அவளுக்கு அப்படி பதறியது. என்ன சண்டை என்று தெரியவில்லை. ஆனால், சித்தார்த்தைத் தடுக்க வேண்டும் என்று மனம் அலைபாய்ந்தது.

காட்டுத்தனமாக அடிப்பவனை இவளால் எப்படித் தடுக்க முடியும்?

அவனது ஒவ்வொரு அடிக்கும் இங்கே இவள் பதறித் துடித்தாள்.

‘அச்சோ! அவங்களுக்கு ஏதாவது ஆயிட்டா பிரச்சினை பெருசாயிடாதா? ஏன் இப்படி போட்டு அடிக்கிறாரு…’ என அவளின் மனம் அடித்துக் கொண்டது.

‘வேணாம் சித்து… பிளீஸ் சண்டை போடாத…’ என உள்ளுக்குள் தவித்தவளின் எண்ணங்களில் அவன் சீனியர் என்ற இடத்தில் இல்லை. ஆனால், அதை உணரும் நிலையிலும் அவள் இல்லையோ?

கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்க… பெரும் தவிப்புடனும், அளவில்லா அச்சத்துடனும் முகம் வெளிறிப் போய் நின்றிருந்தவளை சித்தார்த் பார்த்து விட்டான். தான் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அங்கே அவள் தவிப்பது அவனுக்கு புரிந்தது. தன்போல அவனின் அடியின் வேகம் குறைந்து விட்டது.

சித்தார்த்துடன் நட்பு வட்டத்தில் வைஷு அடிக்கடி பார்த்துப் பழக்கப்பட்டிருந்த கௌசிகாவும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் தான் இருந்தாள்.

வேகமாக அவளருகே ஓடி சென்றவள், “என்னக்கா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? அடிக்க வேண்டாம்ன்னு உங்க பிரண்ட் கிட்ட சொல்லுங்கக்கா… எதுவும் பெருசா பிரச்சினை வந்துட போகுது…” என்றாள் பதற்றமும் தவிப்புமாக.

கௌசிகா அவளை வினோதமாகப் பார்த்தாள். “பர்ஸ்ட் இயர் படிக்கிறியா? இதுவரை சண்டை எல்லாம் பார்த்தது இல்லையா? பேசாம என்ஜாய் பண்ணு… எந்த பிரச்சினையும் வராது…” என சொல்லிவிட, வைஷுவுக்கு முகமே விழுந்து விட்டது.

அப்படி ஒரு தவிப்பு அவளுக்கு. இவர்களானால் ஏதோ திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் போல அத்தனை சுவாரஸ்யமாகப் பார்க்கிறார்களே! நொந்தே போனாள்.

தடுக்க முடியாத இயலாமையுடன் மனதினுள், ‘சித்து… போதும் பிளீஸ்…’ என உருப்போட்டபடி அவனைப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தே விட்டது.

வைஷுவின் கண்ணீரைப் பார்த்தபிறகு ஒரு அடி கொடுக்கவும் சித்தார்த்தால் முடியவில்லை.

தலையை இடது கையால் அழுத்தித் தேய்த்துக் கொண்டவன், “இங்கிருந்து ஓடி போடா… இன்னொரு முறை அந்த பொண்ணுகிட்ட பிரச்சினை செய்யறேன்னு தெரிஞ்சது உன்னை தொலைச்சு கட்டிடுவேன்…” என மிரட்டி அடி வாங்கியவனைத் துரத்தி விட, அவனோ விட்டால் போதும் என அவனுடைய நண்பர்கள் உதவியுடன் வேகமாக அங்கிருந்து போயிருந்தான்.

சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டமும் ஆளுக்கு ஒரு பக்கம் சண்டையைக் குறித்துப் பேசியபடியே நகர்ந்து விட, இவன் யாருக்காக அடித்தானோ அந்த பெண் மட்டும் ஓடி வந்து கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டுப் போனாள்.

அவ்விடத்தில் எஞ்சியது அவனது நெருங்கிய நண்பர்கள் கூட்டமும் வைஷுவும் மட்டும் தான்!

கிஷோர் வழக்கம்போல, “எதுக்குடா இந்த அடி அடிக்கிற? ரொம்பத்தான்டா அடாவடித்தனம் பண்ணற நீ?” என சலித்தான்.

கௌசிகாவிற்கு சித்துவின் இந்த கச்சேரி ரொம்ப பிடிக்கும். “டேய் இப்படி அடிச்சா தான் அவனுங்க இனி உருப்படியா இருப்பானுங்க… நீ பேசாம இரு…” என கிஷோரை கடிய,

நண்பர்கள் பேசுவது எதுவும் அவன் காதில் விழவே இல்லை. அவன் பார்வை மொத்தமும் தன்னவள் மீது தான்…

“என்னடா பார்க்கிற?” என்றபடி கௌசிகா திரும்ப, அங்கோ சோர்ந்த நடையுடன் வைஷு அப்பொழுது தான் திரும்பி நடந்து கொண்டிருந்தாள்.

“அநேகம் அடுத்த பஞ்சாயத்து அந்த பொண்ணு கொண்டு வரும் போல… பாவமா போகுது… என்ன பிரச்சினையோ?” என்று விக்னேஷ் சொல்ல,

“இல்லைடா பர்ஸ்ட் இயர் பொண்ணு போல… நம்ம சித்து அடிச்ச அடியில மிரண்டு போச்சு… வேண்டாம்ன்னு சொல்லுங்கக்கா எதுவும் பிரச்சினை ஆயிட போகுதுன்னு வந்து சின்ன பிள்ளை மாதிரி சொல்லறா… நான் தான் ஒன்னும் ஆகாதுன்னு சொல்லி அனுப்பி விட்டேன். முதல் டைம் ஸ்டண்ட் ஷோவை நேருல பார்த்த அதிர்ச்சி பாவம்..” என்று கௌசிகா சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சித்தார்த் அவளை நோக்கி வேகமாக சென்றான்.

“இவன் எங்கடா அவ பின்னாடி போறான்?” என மூவரும் புரியாமல் பார்க்க,

“அவனே வந்து சொல்லட்டும்… நம்ம போலாம் வாங்க…” என்று கிஷோர் முன்னால் நடந்தான். “இவனும் ஒரு படமும் ஓட்ட மாட்டான். நம்மளை வேடிக்கை பார்க்கவும் விட மாட்டான்…” கௌசியும், விக்கியும் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க முடியாத கடுப்புடன் புலம்பியபடி கிஷோர் பின்னால் நடந்தார்கள்.

“வைஷு… நில்லு…” தன்போல நடந்து கொண்டிருந்தவளை பின்னிருந்து அழைத்து நிறுத்தினான்.

அவன் குரல் அவளுக்கு வெகு பரிச்சயம். சட்டென்று நின்று கொண்டவளின் முக வாட்டம் இன்னமும் குறையவில்லை. என்னவோ ஒரு துக்கம் தொண்டையைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.

நின்றவளின் முன்னே வந்து நின்றவன், “என்னாச்சு?” என்றான் அவளின் தோற்றத்தை ஆராய்ந்தபடி.

ஒன்றும் இல்லை என மறுத்துத் தலையசைத்தவள், பக்கவாட்டாகத் திரும்பிக் கொள்ள அவளின் கண்ணில் மீண்டும் நீர் கோர்த்தது.

“ம்ப்ச் என்ன வைஷு?” என்றான் மெல்லிய குரலில். தன்போல அவளை நோக்கி சற்று நகர்ந்தும் வந்திருந்தான்.

அவளோ எதுவும் பதில் சொல்லாமல் நிற்க, அவஸ்தையாகப் பின்னந்தலையைக் கோதிக் கொண்டவன், “அந்த பையன்… ம்க்கும்… அதுதான் இப்ப அடிச்சேனே அந்த பையன்… உனக்கு தெரிஞ்சவனா என்ன?” என்றான் வேண்டுமென்றே!

அவனுக்கு நன்றாகத் தெரியும் அவனுக்கும் இவளுக்கும் துளி சம்பந்தமும் இல்லை என்று! இருந்தும் வேண்டுமென்றே கேட்டான்.

எதிர்பார்த்தது போலவே கடுப்பான குரலில், “அதெல்லாம் எதுவும் இல்லை” என்றாள். குரல் கரகரத்தது.

“ம்ம்… ஹ்ம்ம்…” என்று அவளை ஊடுருவிப் பார்த்தவன், “கௌசிகா கிட்ட எதுவோ கேட்ட போல…” என்றான்.

இந்த கேள்வியில் அவளுக்குப் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது. ஆமாம் கேட்டால் தான்! இந்த சண்டையை நிறுத்த சொல்லுங்களேன் என்று கோரிக்கை வைத்தாள்.

இப்பொழுது யோசித்தால் ஏன் அவ்வாறு சொன்னோம் என்று படபடப்பாக இருந்தது. சொன்னது சரியா தவறா? அதோடு இவள் எப்படி எந்த உரிமையில் அதனைச் சொல்லலாம்?

தவிப்பும் பதற்றமுமாக அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க, இடைவெளிகள் வெகுவாக குறைந்து போயிருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில்.

அந்தளவிற்கு நெருங்கி வந்தவன், அவளின் இரு கரங்களையும் ஒருங்கே அழுத்திப் பற்றியவன் அவளின் விழிகளுக்குள் ஊடுருவ, அவளின் பார்வையும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

“சொல்லு கௌசி கிட்ட என்ன சொன்ன?” என்றான் அவளின் கண்களைக் கூர்ந்து.

நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள ஒரு வார்த்தையும் வெளிவர மறுத்தது.

“என்கிட்ட சண்டை போட வேண்டாம்ன்னு அவளை சொல்ல சொன்னியா?” என்றபோது அவன் கண்களில் என்ன இருந்தது? ஒரு மிடறு எச்சிலை விழுங்கிக் கொண்டவளின் விழிகள் அவன் கண்களில் மட்டுமே இன்னமும் நிலைத்திருந்தது.

“அதை சொல்ல அவ எதுக்கு?” என்றான் புருவம் உயர்த்தி. அவள் விழிகள் விரியத் தொடங்க, “அதோட அவ சொல்லி நான் கேட்பேனா என்ன?” அவள் குழம்பிப் போனாள். இவன் என்ன சொல்ல வருகிறான் என்று!

ஏற்கனவே நெருங்கி நின்று கொண்டிருந்தவன், இன்னமும் நெருங்கினான். மூச்சுக்காற்று உரசும் அளவிற்கு நெருக்கம். அவளுக்கு நெஞ்சம் படபடத்தது. வியர்க்கத் தொடங்கி விட, விலகி நிற்க வேண்டும் என்று மட்டும் புத்திக்குத் துளியும் உரைக்கவில்லை.

தன் கைக்குள் புதைந்திருந்த அவளின் கரங்களுக்கு அழுத்தம் தந்து, “நீ சொல்லியிருந்தாவே கேட்டிருப்பேன்” என்றான்.

அவள் விழிகள் விரிய, “ம்ம் ஹ்ம்ம்… சரியா சொல்லணும்ன்னா நீ சொல்லியிருந்தா மட்டும் தான் கேட்டிருப்பான்…” என்று அவன் சொன்னதுமே அவளின் இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது.

எதுவுமே பேசாமல் சிலை போல நின்றிருந்தவளைப் பார்த்து, ‘என்ன?’ என விசாரிக்க, அவள் அசைந்தால் தானே!

“நீ சொல்லறதை கேட்கலாம் தானே?” மிக மென்மையாக ஹஸ்கி வாய்ஸில் அவன் கேட்க, அதில் கட்டுண்டவளின் தலை தன்போல சம்மதம் என்பது போல ஆடியது.

அது அவளையும் மீறி நடந்தேறிய விஷயம். ஆனால், அவள் மனம் முழுக்க அவனை வைத்துக்கொண்டு தான் சம்மதம் கூறியிருந்தாள். அப்பொழுது இருவருக்குள்ளும் இருக்கும் அந்தஸ்து பேதமோ, அவளின் குடும்ப சூழலோ எதுவும் அவள் மனதில் இல்லை. அந்த நேரத்தில் அவள் மனதில் நிறைந்து நின்றது சித்தார்த் மாத்திரமே!

காதல் பெரும் மயக்கம் தான் என்ன?