வைஷ்ணவிக்கு வகுப்பைக் கவனிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. உயிர் வற்றிப் போன நிலையில் இருந்தாள்.
‘ஏன் தன் வாழ்வில் இப்படி ஒரு ஏமாற்றம்? என் காதல் கனவாகக் கரைய வேண்டுமா? அதுவும் இத்தனை பழிச் சொற்களோடு…’ என்ற தவிப்பில் துக்கம் தொண்டையை அடைத்தது. பட்ட அவமானத்தில் முகம் சிறுத்துச் சிவந்துவிட, வகுப்பறைக்குப் போக தெம்பில்லாமல் தளர்ந்த நடையோடு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தவள், அங்கே இருந்த மேடையில் தலை சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
தலை மிகவும் வலித்தது. அதைவிட அதிகமாய் காயம் கொண்ட மனம் வலித்தது. பொங்கும் விழி நீருக்கு அணையிட முடியவில்லை மங்கையால்.
பேருந்துக்கு காத்திருந்து செல்லும் தனக்கு… கார், பைக் என வித விதமான வாகனங்களில் வருபவன் எப்படி பொருந்துவான் என்று கூட யோசிக்காமல் காதலில் விழுந்தபோது, அவளுக்கு பணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. பணம் இருவருக்குமிடையே இடைவெளியை உண்டாக்கும் என்றும் எண்ணியதில்லை. அதைப்பற்றி பெரிதாக யோசிக்கும் வயதும் பக்குவமும் அவளிடம் இல்லாது இருந்தது. இப்பொழுது யோசித்தால் தன் எண்ணம் எத்தனை அபத்தம் என புரிந்தது.
அன்று இதையெல்லாம் யோசிக்காமல் விட்டதால் தானே இன்று இப்படி பழிச் சொற்களைக் கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறாள்.
தான் வாழும் சூழலில் தனக்கு முதலில் காதல் வந்திருக்கலாமா?
ஆறாகப் பொங்கும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்து கைக்குட்டை உபயோகிக்கும் பதத்தில் இல்லாமல் போனது.
பேருந்து வரும் சத்தத்தில் கண் விழித்து வேகமாக எழுந்து நின்றவள், அங்கு வந்த கட்டண பேருந்தைப் பார்த்துச் சோர்ந்து போனவளாய் மீண்டும் அமர்ந்து கொண்டாள். பதினைந்து ரூபாய் பணம் தந்து வீடு செல்லுமளவு அவளுக்கு மனம் வராது. அந்த பணம் இருந்தால் வேறு தேவைக்கு உதவும் என நினைப்பாள். இதுதான் அவர்களின் வீட்டின் நிலை!
இந்த வறுமை நிலைக்குத் தான் கேட்கக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு வந்திருக்கிறாள். தந்தை இருந்திருந்தால் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத சூழலுக்குச் சென்றிருக்காது. நோட்டிஸ் போர்ட்டில் இவள் பெயரும் இடம் பெற்றிருக்காது.
கட்டணம் கட்டாதவர்களின் பெயர் பட்டியலை பார்த்து, அவர்களின் உண்மை நிலை என்ன என விசாரித்துத் தெரிந்து கொண்ட சித்தார்த் இயலாதவர்களுக்கெல்லாம் உதவி செய்திருந்தான். அப்படித்தான் இவளுக்கான கட்டணத்தையும் அவன் கட்டியிருந்தான்.
அப்பொழுது அனைவரின் மனதிலும் உயர்ந்து நின்றவன் சித்தார்த்.
அன்று தனக்கு உதவிய அவனை நன்றியாகப் பார்த்தவள், இன்று அவனிடம் ஏன் உதவி பெற்றோம்? அதற்குப் பேசாமல் தன் படிப்பையே பாதியில் நிறுத்தியிருக்கலாமே! என்று வருந்திக்கொண்டு இருக்கிறாள்.
இருக்கும் மன வேதனைக்கு வீட்டிற்குச் சென்று படுத்துக்கொள்ளலாம் என மனம் ஏங்கியது. ஆனால், பேருந்து வருவதாய் காணோம். மேலும் ஒரு பதினைந்து நிமிடம் கடந்து மீண்டும் ஒரு கட்டண பேருந்து. இருந்த தலைவலிக்குப் பேசாமல் போய் விடலாமா என்று கூட எண்ணியவள் அவசரமாகப் பையைத் திறந்து இருந்த காசை எண்ணினாள். அந்தளவிற்குக் காசு இருக்கவில்லை.
சோர்ந்து போனவளாய் மீண்டும் அங்கேயே சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இன்னும் ஒரு பத்து நிமிடம் அவளைக் காக்க வைத்த பின்னர், மகளிருக்கான இலவச பேருந்து வந்து நின்றது. அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
உடல் எல்லாம் அடித்துப் போட்டது போல வலி. தலை முடியைச் சரியாக உலர்த்தாமல் விட்டது வேறு கடும் வலியைப் பரிசளித்திருந்தது. வீடு போய்ச் சேர்வதற்குள் ஓய்ந்து போனாள்.
அம்மா வேலைக்கும், தம்பி பள்ளிக்கும் சென்றிருக்க… இந்த தனிமை அவளுக்கு மிகவும் தேவையாய் இருந்தது.
எதை எதையோ எண்ணிக் கலங்கினாள். தன் காதலை, அது தோற்ற விதத்தை எண்ணி எண்ணி அழுகையில் கரைந்தாள். அவனுக்குத் தான் பொருத்தமே இல்லை என வாய் விட்டே புலம்பியவள், தன் நெற்றியிலேயே அறைந்து கொண்டாள்.
‘உனக்கெல்லாம் காதல் எதுக்குடி? இருக்கிற மானம் மரியாதையையும் இழந்துட்டு நடை பிணமா நின்னியே அதுக்கா இந்த காதல்’ என்ற கோபம் கிளர்ந்தெழ முகத்தில் இன்னும் பலமாக அடித்துக் கொண்டு அழுதாள்.
விசும்பியபடியே வெறும் தரையில் சாய்ந்திருந்தவள், தன்னையும் மீறித் தூங்கி விட்டிருந்தாள்.
*** சித்தார்த் செய்த செயலில் அதிருப்தியானவர்கள், அவனது நெருங்கிய நண்பர்களான கிஷோர், விக்னேஷ், கௌசிகா மட்டும் தான். மற்றவர்களில் சிலர் எனக்கென்ன என்று அங்கு நடந்த விஷயத்தைப் புறந்தள்ள… சிலருக்கு இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்றிருந்தது. ஆனால், அதையும் அவனிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றளவு அவர்களுக்கு அபிப்ராயம் இல்லை.
ஸ்ரீதேவிக்கு வைஷ்ணவி எல்லாம் சித்தார்த்துக்குப் பொருத்தமா என்று புகைச்சல். அவளைப் போன்றே எண்ணமுடைய சிலருக்கு நடந்த விஷயத்தில் பயங்கர திருப்தி.
“ஓகே கைஸ் லன்ச்’ல மீட் பண்ணலாம்…” என வைஷுவின் நிலைக்காகத் துளியும் வருத்தம் கொள்ளாமல், சித்தார்த் அடுத்த திட்டத்தை வெகு சாதாரணமாகப் போட்டான்.
“ஓகே மச்சி…”, “டன் சித்து…” என விதவிதமான ஒப்புதல்களோடு ஏனையவர்கள் கலைந்து போக, நண்பனின் செய்கை துளியும் பிடிக்காத காரணத்தால் முகத்தை திருப்பிக்கொண்டு கோபமாகச் சென்றிருந்தான் கிஷோர்.
விக்னேஷும் கௌசிகாவும் மட்டும் தான் சித்தார்த்துடன் இப்பொழுது இருந்தார்கள்.
விக்னேஷ், “சித்து ஏன் இந்தளவு அந்த பொண்ணை ஹர்ட் செய்யறடா…” என கேட்க, அவன் அலட்சியமாக கை அசைத்தான்.
“ம்பச்… உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. ஒரு மாசம்… முழுசா ஒரு மாசம்… என்கிட்ட அவ பேசலை. எனக்கு அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு. அவ பேசாம, என்னை அவாய்ட் பண்ணிட்டு கண்ணுல கூட மாட்டாம சுத்துனப்ப நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாதா?” என சீறினான்.
“அதுக்காக அவளை காலத்துக்கும் வேண்டாம்ன்னு முடிவு பண்ணுவியா?” விக்னேஷ் நண்பனின் முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்ட,
“ம்பச்… ஒரு நாள் திட்டினா, துரத்தி விட்டா காலத்துக்கும் வேண்டாம்ன்னு சொல்லுவாளா? லூசு மாதிரி உளறாதடா. ஏன் நம்ம அப்பாங்க எல்லாம் அம்மாவை இதைவிட மோசமா ட்ரீட் செய்யறதில்லை. அதுக்காக அம்மாங்க அப்பாக்களை விட்டுட்டா போயிடறாங்க” என்றான் கொஞ்சமும் குற்றவுணர்வே இல்லாமல்.
கிஷோர் இவர்களை இன்னமும் காணோமே என திரும்பி வந்தவன், சித்துவின் இந்த பேச்சைக் கேட்டு கொலைவெறியானான்.
“டேய் நீ எல்லாம் மனுஷ ஜென்மமா?” என அவனை அடிக்கவே பாய, விக்கி தான் தடுத்து பிடித்தான். இத்தனை நேரமும் சுற்றியிருந்த கூட்டத்திற்காகப் பொறுமை காத்தவனால் இதற்கு மேலும் சித்தார்த் பேசுவதைக் கேட்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.
“டேய் இன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள்டா. அவன்தா புரியாம பேசறானா நீயும் கையை நீட்டிட்டு…” என விக்கி கடிந்து கொள்ள,
கௌசிகாவும், “புரியாம எங்கடா அவன் பேசறான்? அதுதான் ரொம்ப தெளிவா பேசறானே… அந்த பொண்ணை அவ்வளவு மட்டமா பேசிட்டு, இதுக்கப்பறமும் அவ திரும்பி வருவான்னு சொல்லறான். எவ்வளவு மட்டமான புத்தி பாரு… தன்மானம் உள்ள எந்த பொண்ணும் இத்தனை அவமானத்துக்குப் பிறகு இனி வருவாளா?” என கொதித்தாள்.
“ஹே எதுக்கு மூணு பேரும் இப்படி சீன் போடறீங்க. அவ போனா போயிட்டு போறா… ஒரு மாசமா என்னை சுத்தல்ல விட்டதுக்கு, நான் அவளை சுத்த விட வேண்டாமா? அதுக்காக தான் திட்டி விட்டேன். அப்படி எல்லாம் நான் வேண்டாம்ன்னு போக அவளால முடியாதுடா… அவளே தானா வருவா பாருங்க” மிதப்பாகப் பேசியவனை நினைத்து இப்பொழுது அவர்களுக்குப் பரிதாபம் தான் வந்தது.
இவனது முட்டாள்த்தனமும் முன்கோபமும் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி அறியாமல் இருக்கிறானே என அவர்கள் நினைக்க, அவனோ புழுதியில் விழுந்திருந்த வைஷு கொண்டு வந்த பரிசுப் பொருளை எடுத்துக் கொண்டிருந்தான்.
வெள்ளி காப்பு… பார்த்ததுமே பிடித்துப் போனது. கையிலிருந்த தங்க பிரேஸ்லெட்டை கழட்டிவிட்டு இதை அணிந்து கொண்டான்.
“வர வர ரொம்ப சேட்டை என்ன? மாசக்கணக்கா பேசாம இருக்கிற அளவுக்கு வந்துட்ட… என் தப்பு தான், நீ பேசாம வீம்பு பண்ணும்போதெல்லாம் தேடி வந்து உன்னை மொத்தாம, நானும் வீம்புக்கு சுத்திட்டு இருந்தேன் இல்லை… அது தந்த இடம் தான் இப்ப இங்கே வந்திருக்கு… ஒரு வாரம் ஆகியும் நீ கண்ணாமூச்சி ஆடிட்டு சுத்திட்டு இருந்தப்பவே வந்து உன் காதை திருகியிருக்கணும். கோழிக்குஞ்சு மாதிரி இருக்கியேன்னு பாவம் பார்த்து விட்டா… ஒரு மாசம்…
இனி என்கிட்ட பேசாம இருக்க தோணும் உனக்கு? எப்பவும் நீ போடற சண்டையை இந்தமுறை நான் போட்டிருக்கேன். நான் கோபமா இருக்கும்போது என்கிட்ட சண்டைக்கோழி மாதிரி சிலுத்துக்கிட்டு வர வேற உனக்கு தெரியாது… தெரிஞ்சிருந்தா இன்னைக்கு சண்டை இன்னும் தெரிச்சிருக்கும். விடு மத்த நேரம் எல்லாம் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிற மாதிரி, இனி போகப்போக நான் கோபமா இருக்கும்போதும் அதுக்காக பயப்படாம சண்டை போட ஆரம்பிச்சுடுவ… இன்னும் ஒரு நாலு நாளைக்கு நல்லா அழு… அதுக்கப்பறம் என் கோபம் குறைஞ்சா உன்கிட்ட பேச வரேன்… என்னை எப்படி அலைய வெச்ச நீயும் கொஞ்சம் அலைய வேண்டாம்” என தன்போல அந்த காப்பை பார்த்துப் பேசிக் கொண்டிருக்க,