ஏன் இப்படி இறுகிப் போனான்? ஏன் யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறான்? ஏன் இப்படி தான்தோன்றித்தனமாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்கிறான்? என ஒன்றும் புரியவில்லை பகவதிக்கு.

அவனிடம் இதுகுறித்து கேட்கவும் முடியாது. அவனை தன்னால் சீர்ப்படுத்தவும் முடியாது. மனைவியாகத் தோற்று நின்றபோதை விட அன்னையாய் தோற்று நிற்கும் இந்த சூழல் அத்தனை வலித்தது. தான் எதற்காக இருக்கிறோம் என்று கூட தெரியாத விரக்தி நிலை!

மகனோடு சிறிது நாட்கள் சேர்ந்தாற்போல இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஏங்கிய மனதிற்கு அவரால் எந்த நியாயமும் செய்ய முடியவில்லை.

வேகமாக வெளியே சென்ற சித்தார்த் என்ன நினைத்தானோ வாயில் வரை சென்று விட்டு, ஒரு முறை நின்று அன்னையைத் திரும்பி பார்த்தான். அவன் திரும்பிப் பார்ப்பதைக் கூட உணராமல் விரக்தியும் வேதனையுமாக அன்னை நின்றிருந்த தோற்றம் அவன் மனதை அழுத்திப் பிசைந்தது. ஒருவித மனபாரத்துடன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குக் கிளம்பினான் .

சித்தார்த் யாரையும் ஒதுக்க வேண்டும் என நினைக்கவில்லை. உண்மையில் அவன் இயலாமையில் இருந்தான். இயல்பான வாழ்க்கையை அவனால் வாழ முடியவில்லை. வைஷ்ணவி இல்லாமல் அது சாத்தியப்படவும் இல்லை.

அவளோடே அவன் வாழ்க்கை தேங்கி விட்டது. இப்பொழுது தன்னையும் மீறி தான் அனைவர் மீதும் எரிந்து விழுகிறான். பெற்ற அன்னை முதல்… வேலை செய்பவர்கள் வரை… அவன் கோபத்திற்கு இரையாகாதவர்கள் என்று ஒருவரும் இல்லை.

யாரையும் நெருங்க விடாமல் வாழும் ஒரு பாலைவன வாழ்க்கை அவனது! அங்கு மழையெனப் பொழிந்து நேசம் துளிர்க்கச் செய்ய அவள் ஒருத்தியால் மாத்திரமே முடியும். ஆனால், அவனின் மழை மேகம் இப்பொழுது தொலைந்து போயிருந்தது. அவனது வறட்சி சில ஆண்டு காலமாக நிரந்தரமாகிப் போனது.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது அவனது பிறந்தநாளாகத் தெரியலாம். அவன் மனதிற்கு இது தன்னவளை தொலைக்க காரணமாக இருந்த ஒரு நாள்… நாளுக்கு நாள் அவனது கோபம் கூடிக்கொண்டே செல்லும் என்றாலும்… இந்த ஒரு நாள் என்றால் அவனிடம் எரிமலையின் சீற்றம் தான்!

காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் கைப்பேசி சிணுங்கியது. அழைத்தது தந்தை பொன்ராம் தான். இம்மியும் சட்டை செய்யவில்லை அவன். அடித்து ஓய்ந்த கைப்பேசி, மறுநொடி மீண்டும் சிணுங்கியது. சலிப்புடன் திரும்பிப் பார்த்துவிட்டு அதைக் கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான். எப்படியும் அங்கு இருப்பார் என்று தெரியும் அதற்கெல்லாம் அசரவில்லை. அவர் கோபம், வாழ்த்து எதுவும் அவனுக்குத் தேவையில்லை.

அலுவலகத்திலிருந்த பொன்ராம் மகன் கைப்பேசியை எடுக்கவில்லை என்றதும் மனைவிக்கு அழைத்துத் தான் காய்ந்தார். “உன் பையன் ஊரை சுத்திட்டு வந்துட்டானா? எங்கே தான் அப்படி ஊர் ஊரா சுத்த போவான்? தொழில் சம்பந்தம்மா ரெண்டு, மூணு நாள் போயிட்டு வாடான்னு அனுப்பி வெச்சா ஒரு வாரத்துக்கு கண்ணுல பட மாட்டேங்குறான்… இப்படியுமா பசங்க இருப்பாங்க…” என படபடவென பட்டாசு போல பொரிந்து தள்ள,

பகவதிக்கு மட்டும் என்ன தெரியும்? அமைதியாக இருக்க, “வாயை திறந்து பேசேன்டி. வீட்டுல தண்டமா இருக்க உனக்கே இத்தனை கொழுப்பு. புருஷன் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குற… அப்பறம் நீ பெத்தவன் மட்டும் எப்படி இருப்பான்? என் போனை எடுத்துடுவானா என்ன? அப்பறம் ஐயாவோட கிரீடம் இறங்கிடாது…” என்று மீண்டும் கத்திய பிறகு தான் சித்தார்த் இவரது அழைப்பை ஏற்காததால் இந்த கோபம் என்று பகவதிக்கு புரிந்தது.

பெருமூச்சை வெளியேற்றியவாறு, “வீட்டுல இருந்து அப்பவே கிளம்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபிஸ்க்கு வந்துடுவான்…” என்று சொல்ல, “ஆமா வந்து மட்டும் என்கிட்ட பேசிட்டு தான் மறுவேலை பார்ப்பான். யாரையும் மதிக்காம… என்ன தான் பெத்து வளர்த்தியோ? அதுசரி நீ எந்த வேலையைத் தான் உருப்படியா செஞ்சிருக்க…” என வெகுவாக மட்டம் தட்ட, பழகி போன சொற்கள் தானே… மனம் கல்லென இறுகிக் கிடந்தது.

“ஆமா பர்த்டே பார்ட்டி இந்த வருஷமாவது வைக்கத் துரை சம்மதம் தந்தானா?” என பொன்ராம் நக்கலாகக் கேட்க, “வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க…” என்று சொன்ன பகவதியின் குரலில் மகனின் நிலையை எண்ணி அப்படியொரு சோர்வு. ஏன் இந்தளவு மாறிப் போனான்? அவனுக்கு என்ன ஆயிற்று என்று.

“ஒன்னை பெத்து கொடுத்தாலும் உருப்படியா வளர்த்து கொடுக்கலை… ச்சே! என் வாழ்க்கையில நான் பண்ணின பெரிய தப்பே உன்னை கட்டிக்கிட்டது தான்… என் மொத்த வாழ்க்கையும் உன்னால தான் பாழா போயிருக்கு… கட்டிக்கிட்டதும் சரியில்லை. பெத்ததும் சரியில்லை… எல்லாம் என் தலையெழுத்து…” மனைவியைத் துளியும் மதிக்காமல், அவர் அருமையை உணராமல் பேசும் அந்த மனிதரின் சொற்களுக்குப் பகவதியிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

அவரை பொருத்தவரையிலும் கணவன் என்கிற பிம்பம் எப்பொழுதோ விலகி போயிருந்தது. இப்பொழுதெல்லாம் அவர் பேசும்பொழுது யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போன்று எண்ணம் தான்…

ஒரு மாதிரி பற்றற்ற விரக்தி நிலை. அவரை மீட்க வேண்டிய அல்லது மீட்டெடுக்க முடிகின்ற மகனும் தன் பிரச்சனையில் உழன்று கொண்டிருக்க, இத்தனை ஆண்டு காலமாக தன் ஆசை, கனவு, ஏக்கம் அனைத்தையும் தன் கணவன், குழந்தை, குடும்பத்திற்காகத் துறந்தவர் இன்று மனதளவில் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்.

“என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். பதிலே இல்லை… இப்ப எல்லாம் ரொம்பத்தான் அழுத்தம்…” என்று மீண்டும் கத்த,

“அப்படி இல்லைங்க…” என்று சொன்னவரின் குரலில் சுரத்தே இல்லை.

“வெச்சு தொலை… உன்கிட்ட கத்தி எனக்கு தான் டென்ஷன்” என்று வைத்து விட்டவர் மகனின் வருகைக்காகக் காத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் மகன் தன் வேக நடையுடன் அலுவலகத்திற்குள் நடந்து வந்தான். தான் உள்ளே நுழையும் போது கூட இந்தளவு பயமும், பவ்வியமும் இருக்காது என்பது போல ஊழியர்களிடம் எல்லாம் அப்படியொரு பதற்றம்.

பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆடி தீர்ப்பவன், இவர்களை மட்டும் விட்டு வைப்பானா என்ன? அவனை கண்டாலே எல்லாரும் மிரண்டு போவார்கள். அவன் தந்த வேலை… சொன்ன நேரத்திற்குள் கச்சிதமாக முடிந்திருக்கும்.

அந்த விஷயத்தில் பொன்ராமிற்கு மகனைப் பாராட்டத் தான் தோன்றும்.

சித்தார்த் அவனுடைய அறைக்குள் சென்ற ஐந்தாவது நிமிடம் பொன்ராம் அவனது அறைக்குச் சென்றார்.

பெயருக்கு அனுமதிக்காகக் கதவைத் தட்டிவிட்டு தன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தவரை ஏறிட்டுப் பார்த்தவன் மீண்டும் தன் மடிக்கணினியில் முகத்தை பதித்தபடி, “கொஞ்சம் பிஸியா இருக்கேன்” என்றான் அறிவிப்பு போல. உங்களிடம் பேச விருப்பம் இல்லை என்று மறைமுகமாகச் சொன்னான்.

அவர் அவனுக்குத் தந்தையாயிற்றே! அப்படி இலகுவில் அவன் போக்கில் விட்டு விடுவாரா என்ன?

சற்று சிடுசிடுப்புடனே, “கண்டபடி ஊரை சுத்திட்டு சாவகாசமா வந்தா எல்லா வேலையும் ஒன்னா தான் குவிஞ்சு கிடக்கும்” என கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பொன்ராம் சொல்ல, சலிப்புடன் தலையை ஆட்டிக் கொண்டவன் எதுவும் பேசவில்லை.

“என்ன பதில் சொல்ல முடியலையா?” என்று நக்கல் செய்தார்.

“இங்கே பாருங்க. எனக்கு என்ன வேலை செய்யணும் அதை எப்ப செய்யணும்ன்னு நல்லாவே தெரியும். அதோட என் லேப்டாப் என்கூடவே இருக்கிறதால எங்கே போனாலும் என் வேலை நிக்காம தொடரும்… ஆக, நீங்க வந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புங்க…” என தந்தைக்குக் குறையாமல் இவனும் பதிலுக்கு எரிந்து விழுந்தான்.

“பேச்சு மட்டும் வாய் கிழிய…” என முனங்கியவர், “பர்த்டே பார்ட்டியை இந்த வருஷமும் வேணாம்ன்னு சொல்லிட்டியாமே…” என்றார் கோபமாக.

“ஏன் உங்க கிட்டயும் தனியா சொல்லணுமா?” அசராமல் அவன் கேட்க, தந்தையின் முகம் கருத்து போனது.

அவன் சாதா நாட்களிலேயே கதகளி ஆடுபவன், இன்று அவன் பிறந்த நாள் வேறு… பெரும் கொதிப்பில் இருக்கிறான்… கேட்கவா வேண்டும்?

பொன்ராம் எங்கே அவன் மனநிலையைக் கணித்தார். மகனைக் கொஞ்சம் திட்டி விட்டால் கூட போதும் என்கிற மனநிலை தான்! பின்னே இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்கு விலகி இருப்பான்? அதையும் நாம் எத்தனை நாட்களுக்கு வேடிக்கை பார்ப்பது? இவனை இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணியவராய் அவனிடம் பேச்சினை வளர்க்க, பாவம் காயப்பட்டு நிற்கப் போவது அவர் தான் எனத் தெரியவில்லை. அவரின் கர்வத்தை அவன் வேரோடு பிடுங்கி எரியக் காத்திருக்கிறான் எனப் புரியாமல் போய் விட்டது.

மகன் என்ன செய்யக் காத்திருக்கிறானோ?