Advertisement

அத்தியாயம் 08
அத்திமாலை நேரம் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தான் ரிஷி. அந்த வீட்டை அவன் சுற்றி வந்தே பல நாட்கள் ஆனது போன்றிருந்தது. தேவகி சென்ற பின், பூஜையறையும் சமையலறையும் சத்தமின்றி இருக்க, வீடே அழகிழந்து இருந்தது. இதெல்லாவற்றையும் விட அவனை பெரிதாக தாங்கியது வருணாவிடம் காணப்படும் மாறுதல் தான். 
எப்போதும் பிடிவாதம் அதிகம் தான் இப்போது அதிகரித்துக்கொண்டே சென்றது, முன்பு போல் அல்லாது தானாக வழிய சென்று பேச்சுக்கொடுத்தால் பேசுகிறாள். ஆரம்பத்தில் படம் பார்ப்பது, இசை கேட்பது என இருந்தவள் இப்பொழுது மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டாள். திரைச்சீலை மூடியே வைக்க சொல்லுவாள், இருளை, அமைதியை நாடுகிறாள். மௌனமாய் கண்ணீர் வடிக்கிறாள். அனைத்தும் ரிஷி கவனித்த போதும் செய்வதறியாது நின்றான். அவள் எதிர்காலம் குறித்த பயம் அவனுள் அதிகரித்துக்கொண்டே இருந்தது, முடிந்தவரை அவளுடன் அதிக நேரங்கள் செலவு செய்தான். 
கார் வரும் ஓசைக் கேட்க திரும்பிப்பார்த்தான். டார்க்புளூ ஜீன், கீரின் நிறத்தில் டாப் அணிந்து அழகோவியமாய் சந்திரிக்கா வந்து கொண்டிருந்தாள். அவளை வரவேற்க, அவளும் நலம் விசாரித்தாள். ஒன்றிரண்டு முறை இதற்கு முன் பார்த்திருக்கின்றனர் ஆனால் வீட்டிற்கு வருவது இதுவே முதல்முறை. 
“வருணா நல்லாயிருக்காளா?” என கேட்க, மௌனமாய் தலைசைத்தவன், “உள்ளே வா” என அழைத்துச் சென்றான். 
“அட்சுவலி ஆக்சிடன்ட் அப்போ நான் இங்கில்லை, கோவால இருந்தேன் இல்லை அப்போவே வந்திருப்பேன். சோ சாரி” என்றாள். 
“அங்கிள் சொன்னாங்க, என்ன சாப்பிடுற?” என கேட்க, “ஒரு காபி, அன்ட் வருணாவ பார்க்கலாமா?” என கேட்டவள் எழுந்தாள். 
“தூக்கிட்டு இருக்கா?” என்க, அறைவாசலிருந்தே அவளை ஒருமுறை பார்த்துவிட்டு உடல்நிலை குறித்து அவனிடம் விசாரித்தாள். 
வேலையாள் கொடுத்த காபியை வாங்கி பருகியவாறு ரிஷியை கேசம் முதல் பாதம் வரை பார்வையால் அளந்தாள், தந்தையின் தேர்வு குறை சொல்லும்படியில்லை என பெருமிதம் கொண்டாள்.
“ரிஷி, டீன்னர் போலாமா?” என எதிர்பார்ப்போடு அழைத்தாள். அவனோ நேரத்தை பார்த்தான், இன்னும் சில நிமிடங்களில் வருணா எழுந்துவிடுவாள் என யோசிக்க, “வருணாவுக்காக யோசிக்கிறீங்களா? அதான் நர்ஸ் இருக்காங்களே பார்த்துப்பாங்க. நீங்கா போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டுவாங்க” என மீண்டும் அழைத்தாள். 
“இன்னியொரு நாள் போகலாம் சந்திரிக்கா” என மெல்லிய புன்னகையோடு தன்மையாக மறுக்க, பெரிதாக ஏமாற்றம் கொண்டவளின் உள்ளம் முதல் சந்திப்பிலே வாடியது. 
“ம்ம், உங்களோட மார்கெட்டிங் ரேட்டிங்ஸ் எல்லாம் டிக்ரீஸ்ஸாகுதுனு அப்பா சொன்னாங்க, கொஞ்சம் பிஸ்னஸ்ல காஸ்சென்ரெட் பண்ணுங்க” என்க, ரிஷி அழுத்தமாய் அவளை பார்த்தான். இது அதிகாரமாய், அட்வைஸ்ஸா என்ற கேள்வி எழுந்தது ரிஷிக்கு, எதுவாக இருந்தாலும் அவனுக்கு பிடித்தமில்லை. 
சந்திரிக்கா விடை பெற்றுச்செல்ல, வருணாவிற்கான உணவோடு அவளறைக்குள் சென்றான். ரிஷி அவள் முகம் கழுவி துடைத்து விட்டு, ஊட்ட முயல, “நீ சாப்பிட்டியா அண்ணா” என்றாள். 
“இனிமே தான், இப்போ தான் சந்திர்க்கா வந்துட்டு போறா” என்க, “ஏன் என்னை எழுப்பி இருக்கலாமில்லையா அண்ணா, என்ன சொன்னாங்க? எங்கேஜ்மென்ட் டேட் ஃப்க்ஸ் பண்ணிட்டாங்களா?” என உல்லாச குரலில் கேட்டாள். 
குருமூர்த்தி சொல்லியது போல் தன் திருமணம் அவளுக்கு மகிழ்ச்சியை தருமென்று நம்பியவன், “அது பத்தி எதுவும் சொல்லலை, அங்கிள் முடிவு பண்ணிட்டு சொல்லுவாரு” என்றான். 
“ம்ம், நீ ஏன் அண்ணா இப்படியிருக்க? கல்யாண கலையே உன் முகத்துலயில்லை. முதல சந்திரிக்காகிட்ட நல்லா பேசு அன்ட் நாளையில இருந்து ஆஃபீஸ் கிளம்பு” ‌‌என்றாள் அதிகாரமாக. அதில் மெல்லியதாய் சிரித்துக்கொண்டவன் முகம் துடைத்துவிட்டு இரவு மருந்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். 
மறுநாள் காலை செவிலியருக்கும், பணியாளர்களுக்கும் தங்கையை கவனித்துக்கொள்ள ஆயிரம் அறிவுரைகள், கட்டளைகள் இட்டுவிட்டு அலுவலகம் சென்றான். சந்திரிக்காவின் வீட்டில் நிச்சியகார்த்தத்திற்கான தேதிகள் குறிக்கப்பட்டடு வேலைகள் தொடங்கின. 
ரிஷியின் மதிய உணவு நேரம் அலுவலகம் வந்திருந்தாள் சந்திரிக்கா. அவன் கணினியில் கவனமாக இருக்க, அவன் எதிரே அமர்ந்திருந்தவள், “ரிஷி…” என அழைத்து அவன் கவனத்தை திருப்பினாள். 
“சொல்லு சந்திரிக்கா?” என்க, “ஏன் ரிஷி, நம்ம என்கேஜ்மென்ட்ட பீச் ரெசார்ட், ஹோட்டல் ஆர் பெரிய ஹால் எதுலையாவது நான் ஏற்பாடு பண்ணட்டுமா? உங்க வீட்டுல வைக்கும் போது நெருங்கின சொந்தங்களை தவிர வேற யாரும் வரமாட்டாங்களே” என தன் ஆசைகளை உரைக்க,  ரிஷியோ “அது போதும் சந்திரிக்கா” என ஒரு வார்த்தையில் மறுத்துவிட்டான்.
“சரி, லஞ்ச்க்கு போயிட்டு அப்படியே ஷாப்பிங் போவோம் வாங்க ரிஷி” என மீண்டும் அழைத்தாள். அவனுக்கோ அதிக வேலைப்பளு, அவனின் ஒவ்வொரு மணித்துளிகளும் முத்தானது, “என்கேஜ்மென்ட் ட்ரெஸ்ல இருந்து உனக்கு தேவையானது எல்லாம் வீட்டுக்கே வந்திடும் சந்திரிக்கா” என்றான். 
அதிலும் அவள் ஏமாற்றம் கொண்டவள் இறுதியாக, “சரி இது உங்க லஞ்ச் டைம் தானே? உங்க கூட ஜயின் பண்ணிக்கட்டுமா?” என்றாள். 
எப்படியும் அவனும் உணவிற்காக வெளியில் செல்வது தானே என்ற எண்ணத்தில் சரியென்று அழைத்துச்சென்றான். அருகே இருக்கும் உயர்தர ஹோட்டல் ஒன்றிக்கு அழைத்து வந்தவன் அவளுக்கான உணவையும் கேட்டு ஆடர் கொடுத்தான். கிளம்பியதிலிருந்து அவள் தான் வாய் மூடாது பேசிக்கொண்டிருந்தாள். இடையில் அவன் கைப்பேசி இசைக்க, அட்டென் செய்தான். 
பேசி முடித்தவன் சந்திரிக்காவிடம் திரும்பி, “ரியலி சாரி சந்திரிக்கா. இப்போ தான் நர்ஸ் கால் பண்ணாங்க, வருணாவை செக் பண்ண டாக்டர் வந்திருக்காங்க. எங்கிட்ட பேசணும்னு சொன்னாங்களாம், நான் வீட்டுக்குக் கிளம்பிறேன், ஆஃபிஸ்க்கு கால் பண்ணி உன்னோட கார் அனுப்பச் சொல்லேறேன்” என்றவன் அவளின் பதில் எதிர்பாராது சென்று விட்டான். 
கோபம் என சொல்ல இயலவில்லை எனினும் ஒருவாறு எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் உணர்ந்தாள் சந்திரிக்கா. மாலை நேரம் மருத்துவமனயில் சென்று சந்தித்துக் கொண்டால் ஆகாதா? உடனே பதறி ஓட வேண்டிய அவசியமென்ன? என நினைத்தாள். 
செல்வச்செழிப்பில் வளர்ந்த சந்திரிக்காவிற்கு திருமணத்தை விமர்சையாக கொண்டாடும் ஆசையும் கல்யாணப் பெண்ணிற்கே ஆனா சிறிது எதிர்பார்ப்புகளும் ரிஷியை நோக்கி இருந்தது. சந்திரிக்கா திருமணக்கொண்டாட்டங்களை எதிர்பார்த்திருக்க, ரிஷியோ அது அவசியமற்றது என்ற நிலையில் இருந்தான். 
ரிஷியை பிடித்திருந்த போதும் தங்கையின் நலனை முதன்மை படுத்தியே அவன் யோசிப்பதில் விருப்பமில்லை. தனக்கு முக்கியத்துவமில்லை என்பதை விட தன் ஆசைகளை அவன் காது கொடுத்து கேட்பதில்லையே என கவலை கொண்டாள். திருமணத்திற்கு பின்னும் அவன் இவ்வாறே இருந்தால் தன் திருமணவாழ்க்கை? என்பது அவளுக்கு கேள்விக் குறியாக தான் தோன்றியது. 
வீட்டிற்கு வந்த ரிஷி தங்கையை பரிசோதித்து வந்த மருத்துவரை எதிர்கொண்டான். அவரே வருணாவை குறித்து கேட்க, அவள் செயல்களில் காணப்படும் மாற்றங்களை கூறினான் ரிஷி. 
“அவங்க கொஞ்சம் கொஞ்சமா டேப்ரேஷன் உள்ள போய்க்கிட்டு இருக்காங்க, அதுக்கான சிம்டம்ஸ் தான் இது மிஸ்டர் ரிஷி. இது நல்லதுக்கில்லை! கனவுகள் றெக்கை விரிக்க, உலகையே வெல்லத் துடிக்கிற இளமை வயசுல இப்படி ஓறையே உலகமா சுருண்டு இருக்கிறது ரொம்ப கஷ்டம். இது அவங்க மனதைரியத்தை கொஞ்சம் கொஞ்சமா சிதைக்கும். வாழனும்கிற ஆசை போய் ஏன் தான் வாழுறோம்கிற விரக்தி தான் வரும். அதையும் வெளிப்படுதிக்காம அவங்க மனசுக்குள்ளயே வைச்சு அழுத்திக்கிறது நல்லதுக்கில்லை. மேலும் மேலும் காயத்தை அதிகப்படுதுற மாதிரி தான் இது. இன்னும் அதிகரிச்சிகிட்டு போனா தீரா மனசிதைவு நோயா மாறதுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஒன்னு அவங்களை காயப்படுத்திக்குவாங்க, இல்லை அடுத்தவங்களை காயபப்டுத்துற அளவுக்கு தன்னிலை இழந்திடுவாங்க” 
வருணாவின் நிலை எத்தனை விபரீதமானதாக இருக்கிறது என நினைக்கையில் ரிஷிக்கு வேதனை நெஞ்சை பிழிந்தது. அவன் முகமே வாடி அந்த வேதனையை வெளிபடுத்துவதைக் கண்ட மருத்துவர் ஆறுதலுரைத்தார்.
“பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்லை ரிஷி எல்லாம் குழந்தையை கையாளுற பக்குவதம் தான். கொஞ்சம் தைரியம் இழக்கமா பார்த்துக்கோங்க, இன்னும் வேணும்னா ஒரு மனநல மருத்துவர்கிட்ட கவுன்சீலிங் போயிட்டு வாங்க” என்க,
“தேங்க் யூ டாக்டர். இப்போ அவள் ஹெல்த் கண்டிஷன் எப்படியிருக்கு?” என்றான். 
”அதுவும் சொல்லுற அளவிற்கான முன்னேற்றமில்லை. இன்னும் கொஞ்சம் உடல் தேறவும் ஷர்ஜெரி ரேஃபர் பண்ணுறேன். அதுக்கு முதல அவங்க ஷர்ஜெரிக்கு ஒத்துக்கணும், பார்த்துக்கோங்க” என்றவர் விடைப்பெற்றுக் கிளம்பினார். 
தங்கையின் அறைக்குள் சென்றவன் உறக்கத்தில் இருக்கும் வருணாவின் தலை தடவியாவாறு பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வாறு இவளை மீட்பேன்? என நினைக்கையில் அவனுக்கே சற்று தைரியம் தேவையாக இருந்தது. ஆளத்தெரியாத சிறுவனிடம் பெரும் ராஜியத்தை கொடுத்தால் எவ்வாறு முழித்து நிற்பானோ அதே நிலையில் இருந்தான். கொண்ட பாசத்தால் கடமையை தட்டிக்கழிக்கவும் இயலவில்லை. மனம் சோர்வடையும் போதெல்லாம் அன்னை மடிக்கானா ஏக்கம் ரிஷினுள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. 
வார நாட்களில் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமே நேரம் சரி வர சென்று விட வார இறுதிநாள் ரிஷி தங்கையின் அறையில் அமர்ந்து உலகின் பல விபாரிகளின் வெற்றிக்கதைகளை சொல்லிக் கொண்டிருந்தான். சந்திரிக்கா மீண்டும் ரிஷியின் வீட்டிற்கு வந்திருந்தாள். வருணாவின் அறைவாசலே நின்றுவிட, சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த ரிஷி, “உள்ளே வா சந்திரிக்கா” என அழைத்தான். 
“இருக்கட்டும் நீங்க பேசிட்டுவாங்க, நான் வெயிட் பண்ணுறேன்” என மறுத்தவள் ஹாலில் சென்று அமர்ந்துக்கொண்டாள். அன்றும் அறைக்குள் வரவில்லை, இன்றும் அவள் வர மறுத்து சென்று விட அது என்னவோ போல் இருந்தது. ரிஷியை சென்று கவனிக்குமாறு அனுப்பினாள் வருணா.
வேலையாளிடம் பழச்சாறு வாங்கிக்கொண்டு அவள் அருகே சென்றான் ரிஷி. ஒரு கிளாஸ்சை அவளிடம் கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்தான். நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவள் நிச்சியகார்த்ததிற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்தையும் கூறினாள். 
 
ரிஷியும் மௌனமுடன் அனைத்தையும் கேட்டு முடிக்க, “என்கேஜ்மென்ட் வரைக்கும் வந்தாச்சு, என் ப்ரண்ட்ஸ்க்கு இன்னும் உங்களை அறிமுகப்படுத்தவேயில்லை. இன்னைக்கு ஈவினிங் பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கேன். எல்லாரும் வாராங்க, நீங்களும் வரணும்” என்றாள். 
 
“எங்கிட்ட கேட்காம நீ எப்படி ஏற்பாடு செய்யலாம்?” என வேகமுகடன் கேட்க, “உங்க ப்ரண்ட்ஸ் கூட இன்வைட் பண்ணுங்க, நோ ப்ராப்ளம்” என்றாள் பொறுமையுடன். 
 
“நான் அதுக்கு சொல்லல்ல சந்திரிக்கா என் டைமிங் ஷெட்டுவல் தெரியாம நீயா ஏற்பாடு செஞ்சிருக்க?” என்க, “வீக்கென்ட் நீங்க ப்ரீனு நினச்சேன்” என்றாள். ரிஷியும் சற்று அமைதியானான். 
 
“சொல்ல மறந்துட்டேன், அப்பா வருணாவோட ரிப்போர்ட் வைச்சு டெல்லி குளோபல் ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ்கிட்ட பேசியிருக்காங்க. வருணாவை அட்மிட் செய்ய சொல்லிருக்காங்க வருணா முழுசா குணமாகிற வரைக்கும் அங்கே இருந்துக்கிடலாம். நம்ம மேரேஜ்க்கு அப்பறம் அட்மிட் பண்ணிடலாம்னு அப்பா சொன்னாங்க” என்றாள்.
 
ரிஷி சற்றே யோசனையுடன் “இங்கையே பெஸ்ட் ட்ரீட்மென்ட் கிடைக்கும் போது டெல்லி வரை போணுமா? அங்கையே எந்த மாசம் தங்குறது? என் பிஸ்னஸ் இங்கிருக்கே சந்திரிக்கா?” என்றான்.  
 
“நாம போகவேண்டாம் ரிஷி. வருணாவை மட்டும் அனுப்பிவைச்சா போதும் எத்தனை மாசமானாலும் ட்ரீட்மென்ட் முடியிற வரைக்கும் தே வில் டேக் கேர், ஓன் ஆஃப் தி பெஸ்ட் ஹாஸ்பிட்டல் ரிஷி” என சந்திரிக்கா உரைக்க, அவள் அக்கறையின் பின் இருக்கும் காரணம் புரிய சினம் கொண்டான் ரிஷி. சந்திரிக்காவும் வருணாவை பாரமாக நினைக்கவில்லை ஆனால் ரிஷியின் கவனம் தன் மீது திரும்புவதை தடுக்கும் தடையாக எண்ணினாள் என்பது உண்மை.  
 
தன்னியல்பை மீற வைக்கும் கோபத்தைக் கட்டுபடுத்திக்கொண்டு, “நீ கிளம்பு அங்கிள் கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான். 
 
தான் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவென அழைத்தும் அவன் வர மறுத்ததில் இருந்த ஏமாற்றம் தற்போது அவளுக்கும் சினமாக மாறியது. “என்கிட்டையே சொல்லுங்க, என்ன சொல்லப்போறீங்க?” என்றாள். 
 
“ம்ம், எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லப்போறேன்” என  கோபத்தில் முடிவாக உரைத்தான். 
 
சந்திரிக்காவும் “அத நானே எங்க அப்பாகிட்ட சொல்லுவேன், எனக்குனு மேரேஜ் பத்தின கனவுகளும் ஆசைகளும் நிறைய இருக்கு ரிஷி. இப்போவே உங்களால என் எதிர்பார்புகள ஏத்துக்க முடியாத போது, மேரேஜ் செஞ்சிக்கிட்டு காலமுழுக்க ஏமாற்றங்களோட வாழ என்னால முடியாது. எங்கேஜ்மென்ட்ட நிறுத்திக்கிறது ரெண்டுபேருக்கும் நல்லது தான்” என்றவள் அதற்கு மேல் எதுவும் கூறாது செல்ல, அவனும் தடுக்கவில்லை. என்ன தான் கோபத்தில் எடுத்த முடிவாக இருந்த போதும், தன் முடிவு சரியென்று தான் தோன்றியது ரிஷிக்கு. 

Advertisement