Advertisement

பேரன்பின் தேடலே – மித்ரா 
அத்தியாயம் 02 
சிவந்து தடித்திருந்த இமைகளை மேலும் இறுக மூடினால் கண்களோ கணலாய் எரிந்தது. ‘வீண்’ என்ற தலைவலி தலையை பிளக்க, நேற்றிலிருந்து உண்ணாததால் அயர்ந்த உடல் மேலும் சோர்ந்துக் கிடந்தது. உறக்கம் கலைய அதிகாலையின் நினைவுகள் மெல்ல நெஞ்சைத் தட்டியெழுப்ப மகிழ்நிரதியும் எழுந்து அமர்ந்தாள். 
எதிரே சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்று என்று காட்ட, எழுந்து குளியலறைக்குள் சென்றவள் சில நிமிடங்களில் கிளம்பி வந்தாள்.  கையில் கிடைக்கும் தனது உடைமைகள் அனைத்தையும் தனது பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள். 
இந்த ஊரில் இருப்பது என்னவோ மூச்சுமுட்டும் அறைக்குள் அடைக்கப்பட்டத்தை போன்றே இருந்தது, பறக்கும் சக்தி இருந்திருந்தால் எப்போதோ பறந்திருப்பாள். யார் முகத்தையும் பார்க்கப்பிடிக்கவில்லை. அவளின் அவசரகதி அறியாமல் அலைபேசி அலறி அழைத்தது. டிஸ்பிளேளில் மின்னினாள் மகிழ்நிரதியின் கன்னம் உரசியவாறு நின்றிருந்த வருணா. 
நேற்றுவரை அவளைக் காண்கையில் தூய அன்பு மட்டுமே ஊற்றாய் வர, இன்று அவளை தொடர்ந்து அவள் அண்ணனின் நினைவும் அவன் கொடுத்த காயங்களுமே நினைவில் வந்து நெஞ்சைத் தைத்தது. இதற்கிடையில் எப்போது உற்பத்தியானது என்றே தெரியாது கண்ணீரும் வழிந்துக் கொண்டிருந்தது. தன் உடமைகளோடு வெளியில் வர, எதிரே வந்த தோழிகளையும் அவர்கள் கேள்விகளையும் கண்டுகொள்ளாது, விறுவிறுவென இறங்கினாள். 
பி.டேக் நேனோ டெக்னாலஜி இறுதியாண்டு தற்போது தான் முடித்திருந்தாள். ஹாஸ்டலை காலி செய்வதற்கு இந்த வார இறுதிவரை டைம் இருந்தும் ஹாஸ்டலை வெட்கேட் செய்வதற்கான விண்ணப்பத்தை நிரப்பி இன்சார்ஜிடம் கையெழுத்து வாங்கி அலுவலகத்தில் சமர்பித்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளம்பியிருந்தாள். 
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் நகர் பேருந்தில் ஜன்னோர இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் தூரத் தெரியும் மஞ்சள் வானத்தையும் மறையும் ஆதவனையும் வெறித்துக் கொண்டிருந்தது. மறையும் ஆதவன் என்னவோ தன் வாழ்விலிருந்து மறைந்து விட்ட ரிஷியை நினைவுப்படுத்தியது. பூமி சூழ் இருள் அவளையும் சூழ்ந்து எதிர்கால திசை மறைப்பது போன்ற பயத்தை கொடுத்தது. 
‘பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா’ என்பது போல் எங்கு திரும்பினாலும் எதை பார்த்தாலும் ரிஷியின் நினைவுகள் தான் நிறைந்தது! புன்னகை வலி தருமா? ஆனால் அவனின் ஒரு இகழ்ச்சிநகை அத்தனை வலிகளை தந்தது. எத்தனையோ முறை எண்ணி எண்ணி ரசித்த புன்னகை இன்று ரணத்தை தந்தது. ரிஷி, ரிஷி, ரிஷி அவளின் மனம் நிறைந்த ரிஷி அவள் மகிழ்ச்சியை பறித்துக் கொண்டானே!
விழிமூடி இருக்கையில் சரித்திருந்தவளுக்கு காஞ்சிபுரத்தை நெருங்க நெருங்க, தந்தையின் நினைவுகளும் திருமணத்தை எவ்வாறு நிறுத்தச் சொல்வது, அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன என்றெல்லாம் சிந்தனைகள் செல்ல மனதின் பாரம் தான் கூடியது. அதற்கு துணையாய் கண்ணீரும். 
ஆனால் எப்படியேனும் திருமணத்தை நிறுத்திவிட வேண்டும். மரணத்தை விட கொடிய வலியாக இருக்கும் அந்தத் திருமணம். மேலும் அறியாதவனாகினும் அசோக்கின் வாழ்க்கையை அழிக்க தனக்கென்ன உரிமை? துரோகத்தை தூக்கிக் கொண்டே தன்னால் ஒரு வாழ்க்கையை நொடி கூட வாழ இயலாது. 
வாசலில் கிரில் கேட் திறக்கும் சத்தம் கேட்டு முன் வராண்டாவில் போனில் பேசியவாறு நடந்துக் கொண்டிருந்த குணசீலன் திரும்பினர். மகள் வருவதைக் கண்டவர், “சரிங்க மதினி நாளைக்கு சீக்கிரம் வந்திடுங்க, பாப்பாவும் வந்துட்டா” என்றவாறு கைபேசியை அணைத்து விட்டு அவளை நோக்கி வந்தார். 
“வாங்க தங்கம், வர ரெண்டு நாளாகும்னு சொல்லியிருந்தையே அதுக்குள்ள வந்துட்ட? அட, இது கூட நல்லதுக்கு தான் நாளைக்கே உங்க பெரியம்மா, அத்தைய வரச்சொல்லி இருக்கேன்” என பேசியவாறே அவள் உடமைகளை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார். 
புதிதாக வண்ணம் பூசிய வீடு, புதிய பார்னிச்சர் அனைத்தும் அவள் திருமண ஏற்பாட்டை அவளுக்கு நினையூட்டியது.  “நீ தான் வந்துட்டையே கல்யாண ட்ரெஸ் எடுக்க நாளைக்கே அசோக் வீட்டுல இருந்து வரச்சொல்லட்டுமா?” என்க, மௌனமாய் தந்தையை பார்த்திருந்தாள். புன்னகையை தொலைத்த அவள் முகத்தில் சோகமும் சோர்வும் பரவிக் கிடந்தது.  
“சரி இருக்கட்டும் அப்பறம் பேசிக்கலாம், உனக்கு சாப்பிட ஏதாவது செஞ்சிட்டு வரேன். ஏன்டா மதியம் சாப்படாமலா கிளம்பி வந்த? முகத்துல அவ்வளவு பசி தெரியுதே?” என்றவாறு கிட்சனுக்குள் நுழைந்தார் குணசீலன். 
அந்த வீட்டிற்குள் நிகழ்ந்த முதல் அதிசய நிகழ்வு இது தான்.  மகளின் திருமணம் என்ற மகிழ்வில் தன் இயல்பையும் மீறி அவர் விடாது பேசிக்கொண்டிருக்க, எப்போதும் தந்தையை கண்டதும் மடைத்திருந்த வெள்ளமென பேசும் அவள் உதடுகள் இன்று மௌனமாகி இருந்தது. 
ஹாலில் மாலையிட்டு மாட்டப்பட்டிருந்த அன்னையின் புகைப்படத்தைப் பார்த்திருந்தாள். விபரம் அறிந்த வயதிலிருந்தே புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்தவளுக்கு இதுவரை எதுவுமே தோன்றியதில்லை. ஆனால் இன்று தோன்றியது, தனக்கும் அன்னை இருந்திருந்திருக்கலாம்! என் கண்ணீரை துடைத்திருப்பாளோ, என்னை அணைத்திருப்பாளோ, ஆறுதல் உரைத்திருப்பாளோ? இல்லை இத்தனை துயர் தான் வந்திருக்குமோ?
நெய்தோசை, பொடிதோசை என மகளுக்கு பிடித்ததை சமைந்து வந்து கொடுக்க, அமைதியுடன் வாங்கி உண்டு முடித்தாள். பின் தந்தையின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைக் கண்டு ஒரு நொடி தயங்கியவள், தலை குனிந்து கொண்டாள். 
“அப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கப்பா, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” 
கேட்டவர் பதறியவாறு, “என்னம்மா என்னாச்சு? உங்கிட்ட கேட்டு தானே பேசுனேன், அசோக்கை பிடிக்கலையா சொல்லு கண்ணு” என்றார். 
தந்தையிடம் சொல்லும் படியான காரியமா செய்து வந்துள்ளேன் என்ற எண்ணமே இதயத்தை கணக்கச் செய்ய “என்னை எதுவும் கேட்காதீங்கப்பா, என்னை பாரமா நினைக்கலைனா இந்த கல்யாணத்தை இப்பவோ நிறுத்துங்கப்பா” என்றவள் அவர் தோள் சாய்ந்து அழத் தொடங்கினாள். 
ஏனென்று காரணம் தெரியாது பெத்தவாராய் அவர் உள்ளம் துடித்தது. திருமணம் என்பதை கட்டாயப்படுத்தி செய்து வைக்கலாமே தவிர கட்டாயப்படுத்தி வாழ வைக்க இயலுமா? சிறிது நேரம் தலை தடவிக் கொடுத்தவர் பின் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார். அவளோ கலங்கிய விழிகளோடு அவர் முகத்தையே எதிர்பார்த்திருக்க, மீண்டும் அவள் தலை தடவிவிட்டு வெளியில் சென்றார். 
அசோக்கின் வீட்டிற்கு அழைத்தவர் திருமணத்தை நிறுத்திக் கொள்வதாய் உரைத்தார். இரெண்டே வாரத்தில் திருமணம் என்ற நிலையில் தற்போது நிறுத்துமாறு சொல்லவும் அவர்கள் ஏதேதோ பேச இவரும் அமைதியுடன் சமாதனமாய் பேசி பின் முடியாது போக கோபமுடன் தங்களுக்கு விருப்பமில்லை என்று வைத்து விட்டனர்.
கண்மூடும் வரை காலையிலிருந்து அவன் நினைவை சுமந்தே அவள் இருக்க, அவனுக்கோ சுத்தமாக படுக்கையில் விழும் வரை அவள் நினைவே இல்லை. நேத்து இதே படுக்கையில் தன்னோடு அவள் இருந்த வாசம் இன்னமும் அந்த படுக்கையை நிறைந்திருப்பதை உணர்ந்தான். நேற்று போலே அப்போதும் ஒரு இகழ்ச்சிநகையே உதட்டில் உதித்தது. ரிஷியின் கைபேசி அழைத்து நினைவை கலைக்க, தங்கை வருணதேவியிடம் இருந்து அழைப்பு என்று அறிந்ததும் அட்டன் செய்தான். 
“ரிஷி சாப்பாட்டையாப்பா?” என கேட்டது அன்னை தேவகியின் குரல். எங்கிருந்தாலும் தாய்யுள்ளம் என்பது பிள்ளைகளின் நலனை சுற்றி தானே இருக்கும். 
“ம்ம், சாப்பிட்டேம்மா, சாமி தரிஷனமெல்லாம் நல்லபடியா முடிச்சிருச்சா?” 
“ம்ம், முடிச்சிருச்சு வந்துக்கிட்டு இருக்கோம். அடுத்த வருஷமாவது என் மருமகளோட வரணும்னு குலதெய்வத்துக்கிட்ட வேண்டுதல் வச்சிட்டு வந்திருக்கேன்”
“சரிம்மா, உங்க இஷ்டம் போல பண்ணுங்கனு சொல்லிட்டேன்ல, வருணாடா போனை கொடுங்க” என்றவன் தங்கையிடம் சில நிமிடம் பேசிவிட்டு படுத்தான். 
கடந்த மூன்று வருடமாக அவன் திருமணத்தை பற்றி தேவகி கேட்டுக்கொண்டிருக்க, தொழில் வெற்றி என்பதை தவிர வேறெந்த சிந்தையும் இல்லாது ஓடிக்கொண்டிருக்கிறான் ரிஷிநந்தன். 
அழுது அழுது ஓய்ந்த பின்னே கண்ணயர்ந்திருந்தாள் மகிழ்நிரதி. இருள் நீங்காது விடிவதற்கு சற்று நேரமே இருக்கும் அதிகாலை பொழுது அவள் கைபேசி அழைத்து எழுப்பியது. எடுத்துப் பார்த்தவள் வருணாவிடமிருந்து வந்த அழைப்பென்றதும் கட் செய்தாள். வருணாவிற்கு சற்றே பிடிவாத குணம், எதிலும் முயற்சியை விட்டுவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அழைக்க சிம்கார்டை கழற்றி உடைத்தெறிந்தாள் மகிழ். 
இவள் எடுக்காததால் அடுத்ததாக அழைப்பு சென்றது ரிஷிநந்தனுக்கு தான். அழைப்பில் வந்த செய்தியை அரை தூக்கத்தில் கேட்டவன் அடித்துப் பிடித்துக் கொண்டு பதறி எழுந்தான், அடுத்த சில நிமிடங்களில் அவன் கார் மருத்துவமனைக்கு நோக்கி பாய்ந்தது. 
மகிழின் இதயம் வெகுவாக வலித்தது, அண்ணனை தள்ளி வைக்கிறேன் என ஆருயிர் நட்பையும் இழந்து விட்டாள். இன்றும் நேற்றைய அவனின் செயல் நினைவில் இருக்க, விழித்திருந்தால் கண்ணீர் தான் அந்த விழிகளில் வழிந்தோடிக் கொண்டிருக்கும். 
அதற்கு மேலும் உறக்கம் வராது போக எழுந்து கிடச்சனுக்குள் வந்து வேலைகளை பார்க்கத் தொடங்கினாள். பின் முன் வாசல் மொத்தத்தையும் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள். அதே நேரம் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து ஆண், பெண் என பெரியவர்கள் சிலர் இறங்கினர். வந்தவர்கள் அசோக்கின் பெற்றோரும் உறவினரும், இவள் சென்று குணசீலனை அழைத்து வந்தாள். 
திருமணம் பேசி அழைப்பிதல் அச்சிட்டு அனைவருக்கும் வழங்கி இன்னும் இரண்டே வாரத்தில் திருமணம் என்ற நிலையில் பெண்வீட்டார் நிறுத்தினால் தங்களுக்கு தான் அவமானம், முதலில் சம்மதம் சொல்லிவிட்டு பின் எவ்வாறு நிறுத்தலாம்? என்றெல்லாம் கேள்வி கேட்டு நின்றனர். 
வீட்டிற்குள் வராமல் அனைவரும் முன் வாசல் முற்றத்தில் நின்றே சண்டையிட வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மகிழ்நிரதி. குணசீலன் பொறுமையாக மன்னிப்பு வேண்டி தங்களுக்கு திருமணத்தில் சம்மதமில்லை என்று உரக்க, அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்திலே நின்றனர். இதற்கிடையில் பொறுமையின்றி அவர்கள் மரியாதை குறைவாக பேச, அதே நேரம் மகிழ்நிரதியும் வாசலிலே மயங்கிச் சரிந்தாள். 
குணசீலன் பதறி ஓடிவர, அவர்களாலோ அவளையும் தகாதவாறு பேசிவிட்டு கிளம்பிவிட்டனர். நேற்றிலிருந்து சோர்ந்தே இருந்தவள் திடீரென மயங்கிவிழ, பதறியவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மயங்கிய நிலையிலும் என்னவோ காரணமின்றி கல்லூரி நாட்களும், வருணாவும் அடிமனதில் நினைவலைகளாய் வந்து அவளை தட்டியெழுப்பின. 

Advertisement