ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை சமன் செய்தவள், மெல்ல அவனை ஏறிட்டுப் பார்த்து, “இன்னைக்கு உன் பர்த் டே செலிபிரேட் பண்ணிட்டு, மெல்ல நாளைக்கு நிதானமா சண்டை போடுவோம்” என்றாள் கசங்கிப் போன முகத்தோடு. முகத்தில் உயிர்ப்பே சுத்தமாக இல்லை.
“ஹான் செலிபிரேஸன்… அது போயிட்டு தான் இருக்கு… மேடம் கூட சேர்ந்தா அட்வைஸ் மழை தானே பொழியும்? அப்பறம் என்னத்த செலிபிரேட் பண்ணறது?” என்று நக்கலாக சித்தார்த் சொல்ல,
அவனுக்கு ஏன் இத்தனை கோபம் என்று வைஷுவுக்கு புரியவில்லை. பொதுவாக இருவருக்குள்ளும் சண்டை வந்தால், அதிகபட்சம் ஒரு வாரம் நீடித்ததில்லை.
இந்த முறை சித்தார்த் பொது வெளியில் வளர்த்த வம்பு சண்டை ரொம்பவும் பெரியது… ஒரு பையனின் கையை முறித்து விட்டான். அதற்கு வைஷ்ணவி கண்டிக்க, அது இருவருக்குள்ளும் பெரிய வாக்குவாதமாகியிருக்க, சண்டையும் மாதக்கணக்கில் நீண்டு விட்டது.
அவள் பேசுவாள் என இவனும், இவன் பேசுவான் என்று அவனும் நிறைய நாட்களை வீணடித்து வீம்பு செய்திருந்தனர்.
இப்பொழுதும் வைஷு பொறுமையாகவே, “சரி உனக்கு பிடிச்ச மாதிரி செலிபிரேட் பண்ணு… ஹேப்பி பர்த்டே…” என்று முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன் சொல்லி, அவள் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருளை அவன் முன் நீட்டினாள். எதுவாக இருந்தாலும் நாளை பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் அவளுக்கு.
“ம்ப்ச்…” என அதிருப்தியுடன் உச்சு கொட்டியவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள வைஷுவுக்கு இந்த தொடர் உதாசினம் மிகவும் வலித்தது.
அவள் கரங்கள் தொய்ந்து கீழே விழ, “இங்க பாரு… எனக்கு இன்னைக்கு பர்த்டே… இன்னைக்காவது காலை பிடிச்ச சனி மாதிரி என்னையே சுத்தி வராம என்னை நிம்மதியா விடு…” என்று கத்தியிருக்க, இவளை சனி என்று வர்ணனை செய்ததில் அவன் நட்பு வட்டத்தினர் சிலர் சிரித்தே விட்டனர்.
சிலருக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவனை கையை பிடித்து இழுத்து, “புரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா?” என்று கிஷோர் கண்டிக்க, “விடுடா…” என அவன் பேச்சை காதில் வாங்காமல் கையை உதறி விட்டான்.
சித்துவின் சொற்கள் வைஷுவை வெகுவாக காயப்படுத்தியது. அவள் அப்பொழுதே எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர எத்தனித்தாள். ஆனால், சித்துவின் கோபம் இன்னும் குறையவில்லை போலும்…
“என்ன போற மாதிரி போயிட்டு… இன்னும் ஒரு ஒரு மாசம் பிரேக் எடுத்து, எதுவும் பணத்தேவை வரும்போது திரும்பியும் என்னையே தேடி வரலாம்ன்னு பிளான் வெச்சிருக்கியா?” வார்த்தைகளில் அனாயாசமாக நெருப்பள்ளி வீசியிருக்க,
எப்பேர்ப்பட்ட பழி இது? தாங்க மாட்டாமல் இதழ் கடித்து அழுகையை அடக்கி, தன் கரங்கள் இரண்டால் காதுகள் இரண்டையும் பொத்தி வைத்துக் கொண்டாள்.
‘என் சித்துவா இப்படிப் பேசுகிறான்?’ அவள் மனம் இரண்டாக வெட்டுடண்டது போல வலியில் துடித்தது.
அவள் கையிலிருந்த பிறந்தநாள் பரிசுப்பொருள், அவள் கையிலிருந்து நழுவி புழுதியில் விழுந்திருந்தது. அவளது காதலைப் போலவே!
“இப்ப எதுக்குடி நடிக்கிற? ஒரு மாசம் என்னை தேடலை தானே நீ? இப்ப மட்டும் என்ன?” என்றான் கோபமாக.
“நான் கோபத்துல விலகித் தானே இருந்தேன் சித்து… உன்னை விட்டுட்டு போக நினைக்கலையே…” அவனது பழிச் சொற்கள் தாங்காமல் கதறலாகச் சொன்னாள்.
அவன் நண்பர்கள் சிலருக்கே அவள் நிலை பாவமாக இருக்க, சித்தார்த் துளியும் மசியவில்லை.
ஆத்திரத்தில் அறிவிழந்து கொண்டிருந்தான்.
அவன் ஆத்திர நெருப்பில் பொசுங்கப் போவது தான் நேசிக்கும் பெண்ணின் மனமும், தன் நேசமும் என்று புரியாமல்!
“ஹான் அதுதான் பார்த்தேனே… ஒரு மாசம்…” என எகத்தாளமாகச் சொன்னவன், “இப்பவும் எக்ஸாம் பீஸ் கட்ட வேண்டியது இல்லாட்டி மறுபடி என்னைத் தேடி வந்திருக்கவே மாட்ட என்ன? அதுசரி வேற யாரு என்னை மாதிரி இளிச்சவாயன் இருக்க போறான்? உனக்கு வேணுங்கிறப்ப பீஸ் கட்டறதுக்கு…” என்று சொன்னதில், அவன் தன் முகத்தில் உமிழ்ந்ததாகவே நினைத்தாள்.
அவன் எப்பொழுதுமே கோபத்தில் வரைமுறையின்றி வார்த்தைகளைச் சிதற விடுவான் தான். கட்டுப்பாடின்றி கையை நீட்டும் பழக்கமும் அதிகம்… அதைக்கொண்டே இருவருக்குள்ளும் சண்டை வந்தபடியே இருக்கும். ஆனால், அது மற்றவர்களிடம் தான்! அப்பொழுது கூட பிறருக்குச் செய்ததை ஒரு நாளும் அவன் சொல்லிக்காட்டியதே இல்லை.
அவளிடம் இந்தமாதிரி ஒரு நடத்தை, உதாசீனம் இதுவரையிலும் இருந்ததே இல்லை. அப்படிப்பட்ட அவனுக்கு இந்தளவு தன்னை காயப்படுத்தத் தெரியும் என்றே இன்று தான் உணர்கிறாள்.
மனம் விண் விண்ணென்று வலிக்க, அனைவரின் முன்பும் அவமானம் பிடுங்கி தின்ன, அசைய மறந்தவளாய் சிலை போல நின்றிருந்தாள். இப்பொழுதே தன் உயிர் பிரிந்திடாதா என்று எண்ணுமளவுக்கு மனம் சிதையுண்டிருந்தது.
“இன்னொரு நல்ல இளிச்சவாயனா பாரு… உனக்கு ஓசியில வேணுங்கிறதை வாங்கி தரவும், உன் காலேஜ் பீஸ் கட்டவும்…” என்று சொன்னதும், தாங்க மாட்டாமல் கேவல் வெடித்தது அவளிடம். இவன் எந்த அர்த்தத்தில் பேசுகிறோம் என புரிந்து தான் பேசுகிறானா என்று அவள் மனம் வேதனை கொண்டது.
வெளியில் வரவே மாட்டேன் என்று அடம் பிடிப்பவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றவனும், எதையாவது பரிசாக வாங்கி தந்ததும் இவன் தான்! அதைக்கூட சொல்லிக்காட்டுமளவிற்கா என்மீது வெறுப்பு என்று அவளுக்குத் தாங்கவே இல்லை.
அவன் இதற்கு மேல் என்ன பேசினாலும் எங்கே தன் நேசம் முற்றிலும் மறந்து அவன் மீது வெறுப்பைச் சுமந்து விடுவேனோ என வைஷு பயந்தே போனாள்.
இப்பொழுதும் அவள் காதல் அவன் வீசிய அமில வார்த்தைகளால் பொசுங்கிப் போனது தான்! ஆனால், அவனிடம் அவளுக்கு நன்றிக்கடன் இருந்தது. நிறைய இக்கட்டான சூழலில் அவளுக்கு அரணாக இருந்து காத்தவன் சித்தார்த் தான்! என்ன இன்று அந்த அரண் உடைந்து அவள் மேலேயே விழுந்து, அவளை மிகவும் மோசமாகச் சேதப்படுத்தியிருந்தது. இதற்கு இறந்தே போயிருக்கலாமோ என்று எண்ணுமளவு சேதம்!
வேகமாக அவனருகே சென்று, தன் கைகளை உயர்த்தி, அவன் கன்னம் தாங்கிக் கொண்டாள்.
“ஸ்ஸ்ஸ் போதும் சீனியர்…” என்று சொல்லும்போதே கண்ணிலிருந்து நீர் கசிந்து பெருகியது.
“பர்த்டே பாய் என்ன விஷ் பண்ணியிருந்தாலும் நிறைவேறி இருக்கும். இப்ப இந்த பர்த்டே பாய் விஷ் என்னன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு. ஒரே ஜும் மந்திரகாளி தான்… விஷ் ட்ரூவாயிடும். அதுக்கு போய் எதுக்கு டென்சன்?” என்றாள் அழுகை மொத்தத்தையும் அடக்கிய குரலில்.
நாசி சிவந்து, முகமெல்லாம் தாங்க முடியாத வலியைப் பிரதிபலித்து அவள் நின்றிருந்த தோற்றம் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஆனால், சித்தார்த்திடம் இன்னமும் கோபம் மட்டுமே மீதம் இருந்தது.
வைஷுவோ, “உங்க காதலை உணர்ந்து ஏத்துக்கும் போது என் மனசுல இருந்தது ஒன்னே ஒன்னு தான்… நான் கடைசியா கண்மூடும் வரை உங்களை காதலோட மட்டும் தான் பார்க்கணும்ன்னு… அதுக்கு எனக்கு தகுதி இல்லையா? இல்லை காதலிக்கவே எனக்கு தகுதி இல்லையான்னு தெரியலை சீனியர்… ஆனா… ஒரே ஒருமுறை உங்களை காதலோட பார்த்து எனக்குள்ள நிறைச்சுக்கிறேன். ஏன்னா என்னை பொறுத்தவரை இது என்னோட இந்த வாழ்க்கையோட கடைசி நொடி… இனி இந்த வாழ்க்கையோட எந்த மிச்சமும் என்னை தொடராம பார்த்துப்பேன். இனிமேல் எப்ப உங்களை பாத்தாலும் புதுசா பார்க்கிற மாதிரி… அந்நியமா கடந்து போயிடுவேன் சரியா? இதுதான் பர்த்டே பாய்க்கு பொருத்தமான கிப்ட்…” என்றவள்,
“நீங்க எனக்காக கட்டின பீஸை எப்படியாவது திருப்பி தந்துடணும்ன்னு தான் காசு சேர்த்துட்டு இருந்தேன் சீனியர். அதுக்குள்ள ஒரு எதிர்பாரா செலவு… அதோட எக்ஸாம் பீஸ் கட்ட எனக்கு சம்பள பணம் வரும் உங்ககிட்ட கேட்க நான் நினைக்கவே இல்லை… அதுக்காகவும் இப்ப உங்களை நான் தேடி வரலை” என்றவளின் பார்வை மண்ணில் கேட்பாரற்று கிடந்த அவள் பரிசில் பதிந்து மீண்டது.
தன் கண்ணீரைத் துடைத்தபடியே கைப்பேசியை எடுத்து, காப்பு வாங்கியது போக சேமிப்பில் மீதமிருந்த ஏழாயிரம் ரூபாயை சித்தார்த்துக்கு அனுப்பி வைத்தாள்.
“இப்ப இது தான் இருக்கு. இன்னும் பதினாலாயிரம் உங்களுக்கு சீக்கிரமே கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிடறேன்… நீங்க எனக்கு வாங்கி தந்ததுக்கெல்லாம் இதுவரை நான் கணக்கு வெச்சுக்கிட்டது இல்லை… உங்ககிட்ட நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன்… பணமா திருப்பி தர கணக்கு தெரியலை… அது மட்டும் தோராயமா திருப்பி தந்துடறேன்… பை… பை…” என்றவள் கண்ணில் பொங்கும் நீரோடு அங்கிருந்து கிளம்பினாள்.
தான் தொலைத்த நேசத்தின் அருமை தெரியாமல், அவள் அவ்வளவு பேசியும் கல் நெஞ்சக்காரன் போல நின்றிருந்தான் சித்தார்த்.