Advertisement

அத்தியாயம் 06
காலை நேரம் பாடவேளை துவங்கும் முன் மகிழின் வகுப்பு வானரப்படைகள் அனைவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். கல்லூரி பேருந்தில் வருபவர்கள், பைக், ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வருபர்கள் என ஒவ்வொருவராய் வந்து அமர, வருணாவும் அப்போது தான் வந்தாள். 
எப்போதும் போலே மகிழின் அருகே வந்தமர்ந்தவள், “மகி இந்தா, உன்னோட ரிங்க என் ரூம்லையே விட்டுட்டு வந்துட்ட போல” என கொடுத்தாள். அமைதியுடன் வாங்கி தன் கையில் அணிந்துக்கொண்டாள் மகிழ். இதை எடுக்கச் செல்கையில் தானே ரிஷி பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது, மீண்டும் கண்கள் கலங்கியது. 
“என்ன சுபி, கப்பல் கவுந்த மாதிரி கவலையில உக்காத்திருக்காலே காலையிலே வார்டன் கிட்ட எதுவும் வாங்கிக்கட்டிகிட்டாளா?” என வருணா ரகசியமாய் கேட்க, “இல்லையே வரு” என்றாள் சுபிக்ஷா. 
“கொஞ்ச நாளாவே அவ ஒரு மாதிரி தான் இருக்கா” என கிஷோர் உரைக்க, “ஒரு மாதிரியான எப்படி உன்ன மாதிரியா?” என்றாள் சுபி. 
“ஏன் இந்த அழகனுக்கு என்ன குறையாம்?” என காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கிஷோர் கேட்க, “வாலில்லாதது ஒன்னு மட்டும் தான் குறை, மத்தபடி பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு” என்றாள் கவி. அர்த்தம் புரிந்துக்கொண்ட அனைவரும் சிரித்தனர். 
சிரித்தவர்களை முறைத்தவன், வருணாவிடம் திரும்பி, “அது ஒண்ணுமில்லை வரு, அவ ஜோடிகுயில் இங்க இல்லையில்ல அதான் அப்படியிருக்கா போல இருக்கு” என்றான் கிஷோர். 
“யாரு சீனியர் ஸ்ரீயா? நிஜமா அதான் காரணமா மகி” என கவி கேட்க, அவள் எழுந்து சென்றிருந்தாள். “ஏய் லூசு அப்படி இல்லைடா, சீனியர் காலேஜ் விட்டு போயே இரெண்டு வருஷமாச்சு. நேத்து கூட நல்லா தான் இருந்தா, நல்லா தான் பாடுனா கவி” என வருத்தமுடன் உரைத்தாள் வருணா. 
வாழ்வின் அழகியலை தொலைத்ததை போன்ற வெறுமையுணர்வு மகிழ்நிரதியை அழுத்தியது. ரிஷியோடு அதிகம் பேசியதில்லை எனினும் அவன் குணம் அது தான் போலும் என அதையும் ரசித்திருந்தாள். ஆனால் தன்னை பற்றி இப்படியொரு பிம்பம் வைத்திருப்பான் என அவள் நினைக்கவில்லை. 
அப்படி என்ன தேவைக்காக, என்ன நலனுக்காக வருணாவோடு பழகினேன்? அவன் வீட்டில் உரிமையில்லாது ஒருசிறு பூவை கூட பரித்ததில்லையே! ஆனால் என்னை பற்றி தான் அவனுக்கு எத்தனை உயர்வான எண்ணம்? நினைக்கும் போதே கண்ணீரோடு கசந்த புன்னகை தான் வந்தது. 
அவன் அன்னையிடமே அத்தனை கோபமாக பேசியவன் இதில் நான் சென்று என் நேசத்தை வெளிபடுத்தினால் என்னவெல்லாம் எண்ணுவான்? சொல்லும் தைரியம் தான் இருக்கிறாதா? இல்லை அவன் சொல்லை தாங்கும் தைரியம் தான் இருக்கிறதா? ஏற்கனவே காயம் கொண்ட உள்ளத்தால் மேலும் வலி தாங்கும் வலிமை இல்லாது போக அவள் காதல் சொல்லப்படாத காவியமானது! 
சொல்லில் இல்லாத, சுவடுபடாத, யாருமறியாத காதல் தானே காலத்தால் கடந்துவிடும் என நம்பிக்கை கொண்டாள். இருந்தும் அத்தனை எளிதாக முடியவில்லை, நினைவு சிதைக்குள் சிக்குண்டு துவளும் பொழுதுகளில் தன்னை தானே சமாதானம் செய்வதெல்லாம் பெரும் உணர்வு போராட்டமாக இருந்தது மகிழ்நிரதிக்கு. அது காதல்ல சிறு ஈர்ப்பில் வந்த சிறு சலனம் என உறுபோட்டுக் கொண்டிருந்தாள். 
இறுதி வருட படிப்பு ஆகையால், படிக்கும் நேரங்கள் போக, லேப், லைப்ரேரி, ப்ராஜெக்ட் என நாட்கள் கடந்தது. மற்ற நண்பர்களுடனும் வருணாவுடனும் எப்போதும் போலே நட்பாய் பழகினாள் ஆனால் அவள் வீட்டிற்கு செல்வதை மட்டும் முடிந்தவரை தவிர்த்தாள். ரிஷிக்கு அவளை பற்றிய நினைவுகள் துளிகூட இல்லை தொழில் மட்டுமே அவன் சிந்தை மட்டுமல்லாது நேரத்தையும் ஆக்கிரமித்திருந்தது. 
ஒருவாரம் கல்லூரி விடுமுறை கிடைக்க, காஞ்சிபுரம் சென்றாள். பாசமுடன் தலைவருடியவாறே “நல்லாயிருக்கியாடா? பட்டும்மா ஏன் இவ்வளவு மேலிச்சிட்ட?” என இன்முகத்துடன் வரவேற்றார் குணசீலன். இந்த அன்பாலே மகிழ் ஒருபோதும் அன்னையை தேடியதில்லை. 
“என்னயிருந்தாலும் ஹாஸ்டல் சாப்பாடு உங்க பக்குவத்துக்கு வராதுப்பா” என்றாள் மென்சிரிப்புடன். மூன்று நாட்களாக மகளுக்கு பிடித்ததை எல்லாம் ஆசையோடு சமைத்துக்கொடுக்க, வழக்கம் போலே ஹாஸ்டல் கதைகளை சொல்லியவாறு தந்தைக்கு உதவி கொண்டுமிருந்தாள் மகிழ். 
இறுதி செமஸ்டர் நெருங்கயிருக்க, மாலை நேரம் பாட புத்தகத்தோடு ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் மகிழ். வேலை முடிந்து குணசீலன் அப்போது தான் வர, புத்தகத்தை மூடிவைத்து விட்டு அவருக்கு தேநீர் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் மகிழ். வாங்கிக் கொண்டவர் மகளையும் அருகே அமர்த்திக் கொண்டார். 
“என்னப்பா? என்ன விஷயம்?” என்க, “எக்ஸாம்ஸ் முடிய இன்னும் எவ்வளவு நாளாகும் தங்கம்?” என்றார். 
“ஒரு ரெண்டுமாசம், இல்லை ஐம்பது நாள் தான்ப்பா” என எண்ணிச்சொல்ல, சிறிது யோசித்தவர் பின் “குட்டிம்மா, என் ப்ரண்ட் சதாசிவம் இருக்கான்ல போனவாரம் அவன் ஒனக்கொரு வரன் கொண்டு வந்திருக்கான். பையன் பேரு அசோக், சொந்த ஊரு இதுதான் குடும்பமெல்லாம் இங்க தான் இருக்கு. பெங்களூர்ல வொர்க் பண்ணுறான், நான் விசாரிச்ச வரைக்கும் நல்ல பையன் அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. இந்தா இதுல ஃபோட்டோ, டிடைல்ஸ் இருக்கு. உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு மேல பேசலாம் கண்ணு” என கவர் ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றார். 
கவரை பிரிக்கத் தோன்றவில்லை இருந்தும் அது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். என்றேனும் இப்படியொரு நிலை வரும் என நினைத்தது தான் ஆனால் இந்தனை விரைவில் வருமென அவள் எண்ணவில்லை. குழம்பிய மனதிலிருந்து எவ்வாறு தெளிவானதொரு முடிவு கிடைக்கும்?
இரவு உணவின் போதும், “நாளைக்கு பொண்ணு பார்க்க வரட்டுமானு அவங்க வீட்டுல இருந்து கேட்டிருக்காங்க என்ன சொல்லட்டும் மகி? உனக்கு விருப்பம் தானே?” என கேட்ட குணசீலனின் முகத்தில் தான் அத்தனை எதிர்பார்ப்பு. 
அவரின் மகிழ்ச்சியை உடைக்க சிறிதளவும் மகிழால் முடியவில்லை. தன்னையே உலகாக எண்ணிக்கொண்டு தனக்காக வாழும் ஒற்றை உயிர். அவரின் மகிழ்ச்சியாவது நிலைக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு தலையாட்டினாள். 
அவளின் சம்மதம் பெற்றதில் குணசீலனுக்கோ அளவில்லாத ஆனந்தம். ஒற்றை மகளின் திருமணம், பேரப்பிள்ளைகளோடு விளையாடுவது, அவர்களை தோளில் சுமந்தவாறு கடைவீதிகளுக்கு சென்று வருவது என கற்பனை களிப்பில் உள்ளம் பூரித்தார். அவருக்கு தன் மகள் போன்ற அருட்பெருச் செல்வம் உலகில் வேறில்லை. அன்னையின் இழப்பிற்கு பின் சிறு வயதிலிருந்தே மகிழ் அதிக பொறுப்போடும், கவனமோடும் நடந்துக்கொள்வதை கண்டு அவரே வியந்திருக்கிறார். தன் பின் அவளுக்கென நல்லதொரு குடும்ப அமைப்பை அமைத்துக் கொண்டுக்க வேண்டுமென்ற கடமையில் விரைவில் திருமண ஏற்பாடு செய்தார். 
மறுநாள் அசோக்கை தவிர அவன் வீட்டிலிருந்து பெண்களும் பெரியோர்களும் வந்திருந்தனர். மகிழ் என்ன தான் சிரித்த முகத்தோடு அவர்கள் முன் நின்றாலும் ஏதோவொரு இறுக்கம் அழுத்தியது. குணசீலன் விருந்தினரை உபசரிக்க, அவர்களுக்கும் மகிழின் அடக்கமான அமைதியும், அழகும் பிடித்துவிட்டது. திருமணப்பேச்சு வார்த்தைகளை முடித்துவிட்டு, விருந்துண்டு கிளம்பினர். 
மகிழ்நிரதியும் மறுநாள் காலையிலே விடுதிக்கு கிளம்பி வந்துவிட்டாள். பின் தேர்வுகள் தொடங்க, படிப்பதிலே நேரங்கள் கழிந்தது. தந்தையோடு பேசும் போது திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதையும் அறிந்திருந்தாள். என்ன முயன்றும் ரிஷியின் நினைவுகளை மட்டும் ஒதுக்கமுடியவில்லை. தன்னை பற்றி கீழாய் ஒரு எண்ணம் வைத்திருப்பவன் முன் செல்லவே தன்மானம் தடுத்தது. இருபுறமும் சிதை மூட்டிக்கொண்டு நடுவில் அமர்ந்த நிலையில் ஒரு தவிப்பு நிரந்தரமாக இருந்தது. 
அன்று வர இயலாது போக அசோக்கும் குணசீலனோடு ஒருநாள் ஹாஸ்டல் வந்து மகிழை பார்த்துவிட்டுச் சென்றான். அவளுக்கு வேண்டியவர்களும் தோழிகளுக்கும் கொடுப்பதற்கு தந்தை கொஞ்சம் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டுச் சென்றார். திருமண ஏற்பாடுகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் மகிழுக்கு பெரும் போராட்டமாக இருந்தது. வேதனையை சொல்லி அழுதால் தீரும் என்ற நிலையில், உற்ற தோழியும் ரிஷியின் தங்கையாகி விட யாரிடம் சொல்ல?
தேவகியின் சொந்த கிராமத்தில் அவர்கள் குலதெய்வ அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடக்க, இறுதி நேர தகவல் அறிந்து வருணாவும் தேவகியும் ஊருக்கு கிளம்பியிருந்தனர். ரிஷிக்கு முக்கிய வேலைகள் இருக்க மும்பை சென்றிருந்தான், அழைத்தாலும் வர மாட்டான் என நினைத்து அன்னையும் தங்கையும் மட்டும் வேலையாட்களுக்கு விடுப்பு கொடுத்துவிட்டுச் சென்றிருந்தனர். 
இறுதி தேர்வு முடிந்துவிட முக்கிய நண்பர்களுக்கு மட்டும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கத் தொடங்கினாள் மகிழ். அலைச்சலும் அசதியும் இருந்த போதும், அனைவருக்கும் கொடுத்து முடிக்க, காலையிலிருந்தே மேகமூட்டத்தோடு இருந்த வானம் மாலை நேரம் மழை பொழியத் தொடங்கியது. இருந்தும் வருணாவிற்கு கொடுக்க அவள் வீட்டிற்கு சென்றாள். இந்த நேரம் ரிஷி அலுவகத்தில் தான் இருப்பானென்று நன்றாக தெரியும் அந்த தைரியத்திலே அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தாள் மகிழ். 
ஆனால் ரிஷி அப்போது தான் முழுதாய் நனைந்த நிலையில் வீடு வந்து சேர்ந்திருந்தான். தலைமுடிகளை கோதியவாறு சட்டையின் முதல் இரண்டு பட்டனை கழற்றிக்கொண்டிருக்க அழைப்பு மணி அடித்தது. சென்று கதவை திறக்க, பாதி நனைத்து நடுங்கியவாறு கைப்பையொடு மகிழ் நின்றிருந்தாள். 
மகிழ் நடுங்கிக்கொண்டு நிற்பதை கண்டு கொண்டவன் முழுதாய் கதவை திறந்துவிட்டு உள்ளே அழைத்தான். ‘வருணாவோட ப்ரண்ட் தானே இவ, ரொம்ப நாளா கண்ணுலையே படாம இருந்தவள் இப்போ எதுக்கு வந்திருக்கா? அதுவும் இந்த மழைநேர இரவில்’ என எண்ணினான். 
ரிஷி இருக்க மாட்டான் என எண்ணி வந்தவளுக்கு அவனே கதவைத் திறக்க அதிர்வாய் இருந்தது. வருணாவும் அவள் அன்னையும் இருப்பார்கள் தானே அழைப்பிதழை கொடுத்துவிட்டு உடனே கிளம்பி விட வேண்டுமென்ற எண்ணத்தில் வீட்டிற்குள் வந்தாள். 
“ஹ்ம்ம் என்ன விஷயம்?” என்றான். ரிஷியிடம் வரவேற்போ, உபசரிப்போ வார்த்தையில் கூட இல்லை. 
அவன் முகம் பார்க்கையிலே மெழுகாய் உருகும் உள்ளமும், கலங்கும் விழியும், அடைக்கும் குரலையும் சிரமப்பட்டு அவன் அறியாது மறைத்தாள். “அது வருணாவ பார்க்கணும்….” ஏனோ அவனிடம் பேசும் போது பாதி வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது. 
“வருணாவும், அம்மாவும் கோவிலுக்கு போயிருக்காங்க, நாளைக்கு நைட் தான் வருவாங்க” என்றவாறு ஹாலில் அமர்ந்தவன் தொலைகாட்சியை ஒளிரவிட்டான். 
அவள் வந்த நேரம் இருள் சூழ்ந்து மழை வெள்ளமாய் கொட்டத் தொடங்கியது. புயல் காற்றும் விடாது வீச, ஆங்காங்கு மரங்களும் மின்கம்பகளும் முறிந்து விழுந்து நகரின் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது. முக்கிய ஏரிகள் அறிவிப்பின்றி திறந்துவிட பொரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழ்ந்தது. அந்த செய்தியே தொலைக்காட்சியிலும் ஓடிக் கொண்டிருந்தது. 
யார் கண்ணில் படாது சென்றுவிட வேண்டுமென்று எண்ணினாலோ அவனிடமே தனியாக மாட்டிவிட்டாயே இறைவா! என எண்ணி உறைந்த பனிச்சிலையாக நின்றாள். ரிஷிக்கு விழிகள் சிவந்து, தலையிலும் சுருக்கென்ற வலி ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது. ஒரு தேநீர் குடித்தால் எவ்வளவோ இதமாக இருக்கும், அவனுக்கு போடத் தெரியாது அவளிடம் கேட்கவும் மனம் தடுத்தது. 
இருந்த தலைவலியில் ‘இவள் எதுக்கு இப்படி நிற்கிறா!’ என நினைத்து எரிச்சல் கூட அவளை பார்த்தவன், “உக்காரு என்ன விஷயம்?” என்றான். 
எவ்வளவு எளிதாய் என்ன விஷியம் என கேட்டுவிட்டான் ஆனால் மகிழ் தான் திருமணத்தை எவ்வாறு அறிவிப்பது என தெரியாது விழித்துக்கொண்டிருந்தாள். தன்னை பற்றி அவன் வைத்திருக்கும் எண்ணமே வேறு என அறிந்திருந்தவள் இப்போது என்ன சொல்வது என தெரியாது மௌனமானாள். 
“ஒன்னுமில்லாமலா இந்த மழையிலையும் வருணாவை பார்க்க வந்திருக்க?” என்க, அவன் எள்ளல் அவள் உள்ளத்தை கிள்ளியது.
தன் நேசம் நான் மட்டும் அறிந்த ரகசியம் தானே! அவனுக்கு தான் தெரியாதே என நினைக்கும் போது சிறு தைரியம் வந்தது. மௌனமோடு அழைப்பிதழை எடுத்து நீட்டினாள். தானே அவனுக்கு திருமண அழைப்பிதல் வழங்கும் நிலை ஏன்? இன்னுமா என் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது, வேதனை நெஞ்சை பிழிய, கண்கள் கலங்கியது, உணர்விழந்து மயங்கி விடுவது போலே தலை சுற்றியது. 
வேதனையின் சாயல் அவள் முகத்தில் தெரிந்த போதும் கண்டுக்கொள்ளாத ரிஷி, அவள் நீட்டாது கரங்களில் வைத்திருந்த அழைப்பிதழை தன் கரம் நீட்டு வாங்கிப்படித்தான். முதலில் அதிர்ந்த அவன் முகம் பின் சுருங்க, இதழ் தானாய் ஏளனமாய் நகைத்தது. பிரிந்த உதடுகள் என்னவோ சொல்வது போல் ஓசையில்லாது அசைத்தது. 
ரிஷிக்கு நன்றாக தெரியும் தன் மேல் அவள் கொண்டுள்ள ஆர்வம், வார்த்தைகளில் சொல்லியதில்லை எனினும் தன்னை வருடும் காதல் பார்வையில் உணர்ந்திருந்தான். எப்போதும் அவள் கண்களில் காதல் மின்னும். தன்னை பார்க்காது ஆறேழு மாதங்கள் தான் இருக்கும் அதற்குள் வேறு ஒருவனுடன் திருமணமென்று வந்து நிற்கிறாளே! என இகழ்ச்சியாய் நினைக்க, எண்ணத்தின் வெளிபாடு முகத்திலும் வெளிப்பட்டு விட்டது. அவன் முகத்தையே உற்று பார்த்து உணர்வுகளை படிக்க முயன்றவளை அவன் இகழ்ச்சியான குறுநகை கொன்று கூறாய் போட்டது. தான் நிற்கும் நிலை பெரும் அவமானமாய் தோன்ற, கண்கள் கலங்கியது மகிழுக்கு. 
“வெல்…கன்கிராட்ஸ்” என கண்களிலும், உதட்டிலும் அதே சிரிப்போடு சொல்ல அவள் உள்ளம் தான் எரிதனலானது. 
தனக்கு திருமணம் என்பதில் அவனிடம் சிறு பாதிப்பு கூட இல்லாமல் போக, அவள் மனம் மலைச்சரிவில் இருந்து உருண்டதை போன்றே பெரும் ஏமாற்றத்தை உணர்ந்தது. சரி தான் முதல் சந்திப்பே அவனுக்கு இன்று வரை நினைவு வரவில்லை இனி எங்கே எதிர்காலத்தில் அவன் தன்னை நினைக்க? ரிஷியை நோக்கிய எதிர்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சம் என அனுபவம் சொல்லியது. 
சட்டென எழுந்தவள் பதில் புன்னகை தர இயலாது வெளிவாசலை நோக்கி திரும்பினாள். விரிந்து நீண்டிருக்கும் இருள் பாதை அவளுள் பயத்தை மூட்டியது. முற்றிலும் மின்சாரம் தடைபட்டிருக்க, அவன் வீட்டில் சேமிப்பு மின்கலன் இருந்தால் என்னவோ ஹாலில் மட்டும் வெளிச்சம். அவளோ முன் வாசலுக்கு வந்திருந்தாள். மழை இன்னும் விடாது கோரக்காற்றோடு கொட்டிக்கொண்டிருந்தது. 
அவள் பின்னே வந்த ரிஷி, கோழிக்குஞ்சு போன்று வெடவெடக்க, நடுங்கிக்கொண்டு இருளை வெறித்திருந்தவளை பரிவோடு பார்த்தான். பசியோ, சோர்வோ முகமே வாடியிருக்க, எங்கேனும் மயங்கி விழுந்து விடுவாளோ என்ற பயம் வந்தது. அதை தாண்டியும் இந்த மழையில் கண்டிப்பாக சொல்ல இயலாது என தெரியும். அவள் மீது பெரிதாய் ஈர்ப்பில்லை எனினும் பெண்களை மதிப்பவன் ரிஷி. அதுமட்டுமின்றி வருணா இருந்திருந்தால் இவ்வாறு அவளை அனுப்ப மாட்டாள், ஏன் உண்மை தெரிந்தால் கூட தன்னை தான் திட்டுவாள் என நினைத்தவன்,  “இங்கையே ஸ்டே பண்ணிக்கோ, உள்ள போ” என்றான்.
அவள் அமைதியாக நிற்க, “நீயூஸ் கேட்ட தானே? ஹாஸ்டல் எப்படி போவ?” என அவன் அதட்டலாக கேட்க, அதற்கும் அவளிடம் மௌனம் தவிர விடையில்லை. அவனும் அடமாய் கை கட்டிக்கொண்டு எதிரே நிற்க, வேறுவழியின்றி உள்ளே திரும்பினாள். 

Advertisement