமும் இருவரும் இப்படி அடித்துக் கொள்வது அவருக்கு வேதனையாக இருந்தது. கணவன் மனைவி சண்டையில் இடையில் சென்று பேசினாலும் தவறாகி போகும் என்று அவர் எதுவும் பேசாமலிருந்தார்.

 

 

அவரால் முடிந்தவரை ராம் அப்போது அங்கு இல்லாதவாறு பார்த்துக் கொண்டார், அவர்கள் சண்டையிடும் சமயம் அவனை வெளியில் ஏதாவது வேலை கொடுத்து அனுப்பிவிடுவார்.

 

 

இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தனர். “ஆமாம் அப்படி தான் பேசுவேன், உங்களால என்ன செய்ய முடியும். எனக்கு அந்த வைபவை சுத்தமா பிடிக்கலை. அவன் எல்லாம் ஒரு ஆளா, காலேஜ்ல அந்த ஷர்மிகூட சுத்திட்டு இருந்தவன், அவளை சொல்லாம கொள்ளாம கழட்டிவிட்டுடான்

 

 

“நீங்க சொல்லலைன்னா எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா, அது மட்டுமா அவன் செஞ்சான். அந்த சரயுகிட்டயும் அவன் ஏதோ விளையாடியிருக்கான். அதான் அவளும் இப்போ ஆளு அட்ரசே காணோம் என்று அவள் இஷ்டத்திற்கு பேச அதற்கு மேல் பொறுக்க முடியாதவனின் வலது கரம் அவள் இடது கன்னத்தை பதம் பார்த்தது.

 

 

“அவனை பத்தி இனி ஒரு வார்த்தை பேசின உன்னை கொன்றுவேன். என்ன தெரியும் உனக்கு அவனை பத்தி, ச்சே!!! நீயெல்லாம் ஒரு மனுஷி. உனக்கு யார் அவனை பத்தி தப்பு தப்பா சொன்னது அந்த ஷர்மியா. அவ தான் அப்படி சொல்லியிருக்கணும்

 

 

“அதை கேட்டுட்டு வந்து தான் நீ குதிக்கிறியா, அந்த ஷர்மி மாதிரி ஒரு கேவலமானவ சொல்றது வைச்சு நீ வைபவை எடை போடுவியா??? அவன் உனக்கு என்ன கெடுதல் செஞ்சான், நமக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தவிர அவன் வேற எந்த தப்பும் செய்யலையே??? என்றான் அவன்.

 

“போதும் நீ எதுவும் பேச வேண்டாம். உனக்கு உன்னோட நண்பன் தான் முக்கியம், அவனோட சேர்ந்து நீ குட்டிசுவரா தான் போவேன்னு அடம் பிடிக்கிற. அப்படியே இரு, நான் இனி இங்க இருக்க மாட்டேன் என்று அழுது கொண்டே வெளியில் கிளம்பியவளை தடுத்தான் அவன்.

 

 

“கார்த்தி நான் உன்னை வெளிய போக சொல்லலையே, நீயா எதுக்கு வெளிய போகணும்ன்னு நினைக்கிற, வேணாம் கார்த்தி அம்மா வருத்தபடுவாங்க உள்ள வா என்றான் அவன்.

 

 

“அப்போ என்னோட வருத்தம் உங்களுக்கு முக்கியமில்லையா??? என்றவள் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் அவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியேறினாள்.

 

 

மாதவி அவர்கள் திருமணத்திற்கு பின் பேசாமல் இருந்தவர் முதல் முறையாக மகனிடன் வந்து பேசினார். “என்னப்பா கல்யாண் ஏன் இப்படி??? என்றவரிடம், “மன்னிசுடுங்கம்மா அவ என்னை பத்தி என்ன சொல்லி இருந்தாலும் நான் பொறுத்து போயிருப்பேன்

 

 

“அவ வைபவை பத்தி தப்பு தப்பா பேசறாம்மா. எனக்கு நீங்க பார்க்கற வேலை பிடிக்கலை நீங்க வேற வேலை பாருங்கன்னு அவளா என்கிட்ட சொல்லி இருந்தா கூட நான் கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்

 

 

“ஆனா அவ எல்லாமே அவங்க அப்பா சொல்லிக் கொடுத்து தான் பேசறா, இப்படி போயிட்டு இருந்தா நாங்க எப்படிம்மா சந்தோசமா இருக்க முடியும். விடுங்க அவளா உண்மை புரிஞ்சு என்னை தேடி வருவா என்றான் அவன்.

 

 

“அக்கம் பக்கம் பேசுறவங்களை நாம எப்படிப்பா தடுக்க முடியுமா??? என்றார் கவலையுடன். “அம்மா அவ படிச்சுட்டு இருக்கா, ரெண்டு பேரும் இப்போ ஒண்ணா இருந்தா சரியா வராது. அவ படிப்பு முடியற வரை அவ அங்க தான் இருப்பான்னு சொல்லி சமாளிங்கம்மா.

 

 

“பேசுறவங்க எவ்வளவு நாளைக்கு பேசுவாங்க, ஒரு நாள் இது இப்படி தான்னு அவங்களும் அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க என்று வேதனை கலந்த குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

 

 

மகனை வேதனை கலந்த முகத்துடன் பார்த்தார் மாதவி. மாதவிக்காக ஒரு முறை அவன் சென்று அவளை அழைக்க அங்கு ராஜசேகர் அவனை அவமானப்படுத்தி அனுப்பிவிட இந்த வீட்டில் இனி கால் வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான் அவன்.

 

 

வைபவ் அவனிடம் கார்த்தியை பிரிந்ததை பற்றி கேட்டான். “கல்யாண் உங்களுக்குள்ள என்ன தான் நடந்தது, எதுக்கு இப்படி ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க, அம்மா எவ்வளவு வருத்தபடுறாங்க தெரியுமா??? என்றான் அவன்.

 

 

“வைபவ் அவ நான் அவங்க அப்பா சொல்ற மாதிரி ஆடணும்ன்னு நினைக்கிறா, அது சரியா வராது அதான் நாங்க பிரிஞ்சுட்டோம். நீ எதுவும் சொல்லாத நீ என்ன சொல்லுவேன்னு எனக்கு தெரியும். அப்படி அவங்க சொல்றது கேட்டா தான் என்னன்னு நீ சொல்லுற அதானே

 

 

“அவங்க அப்பாவுக்கு ரெண்டு விஷயம் தான் மனசுல ஓடுது, ஒண்ணு நான் அவர் பொண்ணோட சேர்ந்து வாழணும் அவர் வீட்டோட மாப்பிள்ளையா அவர் சொல் கேட்டு அவர் கீழே இருக்கணும், இல்லையா என்னை அடியோட வெட்டி விடணும். இதை தான் அவர் நினைக்கிறார், இது ரெண்டுக்குமே நான் வழி விட மாட்டேன்

 

 

“நீ இந்த விஷயத்தை பத்தி மேற்கொண்டு எதுவும் பேசாதே, எங்களை சேர்த்து வைக்கிறேன்னு சொல்லி அவகிட்டயும் போய் பேசாதே. அவ முன்ன மாதிரி இல்லை, எடுத்தெறிஞ்சு பேசுவா என்றான் கல்யாண்.

 

 

கல்யாண் அவ்வளவு தூரம் சொல்லியும் வைபவ் கார்த்தியை சந்திந்து பேசினான். நண்பன் சொன்னது போலவே அவள் அவனை அவமானப்படுத்தியே பேசினாள். இருந்தும் அவ்வப்போது அவளை சந்திக்கும் போது அவன் பேசாமல் இருப்பதில்லை. அவளும் அவனை எதிர்த்து பேசாமல் இருந்ததில்லை.

 

 

ஐந்து வருடங்கள் ஓடியதே தெரியவில்லை, அவள் B.E., முடித்து M.E., அதன்பின் MBA., என்று படித்துக் கொண்டே இருந்தாள். அவள் தன் கவனம் முழுவதையும் படிப்பின் பக்கம் திருப்பி மேலே மேலே படித்துக் கொண்டிருந்தாள்.

____________________

 

 

இருவரும் தங்கள் நினைவில் இருந்து வெளியில் வந்தனர், கல்யாண் தனித்திருந்தாலும் எப்போதும் அவள் நினைவுடனே இருந்தான். கார்த்திகாவோ அவன் மீது கோபமாகவே இருந்தாள். அவ்வப்போது அவள் கோபத்தை குறையாமல் பார்த்துக் கொண்டார் ராஜசேகர்.

 

கார்த்திகாவுக்கு அவள் அன்னை பேசியதின் அர்த்தம் புரிந்தது. அவள் மனம் முழுதும் கல்யாண் மட்டுமே நிறைந்திருக்கிறான் என்று உணர்ந்தாள் அவள். அவனை நினைக்கவே கூடாது என்றிருந்திருக்கிறாளே தவிர அவனை மறந்து இருக்க ஒருநாளும் அவள் நினைக்கவில்லை என்பது கால தாமதமாக உணர்ந்தாள்.

 

 

இருவரும் பிரிந்ததில் இருந்து அவள் படிப்பு படிப்பு என்று தன்னை அதில் ஆழ்த்திக் கொள்ள அவன் வேலை வேலை என்று தன்னை மேம்படுத்திக் கொண்டிருந்ததில் தங்களின் பிரிவை அதிகமாக எண்ணாமலிருந்தனர்(?).

 

 

அவ்வப்போது அவளை காணும் நோக்கில் அவன் கல்லூரிக்கு சென்று பல முறை அவளை தூரத்தில் இருந்து பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வான். அவன் பார்ப்பதை சில முறை அவளும் கண்டிருக்கிறாள். அவன் வந்து பேசினாலும் அவள் முகத்தில் அடித்தது போல் பேசியதில் அவன் அதிகமாக அவளை நெருங்கி பேசியதில்லை.

 

 

அவளுக்குள் பெரும் குற்றஉணர்வு எழுந்தது, எல்லாமே தன்னால் தானோ… இல்லையே நாம் நினைத்ததில் எந்த தவறுமில்லை என்று ஒரு மனது சமாதானப்படுத்திக் கொண்டது.

 

 

ஏனோ மனதில் ஒரு வெறுமையும், இயலாமையும், ஏக்கமும் வந்து போனது. நான் அவனுக்கு வேண்டாமா என்ற சிந்தனை மெல்ல தலை தூக்கியது…. கல்யாணும் அவளாக வரவே மாட்டாளா என்ற உணர்விலேயே இருந்தான்….

 

 

Advertisement