பெருங்காதல் கூடுதடி! – 5

 

 

“அப்படின்னா இந்த வருஷமும் பிறந்தநாள் கொண்டாட்டம் வைக்கக் கூடாது அப்படித்தானே?” தெளிவாகச் சொல்லிவிட்ட விஷயத்திற்கு மீண்டும் தெளிவு தேவைப்பட்டவரை போலக் கேட்பவரை என்ன தான் செய்வது என்பது போல எரிச்சலாகப் பார்த்து வைத்தான் சித்தார்த்.

மகனின் பிறந்தநாள் என்று வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதற்கு மனம் இல்லை. இவர் கௌரவத்திற்குப் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்பதில் தான் இவருக்கு இப்பொழுது பற்றிக்கொண்டு வருகிறது என்பதில் அவனுக்கு அப்படியொரு கோபம்.

அவரை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் சீற்றம் நிறைந்திருந்தது.

‘எவ்வளவு அழுத்தம் பாரு இவனுக்கு? அப்பனை கொஞ்சமாச்சும் மதிக்கிறானா?’ என பொன்ராமுக்கும் பற்றிக்கொண்டு வந்தது. அவனின் பார்வையில் தெரிந்த சீற்றத்தில் இவனிடம் இது குறித்து பேசுவதே வீண் என்று புரிந்து கொண்டார். ஆக, அந்த பேச்சை விடுத்து வேலை பேச்சுக்குத் தாவி விட்டார் மனிதர்.

“ம்பச்… என்னவோ பண்ணி தொலை… நீ ஆந்திரா நந்தியலுக்கு போகணும்… எப்ப கிளம்ப வசதிப்படும்ன்னு பார்த்து சொல்லு…” என அடுத்த வேலையைக் கொடுக்க,

“ஏன் பங்கனப்பள்ளி மாம்பழம் எக்ஸ்போர்ட் எல்லாம் சரியா தானே இருக்கு?” என்றான் தன் வேலையைத் தொடர்ந்தபடி. ஆந்திரா நந்தியல் மாவட்டத்தில் இவர்களுக்கு சொந்தமான பெரிய அளவில் மாந்தோப்பு இருக்கிறது. ஒரு பேக்டரியும் இயங்கி வருகிறது.

“மாம்பழம் எக்ஸ்போர்ட் எல்லாம் சுமூத் தான். மாம்பழ ஜாம், ஜுஸ் செய்யற பேக்டரியில தான் அடிக்கடி ஏதாவது பிரச்சினை வந்துட்டே இருக்கு…”

“இதுக்கு தான் பேக்டரியை தமிழ்நாடுல எங்கேயாச்சும் மாத்தலாம் சொன்னேன்…” என முணங்கியவனுக்கு ஆந்திரா செல்ல விருப்பமே இல்லை.

“உனக்கென்ன ஈஸியா சொல்லிடுவ… அங்க இருக்க மாம்பழத்தை இங்கே கொண்டு வந்து இங்கே ஜாம், ஜுஸ் எல்லாம் செய்யணும். டிரான்ஸ்போர்ட் பண்ணறதுக்கு எவ்வளவு தண்ட செலவு… இங்கிருக்க பேக்டரியோட அதையும் இங்கேயே சேர்த்து பார்க்கணும். எவ்வளவு மேன் பவர் தேவைப்படும். புதுசா வேலைக்கு வரவனுங்களை ட்ரெயின் பண்ணி, பேக்டரியை பிக்கப் பண்ண வைக்கிறது என்ன சாதாரண விஷயமா? எதுவுமே யோசிச்சுடாத… அவனவன் எப்படி முன்னேறலாம்ன்னு பார்த்துட்டு இருக்கான். இங்கே லட்டு மாதிரி எல்லாத்தையும் நான் உருவாக்கி வெச்சிருக்கேன். அதை கட்டி காப்பாத்தறதுக்கு துரைக்கு நோகுதாமா?”

சாதித்த தந்தைகளிடம் இருக்கும் கர்வமும் ஆதங்கமும் பொன்ராமிடமும் நிறையவே இருந்தது.

ஏற்கனவே அடுப்பில் போட்ட சோளம் போல பொரிந்து தள்ளுபவன் தந்தை சீண்டி விட்டால் சும்மாவா விடுவான்?

“இப்ப என்ன நீங்க கட்டி உருவாக்கின இந்த கந்தர்வகோட்டை சமஸ்தானத்தை நான் பார்த்துக்கணும். அதுவும் நீங்க சொல்லற மாதிரி பார்த்துக்கணும். எங்கேயாவது போன்னு சொன்னா போகணும், வான்னு சொன்னா வந்துடணும்… அப்படித்தானே” என நக்கலாகக் கேட்டவன்,

“ஒரு ரோபோவை வாங்கி வைக்க வேண்டியது தானே… எதுக்கு என்னை பெத்து வளர்த்துட்டு…” என்றான் படு எரிச்சலாக.

அவர் அதிர்ந்து பார்க்க, “நீங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க… ஏதோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி எப்ப பாரு தைய தக்கான்னு ஆடிட்டு… ஆமா நிறைய சாதிச்சு தான் வெச்சிருக்கீங்க. உழைச்சு முன்னேறி இருக்கீங்க… உங்களால பல குடும்பம் வாழுது. ஆனா என்ன பிரயோஜனம் சொல்லுங்க?” என்று ஆதங்கமும், மனதில் அடக்க முடியாத வலியுமாக சித்தார்த் வெடிக்க பொன்ராம் ஸ்தம்பித்துப் போனார்.

மகனை வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவனாக, கவலைகள் ஏதுமின்றி இளமையை அனுபவிக்கும் ஆண்மகனாக, பொறுப்புகளைத் தூக்கிச் சுமக்காமல் சுதந்திரமானவனாக பார்த்திருக்கிறார்.

அப்பொழுதெல்லாம் அவருக்குத் துளியும் கவலை இருந்ததில்லை. என் மகன் அனுபவிக்காமல் யார் அனுபவிப்பார் என்றொரு கர்வம்! இந்த வயதில் அனுபவிக்காவிட்டால் எப்படி? பின்பு தொழில், குடும்பம் என்று வந்த பிறகு இதற்கெல்லாம் எந்தளவிற்கு நேரம் ஒதுக்க முடியும்? என்றெல்லாம் தான் யோசித்திருக்கிறார்.

ஆனால், அதே மகன்… அப்படி அடங்கா காளையாக, கவலை இல்லாதவனாக, வாழ்க்கையை அனுபவித்து… வாழ்ந்த காலம் எப்படி மறைந்ததோ தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இறுகிப் போனான். யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. யாரோடும் ஒட்டி உறவாடவில்லை. பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வெறுத்து ஒதுக்கினான். தனித்தே இருக்கிறான். மனதளவில் தங்களை விட்டு வெகுதூரம் விலகி போய் விட்டான் என்று புரிந்தாலும் எந்த வகையிலும் இழுத்துப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அந்த கையாலாகாத தனமும், இயலாமையும் மகன் மீதே கோபத்தை கொட்டுமளவு அவரை சமீப காலமாக மாற்றி இருக்கிறது.

இல்லையென்றால் மனிதர் நல்ல கணவர் இல்லையென்றாலும்… சந்தேகமே இல்லாமல் ஆகச்சிறந்த தந்தை தான்!

ஆனால், அவர் கோபத்தைக் காட்டத் தொடங்கியபோதும் அவனிடம் எந்தவித மாறுதலும் இல்லை.

இன்று தான் ஏனோ அவரை நிற்க வைத்து கேள்வியே கேட்கிறான். ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. அவன் இப்படி வாதாடினால் கூட போதும் என்கிற மனநிலை தான் இப்பொழுது. ஒன்றுமே பேசாமல் இருந்தால் ஒதுக்கி வைப்பது போல அல்லவா வலிக்கிறது.

“சொல்லுங்க எல்லாம் சாதிச்சு என்ன பிரயோஜனம்? ஒரு குடும்பத் தலைவன் தன்னோட உழைப்பை போடறதுக்கு முக்கிய காரணம் என்ன? தன் குடும்பத்தை பார்த்துக்கணும். குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்கணும். குடும்பம் நல்லா இருக்கணும்ன்னு தானே? உங்களால உங்க மனைவியை முதல்ல சந்தோசமா வெச்சிருக்க முடியுதா?”

காலையில் அன்னையின் மனம் நோக பேசி விட்ட போது எதுவும் தெரியவில்லை. ஆனால், அவரின் வாடிய தோற்றம் அவன் மனதை அழுத்திப் பிசைந்து கொண்டே இருந்தது. இப்படித்தானே வலிக்க வலிக்கப் பேசி ஒருத்தியைத் துரத்தி விட்டோம். இப்பொழுது அம்மாவின் வலிக்கும் காரணமாக வேண்டுமா என்று நெஞ்சம் குத்தியது.

யோசித்து பார்த்தால் அன்னை கடைசியாக எப்பொழுது மனம் விட்டுச் சிரித்தார் என்று யோசிக்க அவனுக்கு நினைவில் இல்லை. எப்பொழுதும் கண்ணில் ஒருவித சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டிருப்பதும், தந்தையை எதிர்கொள்ளப் பயப்படுவதுமான அவரின் தோற்றம்… அதையெல்லாம் ஊன்றி கவனிக்காமல் விட்டுவிட்ட தன் முட்டாள்தனத்தின் மீது அத்தனை கோபம் வந்தது.

இதெல்லாம் திடீர் ஞானோதயம் இல்லை தான். இன்றும் அன்னையைக் காயப்படுத்திப் பேசியிருக்கா விட்டால், பெற்றோரின் விஷயத்தில் மூக்கை நுழைக்கத் தோன்றியே இருக்காது.

ஏனோ இப்பொழுது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தந்தை படுத்துவது போதாமல் நாமும் படுத்த தொடங்குகிறோமே என மனம் வலித்தது.

அதனால் தான் தந்தை மீது எல்லையற்ற கோபம்.

பொன்ராம் எரிச்சல் கொண்டார். அவன் மனநிலை பற்றிப் பேசுவான் என்று பார்த்தால், அவன் அன்னை குறித்துப் பேசுகிறான். “என்னடா உளறிட்டு இருக்க? உங்க அம்மா சந்தோசத்துக்கு என்ன குறை? பணத்தை தண்ணி மாதிரி செலவு பண்ணிட்டு… எந்த வேலை வெட்டியும் இல்லாம… ஜம்முன்னு இருக்கா. அவளுக்கு என்ன குறைன்னு எகிறிட்டு இருக்க?” என்றார் காரமாக.

“ஆமா உங்க பணம் அவங்க முகத்துல சிரிப்பை கொண்டு வந்து கொட்டிட போகுது…” என்றான் பகடியாக. முகத்தில் கடுகடுப்பு.

“டேய்… அவ எதையாவது சொன்னாளா? வேலை வெட்டி இல்லாம இருந்தா இப்படித்தான் கண்டதும் யோசிக்க தோணும். அவளை வீட்டுக்கு போயி பேசிக்கிறேன்” என அவர் இன்னும் எகிற,

“ச்சீ நிறுத்தங்க…” என்று அவன் சீறியதில், அவர் தன்போல ஓரடி பின்னால் போய் விட்டார். மகன் என்ன வார்த்தை சொல்லி விட்டான். அவரின் தன்மானம் பெரிதாக அடி வாங்கியது.

“எதுக்கு இவ்வளவு ஷாக்? உங்ககிட்ட தான் பணம் நிறைய இருக்கே… அதையெல்லாம் நினைச்சு சந்தோசமா இருக்கிறதை விட்டுட்டு… நான் ச்சீன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்காக வருத்தப் பட போறீங்களா என்ன?” என்றான் நக்கல் குறையாமல்.

“போனா போகுதுன்னு விட்டா என்னடா வாய் அதிகமா போகுது…” என்றார் கோபமாக.

“ஹான் நீங்க கொட்டி கவிழ்கிற பணம் எங்க அம்மாவுக்கு சந்தோசத்தை தராது. அவங்களோட சுய மரியாதையை கொன்னு போட்டு நடை பிணமா அலைய வைக்கிற உங்களால எங்க அம்மா சந்தோசத்தை என்னைக்கும் மீட்டெடுக்க முடியாது” என அவன் சொல்கையில் குரலில் அத்தனை வலியும், வேதனையும்.

பொன்ராம் அசையாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தார். மகன் முகத்திலிருந்த வேதனையில் அவர் மனம் பாரம் கொண்டது.