பெருங்காதல் கூடுதடி! – 7

 

 

அழகும் பழமையுமான இரண்டடுக்கு தோப்பு வீடு அந்த மாந்தோப்பில் வீற்றிருந்தது. அந்த வீட்டின் வலது புறம் வரிசையாக ஐந்து சிறு வீடுகள். அங்கு தான் வேலை பார்ப்பவர்கள் சிலர் தங்கி இருந்தார்கள். மீதமிருப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து தினமும் பணிக்கு வந்து செல்பவர்கள்.

தோப்பு வீட்டின் மாடி பகுதி முதலாளி குடும்பம் வந்தால் தங்குவதற்காக விடப்பட்டிருக்க, கீழ் தளத்தில் தான் சமையலறை போக மீதம் இருந்த அறைகளில் விவசாய பொருட்கள், மாம்பழங்களை எல்லாம் போட்டு வைப்பார்கள்.

ஒரே ஒரு அறையில் மட்டும் வைஷ்ணவி குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டினை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் இருக்க, இப்பொழுது முதலாளி குடும்பத்திற்கான சமையல் பொறுப்பும் தமிழ் குடும்பம் என்ற பெயரில் அவர்களிடம் தான் வந்தது.

அதில் லலிதா அம்மாவிற்கு எந்த குறையும் இல்லை. அவரது கல்வித்தகுதி என்றால் பள்ளிப்படிப்பு வரை முடித்திருக்கிறார் அவ்வளவு தான். ஆனால், இவரின் நேர்மையைக் குறித்து பழைய முதலாளி நல்ல விதமாக சொல்லியிருந்த காரணத்தால், இந்த தோப்பை நிர்வகிக்கும் பொறுப்பை பொன்ராம் எந்த யோசனையும் இல்லாமல் இவரிடம் வழங்கியிருந்தார்.

லலிதாவுடைய தகுதிக்கு இது மிகவும் உயர்ந்த வேலை! பிள்ளைகளுடன் கௌரவமாக, யார் உதவியுமின்றி, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்த முதலாளியின் பெயரில் அவருக்கு மிகவும் நன்மதிப்பு. ஆக, அனைத்து வேலைகளையும் செய்து தருவார். நிறைய உழைப்பை போடுவார். மிகவும் விசுவாசமாக இருப்பார்.

இவரைப்போன்ற விசுவாசிகள் பலரை சம்பாரிக்குமளவு நல்ல முதலாளியாக இருந்தது தான் பொன்ராமின் வெற்றியின் அஸ்திவாரம்.

வைஷ்ணவிக்கு தான் சித்தார்த்தின் வருகை பெரும் தவிப்பு. ஆனால், அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் அவன் பார்வையால் கூட இவளைத் தீண்டுவதில்லை.

லலிதாவிடம் தேவைக்கு கொஞ்சம் பேசுவான். பிரதீப்பிடம் கொஞ்ச நாட்களிலேயே தோளில் கைபோட்டுப் பேசுமளவு நெருக்கம் வந்திருந்தது. அவன் கல்லூரி முடிந்தும், சித்தார்த் பேக்டரி வேலை முடிந்தும் வீட்டிற்கு வந்ததும் இவர்கள் இருவரும் தான் தோப்பை சுற்றி வருவார்கள்.

பிரதீப்பும் சித்துவிடம் நன்கு ஒட்டிக்கொண்டான்.

சார் என்ற அழைப்பு எல்லாம் மாறி, “ஐயே!” என்று கேலிக் குரலில் அழைப்பான். ஐயகாரு… ஐயா… என்று மற்றவர்கள் அழைக்க அதைத் திரித்து அழைத்து இவன் விளையாடுவான்.

சித்து அந்தளவு அவனுக்கு இடம் தந்திருந்தான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

அனைவரோடும் நன்றாகப் பேசினாலும் வைஷ்ணவியிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட சித்தார்த் பேசியதில்லை. இதில் அவளே கொஞ்சம் குழம்பித் தான் போனாள்.

விட்டது தொல்லை என்று நினைக்க முடியாமல், அவனது நிராகரிப்பு மனதினோரம் ஊசி குத்தும் வலியைத் தோற்றுவித்து அவளை வதைத்தது.

கூடவே வைஷுவிற்கு தன் தம்பி, இப்படி தகுதி பார்க்காமல் தங்களை விட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களிடம் இயல்பாகப் பழகுவது அவ்வளவு உறுத்தலாக இருந்தது.

பணம் வைத்திருப்பவர்கள் இன்று இறங்கி வரலாம். ஆனால், அவர்களின் மனநிலை எப்பொழுதும் மேலேயே தானே இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் கை கழுவி விடுவார்கள் ஆயிற்றே!

ஏற்கனவே பலமாக அனுபவ பாடம் கற்றவளுக்கு, தன இளைய சகோதரனை நினைத்து அத்தனை தவிப்பாக இருந்தது.

தம்பியும் தன்னை போல பட்ட பிறகு நோகக் கூடாதே என்று அவனை மறைமுகமாக எச்சரித்துப் பார்த்தாள். துளியும் பயனில்லை.

தம்பிக்கு புரியவில்லையோ என்று நேரடியாகவே, “பாரு பிரதீப் அவங்க இருக்க லெவலுக்கு அவங்க கூட எல்லாம் எதுக்கு உனக்கு பிரண்ட்ஷிப்? நாளை பின்ன எதுவும் பிரச்சனை வந்தா சொல்லிக்காட்ட போறாங்க…” என்று சொல்ல,

“அக்கா நீ இன்னும் எந்த காலத்துல இருக்க? அதெல்லாம் சித்தார்த் சார் தகுதி, தராதரம் எல்லாம் பார்க்கிறவர் போலத் தெரியலை. நீ என்னக்கா திடீர்ன்னு ஸ்டேட்டஸ் பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க…” என இவளைப் பேசவே விடலை.

இப்படி பேசுபவனிடம் என்னவென்று சொல்ல முடியும்? இவள் அவமானப்படும்போது தம்பி தன் பதின்ம வயதில் இருந்தான். அப்பொழுது சொல்லும் நிலையில் வைஷு இல்லை. இப்பொழுது கல்லூரியில் படிக்குமளவு வளர்ந்து விட்டான் தான் என்றபோதிலும் ஏனோ அவளால் உடைத்துச் சொல்ல முடியவில்லை.

முடிந்த விஷயம் முடிந்ததாகவே இருக்கட்டும் என்று அவளுக்கு அவளே சப்பை கட்டு கட்டிக் கொண்டாலும், உண்மையில் தன் தம்பியிடம் என்றாலும் கூட சித்தார்த்தை அவளால் விட்டுக்கொடுக்க முடியாது.

தந்தையை கண்முன்னே பறிகொடுத்தவளுக்கு சில மாதங்கள் என்றாலும் தந்தை ஸ்தானத்தில் இருந்தவன் அவன். அவ்வளவு பாசத்தை நேசத்தைக் காட்டி அவளை மயக்கி வைத்திருந்தான். அப்படிப்பட்டவன் தான் ஒரே நாளில் அவளை காலில் தூக்கிப் போட்டு மிதித்தும் இருந்தான். பணத்திற்காகத் தேடி வருகிறாய் என்று அவன் சொன்ன ஒற்றை வாக்கியத்தில் அவளின் மொத்த உலகமும் இருண்டல்லவா போய்விட்டது.

எண்ணங்களின் வீரியத்தில் கண்ணிலிருந்து நீர் பொழிய, “அக்கா… எதுக்கு இப்ப சின்ன குழந்தை மாதிரி அழற? என்னாச்சு?” என பதறினான் பிரதீப்.

வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள், “ம்ப்ச்… பேட் எக்ஸ்பீரியன்ஸ்…” என்று தோள்களைக் குலுக்கி விட்டுவிட்டு, “உனக்கு அப்படி எதுவும் நடக்காம இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று இளையவனின் கன்னம் தட்டி சொன்னாள்.

பிரதீப்பிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அக்காவை பண பேதம் பார்த்து நோகடித்தவர்கள் யாராக இருக்கும் என்று குழம்பிப் போனான்.

அவனை பொறுத்த வரையிலும் அக்காவிடம் எல்லாவற்றையும் ஒப்பிப்பான். ஆனால், வைஷு அப்படி இருந்தது இல்லை. நிறைய விஷயங்களை வடிகட்டி தான் சொல்வாள். அவன் காதிற்கே வராமல் போன விஷயங்களும் ஏராளம்.

அக்கா தன்னிடம் மறைப்பதில் அவனுக்கு எந்த சுணக்கமும் இருந்ததில்லை. அவளுக்கு எப்பொழுது சொல்லத் தோன்றுகிறதோ அப்பொழுது சொல்லட்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. ஆனாலும் அக்கா தன்னையும் கொஞ்சம் பெரிய மனிதனாய் நினைத்துச் சொன்னால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் அவனிடம் இருக்கத்தான் செய்யும். என்ன அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.

மறுநாள் மாலையில் சித்துவும் பிரதீப்பும் தோப்பை சுற்றி வேலைகளை பார்த்தவாறே நடந்துவர, சித்து மட்டும் தனியாகச் சென்று கொஞ்ச நேரம் கைப்பேசியில் பேசிவிட்டு வந்தான். இது அன்றாட வாடிக்கை தான்.

அவன் பேசி முடித்து வரும் வரையிலும் எத்தனை லோட் மாம்பழம் ஏறியிருக்கிறது என்ற கணக்கு வழக்குகளை பிரதீப் சரிபார்த்துக் கொண்டிருப்பான்.

அக்காவிடம் அவள் விஷயங்கள் அவளாகச் சொல்லட்டும் என்று இருப்பது போல ஒரு மரியாதையை சித்துவிடம் பிரதீப்பால் கடைப்பிடிக்க முடியவில்லை. அவன் இவ்வாறு அடிக்கடி சென்று கைப்பேசியில் பேசி வருவது சந்தேகத்தைத் தோற்றுவிக்க, “என்ன ஐயே லவ்வா?” என்றான் கண்ணடித்து.

“டேய்…” என இதழ் கடித்து மென்னகை புரிந்தவன், தலைமுடியைக் கோதியவாறு எதிர்புறம் பார்வையை அலைய விட்டான்.

“ஹையோ ஐயே! இதென்ன வெட்கமா? ஹப்பா முடியலை போங்க… நான் டோட்டலா பிளாட்…” என்று கலாய்க்க, “ச்சு சும்மா இருடா…” என்று மீண்டும் சிரித்து வைத்தான் சித்தார்த்.

“அச்சோ செம லவ் போலவே…” என மீண்டும் குதூகலிக்க, “ஹாஹா… லவ் தான்… அதுவும் நிறைய நிறைய… என்ன இப்ப கல்யாணமே பண்ணிட்டேன்” என்று சொன்னதும் பிரதீப்பின் விழிகள் விரிந்து போனது.

“என்ன சார் சொல்லறீங்க? உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என கண்ணை அகல விரிக்க, சித்து சட்டென்று அவன் வாயைப் பொத்தினான்.

“மெல்லடா… நான் செஞ்சது திருட்டு கல்யாணம். நீயே எல்லாருக்கும் சொல்லிடுவ போல…” என்று அதட்டிய சித்துவிற்கு தெரியாதா பிரதீப்பிடம் சொல்லும் விஷயம் அப்படியே வைஷுவின் காதிற்கும் போகும் என்று.

என்ன தான் அவளுக்கு சந்தேகம் வராதவாறு அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தாலும், அவளுடைய தம்பிக்கும் அவளுக்கும் படிப்பு இருப்பதால் தான் இங்கே இன்னும் வேறு வழியில்லாமல் இருக்கிறாள் என்பது அவனது ஊகம். இந்த ஆண்டோடு படிப்பு முடிந்தால், மீண்டும் எங்கே கண்காணாமல் ஓடி விடுவாளோ என்ற அச்சம் இருக்க, அதற்காகப் புனைவது தான் இந்த கதை.

தான் வேறு ஒருத்தியை நேசித்துக் கொண்டிருக்கிறேன். அவளையே மணந்து விட்டேன் என்று அவளுக்கு தெரியப்படுத்தினால், அதன்பிறகு நான் அவள் பக்கம் திரும்ப மாட்டேன் என்று நம்புவாள் தானே… அந்த நம்பிக்கை இருந்தால் மீண்டும் ஓடி ஒழிய மாட்டாள் தானே!

இப்படி ஒரு திட்டத்துடன் பிரதீப்பிற்கு வலை விரிக்க, அவனும் அழகாய் வலையில் காலை வைத்து விட்டிருந்தான்.

“என்ன சொல்லறீங்க சார் திருட்டு கல்யாணமா?” என இன்னும் வாயைப் பிளந்தான் இளையவன். அவனுக்குப் பயங்கர சுவாரஸ்யமாக இருந்தது.

“நீ இப்படி சார்ன்னு கூட கூப்பிட்டுக்கடா… அதைவிட்டுட்டு ஐயே, பெய்யேன்னுட்டு…” என்று சித்தார்த் சொல்லிவிட, அப்படி விட்டுவிடுபவனா அவன்.

“ச்ச! அதிர்ச்சியில மறந்துட்டேன் ஐய்யே…” என பிரதீப் ஐய்யே என அழுத்திச் சொல்லி சிரிக்க, அவன் முதுகில் ஒரு அடியைத் தந்தான் நம் நாயகன்.

“சரி சரி பேச்சை மாத்தாதீங்க… உங்க காதல் கதையை சொல்லுங்க…” என ஆர்வமாகி விட, ‘ம்க்கும்… அப்படி ஒன்னு இருந்தா தானே சொல்லறதுக்கு…’ என மனதிற்குள் நொடித்தவன், அவனாகவே கொஞ்சம் பழைய சினிமா கதைகளிலிருந்து அங்கங்கே உருவி சில பல உருட்டுகளை உருட்டி விட, இவன் என்னவோ வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“செம மாஸ் ஐயே நீங்க…” என சிலாகித்தான் பிரதீப். சுத்தம் என்று தான் சித்துவிற்கு தோன்றியது.

“அப்பறம் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என இன்னும் ஆர்வமாகக் கேட்க, “அவ வீட்டுல வசமா மாட்டிக்கிட்டா… அப்பறம் என்ன ஆளை தூக்கிட்டோம் இல்ல…” என காலரை உயர்த்தி விட்டு சொன்னான்.

“ப்பா… செம… அதுசரி அவங்க வீட்டுல தானே பிரச்சினை உங்க அம்மா, அப்பா பார்க்க ரொம்ப ஸ்வீட்டா தானே இருக்காங்க. இவங்க கிட்ட சொல்லி கல்யாணம் பண்ண வேண்டியது தானே…” என சரியாக பாயிண்டை பிடித்துக் கேட்க,

‘இவன் ஒருத்தன், நானே கஷ்டப்பட்டு ஒரு கதையை ரெடி பண்ணினா… அதுக்குள்ள இருந்து குறுக்கு விசாரணை நடத்தறான்’ என நொந்தபடி, “அது ஏக்டுவலி அப்ப கொஞ்சம் சிட்டுவேஷன் சரியில்லை… இனி சந்தர்ப்பம் அமையும் போது தான் சொல்லணும்” என்றான்.

“ஓ… எனக்கு புரிஞ்சு போச்சு… அந்த பொண்ணு வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொன்னீங்க தானே… ஒருவேளை அவங்க உங்க கூட இருக்கிறது தெரிஞ்சா உங்க ரெண்டு பேர் உயிருக்கும் ஆபத்து இருக்குன்னு கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம அவங்களை மறைச்சு வெச்சிருக்கீங்க. கரெக்ட்டா?” என பிரதீப்பாக கேட்க, “எப்படிடா?” என வியப்பது போல பாவனை காட்டினான் சித்தார்த்.

சித்தார்த்தின் எண்ணப்படி விஷயம் அன்று இரவே வைஷ்ணவி காதுக்கு எட்டியிருக்க அவள் உடைந்தே போனாள்.

அவன் அத்தனை மட்டமாகப் பேசியும் அவனை மறக்க முடியாமல் இங்கே நான் தவிக்க அவன் அவ்வளவு எளிதாக என்னை மறந்துவிட்டு இன்னொரு காதல் செய்தானா? அதுவும் எந்த உறுத்தலும் இல்லாமல் திருமணமே செய்து விட்டானா? என எண்ணியவளுக்கு அப்படி அழுகை பொங்கியது.

அப்ப இதுனால தான் என்னைப் பார்க்கவோ என்கிட்ட பேசவோ இல்லையா?

சித்து பொய்த்துப் போனதை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை. அதனை ஏற்கும் அளவு வலுவும் அவளிடம் இல்லை.

இவள் தான் அவன் வேண்டவே வேண்டாம் என்று அவன் கண்ணிலேயே படாமல் ஐந்து ஆண்டுகளாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறாள். அப்படியிருக்க அவன் இவளைக் கடந்து போனதிற்கு இத்தனை வேதனை!

அது தன்னவனின் மீது கொண்ட நேசத்தின் வெளிப்பாடு என அவளுக்கு எப்பொழுது புரியுமோ?

அவள் பெற்ற காயம் பெரிது. அது ஆற மறுக்க, அவளின் கோபமும் வீம்பும் குறைய மறுக்கிறது.

தன்னை விட்டுச் செல்லும் முடிவைக் கைவிட்டு விடுவாள் என்ற எண்ணத்தில் சித்து பரப்பிவிட்ட பொய்யின் எதிர்வினை இப்படி இருக்கும் என்று அவன் எண்ணிப் பார்க்கவில்லை.

மறுநாள் முகம் எல்லாம் சோர்ந்து, கண்ணிமைகள் வீங்கி, மூக்கு சிவந்து… என வைஷ்ணவி இருந்த தோற்றம் அவள் விடிய விடிய அழுதிருக்கிறாள் என்று பறைசாற்றியது.

தன் மீது எல்லையற்ற கோபம் இருந்தபோதும், தன்னை இன்னமும் வெறுக்காமல் அவள் நேசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தானே அவளின் தோற்றம் உணர்த்துகிறது?

சித்தார்த்தின் மனதில் இமயத்தின் அளவு பாரம் ஏறிக்கொண்டது. எத்தனை தூய்மையான நேசத்தை எவ்வளவு மோசமான வார்த்தைகளால் கொச்சைப் படுத்தியிருக்கிறான். இதற்கு என்ன தண்டனை தந்து மன்னிப்பைப் பதிலாகப் பெற முடியும்?

மன்னிப்பை யாசிக்கும் தகுதி கூட இல்லையே என அவன் மனம் சோர்ந்தது.

‘டோன்ட் லீவ் ஹெர் அட் எனி காஸ்ட்’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனுக்கு, தவறு தான் செய்தால், தண்டனை தனக்கு மட்டும் தான் வேண்டும். அவள் நேசத்திற்கு நிச்சயம் நியாயம் செய்வேன் என்ற எண்ணம் தான்!

இனிமேல் பின்வாங்கும் எண்ணம் அவனுக்குச் சுத்தமாக இல்லை.

எப்படி வைஷுவின் கோபத்தைப் போக்கி அவள் கரம் சேர்வான்? பொறுத்திருந்து பார்க்கலாம்.