“ஏன்டா விவஸ்தையே இல்லாமா அந்த பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டினதை பத்தி எல்லாம் பேசிட்டு… அவ இவனை தேடி வந்ததே பணத்துக்காகன்னு சொல்லிட்டு, இப்ப இப்படி பேசிட்டு திரியறான். இவன் பேசினதெல்லாம் இவனுக்கு ஞாபகம் இருக்குமா இல்லையா?” என கௌசிகா புலம்ப,

“அதெல்லாம் ஏன் இல்லாம… அப்ப இருந்த கோபத்துல அந்த பொண்ணை நோகாடிச்சே ஆகணும்ன்னு தான் பேசினான். ஆனா எந்த தைரியத்துல அந்த பொண்ணு திரும்பி வருவான்னு நினைக்கிறான்னு தான் புரியலை” என்றான் விக்கி.

“விடு… என்ன பேசினாலும் பொண்ணுங்க நம்மை காலை சுத்தி தான் இருப்பாங்கன்னு அவனுக்கு ஒரு நினைப்பு… விளங்காதவன்… அப்பாங்க கிட்ட திட்டும் அடியும் வாங்கற அம்மாங்க எல்லாம் அவங்களை விட்டு போகாம இருக்க காரணம், அவங்க புருஷன் மேல இருக்க நேசம் இல்லை… புள்ளைங்க மேல இருக்க பாசமும் கடமையும்ன்னு கூடவா இவனுக்குப் புரியாது” என கிஷோரும் கொதித்தான்.

“விடு அவன் வீராப்பு எல்லாம் வீணா போக போகுது… அந்த பொண்ணைப் பார்க்கவே ரொம்பவும் பாவமா இருந்தது… இனி உன்னை புதுசா பார்க்கிறவங்க மாதிரி பார்ப்பேன்னு சொன்ன போது அந்த பொண்ணு கண்ணுல எவ்வளவு வலி இருந்துச்சு தெரியுமா…” கௌசிகா பரிதாபப்பட்டாள்.

ஆனால், சித்தார்த்துக்கு மிகவும் உறுதி! அவள் நேசம் மீது கொண்ட உறுதி! இந்த சண்டை எல்லாம் எங்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல எண்ணம்! அவளை, அவள் நேசத்தை, அவள் மனதை உயிரோடு புதைத்து விட்டு அதற்காகக் கலங்காமல், அவளால் தன்னை விட்டு இருக்கவே முடியாது என கர்வத்தோடு இருந்தான். கர்வம் அழியும் காலம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தது.

*** லலிதா வீடு வந்தபோதே கடும் கோபத்தில் இருந்தார். மகள் வீட்டில் கூடத்திலேயே உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “வைஷு…” என சத்தம் போட்டார்.

அடித்துப் பிடித்து எழுந்தவளுக்கு வெகுநேரம் அழுததின் விளைவாய் நல்ல காய்ச்சல். போதாக்குறைக்கு மதியம் வேறு உணவுண்ணவில்லை.

அம்மாவின் கோபத்திற்குக் காரணம் புரியாமல், “அம்மா…?” என்றாள் கேள்வியாக.

“காலேஜ் போகலையா?” என்றார் அவளை ஆராய்ந்தபடியே!

அம்மாவின் கோபமுகம் அவளுக்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்தியது. “உடம்பு சரியில்லைம்மா… அதுதான் பாதியிலேயே வந்துட்டேன்” என்றாள் நலிந்த குரலில்.

“வாயை திறந்தா பொய்யு…” என மகளின் அருகே வேகமாக வந்து ஓங்கி அறைந்திருந்தார் லலிதா. தலை கிறுகிறுத்துப் போனது சின்னவளுக்கு.

“காலையில எதுக்குடி கோயிலுக்கு போன…” என ஒரு கையால் அவள் தலை முடியை பற்றி உலுக்கியவர், மறு கையால் மீண்டும் ஒரு அறை. செவிப்பறை கிழித்து விட்டது போல இருந்தது தாயின் ஆக்ரோஷ அடி.

கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு வலி தாங்க முடியாமல் கண்ணீர் கொட்டியது. “என்னம்மா?” என காரணம் கேட்கக் கூட தெம்பில்லை அவளிடம்.

“அது யாருடி சித்தார்த்… அவன் பேருக்கு காலையில அரச்சனை பண்ணியாமே…” என கேட்டு மீண்டும் தலையை உலுக்கப் பதில் சொல்லும் நிலையிலா அவள் இருக்கிறாள்.

“அ… அம்மா…” என்றாள் வலி நிறைந்த குரலில் முனகலாக.

“ச்சீ! என்னை ஊரு முன்னாடி ஆசிங்கப்படுத்திட்டு என்னை அப்படிக் கூப்பிடாத…” முகத்தில் உமிழாத குறையாக அம்மா சொல்ல, அவள் விக்கித்துப் போனாள்.

என்னவோ லலிதாவால் மகள் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாம் இருக்கும் சூழலில் இவள் இப்படி ஒரு காரியத்தைச் செய்யலாமா என பற்றிக்கொண்டு வந்தது. ஊரார் பேச்சுக்கு ஆளாகி விட்டாளே என்னும் ஆத்திரம் அடங்க மறுத்தது.

“எப்படிடி குடும்பம் இருக்கச் சூழல்ல உனக்கு புத்தி இப்படி போச்சு…” என மீண்டும் கேட்டு அவள் தோள்களில் வலிக்க வலிக்க அடி மொத்தினார்.

ஏற்கனவே காய்ச்சலால் இருந்த சோர்வு, மன சோர்வு… இந்த பலவீனமான நேரத்தில் அன்னையின் அடியை அவளால் தாங்கவே முடியவில்லை. கத்தவோ முனகவோ கூட தெம்பில்லாமல் போய்விட்டது.

லலிதாவின் ஆத்திரம் அடங்க மறுக்க, இருந்த கோபத்திற்கெல்லாம் சேர்த்து வைத்து மகளை வெளுத்து வாங்கி விட்டார். அவருக்கு இருந்த கோபத்தில் அவளின் காய்ச்சல் சூடு கூட புரிய மறுத்தது.

“சொல்லு யாரு அவன்? பேசுடி… யாரு அவன்? எத்தனை நாளா உனக்குப் பழக்கம்? வாயைத் திறந்து பேச போறியா இல்லையா?” என அடி வெளுக்க அவளுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

பிரதீப் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததுமே பார்த்தது இந்த காட்சியைத் தான்! துடிதுடித்துப் போனான். பள்ளி பையை அப்படியே கீழே போட்டுவிட்டு வேகமாக வந்து தாயுக்கும் தமக்கைக்கும் இடையில் புகுந்தான்.

“அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? அக்காவை போயி இப்படி அடிக்கறீங்க… முதல்ல தள்ளி போங்க…” என அவரை கிட்டத்தட்ட தள்ளி விட்டான்.

முடி களைந்து, முகம் சிவந்து, கன்னம் எல்லாம் அம்மாவின் அடியால் வீங்கி, உதட்டில் லேசாக ரத்தம் கசிய, அரை மயக்க நிலையில்… உட்கார கூட தெம்பில்லாமல் இருக்கும் தமக்கையைப் பார்த்து அவனுக்கு உயிர் துடித்தது.

“என்னக்கா அம்மா தான் கோபத்துல அடிக்கறாங்கன்னா… நீ தடுக்க மாட்டியா?” கலங்கிய குரலில் கேட்டபடி அவளைத் தோளோடு அணைத்து கொண்டான். ஆதரவிற்காக ஏங்கிக் கொண்டு இருந்த வைஷுவும் தம்பியின் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டு கதறி அழுதாள்.

அம்மா அடித்த வலிக்காகவா… தன் காதல் தோற்ற நிலைக்காகவா… கேட்காத சொற்களை எல்லாம் கேட்டு நடைப்பிணமாக இருக்கும் நிலைக்காகவா என காரணம் பிரித்தறிய முடியாமல்… எல்லா சோகமும் அவளை ஆட்கொள்ளத் தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளின் உடல் நெருப்பாகச் சுட்டது. பிரதீப் வேகமாக அவளின் நெற்றி, கழுத்து எல்லாம் தொட்டுப் பார்த்தவன், “என்னமா இப்படி காய்ச்சல் அடிக்குது… அக்காவோட காய்ச்சலைக் கூட கவனிக்காம அடிக்கறீங்களே… அப்பா இருந்திருந்தா இப்படி அடிப்பீங்களாம்மா…” என கலங்கிய குரலில் கேட்டான்.

அக்காவின் நிலையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனால்! அவனுக்கும் கண்களில் கண்ணீர் வடிந்தது.

இத்தனை நேரமும் கண்மூடித்தனமான கோபத்திலிருந்த லலிதாவும், மகன் தள்ளி விட்ட பிறகு தான் கொஞ்சம் தெளிந்தார் போலும். மகள் இருந்த நிலையைப் பார்த்து அவருக்கும் மனம் பிசைந்தது. ஆத்திரத்தில் அறிவிழந்து இப்படியா அடிப்போம் என தன்னையே நொந்து கொண்டார். அந்த நேரத்தில் மகளுக்குக் காய்ச்சல் என்று மகன் சொல்லவும், அவரது உயிர் துடித்துப் போனது.

அவர் துக்கமும் பெரிது தானே! மனம் துடிக்க, “அவ என்ன பண்ணி வெச்சிருக்கா தெரியுமா? இந்த வயசுல காதல் கேட்குதாம். அதுவும் நம்ம குடும்பம் இருக்க நிலைக்கு… இவளுக்கு எப்படிடா இப்படி புத்தி போச்சு…” என அன்னையும் அழுதார். பிரதீப்பிற்கும் அம்மா சொன்னதைக் கேட்டதும் பயங்கர அதிர்ச்சி தான்! ஆனால், கையணைவில் வைத்திருந்த அக்காவைச் சிறிதும் விலக்கவில்லை.

“அதுவும் காலையில கோயிலுக்கு போயி அந்த பையன் பேருக்கு அர்ச்சனை பண்ணி இருக்கா… அந்த தெருமுனை வீட்டுல இருக்க ஜெயந்தி கோயிலுக்குப் போயிருப்பா போல அவ கேட்டுட்டு வந்து தெருவுக்கே டமாரம் அடிச்சு வெச்சிருக்கா… அவ அவ வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறாளுங்க. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? உங்க அப்பா போனதுல இருந்து மீண்டு இப்பதான் நடமாடிட்டே இருக்கோம். இந்த நிலையில இவளால எப்படிடா இப்படி யோசிக்க முடிஞ்சது… வசதி இல்லாட்டியும் மானம் மரியாதையோடயாவது வாழலாம்ன்னு நினைச்சேன், அதையும் குழி தோண்டி புதைச்சு வெச்சுட்டாளே…” என அன்னை புலம்பியபடி அழ, வைஷுவுக்கு சுருக்கென தைத்தது.

எதையுமே யோசிக்காமல் மனம் போன போக்கில் என்ன செய்து வைத்திருக்கிறோம். சுயகட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்ததின் பயனாகத் தான் இன்று அத்தனை பேரின் முன்னிலையிலும் கேவலப்பட்டு நிற்கிறாள் போலும். பெரியதாய் கேவல் வெடித்தது அவளிடம்.

“நீ எதுக்குடியம்மா அழற? நீ தான் பெரிய மனுஷி ஆச்சே… எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்க? உன்னை சுமந்து பெத்ததுக்கு நான் இன்னும் யார் யார்கிட்ட பேச்சு கேட்க வேண்டி வருமோ தெரியலை…”

“அம்மா… பிளீஸ்…” என்றாள் வைஷு இறைஞ்சுதலாக. “என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க மா… இனி உங்க பேரை கெடுக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன் மா… என்னை மன்னிச்சுக்கங்கம்மா…” என கையெடுத்துக் கும்பிட்டு அவள் அழ,

“எப்படிடி மன்னிக்க? உங்க அப்பா தவறிப் போன அப்பறம், காலேஜ்ல பீஸ் கட்ட பணம் இல்லாதப்ப உன் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பாம… அப்பவும் படிக்க அனுப்பினேனே அதுக்கா மன்னிக்க சொல்லற… வீட்டுல அரை வயிறு சாப்பாடு சாப்பிடற நிலைமையிலும்… நான் தான் படிக்காம கஷ்டப்பட்டுட்டேன். என்ன கஷ்டப்பட்டாலும் என் புள்ளைங்க படிப்பை விட்டுட கூடாதுன்னு உன்னைப் படிக்க அனுப்பி வெச்சேனே அதுக்கு மன்னிக்க சொல்லறியா? இப்படி என்னை ஏமாத்திட்டியேடி” என்ற அம்மாவின் சொற்களில் அவளின் உயிரை நெருப்பிலிட்டது போல துடித்துப் போனாள்.

பிரதீப்பிற்கு அக்காவின் துடிப்பும் தாங்க முடியவில்லை. அம்மாவின் வேதனையும் தாங்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் அம்மாவின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்க, “போதும் நிறுத்துங்க மா… அவளுக்கு காய்ச்சல்ன்னு சொல்லறேன். இந்த அடி அடிச்சுட்டு… அப்பவும் இத்தனை பேச்சு பேசறீங்க. உங்களுக்கு கோபம் இருக்கட்டும், ஆதங்கம் இருக்கட்டும்… அதுக்காக என்ன பண்ணலாம்? சொல்லுங்க அவளை சாக சொல்லிடலாமா?” என்றதும் அவர் வாயடைத்துப் போனார்.

“இப்ப என்ன அக்கா யாரையோ விரும்பிட்டா அவ்வளவு தானே? நான் பத்தாவது தான் படிக்கிறேன். என் கிளாசில் எத்தனை லவ் ஸ்டோரி ஓடிட்டு இருக்கு தெரியுமா? அவ நம்ம குடும்ப சூழல் தெரிஞ்சும் லவ் பண்ணி இருக்கான்னா… நிஜமாவே அவளுக்கு பிடிச்சு இருந்திருக்கலாம். அதை போயி பெருசு பண்ணிட்டு… உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லுங்க. அத்தோட போதும்… சும்மா அவளை நோகடிக்காதீங்க…” என்றவன், “நீ எந்திரிக்கா… வா உள்ளே வந்து படு…” என அவளை எழுப்பினான்.

அவனிடமும், “சாரிடா தம்பி…” என்றாள் குற்றவுணர்வுடன்.

“காதலிக்கிறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் கா… உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… நீ கண்டதையும் யோசிக்காம வந்து படு வா…” என கை தாங்கலாக அழைத்துப் போனான்.

வைஷுவுக்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணில் நீர் வழிய, தொய்ந்த நடையோடு அவனோடு சென்றாள்.