பெருங்காதல் கூடுதடி! – 9

 

 

மகனோடு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலும், அவன் மனபாரத்தை நேரம் கிடைக்கும் போது எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் மகனுடன் கிளம்பி வந்துவிட்டிருந்த பகவதிக்கு… அவன் நந்தியல் வந்ததிலிருந்து புதியதொரு அவதாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவனிடம் அடிக்கடி எழும் கோபம் காணாமல் போயிருந்தது. வீட்டில் அதிக நேரம் நேரத்தை செலவழித்தான். பழைய சிடுசிடுப்பு சுத்தமாக இல்லை. வேலை செய்பவர்களிடம் இன்முகமாகப் பேசினான். இது தன் மகன் தானா என்று பகவதியே வியந்து போனார். இந்த ஊர் என்ன மாயம் செய்ததோ என்று அடிக்கடி எண்ணுமளவிற்கு இருந்தது அவனது தலைகீழ் மாற்றம்.

ஒத்த வயதுடைய லலிதாவும் இன்முகமாகப் பழக, அவருக்கு இங்கு மிகவும் இதமாகப் பொழுது கழிந்தது.

கணவனின் எண்ணங்கள் மட்டும் அவ்வப்பொழுது வாட்டும். இப்பொழுது என்ன செய்கிறாரோ, இந்நேரம் வீட்டிற்கு வந்திருப்பாரா என்றெல்லாம் யோசனைகள் போகும். கணவரிடமும் கேள்வி கேட்க முடியாது, வீட்டு வேலைக்காரர்களிடமும் வீட்டு விஷயம் பேச முடியாது. கணவராக அழைத்தால் பேசலாம் என்றால் அவர் மகனுக்கு மட்டும் தான் அழைக்கிறார். அப்பொழுது இவரும் பேசிக்கொள்வதோடு சரி! கணவராக இவரை அழைப்பதோ இவர் கணவரை அழைப்பதோ நடப்பதே இல்லை. மனம் அந்த விஷயத்தில் சுணங்கித் தான் போனது.

‘அப்ப அவருக்கு நான் இல்லாட்டி தான் நிம்மதி போல…’ என்றொரு எண்ணம் விரக்தியாய் எழுவதையும் தடுக்க முடிந்ததில்லை.

‘என்ன வாழ்க்கை இது?’ என்று நொந்து கிடப்பவருக்கு மகனின் மாறுதலும், இந்த தோப்பும், லலிதாவின் குடும்பமும் தான் பெரும் ஆறுதல்.

லலிதாவுடன் சேர்ந்து பகவதியும் சமைப்பார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று லலிதா மறுத்துப் பார்க்க, “உங்களுக்கு பார்க்க நிறைய வேலை இருக்கு. எனக்கு எதுவும் செய்யாம இருக்க ரொம்ப போரா இருக்கு. அதோட எனக்கும் நல்லாவே சமைக்க தெரியும்” என சொல்லி வாயை அடைத்து விட்டார்.

அன்றும் இருவரும் பேசிக்கொண்டே சமைத்துக் கொண்டிருக்க, “அம்ம்ம்ம்மா…” என்றொரு வெகு அழுத்தமான குரல். குறைந்த சத்தம் தான். ஆனால், வார்த்தையின் அழுத்தத்திலேயே கோபத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இருவரும் ஒருசேர திரும்பி பார்க்க, இடுப்பில் கையை வைத்து முறைத்தபடி நின்றிருந்தாள் வைஷ்ணவி.

“உங்களுக்கு நைட்டு எல்லாம் கால் வலி. இப்ப எழுந்து சமைக்காட்டி என்ன? நான் பார்த்துக்க மாட்டேனா?” என கடிந்து கொண்டாள்.

பிரதீப் தான் நேற்று இரவு எல்லாம், “அம்மா கால் வலிக்குதுன்னு சொன்னீங்க… நிறைய வேலையா? இருங்க காலுக்கு தைலம் போட்டு விடறேன்” என அவன் அம்மா தூங்கும் வரை அலப்பறை செய்து வைத்திருந்தான். ‘நான் எப்ப இவன்கிட்ட கால்வலின்னு சொன்னேன்’ என லலிதாவே வெகுவாக குழம்பிப் போய்விட்டார்.

அம்மா உறங்கிய பிறகும், “அக்கா ஏன் இப்ப எல்லாம் அந்த பகவதி ஆன்ட்டி வந்ததுல இருந்து நீ வீட்டுல அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணறதே இல்லை… அம்மா பாவம் கா… கொஞ்சம் நீ ஹெல்ப் பண்ணி தந்தா ரிலாக்ஸா இருப்பாங்க இல்ல…” என எட்டெட்டு பிட்டாய் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு போட்டு விட,

அவளுக்கும் ரொம்பவும் உறுத்தியது. தம்பி சொல்லுவது போல அவர்களைத் தவிர்ப்பதற்காக வீட்டின் பொறுப்பையும் சேர்த்து அல்லவா தவிர்த்துக் கொண்டிருக்கிறாள். அம்மா பாவம் தானே என எண்ணியவள் காலையில் எழுந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டாள். ‘இன்னைக்கு சமையலை நான் பார்த்துக்கிறேன் மா’ என்று.

அதைக்கேட்ட பிரதீப் போர்வைக்குள் சிரித்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் அக்காவை தூண்டவேண்டிய விதத்தில் தூண்டி விட்டால் அவன் எண்ணப்படி நடக்கும் என்று! முதலில் அக்கா அவர்கள் இருவரையும் சகஜமாக எதிர்கொள்ளட்டும், மற்றது எல்லாம் சித்தார்த் மாமா பார்த்துக் கொள்வார் என்று எண்ணினான்.

ஐயே என்ற அழைப்பு மாறி மனதிற்குள் மாமா என்று அழைக்கப் பழகிக் கொண்டான். சில நாட்களிலேயே சித்தார்த் அவனுக்கு மிகவும் பிடித்தமானவனாக மாறிப் போயிருக்க, அவனை அக்காவின் கணவனாய் ஏற்றுக்கொள்ளக் கசக்குமா என்ன?

தம்பியின் தூண்டுதலிலும், இத்தனை நாட்கள் அம்மாவிற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டோமே என்ற குற்றவுணர்விலும் இங்கே வந்து அம்மாவிடம் வைஷு சண்டையிட, “நீ காலேஜ் கிளம்ப வேணாமா? கொஞ்ச நேரம் நின்னு நான் சமைக்க மாட்டேனா என்ன?” என லலிதாவும் திரும்பிக் கேட்டார்.

பகவதி அமைதியாகச் சிரித்துக் கொண்டார். அவர் வைஷ்ணவியை அதிகம் பார்த்ததில்லை. அவளிடம் பேச்சு வார்த்தையோ சுத்தம். எப்பொழுதாவது நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தாலும் இவர் சினேகமாகப் புன்னகைக்க, அவளோ அவசர புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வேகமாக அங்கிருந்து மறைந்து விடுவாள்.

லலிதாவிடம் கூட அடிக்கடி சொல்லுவார். “உங்க பொண்ணு வீட்டுல இருக்கிறதே தெரியறது இல்லை…” என.

இப்பொழுது வைஷு அம்மாவைக் கடிந்து கொள்வது பகவதிக்குப் புதிதாக இருந்தது.

“சொல்லற பேச்சே கேட்கறதில்லைம்மா நீங்க… தள்ளுங்க நான் செய்யறேன்…” என்றவள் குழம்புக்கும், பொரியலுக்கும் தேவையான காய்கறிகளை நறுக்க தொடங்கினாள். அவள் நறுக்கிய வேகமும் பக்குவமும் இந்த வேலைகள் அவளுக்குப் புதிதில்லை என்று சொன்னது.

“இப்ப நான் என்னடி பண்ணறது?” லலிதா சிரிப்போடு கேட்க,

“ஹ்ம்ம் உட்கார்ந்து வேடிக்கை பாருங்க. ஆனா, வேலை செய்ய விட மாட்டேன்…” என்றாள் சட்டமாக.

“பாருங்க அக்கா… நான் எப்ப கால் வலின்னு சொன்னேன்னு எனக்கே தெரியலை. நைட் இருந்து அக்காவும் தம்பியும் என்னை ஒரு வழி பண்ணறாங்க…” என லலிதா செல்லமாக சலித்துக் கொள்ள, “பார்த்துட்டு தான் இருக்கேன் லலிதா. உன் பொண்ணுக்கு சுத்தி போடு. எனக்கு இப்படி ஒரு பொண்ணு இல்லைன்னு ஏங்க வைக்கிறா…” என்றார் பகவதியும் வைஷுவின் கன்னம் வருடியபடி.

சங்கடமாக நெளிந்தவள், விலகி நின்று கொண்டு, “அதெல்லாம் எதுவும் இல்லை மேடம். சுமாரா தான் சமைப்பேன். அதுதான் அம்மா என்னை சமைக்க விட பயப்படறாங்க…” என்றாள் அவர் பார்வையைத் தவிர்த்துச் சமையலில் கவனம் இருப்பவள் போல!

“மேடமா? நீ ஏன்டா என்னை அப்படி கூப்பிடற… உன் தம்பியைப் போல ஆன்ட்டின்னே கூப்பிடேன்” என பகவதி கேட்க, “இல்லை மேடம், அது சரியா இருக்காது. நீங்க எங்ககிட்ட சகஜமா பேசறது உங்க பெருந்தன்மை. அதை நாங்க அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாதில்ல…”

“ஏய் வைஷு… அப்ப நானும் பிரதீப்பும் அட்வான்டேஜ் எடுத்துக்கறோம்ன்னு சொல்லறியா?” என லலிதா திட்ட, “அச்சோ நான் உங்களை சொல்லலை மா. எனக்கு அப்படி கூப்பிட வரலை…” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, “சாரி மேடம் தப்பா எடுத்துக்காதீங்க…” என்றாள் வேகமாக.

“சரி சரி பதறாத… போக போக சரியாயிடும். ஆனா, நீ என்னை ஆன்ட்டின்னு கூப்பிட எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனா அது எனக்கு சந்தோசம் தான்…” என்று பகவதி சொன்னதற்கும் சங்கடமாக சிரித்துக் கொண்டாள்.

“என்னடா கிச்சனுக்கே வந்துட்ட? எப்ப வந்த?” என்ற பகவதியின் குரலில் வாயிலைத் திரும்பிப் பார்த்தவள் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சமையலறை வாயிலின் அருகே அங்கே நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்த வண்ணம் கையை கட்டி நிலவில் சாய்ந்தபடி நின்றிருந்தான் சித்தார்த்.

நெடுநெடுவென்ற உயரத்தில் ஒய்யாரமாய் நின்றிருந்தவனைக் கண்டதும் எப்பொழுதும் போல மனதிற்குள் சலசலப்பு!

வார்த்தைகளால் அவளை வதைத்திருந்த போதிலும், அவன் மீது எல்லையற்ற கோபம் கொட்டிக்கிடந்த போதிலும் இன்றுவரையிலும் அவன் தான் அவளின் நாயகன். எத்தனை முயன்றாலும் அவனை மறக்க முடிந்ததில்லை. அந்தளவிற்கு உயிரோடு… உணர்வுகளோடு… அவளின் வாழ்வோடு கலந்து விட்டிருந்தான்! அவ்வளவு நேசம் கொட்டிக்கிடந்த போதிலும் அவன் மீது கொண்ட கோபம் குறைய மறுத்தது.

ஆனால், இப்பொழுது இரு நாட்களாய் வேறொருத்தியின் கணவனாக அல்லவா அறிமுகமாகி இருக்கிறான். ஏன் இப்படி ஒரு நிலையில் அவளை நிறுத்தினான் என மனம் வேதனையில் துடித்தது. உயிரை உருவும் வேதனை தான் இந்த இரண்டு நாட்களும். கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சித்தார்த், “சும்மா தான் வந்தேன்மா. பேசிட்டு இருந்தீங்க…” என்று மழுப்பலாக சொன்னவனுக்கு, பிறர் உதவியை ஏற்க மறுக்கும் நிலையிலும், சிறு இயல்பு பேச்சை கூட ஏற்கத் தயங்கும் நிலையிலும் வைஷுவை வைத்த தன்மீது இன்னும் எத்தனை தான் கோபப்படுவது என தெரியவில்லை. ஆத்திரமாக வந்தது.

கைக்கெட்டும் தூரத்தில் அவள்! ஆனாலும் பேசவோ, நேரடியாகப் பார்க்கவோ கூட அவனால் முடியாது. இன்னும் எத்தனை தண்டனைகளை அனுபவிக்கப் போகிறானோ தெரியவில்லை.

‘எப்படியாவது இதனை சரிசெய்து விடடா’ என அவனின் மனம் அவனுக்கு கட்டளை விதித்தது.

லலிதா, “தம்பிக்கு காபி போட்டு கொடு வைஷு” என்றார். அவரும் ஐயா என்ற அழைப்பிலிருந்து தம்பி என்ற அழைப்புக்கு இந்த சில நாட்களில் மாறி இருந்தார்.

பகவதி, அவன் காபி குடிக்க மாட்டான் என சொல்ல நினைத்தார், ஆனால், மகன் அமைதியாக இருக்கவும் புரியாமல் அவனைத் திரும்பி பார்க்க, திரும்பி நின்றிருந்த வைஷுவின் முகத்தை வெறித்தபடி அவன் நின்றிருந்தான். அவர் குழப்பமாக அவனையும் வைஷுவையும் மாறி மாறி பார்த்தார்.

வைஷுவால் அங்கே நிற்க முடியவில்லை. “அம்மா… நீங்க போட்டு கொடுங்க, ஒரு அஞ்சு நிமிஷம் இப்ப வந்துடறேன்…” என்றவள் வேகமாகச் சமையலறை வாயிலை அடைய, “இதுக்கு ஏன்டி என்னை அவ்வளவு அதட்டி உட்கார வெச்ச…” என்று கடிந்து கொண்டு லலிதா சமையல் மேடைக்கு வந்தார்.

பகவதி கண்டும் காணாமலும் இளையவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

வேகமாக கிளம்பிவிட்ட வைஷுவால் சமையலறை வாயிலை அடைத்து நிற்கும் சித்துவை கடந்து போக முடியவில்லை. பிடித்து வைத்த பிள்ளையார் போல அசையாமல் நின்றிருந்தவனிடம் ஒன்று விலகி வழிவிடச் சொல்ல வேண்டும், இல்லையா இடித்தபடி போக வேண்டும்.

அவனிடம் பேச விருப்பம் இல்லாதவளாய் உடலை குறுக்கி நகர எத்தனிக்க, “எனக்கு டீ போடுங்க ஆன்ட்டி, காபி குடிக்க மாட்டேன்” என்று சொன்னவன் வேண்டுமென்றே திரும்ப, வேகமாகச் செல்ல பார்த்தவள் அவன் முதுகில் மோதி விலகினாள்.

நொடியில் நடந்த விஷயத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முகம் கடுகடுக்க அவள் நின்றிருக்க, சித்தார்த்தோ இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் எதுவுமே நடக்காத பாவனையில் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.

பகவதிக்குத் தான் ஒன்றும் விளங்கவில்லை. ‘இவன் இப்படி எல்லாம் பண்ண மாட்டானே!’ என குழம்பிப் போனார்.

வைஷுவுக்கு சரியான கோபம். புசுபுசுவென்று மூச்சு வாங்கியபடி, பல்லைக்கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவள் சோபாவில் அமர்ந்திருந்தவனை நன்கு முறைத்து விட்டு தங்களுக்கான அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“ச்ச… வேணும்ன்னே தான் பண்ணினான்… நல்லா தெரியும். சரியான திமிரு. அதுதான் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணி இருக்கானாமே… அவகிட்ட போய் இப்படி விளையாட வேண்டியது தானே…” வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும், இத்தனை நாட்களும் ஒதுங்கி இருந்தவன், இன்று இதுபோல நடந்ததில் உள்ளுக்குள் படபடப்பு!

அம்மாவிடம் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகச் சொன்னதால், மீண்டும் சமையலறைக்குச் செல்ல, அங்கே தான் தேநீர் அருந்தியபடி இவளையே பார்த்த வண்ணம் சித்தார்த் அமர்ந்திருந்தான்.

வைஷுவிற்கு அவன் பார்வையை நன்கு உணர முடிந்தது. அவனை முறைக்கலாமா என யோசித்தாள். பிறகு வேண்டாம் என அவளே முடிவெடுத்துக் கொண்டாள்.

கடுப்புடன் சமையல் கட்டிற்குச் சென்றவள், மீத வேலைகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். அன்றைய சமையல் அவளுடையது தான். சித்தார்த் தினமும் பெயருக்குக் கொறிப்பவன் இன்று நிறுத்தி, நிதானமாக… ரசித்து ருசித்து உண்ண பகவதிக்குத் தலை சுற்றியது.

வைஷ்ணவி சொன்னது போல அவள் சமையல் பிரமாதமாக எல்லாம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சமையல் செய்பவர்கள் செய்யும் மொத்த கோளாறும் அவள் சமையலில் தெரிந்தது. லலிதா கூட முதலாளி குடும்பம் சாப்பிட வேண்டும் இன்று பார்த்து இப்படிச் சொதப்பி வைத்திருக்கிறாளே என்ற கடுப்புடன் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்.

அந்த உணவை மகன் இத்தனை ரசனையாக உண்டால் அவருக்கு சந்தேகம் வராமல் இருக்குமா?

இது போதாதென்று உண்டு முடித்ததும், “இன்னைக்கு டிபன் சூப்பர் லலிதா ஆன்ட்டி…” என்றுவிட்டுப் போக, அவர் ஒன்றும் புரியாமல் திருதிருத்து விட்டு தலையை உருட்டிக் கொண்டார்.

இப்படி அநியாயத்திற்குக் குழைந்து போயிருந்த கிச்சடியா நன்றாக இருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு. ஒருவேளை தோசையும் குழம்பும் நன்றாக இருந்திருக்குமோ என சந்தேகம் வேறு!

அவர் சமையலை குறித்து யோசித்துக் கொண்டிருக்க, பகவதி அவனின் ஆன்ட்டி என்ற அழைப்பில் பே வென்று நின்றிருந்தார். லலிதாவை வாங்க போங்க என்று அழைப்பானே தவிர எந்த முறை வைத்தும் அழைத்ததில்லை. இன்று என்ன புதிதாய் ஆன்ட்டி?

மகனுக்கு வைஷுவை பிடித்துப் போயிருக்குமோ என யோசித்தவருக்கு, அபப்டி ஒரு சந்தோசம். அவனின் மாறுதலுக்கான காரணம் விளங்கியது.

தன் பங்கிற்கும் எதாவது செய்ய வேண்டும் என நினைக்க, “சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு வைஷு… பாரு பஸ்ஸுக்கு நேரம் ஆயிடும். இனி எப்ப நீ காலேஜ் போறது” என்று லலிதா கடிந்து கொண்டிருப்பது கேட்டது. பிரதீப் கிளம்பிச் சென்றிருக்க, இவள் இன்னும் கிளம்பாமல் இருப்பதால் திட்டினார்.

“விடுங்க லலிதா… பாவம் அவ இவ்வளவு வேலை செஞ்சிருக்கா… அவளை ஏன் திட்டறீங்க? கண்ணா நீ பேக்டரிக்கு போகும் போது புள்ளையை காலேஜ்ல விட்டுடேன்” என பகவதி சொல்ல,

“நேரம் இல்லைம்மா…” என வேண்டுமென்றே பிகு செய்தவன், “சரி சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க…” என்று விட்டு மாடியேறி விட, லலிதாவிற்கு சங்கடம். அதெப்படி முதலாளியுடன், அதுவும் அவன் வயது பையன் ஆயிற்றே அவனோடு தனியே அனுப்புவது? பகவதி வேறு கேட்காமல் சொல்லி விட்டார்.

மகளை திரும்பி முறைத்துப் பார்த்தார். அவசரமாக வாயில் அடைத்துக் கொண்டிருந்தவள், அப்படியே அதை வைத்துவிட்டு கல்லூரி பையைத் தூக்கிக் கொண்டு, “நான் பஸ்ஸிலேயே போயிக்கிறேன் மேடம்… பை ம்மா…” என்றவள் சிட்டாகப் பறந்தாள்.

“சாப்பிடாமையே போறா…” என்ற பகவதியின் புலம்பல் கேட்டாலும், இதுதான் சரி என்று லலிதாவிற்கும் தோன்றியது.

முதல்முறை ஒரு இளைஞன் இருக்கும் வீட்டில் வயது பெண்ணோடு இருக்கிறோமே எதுவும் தவறாகப் பேச்சு எழுந்து விடக்கூடாது என்ற அச்சம் எழுந்தது.

லலிதாவின் அச்சம் நியாயமானது தான்! சித்தார்த் இத்தனை நாட்களும் விலகி இருந்தவன், இனி அதிரடியைக் கையில் எடுக்க நினைக்கிறான். அவனால் வைஷுவின் மனதை மறுபடியும் வெல்ல முடியுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.