பெருங்காதல் கூடுதடி! – 3

 

அடுத்த மூன்று நாட்களுக்கு கல்லூரி செல்லும் நிலையில் வைஷ்ணவி இல்லை. காய்ச்சலால் ரொம்பவும் அவதிப்பட்டாள்.

மகளின் நிலைக்குத் தான் தான் காரணம் என்று எண்ணி மறுகிய லலிதாவிற்கு அவளின் வேதனையை காணவே முடியவில்லை. அவள் அவஸ்தைப் படும்போதெல்லாம் தாயாய் அவரின் உள்ளம் துடித்தது.

ஏதோ ஒரு கோபத்தில் கண்டபடி அடித்து விட்டவருக்கு, தான் செய்த செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படியா போட்டு அடிப்பது என தன் செயலை தானே வெறுத்தார்.

கெளரவம் பார்க்காமல், “அம்மாடி… ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன்டா… என்னை மன்னிச்சிடு…” என மகளின் அருகே அமர்ந்து அவளின் கையை தன் கைகளுக்குள் பொதித்தவாறு மன்னிப்பு கேட்டவர், அவள் படும் வேதனை தாங்காமல் அழுதே விட்டார்.

வலியிலும் வேதனையிலும் வைஷ்ணவி முகம் சுருக்கும் போதெல்லாம் அவருக்கு மிகவும் குற்றவுணர்வாகப் போனது.

உணவும் சரியாக எடுத்துக்கொள்ளாமல் குற்றவுணர்வில் அவர் மருக, மகளுக்குத் தான் அவரை தேற்ற முடியவில்லை.

வைஷு, “நீங்க அழாதீங்கம்மா.. தப்பு என்மேல தான்” என்றாள் தவிப்பும் கலக்கமுமாக.

“இல்லை உன்கிட்ட நான் பக்குவமா எடுத்து சொல்லி இருக்கணும்… நான் ஏன் அப்படி செஞ்சேன்?” என தலையைப் பிடித்துக்கொண்டு புலம்பியவரின் குரலில் அத்தனை தவிப்பு.

பின்பு அவராகவே, “அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு போல வைஷு. உங்க அப்பாவும் நம்ம கூட இல்லை. நீயும் எங்கேயாவது ஏமாந்து நின்னா… நமக்குன்னு உதவிக்கு வர யாரு இருக்காங்கன்னு பயந்து போயிட்டேன்டா… அதுவும் அன்னைக்கு எல்லாரும் உன்னை எப்படி பேசினாங்க தெரியுமா? இப்படி எல்லார் கிட்டயும் கெட்ட பேரு வாங்கறியேன்னு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. என் வளர்ப்பா இப்படிங்கிற கோபம் ஒரு பக்கம். இந்த வயசுல செய்யற வேலையா இதுன்னு ஆத்திரம் ஒரு பக்கம். எல்லாம் சேர்ந்து என் கண்ணை மறைச்சிடுச்சு… அதுல தான் அந்த மாதிரி நடந்துட்டேன்… இனி அம்மா இப்படி நடந்துக்க மாட்டேன் வைஷு. அம்மாவை மன்னிச்சுடு…” என மகளின் உடலில் தன் அடியால் சிவந்தும் தடித்தும் இருந்த காயங்களை வேதனையோடு பார்த்தபடி லலிதா புலம்பினார்.

“அம்மா… தப்பு என் மேல தான். அழாம சரியா சாப்பிடுங்கம்மா…” என சமாதானம் செய்து ஓய்ந்து போனாள் இளையவள்.

அடுத்த நாள் பிரதீப் பள்ளிக்குச் சென்றிருந்த சமயம், “அந்த பையன் விஷயம்…” என தயக்கமாக இழுத்தவர், “பதினெட்டு வயசுல வாழ்க்கையை முடிவு பண்ணறது தப்பு வைஷு. அதுவும் நம்ம குடும்ப சூழ்நிலைக்கு அதெல்லாம் சரியா வருமான்னு தெரியலை…” என்று மகளின் அருகே அமர்ந்து தளர்ந்த குரலில் சொன்னார்.

கண்மண் தெரியாமல் அடித்தபிறகு வந்து அறிவுரை சொல்வாயா என்று அவரின் மனசாட்சியே அவரை குத்தியது.

தாயின் தவிப்பு அவளுக்கும் புரியாமல் இல்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டவள் விரக்தி சிரிப்பைச் சிந்தியபடி, “இந்த மாதிரி இனி நீங்க எப்பவும் கேள்வி படமாட்டீங்கம்மா. என்னை நம்பலாம்” என்று மட்டும் தழுதழுத்த குரலில் உறுதியோடு சொல்ல, லலிதா மகளின் உச்சியை வருடியவர் நிம்மதி பெருமூச்சுடன் நகர்ந்திருந்தார். அவருக்கு மகளின் அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது.

கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்த வைஷ்ணவியின் விழிகளுக்குள் சித்தார்த்தின் உருவம்.

மெல்லிய கோடாய் கண்ணீர் இறங்கத் தொடங்க, நேரம் செல்ல செல்ல தாங்க மாட்டாமல் விசும்பல் எழுந்தது. வாயை மூடிக்கொண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

சித்தார்த்தை உயிராய் நேசித்தவளுக்கு, இனி அவனை மறந்து வாழும் ஒரு வாழ்க்கை. அம்மாவின் கண்டிப்பு மட்டும் என்றால் அதை எதிர்கொள்ளும் மனதிடம் அவளிடம் நிறையவே இருந்தது. ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவள் உயிராய் நேசித்தவன் ஆயிற்றே!

அவளால் முடியுமா என்று தான் தெரியவில்லை. அவனை மறக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே மனம் வெட்டுண்டது போல வலித்தது. என்ன முயன்றும் முடியாமல் கண்களில் நீர் பொங்கிப் பெருகியது.

பயத்தில் செய்வதறியாது நின்றிருந்த அவளின் கையை அழுத்தமாகப் பற்றி, “நீ சொல்லியிருந்தாவே கேட்டிருப்பேன்…” என தன் கண்களை ஆழ்ந்து பார்த்துச் சொன்னவனின் முகம் இன்னும் அவளின் மனதை விட்டு அகலவில்லையே!

அவனது சிரிக்கும் கண்களும் அவளுக்குப் பழக்கம். கோபத்தில் அனலைக் கொட்டும் விழிகளும் பழக்கம். அவனை சமாதானம் செய்யவும் அவளுக்கு நன்கு தெரியும். அவனது கடுங்கோபத்தின் போது அனுசரித்துப் போகும் கலையும் அவளுக்கு அத்துபடி.

ஆயிரம் விஷயங்கள் அவனைப்பற்றித் தெரியும். அவனை உயிராய் நேசித்திருக்கிறாள். அவன் நலம் வாழப் பிரார்த்திக்காத நாளே இல்லை. அவனை காணாத நாட்களில் எல்லாம் ஏங்கித் தவித்திருக்கிறாள்.

ஆனால், இப்பொழுது அவன் வாழ்வில் அவள் இல்லை. இருக்கவும் கூடாதோ? அவனை மறந்தே ஆக வேண்டும்.

அனுதினமும் அவனுக்காக வேண்டுவாளே அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவனை எப்பொழுது பார்ப்போம் என ஏங்குவாளே அந்த ஏக்கம் இனி எழக்கூடாது. அவனை பார்த்ததும் ஒளிரும் கண்களிடம் அமைதியாகக் கடந்து போகச் சொல்ல வேண்டும்? இன்னும் எத்தனை எத்தனை?

அந்தளவு திடம் கொண்டவள் ஒன்றும் இல்லையே அவள்!

மனம் வேதனையில் தவிக்க, செய்வதறியாத தவிப்புடன் வெகுநேரம் கண்ணீர் வடித்தாள்.

உடல் முற்றிலும் தேறாத நிலையிலும் பிராக்டிகல் எக்ஸாம் வந்துவிட்டபடியால் கல்லூரி கிளம்பிச் சென்றவளின் தோற்றம் ரொம்பவுமே ஓய்ந்து தெரிந்தது.

பிரதீப் அக்காவின் தோற்றத்தைப் பார்த்து விட்டு, மீண்டுமொருமுறை அம்மாவை நன்றாக முறைத்தான். அவனுக்கு அம்மா மேலிருந்த கோபம் இன்னும் குறையவில்லை.

லலிதா மகன் முறைப்பதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. மகளின் தோற்றமே அவரை வெகுவாக அசைத்திருந்தது. பணம் இருக்கிறதோ இல்லையோ அந்த வீட்டின் இளவரசி அவள் தானே! வாடிய கொடி போன்ற அவளின் தோற்றம் அவரை வெகுவாக பாதித்தது.

கல்லூரியில் தெரிந்தவர்கள் எல்லாம் வைஷுவிடம் விசாரித்து விட்டார்கள். என்ன ஆயிற்று என்று. காய்ச்சல் என்று மட்டும் சொன்னாள். உடலும் முகமும் ஆங்காங்கே இன்னும் சிவந்திருந்தது. அதை ஆராய்ச்சியாய் பார்த்தபடி கேள்வி கேட்டவர்களிடம் சைக்கிளில் விழுந்து விட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.

இவளின் காதல் செய்தி பரவியதை விட வேகமாகக் காதல் முறிவு செய்தியும் பரவியிருந்தது. சிலர் துக்கம் விசாரிக்க முயன்றனர். சிலர் தகவலைச் சேகரிக்க முயன்றனர். வைஷு அந்த பேச்சை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்.

சிலர் அவள் கடந்து போகும்போது ஜாடை பேசினார்கள். சித்தார்த் சொன்னதையே வேறு வார்த்தைகளில் பேசினார்கள். பணத்திற்காகக் காதல் செய்தாள் என்பது போல அவர்கள் பேசும்போது அவனை நேசித்த இதயம் வலியில் துடித்தது. இனி தன்னைப்பற்றிய பிம்பம் இவர்களிடம் இப்படித்தானே இருக்கும் என மனம் கணக்க எண்ணியபடி அவர்களை அமைதியாகக் கடந்து போனாள்.

தளும்ப தளும்ப காதலைக் கொட்டியவனே தன் நேசத்தை நம்பவில்லை. இவர்களுக்குப் புரியாததால் என்ன ஆகப் போகிறது என்றொரு விரக்தி அவளை ஆட்கொண்டது.

கல்லூரி முடிந்து வரும்போது யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவள் பாட்டிற்கு பேருந்து நிலையம் நோக்கி நடக்க சித்தார்த்தின் நண்பர்கள் அவளை நிறுத்தினார்கள்.

கிஷோர், “எப்படிம்மா இருக்க? அன்னைக்கு நடந்ததுக்கு ரொம்ப சாரி…” என்று வருத்தமாகச் சொல்ல, என்ன பேசிவிட முடியும் அவளால். அமைதியாகத் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள்.

யாரிடமும் பேசும் நிலையில் அவள் இல்லை. யாரையும் எதிர்கொள்ளும் மனநிலையிலும் அவள் இல்லை. முகத்தில் அடித்தாற்போல கடந்தும் போக முடியாமல் அவள் தேங்க,

“உடம்பு சரியில்லையா வைஷ்ணவி? ரொம்ப டல்லா தெரியற” என்று கௌசிகா கேட்டாள். லேசாக தலையை மட்டும் ஆட்டினாள். இப்பொழுதும் நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை.

அவள் நிலை புரிந்துவிட்டதோ என்னவோ, “நீ கிளம்பும்மா…” என விக்னேஷ் சொல்லிவிட்டு நண்பர்களிடமும் இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என்று ஜாடை காட்டிவிட, இதற்காகவே காத்திருந்தவள் போல விறுவிறுவென அவர்களைத் தாண்டி நடந்தாள்.

“என்னடா மூணே நாளுல ஆளே ஒரு மாதிரி ஆயிட்டா…” என கிஷோர் தாங்கமாட்டாமல் கேட்க, “பார்க்கவே பாவமா இருக்குடா” என்றாள் கௌசி வருந்தியவளாக.

“ம்ப்ச் சித்து பண்ணினதெல்லாம் டூ மச் டா… பாவமா இருக்கு அந்த பொண்ணை பார்க்கவே…” என புலம்பிய விக்கிக்கும் வைஷுவை பார்த்து மனம் கனத்து போனது.

*** சித்தார்த் கொஞ்ச நாட்கள் வைஷ்ணவியை கண்டுகொள்ளவே இல்லை. அவனுக்கு அவளை பார்த்தால் கவிழ்ந்து விடுவோம் என்று நன்றாகவே தெரியும். ஆக, வேண்டுமென்றே தவிர்த்தான்.

ஏற்கனவே அவள் செய்த வேலையால் இருவருக்குள்ளும் ஒரு மாத பிரிவு. அதற்குத் தண்டிக்கிறேன் என்ற பெயரில் இவனும் அவளை நோகடித்தாயிற்று!

அவளும் பிரிவின் வலியைக் கொஞ்சம் அனுபவிக்கட்டும். இப்பொழுது போய் அவளைப் பார்த்தால் நிச்சயம் எல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்று எண்ணி நாட்களைத் தள்ளி போட்டான். ஆனால், அதே வலி அவனுக்கும் கிடைத்தது. பிரிவுத்துயரில் அவனும் அவதியுற்றான்.

அப்பொழுது தான் சித்தார்த்துக்கு ஒரு விஷயம் உரைத்தது. பிரிவு தண்டனை அவளுக்கு மட்டும் வலி, வேதனை இல்லை. தனக்கும் வலி தான் என்று அவனுக்குப் புரிந்தது.

அப்படி என்றால் அந்த ஒரு மாத கால பிரிவில் அவளும் மகிழ்ந்திருக்க வாய்ப்பில்லையே! அவளுக்கும் அது கொடிய வலியாகத் தானே இருந்திருக்கும். தான் செய்த தவறுக்கு தன்னை தண்டிப்பதோடு அவளையும் தானே தண்டித்து கொண்டிருக்கிறாள். மனம் சுருக்கென்று தைத்தது.

வைஷ்ணவிக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம். என்னவோ இனியும் பிரிவைத் தாங்க மாட்டாதவன் போல, அவள் தேர்வு முடிந்து வந்து கொண்டிருந்த சமயம் அவளை வழி மறித்தான்.

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றியவாறு தலையை குனிந்து நின்றிருந்தாள். அவனை ஏறிட்டுப் பார்க்கும் எண்ணம் கூட அவளிடம் இல்லை. மனமெல்லாம் காதல் ரணம் இன்னும் பச்சை புண்ணாய் விண்டு விண்டு வலித்தது.

தன்னவளின் ஓய்ந்து வாடிய தோற்றம் சித்தார்த்தின் உயிர் வரை வலித்தது. மற்றவர்களிடம் கோபம் காட்டுவதே அவளுக்குப் பிடிக்காதே! அப்படிப்பட்டவளிடம் கோபத்தைக் கொட்டி கவிழ்த்து வைத்திருக்கிறோமே என்று எண்ணி வருந்தினான்.

அன்று அப்படி அழுது கரைந்தாளே அப்பொழுது எப்படி கல் மாதிரி தன்னால் நிற்க முடிந்தது? அந்தளவுக்கு இவளை நோகடித்து தான் சாதித்தது தான் என்ன? அவன் மனம் அவளின் தோற்றத்தைப் பார்த்ததும் அடித்துக் கொண்டது.

அன்று நண்பர்கள் சொன்னபோது புரியாதது, அவளின் கண்ணீரிலும் வேதனையிலும் புரியாதது, இன்று அவளின் ஓய்ந்து வாடிய தோற்றத்தில் புரிந்திருந்தது. அவளை நோகடித்தது பெரும் பிழை என்று காலம் கடந்து வருந்தினான்.

அவள் நிமிரவே போவதில்லை என்று புரிந்து, சித்தார்த்தின் வலிய கரங்கள் நீண்டு, அவளின் கன்னங்களைப் பற்றி உயர்த்தியது. முகத்தை நிமிர்த்தியவளின் விழிகள் இன்னமும் தாழ்ந்தே தான் இருந்தது.

உயிர்ப்பே இல்லாதிருந்த அவள் முகத்தை அளவிட்டவாறே, “ஒரு மாசம் என்னை நீ சுத்தல்ல விட்ட… அப்பவும் எப்படி நான் எல்லாம் கல்லு மாதிரி நின்னேன். என்னை படுத்தின உன்னை படுத்தியே ஆகணும்ன்னு எப்படி உன்னை வாட்டி வதைச்சேன். நீ என்னடி ரெண்டு வாரத்துக்கே ஓஞ்சு போயிட்ட… சாப்பிட்டயா இல்லையா? சும்மாவே சுண்டெலி தான்… இப்ப இன்னும் தேஞ்சு தெரியறியே…” என அவன் பாட்டிற்கு இலகுவாக பேச, இன்னுமே அவன் சொற்கள் தந்த ரணத்தை நெஞ்சில் ஆழமாக கொண்டிருந்தவள், அவன் பேச்சிற்குத் துளியும் எதிர்வினை காட்டாமல் நின்றிருந்தாள்.

அசையாத அவளின் தோற்றத்தில், “எனக்கு கொஞ்ச நாள் கூட உன்னை வதைக்க முடியலை… நீ எப்படி தான் ஒரு மாசம் தாக்கு பிடிச்சயோ? உனக்கும் கஷ்டமா தான் இருந்திருக்கும்… அப்பவும் எப்படி அவ்வளவு வைராக்கியம் உனக்கு?” மீண்டும் கேட்க, துளி அசைவில்லை அவளிடம். அவனை ஏறிட்டும் பார்க்க மறுத்தாள்.

அதில் சலித்தவன், “ஹே என்ன மறுபடியும் முதல்ல இருந்தா? இதுக்கு மேல எனக்கு தாங்காதுடி…” என இன்னும் அவளின் முகத்தை நிமிர்த்த, அவளின் விழிகள் இன்னும் கவிழ்ந்தே தான் இருந்தது.

“ம்ப்ச் பேசி தொலையேன்டி…” என்றான் கடுப்புடன்.

அன்று என்னவெல்லாம் பேசினான்? மனசாட்சியே இன்றி வார்த்தைகளை வீசியவனிடம், இப்பொழுது என்னவென்று பேசுவாள்? மீண்டும் அதே மௌனம் தொடர்ந்தது.

அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான். அவளின் அழுத்தமும் மௌனமும் அவனை ஆட்டி படைத்தது.

பெருமூச்சை வெளியேற்றியவாறு அவளின் கன்னத்திலிருந்து கைகளை இறங்கியவன், “ரொம்ப கோபமா இருக்கியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“சரி வா வெளிய போயி பேசுவோம்…” என அவளின் கையை பற்றி இழுத்துச் செல்ல முயற்சிக்க, அசையாமல் நின்றாள். அவன் ஒரு இழுவைக்குத் தாங்க மாட்டாள் தான்! ஆனால், அவளின் இந்த பிடிவாதம் சித்தார்த்துக்குப் புதிது.

பெண்ணவளின் முகத்தையே ஆழ்ந்து பார்க்க, அவளின் வலது கரம் மட்டும் அவனை நோக்கி உயர்ந்தது. பிசிரே இல்லாத குரலில், “ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவுன்னு சொல்லி தந்துடுங்க சார்…” என்று சொன்னதில் அவன் பேச்சற்று அதிர்ந்து நின்று விட்டான். சுவாசம் தடைப்பட்டது போல உணர்வு! ஒரே வாக்கியத்தில் உடைந்தே போய்விட்டான்.

பாவி! என்ன வார்த்தை சொல்லி விட்டாள். அவன் அவளையே வெறித்துப் பார்த்திருக்க, அவர்களை கடந்து சென்ற கூட்டத்தினரின் பேச்சு நாராசமாய் அவர்களின் செவிகளில் விழுந்தது.

“அப்படி இவகிட்ட என்னடி இருக்கு? மறுபடியும் இவகிட்டயே நிக்கிறான்…”

“அட… சீப் அண்ட் பெஸ்ட் போலடி…”

“என்னவோ அவளுக்கு வருமானம் வருது… இவனுக்கு வேண்டியது கிடைக்குது… நமக்கென்ன வந்தது?” என்று வரைமுறையின்றி ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசியபடி கடந்து செல்ல, அவன் ரத்தம் சூடேறியது.

அத்தனை தூரம் படித்துப் படித்து சொன்னாளே சண்டையை பிறகு போட்டுக்கொள்ளலாம் என்று எதையும் காதில் வாங்காமல், சுற்றிலும் ஆட்களையும் வைத்துக் கொண்டு அவளைத் தான் நோகடித்தது மட்டுமில்லாமல் அனைவரின் மதிப்பிலிருந்தும் கீழிறங்க வைத்து விட்டானே! ஆத்திரத்தில் அறிவிழந்து தான் செய்த செயலால் தன்னை நேசித்தவளுக்கு எத்தனை அவமானம். அவன் குறுகிப் போனான்.

இத்தனை நேரமும் அவனை நிமிர்ந்து பார்க்காதவள், இப்பொழுது நிமிர்ந்து பார்த்தாள். உன்னால் எனக்கு கிடைத்த நற்பெயரைப் பார்த்துக் கொள் என்று ஏளனம் செய்த அவளின் பார்வையில், தன்னை நினைத்தே அருவருப்பாக உணர்ந்தான்.

வைஷ்ணவியோ அவனை அமைதியாகக் கடந்து செல்ல, தடுக்கும் தகுதியை இழந்தவனாய் இடிந்து போய் நின்றிருந்தான்.