சித்தார்த் அன்று மாலையில் பிரதீப்புடன் தோப்பை சுற்றிவரும் போது, “என்ன உங்க அக்கா இன்னைக்கு ரொம்ப டல்லா இருந்தா?” என தூண்டில் போட்டான்.
பொதுவாக மற்ற விஷயங்கள் பற்றி பேசினாலும் வைஷுவை குறித்த பேச்சு அதிகம் இருவருக்குள்ளும் எழுந்ததில்லை. வைஷுவும் பகவதி இருக்கும்போதோ, சித்தார்த் இருக்கும்போதோ பொதுவாக அறையை விட்டு வெளியில் வருவதில்லை. வந்தாலும் அவர்கள் பார்வை வட்டத்தில் இருப்பதை பெரும்பாலும் தவிர்த்து விடுவாள்.
பக்கத்தில் இருக்கும் ராஜூலு தாத்தா வீடு, தோப்பு என அவள் போவதற்கு நிறைய இடங்கள் இருந்ததால் இவர்களைத் தவிர்ப்பது எளிதாக இருந்தது.
“நீங்களும் கவனிச்சீங்களா? நைட் எல்லாம் செம அழுகை…” என்றான் பிரதீப்.
“ஏன்? என்னாச்சு? எக்ஸாம் எதுவும் நல்லா பண்ணலையா?” அவளுக்குத் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் அவ்வாறு கேட்டான். உண்மை காரணம் அறிந்தாலும் பிரதீப் என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்ள அப்படி ஒரு ஆவல்.
“ம்ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லை ஐயே… மேடம்க்கு காதல் நோய்… அது படுத்தும் பாடு…”
“என்ன சொல்லற? காதலா? உங்க அக்காவா? என்ன இங்கே அவ கூட காலேஜ்ல படிக்கிற பையன் கூடவா?” என ஆர்வமாக சித்து கதை கேட்க, அவன் மனசாட்சியோ, ‘டேய்! அநியாயம் பண்ணறடா நீ?’ என அவனை கழுவி ஊத்திக் கொண்டிருந்தது.
பிரதீப்போ அடக்கமாட்டாமல் சிரித்தவன், “சரியா போச்சு போங்க… அவ… அதுவும் தெலுங்கு பையனை??? அவ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டா… அவ பேசற தெலுங்கை கேட்டா நாய் கூட துரத்தி துரத்தி கடிக்க வந்துடும்…” என விழுந்து விழுந்து சிரிக்க,
‘ஓ… மேடமுக்கு தெலுங்கு தகராறா…’ என எண்ணி அவனும் சிரித்துக் கொண்டான். சுந்தர தெலுங்கு அவள் வாயில் படும்பாட்டை இன்னும் அவன் கேட்டது இல்லை. கேட்க வேண்டும் என்றொரு ஆர்வம் வந்தது.
“பின்ன?” அசுவாரஸ்யமாய் கேட்பது போன்ற பாவனையில் அழகாகப் போட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.
“அதுவா… நேத்து உங்க காதல் கதையை அவகிட்ட படம் போட்டு காட்டிட்டு இருந்தேன்…”
சித்தார்த் வேகமாகப் பதறுவது போல நடித்தான். “டேய் என்னடா நீ? நான் தான் யாருக்கும் தெரிய கூடாதுன்னு படிச்சு படிச்சு சொன்னேனே… உன்னோட ரொம்ப தொல்லைடா… விஷயம் வெளிய தெரியக்கூடாது… எதுக்கு உங்க அக்கா கிட்ட சொன்ன?”’
“அவகிட்ட சொல்லறதால எல்லாம் விஷயம் எங்கேயும் போகாது… அதோட எனக்கு எதுவும் அவகிட்ட மறைக்கப் பிடிக்காது…” என்றான் பொறுப்பாக.
“ரொம்பத்தான்டா உனக்கு அக்கா பாசம்…” என அவன் தலையை ஆட்டி சொன்னாலும், தான் எப்பொழுது இப்படி அவளிடம் எல்லாவற்றையும் முழு உரிமையுடன் பகிரும் நாள் வரும் என்ற ஏக்கம் அவனுக்குள்.
பிரதீப் காலரை கெத்தாகத் தூக்கி விட்டுக்கொள்ள, “சரி என் காதல் கதை ஒன்னும் சோகம் இல்லையே அப்பறம் எதுக்கு அழுகாச்சி காவியம்?” என சித்தார்த் கேட்க,
“சரியா போச்சு போங்க… உங்க காதல் கதை ஒரு வீரமான கதை ஆச்சே… அதுக்கு போயி எதுக்கு அழ போறா… நான் அவகிட்ட உங்க கதை சொன்னதுக்கு வேற ஒரு முக்கியமான காரணம் இருக்கு… மேடம் அவங்க காதலை பாதியில விட்டுட்டு ஊரை விட்டு வந்தவங்க… அவங்களுக்கு கொஞ்சம் உரைக்கட்டுமேன்னு தான் உங்க கதை சொல்லியிருக்கேன்…”
“கன்னியாகுமரியில இருந்ததா சொன்னீங்களே… அங்க இருந்தா?” சித்தார்த் அநியாயத்திற்கு நடிக்க, பிரதீப் பாவம் முன்கதை எதுவும் அறியாதவன் என்பதால் கொஞ்சமும் அவன்மேல் சந்தேகம் கொள்ளவில்லை.
“கன்னியாகுமரியில நாங்க ரெண்டு வருஷம் தான் இருந்தோம். அதுக்கு முன்னாடி சென்னையில இருந்தோம்… அங்கே தான்…” என்றான் பிரதீப்.
“டேய் கன்னியாகுமாரின்னு சொன்னாலே அங்கேயே உங்க அக்கா பிளஸ் டூ தான்… அதுக்கு முன்ன ரெண்டு வருஷம்ன்னா அவ டென்த் படிக்கும் போதா?” விருது வாங்குமளவிற்கு நடித்தான் அவன்.
“என்ன சொல்லறீங்க? யாரு டென்த்?” பிரதீப் குழம்ப, “உங்க அக்கா தான் டா? நீயும் உங்க அக்காவும் ட்வின்ஸ் தானே? அதுனால தான் நீ இன்ஜினியரிங் தேர்ட் இயர், உங்க அக்கா பி.எஸ்.ஸி., தேர்ட் இயர்”
“ஹாஹா… எங்களை பார்க்க ஒரே வயசு மாதிரியா தெரியுது? நான் அவ்வளவு பெரிய பையன் மாதிரி தெரியறேன் இல்லை… அதுதான் நீங்க ஏமாந்துட்டீங்க…” என்று கெத்தாக சொன்ன பிரதீப், “ஆனா அவ என்னை விட மூணு வயசு பெருசு. சென்னையில இருக்கும்போது காலேஜ் பர்ஸ்ட் இயர் தான் படிச்சிட்டு இருந்தா… எங்களோட அப்பா அந்த வருஷம் தான் ஒரு ஆக்சிடெண்ட்ல தவறி போனாரு… காலேஜ் பீஸ் கட்டவே ரொம்ப கஷ்டம்” என்க, அவளது குடும்ப சூழலை காதலிக்கும் பொழுதே சொல்லி இருந்தாள் தான், ஆனால் அதை எல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை. அவள் வறுமை தெரிந்தும் அத்தனை இளக்காரம் காட்டிய தன்மீது இன்னும் கோபம் தான் வந்தது.
“ஒருமுறை அக்கா அவ லவ்வர் பேருல அவங்க பர்த்டேக்கு அர்ச்சனை பண்ணி இருப்பாங்க போல. அது அம்மாவுக்கு தெரிஞ்சு செம பூஜை, மூணு நாள் எந்திரிக்க கூட முடியலை… அவ்வளவு அடி வாங்கிட்டா… அன்னைக்கு ஏற்கனவே காய்ச்சலா வேற இருந்திருக்கும் போல. பாவம் அதோட அத்தனை அடியும் வாங்கியிருக்கா…” என பிரதீப் கதை சொல்லிக் கொண்டிருக்க,
சித்துவின் முகம் இறுகிப் போனது. அவளின் அருமை தெரியாத என் காதலுக்காக அவள் எததனை அவமானங்களையும் வலிகளையும் தாங்க வேண்டியதாய் போயிற்று! அவன் உள்ளம் இரண்டாக வெட்டுண்டது போலத் துடித்துப் போனது.
“அப்பறம் என்னாச்சு?” குரலே எழும்பாமல் கேட்டான்.
“அதை ஏன் கேட்கறீங்க. அந்த வருஷ படிப்பை மட்டும் முடிச்சா… எனக்கு தெரிஞ்சு அவ என்ன பண்ணலாம்ன்னு யோசிக்க அந்த நேரத்தை எடுத்திருக்கணும். இல்லாட்டி என்னோட படிப்பு வீணாக கூடாதுன்னு யோசிச்சிருக்கணும். என்னோட ரிசல்ட் வந்து, மார்க் சீட், டீ.சி., எல்லாம் வாங்கின கையோட அவளோடதையும் வாங்கிட்டு இந்த ஊரை விட்டே போயிடலாம்ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டா… அம்மா ஆரம்பத்துல முடியவே முடியாதுன்னு சொன்னாங்க. ரொம்ப பிடிவாதம் செஞ்சு, அழுது, கெஞ்சி ஒருவழியா அங்கே ஒரு தேவதாஸை உருவாக்கிட்டு இவ பாட்டுக்கு வந்துட்டா…” என்று சொன்ன பிரதீப்பின் குரலில் அக்கா ஊரை விட்டு வந்தது குறித்து நிறைய ஆதங்கம் இருந்தது.
பிரதீப் எண்ணுவது போல வைஷு தன் அன்னையின் அடிக்கு பயந்து தன் காதலை கைவிடவில்லையே! அவளின் காதலுடைய அருமை தெரியாதவனின் மட்டமான, மரியாதையற்ற நடத்தையில் தானே பெரும் பாரத்துடன் அந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
சித்துவிற்கு தன் மேலேயே எல்லையற்ற கோபம் வந்தது. ஐந்து ஆண்டுகள் அனுபவித்த கொடும் வலி உனக்கு அவசியம் தான் என்று மனம் சாடியது. முகமே இருண்டு விட, பெரும் தவிப்புடனும், மனம் நிறைய பாரத்துடனும் நின்றிருந்தான்.
“நீங்களே சொல்லுங்க ஐயே… அவ செஞ்சது நியாயமா? அவளுக்கு மனசாட்சி உறுத்த வேண்டாம்… அதுதான் நல்லா பாத்துக்க ஊரு உலகத்துல காதலுக்காக என்ன எல்லாம் செய்யறாங்கன்னு அவளுக்குப் புரிய வைக்க உங்க கதையை சொன்னேன்…” என உண்மை விவரம் தெரியாமல் பிரதீப் பேச,
“உங்க அக்கா சூழல் என்னன்னு நமக்கு எப்படிடா தெரியும்?” என்றான் மழுப்பலாக.
“நீங்க ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க. குரலே ரொம்ப உள்ளே போயிடுச்சு…”
“சும்மா எதையாவது உளறாதடா… நான் நல்லா தான் இருக்கேன். சரி ஊரை விட்டு வந்து என்ன பண்ணுனீங்க? உங்க அக்கா ஏன் படிப்பை கன்டினியூ பண்ணலை…” முயன்று வருவித்த இலகு குரலில் விசாரித்தான்.
“அதை ஏன் கேட்கறீங்க… அப்பா இல்லாத ஏழை குழந்தைங்க என்ன எல்லாம் பாடு படணும்ன்னு அப்ப தான் புரிஞ்சுட்டேன். அவ்வளவு கஷ்டம். வீட்டுல இருக்க பொருளை எல்லாம் கூட வறுமைக்காக விக்க ஆரம்பிச்ச காலகட்டம். அப்பறம் தெரிஞ்சவங்க மூலம் கன்னியாகுமரியில ஒரு தோட்டத்துல அம்மாவுக்கு வேலை கிடைச்சது. அக்கா படிக்க போகலை. நானும் வேலைக்கு போறேன். காசு கொஞ்சம் சேர்ந்ததும் படிக்கிறேன். இப்ப தம்பி படிக்கட்டும்ன்னு சொல்லிட்டா… அப்பறம் அம்மா, அக்கா வேலைக்கு போனாங்க. நான் ஸ்கூல் கண்டினியூ செஞ்சேன். ரெண்டு வருஷம் கூட அது நிலைக்கலை. மறுபடி இங்கே வந்தாச்சு… இங்கே உங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷர். தங்க இடம், நல்ல வேலை, என் படிப்பு செலவுன்னு மனுஷன் நிறைய செஞ்சாரு… ஒரு வகையில எங்களுக்கு அவர் தான் தெய்வம் மாதிரி” என்றான் உணர்ச்சி பெருக்கில்.
“ம்ப்ச் அப்படி எல்லாம் இல்லைடா. காரணம் இல்லாம யாரு இதெல்லாம் செய்வாங்க. பாரு யாரும் இல்லாத உங்களுக்கு அவ்வளவு உதவி செஞ்சதால தான், உங்க அம்மா வாங்கற ஒரு சம்பளத்துக்கு நீங்க மூணு பேரும் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறீங்க…” என்று சித்து சொல்லவும்,
“உங்களுக்கு அப்படி தோணலாம். அது உண்மையா கூட இருக்கலாம். ஆனா, இதுல எங்களுக்கும் தானே நிறைய பெனிபிட்ஸ்… ரெண்டு பக்கமும் நல்லது நடக்கிற மாதிரி தானே உங்க அப்பா இருக்காரு…”
“ஹ்ம்ம் சரி சரி… அவரை நீயே மெச்சிக்க…” என சித்து சிரிக்க, “கண்டிப்பா…” என்று சிரித்தான் பிரதீப்.
“அப்பறம் உங்க அக்கா இங்கே வந்தும் உடனே காலேஜ் சேரலையா?”
“எங்கே? உங்க அப்பா அப்பவும் நான் சேர்த்து விடறேன்னு சொல்லறாரு… அவ ரொம்ப வீம்பு. நீங்க செஞ்ச உதவியே போதும் சார். எனக்கு நானே சம்பாரிச்சு காலேஜ் பீஸ் கட்டினா தான் திருப்தி. யாரு கிட்டேயும் உதவி வாங்க பிடிக்கலை.. தப்பா எடுத்துக்காதீங்க சார்… அப்படின்னு சொல்லிட்டா. அவரும் சரிம்மா உன் இஷ்டம் அப்படின்னுட்டாரு. அதோட உன்னோட சுய கௌரவம் ரொம்ப பிடிச்சு இருக்கும்மா. நீ கண்டிப்பா பெரியா ஆளா வருவ அப்படின்னு பாராட்டு வேற…”
இன்னும் எத்தனை வேதனைகளைத் தான் அவன் மனதில் தாங்குவது? இவர்களுக்கு வீம்பாகத் தெரிகிறது… அப்படி அவள் மாற காரணம் தான் அல்லவா? அவளுடைய கல்விக்காக உதவி செய்து விட்டு அதனை கொச்சைப் படுத்தியவன் ஆயிற்றே! மனபாரத்துடன் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.
“அப்பறம் போன வருஷம் தான் படிப்பை கண்டினியூ பண்ணினா… எனக்கு ஒரே மனஸ்தாபம் என்னன்னா வீட்டுல அப்பா இல்லாம, ரொம்ப மோசமான சூழ்நிலையில இருந்தப்பவும் அவளுக்கு காதல் வந்திருக்குன்னா அவ அந்த பையன் மேல எவ்வளவு காதலை வெச்சிருக்கணும்? அவளையே அந்த காதல் ஆட்டி படைச்சிருந்தா மட்டும் தான் அவளால அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க முடியும். அப்படி காதலிச்சவ, ஒரு நாள் அம்மா கிட்ட வாங்கின அடிக்காக அந்த காதலை வேணாம்ன்னு எப்படி தூக்கி போட முடிஞ்சது? இதுக்கும் அவ அவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கிற பொண்ணும் இல்லை. ரொம்பவும் யோசிச்சு தான் கமிட் ஆகி இருப்பா… இப்பவும் அவ நிறைய நாள் ராத்திரி அழுதுட்டே தூங்கறதை பாத்திருக்கேன். அந்தளவுக்கு அவ காதல் அவளை இன்னும் துரத்திட்டு இருக்கு. என்கிட்ட எப்ப அவளை பத்தி சொல்லுவான்னு தெரியலை. ஆனா ஒன்னு அவ என்னை பெரிய மனுஷனா நினைச்சு என்னைக்கு சொல்லறாளோ அப்ப அவ காதலைச் சேர்த்து வைக்க என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று பேசியவனின் அன்பில் அவன் ஒரு கணம் ஆடிப்போனான்.
சட்டென்று பிரதீப்பை இழுத்து அணைத்துக் கொண்ட சித்துவின் கண்களில் அவனையும் மீறி கண்ணீர். அதை இளையவன் அறியாமல் துடைத்துக் கொண்டான்.
“என்னாச்சு ஐயே? ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகிட்டீங்க…” பிரதீப் புரியாமல் கேட்க, சில நொடிகள் அவனை அணைப்பிலேயே வைத்திருந்தவன் பிறகு அவனை விளக்கி, “தெரியலைடா… உன் அளவுக்கு என்னால பாசம் வைக்க முடியுமான்னு பயமா இருக்கு…” என்று கரகரத்த குரலில் சொல்ல,
முயன்று தன்னை தேற்றிக் கொண்டவன் இல்லை என்று தலையாட்டினான்.
பிரதீப் குழம்பிப் போனான். ‘இவர் ஏன் இப்படி எமோஷனல் ஆயிட்டாரு?’ என்று.
“சரி அதை விடுடா… ஒருவேளை உங்க அக்கா உன்கிட்ட சொல்லவே இல்லைன்னா என்ன செய்வ?”
ஒரு இயலாமை பெருமூச்சுடன், “இப்ப உங்க கதையை சொல்லித் தூண்டி விட்டேன் இல்லை… அதுமாதிரி தூண்டி விட்டுப் பார்ப்பேன். அதுவும் வேலைக்கு ஆகலைன்னா வேற ஏதாவது ஒரு வழியை யோசிக்கணும்…”
குரலை செறுமிய சித்தார்த், “ஒருவேளை உங்க அக்கா அந்த பையனோட சேர விரும்பலைன்னா?” என்றான் கேள்வியாக.
பிரதீப்பின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது. “ஏன் அப்படி கேட்கறீங்க?” என்றான் அவனிடம்.
“ஒன்னும் இல்லைடா… சும்மா தான்…” என்றுவிட்டு அதற்குமேல் எதுவும் பேசாமல் நகர்ந்து விட, பிரதீப்பிற்கு இத்தனை நேரம் எல்லா விஷயங்களையும் சொன்னபோது தோன்றாத உறுத்தல் இப்பொழுது தோன்றியது.
கிட்டத்தட்ட அவர்களது குடும்பத்தின் முழு ஜாதகத்தையும் ஒப்பித்திருக்கிறான். அவனாக சொல்லத் தொடங்கியது கொஞ்சம் தான், சித்தார்த்தாக போட்டு வாங்கியது நிறைய…
யோசித்தபடி நடந்தவனுக்கு சட்டென்று மின்வெட்டாய் அந்த விஷயம் நினைவிற்கு வந்தது. இவர் பெயர் சித்தார்த் ஆயிற்றே!
சட்டென்று மூளையில் பல்ப் எரிய, சில விஷயங்களை ஓட்டிப் பார்த்தான். அக்கா குறிப்பாக இவரையும், இவர் அம்மாவையும் தவிர்க்கிறாள். இவர்கள் வந்து இத்தனை நாட்களில் ஒருமுறை கூட இவர்களிடம் நின்று பேசியதில்லை.
சித்தார்த்தும் ஒரு காதல் கதையை நேற்று புனைந்தார், அதற்கு முன்பு வரை கைப்பேசி எடுத்துக்கொண்டு தனியாகப் போய் சிறிது நேரம் பேசுபவர், இன்று அப்படி போகவே இல்லை. அப்படியானால் அந்த கதை ஏன் பொய் கதையாக இருக்கக் கூடாது? ஒருவேளை இந்த சித்தார்த் தான் அக்காவின் காதலனாக இருப்பாரோ?
பிரதீப்பின் சந்தேகம் வலுக்க, அடுத்தடுத்த நாட்களில் மிகவும் கண்காணிப்பாய் கவனித்தான்.
சித்தார்த் பிரதீப்பிடம் காதல் கதை என ஒன்றை சொல்லி விட்டதாலோ என்னவோ அதன்பிறகு தனியாகச் சென்று கைப்பேசியில் யாருடனோ பேசுவது போல பாவலா காட்டுவதை நிறுத்தி விட்டான். அதோடு வைஷ்ணவி கவனியாதபோது சித்தார்த் அவளைப் பார்வையால் பின் தொடர்வதையும், ஏக்கத்துடன் பார்ப்பதையும் பிரதீப் கண்டுபிடித்து விட்டான்.
அவன் சந்தேகம் உறுதியானது. அதனை மேலும் உறுதி செய்ய பகவதி அம்மாவிடம் பேச்சு கொடுக்கும் போது சித்தார்த் படித்த கல்லூரி பெயரையும், எந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தான் என்ற தகவலையும் சேகரித்தவனுக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது இவர்கள் முன்னால் காதலர்கள் என்று!
இனி பிரதீப் எவ்வாறு நடந்து கொள்வான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.